உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லாடம்/91-95

விக்கிமூலம் இலிருந்து
பாடல்:91

ஐயம் உற்று ஓதல்

[தொகு]
பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும்
எழுமலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி
வரைஉலகு அனைத்தும் வருவது போல
திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும்
வையைநீர் விழவு புகுந்தனம் எனஒரு (5)
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்
பொலம்பூண் பெயர்ந்துறை பூணை அருள்தரும்
மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச்
சேக்கோள் கண்ணை செம்மொழிப் பெயர்தந்து
ஒன்றுடன் நில்லா மொழியை மதுத்த (10)
முதிரா நாள்செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தைஎம் கண்மனம் தோன்ற
அரும்பிய நகையை அன்றே நின்கெழு
என்கண் கண்ட இவ்இடை என்னுளம்
மன்னிநின் றடங்காக் குடுமிஅம் பெருந்தழல் (15)
பசுங்கடல் வளைந்து பருகக் கொதித்த
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல்செய்
விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும்
கொடுஞ்சூர்க் கொன்ற கூரிலை நெடுவேல்
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன் (20)
குருகொலி ஓவாப் பனிமலர் வாவி
வயிறு வாய்த்த குழலியம் கிழவோன்
வாழ்பரங் குன்றெனும் மணிஅணி பூண்ட
நான்மறை புகழும் கூடல் எம்பெருமான்
வான்முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும் (25)
முழுதுணர் ஞானம் எல்லாம் உடைமை
முழுதனுக் கிரகம் கெழுபரம் அநாதி
பாசம் இலாமை மாசறு நிட்களம்
அவிகா ரக்குறி ஆகிய தன்குணம்
எட்டும் தரித்து விட்டறு குற்றமும் (30)
அருச்சனை வணக்கம் பரஉயிர்க்கு அன்பகம்
பேரருள் திருநூல் பெருந்துறவு எங்கும்
நிறைபொருள் அழுந்தல் அருளினர்க் கூட்டம்
இருள்பவம் நடுங்கல் எனும்குணம் எட்டும்
தமக்கும் படைத்த விதிப்பேற் றடியவர் (35)
நிலையருள் கற்பென நெடுங்கற்பு உடையோள்
முன்னுறின் அவள் மனம் அங்கே
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே? (38)
பாடல்:92

தலைவனோடு ஊடல்

[தொகு]
மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்
நகைத்தொகை கூட்டிக் கவைத்தெழு சொல்லும்
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்
இருமனப் பொய்உளத்து ஒருமகள் தன்னை
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர்அலர் (5)
விதியினும் பன்மைசெய் முகன்படைத்து அளவாச்
சோதியின் படைக்கண் செலஉய்த்து அரும்புசெய்
முண்டக முலையில் சாந்தழித்து அமைத்தோள்
எழுதிய கழைக்கரும்பு எறிந்துநூல் வளர்த்த
கோதை வகைபரிந்து மணிக்கலன் கொண்டு (10)
கழைத்தோள் நெகிழத் தழைவுடல் குழையத்
திரையினைத் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து
ஒள்நிற வேங்கையின் தாதும் பொன்னும்
சுண்ணம் அவைகலந்து திமிர்ந்துடல் தூற்றி
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி (15)
இறால்புணர் புதுத்தேன் ஈத்துடன் புணரும்
அவ்வயின் மறித்தும் அன்னவள் தன்னுடன்
கெழுமிய விழவுள் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி அணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும் (20)
பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடித்து அவிந்த
நிலம்படர் தோகைக் குலம்கொள் சேதாவும்
அவ்வுழி மாத்திரை அரைஎழு காலை
திருநுதற் கண்ணும் மடமகள் பக்கமும்
எரிமழு நவ்வியும் பெறும்அருள் திருவுருவு (25)
எடுத்துடன் அந்தக் கடுக்கொலை அரவினை
தீவாய்ப் புலியினை திருந்தலர் நகைப்ப
எடுத்தணி பூண உரித்துடை உடுப்ப
முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப
தருவன அன்றி மலரவன் அவன்தொழில் (30)
நாரணன் ஆங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரருள் நாளினும்
முத்தொழில் தனது முதல்தொழில் ஆக்கி
ஒருதாள் தாரைகொள் முக்கவைச் சுடர்வேல்
தலைஇருந்து அருங்கதி முழுதுநின் றளிக்கும் (35)
திருநகர்க் காசிப் பதியகத்து என்றும்
வெளியுறத் தோன்றிய இருள்மணி மிடற்றோன்
நேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
தன்பரங் குன்றம் தமர்பெறு கூடற்கு
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் (40)
பெரும்புனல் ஊர! எம்இல்
அரும்புனல் வையைஅம் புதுநீர் அன்றே. (42)
பாடல்:93

உடன்பட உரைத்தல்

[தொகு]
வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையில் சிறுகால் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
ஓர்உழி நில்லாது அலமரல் கொள்ளும்என்
அருந்துணை நெஞ்சிற்கு உறும்பயன் கேண்மதி (5)
மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்
இருளரு புலனும்மெய்ப் பொருள்அறி கல்வியும்
அமரர்பெற் றுண்ணும் அமுதுருக் கொண்டு
குறுஞ்சொல் குதட்டிய மழலைமென் கிளவியில்
விதலைஉள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும் (10)
நின்நலம் புகழ்ந்துணும் நீதியும் தோற்றமும்
துவருறத் தீர்ந்தநம் கவர்மனத்து ஊரன்
பொம்மல்அம் கதிர்முலை புணர்வுறும் கொல்எனச்
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்கால் தோல்முலைப் பெரும்பேய் (15)
அமர்பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,
பேழ்வாய் இடாகினி கால்தொழுது ஏத்திக்
கையடை கொடுத்த வெள்நிண வாய்க்குழவி
ஈமப் பெருவிளக்கு எடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புடல் துளங்கச் சுரிகுரல் (20)
ஆந்தையும் கூகையும் அணிஓல் உறுத்த
ஓரிபாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செஞ்செவிச் சேவல் கவர்வாய்க் கழுகும்
இட்டசெய் பந்தர் இடைஇடை கால்என
பட்டுலர் கள்ளிஅம் பால்துயில் கொள்ளும் (25)
சுள்ளிஅம் கானிடை சுரர்தொழுது ஏத்த
மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தில் வாடாது இருத்தி
போர்வலி அவுணர் புகப்பொருது உடற்றிய (30)
முக்கண் பிறைஎயிற்று எண்தோட் செல்வி
கண்டுளம் களிப்ப கனைகழல் தாமரை
வானக வாவி யூடுற மலர
ஒருதாள் எழுபுவி உருவத் திண்தோள்
பத்துத் திசையுள் எட்டவை உடைப்ப (35)
ஒருநடம் குலவிய திருவடி உரவோன்
கூடல்அம் பதியகம் போற்றி
நீடநின் றெண்ணார் உளமென நீயே. (38)
பாடல்:94

பரத்தையிற் பிரிவு உரைத்தல்

[தொகு]
பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப
மற்றவர் மகத்துள் வளர்அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையன் முன்னவன்
அன்னவன் தன்னுடன் கடிகைஏழ் அமர
அன்றியும் இமையவர் கண்எனக் காட்ட (5)
ஆயிரம் பணாடவி அரவுகடு வாங்க
தேவருண மருந்துடல் நீடநின் றுதவ
உடல்முனி செருவினர் உடல்வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற
தண்மதிக் கலைகள் தானற ஒடுங்க (10)
எறிந்தெழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன்தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க
பாசுடல் உளைமா ஏழணி பெற்ற
ஒருகால் தேர்நிறைந்து இருள்உடைத்து எழுந்த (15)
செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தேன் அருந்திஎப் பேர்இசை அனைத்தினும்
முதல்இசைச் செவ்வழி விதிபெறப் பாடிஅத்
தாதுடல் துதைந்தமென் தழைச்சிறை வண்டினம்
பசுந்தாள் புல்இதழ்க் கருந்தாள் ஆம்பல் (20)
சிறிதுஉவா மதுவமும் குறைபெற அருந்தி அப்
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனல்அணி ஊர!
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப
உழல்தேர் பத்தினன் மகவுஎன நாறி (25)
முனிதழற் செல்வம் முற்றிப் பழங்கல்
பெண்வரச் சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகட்புணர்ந்து எரிமழு இராமன்
வில்கவர்ந்து அன்னைவினை உள்வைத்து ஏவ
துணையும் இளவலும் தொடரக் கான்படர்ந்து (30)
மாகுகன் நதிவிட ஊக்கி வனத்துக்
கராதி மாரீசன் கவந்தனுயிர் மடித்து
இருசிறைக் கழுகினர்க்கு உலந்தகடன் கழித்து
எறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்கு
அரிக்கு கருங்கடற்கு ஒரோஒரு கணைவிடுத்து (35)
அக்கடல் வயிறுஅடைத்து அரக்கனுயிர் வௌவி
இலங்கைஅவ் அரக்கற்கு இளையோன் பெறுகஎனத்
தமதூர் புகுந்து முடிசுமந் தோர்க்கும்
நான்முகத் தவர்க்கும் இருபால் பகுத்த
ஒருநுதல் கண்ணவன் உறைதரு கூடல் (40)
தெளிவேற் கண்குறுந் தொடியினர் காணின்
நின்பால் அளியமும் நீங்கி
இன்பும்இன்று ஒழிக்கும்எம் கால்தொடல் சென்மே. (43)
பாடல்:95

பாணனை வெகுளுதல்

[தொகு]
உளம்நகைத் துட்க ஊக்கும்ஓர் விருந்தினை
குவளைவடி பூத்தகண் தவள வாள்நகைக்
குறுந்தொடி மடந்தைநம் தோழியும் கேண்மோ!
கவிர்அலர் பூத்தசெஞ் செம்மைவில் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முள்தாள் (5)
கூரரி வாளின் தோகைஅம் சேவல்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடல்
கணிச்சிஅம் கைத்தலத்து அருட்பெருங் காரணன்
உலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக்கு ஒருபால்
பகுத்துயிர்க்கு இன்பம் தொகுத்தமெய்த் துறவினன் (10)
முளரிநீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்துணை
மணிமுடி சுமந்தநம் வயலணி ஊரர்பின்
வளர்மறித் தகர்எனத் திரிதரும் பாண்மகன்
எனக்குறித்து அறிகிலம் யாமே எமது
மணிஒளிர் முன்றில் ஒருபுடை நிலைநின்று (15)
அன்ன ஊரர் புல்லமும் விழுக்குடி க்கு
அடாஅக் கிளவியும் படாக்கரும் புகழும்
எங்கையர் புலவியில் இகழ்ச்சியும் தம்பால்
தனதுபுன் புகழ்மொழி நீளத் தந்தும்
ஒன்றுபத்து ஆயிரம் நன்றுபெறப் புனைந்து (20)
கட்டிய பொய்பாப் புனைந்துநிற்கு உறுத்தின்
பேரெழிற் சகரர் ஏழெனப் பறித்த
முரிதிரை வடிக்கும் பரிதி அம்தோழம்
காட்டையுள் இம்பரும் காணத்
தோட்டிநின் றளக்கும் தொன்மையது பெறுமே. (25)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/91-95&oldid=486177" இலிருந்து மீள்விக்கப்பட்டது