கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/11. கலீலியோ செய்த சூரியன் ஆராய்ச்சி!
11. கலீலியோ செய்த சூரியன் ஆராய்ச்சி!
இவ்வளவு அரும்பாடுகளுக்குப் பிறகும் கூட, கலீலியோ தனது ஆய்வுப் பணியில் ஓய்வு பெற்றாரா? என்றால் இல்லை. 1610-ஆண்டில், வியாழன் கிரக ஆராய்ச்சியை முடித்த உடனே, சூரியனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முற்பட்டார்.
சூரியன் தோற்றத்தில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றனவே-ஏன்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அதேநேரத்தில் சூரியனில் காணப்பட்ட கரும்புள்ளிகள் அதன் முகத்தின் மீதே நகர்ந்து செல்வதனையும் பார்த்தார். அதற்குரிய காரரணத்தையும் ஆராய்ந்தார்!
'கொந்தளிக்கும் ஒளிப்பிழம்புமயமான சூரியனின் முகத்திலும் களங்கமா? நிலாவின் முகத்தில்தான் களங்கம் இருப்பதாக மக்கள் கூறினார்கள். அது என்ன என்பதையும் கண்டு பிடித்தோம். ஆனால், சூரியன் முகத்திலுமா இந்தக் குறைபாடு? என்று ஆராய்ந்தார்.
சூரியன் முகத்தில் உள்ள களங்கம் என்ன என்பது பற்றிய உண்மை, கலீலியோவின் காலத்துக்கு முன்பு எவரும் கண்டு விளக்கவில்லை, ஆனால், இந்த ஒரு கேள்வியை எழுப்பிய முதல் மனிதனே கலீலியோதான். இந்த கேள்விக்குப் பிறகுதான், பிற்காலத்தின் ஆராய்ச்சியால் அந்தக் கேள்விக்குரிய பதில் விளக்கமாக வெளி வந்தன!
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் என்று சொல்லப்படுபவை, உண்மையில் கறுப்பு நிறமுடையனவல்ல. மிகப் பெரும் நெருப்புக் கோளமான சூரியனுடைய நடுப் பகுதியில், சில நேரங்களில் நெருப்புப்புயல் தோன்றுகின்றது.
அந்த நெருப்புப் புயல் கோரமாக சுழன்று கழன்று மேலோங்கி ஓங்கி, பொங்கிப் பெருத்து, சூரியனின் நெருப்புக் குழம்பின் ஒளிப்பிழம்பைப் பிய்த்துக் கொண்டு வெளிவந்து, வானளாவும் நெருப்பு அலைகளைக் கக்குகின்றது.
அந்தக் கனற் சூறாவளி வெளியேறுவதற்காகச் சூரியப் பிழம்பில் திறக்கப்படும் வாயில்கள்தான் அந்தத் கரும்புள்ளிகள்! வெயிலில் ஒரு கொள்ளிக்கட்டை மங்கிக் கருப்பாய் தோன்றுவதுபோல, சூரியனுடைய ஒளிப் பிழம்பின் மத்தியில் அனற் சூறாவளி காணப்படும்போது, அவற்றின் ஒளி மங்கிக் கறுப்புக் காணப்படுகின்றது.
சூரியன் சுழல்வதால், ஒளிப்பிழம்பின் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பிற்குக் கரும்புள்ளிகள் நகர்ந்து செல்வதைக் கலீலியோ கண்டார். அதைத்தான் சூரியனின் முகத்தில் கரும்புள்ளிகள் நகர்கின்றன என்று அறிவித்தார்.
கலீலியோ செய்த அந்த சலியாத ஆராய்ச்சியால், சூரியக் கரும்புள்ளிகளின் நிலைகனைக் கண்டு; பூமியைப் போல சூரியனும் தனக்குத் தானே ஏறத்தாழ இருபத்து எட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அவர் உலகறிய உரைத்தார்.
அரிய இத்தகைய அதிசய உண்மைகளை உலகத்திற்குக் கூறிய கலீலியோவை அறிவுள்ள மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் அணியினர், வருங்காலத் தலைமுறையில் பொறுப்புள்ள சமுதாயத் தலைவர்கள் அனைவரும்; அவரை வியந்து பாராட்டி மகிழ்ந்துப் போற்றினார்கள்.
அதுவரை உலகம் கண்டிராத ஒரு அறிவியல் மேதை, வானியல் வித்தகர், என்று எல்லா மக்களும் குண பேதமின்றிப் அவரைப் போற்றி வாழ்த்தினார்கள்.
ஆனால், அறிவற்ற மக்கள் மூட நம்பிக்கையிலே மூழ்கிக் கிடப்பவர்கள் பழமைக் கொள்கைகளைக் கைவிட மனமில்லாத புதுமை விரோதிகள், மதவாதிகள் அனைவரும்; அவரவர் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் விடாப் பிடியாகவே இருந்தார்கள்.
அவர்கள் அத்துணைவரும் கலீலியோ மீது வெறுப்பு வேல்களை வீசி வந்தார்கள். அவர்வானப் புதுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லச் சொல்ல, அவருடைய எண்ணத்தின் பகைவர்கள் மனம் போனவாறு ஏசினார்கள், பேசினார்கள், எரிச்சலால் ஏராளமான தொல்லைகளை, துன்பங்களை உண்டு பண்ணி வந்தார்கள்.
பாதுவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ஒருவர், கலீலியோ கண்டு பிடித்த கருவிகளைக் கையாலும் தீண்டேன், கண்ணாலும் பாரேன் என்று அடம் பிடித்து மமதையாகப் பேசி வசைகளை வாரி வீசினார்.
ஒரு பேராசிரியர் மனநிலேயே இவ்வாறு இருந்தது என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அவ்வளவு பழமையும், அரிஸ்டாட்டில் வெறியும் அவர்கள் உள்ளத்திலே பாசிகளாகப் படர்ந்து விட்டன.
கலீலியோ கண்டுபிடித்துக் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று உணர்ந்தவர்கள் கூட, ஏதோ ஒன்றும் அறியாத உத்தமர்களைப் போல அவரைக் கேலிசெய்தார்கள்! கிண்டலடித்தார்கள்.
சந்திரனில் வரிசை வரிசையாக மலைகள் இருக்க முடியாது; ஏனென்றால், அது வழவழப்பானது. வட்டவடிவமானது. அப்படி இருப்பதாகக் கூறும் கலீலியோ மதியற்றவன்; தான்தான் மகா அறிவாளி என்று வாய்பறை அடித்துக்கொள்ளும் வம்பன்: வீணன் என்று; உண்மையை உணர மறுத்தவர்கள் பேசினார்கள்.
பகற்கனவு கண்டவன்போல பிதற்றுகிறானே கலீலியோ வாயில் வந்ததை எல்லாம் வாரித் தூற்றிக் கொண்டிருந்தால் நாங்கள் அந்த பதர்களை நம்ப வேண்டும் என்பது கட்டாயமா என்ன? என்று வீண்பேச்சு பேசும் சிலர் கலவரம் செய்தார்கள்.
வியாழனைச் சுற்றி பல நிலவுகளாம்! யாரிடத்திலே அளக்கிறான் கதையை இந்தக் கலீலியோ! பூமிக்கே ஒரே ஒரு சந்திரன் இருக்கும்போது, அது எப்படி வியாழன் மண்டலத்திலே மட்டும் நான்கு நிலாக்கள் நிலவ முடியும்? என்று கேட்டார்கள் வேறு சிலர்!
சூரியனாம்! சுற்றுகிறதாம்! மூன்று நிலாக்களுக்கு மட்டும் பதினேழு நாட்களாகின்றதாம் சுற்றிவர என்னய்யா இது; கேழ்வரகில் நெய் வடியும் கதை! யார், யாரிடம் இப்படிப் பேசுவது என்றுதெரியாமல் பேசுகிறானே-இந்தக் கலீலியோ; என்றார்கள் அரைகுறையாக படித்தவர்கள்-அலசினார்கள்!
கலீலியோ சொல்வதெல்லாம் உலகம் தெரியாத வினோத மனிதனின் உளறல்; மதிகெட்டவரின் கற்பனை: குடுகுடுப்பைக்காரன் பேசும் பேச்சுப் பாணி; என்றெல்லாம் சிலர்; திமிர்வாதமாடினார்கள்!
கோள்கள் ஏழு! கிழமைகள் ஏழு! அதெப்படி அவைகட்கு மேலே அதிகமாகக் கோள்களது எண்ணிக்கை இருக்க முடியும்?
"சூரியனைச் சுற்றி அசையாது நிற்கும் பூமி, வலம் வருகிறதாமே! சூரியன் பூமிபோலத் தன்னைத்தானே இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை இயங்கிச் சுற்றுகிறதாமே! இவையெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை அல்லவா?" என்றனர்; அறியாமை என்ற பரம்பரையிலே காலகாலமாகத் தொடர்ந்து வந்துள்ள மதவாதிகளிலே சிலர்!
இவைகள் எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகக் கலீலியோ கூட்டம் போட்டு பதில் கூறினார்; படித்தவர்கள் மத்தியிலே பேசும்போது அவர் விளக்கம் தந்தார்; தத்துவ ஞானிகள் இடையே அவர்களதுமொழியிலேயே பேசினார்!
குறிப்பாக மதவாதிகள் இடையே பல காரண காரியங்களோடு விளக்கி, உள்ளதை உள்ளவாறே அவர்களது உள்ளங்களிலே பதியும்படி எடுத்துரைத்தார்.
என்ன சொல்வி என்ன பயன்? சொல்வதை எல்லாம் காதுக்ளின் ஒரு துவாரம் வழியே அக்கருத்துக்களைக்கேட்டு மறு துவாரம் வழியே அவற்றை வழியனுப்பி விட்டார்கள்
கலீலியோ கூறியக் கருத்துக்கள் எல்லாம் காற்றோடு காற்றாய்; ஓசை மயமாய் கலந்ததே தவிர, மக்கள் மனதிலே அந்தக் கருத்துக்கள் சிந்தனைப் பாடமாக அமையவில்லை. அதனால், அவரை எல்லாருமே போட்டிப் போட்டுக் கொண்டு தூற்றி வந்தார்கள்!