கல்லாடம்/பாயிரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாயிரம்[தொகு]

பாடல்:1 (திங்கள் முடி)[தொகு]

வேழமுகக் கடவுள் வணக்கம்

திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி
கருமணி கொழித்த தோற்றம் போல
இருகவுள் கவிழ்த்த மதநதி உவட்டின்
வண்டினம் புரளும் வயங்கு புகர்முகத்த
செங்கதிர்த் திரள்எழு கருங்கடல் போல (5)
முக்கண்மேல் பொங்கும் வெள்ளம் எறிகடத்த
பெருமலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென
கண்அருள் நிறைந்த கலின்பெரும் எயிற்ற
ஆறிரண்டு அருக்கர் அவிர்கதிர்க் கனலும்
வெள்ளை மதிமுடித்த செஞ்சடை ஒருத்தன் (10)
உலகுயிர் ஆட ஆடுறும் அனலமும்
ஊழித்தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர் (15)
விழிபடும் எரியும் சாபவாய் நெருப்பும்
நிலைவிட்டுப் படராது காணியில் நிலைக்கச்
சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய
ஆம்பல் முகஅரக்கன் கிளையொடு மறியப்
பெருங்காற்று விடுத்த நெடும்புழைக் கரத்த (20)
கருமிடற்றுக் கடவுளை செங்கனி வேண்டி
இடம் கொள் ஞாலத்து வலம்கொளும் பதத்த
குண்டுநீர் உடுத்த நெடும்பார் எண்ணமும்
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்
அளந்துகொடு முடித்தல் நின்கடன் ஆதலின் (25)
வரிவுடல் சூழக் குடம்பைநூல் தெற்றிய
போக்குவழி படையாது உள்உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டது போல
கடல்திரை சிறுக மலக்குதுயர் காட்டும்
உடல்எனும் வாயில் சிறைநடுவு புக்கு (30)
போகாது அணங்குறும் வெள்ளறி வேமும்
ஆரணம் போற்றும்நின் காலுற வணங்குதும்
கால்முகம் ஏற்ற துளைகொள் வாய்க்கறங்கும்
விசைத்த நடைபோகும் சகடக் காலும்
நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும் (35)
அலமரு காலும் அலகைத் தேரும்
குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும்
என்மனத் தெழுந்த புன்மொழித் தொடையும்
அருள்பொழி கடைக்கண் தாக்கி
தெருளுற ஐய! முடிப்பைஇன் றெனவே. (40)
= பாடல்:02 (பாய்திரை) =

வேலன் வணக்கம்[தொகு]

பாய்திரை உடுத்த ஞால முடிவென்ன
முடங்குளை முகத்துப் பல்தோள் அவுணனொடு
மிடைஉடு உதிர செங்களம் பொருது
ஞாட்பினுள் மறைந்து நடுவறு வரத்தால்
வடவை நெடுநாக்கின் கிளைகள் விரிந்தென்ன (5)
செந்துகிர் படரும் திரைக்கடல் புக்கு
கிடந்தெரி வடவையின் தளிர்முகம் ஈன்று
திரைஎறி மலைகளின் கவடுபல போக்கி
கல்செறி பாசியின் சினைக்குழை பொதுளி
அகல்திரைப் பரப்பின் சடைஅலைந்து அலையாது (10)
கீழ்இணர் நின்ற மேற்பகை மாவின்
ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேரளி உமைகண் நின்று
தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்தநெடு வேலோய்! (15)
கீழ்மேல் நின்றஅக் கொடுந்தொழிற் கொக்கின்
கூறிரண் டாய ஒருபங்கு எழுந்து
மாயாப் பெருவரத்து ஒருமயில் ஆகி
புடவிவைத்து ஆற்றிய பல்தலைப் பாந்தள்
மண்சிறுக விரித்த மணிப்படம் தூக்கி (20)
விழுங்கிய பல்கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென
மணிநிரை சிந்தி மண்புக அலைப்ப
கார் விரிந்து ஓங்கிய மலைத்தலைக் கதிர்என
ஓ அறப் போகிய சிறைவிரி முதுகில்
புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய் (25)
போழ்படக் கிடந்த ஒருபங்கு எழுந்து
மின்னின் மாண்ட கவிர்அலர் பூத்த
சென்னி வாரணக் கொடும்பகை ஆகி
தேவர்மெய் பனிப்புற வான்மிடை உடுத்திரள்
பொரியின் கொரிப்ப புரிந்த பொருள் நாடித் (30)
தாமரை பழித்த கைமருங்கு அமைத்தோய்
ஒருமையுள் ஒருங்கி இருகை நெய்வார்த்து
நாரதன் ஓம்பிய செந்தீக் கொடுத்த
திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்!
முலைஎன இரண்டு முரண்குவடு மரீஇக் (35)
குழற்காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய்
செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த
பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்
இமயம் பூத்த சுனைமாண் தொட்டில்
அறிவின் தங்கி அறுதாய் முலையுண்டு (40)
உழல்மதில் சுட்ட தழல்நகைப் பெருமான்
வணங்கிநின் றேத்த குருமொழி வைத்தோய்!
ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை நடுங்குசிறை வைத்து
படைப்புமுதல் மாய வான்முதல் கூடித் (45)
தாதையும் இரப்ப தளைஅது விடுத்தோய்
கூடம் சுமந்த நெடுமுடி நேரி
விண்தடை யாது மண்புகப் புதைத்த
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்
ஆறுதிரு எழுத்தும் கூறுநிலை கண்டு (50)
நின்தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்
மணிக்கால் அறிஞர் பெருங்குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர் முதல்கேட்ப
பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும்
பாய்பார் அறிய நீயே ஆதலின் (55)
வெட்சிமலர் சூழ்ந்த நின்இரு கழற்கால்
குழந்தை அன்பினொடு சென்னிதலை கொள்ளுதும்
அறிவுநிலை கூடாச் சில்மொழி கொண்டு
கடவுள் கூறா உலவா அருத்தியும்
சனனப் பீழையும் தள்ளாக் காமமும் (60)
அதன்படு துயரமும் அடைவுகெட் டிறத்தலும்
தென்புலக் கோமகன் தீத்தெறு தண்டமும்
நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து
மீளாக் காட்சி தருதிஇன் றெனவே. (65)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/பாயிரம்&oldid=486179" இருந்து மீள்விக்கப்பட்டது