கல்லாடம்/86-90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாடல்:86

வரும்புனம் கண்டு வருந்தல்[தொகு]

உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும்
அளவாத் திருமணி அளித்த லானும்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத்து இளங்கா நிலைத்த லானும் (5)
பாசடை உம்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானும்
நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி
உடையா அமுதம் உறைத லானும்
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் (10)
வாடாத் தேவர்கள் மணத்த லானும்
நூறுடை மகத்தில் பேறுகெமண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்எயில் எறிந்த
மணிவேற் குமரன் திருவளர் குன்றம்
பேரணி உடுத்த பெருநகர்க் கூடல் (15)
கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்றம்
அருந்தவக் கண்ணினோடு இருந்தமா முனிபால்
பேரிருள் மாயைப் பெண்மகவு இரக்க
உவர்முதல் கிடந்த சுவையேழ் அமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய (20)
எழுநீர்ச் சகரர்கள் ஏழ்அணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க
பல்முக விளக்கின் பரிதியில் தோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு அரும்பிய மிடற்றோன் (25)
எறிந்துவீழ் அருவியும் எரிமணி ஈட்டமும்
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுதுறைக்கும்
திருமுத் தமிழும் பெருகுதென் மலையத்து
ஆரப் பொதும்பரி அடைகுளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணைமலர்க் கொடியே (30)
விண்விரித்து ஒடுக்கும் இரவிவெண் கவிகைக்கு
இட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதம் சினைத்த சிறைமயிற் குலமே!
நீலப் போதும் பேதையும் விழித்த
பொறிஉடல் உழையே! எறிபரல் மணியே! (35)
பாசிழைப் பட்டு நூல்கழி பரப்பிய
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!
மைந்தர்கண் சென்று மாதர்உள் தழைத்த
பொழிமதுப் புதுமலர்ப் போர்க்குடைச் சுரும்பே!
வெறிமுதிர் செம்மலர் முறிமுகம் கொடுக்கும் (40)
சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளைஅம் சுகமும் குருவியும் கடிய
இருகால் கவணிற்கு எறிமணி சுமந்த
நெடுங்கால் குற்றுழி நிழல்வைப்பு இதணே!
நெருநல் கண்டஎற்கு உதவுழி இன்பம் (45)
இற்றையின் கரந்த இருள்மனம் என்னை?
இவண்நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கும்
ஈங்கிவை கிடக்க என்நிழல் இரும்புனத்து
இருந்தொளிர் அருந்தேன் இலதால் நீரும் (50)
நின்புனம் அல்லஎன்று என்புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அப்புனம் நீரேல்
முன்னம் கண்டவன் அன்றென்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே. (54)
பாடல்:87

நெஞ்சொடு வருந்தல்[தொகு]

வடமொழி மதித்த இசைநூல் லழக்குடன்
அடுத்த எண்நான்கு அங்குலி யகத்தினும்
நாற்பதிற் றிரட்டி நால்அங் குலியினும்
குறுமையும் நெடுமையும் கோடல்பெற் றைதாய்
ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து (5)
கோடி மூன்றில் குறித்து மணிகுயிற்றி
இருநிலம் கிடத்தி மனம்கரம் கதுவ
ஆயிரத் தெட்டில் அமைத்தன பிறப்பு
பிறவிப் பேதத் துறையது போல
ஆரியப் பதம்கொள் நாரதப் பேரியாழ் (10)
நன்னர்கொள் அன்பால் நனிமிகப் புலம்ப
முந்நான்கு அங்குலி முழுஉடல் சுற்றும்
ஐம்பதிற் றிரட்டி ஆறுடன் கழித்த
அங்குலி நெடுமையும் அமைத்து உள்தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுந்தி நிலைநீக்கி (15)
அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரைகட்டி
தோள்கால் வதிந்து தொழிப்படத் தோன்றும்
தும்புருக் கருவியும் துள்ளிநின் றிசைப்ப
எழுஎன உடம்புபெற் றெண்பது அங்குலியின்
தந்திரி நூறு தழங்குமதி முகத்த (20)
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயல்உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்புகடிப் பமைத்து
அந்நரம்பு இருபத் தாறுஅங் குலிபெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து (25)
புறவிரல் மூன்றின் நுனிவிரல் அகத்தும்
அறுபத் திரண்டிசை அனைத்துயிர் வணக்கும்
மருத்துவப் பெயர்பெறும் வானக்கருவி
தூங்கலும் துள்ளலும் துவக்கநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற (30)
முனிவர்அஞ் சலியுடன் முகமன் இயம்ப
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச
இன்பப் பசுங்கொடி இடப்பால் படர
வெள்ளி அம் குன்றம் விளங்க விற்றிருந்த
முன்னவன் கூடல் முறைவணங் கார்என (35)
அரவப் பசுந்தலை அரும்பவிழ் கணைக்கால்
நெய்தற் பாசடை நெடுங்காட்டு ஒளிக்கும்
கண்எனக் குறித்த கருங்கயல் கணத்தை
வெள்ளுடல் கூர்வாய் செந்தாட் குருகினம்
அரவுஎயி றணைத்தமுள் இலைமுடக் கைதைகள் (40)
கான்றலர் கடிமலர் கரந்துறைந் துண்ணும்
கருங்கழி கிடந்த கானல்அம் கரைவாய்
மெய்படு கடுஞ்சூள் மின்எனத் துறந்தவர்
சுவல்உளைக் கவனப் புள்இயல் கலிமான்
நோக்கம் மிறைத்த பரிதிகொள் நெடுந்தேர்ப் (45)
பின்னொடும் சென்றஎன் பெரும்பிழை நெஞ்சம்
சென்றுழிச் சென்றுழிச் சேறலும் உளவோ
அவ்வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ?
இடைவழி நீங்கிஎன் எதிர்உறுங் கொல்லோ?
அன்றியும் நெடுநாள் அமைந்துடன் வருமோ? (50)
யாதென நிலைக்குவன் மாதோ
பேதை கொள்ளாது ஒழிமனம் கடுத்தே. (52)
பாடல்:88

கண் துயிலாது மொழிதல்[தொகு]

கடுவினை அங்குரம் காட்டிஉள் அழுக்காறு
எண்திசைச் சாகைகொண் டிருள்மனம் பொதுளி
கொடுங்கொலை வடுத்து கடும்பழிச் சடைஅலைந்து
இரண்டுஐஞ் ஞூறு திரண்டஅக் காவதம்
சுற்றுடல் பெற்று, துணைப்பதி னாயிரம் (5)
மற்றதின் நீண்டு மணிவுடல் போகி
ஐம்பது நூறுடன் அகன்றுசுற் றொழுக்கி
பெருங்கவிழ் இணர்தந்து அவைகீழ்க் குலவிய
அடல்மாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப் (10)
பன்னிரு கண்விரித்து என்வினை துரக்கும்
அருட்பரங் குன்றம் உடுத்தணி கூடல்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை ஒருத்தனைத்
தெய்வம் கொள்ளார் சிந்தைஅது என்னக்
கிடந்தவல் இரவில் கிளர்மழை கான்ற (15)
அவலும் உம்பரும் அடக்குபுனல் ஒருவி
தேஅருள் கல்லார் சிந்தையின் புரண்ட
கவலையும் காற்குறி கண்டுபொழில் துள்ளும்
இமையாச் சூரும் பலகண்டு ஒருங்காத்
துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர் (20)
கடியும் துனைவில் கையகன்று எரிமணித்
தொகையிருள் கொல்லும் முன்றில் பக்கத்து
இணைமுகப் பறைஅறை கடிப்புடைத் தோகை
வயிற்றுள் அடக்கி வளைகிடை கிடக்கும்
முழக்கிமெய் கவரும் முகக்கொலை ஞாளி (25)
அதிர்குரைப்பு அடக்கி இற்புறத்து அணைந்தநம்
பூம்புனல் ஊரனை பொருந்தா நெடுங்கண்
அன்னையின் போக்கிய அரும்பெருந் தவறு
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்
மயங்காத் தேவர் மருந்துவாய் மடுக்க (30)
முகம்கவிழ் வேலையில் அறம்குடி போகிய
மாயவல் அரக்கர் தட்டிக்
காய்பார் உகுத்த விதிஒத் தனவே. (33)
பாடல்:89

தலைவன் வரவு உரைத்தல்[தொகு]

நாற்கடல் வளைத்த நானிலத்து உயிரினை
ஐந்தருக் கடவுள் அவன்புலத் தினரை
நடந்துபுக்கு உண்டும் பறந்துபுக்கு அயின்றும்
முத்தொழில் தேவரும் முருங்கஉள் உறுத்தும்
நோன்தலைக் கொடுஞ்சூர்க் களவுயிர் நுகர்ந்த (5)
தழல்வேற் குமரன் சால்பரங் குன்றம்
மணியொடும் பொன்னொடும் மார்பணி அணைத்த
பெருந்திருக் கூடல் அருந்தவர் பெருமான்
இருசரண் அகலா ஒருமையர் உளம்என
சுடர்விளக்கு எடுமின் கோதைகள் தூக்குமின் (10)
பூவும் பொரியும் தூவுமின் தொழுமின்
சுண்ணமும் தாதும் துனைத்துகள் தூற்றுமின்
கரும்பெயல் குளிறினம் களிமயில் என்னக்
கிடந்தயர் வாட்குமுன் கிளிர்வினைச் சென்றோர்
உடலுயிர் தழைக்கும் அருள்வரவு உணர்த்த (15)
முல்லைஅம் படர்கொடி நீங்கி, பிடவச்
சொரிஅலர் தள்ளி துணர்ப்பொலம் கடுக்கைக்
கிடைதரவு ஒருவி களவுஅலர் கிடத்தி
பூலைஅம் புடைமலர் போக்கி அரக்கடுத்துக்
கழுவிய திருமணி கால்பெற் றென்ன (20)
நற்பெருந் தூது காட்டும்
அற்புதக் கோபத் திருவரவு அதற்கே. (22)
பாடல்:90

இரங்கல்[தொகு]

பழுதறு தெய்வம் காட்டிப் பண்டையின்
உழுவலின் நலத்தால் ஓருயிர் என்றும்
கடுஞ்சூள் தந்தும் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுடன் உண்டும்
குழமகற் குறித்தும் சிலமொழி கொடுத்தும் (5)
கையுறை சுமந்தும் கடித்தழை தாங்கியும்
உயிரினில் தள்ளா இரங்கியும் உணங்கியும்
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்
இறடியம் சேவற்கு எறிகவண் கூட்டியும்
புனமும் எம்உயிரும் படர்கரி தடிந்தும் (10)
அழுங்குறு புனல்எடுத்து அகிற்புகை ஊட்டியும்
ஒளிமணி ஊசல் பரியவிட்டு யாத்தும்
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்
இருவிஅம் புனத்திடை எறிஉயிர்ப்பு எறிந்தும்
தெரித்தலர் கொய்தும் பொழில்குறி வினவியும் (15)
உடலொடும் பிணைந்தகை ஆய்துயில் ஒற்றி
செறிஇருள் குழம்பகம் சென்றுபளிங் கெடுத்த
இற்பொழில் கிடைக்கும் அளவும்நின் றலைந்தும்
பல்நாள் பல்நெறி அழுங்கினர் இன்று
முகன்ஐந்து மணத்த முழவம் துவைக்க (20)
ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து
மூவுடல் அணைத்த மும்முகத்து ஓர்முகத்து
எண்கடிப்பு விசித்த கல்லலகு எறிய
இருட்குறள் ஊன்றிஎம் அருங்களி ஆற்றி
உருள்வாய்க் கொக்கரை உம்பர்நாட் டொலிக்க (25)
கரம்கால் காட்டி தலையம் இயக்கி
இதழ்அவிழ் தாமரை எனும்தகு ணிச்சம்
துவைப்ப நீள்கரத்துக் கவைகள் தோற்றி
கரிக்கால் அன்ன மொந்தைகலித் திரங்க
துடிஎறிந்து இசைப்ப துகளம் பரப்பி (30)
வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மலக்க
எரியகல் ஏந்திவெம் புயங்கமிசை ஆக்கி
எரிதளிர்த் தன்ன வேணியில் குழவிப்
பசும்பிறை அமுதொடு நிரம்பிய தென்ன
மதுக்குளிர் மத்தமும் மிலைத்தொரு மறுபிறை (35)
மார்பமும் இருத்திய தென்னக்கூன் புறத்து
ஏனக் கோடுவெண் பொடிப்புறத் தொளிர
பொலன்மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்
தனிக்கொடி காணஎவ் இடத்துயிர் தழைப்ப
ஆடிய பெருமான் அமர்ந்துநிறை கூடல் (40)
கனவிலும் வினவா தவரினும் நீங்கி
சூளும் வாய்மையும் தோற்றி
நீளவும் பொய்த்தற்கு அவர்மனம் கரியே! (43)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/86-90&oldid=486176" இருந்து மீள்விக்கப்பட்டது