கல்வி எனும் கண்/இடைநிலை—உயர்நிலைப் பள்ளிகள்

விக்கிமூலம் இலிருந்து

4. இடைநிலை-உயர்நிலைப் பள்ளிகள்



இந்தப் பள்ளிகளைப் பற்றி எழுதத் தொடங்க நினைக்கையில் என் நினைவு அறுபது ஆண்டுகளைத் தாண்டிப் பின் செல்கிறது. 1926இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து பெரியார் பிரிந்தார்-வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம்-பள்ளி, கல்லூரி-உத்தியோகம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடம் தருதல் என்ற கொள்கை உருவாகிய காலம் அது. பிராமணர் அல்லாதார் இயக்கம் செயல்படத் தொடங்கி, நீதிக்கட்சி (Justice Party) எனப் பெயர் பெற்று நாட்டில் வளரத் தொடங்கிய காலமது. அதே வேளையில் அன்றைய ஆங்கில அரசும் இந்தியருக்குச் சில வகையில் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் திட்டமிட்டது. 1927-28இல் தில்லி, சென்னை சட்டசபைகளுக்குத் தேர்தல் என அமைக்க நினைத்த காலமும் அது. அன்றைய சென்னை மாகாணத்தில் (ஒரியா பேசும் கஞ்சம் முதல்-வட கன்னடம் வரையில்-ஒரியா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகள் பயிலும் மாகாணம்) சர்.பி.தியாகராயர், பனகல் அரசர் தமிழகத்தைச் சேர்ந்த P.T. இராசன், முத்தையா முதலியார் ஆகியோர் முக்கிய இடம் பெற்ற நீதிக் கட்சி ஆட்சி அமைத்த காலமும் அது. அந்தக் காலத்தில் இருந்த கல்வி முறைதான்-ஆண்டுகள் பெரும் அளவில் மாற்றம் பெற்ற போதிலும்-அடுக்கடுக்காக குறிப்பேடுகளும் நூல்களும் தூக்க முடியாத அளவில் பிள்ளைகள் தூக்கிச் சென்ற போதிலும்-நல்ல நெறிக்கு மாறாமல், எங்கோ வேறு திசையில் சென்று கொண்டு இருக்கிறது.

1930க்குப்பின் காந்தி அடிகள் உப்புச்சத்தியாக்கிரகம், போன்ற பெரும் கிளர்ச்சியினால் காங்கிரஸ் செல்வாக்குப்

பெறத் தொடங்க, தமிழ்நாட்டில் அந்த அலையும் வீசத் தொடங்கியது. மேலும் அன்று தொட்டு அடிக்கடி அரசுகள் மாறும் நிலை உண்டாயின. அந்த மாற்ற நிலையில் ஒவ்வோர் அரசும் தாம் தாம் ஏதேனும் கல்வியில் மாற்றம் காணவேண்டும் எனக் கருதித் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரும் மாற்றங்கள் செய்து வந்தன.

ஆங்கிலேயர் 1931 வரையில் வகுத்த பாடத்திட்டத்தில் ஆரம்பக்கல்வி ஐந்து ஆண்டுகளும் (1-5), இடைநிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (6-8), உயர்நிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (9-11) அமைய, பள்ளிகளும் அதற்கேற்ப அமைந்தன. இடையில் உள்ள மூன்று வகுப்புகளையும் ஆரம்பப் பள்ளியோடு இணைத்து, உயர்தர ஆரம்பப் பள்ளியாகவும், உயர்நிலைப் பள்ளியாக அமைத்து இடைநிலைப் பள்ளி அல்லது இடைநிலை வகுப்பு எனவும் இயங்க வைத்தனர். தனியாக இடைநிலைப்பள்ளிகளும் (Middle schools) இருந்தன. இரண்டிற்கும் சற்றே பாடத்திட்டத்தில் மாற்றம் இருந்த போதிலும் யாவரும் மேலே கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தது. பெருநகரங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இயங்க, பேரூர்களில் உயர்தர ஆரம்பப் பள்ளிகள் அமைய, நாட்டுக்கல்வி வேறு யாதொரு மாறுபாடுமின்றி, நல்ல பாடமுறையில், சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கீழும் அரசாங்க அரவணைப்பிலும் சிறக்க விளங்கின.

ஆங்கிலேயர் வகுத்த கல்வி முறை மாறவேண்டும் என்று நான் மேலே குறித்துள்ளேன். அந்தக் காலத்தில் இந்த முறை இருப்பினும், அன்றிருந்த இந்நாட்டு ஆசிரியர்களும் மேதைகளும் சில நல்லாய்வுகளை வகுத்துப் பாடங்களையும் பயிற்றுகிறவர்களையும் நல்ல முறையில் தேர்ந்தெடுத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

1991 வரையில் 6 முதல் 11 வகுப்புகள் ‘பாரம்’ (Form) என்ற பெயரோடு உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கின. (உயர்தர ஆரம்புப் பள்ளிகளில் வகுப்பு என்ற பெயரிலேயே இருந்தன) அக்காலத்திய பாடத்திட்டம் மாணவர் உளம் கொள்ளும் வகையில் அமைய எளிய வகையில் அமைந்து இருந்தது. (இன்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பெறலாம் என எண்ணுகிறேன்.) ஆயினும் அடுத்தடுத்து வந்த அமைச்சரவகைளும் பிறமாறுதல்களும் கட்சி அடிப்படையில் அமைந்த பிறவும் கல்வித்துறையில் மாற்றம் காணவிரும்பின. அன்றைய இந்தியா ஒன்றாகவே இருந்தாலும் கல்வியைப் பொறுத்த வரையில் மாநிலங்களில் மத்திய அரசு தலையிட்டது கிடையாது. அப்படியே நான் மேலே காட்டியபடி மாவட்டக் கழகங்களின் கீழே கல்விக் கூடங்கள் இருந்தமையின் மாநில அரசின் இடையீடும் அதிகமாக இருந்ததில்லை. பாடநூல்களும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, நல்ல ஆசிரியர்களால் எழுதப் பெற, பல வெளியீட்டகங்கள் வெளியிட, சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்தன. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தத்தம் ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, பிறநாடுகள், உலகம் ஆகியவற்றை வகுப்புதோறும் முறையாக அறியவும் வாய்ப்பு இருந்தது. அப்படியே தமிழ் இலக்கியங்களும் உரைநடைகளும் வகுப்புக்கு ஏற்ப அமைய, 2-3ஆம் வகுப்பில் ஆத்திசூடி தொடங்கி, பதினோராம் (Vl Form) வகுப்பில் கம்பர், சேக்கிழார் போன்றோர்தம் பேரிலக்கியங்களைப் பயில வாய்ப்பு அளித்தனர். கணக்கும் அந்த வகையிலேயே படிப்படியாக உயர இறுதி வகுப்பில் சிறந்த வகையில் அமைந்தது. ஆங்கிலம், வரலாறு போன்றவையும் அப்படியே.

இன்றுபோல் எல்லாவற்றையும் இளைஞர் தலையில் சுமத்தி, சுமக்க முடியாத பளுவில் நூல்களையும் குறிப்பேடுகளையும் சுமக்கவைத்து, எதிலும் தேர்ச்சிபெறாத ஒரு நிலை அன்றுகாண முடியாதது. பள்ளி இறுதி வகுப்பில் பயின்றார் தம் தெளிந்த அறிவு இன்றைய முதுகலைப் பட்டம் பெற்றவர் அறிவைக் காட்டிலும் எத்தனையோ வகையில் மேம்பட்டது என இருபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று அந்தப் பழைய கல்வியை ஒப்பிட்டுக் காணத்தக்க பள்ளி, கல்லூரிகளில் கற்ற பெரியவர்கள் இன்மையின் அத்தகைய பேச்சுக்கு இடமில்லை. அக்காலத்தில் மாணவர்கள் கல்வி ஒன்றிலேயே கருத்திருத்தி, தாம் கற்றவற்றைப் பற்றி மேலும் மேலும் அறிய அவாவினர், ஆசிரியர்களும் பெற்றோரும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் வேண்டிய உதவிகளைச் செய்து அறிவு வளர ஆக்கப்பணி புரிந்தனர். இன்று இரு நிலையும் அருகிவிட்டனவே! ஆயினும் பாரதியார் அத்தகைய கல்வியினையே பழித்து உரைத்தார். நம் நாட்டு வரலாறு அறியாத குழந்தைகள். எந்நாட்டு வரலாறுகளையோ அறிகிறார்களே என வருந்தினார். இன்னும் அந்நிலைதானே.

சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வவள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருட் சுடர்வாள் கொண் டசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர்வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
..................
அன்னயாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

என்று ஏங்கிப் பாடுகின்றார். அவர் இருந்த அந்த நாளில் ஆங்கிலப் பாடத்திற்கு முக்கியத்துவமும் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிற்றியதும் இந்தியப் பண்பாடு பற்றி அறிய வாய்ப்பு இல்லாத நிலையும் அவரை அப்படிப் பாட வைத்தன. ஆனால் உரிமை பெற்று நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்பும் அதனினும் கேடாய் ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப் படைக்க, தமிழ்நாட்டில் தமிழ் பயிலாமலே உயரிய டாக்டர் பட்டம் பெறும் நிலை இருக்க 'இந்திய ஒருமைப்பாடு’ என்று வானொலி, தொலைக்காட்சிகள் தினம் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய நெறியில் இளநெஞ்சங்களை ஈர்க்கும் பாடத்திட்டம் இல்லாமையும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற அடியே இல்லாது ஒளவையாரைக் கொலை செய்யும் தமிழ் வளர்ச்சியும், தமிழில் எம்.ஏ., படித்தும் நான்கு வரிகள் தவறின்றித் தமிழ் எழுத முடியாத நிலையும், இவைபோன்ற பிறவும் பாரதி காணின் "ஐயோ! இதற்கா நான் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பள்ளுப் பாடினேன்' என்று அவதியுற்றுக் கலங்குவார். அதுமட்டுமல்ல. பாடத் திட்டத்தில் தன் ஊர், தன் மாவட்டம் பற்றி அறியவிடாமல் உலக நாடுகளைப் பற்றியும் பிற வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றியும் இளஞ்சிறுவர் படிக்க இருக்கும் இன்றைய நிலையினைக் கண்டு நல்லவர் உள்ளம் வருந்தாதிருக்க முடியுமோ!

அன்று ஆங்கில மோகமும் ஒருமைப்பாட்டு உணர்வு இன்மையும் இருந்த போதிலும், பிற வரலாறு, நிலநூல், கணிதம் போன்ற பாடங்களிலும் ஊர் ஆட்சி போன்ற பாடங்களிலும் (civics) மாணவர் தரத்துக்கும் வகுப்பிற்கும் ஏற்ப மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நன்கு அமைந்திருந்தன. தெய்வநெறி போற்றும் மரபும் அக்காலத்தில் போற்றப்பட்டது. கல்லூரி, பள்ளிகளில் தமிழ்ப் பாடநூல்களில் முதலில் கட்வுள் வாழ்த்து அமைந்தே பிறகு அறம், இலக்கியம் போன்றவை இடம் பெற்றன. இன்றோ நாட்டுணர்வு மட்டுமின்றி இறைஉணர்வும் சமுதாய உணர்வும் தன் ஊர் உணர்வும் நாட்டு உணர்வும் இல்லா வகையிலேயே பாடநூல்க்ள் அமைகின்றன. ஆளும் கட்சிகள் தத்தம் தலைவரைப் பற்றிய பாடங்களுக்கு முதலிடம் தருகின்றனவே ஒழிய, சமுதாய வாழ்க்கை நெறி விளக்கத்துக்கு இடம் தருவதில்லையே. இப்படி எவ்வளவோ சொல்லலாம். நிற்க,

அடிக்கடி ஆட்சிமாறும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ஏதாவது கல்வியில் மாற்றம் செய்ய விரும்புவதாலேயே

மாணவர்கள் ஆரம்பப் பள்ளிமுதல்-கல்லுரி வரையில் இடர்ப்பட வேண்டியுள்ளது. 5+8+3 என்ற பள்ளிநிலை மாறி) 5+5 என அமைக்கப்பெற்றது. 11+2+2 என்ற கல்வி நிலைமாறி 11+1 + 3 என மாற்றம்பெற்று, இன்று 10+2+3 என அமைகின்றது. கல்லூரியிலும் இடைநிலை வகுப்பு என்ற பேரேரியிலும் (இன்றைய +2 போன்றது) இரண்டாண்டுகள் அமைய, அடுத்து, பட்ட வகுப்பு (B.A., B.Sc., B.Com.) பட்டச் சிறப்பு வகுப்பு, (B.A.Hons etc), மேல் பட்ட வகுப்பு என்ற நிலையிலும் இருந்தன. மாணவர் தரம், தம் திறன், தகுதி கருதி அந்தந்த வகையில் கல்வி பயின்றனர். ஆனால் இந்த நிலையெல்லாம் இன்று இல்லை. ஒரே முறையான 10+2+3+2 என்ற வகையிலேதான் முதல் வகுப்பு தொடங்கி முதுநிலைவரை அமைகின்றது. ‘Hons’ என்ற சிறப்புநிலைக் கல்வியில் மாணவர் மூவாண்டுகள் தொடர்ந்து ஒரே பாடத்தினைத் திறம்படப் பயின்ற உயர்ந்த நிலை மாறிவிட்டது. பட்ட வகுப்பில் ஒரு பாடம், மேநிலையில் வேறு ஒரு பாடம் படிக்கவும் இன்று வகை உண்டு. இப்படிப் பயில்கின்றவர் எப்படித் தெளிந்த அறிவுடையவராக முடியும்? கடைக்கால் இல்லாமல் கட்டும் வீடாக அன்றோ அது இடிவுறும். நான் பச்சையப்பரில் தமிழ்த்துறைத் தலைவனாகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகளிலும் பட்ட வகுப்பில் சிறப்புத் தமிழ்ப் பாடம் பயின்றவரையன்றி வேறு யாரையும் எடுப்பதில்லை-பல்கலைக்கழகம் பரித்துரைத்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பலருடைய கோபத்துக்கு ஆளானதும் உண்டு. ஆயினும் நான் இருந்த வரையில் என் கொள்கையில் வழாமலேயே மாணவர்களைச் சேர்த்துவந்தேன். மேலே காட்டியபடி எத்தனையோ வகையில் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிவரையில் புதுப்புது மாற்றங்களால் கல்வியின் தரமே மங்கிவிட்டது. மறுபடியும் எங்கோ சென்றுவிட்டேன்; மன்னிக்கவும்.

உயர்நிலைப் பள்ளியின் கல்வி நிலை பற்றி மறுபடியும் காணலாம். ஆறாம் வகுப்பு முதல் பள்ளி. இறுதிவரை ஐந்து பாடங்களே பயிற்றுவிக்கப் பெற்றன. தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, புவிஇயல் ஆகியவையே அவை. அவை அனைத்தும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, படிப்படியாக உயர்ந்து வந்து பயிலும் மாணவர்களுக்குத் தெளிவினை உண்டாக்கும். உதாரணமாக நிலநூலை எடுத்துக் கொள்வோம். கீழே ஐந்தாம் வகுப்புவரை ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் இவைபற்றி இரண்டாம் வகுப்பிலிருந்து பயின்று வந்த மாணவன் ஆறாம் வகுப்பு வந்ததும் இந்தியாவைப்பற்றி முற்றும் தெளிவுறப் பயில்வான். பின் ஏழாம் வகுப்பில் ஆசியாவைப்பற்றித் தெளிவாகவும் அதைச் சார்ந்த சில ஐரோப்பிய நாடுகள் பற்றிச் சுருக்கமாகவும் அறிவான். பின் 8ஆம் வகுப்பு வரும்போது பிற கண்டங்கள் கடல்கள் பற்றி அறியும் வகையில் பாடநூல்கள் அமையும். ஒன்பதாம் வகுப்பில் (IV Form) உலக முழுவதும் பற்றிய நில வரலாற்றை அறிந்து அத்துறையில் மனநிறைவு பெற்றுத் தெளிவு காண்பான். பள்ளியில் இரு மேல் வகுப்புகளிலும் இந்தப் பாடம் கிடையாது. ஒன்பதாம் வகுப்புவரை (W Form) வரலாற்றிலும் அப்படியே. எனினும் தமிழக மாணவனுக்கு எங்கோ இராசராசன் போன்ற ஓரிரு அரசர்களைப் பற்றி மட்டுமே அறிய முடியும். ஆனால் வடநாட்டு வரலாறு, ஆங்கில நாட்டு வரலாறு பற்றி அதிகமாக அறிய வாய்ப்பு இருந்தது. அதனாலேயே பாரதி நைந்து பாடினார். கணக்கிலும் அப்படியே, வகுப்பின் தரத்தினுக்கு ஏற்ப, பள்ளி இறுதி வகுப்புவரை திட்டமான பாடத்திட்டம் வகுக்கப் பெற்றிருக்கும். இம் மூன்றில் முன்னவை இரண்டும் IV பாரத்தோடு நிற்க, கணிதம் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை தொடர்ந்து (VI Form) நடைபெறும். அந்த இரு பாடங்களுக்குப் பதிலாக மாணவர் விருப்பப்படி வேறு இரு பாடங்களை விருப்பப்பாடங்களாக (Optionals) எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமும் தமிழும் வகுப்பு நிலைக்கு ஏற்ப, சிறு சிறு இலக்கியங்கள், தெளிந்த உரைநடைகள் தொடங்கி, உயர்ந்த இராமாயணம் போன்ற இலக்கியங்கள், அறிஞர் எழுதிய கட்டுரைகள் என அமைய நிற்கும். சென்ற பிரசோற்தியில் (1931) மாறுபட்ட பாதை அறுபது ஆண்டுகள் கழித்து இந்தப் பிரசோற்பத்தியில் (1991) நேரிய பாதையில் திரும்புமா?

1981ஆம் ஆண்டு வரை அந்த நிலை இருந்தது. இரு விருப்பப்பாடங்கள் அந்தப் பள்ளி வகுப்பிலேயே அக்காலத்திய மாணவர்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் மேல் இடை நிலை வகுப்புக்கு வரும்போது, தாம் பயின்ற விருப்பப் பாடங்களுக்கு ஏற்ப, மூன்று பாடங்களை-வருங்கால வாழ்வுக்கு வழி அமைக்கும் வகையில்-தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அத்தகைய பாடங்களைப் பயில்வதால், மேல் தாம் சேர இருக்கும் பொறியியல் போன்ற வகுப்புகளுக்கு அம் மாணவர் முற்றும்தகுதி உடையவராய்-நன்கு பயின்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளவராய்-தம் வாழ்வினை அறுதியிட்டு அமைத்துக் கொள்ளும் திறன் உடையவராய் விளங்கினார்கள்.

1931-க்குப் பிறகு அப்போது வந்த புதிய அரசு மாற்றங்களைச் செய்தது. விருப்பப் பாடம் ஒன்றாயிற்று. வேறு பல மாற்றங்களும் நிகழ்ந்தன. அன்றுதொட்டு இன்று வரையில் தமிழகக் கல்வி எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏங்கும் வகையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. பழைய முறையில் மாநில மேற்பார்வை வகுத்து, மாவட்ட, வட்ட அளவில் கல்வியைக் கருத்துடன் கவனிக்கும் வகையில் நேரிய முறையில் ஆக்க நெறிக்கு வழிவகுப்பின் நலம் உண்டாகும் என நம்புகிறேன். விருப்பப்பாடமாக இன்று +2 எனும் இரு வகுப்பிலும் இருப்பதற்கு முன், கீழே ஒன்பதாம் வகுப்பிலேயே இந்தப் பாடங்களை மாணவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிப்பின் பயன் விளையும் எனவும் நம்புகிறேன்.

இன்று மாணவர்களுக்குத் தேவையற்ற பாடங்களும் அதற்கெனப் பாடநூல்களும் குறிப்பேடுகளும் (Work book) என்று செயலுக்கெனத் தனி நூல்களும் அதிகமாகத் திணிக்கப் பெறுகின்றன. அவற்றைச் சுமப்பதற்கும்கூட மாணவர் இயலாது வருந்துவர். மாணவர்களுக்கு முறைப்படி பாடங்களை நடத்தி, தக்க கேள்விகளுக்குப் பதில் காட்டி, அவர்களையும் காணுமாறு செய்யும் முறை அமையின் சிறந்த பயன் விளையும்.

பழங்காலத்தில் மனப்பாடம் செய்யும் மரபு இருந்தது. இது பற்றி முன்னமே நான் குறிப்பட்டேன். கீழ்வாய் இலக்கமும் வாய்பாடும் மனப்பாடம் செய்தவர்கள் எத்தகைய கணக்கினையும் மனத்திலே கணக்கிட்டு விரைந்து விடை காண்பர். அப்படியே பல்வேறு இலக்கியங்களை மனப்பாட்ம் செய்வதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறக்க அமையும். ஆயினும் வெறும் மனப்பாடம் செய்வதில் மனித ஆற்றல் வீணாகக் கழியவேண்டுமா எனக் கற்றவரும் கருதுகின்ற ஒரு காலத்தில் நாம் நிற்கிறோம். நம்மிலும் பலகோடி மடங்கு நினைவாற்றல் உடைய கணிப்பொறிமுன் மனிதனுடைய நினைவாற்றல் தேவையற்றது என்பர். பெருக்கல் கூட்டல் போன்றவற்றிற்கு மின் அணுக் கருவிகள் வந்துள்ளமையின் வாய்பாடு மனப்பாடமும் தேவை இல்லை என்பர். இந்த வாதங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும், இந்தப் புதிய சாதனங்களும் பொறிகலங்கி மயங்கிவிழும் நிலையில் தவறு நடப்பது போன்று மனிதனுடைய நினைவாற்றலில் தவறு உண்டாகாது என்றும் அதனாலேயே பல சாத்திரங்களும் தோத்திரங்களும் காலத்தை வென்று வாழ்கின்றன என்றும் கூறுவர். காலம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

இன்று உயர்தர ஆரம்பப்பள்ளிகள் இல்லை என எண்ணுகிறேன். 6ஆம் வகுப்பிலிருந்தே உயர்நிலைப் பள்ளிகள் நடைபெறுகின்றன. இந்தப் பள்ளிகள் நான் மேலே கூறியபடி, தமிழ்நாட்டில் பல வகையில், பல பாட முறைகளில் நடைபெறுகின்றன. இவை நிறுத்தப்பெறல் வேண்டும். மாநிலத்தொடு இருந்த கல்வியினை மத்திய அரசும் பங்கு போட்டுக்கொண்டு, அதன் பள்ளிகளை ஊர்தொறும் நிறுவி அவற்றின் ஆசிரியர்களுக்கு நிறையச் சம்பளமும் சலுகைகளும் தந்து, மாநிலப் பள்ளி ஆசிரியர்களையும் தூண்டிவிடுகிறது. தமிழக அரசும் மெட்ரிகுலேஷன் என்ற அமைப்பில் முழுக்க ஆங்கிலப்பள்ளி அமைத்து, அதில் பயில்வாரைத் தனிச் சாதியாக வளர்த்து வருகிறது. எப்போதோ வாழ்ந்தி ஆங்கிலேயர் காலத்திய ஆங்கிலோ இந்தியருக்கென் அமைந்த பள்ளிகள், இன்றும் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் நின்றதோடு, பொதுக் கல்வியில் சார அவர்கள் வந்துவிட்டனர்; ஆனாலும், நடைபெறுகின்றன. அதன் பாடத்திட்டமும் குறைவு-தமிழன் தரம் மிகத் தாழ்வு, அப்படியே கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள் உள்ளன. இவ்வாறு ஒரே நாட்டில் பலவகையான ஆரம்பப் பள்ளிகள் இயங்குமானால் எப்படி நாட்டு ஒற்றுமை உண்டாகும்? இவர்கள் அனைவரும் மேல் வகுப்பிற்கு வந்து ஒரே முறைக் கல்வியைக் கற்கத் தொடங்குவார்களானால் எப்படி ஒரே சீராக அவர்கள் பயிலமுடியும் இதுபற்றி முன்னமே வேறு கூறியுள்ளமையால் ஈண்டு அதிகம் எழுதத் தேவை இல்லை என இத்துடன் அமைகின்றேன்.

இன்றைய அரசாங்கத்தின் வழியே தமிழ், தமிழ்நாட்டில் விரைவில் கட்டாயமாக்கப்பெறும் என அறிய மகிழ்ச்சி பிறக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ், தமிழ்நாட்டில் கட்டாயமாக இருந்ததை மேலே முன்னரே காட்டியுள்ளேன். இங்கே மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது. மாராத்திய நாட்டில் வாழும் தமிழர் தமிழைக் கட்டாயம் படிக்கு நிலையில்-ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியினைக் கட்டாயம் பயிலும் நிலையில் ஒரு திட்டம் இருந்தது. நான் தமிழின் சிறப்பு நிலைத் தேர்வாளனாகப் பதினைந்தாண்டுகள் அங்கே பணிபுரிந்தேன். (தற்போதும் அதே நிலை நீடிக்கிறது என எண்ணுகிறேன்) தமிழை மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினையும் மேல்மட்டம் (Higher level) கீழ்மட்டம் (Lower leevl) என இரண்டாகப் பிரித்துள்ளனர். தாய்மொழியை மேல்மட்டமாகக் கொண்டவர் மற்றொன்றினைக் கீழ்மட்ட நிலையில் கொள்ளலாம். இரண்டிற்கும் பாட அமைப்பில் வேறுபாடு உள்ளது. கீழ்மட்டம் சற்றே எளிதாகப் பயிலும் வாய்ப்பு உடையது. இந்த முறையினால் மராத்தியர் மராத்தியினைக் கட்டாயமாக மேல்மட்ட்த்தில் படிப்பதுடன் மற்றொரு மொழியினைக் கீழ்மட்டத்தில் கட்டாயம் படிக்கவேண்டும். அங்கே உள்ள தமிழர்கள் தமிழை மேல்மட்டத்தில் கற்றால் மராத்தியினைக் கீழ்மட்டத்தில் பயிலலாம். அன்றி வேறு மொழியினை மேல்மட்டமாகக் கொண்டாலும் தமிழைக் கீழ்மட்டத்திலாவது பயிலவேண்டும். இவ்வாறு அங்குள்ள தமிழர் தமிழைக் கட்டாயம் பயில வகை இருக்கும்போது, தமிழநாட்டில் தமிழ் வாசனை இல்லாமலேயே எல்லாப் படிப்பினையும் படிக்கலாம் என்பது நாட்டார் நகை செய்யத் தக்கதன்றோ! தமிழ் மட்டுமன்றி மராத்தி நாட்டிலுள்ள தெலுங்கர்,கன்னடியர், குஜராத்தியர் ஆகியோருக்கும் இந்த நிலை உண்டு. கூடவே ஆங்கிலமும், இந்தியும் இவ்வாறே பகுக்கப்பெற்று உள்ளன என எண்ணுகிறேன். (திட்டமாக நினைவில்லை) எனவே தமிழக அரசு இந்த வகுப்புகள் (6-10) ஏதேனும் மூன்று வகுப்புகளிலோ அன்றி ஐந்து வகுப்புகளிலோ தமிழைக் கட்டாயமாக்கி விரைவில் செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இன்னும் பல மாற்றங்கள் இந்த வகுப்புகளில் செய்ய வேண்டியுள்ளன. அவற்றை அவ்வத்துறையினர் ஆராய்ந்து, தெளிந்து அரசுடன் கலந்து முடிவெடுத்து ஆவன காணலாம். என் சில நூல்களில் இவை பற்றி முன்னரே குறித்துள்ளேன். நான் அங்கம்வகித்த சில குழுக்களிடையேயும் அவை பற்றிக் கூறியிருக்கிறேன். இன்று அத்துறையினைப் போற்றும் கல்வி அமைச்சர், செயலர் போன்றவர்களும் முதல்வர், நிதி அமைச்சர் போன்றவர்களும் என்னைக் காட்டிலும் கல்வித் துறையில்-ஆரம்ப முதல் பல்கலைக்கழகம் வரையில் பலப்பல சீர்திருத்தங்களை-மாற்றங்களைச் செய்யத் தீவிரமாகச் செயல்திட்டங்கள் தீட்டி வருகின்றனர் என நாளிதழ்கள் வழி அறிகிறேன். எனவே தற்போது இந்த அளவோடு இது பற்றி அமையும் என எண்ணி நிற்கின்றேன்.

கல்வியில் மொழி பற்றிய சர்ச்சையே வளாந்துகொண்டு இருக்கிறது. பல மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியினைக் கட்டாய்மாகத் திணிப்பது தவறுதான் என எல்லாரும் உணருகின்றனர். அரசியல் சாசனத்திலே தலைவர் தம் தனிவாக்கினால்-ஒருவாக்கு அதிகமாகப் பெற்றமையால் இந்தி நாட்டு மொழியாக இடம்பெற்றது. ஆயினும் அதைப் பரப்ப வடநாட்டு இந்தி பேசும் மக்களினமும் அவரைச் சார்ந்த மத்திய அரசும் பெருமுயற்சிகளை அன்று முதல் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில், மும்மொழித்திட்டம் 1956இல் புகுத்தப் பெற்றது. ஆனால் மும்மொழித் திட்டத்தில் வடமொழியாகிய சமஸ்கிருதம் இடம் பெறவில்லை என்பர். மத்தியப் பள்ளிகளிலும் பிறவிடங்களிலும் மும்மொழியில் ஒருமொழியாக இது அமைகிறது. வடமொழியை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. ஆயினும் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயம் இல்லாதபோது வேறு எந்த மொழியும் கட்டாயம் ஆக்கப் பெறுவது தவறு என்பதை இன்னும் சிலர் உணராமையினையே எண்ண வேண்டியுள்ளது. நாட்டு ஒற்றுமைக்காக அமைய வேண்டிய மொழி நாட்டையே துண்டாக்குமோ என்று அஞ்ச வேண்டிய் நிலையில் நாடும் நாமும் சென்றுகொண்டிருக்கிறோம். மும்மொழித் திட்டம் கொண்டுவந்தபோது தென்னாட்டில் உள்ளவர்கள், வடநாட்டு இந்தியினைப் பயில, வடநாட்டில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு தென் இந்திய மொழியினைப் பயில்வார்கள் என்ற ஏற்பாடு இருந்தது. ஆனால் தமிழ்நாடு நீங்க, எல்லாத் தென்மாநிலங்களும் இந்தியைக் கட்டாயமாக வளர்த்துவர, வடமாநிலங்களில் தென்னாட்டு மொழி ஒன்று கட்டாயமாக்கப் பெறவில்லையே வடமாநிலங்களில் அரசாங்க அலுவலகங்களில் அவரவர் தாய்மொழி-இந்திதான் உபயோகிக்கப்படும் என்று சட்டம் செய்ய அதை ஏற்றுக்கொள்ளும் சிலர் தமிழ்நாட்டில் தமிழ் அரசாங்க மொழியாகும் என்றால் முகம் சுளிக்கின்றனர். தாம் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை என்றால் அவ்ர்களை என்னவென்பது. ‘தாய்க் கொலைச் சால்புடைத் தென்பாரும் உண்டு’ என்று இவர்களைப் பற்றித்தான் தமிழ்ப் புலவன் கூறினானோ என எண்ண வேண்டியுள்ளது. வேலை வாய்ப்புக்கு வெளியே செல்லத் தமிழ் பயன்படாது எனத் தமிழைக் கட்டாயமாக்கும் நிலையில் சிலர் பேசுவதும் கேட்கிறது. அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை விட்டே போகப்போகிறார்களா? அன்றி, பிறமாநிலங்களிலெல்லாம் தமிழர்களை ‘வருக’ என வரவேற்று நிற்கின்றனரா? மத்திய அரசிலும் பிறமாநிலங்களிலும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்த தமிழர்களில், இன்று நான்கில் ஒரு பகுதிகூட இல்லை என்று சொல்லலாம். 'மண்ணின் மைந்தருக்கே வாழ்வு’ என்ற சொல்லே நாள்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகமாக வளர்கின்றதே. ஒரே நாடு இந்தியா என்ற கொள்கைக்கே மூடு விழாவினைச் செய்வது போல் சில மாநிலங்கள் செயல்படுவதையும் அச்செயல்களை மத்திய அரசாங்கம் ஆதரிப்பதையும் அநேகத் தலைவர்களே கூறி வருகிறார்களே: இந்த நிலையில் இந்தியைக் கற்று எந்த மாநிலத்தில் வாழப் போகிறார்கள்: ‘செல் விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருக்கும்’ தமிழர்களைப் போன்று வேறு யாரும் ஏமாளிகளல்லர். எனவே அந்தந்த மாநிலத்தில் அவ்வம்மொழி முதன்மொழியாகக் கட்டாயம் கற்க வழிசெய்து, பிறகு மூன்று என்ன நான்கு மொழிகளைக்கூடக் கற்கட்டுமே. கன்னட நாட்டிலே தமிழர் தமிழை நான்காவது மொழியாகத் தான் கற்கின்றனர்-கன்னடம் முதல் மொழி பின் இந்தி, ஆங்கிலம். அந்த மாநிலத்தில் இந்த நிலையினை ஏற்றுக் கொள்பவர் தமிழ்நாட்டில் மட்டும் தடை சொல்லுவானேன்? எண்ணிப் பார்க்க வேண்டும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பெற்றபோது பெருநகரங்களிலோ எல்லைகளிலோ உள்ள வேற்றுமொழி பேசும் சிறுபான்மையோருக்கு வழி செய்யப்பெற்றுள்ளது. நான் முன்னமே இது பற்றியும் அவர்கள் தாய்மொழி கற்று திரு. அவினாசிலிங்கம் காலத்தில் இருந்த வகையினையும் விளக்கியுள்ளேன். இரு மொழித்திட்டத்திலேயும் அந்தச் சிறுபான்மையோருக்குத் தாய் மொழி கற்க வழி உண்டே, நூற்றுக்குப் பத்துப் பேருக்கு மேலிருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத்தர வேண்டுமெனவும் உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பில் பத்துப் பேர் அல்லது பள்ளியில் 40 பேர் இருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத் தரவேண்டும் என்றும் சாசனம் உள்ளதே. இதைச் சில மாநிலங்கள் பின்பற்றவில்லை. தமிழகம் இதை அதிகமாகவே பின்பற்றுகின்றதே. சிறுபான்மையோர் மொழி மூன்றாவது மொழி. ஆனால் இங்கு வடமொழியோ, பிரஞ்சோ, லத்தினோ தானே இந்தி ஆங்கிலத்தோடுதானே மூன்றாவது மொழியாகிறது. தமிழ் இம்மொழித் திட்டத்திலும் இடம் பெறவில்லை. இதை எந்தச் சமூகமாவது ஏற்றுக்கொள்ளுமா. ‘எதுவரினும் வருக அல்லது எது போயினும் போக’ என உறங்கும்.தமிழகம் தான் ஒருவேளை ஏற்றுக்கொள்ளும். எனவே மொழிக் கொள்கையினை அரசியல் சாசனப்படி-மேலே காட்டிய வரையில் இரு மொழிக் கொள்கையாயினும் -மும்மொழிக் கொள்கையாயினும் ஏற்றுக்கொண்டு எல்லா மாநிலங்களும் பின்பற்றினால் நாட்டில் ஒற்றுமை வளரும். நாடு நாடாகும். அவ்வம் மாநில மொழி மூன்றில் ஒன்றோ இரண்டில் ஒன்றோ கட்டாயம் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் அண்மையில் எடுத்த மக்கள்தொகை கண்க்குப்படி வேற்று மொழியினர் 14.65 % உள்ளனர் என அறிகிறோம். ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கு, மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை. 1931க்குப் பிறகு எந்த மக்கள் தொகை கணக்கும் சரி வர மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை என்பதற்கு அதன் படிகளே சான்று பகரும் என்பர். அப்படியே 14.65 % வேற்று மொழியாளர் என்றாலும் இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, இந்தி, உருது ஆகிய மொழிகள் அனைத்தும் அடங்குமல்லவா. அப்படி இருந்தும் தமிழக அரசு இத்தனை மொழிக்கும் (10% மேல் இருக்கும்நிலையில்) சிறுபான்மையோர் நிலையில் வைத்து இடம் தருகின்றதல்லவா? மராத்தி நாட்டிலும் இந்த வகைபோற்றபட்டுத் தமிழுக்கு இடம் தந்துள்ளது. பல்கலைக் கழக நிலையில் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இன்றேனும் பூனா, நாகபுரி ஆகிய பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது. ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா, வங்காளம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள சில பல்கலைக் கழகங்களிலும் தமிழ் உள்ளமை போற்றக் கூடியது. அவற்றுக்கெனத் தமிழக அரசு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மானியம் தந்து வருகிறதென அறிகிறேன். தற்போதும் அந்த நிலை நீடிக்கும் என நம்புகிறேன்.

ஒரு சமயம் நாட்டு ஒருமை மாநாட்டிற்குத் தலைமை வகிக்க (1967-68 என எண்ணுகிறேன்) நான் நாகபுரிக்குச் சென்றிருந்தேன். அம்மாநாட்டைத் திறந்து வைக்க மராட் டிய நாட்டுக் கல்வி அமைச்சர் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘தங்கள் மாநிலத்தில் பூனா, நாகபுரி முதலிய இடங்களில் தமிழ் உள்ளது. ஆனால் பம்பாயில் இல்லையே. அதை வைக்க ஏற்பாடு செய்யலாகாதா’ எனக் கேட்டேன். அவர் உடனே உண்மைதான்; செய்கிறேன்; ஆனால் ஒன்று, எங்கள் மராட்டியர் உங்கள் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டு, உங்கள் நலம் போற்றினார்கள். தஞ்சை நூல் நிலையத்தில் இன்றும் பல மராட்டிய ஏடுகள் உள்ளன. பல மராட்டியர் வாழ்கின்றனர். அப்படி இருந்தும் உங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மராத்தி மொழி பாடமாக வைக்கப் பெறவில்லையே. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்வீர்களாயின் நான் உடனே பம்பாய்ப் பல்கலைக் கழகத்தில் தமிழை வைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார். அவர் கூற்றும் உண்மையாகப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் அண்ணா முதல் அமைச்சராக இருந்தார். நான் சென்னை வந்தபோது அவர் உதகையில் இருந்தார். 'கோடையில் நானும் சில நாட்கள் அங்கே செல்வது வழக்கமாதலால் அங்கே சென்று, அண்ணா தங்கியிருந்த மாளிகையில் அவரைக் கண்டு பேசினேன். (அண்ணாவுக்கும் எனக்கும் இளமை முதல் இருந்த தொடர்பினை என் நூல் ‘ஓங்குக உலகம்’ என்பதில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்) அவர்களும் ‘பம்பாய் அமைச்சர் சொன்னது சரியே’ என்றும் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின்போது (Budget) நினைவூட்டுங்கள்: மராத்திக்கு ஏற்பர்டு செய்துவிடலாம் என்றும் சொன்னார்கள். நானும் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெறும் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த அமைச்சருக்குக் கடிதமும் எழுதினேன். ஆனால் நாட்டின் துர்அதிர்ஷ்டம் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டுக்கு முன் அவர் நோய்வாய்ப்பட்டார். பின் எழுந்திருக்கவே இல்லை. அவர்கள் இருந்திருந்தால் இன்னும் பல வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும். தமிழ் தமிழ்நாட்டிலும் தனக்கு உரிய இடத்தை பெற்றிருக்கும். நாடு கொடுத்து வைக்கவில்லை. இன்று மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் காலத்தில் தந்த மான்யங்களுடனேயே பல பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது என எண்ணுகிறேன். பிறகு புதிதாக வடநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு மானியம் தந்து தமிழுக்கு இடம் தேடினார்களா என்பது எனக்குக் தெரியவில்லை.

மொழி பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஆனால் இந்நூல் கல்வி பற்றியது. மொழி, கல்விக்கு முக்கியம் என்றாலும் இந்த அளவோடு இதை விடுத்துக் கல்வியின் பிற துறைகளைப் பற்றி எண்ணிக் காண்போம்.