கல்லாடம்/101-102

விக்கிமூலம் இலிருந்து
பாடல்:101

நெறி விலக்கிக் கூறல்[தொகு]

வனப்புடை அனிச்சம் புகைமூழ் கியதென
இவ்வணங்கு அவ்வதர்ப் பேய்த்தேர்க்கு இடைந்தனள்
தென்திசைக் கோமகன் பகடுபொலிந் தன்ன
கறையடிச் சென்னியின் நகநுதி போக்கி
குருத்தயில் பேழ்வாய்ப் பல்படைச் சீயம் (5)
அதர்தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன்
கடுங்கால் கொற்றத்து அடும்தூ துவர்எனத்
தனிபார்த்து உழலும் கிராதரும் பலரே
ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி
இருவான் போகிய எரிசுடர்க் கடவுள் (10)
மாதவர் ஆமென மேல்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோய்! அன்பினர்க்கு அருளும்
கூடற் பதிவரும் ஆடற் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டமர் சடையோன்
இருசரண் அடைந்த மறுவிலர் போல (15)
அருளுடன் தமியை ஆடினை ஐய!
தண்ணீர் வாய்த்தரும் செந்நிறச் சிதலை
அதவுஉதிர் அரிசி அன்ன செந்தினை
நுண்பதம் தண்தேன் விளங்கனி முயல்தசை
வெறிக்கண் கவைஅடிக் கடுங்கால் மேதி (20)
அன்புமகப் பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறள்பால் இன்னஎம் முழைஉள அயின்று
கார்உடல் அனுங்கிய பைங்கன் கறையடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடுமறை அதள்வேய் சில்இடக் குரம்பையில் (25)
மற்றதன் தோலில் உற்றிரு வீரும்
கண்படுத்து இரவி கீறுமுன்
எண்பட நும்பதி ஏகுதல் கடனே ! (28)
பாடல்:102

ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி[தொகு]

வெறிக்குறுங் கதுப்பின் வெள்எயிற்று எயிற்றியர்

செம்மணி சுழற்றித் தேன்இலக்கு எறிதர

பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப் பிரசக்

கான்யாரு உந்தும் கல்வரை நாட

சொல்தவறு உவக்கும் பித்தினர் சேர்புலன் (5)

சிறிதிடைத் தெருள்வதும் உடனுடன் மருள்வதும்

ஆமெனக் காட்டும் அணிஇருள் மின்னலின்

நிணம்புணர் புகர்வேல் இணங்கு துணையாக

காமம் ஆறுள் கவர்தரும் வெகுளநர்

படிறுளம் கம்ழௌம் செறிதரு தீஉறழ் (10)

கொள்ளிவாய்க் குணங்கு உள்ளுதோறு இவறிய

மின்மினி உமிழும் துன்னலர் கள்ளியை

அன்னைஎன்று அணைதரும் அரைஇருள் யாமத்து

கடுஞ்சுடர் இரவி விடும்கதிர்த் தேரினை

மூல நிசாசரர் மேல்நிலம் புடைத்து (15)

துணைக்கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில்சூழ்

கூடல் பதிவரும் குணப்பெருங் குன்றினன்

தாமரை பழித்த இருசரண் அடையாக்

கோளினர் போலக் குறிபல குறித்தே

ஐந்தமர் கதுப்பினள் அமைத்தோள் நசைஇ (20)

தருவின்கிழவன் தான்என நிற்றி

நின்னுயிர்க்கு இன்னல் நேர்தரத் திருவின்

தன்னுயிர்க்கு இன்னல் தவறில ஆ!ஆ!

இரண்டுயிர் தணப்பென எனதுகண் புணரஇக்

கொடுவழி இவ்வரவு என்றும்

விடுவது நெடும்புகழ் அடுவே லோயே ! (26)

கல்லாடம்

கல்லாடம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/101-102&oldid=486155" இலிருந்து மீள்விக்கப்பட்டது