கல்லாடம்/51-55

விக்கிமூலம் இலிருந்து

பாடல்:51[தொகு]

முகிலொடு கூறல்[தொகு]

கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு
உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி
தெய்வக் குலப்பகை விண்ணொடும் விம்ம (5)
இருநால் திசையும் உண்பலி தூவி
நன்னூல் மாக்கள் நணிக்குறி சொற்று
பக்கம் சூழ்ந்த நெடுநகர் முன்றில்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெங்கள் பெய்து நாள்குறித்து உழுநரும் (10)
சூல்நிறைந் துளையும் சுரிவளைச் சாத்தும்
இனக்கயல் உண்ணும் களிக்குரு கினமும்
வரைப்பறை அரிந்த வாசவன் தொழுது
நிரைநிரை லிளம்பி வழிமுடி நடுநரும்
நாறு கழிதுற்ற சககு ஈர்க்குநரும் (15)
தாமரை பாடும் அறுகால் கீளையும்
உறைத்தெழு கம்பலை உம்பரைத் தாவி
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்
அள்ளற் பழனத்து அணிநகர்க் கூடல்
நீங்காது உறையும் நிமிர்கடைப் பெருமான் (20)
உரகன் வாய்கீண்ட மாதவன் போல
மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக்
கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி
நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு
அடைப்பது போல உடைப்பது நோக்கி (25)
கோமகன் அடிக்க அவனடி வாங்கி
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம்
அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்
திருமிடற் றிருளெனச் செறிதரும் மாமுகில்
எனதுகண் கடந்து நீங்கித்
துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே. (31
= பாடல்:52 =

தழை விருப்பு உரைத்தல்[தொகு]

அறுகும் தும்பையும் அணிந்தசெஞ் சடையும்
கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும்
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி
அருச்சுனன் அருத்தவம் அழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து (5)
பொன்னுடை ஆவம் தொலையாது சுரக்கப்
பாசு பதக்கணை பரிந்தருள் செய்தோன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழ
தென்கடல் நடுத்திடர் செய்துறைந்து இமையவர்
ஊருடைத் துண்ணும் சூருடல் துணித்த (10)
மணிவேற் குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்றம் ஒருபால் பொலிந்த
அறப் பெருங்கூடல் பிறைச்சடைப் பெருமான்
திருவடிப் பெருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை (15)
ஒருநீ விடுத்தனை யான்அது கொடுத்தனன்
அவ்வழி கூறின் அத்தழை வந்து
கண்மலர் கவர்ந்தும் கைமலர் குவித்தும்
நேட்டுயிர்ப் பெறிந்தும் முலைமுகம் நெருக்கியும்
ஊடியும் வணங்கியும் உவந்தளி கூறியும் (20)
பொறை அழி காட்சியள் ஆகி
நிறையழிந் தவட்கு நீஆ யினவே! (22)
= பாடல்:53 =

விரவிக் கூறல்[தொகு]

வெயரமுது அரும்பி முயல்கண் கறுத்து
தண்ணம்நின் றுதலலின் நிறைமதி ஆகி
பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து
நிறைஅளி புரக்கும் புதுமுகத்து அணங்குநின்
ஒளிவளர் நோக்கம் உற்றனை ஆயின் (5)
இன்னுயிர் வாழ்க்கை உடலொடும் புரக்கலை
ஒருதனி அடியாற்கு உதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாளெடுத்து
ஆதிசாரணை அடர்நிலைப் பார்வை
வாளொடு நெருக்கல் மார்பொடு முனைத்தல் (10)
பற்றி நின்று அடர்த்தல் உள்கையின் முறித்தல்
ஆனனத்து ஒட்டல் அணிமயிற் புரோகம்
உள்கலந் தெடுத்தல் ஒசிந்திடம் அழைத்தல்
கையொடு கட்டல் கடிந்துள் அழைத்தலென்று
இவ்வகைப் பிறவும் எதிர்அமர் ஏறி (15)
அவன் பகை முறித்த அருட்பெருங் கடவுள்
கூடலம் கானல் பெடையுடன் புல்லி
சேவல் அன்னம் திருமலர்க் கள்ளினை
அம்மலர் வள்ளம் ஆகநின்று உதவுதல்
கண்டுகண்டு ஒருவன் மாழ்கி
விண்டுயிர் சேர்ந்த குறிநிலை மயக்கே. (21)
= பாடல்:54 =

ஊடல் தணித்தல்[தொகு]

அவ்வுழி அவ்வுழிப் பெய்உணவு உன்னி
முகன்பெறும் இருசெயல் அகன்பெறக் கொளுவும்
புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி
இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி
முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி (5)
பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்
பேழ்வாய்ப் புலிஉகிர் சிறுகுரல் விளங்க
அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப்
பழம்கோள் தத்தை வழங்குசொல் போலும்
மழலைக் கிளவியும் இருநிலத்து இன்பமும் (10)
ஒருவழி அளிக்கும் இருங்கதிர்ச் சிறுவனை
தழல்விழி மடங்கல் கொலைஅரிக் குருளையைப்
பொன்மலை கண்ட பொலிவு போல
மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின்
கறங்கிசை அருவி அறைந்துநிமிர் திவலையும் (15)
துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும்
குறமகார் கொழிக்கும் கழைநித் திலமும்
நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும்
புனம்பட எறிந்த கார்அகில் தூமமும்
அந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும் (20)
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்
கந்திவிரி படிந்த மென்சிறை வண்டும்
சந்தனப் பொங்கர்த் தழைச்சிறை மயிலும்
முன்றில்அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும்
ஒன்றி னொடு ஒன்று சென்றுதலை மயங்கும் (25)
குளவன் குன்றக் கூடல்அம் பதிநிறை
மஞ்சடை குழல்பெறு செஞ்சடைப் பெருமான்
அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்
வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன்
திருக்கண் கண்ட பெருக்கினர் போல் (30)
முளரிஅம் கோயில் தளைவிட வந்து
நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள்
நின்உளத்து இன்னல் மன்அறக் களைந்து
பொருத்தம் காண்டி வண்டாரும்
அருத்திஅம் கோதை மன்னவன் பாலே. (35)
= பாடல்:55 =

குலமுறை கூறி மறுத்தல்[தொகு]

பெருமறை நூல்பெறக் கோன்முறை புரக்கும்
பெருந்தகை வேந்தன் அருங்குணம் போல
மணந்தோர்க்கு அமுதம் தணந்தோர்க்கு எரியும்
புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கும்
மலையத் தமிழ்க்கால் வாவியில் புகுந்து (5)
புல்லிதழ்த் தாமரைப் புதுமுகை அவிழ்ப்ப
வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு
சேயிதழ்க் குவளையின் நிரைநிரை உறங்கும்
நிலைநீர் நாடன் நீயே இவளே
மலைஉறை பகைத்து வான்உறைக்கு அணக்கும் (10)
புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்
பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே! நீயே
ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி
மாயா நல்லறம் வளர்நாட் டினையே! இவளே
தொண்டகம் துவைப்ப தொழிற்புனம் வளைந்து (15)
பகட்டினம் கொல்லும் பழிநாட் டவளே நீயே--
எழுநிலை மாடத்து இளமுலை மகளிர்
நடம்செயத் தரள வடம்தெறு நகரோய் இவளே--
கடம்பெறு கரிக்குலம் மடங்கல்புக்கு அகழத்
தெறித்திடு முத்தம் திரட்டுவைப் பினளே (20)
அணிகெழு நவமணி அலர்எனத் தொடுத்த நீயே--
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே இவளே--
மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற
நெட்டிதண் ஏறும் இப்புனத் தினளே
ஆதலின், பெரும்புகழ் அணைகுதி ஆயின் (25)
நாரணன் பாற தேவர்கெட் டோட
வளிசுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக்
கருமுகில் வளைந்து பெருகியபோல
நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை
மறித்துஅவர் உயிர்பெறக் குறித்துண் டருளி (30)
திருக்களம் கறுத்த அருட்பெறு நாயகன்
கூடல் கூடினர் போல,
நாடல் நீ இவள் தழைத்தோள் நசையே. (33)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/51-55&oldid=486169" இலிருந்து மீள்விக்கப்பட்டது