கலித்தொகை/5.நெய்தற்கலி/118-120

விக்கிமூலம் இலிருந்து

பாடல் 118 (வெல் புகழ் மன்னவன்,)[தொகு]

 வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அறத் தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் -
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்பக்,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!

மாலை நீ - தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்;
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூ போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.

மாலை நீ - தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்,
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.

மாலை நீ - தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்பப்
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்.

என ஆங்கு;
மாலையும் அலரும் நோனாது, எம் வயின்
நெந்ஜ்சமும் எஞ்சும்மன் தில்ல - எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே.

பாடல் 119 (அகல் ஞாலம் விளக்கும்)[தொகு]

 அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக்,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத்
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச்
சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப்,
பறவை தம் பார்ப்பு உள்ளக், கறவை தம் பதி வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,
மா வதி சேர, மாலை வாள் கொள
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ் அழல் தொடங்க - வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,
மாலை என்மனார் மயங்கியோரே!

பாடல் 120 (அருள் தீர்ந்த காட்சியான்,)[தொகு]

அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊரக், கனை சுடர் கல் சேர -
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று, புறம் மாறிக்
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம் இலை கூம்பத் -
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக்,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!

மாலை நீ - உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண்
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?
மாலை நீ - ஈரம் இல் காதலர் இகந்து, அருளா இடன் நோக்கிப்
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?
மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?
என ஆங்கு;
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனை தர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்றக், கெட்டாங்கு -
இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே.