கல்லாடம்/56-60
Appearance
< கல்லாடம்
- பாடல்:56
காவற் பிரிவு அறிவித்தல்
[தொகு]- நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து
- வரையறுத்து அமைந்த வகைநான் காக
- விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை
- குருமணி விரித்தலின் தேனொடு கிடந்து
- மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் (5)
- வரைஎன நிறுத்திய திருவுறை பெருந்தோள்
- தரித்தும் அணைத்தும் தான்எனக் கண்டும்
- செய்ததும் அன்றி திருமணம் பணைத்துக்
- காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
- விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் (10)
- தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்
- கொண்டல்வந் துலவும் நீலக் குவட்டினும்
- கோடைசென் நுடற்றும் கொல்லிக் கிரியினும்
- பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும்
- முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் (15)
- கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும்
- வேகத் தலையினும் விதிஆ கமத்தினும்
- கல்வியர் உளத்தும் கலர்நெஞ் சகத்தும்
- தெய்வம் விடுத்துப் பொய்கொள் சிந்தையினும்
- கொலையினர் கண்ணும் குன்றா தியைந்து (20)
- வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த
- விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
- சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும்
- சின்னக் குறளும் செழுங்கார் போலப்
- பெருமறை முழங்கும் திருநகர்க் கூடல் (25)
- ஒப்புற் றடைமலர் சுமந்த
- மைப்புறக் கூந்தல் கொடிவணங்கு இடையே! (27)
- பாடல்:57
உள் மகிழ்ந்து உரைத்தல்
[தொகு]- நுனிக்கவின் நிறைந்த திருப்பெரு வடிவினள்
- உயிர்வைத்து உடலம் உழன்றன போல
- நெடும்பொருள் ஈட்ட நிற்பிரிந்து இறந்து
- கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகும்
- கடுஞ்சுரம் தந்த கல்லழல் வெப்பம் (5)
- தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும்
- என்னுயிர் யாவையும் இட்டடைத் தேந்தி
- குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்தநின்
- பெருமுலை மூழ்கஎன் உளத்தினில் தொடாமுன்
- வீழ்சுற்று ஒழுக்கிய பராரைத் திருவடக் (10)
- குளிர்நிழல் இருந்து குணச்செயல் மூன்றும்
- உடலொடு படரும் நிலைநிழல் போல
- நீங்காப் பவத்தொகை நிகழ்முதல் நான்கும்
- உடனிறைந் தொழியா உட்பகை ஐந்தும்
- மதியினின் பழித்த வடுஇரு மூன்றும் (15)
- அணுகாது அகற்றி பணிமுனி நால்வர்க்கு
- அறமுதல் நான்கும் பெறஅருள் செய்த
- கூடற் பெருமான் நீடருள் மூழ்கி
- இருபதம் உள்வைத் திருந்தவர் வினைபோல்
- போயின துனைவினை நோக்கி
- ஏகின எனக்கே அற்புதம் தருமே! (21)
- பாடல்:58
புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்
[தொகு]- கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து
- வால்உளை எருக்கில் வளர்உழை பாடி
- கூவிளங் கண்ணியில் குலக்கிளை முரற்றி
- வெண்கூ தளத்தில் விளரிநின் றிசைத்து
- வண்டும் தேனும் ஞிமிறும் கரும்பும் (5)
- உமிழ்நறவு அருந்தி உறங்குசெஞ் சடையோன்
- மதுமலர் பறித்துக் திருவடி நிறைத்த
- நான்மறைப் பாலனை நலிந்துயிர் கவரும்
- காலற் காய்ந்த காலினன் கூடல்
- திருமறுகு அணைந்து வருபுனல் வையை (10)
- வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்து
- அணைந்தெடுத் தேந்திய அரும்புமுகிழ் முலையோள்
- மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை
- ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும்
- ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் (15)
- முழக்கியும் தபுத்தியும் முலைஒளி நோக்கியும்
- விளிமொழி ஏற்றும் விதலையின் திளைத்தும்
- பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும்
- நிறுத்தியும் நிரைத்தும் நெறித்தும் செறித்தும்
- எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் (20)
- கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்தும்
- செய்தன எல்லாம் செய்யலர் போலஎன்
- நெட்டிலை பொலிந்தபொன் நிறைதிரு உறையுளில்
- பாசடைக் குவளைச் சுழல்மணக் காட்டினைக்
- கருவரிச் செங்கண் வசாலினம் கலக்க (25)
- வேரிமலர் முண்டகத்து அடவிதிக்கு எறிய
- வெள்ளுடற் கருங்கண் கயல்நிரை உகைப்ப
- மரகதப் பன்னகத்து ஆம்பல்அம் குப்பையைச்
- சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப
- படிந்து சேடெறியும் செங்கண் கவரியும் (30)
- மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பும்
- மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும்
- மிடைந்து வயல்இரிந்து முதுகுசரிந் துடைந்து
- சிறியோன் செருஎன முறியப் போகி
- உழவக் கணத்தைக் குலைக்குடில் புகுத்தும் (35)
- பெருநீர் ஊரர் நிறைநீர் விடுத்துச்
- செறிந்த தென்எனக் கேண்மின்
- மறிந்துழை விழித்த மறிநோக் கினரே! (38)
- பாடல்:59
தன்னை வியந்து உரைத்தல்
[தொகு]- விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க்
- கண்டல்முன் முளைத்த கடிஎயிற் றரவக்
- குழுவினுக்கு உடைந்து குளிர்மதி ஒதுங்க
- தெய்வப் பிறைஇருந்த திருநுதற் பேதையைக்
- கண்டுகண்டு அரவம் மயில்எனக் கலங்க (5)
- நெடுஞ்சடைக் காட்டினை அடும்தீக் கொழுந்தென
- தலைஏது அலையா நகுதலை தயங்க
- அணிதலை மாலையை நிறைமதித் திரள்எனப்
- புடைபுடை ஒதுங்கி அரவுவாய் பிளப்ப
- ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு (10)
- கிடந்தொளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான்
- படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
- மதுரை வவ்விய கருநட வேந்தன்
- அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி அடைப்ப
- மற்றவன் தன்னை நெடுந்துயில் வருத்தி (15)
- இறையவன் குலத்து முறையர் இன்மையால்
- கருதி தோரை கல்லொடு பிறங்க
- மெய்யணி அளறாக் கைம்முழம் தேய்த்த
- பேரன்பு உருவப் பசுக்கா வலனை
- உலகினில் தமது முக்குறி யாக் (20)
- மணிமுடி வேணியும் உருத்திரக் கலனும்
- நிலவுமிழ் புண்ணியப் பால்நிறச் சாந்தமும்
- அணிவித் தருள்கொடுத்து அரசன் ஆக்கி
- அடுமால் அகற்றி நெடுநாள் புரக்க
- வையகம் அளித்த மணிஒளிக் கடவுள் (25)
- நெடுமறிக் கூடல் விரிபுனல் வையையுள்
- பிடிகுளி செய்யும் களிறது போல
- மயிலெனும் சாயல் ஒருமதி நுதலியை
- மருமமும் தோளினும் வரையறப் புல்லி
- ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை (30)
- பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம்
- தலைநடுக் குற்ற தன்மை போல
- ஒன்றற அகற்றி உடன்கலந் திலனேல்
- அன்ன ஊரனை எம்மில் கொடுத்து
- தேரினும் காலினும் அடிக்கடி கண்டு (35)
- நெட்டுயிர்ப்பு எறிந்து நெடுங்கண் நீருகுத்துப்
- பின்னும் தழுவ உன்னும் அவ்வொருத்தி
- அவளே ஆகுவள் யானே தவலருங்
- கருநீர்க் குண்டு அகழுடுத்த
- பெருநீர் ஆழித் தொல்லுல குழிக்கே. (40)
- பாடல்:60
புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்
[தொகு]- அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும்
- எழுமலை பொடித்தலின் அனல்தெறும் அசனியும்
- கருங்கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும்
- மரவுயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும்
- என்னுளம் இருத்தலின் இயைந்துணர் உயிரும் (5)
- நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும்
- கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும்
- இருநிலம் காத்தலின் மதியுடை வேந்தும்
- ஆகிய மணிவேல் சேவலம் கொடியோன்
- வானக மங்கையும் தேன்வரை வள்ளியும் (10)
- இருபுறம் தழைத்த திருநிழல் இருக்கும்
- ஒரு பரங் குன்றம் மருவிய கூடல்
- பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
- நாயகன் திருவடி நண்ணலர் போல
- பொய்பல புகன்று மெய்ஒளித்து இன்பம் (15)
- விற்றுணும் சேரி விடாதுறை ஊரன்
- ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம்
- நீயும் குதட்டினை ஆயின் - சேயாய்!
- நரம்பெடுத்து உமிழும் பெருமுலைத் தீம்பாற்கு
- உள்ளமும் தொடாது விள்ளமுது ஒழுக்கும் (20)
- குதலைவாய் துடிப்பக் குலக்கடை உணங்கியும்
- மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
- புடைமணி விரித்த உடைமணி இழுக்கியும்
- சுடிகையும் சிகையும் சேர்ந்துகண் பனித்தும்
- பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் (25)
- மறிக்கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்
- சென்றழி யாது நின்றயர் கண்டும்
- உறுவதும் இப்பயன் அன்றேல்,
- பெறுவது என்பால் இன்றுநின் பேறே. (29)