உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தொகை/5.நெய்தற்கலி/131-140

விக்கிமூலம் இலிருந்து

/poem>

பாடல் 131 (பெரும் கடல் தெய்வம்)

[தொகு]

 பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த
அரும் துயர் நீக்குவேன் போல்மன் - பொருந்துபு
பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண்,
நோக்கும்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்பு கோத்து, நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்துக் கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத்
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை
வீழ் ஊசல் தூங்க பெறின்.

மாழை, மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய் தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து.
நாணின கொல் தோழி? நாணின கொல் தோழி?
இரவு எலாம் நல்தோழி நாணின - என்பவை 6
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்...
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி! என்
மேனி சிதைத்தான் துறை.

மாரி வீழ் இரும் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல்சீர் நீ ஒன்று பாடித்தை.
பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி!
இரவு எலாம், நல்தோழி! பார்த்து உற்றன - என்பவை,
'தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்?' என,
இன் துணை அன்றில் இரவின் அகவாவே -
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
மென்தோள் ஞெகிழ்த்தான் துறை.

கரை கவர் கொடும் கழிக் கண்கவர் புள் இனம்
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல்சீர் அழித்து ஒன்று பாடித்தை.
அருளின கொல் தோழி? அருளின கொல் தோழி?
இரவு எலாம், தோழி! அருளின - என்பவை,
கணம் கொள் இடு மணல் காவி வருந்தப்
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் -
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை.

என, நாம்
பாட, மறை நின்று கேட்டனன், நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து, நீ நனி மருளத்
தேன் இமிர் புன்னை பொருந்தித்,
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே.

பாடல் 132 (உரவு நீர்த் திரை)

[தொகு]

 உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள் இனம் இறைகொள -
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடைபட, நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்துத்
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்
'நல் நுதால் அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ -
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்,
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?

பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்
'சின் மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ -
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை?

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால்
'கொடும் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ -
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் 8
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?

என ஆங்கு -
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப்,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே!

பாடல் 133 (மா மலர் முண்டகம்)

[தொகு]

 மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போலப், புள் அல்கும் துறைவ! கேள்:

'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்.

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் - கொண்க! -
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ, பூண்க, நின் தேரே!

பாடல் 134 (மல்லரை மறம் சாய்த்த)

[தொகு]

 மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப், 5
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப,
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை;

தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், 1
இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தரக், கடல் நோக்கி,
அவலம் மெய்க் கொண்டது போலும் - அ·து எவன் கொலோ?

நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்,
கடும் பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே,
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி,
இடும்பை நோய்க்கு இகுவன போலும் - அ·து எவன் கொலோ?

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி,
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொலோ?

என ஆங்கு;
கரை காணாப் பௌவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தரப் புணை பெற்றுத், தீது இன்றி உய்ந்தாங்கு
விரைவனர் காதலர் புகுதர,
நிரை தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே.

பாடல் 135 (துணை புணர்ந்து எழுதரும்)

[தொகு]

 துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா -
அயில் திணி நெடும் கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடு கோட்டைப்
பயில் திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்:

கடி மலர்ப் புன்னைக் கீழ் காரிகை தோற்றாளைத்
தொடி நெகிழ்த்த தோளளாத் துறப்பாயால், மற்று நின்
குடிமைக் கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?

ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளாத் துறப்பாயால், மற்று நின்
வாய்மைக் கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?

திகழ் மலர்ப் புன்னைக் கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால், மற்று நின்
புகழ்மைக் கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ?

என ஆங்கு;
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே,
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து,
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவுமதி விரைந்தே!

பாடல் 136 (இவர் திமில், எறி)

[தொகு]

 இவர் திமில், எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,
உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரித்,
தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்,
கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடல் சேர்ப்ப!

முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் -
அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் -
கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி
உடைப் பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ?

நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,
மறு வித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் -
அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள்
சிறு வித்தம் இட்டான் போல், செறி துயர் உழப்பவோ?

ஆங்கு,
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்
தீண்டற்கு அருளித் திறன் அறிந்து, எழீஇப்
பாண்டியம் செய்வான் பொருளினும்
ஈண்டுக, இவள் நலம்; ஏறுக, தேரே!

பாடல் 137 (அரிதே, தோழி! நாண்)

[தொகு]

 அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து,
எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச், சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆய் இழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்.

நகை முதல் ஆக, நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப்,
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆய் இழை!
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்.

'நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்துத், தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்த்
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆய் இழை!
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்.

ஆங்கு -
அன்னர் காதலர் ஆக, அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்,
யாங்கு ஆவது கொல்? - தோழி! எனையதூஉம்.
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்க அரிது உற்றஅன்று, அவர் உறீஇய நோயே.

பாடல் 138 (எழில் மருப்பு எழில்)

[தொகு]

 எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு,
அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு,
வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும், நகுபு உடன்
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி -
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவித்
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ?
மணிப் பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து யாத்து,
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும், இ·து ஒத்தன் -
எல்லீரும் கேட்டீமின் என்று.

படரும், பனை ஈன்ற மாவும் - சுடர் இழை
நல்கியாள் நல்கியவை;
பொறை என் வரைத்து அன்றிப் பூ நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்கு விடும் என் உயிர்.

பூளை, பொல மலர் ஆவிரை - வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ;
உரிது என் வரைத்து அன்றி, ஒள் இழை தந்த
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது, பைபயத்
தேயும் - அளித்து - என் உயிர்.

இளையாரும், ஏதிலவரும் - உளைய, யான்
உற்றது உசாவும் துணை.
என்று யான் பாடக் கேட்டு,
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் -
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் - அன்புற்று
அடங்குஅரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம்
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

பாடல் 139 ('சான்றவிர் வாழியோ! சான்றவிர்!)

[தொகு]

 'சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற
துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி,
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சு ஆறு கொண்டாள், அதன் கொண்டும் துஞ்சேன்;
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது,
பாடுவேன், பாய் மா நிறுத்து.

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப
'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் -
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு.

உய்யா அரு நோய்க்கு உயவாகும் - மையல்
உறீஇயாள் ஈத்த இம் மா.

காணுநர் எள்ளக் கலங்கித், தலை வந்து, என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் -
'மாண் இழை மாதராள் ஏஎர்' எனக் காமனது
ஆணையால் வந்த படை.

காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் -
எழில் நுதல் ஈத்த இம் மா.

அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ -
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!

அழல் மன்ற காம அரு நோய்; நிழல் மன்ற,
நேர் இழை ஈத்த இம் மா.

ஆங்கு அதை,
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர்
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்
துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே.

பாடல் 140 (கண்டவிர் எல்லாம் கதுமென)

[தொகு]

<poem>

கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, 

பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை பூ அல்ல; பூளை, உழிந்ஞையோடு யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி, நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு, அனைய வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின், அன்னேன் ஒருவனேன், யான்; என்னானும், பாடு எனில் பாடவும் வல்லேன், சிறிது ஆங்கே ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ - என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக, நல் நுதல் ஈத்த இம் மா?

திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், தம் காதல் காட்டுவர் சான்றவர் - இன் சாயல் ஒண் தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும், கண்ணோடாது, இவ் ஊர்.

தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில் உய்யும்ஆம் - பூம் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும் உணராது இவ் ஊர்.

வெம் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டுஆம் - அம் சீர்ச் செறிந்து ஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது, இவ் ஊர்.

ஆங்க, என் கண் இடும்பை அறீஇயினென்; நும் கண் தெருளுற நோக்கித் தெரியும்கால், இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல, இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின், நுமக்கு அறனும்ஆர் அதுவே.


கலித்தொகை
கலித்தொகை 5.நெய்தற்கலி