கள்வனின் காதலி/குடம் உருண்டது!
குடம் உருண்டது!
பாச்சாபுரம் கடைத் தெருவில் உண்மையாகவே ஒரு மாட்டு வண்டி கிடக்கத்தான் செய்தது. அதை லயன் கரையிலிருந்தே பார்த்த சர்வோத்தம சாஸ்திரி தம் பின்னோடு வந்த உடுப்பணியாத போலீஸ்காரனை அனுப்பி அதில் யார் வந்தது என்று விசாரித்து வரச் சொன்னார். வண்டிக்காரன் கடைத் தெருவிலிருந்த மிட்டாய்க் கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைக் கேட்டதற்கு, "ஆமாம்; ஒரு சாயபுவும் அவர் சம்சாரமுந்தான் வந்தார்கள். மத்தியானமாய் ஸ்டேஷனுக்குத் திரும்பி விடுகிறோம் என்று என்னை இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்" என்றான். போலீஸ்காரன் ஊருக்குள் போய் இரண்டொரு முஸ்லிம்களை, "ஒரு சாயபுவும் ஒரு கோஷா ஸ்திரீயும் இங்கே வந்தார்களா?" என்று விசாரித்தான். அவர்கள், "வந்தார்கள், வரவில்லை; நீ என்னத்திற்கு விசாரிக்கிறாய்?" என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள். போலீஸ்காரன் திரும்பி வந்து சாஸ்திரியிடம் சொன்னான். அவருடைய பழைய நம்பிக்கை உறுதிப்பட்டது. இருந்த போதிலும், "நீ இங்கேயே இருந்து அந்த வண்டியில் ஒரு கண் வைத்திரு. பின்னால் வரும் போலிஸ்காரர்களை மேலே அனுப்பி விடு. நான் முன்னால் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவரும் இந்த 'மப்டி' போலீஸ்காரனும் மட்டும் சைக்கிளில் வந்தார்கள். மற்றவர்கள் பின்னால் நடந்து வந்தார்கள். இருபுறத்திலுமுள்ள காடுகளைத் துழாவிக் கொண்டு வந்தபடியால் அவர்கள் வருவதற்கு நேரமாயிற்று.
ஸர்வோத்தம சாஸ்திரியின் எண்ணமெல்லாம் பூங்குளத்திலேயே இருந்தது. பூங்குளத்திலும் கல்யாணியின் மீதே இருந்தது. இரகசியங்களையும் மர்மங்களையும் கண்டுபிடிப்பதிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேட்டை நாயிடம் உள்ள முகரும் சக்தியைப் போல், ஒருவித சக்தி உண்டாகிவிடுகிறது. ரயிலில் பாருங்களேன், வண்டியிலே முப்பத்திரண்டு பேர் உட்கார்ந்திருக்கும் போது, டிக்கட் பரிசோதகர் ஓர் ஆசாமியிடம் குறிப்பாகப் போய் டிக்கட் கேட்கிறார்! அந்த ஆசாமியிடம் டிக்கட் இருப்பதில்லை!
இம்மாதிரிதான் ஸர்வோத்தம் சாஸ்திரிக்கும் முத்தையனுடைய இரகசியம் இந்தக் கல்யாணியிடம் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிவிட்டது. எனவே பரபரப்புடன் விரைந்து ஸைக்கிளை விட்டுக் கொண்டு சென்றார். அவர் பூங்குளத்தை நெருங்கிய போது, கல்யாணி கொள்ளிடப் படுகையிலிருந்து இடுப்பிலே குடத்துடன் குளிக்காமலும் தலைவிரி கோலமாயும் வருவதைக் கண்டார். "ஐயோ! இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமையா? அல்லது பேய் பிடித்திருக்கிறதா?" என்று அவர் திடுக்கிட்டுப் போனார். அப்போது அவளுடைய தோற்றம் அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
அவ்விடத்தில் லயன்கரைச் சாலையை ஒட்டி இராஜன் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தபடியால், கொள்ளிடத்தில் இருந்து வருகிறவர்கள் லயன் கரைச் சாலையைத் தாண்டியதும் கொஞ்ச தூரம் கீழே இறங்கிப் போய், வாய்க்காலின் மீது போடப்பட்டிருக்கும் மூங்கில் பாலத்தின் வழியாக அக்கரை செல்ல வேண்டும். அப்புறம் சாதாரண கால்நடைப் பாதை வழியாக சுமார் கால் மைல் தூரம் போனால் தான் பூங்குளத்தை அடையலாம்.
கல்யாணி இப்போது லயன் கரைச் சாலையைத் தாண்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவள் என்ன சொல்கிறாள் என்பது சாஸ்திரியின் காதில் விழா விட்டாலும், அவை ஏதோ காரமான வசைச்சொற்கள் என்று மட்டும், ஊகிக்க முடிந்தது. அவ்வளவு சமீபத்தில் வந்திருந்த சாஸ்திரியை அவள் கவனிக்கவில்லை. உண்மையில், அவளுக்கு எதிரில் உள்ளவை கூட அவள் கண்ணுக்குத் தெரியவில்லையென்று தோன்றிற்று. அப்படித் தட்டுத் தடுமாறி நடந்தாள். சாலையைத் தாண்டியதும், பள்ளத்தில் இறங்க வேண்டுமல்லவா? அந்த இடத்தில் பள்ளம் என்பதைக் கவனிக்காமலே அவள் காலை எடுத்து வைத்தாள். திடீரென்று கீழே விழுந்தாள். இடுப்பிலிருந்த குடம் தவறி விழுந்து, 'டணார், டணார்' என்று சப்தித்துக் கொண்டே உருண்டு இராஜன் வாய்க்காலின் பிரவாகத்துக்கருகில் போய்த் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு நின்றது. குடம் உருண்ட வேகத்தில் அதற்குள்ளிருந்த பொட்டலம் வெளியே வந்து தண்ணீரில் விழுந்தது. விழும்போதே அந்தப் பொட்டலம் அவிழ்ந்தும் போயிற்று. மீன்கள் திரண்டு வந்து முத்தையனுடைய மத்தியானச் சாப்பாட்டை ருசி பார்த்துச் சாப்பிடத் தொடங்கின.
இவ்வளவும் நடந்தது அரை நிமிஷ நேரத்தில். கல்யாணி லயன் கரைச் சரிவில் நிமிர்ந்து உட்கார்ந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தாள். இதற்குள் சாஸ்திரி கீழே ஓடிச் சென்று குடமும் பிரவாகத்தில் போய்விடாமல் எடுத்தார். குடத்தை அவர் ஒரு கையால் எடுக்கும்போது இன்னொரு கையால் தண்ணீரில் கிடந்த சோற்றுப் பொட்டலத்தை நன்றாய்ப் பிரவாகத்தில் இழுத்துவிட்டு விட்டார். குடத்தை எடுத்துக் கொண்டு வந்து கல்யாணியின் பக்கத்தில் வைத்த சாஸ்திரி, "என்ன, அம்மா, இது? ஏன் இப்படி விழுந்துவிட்டாய்?" என்று கேட்டார். கல்யாணி பதில் சொல்லாமல் திருதிருவென்று அவரைப் பார்த்து விழித்தாள்.
"குடத்திலிருந்த சாப்பாடு ஆற்றோடே போய் விட்டதே? யாருக்காக அம்மா, சாப்பாடு கொண்டு வந்தாய்?" என்று கேட்டார் சாஸ்திரியார்.
அதைக் கேட்ட கல்யாணி ஒரு விநாடி அவரை உற்றுப் பார்த்துவிட்டு, "ஹ ஹ் ஹ ஹ் ஹ ஹா" என்று சிரித்தாள். அவ்வளவு பயங்கரமும் சோகமும் கலந்த சிரிப்பை அதற்கு முன் சாஸ்திரி கேட்டதே கிடையாது. அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது. "யாருக்காகவா? சாப்பாடு யாருக்காகவா?" என்று கல்யாணி முணுமுணுத்தது அவருடைய உடம்பைப் பதறச் செய்தது.
ஆனாலும் அவர் விடவில்லை. நெஞ்சை வயிரமாக்கிக் கொண்டு மேலும் சொன்னார்: "உன்னைப் போன்ற சிறு பெண்கள் உச்சி வேளையில் இங்கெல்லாம் வரக்கூடாது, அம்மா! படுகைக் காட்டிலே திருடன் முத்தையன் ஒளிந்து கொண்டிருப்பது தெரியாதா உனக்கு? அவனுக்கு இந்தப் பக்கத்திலேதான் யாரோ காதலி ஒருத்தி இருக்காளாம். அவள் தான் அவனுக்குச் சாப்பாடு போடுகிறாளாம்! முதலிலே நீதான் அந்தக் கள்வனின் காதலியோ என்று கூட நான் சந்தேகப்பட்டுவிட்டேன்..."
சாஸ்திரி இம்மாதிரி கூறியதைக் காட்டிலும் கல்யாணியின் நெஞ்சில் கூரிய ஈட்டியைச் செருகியிருக்கலாம்! ஆனால் ஈவிரக்கம் பார்த்தால் இந்தக் காலத்தில் சரிப்படுமா? உத்தியோகத்தில் தான் பிரமோஷன் கிடைக்குமா? அவர் உத்தேசித்த பலன் கைமேல் கிடைத்து விட்டது. கல்யாணி எழுந்து நின்றாள். ஆவேசம் வந்தவள் போல் பேசினாள்: "நானா கள்வனின் காதலி? இல்லவே இல்லை! சத்தியமாய் இல்லை! அவனுடைய காதலி வேறொருத்தி இருக்கிறாள். அதோ அந்தக் காட்டுக்குள்ளேயே இருக்கிற பாழும் கோவிலுக்குப் போனால் தெரியும். காதலனும் காதலியும் அங்கே கட்டித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்..."
இப்படிச் சொன்ன கல்யாணிக்கு உடனே, "ஐயோ! என்ன காரியம் செய்தோம்?" என்று தோன்றியிருக்க வேண்டும். உதடுகளைக் கடித்துக் கொண்டாள். ஒரு நிமிஷம் பொறுத்து, "ஐயா! நீங்கள் யார்?" என்று கேட்டாள்.
சாஸ்திரியின் முகத்தில் ஒரு சிறு மாறுதலும் ஏற்படவில்லை? "ஏனம்மா? என்னைத் தெரியாதா? நான் இந்தக் கொள்ளிடக்கரை மேஸ்திரி. எனக்கென்னத்திற்கு இந்தத் தொல்லையெல்லாம்? உனக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது. மூங்கில் பாலத்தைத் தாண்டி ஜாக்கிரதையாகப் போய்ச் சேர். நானும் என் வழியே போகிறேன்" என்றார்.
கல்யாணி, "ஐயா! நிஜமாய்ச் சொல்லுங்கள், நீங்கள் போலீஸ்காரர் இல்லையே?" என்று கேட்டாள்.
"என்னைப் பார்த்தால் போலீஸ்காரன் மாதிரி இருக்கிறதா?" என்றார் சாஸ்திரி.
கல்யாணி குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு மூங்கில் பாலத்தைத் தாண்டி ஊரை நோக்கிச் சென்றாள். அவளுக்குத் தெரியும்படியாக சாஸ்திரியும் லயன் கரைச் சாலையோடு கொஞ்ச தூரம் போனார்.
முத்தையன் இருக்குமிடம் இதுதான் என்று சாஸ்திரிக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. ஆனால் கல்யாணியின் மர்மம் இன்னதென்று முழுவதும் விளங்கவில்லை. அதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அந்தப் பெண் இங்கே இருந்தால் காரியத்துக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமென்று எண்ணித்தான் அவளைப் போகச் செய்தார்.
அவள் இராஜன் வாய்க்காலைத் தாண்டி அக்கரையில் முடுக்குத் திரும்புவதும், இங்கே சாலையில் போலீஸ்காரர்கள் வந்து சேர்வதும் சரியாயிருந்தது. சாஸ்திரி சட்டென்று ஒரு சீட்டு எழுதி, அந்தப் போலீஸ்காரர்களில் ஒருவனிடம் கொடுத்து, "ஓடு! என் சைக்கிளை எடுத்துப் போ! பாச்சாபுரத்தில் இருப்பவனிடம் கொடுத்து, உடனே போய் ராயவரம் போலீஸ் ஸ்டேஷனில் இந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டு வரச்சொல்லு. அவன் கோஷா ஸ்திரீயைத் தேடியது போதும். கோஷாவும் ஆயிற்று. நாசமாய்ப் போனதும் ஆயிற்று" என்றார். அவன் அப்படியே சைக்கிளில் விரைந்து சென்றான். பாக்கியிருந்த ஐந்து கான்ஸ்டபிள்களையும் பார்த்த சாஸ்திரி, "துப்பாக்கிகளில் மருந்து கெட்டித்துத் தயாராய் வைத்திருக்கிறீர்களா? வேட்டை நெருங்கி விட்டது" என்றார்.