கல்லாடம்/81-85

விக்கிமூலம் இலிருந்து
பாடல்:81

முன்பனிக்கு நொந்து உரைத்தல்[தொகு]

கடல்மகள் உள்வைத்து வடவைமெய் காயவும்
மலைமகள் தழல்தரு மேனிஒன்று அணைக்கவும்
மாசறு திருமகள் மலர்புகுந்து ஆயிரம்
புறஇதழ்ப் புதவடைத்து அதன்வெதுப்பு உறைக்கவும்
சயமகள் சீற்றத் தழல்மனம் வைத்துத் (5)
திணிபுகும் வென்றிச் செருஅழல் கூடவும்
ஐயர் பயிற்றிய விதிஅழல் ஓம்பவும்
அவ் அனற்கு அமரர் அனைத்தும்வந்து அணையவும்
முன்இடைக் காடன் பின்எழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரஉள் இருந்தென் (10)
நெஞ்சகம் நின்று நினைவினுள் மறைந்து
புரை அறும் அன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் அம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேர்ஊர்ப் பழநக ரிடத்தும் (15)
மகிழ்நடம் பேய்பெறும் வடவனக் காட்டினும்
அருமறை முடியினும் அடியவர் உளத்தினும்
குனித்தருள் நாயகன் குலமறை பயந்தோன்
இருந்தமிழ்க் கூடல் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துள் துள்ளிய ஞான்று (20)
நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினில் கொள்ளவும் கரிவுரி மூடவும்
ஆக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
ஆங்கவர் துயர்பெற ஈன்றஎன் ஒருத்தி
புகல்விழும் அன்புதற்கு இன்றி
மகவினைப் பெறலாம் வரம்வேண் டினளே. (26)
பாடல்:82

மறவாமை கூறல்[தொகு]

மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பி
பசுந்தாள் தோன்றி மலர்நனி மறித்து
நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து
மணிபுறம் கான்ற புரிவளை விம்மி
விதிப்பவன் விதியா ஓவம் நின்றெனஎன் (5)
உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்
உவணக் கொடியினன் உந்திமலர்த் தோன்றிப்
பார்முதல் படைத்தவன் நடுத்தலை அறுத்து
புனிதக் கலன்என உலகுதொழக் கொண்டு
வட்டம் முக்கோணம் சதுரம் கார்முகம் (10)
நவத்தலை தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
கண்டன மகம்தொறும் கலிபெறச் சென்று
நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளாக் கொலைதரு நவ்வியும்
விதிர்ஒளி காற்றக் கனல்குளிர் மழுவும் (15)
இருகரம் தரித்த ஒருவிழி நுதலோன்
கூடல்ஒப்பு உடையாய் குலஉடுத் தடவும்
தடமதில் வயிற்றுள் படும்அவர் உயிர்க்கணம்
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிதெனப்
போக்கற வளைந்து புணர்இருள் நாளும் (20)
காவல் காட்டிய வழியும்
தேவர்க் காட்டும்நம் பாசறை யினுமே. (22)
பாடல்:83

ஊடி உரைத்தல்[தொகு]

மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம்
பைங்கால் தடவிச் செங்கயல் துரந்துண்டு
கழுக்கடை அன்னதம் கூர்வாய்ப் பழிப்புலவு
எழில்மதி விரித்தவெண் தளைஇதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயல்அணி ஊர (5)
கோளகைக் குடிலில் குனிந்திடைந் தப்புறத்து
இடைநிலை அற்றபடர் பெருவெளி யகத்து
உடல்முடக்கு எடுத்த தொழிற்பெரு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறைஎயிற் றிருள்எழில் அரக்கன்
அமுதம் உண்டிமையா அவரும் மங்கையரும் (10)
குறவரும் குறவத் துணையரும் ஆகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை இறும்பிடை
பறவைஉண் டீட்டிய இறால்நறவு அருந்தி
அந்நிலத் தவர்என அடிக்கடி வணங்கும்
வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்தொரு (15)
தேவனும் அதன்முடி மேவவும் உளனாம்
எனப்புயம் கொட்டி நகைத்தெடுத் தார்க்க
பிலம்திறந் தன்ன பெருவாய் ஒருபதும்
மலைநிரைத் தொழுங்கிய கரம்இரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவும் திசையுட்கி முரியவும் (20)
தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரல் தலைநக நுதியால்
சிறிதுமலை உறைத்த மதிமுடி அந்தணன்
பொன்அணி மாடம் பொலிநகர்க் கூடல்
ஆவண வீதி அனையவர் அறிவுறில் (25)
ஊருணி அன்னநின் மார்பகம் தோய்ந்தஎன்
இணைமுலை நன்னர் இழந்தன அதுபோல்
மற்றவர் கவைமனம் மாழ்கி
செற்றம்நிற் புகைவர்இக் கால்தீண்டலையே. (29)
பாடல்:84

தோழி பொறை உவந்து உரைத்தல்[தொகு]

உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர
திரைவிழிப் பருந்தினம் வளைஉகிர்ப் படையால்
பார்ப்பிரை கவரப் பயனுறும் உலகில்
கடனுறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் (5)
தழல்உணக் கொடுத்த அதன்உண விடையே
கைவிளக்கு எடுத்துக் கரைஇனம் கரைய
பிணம்விரித் துண்ணும் குணங்கினம் கொட்ப
சூற்பேய் ஏற்ப இடாகின கரப்ப
கண்டுளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி (10)
பிறைநுதல் நாட்டி கடுவளர் கண்டி
இறால்நறவு அருவி எழுபரங் குன்றத்து
உறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றினள்
ஒருபால் பொலிந்த உயர்நகர்க் கூடல்
கடுக்கைஅம் சடையினன் கழல்உளத்து இலர்போல் (15)
பொய்வரும் ஊரன் புகலரும் இல்புக
என்உளம் சிகைவிட்டு எழும்அனல் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின என்றால்
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
கைவரல் ஏற்றும் கனவினுள் தடைந்தும் (20)
திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்
பொருட்கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் இறந்தும்
காவலில் கவன்றும் கல்வியில் கருதியும்
வேந்துவிடைக்கு அணங்கியும் விளைபொருட்கு உருகியும் (25)
நின்ற இவட்கு இனிஎன்ஆம்
கன்றிய உடலுள் படும்நனி உயிரே? (27)
பாடல்:85

கலவி கருதிப் புலத்தல்[தொகு]

நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி
வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கி
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை
கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து (5)
புலனறத் துடைத்த நலனுறு வேள்வியர்
ஆரா இன்பப் பேரமுது அருந்தி
துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன் (10)
மண்திரு வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியும் கிளையும் கிளர்படை நான்கும்
திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
எரிவாய் உரகர் இருள்நாட்டு உருவக்
கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து (15)
மறியப் புதைத்த மறம்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும்
கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினில் அருளுடன் நிறைந்த (20)
பவளச் சடையோன் பதம்தலை சுமந்த
நல்இயல் ஊரநின் புல்லம்உள் மங்கையர்
ஓவிய இல்லம்எம் உறையுள் ஆக
கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர்
இவ்வுழி ஆயத் தினர்களும் ஆக (25)
மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய்
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தஇத்
திருமணம் கொள்ளாச் சேக்கையது ஆக
நின்வுளம் கண்டு நிகழ்உணவு உன்னி (30)
நாணா நவப்பொய் பேணியுள் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனும் நீயும்
திருப்பெறும் அயலவர் காண
வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே. (34)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/81-85&oldid=486175" இலிருந்து மீள்விக்கப்பட்டது