உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி எனும் கண்/தொழிற் கல்வி

விக்கிமூலம் இலிருந்து
8. தொழிற் கல்வி

தொழிற்கல்வி உரிமை பெற்றபின், சற்றே வளர்ந்திருக்கிறது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மத்திய மாநில அரசுகள் இத்துறையில் கருத்திருத்திச் செயலாற்றுகின்றன என்று சொல்லலாம். தமிழகச் சட்டமன்றத்திலே விரைவில் தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம் பெறும் என முதல்வர் கூறியுள்ளதாகச் செய்தித். தாள்வழி அறிய முடிந்தது. மத்திய அரசும் தன் நேரடிப் பார்வையிலே நாட்டின் தேவைக்கேற்ற வகையில் நிறுவனங்களைப் பல மாநிலங்களில் அமைத்து வருவது எண்ணத் தக்கது. எனினும் பரந்த பாரதத்துக்கு இந்த வளர்ச்சி போதாது என்பதே அறிஞர்தம் முடிவு. அதற்கு ஏற்பத் தொழில் எவ்வளவு வளர்ச்சியடையினும் அதன் வழியே உருவாகும் பொருள்களின விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. இது வளரும் நாட்டுக்கு. ஏற்றதாகுமா?

என் இளமைக் காலத்திலே (1925-28) ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் நான் பயின்றபோது, ஏதாவது ஒரு தொழிலைக் கற்கவேண்டும் என்ற முறை இருந்தது. நான் பயின்ற வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் பயிர்த் தொழில், பாய் நெய்தல், துணி நெசவு, நூல் நூற்றல், பொத்தான் செய்தல், தச்சவேலை, கயிறு திரித்துக் கூடை முதலியன செய்தல் போன்ற தொழில்கள் கற்றுத்தரப் பெற்றன். மாணவன் ஏதேனும் ஒரு தொழிலைத் தவறாது கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படியே 1936இல் நான் பணியாற்றத் தொடங்கிய காஞ்சிபுரம் ஆந்திரசன் உயர்நிலைப்பள்ளியிலும் சில சிறு கைத்தொழில்கள் பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தமை நினைவுக்கு வருகிறது. பத்தாம் வகுப்பு அன்றி, அன்றைய பதினோராம் வகுப்பு வரையில் பயிலும் மாணவன். ஏதேனும் ஒரு தொழிலைக் கல்வியுடன் கற்க வேண்டும் என்பது கட்டளை-முறை. எனினும் கட்டாயம் இல்லையாதலால் பல பள்ளிகள் இவற்றை ஏற்று நடத்தவில்லை. நம் நாட்டில் அன்றும் இன்றும் எதுவும் கட்டாயமாக்கினால்தான் நடக்கும்போலும். எனினும் மேலே 11ஆம் வகுப்புகளில் தட்டெழுத்து போன்றவை தொழில் அமைப்பில் இடம்பெற, பள்ளி இறுதித் தேர்வில் அவையும் பாடமாக ஏற்கப்பெற்றுப் போற்றப்பட்டன. எனவே அந்தியர் ஆட்சி இருந்த அந்த நாளிலேயே பள்ளியில் பயிலும் மாணவர் ஏட்டுக் கல்வியுடன் நாட்டுக்குப் பயன்படும் தொழிற்கல்வி ஒன்றினைக் முறையாகப் பயில வழிவகை இருந்தது. ஆனால் உரிமை பெற்றபின் அந்த நிலை இல்லை என அறிகிறேன். பெரும்பாலும் 6 முதல் 11வது வரையில் பயிலுபவர் இத்தகைய தொழில் ஒன்றினைக் கற்றுக்கொண்டால், அவர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடி அலையாம்ல் வீட்டிலேயே ஏதேனும் தொழில் செய்து வாழ வழி இருந்தது இந்த மரபு ஏனோ உரிமை பெற்ற பாரதத்தில் ஒதுக்கப் பெற்றது? -

இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தொழில் கல்வியினைச் சாதி அடிப்படையில் சார்த்தி அவனவன் தன்தன் சாதிக்கமைத்த தொழிலைக் கற்கவேண்டும் என்று விதி அமைத்தார் என்றும் இதனாலேயே அது பல பெரிய எதிர்ப்புக்களிடையே எடுபடாமல் விடுபட்டுப் போயிற்று என்றும் கூறுவர். பள்ளிகளில் பல தொழில்களை அமைத்து, வேண்டியவர் வேண்டிய தொழிலைப் பயிலலாம் என விதித்து, அவற்றிற்குத் தேர்வும் நடத்திச் சான்றிதழ் தர ஏற்பாடு செய்திருப்பாராயின் அத்தொழில்முறை ஓரளவு நாட்டில் வளர்ந்திருக்கும். ‘வருணாசிரம’ மரபு என அது ஒதுக்கப்பட்டது என அறிகிறேன்.

க.-8 1974இல் புதிய கல்வி முறை (10+2+3) புகுத்தியபோது மேநிலை வகுப்புகளில் (11 & 12) தொழில் பிரிவு என்று (Vocational Course) ஒன்று அமைக்கப்பெற்றது. அன்று அந்த மேநிலைப்பள்ளிக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தபோது, இதை வலியுறுத்திப் பல தொழில்களை ஏற்படுத்தி, ஒன்றினை மாணவர் பற்றிப் படர வழிவகுக்குமாறு கூறினேன். எனினும் அது கால கட்டத்தில் வெறும் தட்டச்சும் சுருக்கெழுத்தும் என்ற வகையில் அமைந்தது. அதிலும் பல மாணவர் பங்கு கொண்டனர். 1987-88 மேநிலை வகுப்பில் பயின்ற சுமார் 3.5 இலட்சம் மாணவரில் 96,000 பேர் (24%) இந்தத் தொழிற்கல்வி பயின்றார் என அரசாங்கக் கணக்கு தரப்பெறுகின்றது. எனினும் இதில் பயில்பவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லாத நிலை உண்டாயிற்று. கல்லூரியில் சேர்க்கும் மாணவரில் நூற்றுக்குப் பத்து மாணவரையே சேர்க்க விதி அமைத்தனர் போலும். பல கல்லூரிகள் அதையும் பின்பற்றுவதில்லை. எனவே அதன் வளர்ச்சியும் தடைப்பட்டது எனலாம். நான் முன்னரே காட்டியபடி இவர்களை அரசாங்க எழுத்தர் பதவிக்கு முதனிலை தந்து எடுத்துக் கொள்ளல் பொருந்துவதாகும். இப்படியே இம்மேநிலை வகுப்புகளில் ஆசிரியர் பயிற்சி வகுப்பும் இருந்தது. அதில் பயின்றவர்களை-மேலும் அத்துறையிலேயே ஓராண்டு ஈராண்டு பயிற்சி பெறச்செய்து, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வழி செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர்களும் நாற்சந்தியில் நின்று நலிய வேண்டி வந்தமையின் அந்தத் துறையும் அண்மையில் மூடப்பட்டது என அறிகிறேன். இவ்வாறு ஆக்க நெறிக்கென வகுக்கப்பெற்ற பாதைகள் அரசாங்க ஊக்குதல் இல்லாத காரணத்தினாலேயே அழிக்கப்படும் ஓர் அவலநிலை நாட்டில், காண வருந்த வேண்டியுள்ளது. தொழிற்கல்வி என்றால் ஏதோ பொறியியல், மருத்துவம் இவற்றின் அடிப்படையில் அமைந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிலுதல் என்றே நினைத்திருக்கிறோம். சாதாரண குடிசைத் தொழில்களுக்கும் பயிற்சியும் பாதுகாப்பும் தேவை என்பதை மறந்து விடுகிறோம். நான் முன்பு காட்டிய முதியோர் கல்வி நெறியில் இத்தகைய தொழிற்கல்வியும் இடம்பெறின், இதைக் கற்றுக் கொள்ளுவதோடு வருபவர்கள் ஏட்டுக் கல்வியிலும் பயிற்சி பெற வாய்ப்பு உண்டு. பழங்காலத்தில் இருந்தது போன்று பள்ளியிலேயே-சிறப்பாகக் கிராமப்புற பள்ளிகளிலேயே கைத் தொழில்கள் கற்பிக்கப்பெறல் வேண்டும், பெருஞ்செல்வர்களைப் பெரும் கைத்தொழில் பெருக ஊக்கி ‘உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றபடி, நாட்டு நடப்பும் செயல் முறையும் பிறவும் இருந்தால் எப்படித் தொழில் வளரும்: எப்படி ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று’ வாழ முடியும்? ஆளுபவர் இவற்றையெல்லாம் சிந்தித்து உடன் தக்க வகையில் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன். நாடு வாழ அதுவே சிறந்தது. இன்று சிறுதொழில் வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தர அரசு முன்வருகிறது. அதற்கென அமைச்சும் தனித்துறையும் கூட உள்ளன என அறிகிறேன். ஆனால் அதற்கு மானியமாகத் தரப்பெறும் அரசாங்கப் பணம் எந்தெந்த வகையிலோ-வழங்குபவருக்குக் கையூட்டு, பிறவகைச் செலவுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது என்பர்.

நாட்டில் தொழிற்கல்வி ஓங்கி வருகிறதெனினும் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்தியக் கல்விக்குழு இதுபற்றித் தன் கருத்தினைத் தெரிவித்து (National Policy of Education) அதன் வளர்ச்சிக்கு வழிகாண முயல்கின்றது. திரு. இராமமூர்த்தி குழுவும் அதன் கருத்துக்களை ஆராய்ந்து வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது.

தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் உரிமம் பெற்றும் பெறாமலும் பல பொறியியற் கல்லூரிகளும் தொழிற் பள்ளிகளும் இயங்குகின்றன என்றும் அவற்றுள் பல தரத்தில் தாழ்ந்துள்ளன என்றும் அக்குறிப்பு காட்டுகிறது. ஆம்! தமிழ்நாட்டில் அரசாங்கம் சென்ற ஆண்டு ஒரு கல்லூரியோடு போட்டியிட்டு, வேறுபாடுற்ற நிலையினை நாடறியும். மேலும் ஆளுபவருக்கு உற்றவராகவும் பல்கலைக் கழகத்துக்குப் பலவகையில் வேண்டியவராகவும் இருப்பின் பொறியியற் கல்லூரி மட்டுமன்றி, புதிதாக எந்தக் கல்லூரியும் தொடங்க வாய்ப்பு உள்ளதை நாட்டு நடவடிக்கைகள் நன்கு விளக்குகின்றனவே. மாறிமாறி வரும் ஆளுபவர் கைப்பாவைகளாகப் பல கல்லூரிகள் இருக்கின்றன-அவை செயல்பட வேண்டிய நிலையில் மாணவர்களைத் திறனறிந்தவர்களாக ஆக்கும் வகையில் இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கிடமாக உள்ளதே. மற்றும் பெண்களுக்குச் சமஉரிமை என்று மேடையிலும் சட்டமன்றத்திலும் முழங்கும் நிலையிலும் தொழிற். கல்லூரியில் 12% சான்றிதழ் பள்ளிகளில் 17% தான் பயில்கின்றனர். சீர்மரபினர் அன்றி ஒதுக்கப்பட்டவர் பட்டப் படிப்பில் 5% சான்றிதழ் பள்ளியில் 9% உள்ளனர் (ப 237). இந்த அவல நிலையில் மகளிர் முன்னேற்றமும் தாழ்ந்தோர் உயர்வதும் முயற்கொம்பு-ஆகாயப்பூப் போன்றதாகும்.

இத்தகைய தொழிற் கல்லூரிகள் உரிமம் பெற்றவை பெறாதவை நன்கு இயங்குகின்றனவா எனக்காணல் அரசின் கடமையாகும். நல்ல ஆய்வுக் கூடங்கள், நல்லாசிரியர்கள், நல்ல கட்டடங்கள் இல்லாமலேயே பல இயங்குகின்றன எனப் பேசுகின்றனர்-அறிக்கை விடுகின்றனர். அரசோ பல்கலைக் கழகங்களோ இந்த அவல் நிலைகளைப் பற்றி எண்ணுவதில்லை போலும். வேண்டியவர்களாயின் ஒன்றும் இல்லாமலே எல்லா வகுப்புகளையும் தருதலும் வேண்டாதவராயின் எல்லாம் இருந்தும் ஏதோ காரணம் காட்டி ஒன்றும் தராது ஒழிப்பதும் பல்கலைக் கழகச் செயலாக அமைவது என்கின்றனர்.

பொறியியல், மருத்துவத்துறை போன்றவற்றிலும் கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்றவற்றிலும் தக்க அனுபவம் மிக்கவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இங்கேயும் பதவி உயர்வு முதலியவற்றிலேயும் இன்னார் இனியார் என்ற வேறுபாடு காட்டப்பெறுகிறது. என்பர். அடிப்படைத் தேவையான சாதனங்கள்-கருவிகள் கூட இல்லாமல் எப்படி இவை இயங்க முடியும் மத்திய அரசு இவற்றுக்கென வழங்கும் பெரும் தொகைகளை மாநில அரசு தன் செலவுகளுக்கென வேறு வகையில் செலவு செய்துவிடலாம். இதனால் முறையாகச் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளை அந்தரத்தில் விட நேரிடுகின்றது. 1989-90 இல் முடிக்கப் பெற்ற பணிகளுக்கும் செய்முறைகளுக்கும் சில பள்ளிகளுக்கு 1990 இடையிலேயே மத்திய அரசு முழு மானியத் தொகையினை மாநில, அரசுக்கு அனுப்பியும், இன்னும் அத்தொகைகள் உரிய கல்வி நிலைகளுக்குச் சென்று சேரவில்லை என்கின்றனர். பின் அவை எவ்வாறு நன்கு செயல்படும்? வேலியே பயிரை, மேயும் வகையில் இவ்வாறு பல மானியங்கள் இடையில் அரசாங்கத்தாலே அவலமாக்கப் பெறுகின்றன. இன்றைய அரசு இதைக்கண்டு ஆவன செய்யும் என நம்புகிறேன்.

கிராம மக்களை ஈடுபடுத்தும் வகையில் பல்கலைத் தொழிற் பள்ளிகள் (Polytecnics) இயங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறவேண்டும். கண்ணிருந்தும் குருடராய்-காதிருந்தும் செவிடராய் அனைத்தையும் கண்டு வாளாலிருந்தால், நாடு இன்னும் இழிநிலையைத்தான் அடையும். இவற்றை எண்ணி நாடாளும் நல்லவரும் பதவி வகிக்கும் பட்டதாரிகளும் அலுவலர்களும் பிறரும் நாட்டு நிலனிலே அக்கறை கொண்டு செயல்படுதல் நன்றாகும். முக்கியமாகத் தொழிற்கல்வி வளர அனைவரும் ஒன்றிச் செயலாற்றினால்தான் பயன் உண்டு. சமுதாயத்தோடு தொடர்புடைய தொழில்களை ஊர்தோறும் அமைத்து; அவற்றிற்குத் தொழிலியல் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றவர்களைத் தக்கவாறு அமைத்து, வேண்டிய உப்கரணங்களையும் பிறவற்றையும் தந்து அரசு ஊக்க வேண்டும். கிராமங்களில் பயிரிடுவோர் பாதி நேரத்தை வீணாக்காமல் நாட்டுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்துதரும் நிலை வளர வேண்டும். படித்து விட்டு வேலை இல்லாதிருக்கும் நிலையும் இதனால் இல்லையாகும் எல்லாரும் நகரில்தான் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பல கோடியாக வாழும் நம் நாட்டுக் கிராம மக்கள் கதி என்னாவது? தொழில் மயம் கிராமங்களில் தொடங்க வேண்டும்.

தொழிற் கல்லூரிகளைத் தொடங்குவதற்குப் பல்கலைக் கழகம், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய அனைத்திலிருந்தும் இசைவு பெறுதல் இன்றியமையாதது. வேண்டுவோர்தம் தேவையினை அறிந்துவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் கவனித்து, தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிவு எடுத்து மத்திய, மாநில அரசுகளும் பல்கலைக் கழகங்களும் ஆணை அனுப்பினால் நன் மாணவர்கள் சேர்க்கப் பெற்றுப் பயனடைவர். எனவே புதிய தொழிற் கல்லூரிகள் திறக்கவும் புதிய பாடங்கள் தொடங்கவும் வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆராய்ந்து இரு அரசுகளும் பல்கலைக் கழகங்களும் செயலாற்ற வேண்டிய கடமையினை மறத்தலாகாது. இசைவு வழங்குவதிலும் நேரில் திறனறி குழுக்கள் அமைத்து நேரில் சென்று கண்டு அமைப்பாளர்கள் தக்க வகையில் தேவையானவற்றைச் செய்திருக்கிறார்களா எனக் கண்டே இசைவு வழங்கவேண்டும். விரைந்து செயல்படின் விடிவு உண்டு விளைவும் உண்டு.

தொழிற் கல்லூரிகளைப் பல தொழிற் கூடங்களோடு இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். வெறும் ஏட்டுப் படிப்பும் அங்கே செய்யும் சில கள ஆய்வுகளும் போதா! ‘ஏட்டுக் கல்வி கவைக்கு உதவாது’ என்பது எல்லாக் கல்விக்கும் பொருந்தும் என்றாலும் தொழிற் கல்விக்கு மிக மிகமுக்கியமானது. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்ற மற்றொரு பழமொழியும் இதற்குப் பொருந்தும். மருத்துவக்கல்லூரிக்கு உடன் இணைந்தே ஒவ்வொரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற விதி இருப்பது போன்று பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளுக்கும் ஓர் உயரிய தொழிற்சாலை அல்லது தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என விதி செய்ய வேண்டும். பயிலும் மாணவர் பாதி நேரத்திலோ-அன்றித் தேவையான நேரத்திலோ அத்தொழிற்சாலையில் நேரிய பயிற்சி பெறல் வேண்டும், நான் முன்னே கிராமங்களுக்குக் காட்டிய சிறுதொழில் நெறிப்படி, இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் பெருந்தொழிலோ சிறு தொழிலோ தேவையானால் கிராமந்தோறும் தாமே தொடங்க உந்துதல் பெற்றவராதல் வேண்டும். இன்றேல் பலகோடி தொழிற்கல்விக்குச் செலவிடுதலால் பயனில்லை, அரசாங்கமும் தொழிற் கல்லூரி அமைப் போரும் இந்த வகையில் கருத்திருத்தி ஆவன செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

தொழிற் கல்வியின் ஒவ்வொரு துறையினையும் தனித் தனி ஆராயின் அதுவே பெருநூலாகும். அதற்கு ஏற்ற தனித் தகுதியும் எனக்கு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். மருத்துவம், பொறியியல், கணிப்பொறி, சிறு தொழில்கள் அனைத்திலும் அவ்வத்துறையில் வல்லவர்களைத் தனித்தனியாக மாநில மைய அரசுகள் அழைத்து, மக்கள் வாழ்கின்ற பகுதிக்கு ஏற்ற தக்க பயன் விளையத்தக்க வகையில் செயல்பாடுகளும் அமையும் வகையில் பாடத்திட்டங்களையும் பயிற்று முறையினையும் களப்பணிகளையும் அமைத்து, அதையும் சரி பார்க்க ஓர் உயர்நிலைக் குழுவையும் ஒவ்வொரு துறைக்கும் அமைத்து ஆவன காணின் நாடு நலம்பெறும். எப்போதோ ஒருமுறை எங்கோ தலைநகரில் குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு திட்டம் தீட்டினால் பயனில்லை. இடந்தோறும், சென்று-ஊர்தோறும் நிலவும் நிலை கண்டு அவ்வந்நிலைக்கு ஏற்றவகையில் பள்ளி, கல்லூரிகள் மட்டுமன்றி, தொழிற் கூடங்களை அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுதாக்க வேண்டும். நான் மேலேகாட்டியபடி, அவ்வத்துறைகளுக்கு ஏற்ற தொழிற் கூடங்கள் இணைக்கப்பெறல் வேண்டும்; அன்றி அமைக்கப்பெற வேண்டும். இவ்வாறன்றி வெறும் தொழிற் பள்ளி, கல்லூரிகளை மட்டும் தொடங்கி விட்டால் மற்றொரு வேலை இல்லாப் பட்டாளமே உருவாகும். மேலும் நாட்டில் பல சிக்கல்களும் கொடுமைகளும் பிற இழிநிலைகளும் தோன்ற வழிவகுக்கும். நாடாளும் நல்லவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிச் செயலாற்றுவார்களாயின் நாடு நலம் பெறும். நாம் உலகத்தில் உயர்வோம். உண்மை வாழ்வும் நலமும் மலரும்.

இந்தத் தொழிற்கல்வி பற்றித் திரு. இராமமூர்த்தி குழுவினர் ஆய்ந்து தெளிந்த முடிவுகளை நெறிப்படுத்த வேண்டிப் பரிந்துரை செய்துள்ளனர் (பக். 243-248). ஒவ்வொரு வகையினையும் நன்கு ஆராய்ந்து அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளனர். இத்துறையில் பணிபுரிவோர் அனைவருமே இவற்றை நெறி அறிந்து போற்றல் வேண்டும். இந்தப் பரிந்துரைகளே முடிவு என்று கொள்ளவேண்டும் என நான் கூறமாட்டேன். இவை முன்னேற்றப் படிகளுள் சில. தெளியத் தெளிய, ஆராய ஆராய உலக வளர்ச்சிக்கு ஒப்ப நம் நாட்டுத் தொழிற்கல்வியும் அதற்கென அமைந்த பிற துணைநிலைக் கருவிகளும் இடமும் காலமும் பிறவும் அமையப் பார்த்துக் கொள்ளவேண்டும். சில நாடுகள் முயல்வது போன்று அறிவியல் நெறி அழிவுப்பாதைக்கு வழி கோலாமல் ஆக்கப் பாதைக்கு வழி கோலுவதாய்-உலகச் சமுதாய வாழ்வுக்கு உகந்ததாய் அமைய வழிகாண வேண்டும். யாண்டும் இன்பம் நிறைய-எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற-வையகம் வளமுற-கல்வித் துறையின் எல்லாப்பகுதிகளும் முயன்று ஒருமை உணர்வில் செயலாற்றின் நாடும் உலகமும், உய்யும் உயரும் அந்நாள் விரைந்து வருவதாக!


நல்ல ஆசிரியரின் இலக்கணம்
குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம், மலை நிறைகோல், மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர் குணம் இணையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே.

(நன்னூல்)




பாடம் சொல்லும் முறை
ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படுபொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின் நூல்கொடுத்தல் என்ப.

(நன்னூல்)



பாடம்கேட்கும் முறை
கோடல்மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து
இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தின் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்
போ எனப் போதல் என்மனார் புலவர்.

(நன்னூல்)