கலித்தொகை/5.நெய்தற்கலி/141-145

விக்கிமூலம் இலிருந்து

</poem>

பாடல் 141 (அரிதினின் தோன்றிய யாக்கை)[தொகு]

 அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து, ஆங்குக், காட்டி மற்று ஆங்கே,
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று -
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு.

ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி
நீருள் நிழல்போல், கொளற்கு அரியள் - போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன், என்னை, மடல் மா மேல்
மன்றம் படர்வித்தவள் - வாழி, சான்றீர்!

பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை,
மை அறு மண்டிலம் வேட்டனள் - வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் - அம்ம, சான்றீர்!

கரந்தாங்கே இன்னா நோய் செய்யும், மற்று இ·தோ -
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு?

இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் - வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் - வாழி, சான்றீர்!

என்று ஆங்கே,
வருந்த மா ஊர்ந்து, மறுகின் கண் பாடத்
திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போலக், கொடுத்தார் தமர்.

பாடல் 142 (புரிவு உண்ட புணர்ச்சிஉள்)[தொகு]

 புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார் கண்
செய நின்ற பண்ணின்உள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்ற அம்ம, காமம் - இவள் மன்னும்,
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு, அடக்கித், தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல்
மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே,
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண்
ஆய் இதழ் மல்க அழும்.

ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் - கனம் குழை பண்பு.
என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?
நல்ல நகாஅலிர் மன் கொலோ - யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்.

'எல்லா! நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், என் சிதை
செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகி பசக்குவ மன்னோ - என்
நெய்தல் மலர் அன்ன கண்?

கோடு வாய் கூடாப் பிறையைப், பிறிது ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றில்உள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான், திரிதரும் கொல்லோ - மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்?

'தெள்ளியேம்' என்று உரைத்துத், தேராது, ஒரு நிலையே,
'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலி உறீஇ,
உள்ளி வருகுவர் கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்மன் கொலோ? நள்இருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினன் ஆகத், தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய
கை உளே மாய்ந்தான், கரந்து.

கதிர் பகா ஞாயிறே! கல் சேர்தி ஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவை ஆயின், தவிரும் - என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ.

மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு.

சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ? எம்மை
நயந்து, நலம் சிதைத்தான்.
மன்றப் பனை மேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன் -
நன்று தீது என்று பிற.

நோய் எரி ஆகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் - கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்; தெளிப்பின், தலைக்கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு.

மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் - சான்றீர்! -
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு.

எனப் பாடி,
இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்;
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல் இரா
நல்கிய கேள்வன் இவன் - மன்ற, மெல்ல
மணிஉள் பரந்த நீர் போலத் துணிவாம் -
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்,
நல் எழில் மார்பனைச் சார்ந்து!

பாடல் 143 (அகல் ஆங்கண், இருள்)[தொகு]

 அகல் ஆங்கண், இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், 'மின்னி
மணி பொரு பசும் பொன் கொல்? மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும் கொல்?' என்றாங்கு அணி செல,
மேனி மறைத்த பசலையள், ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இ·து ஒத்தி
என் செய்தாள் கொல்?" என்பீர் - கேட்டீமின்- பொன் செய்தேன்.

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் - அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற - மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்
சென்று, சேண் பட்டது என் நெஞ்சு.

'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே
'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ
மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின் -
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று?

'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார் கண்
கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் - என் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறும்கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று.

அழிதக, மாஅம் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம் மன்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
பல வல்லன் - தோள் ஆள்பவன்.

நினையும் என் உள்ளம் போல், நெடும் கழி மலர் கூம்ப,
இனையும் என் நெஞ்சம் போல், இனம் காப்பார் குழல் தோன்றச்
சாய என் கிளவி போல், செவ்வழி யாழ் இசை நிற்ப,
போய என் ஒளியே போல், ஒரு நிலையே பகல் மாய,
காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை
மாலையும் வந்தன்று, இனி.

இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்,
அருள் இலை! வாழி! - சுடர்!
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்,
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின்,
யாண்டும் உடையேன் இசை.

ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போல பெரியப் பசந்தன -
நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று,
பேர் அஞர் செய்த என் கண்.

தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ -
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது?

என ஆங்கு,
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்,
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேரத்,
தென்னவன் தெளித்த தேஎம் போல,
இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே!

பாடல் 144 (நல் நுதாஅல்! காண்டை)[தொகு]

 நல் நுதாஅல்! காண்டை; நினையா, நெடிது உயிரா,
என் உற்றாள் கொல்லோ? இ·து ஒத்தி - பல் மாண்
நகுதரும் - தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்
கண்ணீர் துடையாக், கவிழ்ந்து, நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து, தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லிக், கனவு போல்,
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ, சென்று?

'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?
நின் உற்ற அல்லல் உரை', என என்னை
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்; ஒருவன்,
'குரல் கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று
மருவு ஊட்டி, மாறியதன் கொண்டு, எனக்கு
மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு.

எங்கும் தெரிந்து அது கொள்வேன், அவன் உள் வழி.
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்கள்உள் தோன்றி இருந்த குறு முயால்! -
எம்கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?
காட்டீயாய் ஆயின், கத நாய் கொளுவுவேன்;
வேட்டுவர் உள் வழிச் செப்புவேன்; ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன்' மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின்.

என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெள் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக்
கண்ணோடினாய் போறி, நீ.

நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல்உள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன்! பொழில் தொறும்
நாடுவேன்; கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்?
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக் காண், எம்
கோதை புனைந்த வழி.
உதுக் காண் - சாஅய் மலர் காட்டி, சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி.
உதுக் காண் - தொய்யில் பொறித்த வழி.
உதுக் காண் - 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறன் இல்லான்
பைய முயங்கியுழி.
அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,
விளியா நோய் செய்து, இறந்த அன்புஇல் அவனைத்
தெளிய - விசும்பினும் ஞாலத்து அகத்தும்
வளியே! எதிர்போம் - பல கதிர் ஞாயிற்று
ஒளி உள் வழி எல்லாம் சென்று, முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;
காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்
கண்ணீர் அழலால் தெளித்து.

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் -
பிறங்கு இரு முந்நீர்! - வெறு மணல் ஆகப்
புறம் காலின் போக இறைப்பேன், முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு.
துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின், நினக்கு ஒன்று
பாடுவேன், என் நோய் உரைத்து.
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் -
எல்லி ஆக, 'எல்லை' என்று ஆங்கே, பகல் முனிவேன்.
எல்லிய காலை இரா முனிவேன்; யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்.

ஓஒ! கடலே! தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப்
'பற்றுவேன்' என்று, யான் விழிக்கும்கால் மற்றும் என்
நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறன் இல் அவன்.

ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள்
நீர் பெய்த காலே சினம் தணியும்; மற்று இ·தோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீர் உள் புகினும் சுடும்.

ஓஒ! கடலே! 'எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள்?' என்று இந் நோய்

உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே
இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.

ஆங்கு,
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக்
கெடல் அரும் காதலர் துனை தரப், பிணி நீங்கி,
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம்
நல் அவைஉள் படக் கெட்டாங்கு,
இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே.

===பாடல் 145 (துனையுநர் விழைதக்க சிறப்பு)===
<poem>
துனையுநர் விழைதக்க சிறப்புப் போல், கண்டார்க்கு
நனவின்உள் உதவாது நள் இருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி
உயிர்க்கும்; உசாஅம்! உலம்வரும்; ஓவாள்,
கயல் புரை உண் கண் அரிப்ப அரி வாரப்,
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி அழூஉம்; அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம்; மருளும்;
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது,
காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
ஊழ் செய்து, இரவும் பகலும் போல், வேறு ஆகி,
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்;

தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி -
வறந்து என்னை செய்தியோ, வானம்? - சிறந்த என்
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூ குழீஇ முகந்து?

நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண் பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லா கதிரும் பரப்பிப் பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன் .

ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலை நாள்,
போதரின் - காண்குவேன் மன்னோ - பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்?
இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி,
ஒள் வளை ஓடத் துறந்து; துயர் செய்த
கள்வன் பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி -
பெரும் கடல் புல்லெனக் கானல் புலம்ப,
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்,
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல்? - துஞ்சாது
வானும் நிலனும் திசையும் துழாவும் என்
ஆனா படர் மிக்க நெஞ்சு.

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என்
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ -
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர், மருந்து

வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண் உள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு.

கனை இருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ.

எனப் பாடி,
நோய் உடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி,
"யாவிரும் எம் கேள்வன் காணீரோ?" என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம் போல, எய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப் போல் அவள் சேர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆய் இழை உற்ற துயர்.

கலித்தொகை
கலித்தொகை 5.நெய்தற்கலி

</poem>