கல்லாடம்/11-15

விக்கிமூலம் இலிருந்து

பாடல்:11 (வளைந்துநின்று)[தொகு]

தூது கண்டு அழுங்கல்[தொகு]

வளைந்துநின்று உடற்றும் மலிகுளிர்க்கு உடைந்து
முகில்துகில் மூடி மணிநெருப்பு அணைத்துப்
புனம்எரி கார்அகில் புகைபல கொள்ளும்
குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும்
புதவு தொட்டெனத் தன்புயல் முதிர்கரத்தினை (5)
வான்முறை செய்த கூன்மதிக் கோவும்
தெய்வம் அமைத்த செழுந்தமிழ்ப் பாடலும்
ஐந்தினில் பங்குசெய்து இன்புவளர் குடியும்
தவலரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த
முதுநகர்க் கூடலுள் மூவாத் தனிமுதல் (10)
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த
கானம் காட்டும் புள்அடித் துணையினர்
பட்டடை எடுத்து, பாலையில் கொளுவி
கிளையில் காட்டி ஐம்முறை கிளத்தி
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி (15)
விளரி எடுத்து மத்திமை விலக்கி
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி
குருவிவிண் இசைக்கும் அந்தரக் குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி (20)
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்
ஆங்கவை நான்கும் அணிவுழை ஆக்கி
பூரகம் கும்பகம் புடைஎழு விளரி
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு (25)
ஒன்றினுக்கு ஏழு நின்றுநனி விரித்து
தனிமுகம் மலர்ந்து தம்இசை பாட
கூளியும் துள்ள ஆடிய நாயகன்
இணைஅடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும்
திருவறம் வந்த ஒருவன் தூதுகள் (30)
இன்பமும் இயற்கையும் இகழாக் காமமும்
அன்பும் சூளும் அளியுறத் தந்துஎன்
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும்
நாணமும் கொண்ட நடுவினர் இன்னும்
கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ? (35)
சேய்குறி இனிய ஆயின்
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டெமக்கே. (37)

பாடல்:12[தொகு]

அறத்தொடு நிற்றல்[தொகு]

தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும்
அவ்வுயிர் எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்
செவ்விகொள் கருமுகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரைவரம்பு உட்புக அழித்து (5)
நீர்தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்றழல் நான்மறை முனிவர் தோய்ந்து
மறைநீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் (10)
மீனும் கொடியும் விரிதிணை ஐந்தும்
தேனுறை தமிழும் திருவுறை கூடலும்
மணத்தலின் மதிக்குல மன்னவன் ஆகியும்
நவமணி எடுத்து நன்புலம் காட்டலின்
வளர்குறி மயங்கா வணிகன் ஆகியும் (15)
விழைதரும் உழவும் வித்தும் நாறும்
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தினன்
இணைஅடி வழுத்தார் அணைதொழில் என்ன (20)
கைதையம் கரைசேர் பொய்தற் பாவையோடு
இருதிரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்
பூழிப் போனஇம் பொதுவுடன் உண்டும்
சாய்தாள் பிள்ளை தந்து கொடுத்தும்
முடவுடற் கைதை மடல்முறித் திட்டும் (25)
கவைத்துகிர்ப் பாவை கண்ணி சூடக்
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்தும்
நின்றான் உண்டொரு காளை
என்றால், இத்தொழில் செய்வது புகழே? (24)

பாடல்:13[தொகு]

பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல்[தொகு]

வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் தொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமலர் அன்பொடு
முண்டக முகையின் முலைமுகம் தருமின்
உருளின் பூமி உள்ளுற ஆடுமின் (5)
எதிர்மின் இறைஞ்சுமின் ஏத்துமின் இயங்குமின்
கருப்புரம் துதைந்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரும் மருத்தினும் உறுமின்
பெருங்கவின் முன்நாள் பேணிய அருந்தவம்
கண்ணிடை உளத்திடை காண்மின் கருதுமின் (10)
பூவும் சுண்ணமும் புகழ்ந்தெதிர் எறிமின்
யாழில் பரவுமின் ஈங்கிவை அன்றி
கலத்தும் என்றெழுமின் கண்ணளி காண்மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு
புவிபுனல் அனல்கால் மதிபுல வோன்என (15)
முழுதும் நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய அந்நாள்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடல் சிறுநகைக் குறுந்தாட் பாரிடம் (20)
ஆற்றாது அலைந்த நீர்நசை அடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத்து அருளிய
கூடலம் பதிஉறை குணப்பெருங் கடவுள்
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை ஊரன் (25)
பொன்துணர்த் தாமம் புரிந்தொளிர் மணித்தேர்
வீதி வந்தது வரலான்நும்
ஏதம் தீர இருமருங்கு எழுந்தே. (28)

பாடல்:14[தொகு]

கல்வி நலம் கூறல்[தொகு]

நிலையினின் சலியா நிலைமை யானும்
பலஉலகு எடுத்த ஒருதிறத் தானும்
நிறையும் பொறையும் பெறும்நிலை யானும்
தேவர் மூவரும் காவ லானும்
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும் (5)
அளக்கஎன்று அமையாப் பரப்பின தானும்
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானும்
முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம்
அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் (10)
நிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் வானத் தருஐந்து ஆகியும்
மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின் (15)
படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்த லானும்
மறுமைதந்து உதவும் இருமை யானும்
பெண்இடம் கலந்த புண்ணியன் ஆகியும்
அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும் (20)
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்
நிறைவுளம் நீங்காது உறைஅருள் ஆகியும்
இவைமுதல் ஆகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை இருசெவி உண்ணும் (25)
குடக்கோச் சேரன் கிடைத்துஇது காண்கஎன
மதிமலி புரிசைத் திருமுகம் கூறி
அன்புஉருத் தரித்த இன்புஇசைப் பாணன்
பெருநிதி கொடுக்கஎன உறவிடுத் தருளிய
மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன் (30)
இருசரண் பெருகுநர் போல
பெருமதி நீடுவர்; சிறுமதி நுதலே! (32)

பாடல்:15[தொகு]

முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்[தொகு]

குரவம் மலர்ந்த குவைஇருள் குழலீ!
இருவேம் ஒருகால் எரிஅதர் இறந்து
விரிதலை தோல்முலை வெள்வாய் எயிற்றியர்க்கு
அரும்புது விருந்தெனப் பொருந்திமற்று அவர்தரும்
இடியும் துய்த்து சுரைக்குடம் எடுத்து (5)
நீள்நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும்
பழம்புல் குரம்பை யிடம்புக்கு இருந்தும்
முடங்குஅதள் உறுத்த முகிழ்நகை எய்தியும்
உடனுடன் பயந்த கடஒலி ஏற்றும்
நடைமலை எயிற்றின் இடைத்தலை வைத்தும் (10)
உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டெனின்
முலைமூன்று அணைந்த சிலைநுதல் திருவினை
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவன் ஆகி
மேதினி புரக்கும் விதியுடை நல்நாள் (15)
நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும்
அருட்குறி நிறுவி அருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வாழ் இறைவன்
முண்டகம் மலர்த்தி முருகவிழ் இருதாள்
உறைகுநர் உண்ணும் இன்பமே
அறையல் அன்றிமற்று ஒன்றினும் அடாதே! (21)

பார்க்க:[தொகு]

கல்லாடம்
கல்லாடம் பாயிரம்
கல்லாடம்:3-5
கல்லாடம்:6-10
கல்லாடம்:16-20
கல்லாடம்:21-25
கல்லாடம்:26-30
கல்லாடம்:31-35
கல்லாடம்:36-40
கல்லாடம்:41-45
கல்லாடம்:46-50
: : : :
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/11-15&oldid=486156" இலிருந்து மீள்விக்கப்பட்டது