கல்லாடம்/31-35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடல்:31

அறியாள் போன்று நினைவு கேட்டல்[தொகு]

பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி எனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்புகக் குருதி வேலவ!
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி (5)
அமுதயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய
மதமலை இருநான்கு பிடர்சுமந்து ஓங்கிச்
செம்பொன் மணிகுயிற்றிய சிகரக் கோயிலுள்
அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த
ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ்சுடர் (10)
கருவி வானம் அடிக்கடி பொழியும்
கூடம் சூழ்ந்த நெடுமுடிப் பொதியத்து
கண்நுழை யாது காட்சிகொடு தோற்றிய
வெறிவீச் சந்தின் நிரைஇடை எறிந்து
மற்றது வேலி கொளவளைத்து வளர்ஏனல் (15)
நெடுங்கால் குற்றுழி இதணுழை காத்தும்
தேவர் கோமான் சிறை அரி புண்ணினுக்கு
ஆற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தென
கமஞ்சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
வான்உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும் (20)
பிரசமும் வண்டும் இரலிதெறு மணியும்
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து
துகில்நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
மறுவறு செம்மணி கால்கவண் நிறுத்தி
நிறைமதி கிடக்கும் இறால்விழ எறிந்தும் (25)
எதிர்சொல் கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழில் புக்கு நெடுமலை கூயும்
நுகப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்
பைங்காடு நகைத்த வெண்மலர் கொய்தும்
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் (30)
செம்பொன் செய்த வரிப்பந்து துரந்தும்
இனைய பல்நெறிப் பண்ணை இயங்கும்
அளவாக் கன்னியர் அவருள்
உளமாம் வேட்கையள் இன்னளென் நுரையே (34)
பாடல்:32

சுடரோடு இரத்தல்[தொகு]

ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையும் கோங்கின் பொன்மலர் சூட்டிய
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
நெடுந்திசை நடக்கும் பொருள்நிறை கலத்தினைப் (5)
பெருவளி மலக்கச் செயல்மறு மறந்தாங்கு
சேர மறுக முதுக்குறை உறுத்தி
எரிதெறும் கொடுஞ்சுரத்து இறந்தன ளாக
நதிமதம் தறுகண் புகர்கொலை மறுத்த (10)
கல்இபம் அதனைக் கரும்புகொள வைத்த
ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை ஒருநாள் கலக்குவ போல
உழுவை உகிர்உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்
உரிவை மூடி ஒளியினை மறைத்து (15)
தரைபடு மறுக்கம் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாம்கொடு
மண்ணகம் உருகக் கனற்றுமழல் மேனியை
எடுத்து மூடி எறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்அரை முளரி (20)
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
மலர்தலை உலகத்து இருள்எறி விளக்கும்
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்
மறைஉகு நீர்க்குக் கருவும் கரியும் (25)
வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்
சேண்குளம் மலர்ந்த செந்தா மரையும்
சோற்றுக் கடன்கழிக்கப் போற்றுயிர் அழிக்கும்
ஆசைச் செருநர்க்கு அடைந்துசெல் வழியும்
அருளும் பொருளும் ஆகித்
திருவுலகு அளிக்கும் பருதிவா னவனே! (31)
பாடல்:33

இன்னல் எய்தல்[தொகு]

வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய் (5)
ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன் (10)
எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப (15)
அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட (20)
கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே? (25)
பாடல்:34

நெஞ்சொடு நோதல்[தொகு]

பொருள்செயல் அருத்தியின் எண்வழி தடைந்து
நால்திசை நடக்கும் அணங்கின் அவயவத்து
அலைதரு தட்டைக் கரும்புறம் மலைமடல்
கடல்திரை உகளும் குறுங்கயல் மானும்
கடுங்கான் தள்ளி தடைதரு நெஞ்சம்! (5)
கயிலைத் தென்பால் கானகம் தனித்த
தேவர்நெஞ் சுடைக்கும் தாமரை யோகின்
மணக்கோல் துரந்த குணக்கோ மதனை
திருக்குளம் முளைத்த கண்தா மரைகொடு
தென்கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல் (10)
திருமா மதுரை எனும்திருப் பொற்றொடி
என்னுயிர் அடைத்த பொன்முலைச் செப்பின்
மாளா இன்பம் கருதியோ? அன்றி
புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!
வளர்முலை இன்பெனின் மறித்து நோக்குமதி (15)
பெரும்பொருள் இன்பெனின் பெரிதுதடை இன்றே
யாதினைக் கருதியது? ஒன்றை
ஓதல் வேண்டும் வாழிய பெரிதே! (18)
பாடல்:35

அல்லகுறி அறிவித்தல்[தொகு]

வற்றிய நரம்பு நெடுங்குரல் பேழ்வாய்
குழிவிழி பிறழ்பல் தெற்றற் கருங்கால்
தாளிப் போந்தின் கருமயிர்ப் பெருந்தலை
விண்புடைத்து அப்புறம் விளங்குடற் குணங்கினம்
கானம் பாடிச் சுற்றிநின் றாட (5)
சுழல்விழி சிறுநகை குடவயிற்று இருகுழைச்
சங்கக் குறுந்தாட் பாரிடம் குனிப்ப
தேவர் கண்பனிப்ப முனிவர் வாய்குழற
கல்ல வடத்திரள் மடிவாய்த் தண்ணுமை
மொந்தை கல்லலகு துத்தரி ஏங்க (10)
கட்செவி சுழல தாழ்சடை நெறிப்ப
இதழி தாதுதிர்ப்ப பிறைஅமுது உகுக்க
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய பெருமான்
கூடல் மாநகர் அன்ன பொற்கொடி!
இரவிக்கு அணிய வைகறை காறும் (15)
அலமரல் என்னைகொல்? அறிந்திலம் யாமே
வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து
கடைந்த செம்பவளத் தொத்துடன் காட்டும்
இரும்பு கவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
சினைமுகம் ஏந்திய இணர்கொள்வாய்க் குடம்பையின் (20)
எக்கர்ப் புள்ளினும் வெண்மை இடம்மறைக்கும்
சிறைவிரி தூவிச் செங்கால் அன்னம்
குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ
சேவலும் இனமும் சூழும்
காவில் மாறித் துயில் அழுங்கு தற்கே. (25)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/31-35&oldid=486165" இருந்து மீள்விக்கப்பட்டது