கலித்தொகை/2.குறிஞ்சிக்கலி/37-40

விக்கிமூலம் இலிருந்து

பாடல் 37 (கய மலர் உண் கண்ணாய்)[தொகு]

கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்!
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத்,
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென,
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்!

பாடல் 38 (இமைய வில் வாங்கிய)[தொகு]

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,
7 நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்!

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்;

மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண்;

என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு
வருமே, தோழி! நல் மலை நாடன் -
வேங்கை விரிவு இடம் நோக்கி,
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

பாடல் 39 (காமர் கடும்புனல்)[தொகு]

காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்,
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்;

சிறுகுடியீரே! சிறுகுடியீரே! -
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்;

என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்;

அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று,
தெருமந்து சாய்த்தார் தலை;

தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்
கொண்டு நிலை பாடிக் காண்;

நல்லாய் -
நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ?

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்,
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்;
நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன;

என ஆங்கு,
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,
வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும்,
மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச்,
சேய் உயர் வெற்பனும் வந்தனன்;
பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே!

பாடல் 40 (அகவினம் பாடுவாம்)[தொகு]

அகவினம் பாடுவாம், தோழி! - அமர்க் கண்
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப்,
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்.

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை;

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல் படுவான் மலை;

புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;

விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத்,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே -
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;

என நாம்,
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி,
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்
செம்மலை ஆகிய மலை கிழவோனே!

கலித்தொகை
கலித்தொகை 2.குறிஞ்சிக்கலி