கல்லாடம்/3-5
Appearance
< கல்லாடம்
பாடல்:03 (அமுதமும்)
[தொகு]தமர் நினைவு கூறி வரைவு கடாதல்
[தொகு]- அமுதமும் திருவும் பணிவரப் படைத்த
- உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட
- களவுடை நெடுஞ்சூர் கிளை களம்விட்டு ஒளித்த
- அருள்நிறைந்து அமைந்த கல்வியர் உளமெனத்
- தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும் (5)
- எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்
- வள்ளி துணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
- கறங்கு கால்அருவிப் பரங்குன்று உடுத்த
- பொன்னகர்க் கூடல் சென்னியம் பிறையோன்
- பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை (10)
- கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி,
- பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
- என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
- கள்அவிழ் குழல்சேர் கருணைஎம் பெருமான்
- மலர்ப்பதம் நீங்கா உளப்பெருஞ் சிலம்ப! (15)
- கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளைமறை
- சொல்லினர் தோம்என துணைமுலை யருத்தன
- பலஉடம்பு அழிக்கும் பழிஊன் உணவினர்
- தவம்எனத் தேய்ந்தது துடிஎனும் நுசுப்பே
- கடவுள் கூறார் உளம்எனக் குழலும் (20)
- கொன்றை புறவுஅகற்றி நின்றஇருள் காட்டின
- சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் போல
- கறுத்துச் சிவந்தன கண்இணை மலரே
- ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
- இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில்மொழி
- விள்ளும் தமிழில் கூறினர்
- உள்ளம் கறுத்துக் கண்சிவந்து உருத்தே. (27)
பாடல்:04 (பூமணி)
[தொகு]தாய் அறிவு கூறி வரைவு கடாதல்
[தொகு]- பூமணி யானை பொன்என எடுத்து
- திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
- மலைவரும் காட்சிக்கு உரிய ஆகலின்
- நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
- ஈன்ற செங்கவி எனத்தோன்றி நனிபரந்து (5)
- பாரிடை இன்பம், நீளிடைப் பயக்கும்
- பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
- உடலுயிர் என்ன உறைதரு நாயகன்
- கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி
- ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து (10)
- விரிசடை மறைத்து மணிமுடி கவித்து
- விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து
- வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும்
- பேரருள் நாயகன் சீரருள் போல
- மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல் (15)
- நலத்தொடர் வென்றிப் பொலம்பூண் குரிசில்
- சின்னம் கிடந்த கொடிஞ்சி மான்தேர்
- நொச்சிப் பூவுதிர் நள்இருள் நடுநாள்
- விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென
- தன்கண் போலும் எண்கண் நோக்கி (20)
- கள்வரைக் காணும் உள்ளம் போலச்
- செம்மனம் திருகி உள்ளம் துடித்து
- புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனள்
- மாறாக் கற்பின் அன்னை
- கூறுஆம் மதியத் திருநுதற் கொடியே! (25)
பாடல்:05 (பகையுடன்)
[தொகு]பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
[தொகு]- பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
- பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலும்
- உட்பகை அமைத்தலும் உணர்ந்துசொல் பொருத்தலும்
- ஒருதொழிற்கு இருபகை தீராது வளர்த்தலும்
- செய்யா அமைச்சுடன் சேரா அரசன் (5)
- நாடு கரிந்தன்ன காடுகடந்து இயங்கி
- இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு
- இதழ்நிறை மதுவம் தாமரை துளித்தென
- விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டால்
- உலகியல் நிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க (10)
- மாறனும் புலவரும் மயங்குறு காலை
- முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால்
- 'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
- கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
- பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் (15)
- தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
- தழற்கண் தரக்கின் சரும ஆடையன்
- கூடல்அம் பெரும்பதி கூறார் கிளை என
- நிறைநீர்க் கயத்துள் தருதாள் நின்று
- தாமரை தவஞ்செய்து அளியுடன் பெற்ற
- திருமகட்கு அடுத்ததுஎன் என்று
- ஒருமை காண்குவர் துகிர்கிளைக் கொடியே! (22)
பார்க்க:
[தொகு]- [[]] :[[]] :[[]] :[[]]