கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/5. கலீலியோவால் இத்தாலிக்குப் பெருமை!
5. கலீலியோவால் இத்தாலிக்குப் பெருமை!
இந்த அற்புத மனிதன் கலீலியோ கி.பி. 1564-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பதினைந்தாம் நாள், புகழ்பெற்ற இத்தாலிய நாட்டில் உள்ள பைசா என்ற நகரத்திலே பிறந்தார்.
ஐரோப்பா கண்டத்தின் தெற்குப் பகுதியிலே அமைந்துள்ள ஒரு சிறிய தீபகற்ப நாடு இத்தாலி. அது உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளையும். வானியல் ஆய்வாளர்களையும், தத்துவ ஞானிகளையும், கவிஞர் பெருமக்களையும், வரலாற்றுப் பேரறிஞர்களையும், அரசியல் வல்லுநர்களையும், ஈன்றளித்த புகழ்வாய்ந்த நாடுகளுள் ஒன்று.
வள்ளுவன் தன்னை ஈன்றுவான் புகழ் கொண்ட தமிழ்நாட்டைப் போலவே, கலீலியோ போன்ற எண்ணற்ற செயல் வீரர்களை உலகுக்கு அளித்துப் பெருமை பெற்ற நாடுகளில் ஒன்று இத்தாலி!
கலீலியோ பிற்காலத்தில் உலகமே வியக்கத்தகுந்த தத்துவ மேதையாகவோ, உலகமே அதுவரை பார்த்திராத வானியல் புதுமைகளைக் கண்டு பிடிப்பவராகவோ ஆவார் என்று அக்காலத்தில் எவர் முன் கூட்டி அறிந்தார்? சிறுவராக அவர் இருந்த காலத்தில் அவர் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டுச் சம்பவமும், விஞ்ஞானத்திற்கு வித்தாக அமையும் என்று எவருமே அப்போது உணர்ந்தவர்கள்.அல்லர்.
கலீலியோ தந்தை பெயர் வின்சென்சோ கலீலியாகும்: அவர் ஒரு வணிகர்; அத்துடன் அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் விளங்கி, நற்புகழ்பெற்றவர்! ஆவர். இசைத் துறையில் வல்லவர்! அதனால் தான் அவரால் இசையின் மெய்ப் பொருளைப் புற்றி விளக்கிச் சிறந்த ஒரு இசை நூலையும் எழுத முடிந்தது.
தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிக உதவிகளுக்கு ஏற்றவாறு. சிறப்பான கல்வியையும், தத்துவ போதனைகளையும் இளம் வயதிலேயே போதித்த தந்தையாக அவர் விளங்கினார்! அதனால், பைசா நகரத்துப் பல்கலைக் கழகத்தில் 1581-ம் ஆண்டில் கல்விக்காகச் சேர்த்தார்!
அது போலவே, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவிக்கேற்ப தனது அரிய ஆராய்ச்சியாலும், தத்துவக் கல்வி, விஞ்ஞானத் துறையின் புதுபுது கண்டு பிடிப்புகள் மூலமாகவும், தனது தந்தைக்கு நல்ல பெயரையும், புகழையும் சிறு பிராயத்திலேயே பெற்றுத் தந்தவர் கலீலியோ!
சிறுவராக இருந்த கலீலியோ, தனது கற்ற நேரம் போக, பிற ஓய்வு நேரங்கள் சுறுசுறுப்பாக இருப்பார்! இசை பயில்வார்; ஓவியம் வரைவார்; பிடில் போன்ற ‘லூட்’ நரம்புக் கருவிகளை மீட்டுவார்; தனக்குரிய விளையாட்டுச் சாமான்களை அவரே நுட்பமாக அறிந்து செய்து கொள்வார் தனக்கு என்ன தேவையோ அதற்கேற்ற மாதிரிக் கருவிகளை அவரே செய்து பார்ப்பார்.
எனவே அவரின் பொழுது போக்கும் நேரங்களுக்கு ஏற்றவாறும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தனக்குத் தேவையானவற்தைச் செய்து கொண்டும் நல்ல பண்புகளோடு அனைவரிடமும் அவர் பழகிவந்தார்.