கல்வி எனும் கண்/மழலையர் கல்வி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மழலையர் கல்வி

இளங்குழந்தைகள் கல்வியும் போற்றப்பட வேண்டிய ஒன்று. 5 வயதில் முதல்வகுப்பில் சேர்வதற்கு முன் ஓரிரு வகுப்புகளைத் தற்போது பலர் தெருவுதோறும் நடத்தி வருகின்றனர். ‘L.K.G.’, ‘U.K.G.’ என்ற பெயரில் இளங்குழந்தைகள் வகுப்பினை இரண்டாகப் பகுத்து, படிப்பினைத் தருகின்றனர். 3 வயதுக்கு முன்பும் பணியிடை உழலும் மகளிர் தங்கள் குழந்தைகளைக் காப்பகங்களில் (Creches) விட்டுச் செல்லுகின்றனர். இந்த இளங்குழந்தைகளுக்குப் படிப்புடன், தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவும் தேவைப்படுகிறது. பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள் அமைத்து அரசாங்கம் உதவி புரிவதைப் போன்று. இந்த மழலைகள் பள்ளிகளையும் நன்கு பராமரிக்க வேண்டும். இளம் மழலைகளைப் பாதுகாக்கும் இல்லங்கள் அவ்வளவாகப் பயிற்று நிலையங்களாக அமைவதில்லை. பெரும்பாலும் பணிமேற்செல்லும் தாயர் பிள்ளைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்லும் இடங்களாகவே அவை உள்ளன. குழந்தைகள் அழாமலும் வாடாமலும் பார்த்துக்கொள்வதும் வேண்டும்போது பால், சிற்றுணவு போன்றவை அளிப்பதும் தூங்கும்போது தாயைப்போல பக்கத்தில் இருந்து உறங்க வைப்பதும்தாம் அவை செய்கின்றன. எங்கோ ஓரிரு இடங்களில் பாட்டுகள் கற்றுத் தருவதாகக் கூறுகின்றனர். சிறுசிறு அடிகளில் அமைந்த பாடல்களை மூன்று வயது நிரம்பாத மழலைகள் வாய்மொழியாகக் கேட்க இனிமையாக இருக்குமல்லவா! ஆனால் இன்று அப்பாடல்கள் எல்லாம் ஆங்கிலப் பாடல்களாகவே உள்ள்ன. அப்பிஞ்சு உள்ளங்களில் தாய்மொழி உணர்வும் பற்றும் அற்றுப்போக இந்த முறை வழிசெய்கின்றது. ஒருசில தவிர்த்துப் பெருபாலானவை வெறும் பால் உண்பிக்கும்-தூங்கவைக்கும் நிலையங்களாகவே உள்ளன. எனினும் தெருவுதோறும் இத்தகைய காப்பகங்கள் வளர்ந்து வருவதால், அவற்றை முறைப்படுத்தி, உரிமம் வழங்க வகைகண்டு, தாய்மொழியிலேயே அக்குழத்தைகளைப் பழக்க வழிவகை காணவேண்டும். அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ ஆங்கில மொழி உணர்வு மழலை உள்ளங்களில் நிழலிடுகின்றன. பிரான்சில் பிரஞ்சு மொழி பிள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுகின்றது. ஏன் நம் வடநாட்டிலும் அவரவர் தாய்மொழியே வாய்மொழியாக இளம் பிள்ளைகள் பயில வழி செய்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில்தான் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’, என்று பாரதி கண்ட கனவு வெறும் பாட்டினிலோ அன்றி வருங்கால வரலாற்றிலோ இருக்கவே இந்த மழலையர் பள்ளிகள் வழிவகுக்கின்றன. அரசு அன்றி வேறு யாரே இதைத் தடுத்து நிறுத்த வல்லார்!

மூன்று வயது முடிந்ததும் முறையான வகையில் தொடக்க வகுப்பில் (L.K.G.) பிள்ளைகள் சேர்க்கப் பெறுகின்றனர். இளம் பிள்ளைகள் (0-6 வயதில்) நம் மக்கள் தொகையில் நூற்றுக்குப் பதினேழு என்ற வகையில் உள்ளனர் என அரசாங்கக் கணக்கு எழுதப்பெற்றுள்ளது (Page 114 Towards an Enlightened and Humane Society) அவற்றுள் பெரும்பாலான வறுமை நிலையில் வாடுகின்றன. அக்குழந்தைகள் 100க்கு 10 சதவீதமே மேலே கண்டவகையில் மழலையர் காப்பகத்திலும் மழலையர் பள்ளிகளிலும் இடம் பெறுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் வழிவகை இன்றி வாடுகின்ற்னர். அந்த 100க்கு 10இல் பெரும்பாலானவர் நகரங்களில் உள்ளவர்களே. இந்த நிலையில் இளம் பிள்ளைகள் வளர்ந்தால் கல்வியிலும் பதவிகளிலும் எத்தனை மண்டல கமிஷன் வந்தாலும் 100க்கு 27 அல்லது 37என ஒதுக்கினாலும் என்ன பயன்? இந்த மழலையர் பள்ளிகளில் பெருந்தொகை செலவிட்டுச் சேர்ந்து பயிலும் பிள்ளை களோடு மற்றைய 90 சதவிகிதம் பிள்ளைகள் எவ்வாறு போட்டியிட முடியும்? அப்படியே முதற் வகுப்பில் சேர்ந்தாலும் இடையில் 2, 3, 4, 5 இல் வருகின்ற பிள்ளைகள் எத்துணையர்? கிராமங்கள்தோறும் - நகரில் குடிசைப் பகுதிகள் தோறும் இந்த அவலநிலையில் உள்ள குழந்தைகளைக் காணமுடிகின்றதே! அதற்கு ஒரு வழிவகை காண வேண்டாமா! 14 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி தரவேண்டும் என்ற அரசியல் சாசன 45வது பகுதிப்படி இந்த இளங்குழந்தைகள் அனைத்தும் ஒரே வகையான கல்வியினைக் கற்க வழிகாண வேண்டாமா? இராமமூர்த்திக் குழு இதை ஆராய்ந்த வகையில் இதற்கு விமோசனம் கண்டதாகத் தாம் காணவில்லை என்றும் மகளிர், குழந்தை வளர்ச்சித் துறைக்கும் கல்வித் துறைக்கும் ஓர் இணைப்பு இருக்கவேண்டுமென்றும் அதன் வழியே இளம் குழந்தைகள் உள்ளம் கற்பன கற்று, தாய்மொழிப் பற்றும் பெற வழி உண்டு என்றும் சுட்டிக் காட்டி, ஆனால் அது செயல்முறையில் இல்லை என்பதையும் குறிக்கிறது (பக். 115). அதன் பரிந்துரையில் (116) மகளிர், பிள்ளைகள் வளர்ச்சித்துறை, இளங்குழந்தைகள் கல்வியில் பங்குகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது. கல்வித்துறையும், அரசியல் சாசன 45வது விதிப்படி, இக்குழந்தைகள் கல்வியைக் கண்ணெனக் காக்க வேண்டிய கடமையினையும் சுட்டிக்காட்டி உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த வகையில் ஒத்துழைத்துச் செயல்பட் வேண்டும் எனவும் சுட்டியுள்ளது, இளம் குழந்தைகள் தாயன்புக்கு ஏங்கும் அளவிற்கு வரக்கூடாது என்பதையும் எண்ணி, தாயினையே அறியாத நிலையில் எப்படி அதன் வாழ்வு அமையும் என்பதையும் கருதிப் பார்க்கவேண்டியுள்ளது. மழலையர் பாதுகாப்பு இல்லங்களில் விடப்பெறும் குழந்தைகள் யார் கையிலோ இருந்து, எப்படியோ உண்டு, உறங்கிப் பொழுதைக் கழிக்க, மாலையில் அன்னையர் வரினும் அவர்கள் வேலைகளுக்கு இடையில் அவர்தம் பாசத்தையும் பரிவினையும் பெறாமல் வருகின்றன. பின், சென்ற தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் பெருத்த மாறுபாடு உண்டாகிறதே என்று வருந்துவதால் என்ன பயன்? அண்மையில் தொலைக்காட்சியில் இத்தகைய ஒரு கதை (24.9.91) காட்டப்பெற்று சொந்த ஒரே மகள் வேறொருவனோடு சென்று மறைந்ததையும் பொருட்படுத்தாது, வாணிப வேலையிலே தந்தையும் உயர் சமுதாயச் சூழலிலே தாயும் சென்றதைக் காட்டியுள்ளது. இந்த நிலையில் தாய்ப்பாசமே அகன்றுவிட, அந்தப் பெண் இறுதியில் தாய் தந்தையைக் கண்டபோதும் களிப்பெய்தாது புதிய மனிதரைக் காண்பது போலவே நின்றாள். இது பெரும்பாலும் பெரும் செல்வர் வீடுகளிலும் தாய் தந்தையர் இருவரும் பணிபுரியும் வீடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சி தானே. தாயன்பே இவ்வாறு இல்லையாகும்போது தாய் மொழிப்பற்றும் தாய்நாட்டுப் பற்றும் எப்படி அமையும்? இந்த நிலை நாட்டில் வளரின் ‘இந்திய நாட்டின் தென் கோடியில் தமிழ் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது’ என வரலாற்றில் படிக்கும் வகையிலும் தாய்நாடு பல வகையில் சிதறுண்டு போகும் வழியிலும் வருங்காலம் அமையுமே என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த அவலநிலையை நீக்கினாலன்றி நாடு உய்யுமாறு இல்லை என்பது உறுதி.

இக்குறை நீக்க இராமமூர்த்திக் குழு சில விதிகளைக் காட்டியுள்ளது. (பக். 119) ஆனால் அரசாங்கம் அவற்றைப் பின்பற்ற வேண்டுமே. எத்தனையோ குழுக்கள் மத்திய மாநில அரசாங்கங்கள் விடுதலை பெற்றபின் நாள்தோறும் நியமிக்கின்றன. அவற்றின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுச்செயல்படுத்தியுள்ளனவா? இல்லையே பேருக்குக் குழு அமைத்து ஊருக்கு உபதேசித்துச் செயலில் பின்னடையும் நிலை நாட்டில் இருக்கும் வரையில் நாடு நாடாகவா இருக்கும். எறும்புகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து நேரிய வழியில் செல்லுகின்றன. பறவைகள் மாலைப்பொழுதில் தம் கூடுநோக்கி விரைந்து பறக்கின்றன கோழி விடியலில் எழுந்து தவறாது குரலெழுப்பி ‘வெய்யோனை வாவுபரித்தேரேறி வாவென்றழைப்பனபோல்’ கூவுகின்றன. ஏன்? ஓரறிவுடைய மரங்களும் செடிகளும்கூடக் காலம் தவறாமல் பணியாற்றுகின்றன. மாவும் பலாவும் கோடையில் பழுத்துப் பயன்தருகின்றன: மல்லியும் முல்லையும் இளவேனிலில் முகிழ்த்து மணம் வீசுகின்றன. அவை அனைத்தும் இன்னார் இனியார் என்று பார்ப்பதில்லை; உயர்ந்தார் தாழ்ந்தார் என்று நோக்குவதில்லை. என் கட்சிக்காரன், வென்றவன் என்று வேறுபடுத்துவதில்லை. ஆனால் ஆறறிவுடையவனாகிய மனிதன் எதைக் காலத்தில் செய்கின்றான்? ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் என்ற குறள் ‘பஸ்’சில்-பேருந்துகளில் எழுதுவதற்குத்தானே ஒழிய தன் வாழ்வுக்கு இல்லை என்று தானே செயலாற்றுகின்றான். இந்த நிலையில் அடுத்து வரும் இளம் சமுதாயத்தை-மழலையர் மனத்தை இப்போதே நேரிய வழியில் செலுத்தாவிட்டால் நாடு என்னாகும்? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத சாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும்,(தென் ஆப்பிரிக்காவின் நிறச்சண்டை உட்பட) அவற்றின் வழியே எழும் கொலைகளும் இன்று நாள்தோறும் நம் நாட்டில் நடைபெறுகின்றனவே. மக்கள் கடத்தலும் கள்ளப் பொருள்கள் கடத்தலும் இன்றுபோல் என்றேனும் இருந்ததுண்டா அரசு மட்டுமின்றித் தனிமனிதனும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா! சமயத் தலைவர்கள்-சமூகத் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா! எண்ணிப் பார்த்து இளங் குழந்தைகளுக்கு ஒன்றிய நெறியில், உற்ற கல்வியையும் பிற நலன்களையும் தந்து வருங்கால சமுதாயத்தையாவது வாழவைப்பார்களா?

இந்த இளம் பிள்ளைகளுக்கு வெறும் ஆங்கில மோகத்தை வளர்க்காது, நம்நாட்டுச் சுற்றுச் சூழல், பண்பாடு, வாழ்க்கை இவற்றிற்கு ஏற்ப, பாடல்களையும் பாடங்களையும் கற்றுத்தர ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதற்கேற்ப ஆத்திசூடி கொன்றை வேந்தன் தொடங்கி அறநெறிகளை வற்புறுத்தி வழிகாட்டும் பேரிலக்கியங்கள் வரிசை வரிசையாக-முறை முறையாக வகுப்பு நிலைக்கு ஏற்ப எண்ணற்று உள்ளன. அவற்றையே வேண்டாம் என்று ஒதுக்கும் அளவுக்கு இன்று தமிழன் முன்னேறிவிட்டானே! திருப்பிப் பார்த்துத் திருந்த வேண்டும்.

இன்று தந்தை தாய்ப் பேண், ஊருடன் கூடிவாழ், ஒப்புரவு ஒழுகு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இவை போன்றன தமிழ்க் குழந்தைகள் அறியாதன.

இத்தகைய இளங் குழந்தைகள் (0-6) பயிற்றுவதற்குத் தனித் திறன் தேவை. உயர்ந்த பட்டங்களோ, வேண்டாத பாடங்கள், மொழிகளைப் பயிற்றப் பயிற்சிகளோ தேவை இல்லை. குழந்தைகள் பயிற்சிப்பள்ளி (Nursery Training School) என ஒரு சில தனியார் நடத்துகின்றன. அவையும் தேவையான முறையில்-தெரிந்த வகையில் செயல்படுவதில்லை. பத்தாம் வகுப்பு பயின்றபின் ஆசிரியர் பயிற்சி தானே (Sec Grade) இன்று அடித்தளப் பயிற்சியாக உள்ளது. அதில் பயில்பவர்கள் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையில் ஆசிரியராக இருக்கலாம். அவர்களும் 1, 2 முதலிய வகுப்புகளுக்குச் சொல்லித் தரும் திறன் பெறுவகையில் அவர்கள் பயிற்சி பெறுவதில்லை. பயிற்சிப் பள்ளிகளின் பாடத்திட்டம் முதலில் மாற்றி அமைக்கப்பெறல் வேண்டும்.

இளங் குழந்தைகளுக்குப் பாடம் பயிற்றும் பயிற்சிப் பள்ளிகளைப் பற்றி அரசு கவனம் செலுத்தலாம். பெண் இனத்துக்குப் பெரிதும் உதவ நினைக்கும் இன்றைய அரசாங்கம் ஐந்தாம் வகுப்பு வரை மகளிரையே ஆசிரியராக நியமிக்கப் போவதாகக் கூறியுள்ளது. நல்லதே. ஆனால் குழந்தைகள் வகுப்பிற்கு உரிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி இல்லை. இதை எண்ணிப் பார்க்கவேண்டும் இல்லையானால் அடிப்படை இல்லாத கட்டடம் போன்று உடனே இடிந்து விழும். இதே சமுதாய வாழ்வாக நாட்டுவாழ்வு அமைந்து விடலாம். இப்பயிற்சியும் அவ்வம்மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப, அந்நிய வாடை வீசாத வகையில் அமையவேண்டும். மாவட்டத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளியாவது உடன் தொடங்க வேண்டும்.

நான் மேலே சுட்டியபடி குழந்தைகள் தாங்கள் வாழும் சமுதாயத்தை ஒட்டியே வளர்க்கப்பெறல் வேண்டும். இதனால் ஏழை ஏழையாகவே இருக்கவேண்டுமென்றோ செல்வன் மேலும் செல்வம் பெற்றவனாக ஆகவேண்டும் என்பதோ கருத்தன்று. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது என்பதற்கு ஏற்ப யாரோ எப்படியோ வாழ்கிறார்கள் என்று அதற்காக நம் குழந்தைகளும் அந்த வழியில் படிக்க வேண்டுவதில்லை. ஏழை நாடாக உள்ள இந்தியாவில்-பெரும்பாலும் கிராமங்களே அமைந்த இந்தியாவில் அக்கிராமச் சூழ்நிலைக்கேற்ப ஆரம்பகல்வி அமையவேண்டும். இளங் குழந்தைகள் உள்ளத்தே தன் ஊர் தன் உறவினர், உற்றார், தன்னைப்போன்ற மக்கள், ஊர்புறச் சூழல் போன்ற வகையில் அமையப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். பின் நான் ஆரம்பள்ளி பற்றிய எழுத்தில் காட்டிய படி வட்டம், மாவட்டம், மாநிலம், பிறகு, உலகம் என்று மெல்ல மெல்ல, வளர வேண்டும். இளங் குழந்தைகள் உள்ளம்-கண்ணாடி போன்ற உள்ளம்! எனவே தன் தாய் மொழி-தாய் தந்தை உற்றார் உறவினர் பற்று, ஊர்ப்பற்று முதலியன அமைய, பிறபின் தொடர வழி காட்டியாகப் பலவகையில் குழந்தைகள் கல்வி (0-6) அமைய வேண்டும். இது பற்றி இராமமூர்த்தி ஆய்வுக்குழு தெளிவாக இரண்டு பக்கங்கள் (125-126) பரிந்துரை செய்துள்ளது. அவற்றை மத்திய மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் இவ்வாறு இளங் குழந்தைகள் உள்ளத்தே நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரும் வகையில் கல்வி முறை அமைப்பின் வரும் சந்ததி வளமுற்று வாழ வழி உண்டாகும். நாட்டு மக்கள் தாம் கொண்டுள்ள எல்லா வேற்றுமைகளையும் பிஞ்சு உள்ளங்களில் புகாமல் பாதுகாத்திட முயல வேண்டும். அதற்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் தக்க நெறிப்படும் குழந்தைகள்-இளங் குழந்தைகளுக்குப் பள்ளிகளை அத்துறையில் பயிற்சி பெற்ற நல்லாசிரியர்களைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழி. எனவே ஐந்து வயது நிரம்பிய பிள்ளை உள்ளங்களில் பதியும் எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தும் நல்லாசிரியர் பயிற்சிப் பள்ளிகளை உடன் தொடங்கி ஓராண்டு அல்லது ஈராண்டு அப்பயிற்சியை முடிக்க வழிகாண வேண்டும். ஊர்தொறும் அர்சாங்கமே - ஊராட்சியாளர் வழியோ பிறவழியோ அத்தகைய நல்லாசிரியர் கொண்ட மழலைப் பள்ளிகளை நிறுவி, அவை நன்கு நடைபெறுகின்றனவா என்பதைக் கவனிக்க வழிகாண வேண்டும் இந்த நிலையினை முதலில் செய்யின், வருங்கால நாடு கல்வியால் மட்டுமன்றிப் பிற எல்லா வகையாலும் ஏற்றமுறும் என்பது தெளிவு.

முதல் வகுப்புக்கு முன் உள்ள ‘L.K.G. U.K.G’ வகுப்புகளைப் பற்றிச் சிறிது காண்போம். சீருடை உடுத்து தலைசீவி பெரும் சுமையாகப் புத்தகங்களைத் தாங்கிக்கொண்டு இளஞ் செல்வங்கள் பள்ளிக்கு வருவதும், அவர்களை அழைத்து வந்து விட்டு, பின் திரும்ப அழைத்துச் செல்ல, தாயரும் பிறரும் வருவதும் ஒவ்வொரு பள்ளியிலும் கண் கொள்ளாக் காட்சியாகத்தான் உள்ளது. சில பெற்றோர்கள்-இருவரும் பணிசெய்பவர்களாக இருந்து, வீட்டில் பார்க்க வேறு யாரும் இல்லா நிலையில், மாலை அவர்கள் திரும்பும் வரையில், பள்ளியிலேயே தங்க வைத்துக்கொள்ளத் தனி ஏற்பாடுகளும் சில இடங்களில் உள்ளன. குழந்தைகள் மழலைமொழி கேட்டு மகிழவேண்டிய நல்லாசிரியர்கள், சிலசமயங்களில் வல்லாசிரியர்களாவதும் உண்டு. இந்த நிலையினால் அஞ்சும் குழந்தைகளுக்குக் கல்வியிலேயே வெறுப்புத் தோன்றும் சீருடை.யும் பிறவும் குழந்தை உள்ளத்தில் வேறுபாடுகள் தோன்ற

க.-7 வழியில்லை. பெரும்பாலும் இவ்வகுப்புகள் பாதிநாட்களோ, சுமார் மூன்றுமணி நேரமோ நடப்பதால் உணவு வேறு பாட்டினைக் காணவும் முடியாது. சில குழந்தைகளுக்குப் பெற்றோர் இடைவேளையில் ஏதேனும் பருகக் கொண்டு வந்து தருவர். அது அதிக வேற்றுமையை ஏற்படுத்தாது. எனினும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தனிச் சலுகை தரக் கட்டாயப்படுத்தும் போதுதான் தொல்லை உண்டாகிறது.

L.K,G. U.K G. வகுப்புகளில் எழுத்து வேலைகள் அதிகம் இல்லை என்றாலும் குழந்தைகள் விரும்பியபடி வண்ணப் படங்கள் தீட்ட், வண்ணக் கோல்கள் பள்ளிகளில் தரப்பெறுகின்றன. அக் குழந்தைகள் கிறுக்கி வரையும் படங்களை ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் காட்டி அவை மகிழும் போதும் நாம் நம்மை மறக்கிறோம். சிறு சிறு அடிகளா லாகிய பாடல்களைப் பாடும்போதும் கேட்போருக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஆனால் அவை வேற்றுமொழியிலன்றோ பெரும்பாலான பள்ளிகளில் பயிற்றப்பெறுகின்றன. இந்த இரு வகுப்பிலும் தமிழே இல்லாத பள்ளிகள் சென்னை நகரில் பல உள்ளன. இதனைத் தடுக்க வழிகாணவேண்டும், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்ற வாக்கு என்றும் உண்மையாகுமாதலால் இந்த இளமையில் கற்றுத்தரும் கல்வியே வரும் காலச் சமுதாயத்தை வாழவைக்கும்-வளர வைக்கும். இந்த உண்மையினை எண்ணி அரசும் பிறரும் செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.