களவழி நாற்பது

விக்கிமூலம் இலிருந்து
                               பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
                               களவழி நாற்பது- மூலம்
                                 ஆசிரியர்: பொய்கையார்

(பிழையில்லாப்பதிப்பு)[தொகு]

பாடல்: 01. (நாண்ஞாயிறு)[தொகு]

நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து, முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல் துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன் தப்பியார் அட்ட களத்து.


  கருத்துரை: சோழன் செங்கணான், இங்குப் 'புனல்நாடன்' என்று அழைக்கப்படுகின்றான்.புனல்=நீர்; இங்குக்காவிரியின் நீர்ப்பெருக்கைச்சுட்டியது.

நீர்வளம்மிக்க சோழநாட்டை ஆளும் சோழனிடம் பிழைசெய்தனர் பகைவர்; போர்க்களத்தில் அவர்களோடு போர்செய்து அவர்களை அவன் வென்றான். அந்தப் போர்க்களக்காட்சி இது: கதிரவன் உதித்த காலைப்பொழுதில் நடந்த போரில் வாளால் வெட்டுப்பட்டு வீழ்ந்தவர்கள் சிந்திய இரத்தம், (குருதி)வெள்ளமாய்ப் பெருக அதனைப் போர்யானைகள் உழக்கின(காலால் கலக்கின). அக்களிறுகளின் -யானைகளின்- காலிற்பட்ட அந்த இரத்தநீரானது, முற்பகலில் கெட்டியான குழம்பாகியதாம். பிற்பகலில் அந்த இரத்தக்குழம்பு இறுகி யானைகள் தம் கால்களால் மிதி்ப்பதனால் துகளாகியதாம்: அந்தச் சிவந்த இரத்தத்துளிகளின் தூள்கள் பவழத்தூள்கள்போல் தோன்றின; அவை வானம்எங்கும் காற்றில் பரவியதால், அந்தப்போர்க்களம் பவழத்துகள்களாய்க் காட்சியளித்ததாம். அதனைத் "துப்புத் துகளிற் கெழூஉம்" என்கின்றார் கவிஞர். துப்பு என்றால் பவழம்.

சிறப்பு: காலையில் நடந்தபோரில் நீராய் இருந்த குருதி,முற்பகலில் கெட்டியான குழம்பாகிப் பிற்பகலில் துகளாகி வானத்தில் பரந்தது; அத்துகள்கள் சிவந்த பவழத்துகள்கள்போல் காட்சியளித்தன என்று கற்பனை செய்கின்றார்.காலையில் -இரத்தம்- நீர்; முற்பகலில் குழம்பு; பிற்பகலில் பவழத்துகள்கள்!


ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப் போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி, கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ் நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து.

பாடல்: 03.[தொகு]

ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார், இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து. 3


இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.

பாடல்: 04.[தொகு]

உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில் செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால் புல்லாரை அட்ட களத்து. 4


திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது.

பாடல்: 05.[தொகு]

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து, குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால் தப்பியார் அட்ட களத்து. 5


சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின. செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின. மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.

பாடல்: 06.[தொகு]

நால் நால் - திசையும் பிணம் பிறங்க, யானை அடுக்குபு பெற்றிக் கிடந்த - இடித்து உரறி, அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும் பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண் ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன் வேந்தரை அட்ட களத்து. 6


அருமையான மணிகள் கோர்த்த மாலையை மார்பிலே அணிந்தவனும் திண்ணிய தோள்களை உடையவனுமான சோழன் வேந்தர்களை வென்ற போர்க்களத்தில், பிணங்கள் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டன. யானைகள் கொல்லப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டன. இது மலைமீது விழுந்த இடியினால் பிய்த்தெறியப்பட்ட புதர்கள் மலை மீது சிதறிக் கிடப்பன போல இருந்தன.

பாடல்: 07.[தொகு]

அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி, இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங் கண் வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் பொருநரை அட்ட களத்து. 7


சிவந்த கண்களை உடைய வரால் மீன் விளையாடும் காவிரி பாயும் நாட்டினை உடைய சோழனது பொருந்திய படைகளை உடைய போர்க்களத்தில், கரிய மலையைப் போன்ற யானையானது, போரிட்டு இரத்தக் குளியல் நடத்தியதால் சிவந்த உடலைப் பெற்றுச் சாதிலிங்க மலை என்னும் சிவந்த மலையைப் போல காட்சி அளித்தது.

பாடல்: 08.[தொகு]

யானைமேல் யானை நெரிதர ஆனாது
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப - எவ்வாயும்
எண்ணரும் குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணார் இடிமுரசிற் பாய்புனல் நீர்நாடன்
நண்ணாரை அட்ட களத்து.


முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது.

பாடல்: 09.[தொகு]

மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
காலாட்சோடற்ற கழற்கால் இருங்கடல்
ஊணில் சுறபிறழ்வ போன்ற புனல்நாடன்
நேராரை அட்ட களத்து.


சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.

பாடல்: 10.[தொகு]

பல்கணை எவ்வாயும் பாய்தலிற் செல்கலா(து)
ஒல்கி உயங்கும் களிறெல்லாம் - தொல்சிறப்பிற்
செவ்வலங் குன்றம்போல் தோன்றும் புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து.

சோழன் பகைவர்களை வென்ற களத்தில், உடல் முழுமையும் அம்புகள் பாய்ந்து இரத்தத்தைப் போர்வையாக்கிக் கொண்டு மேலே தொடர முடியாமல் அசையாமல் உள்ள காட்சி, தொன்று தொட்டே செம்மை நிறம் படிந்து வரும் சிறப்பினைப் பெற்ற செம்மலை போல் தோன்றும்.

பாடல்: 11.[தொகு]

கழுமிய ஞாட்பினுள் மைந்(து)இகந்தார் இட்ட
ஒழிமுரசம் ஒண்குருதி ஆடித் - தொழின்மடிந்து
கண்காணா யானை உதைப்ப இழும்என
மங்குன் மழையின் அதிரும் அதிராப்போர்ச்
செங்கண்மால் அட்ட களத்து.

கொடிய போர்க்களத்தில் வீரர்கள் விட்டொழித்த போர் முரசம், குருதி வெள்ளத்தில் மிதந்து வர, போரில் கண்ணிழந்த யானை முரசை உதைக்க, மேகக்கூட்டம் முழங்குவதுபோல் ஒலி தரும்படி சோழன் போர்க்களம் காட்சி தந்தது.

பாடல்:12[தொகு]

ஓவாக் கணைபாய ஒல்கி எழில்வேழம்
தீவாய்க் குருதி இழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவே
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை அட்ட களத்து.

காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.

பாடல்: 13.[தொகு]

நிரைகதிர் நீள்எஃகம் நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புரளும் செருமொய்ம்பிற்
சேஎய்பொரு தட்ட களத்து.

முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது.

பாடல்: 14.[தொகு]

கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்
பவளஞ் சொரிதரு பைபோல் திவள்ஒளிய
ஒண்செங்குருதி உமிழும் புனனாடன்
கொங்கரை அட்ட களத்து.

பாடல்: 15.[தொகு]

கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
புக்கவாய் எல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
சினமால் பொருத களத்து.

பாடல்: 16.[தொகு]

பரும இனமாக் கடவித் தெரிமறவர்
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்(று)இவரும்
வேங்கை இரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை அட்ட களத்து.

பாடல்: 17.[தொகு]

ஆர்ப்பெழுந்த ஞாட்பினுள் ஆளாள் எதிர்த்தோடித்
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே
போர்க்கொடித் தானைப் பொருபுனல் நீர்நாடன்
ஆர்த்தமர் அட்ட களத்து.

பாடல்: 18.[தொகு]

நளிந்த கடலுள் திமில்திரை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி ஈர்க்கும்- தெளிந்து
தடற்றிடங் கொள்வாள் தளையவிழும் தார்ச்சேய் (தடறு இடம்= தடற்றிடம்)
உடற்றியார் அட்ட களத்து.

பாடல்: 19.[தொகு]

இடைமருப்பின் விட்டெறிந்த எஃகம்காழ் மூழ்கிக்
கடைமணி காண்வரத் தோற்றி - நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லாம் நீர்நாடன்
புக்கமர் அட்ட களத்து.

பாடல்: 20.[தொகு]

இருசிறகர் ஈர்க்குப் பரப்பி எருவை
குருதி பிணங்கவரும் தோற்றம் - அதிர்விலாச்
சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை அட்டகளத்தது.

பாடல்: 21.[தொகு]

இணைவேல் எழின்மருமத்(து) இங்கப்புண் கூர்ந்து
கணையலைக்கு ஒல்கிய யானை - துணையிலவாய்த்
தொல்வலி ஆற்றித் துளங்கினவாய் மெல்ல
நிலங்கால் கவரும் மலைபோன்ற செங்கண்
சினமால் பொருத களத்து.

பாடல்: 22.[தொகு]

இருநிலம் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை ஒளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம் பொக்குமே (பாம்பு ஒக்குமே = பாம்பொக்குமே)
பாடார் இடிமுரசிற் பாய்புனல் நீர்நாடன்
கூடாரை அட்ட களத்து.


பாடல்: 23.[தொகு]

எற்றி வயவர் எறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப் புனலுள் நிவந்தகளிற்(று) உடம்பு
செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் (வேல் தானை =வேற்றானை)
செற்றாரை அட்ட களத்து.

பாடல்: 24.[தொகு]

திண்டோள் மறவர் எறியத் திசைதோறும்
பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும் (நன்கு எனைத்தும்= நன்கெனைத்தும்)
பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே
கண்ணார் கமழ்தெரியல் காவிரி நீர்நாடன்
நண்ணாரை அட்ட களத்து.

பாடல்: 25.[தொகு]

மலைகலங்கப் பாயும் மலைபோல் நிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடியெழுந்து பொங்குபு
வானந் துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை அட்ட களத்து.

பாடல்: 26.[தொகு]

எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகம் கவ்வி விசும்பிவரும் (விசும்பு இவரும்= விசும்பிவரும்)
செவ்வாய் உவணத்தில் தோன்றும் புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து.

பாடல்: 27.[தொகு]

செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர் வியன்றமிடாப் போன்ற புனனாடன் ('பூ இயன்ற நீர் மிடா'-எனப் பொருள்செய்க)
மேவாரை அட்ட களத்து.

பாடல்: 28.[தொகு]

ஓடா மறவர் உருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை வாளார் பிறங்கிய ஞாட்பினுள்
கேடகத்தோ(டு) அற்ற தடக்கைகொண் டோடி
இகலன்வாய்த் துற்றிய தோற்றம் அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரில் தோன்றும் புனனாடன்
நண்ணாரை அட்ட களத்து.

பாடல்: 29.[தொகு]

கடிகாவில் காற்றுற் றெறிய வெடிபட்டு (காற்று உற்று எறிய= காற்றுற்றெறிய)
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும் (வீற்று வீற்று ஓடும்= வீற்றுவீற்றோடும்)
கேளிர் இழந்தார் அலறுபவே செங்கட்
சினமால் பொருத களத்து.

பாடல்: 30.[தொகு]

மடங்க எறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட ஒண்குருதி கொல்களி(று) ஈர்க்கும்
மடங்கா மறமொய்ம்பிற் செங்கண் சினமால்
அடங்காரை அட்ட களத்து.

பாடல்: 31.[தொகு]

ஓடா மறவர் எறிய நுதல்பிளந்த
கோடேந்து கொல்களிற்றுக் கும்பத்(து) எழில்ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன்
ஒன்னாரை அட்ட களத்து.

பாடல்: 32.[தொகு]

மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள் - பொய்தீர்ந்த
பூந்தார் முரசிற் பொருபுனல் நீர்நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.

பாடல்: 33.[தொகு]

பொய்கை உடைந்து புனல்பாய்ந்த வாயெல்லாம்
நெய்தல் இடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங்(கு) எஃகின் அவிர்ஒளிவாள் தாயினவே
கொய்சுவன் மாவின் கொடித்திண்தேர்ச் செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.

பாடல்: 34.[தொகு]

இணரிய ஞாட்பினுள் ஏற்றெழுந்த மைந்தர்
சுடர்இலங்(கு) எஃகம் எறியச்சேர்ந்(து) உக்க
குடர்கொண்டு வாங்கும் குறுநரி கந்தில்
தொடரொடு கோணாய் புரையும் அடர்பைம்பூண்
சேய்பொரு(து) அட்ட களத்து.

பாடல்: 35.[தொகு]

செவ்வரைச் சென்னி அரிமானோ(டு) அவ்வரை
ஒல்கி உருமிற்(கு) உடைந்தற்றான் - மல்கிக்
கரைகொன்(று) இழிதரூஉம் காவிரி நாடன்
உரைசால் உடம்பிடி மூழ்க அரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து.

பாடல்: 36.[தொகு]

ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலா
ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை அட்ட களத்து.

பாடல்: 37.[தொகு]

அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்
பௌவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து.

பாடல்: 38.[தொகு]

பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து)
உரும்எறி பாம்பிற் புரளும் - செருமொய்ம்பிற்
பொன்னார மார்பிற் புனைகழற்காற் செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.

பாடல்: 39.[தொகு]

மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.

பாடல்: 40.[தொகு]

வெள்ளிவெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்
எல்லாக் களிறும் நிலஞ்சேர்ந்த - பல்வேற்
பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால்
கணைமாரி பெய்த களத்து.

பாடல்: 41.[தொகு]

வேனிறத் திங்க வயவரால் ஏறுண்டு (வேல் நிறத்து இங்க= வேனிறத்திங்க)
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங் கூறும் மறைகேட்ப போன்றவே
பாடார் இடிமுரசிற் பாய்புனல் நீர்நாடன்
கூடாரை அட்ட களத்து.

"சோழன் செங்கணானும், சேரமான் கணைக்காலிரும்பொறையும் (திருப்)போர்ப்புறத்துப் பொருது உடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழிநாற்பது முற்றிற்று". -(பழைய உரை)

இந்தநூல் பற்றிய முக்கிய குறிப்புக்கள்:

1. இப்பாடலைப் பாடியே சிறைப்பட்ட சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சோழனிடம் இருந்து சிறைமீட்டார் பொய்கையார்.
2. இப்பாடல் களவழிநாற்பது என்றுபெயர் கொண்டிருப்பினும், இதனுள் நாற்பத்தியொரு பாடல்கள் உண்டு.
3. கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த நூல்பற்றிய குறிப்புக்களுண்டு.
   :"களவழிக் கவிதை பொய்கைஉரை செய்யஉதியன்
    :கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்" - என்பது  'கலிங்கத்துப் பரணி';
    :"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் 
     :பாதத்தளை விட்ட பார்த்திபனும்" - என்பது 'விக்கிரமசோழன் உலா'.
4. புறநானூற்று 74 ஆம்பாடல் இதுதொடர்பானது.
5. 'தமிழ்நாவலர்சரிதை' எனும்நூலும் இதுதொடர்பான கருத்துக்களைக் கொண்டுள்ளது.
6. சோழன் கோச்செங்கணான், திருமங்கையாழ்வாரால் குறிக்கப்பெற்ற சிறப்பினை உடையவன்
7. சேக்கிழாரின் பெரியபுராணத்தில் குறிக்கப்பெறும் அடியார்களுள் ஒருவரான 'கோச்செங்கட்சோழநாயனார்' இவரே.
8. 'பொய்கையார்' பிறந்த ஊர் சேரநாட்டுத்'தொண்டி' என்பார், இதற்கு உரைவரைந்த திரு ந. மு. வேங்கடசாமிநாட்டார் அவர்கள்.$
9. களவழி இருவகைப்படும். ஒன்று 'ஏரோர் களவழி'. ஏனையது, 'தேரோர் களவழி'. முன்னையது உழுதொழிலாளர் செய்வது; பின்னையது, அரசர் செய்வது; போரில் மறவர்செய்வது. களவழி என்றசொற்குக் 'களத்தின் இடம்' என்றுபொருள்; இங்குப் போர்க்களமாகிய இடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சுட்டியது.
10. இந்த நூலுக்குப் பழைய உரை ஒன்றுஉண்டு. அது செய்யுளின் பொருளைப் பொழிப்புரையாகக் கூறுவது.
11. இதற்குச் சோடாவதானம் சுப்பராயச்செட்டியார் அவர்கள் எழுதிய உரை ஒன்று உண்டு என்பர், திரு ந. மு. வே. நாட்டார் அவர்கள்#

:குறிப்புக்கள்:

$ நானாற்பது(மூலமும் உரையும்), களவழி நாற்பது உரை: ந.மு.வேங்கடசாமி நாட்டார், சென்னை:பூம்புகார்ப் பதிப்பகம்,2004. ப.56.
  1. மேலது, ப.57.
"https://ta.wikisource.org/w/index.php?title=களவழி_நாற்பது&oldid=1415999" இலிருந்து மீள்விக்கப்பட்டது