கல்லாடம்/96-100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாடல்:96

பாணன் புலந்து உரைத்தல்[தொகு]

இலவுஅலர் தூற்றி அனிச்சம் குழைத்து
தாமரை குவித்த காமர் சேவடித்
திருவினள் ஒருநகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான்அதில் தோன்றாத் (5)
தன்னிடை நிறையும் ஒருதனிக் கோலத்து
இருவடிவு ஆகிய பழமறை வேதியன்
நான்மறைத் தாபதர் முத்தழற் கனல்புக்கு
அரக்கர் துய்த்துடற்றும் அதுவே மான
பாசடை மறைத்தெழு முளரிஅம் கயத்துள் (10)
காரான் இனங்கள் சேடெறிந்து உழக்கும்
கூடற்கு இறையவன் காலற் காய்ந்தோன்
திருநடம் குறித்தநம் பொருபுனல் ஊரனை
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையர்ப்
புணர்த்தினன் பாண்தொழில் புல்லன்என் றிவனை (15)
கோலின் கரத்தின் தோலின் புடைப்ப
கிளைமுள் செறிந்த வேலிஅம் படப்பைப்
படர்காய்க்கு அணைந்தபுன் கூழைஅம் குறுநரி
உடையோர் திமிர்ப்ப வரும்உயிர்ப்பு ஒடுக்கி
உயிர்பிரி வுற்றமை காட்டிஅவர் நீங்க (20)
ஓட்டம் கொண்டன கடுக்கும்
நாட்டவர் தடையமற் றுதிர்ந்து நடந்ததுவே. (22)
பாடல்:97

தோழிக்கு உரைத்தல்[தொகு]

வாய்வலம் கொண்ட வயிற்றெழு தழற்கு
ஆற்றாது அலந்து காற்றெனக் கொட்புற்று
உடைதிரை அருவி ஒளிமணி காலும்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்
கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண் (5)
பவளம் தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுனல் ஊரனை பொதுஎன அமைத்த
அக்கடி குடிமனை அவர்மனை புகுத்தி
அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோஎன
சுரைதலை கிடைத்த இசைஉளர் தண்டெடுத்து (10)
அளிக்கார்ப் பாடும் குரல்நீர் வறந்த
மலைப்புள் போல நிலைக்குரல் அணைந்தாங்கு
உணவுளம் கருதி ஒளிஇசை பாட
முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து
ஒருபால் அணைந்தஇவ் விரிமதிப் பாணற்கு (15)
அடுத்தன உதவுழி வேண்டும்
கடுத்திகழ் கண்ணி அக்கல்லை இக்கணமே. (17)
பாடல்:98

பாங்கி அன்னத்தோடு அழுங்கல்[தொகு]

வெறிமறி மடைக்குரல் தோல்காய்த் தென்ன
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியகம் மெய்எனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழுமுடி தேய்ப்ப
தளிர்த்துச் சிவந்த தண்டையம் துணைத்தாள் (5)
சேயோன் பரங்குன்று இழைஎனச் செறித்து
தமிழ்க்கலை மாலை சூடிதாவாப்
புகழ்க்கலை உடுத்துப் புண்ணியக் கணவர்
பல்நெறி வளனின் பூட்சியின் புல்லும்
தொல்நிலைக் கூடல் துடிக்கரத்து ஒருவனை (10)
அன்புளத்து அடக்கி இன்பம்உண் ணாரென
சேவல் மண்டலித்துச் சினைஅடை கிடக்கும்
கைதைவெண் குருகுஎழ மொய்திரை உகளும்
உளைகடற் சேர்ப்பர் அளிவிடத் தணப்ப
நீலமும் கருங்கொடி அடம்பும் சங்கமும் (15)
கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து
அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அணுங்கலின்
வட்குடை மையல் அகற்றிஇன்பு ஒருகால்
கூறவும் பெறுமே ஆறு அதுநிற்க
இவள்நடை பெற்றும் இவட்பயின்று இரங்கியும் (20)
ஓருழி வளர்ந்த நீரஇவ் அன்னம்
அன்றெனத் தடையாக் கேண்மை
குன்றும் அச்சூளினர் தம்மினும் கொடிதே. (23)
பாடல்:99

இரவு இடை விலக்கல்[தொகு]

முதுகுறிப் பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதல் தெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்காடு உருத்திப் பலிமுதல் பராவக்
கிள்ளைஅவ் அயலினர் நாவுடன்று ஏத்தப்
பக்கம் சூழுநர் குரங்கம் மண்படப் (5)
பெற்றுயிர்த் தயரும் பொற்றொடி மடந்தைதன்
குருமணி ஓவியத் திருநகர்ப் புறத்தும்
கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த
இருளுடைப் பெருமுகில் வழிதெரிந்து ஏகன்மின்
அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த (10)
புடைமனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்
அத்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு
ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசிருந்து
ஊடுஉகள் சிரலைப் பச்சிற அருந்தும்
பழனக் குருநாடு அணிபதி தோற்று (15)
முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்
கண்டீ ரவத்தொடு கறையடி வளரும்
குளிர்நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்
அனைத்துள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக (20)
ஊழ்முறையே எமக்கு உளமண் கருதிச்
சேறி என்றிசைப்ப செல்பணித் தூதினர்க்கு
ஒருகால் அளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணம்குறித் தெனவே. (24)
பாடல்:100

பருவம் குறித்தல்[தொகு]

அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க
காந்தளம் கடுக்கை கனல்தனம் மலர
கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப
பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன்பூ மறைய (5)
கோபம் ஊர்தர மணிநிரை கிடப்ப
தென்கால் திகைப்ப வடகால் வளர
பொறிவிழிப் பாந்தள் புற்றளை வதிய
வரிஉடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப
இடிக்குரல் ஆனேற் றினம்எதிர் செறுப்ப (10)
பொறிக்குறி மடமான் சுழித்தலைக் கவிழ
முடையுடல் அண்டர் படலிடம் புகுத
கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப
காயாக் கண்கொள முல்லை எயிறுற
முசுக்கலை பினவுடன் முழையுறை அடங்கக் (15)
கணமயில் நடன்எழ காளி கூத்தொடுங்க
சாதகம் முரல்குரல் வாய்மடை திறப்ப
மாக்குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்ப
பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப
உடைநறவு உண்டு வருடை வெறுப்ப (20)
அகில்சுடு பெரும்புனம் உழுபதன் காட்ட
வெறிவிழிச் சவரர் மாஅடி ஒற்ற
மணந்துடன் போக்கினர்க்கு உயங்குவழி மறுப்ப
புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க (25)
இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
நிலமகள் உடலமும் திசைகளும் குளிர
ஒலிகடல் இப்பி தரளம் சூல்கொள
இவைமுதல் மணக்க எழுந்தகார் கண்டை (30)
வறுநீர்மலர் என மாழ்கலை விடுமதி
மறைஅடி வருத்திய மறைவனத்து ஒருநாள்
மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்கு
இருவகை ஏழ்எனும் திருஉலகு அனைத்தும்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல (35)
இருபுறம் போற்ற ஒருதேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர
பாசறை சென்ற நாள்நிலம் குழிய
எண்ணி விரல்தேய்ந்த செங்கரம் கூப்புக
கொய்தளிர் அன்ன மேனி
மொய்இழை பூத்த கவின்மலர்க் கொடியே! (41)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/96-100&oldid=486178" இருந்து மீள்விக்கப்பட்டது