கள்வனின் காதலி/நள்ளிரவு
நள்ளிரவு
ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி 'டிரஷரி'க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள்.
கச்சேரியை அடுத்து கீழ்ப்புறத்தில் ஒரு பெரிய முற்றம் இருந்தது. அந்த முற்றத்தின் தெற்குப் பக்கமும் கீழ்ப்புறமும் 'ட' மாதிரி அமைந்த தாழ்வாரம் இருந்தது. தாழ்வாரத்தையொட்டி, தெற்கே மூன்று அறைகளும் கிழக்கே மூன்று அறைகளும் இருந்தன. சர்க்கார் கட்டிடங்களுக்கு என்று ஏற்பட்ட ஒருவித வாசனை கமகமவென்று அங்கே வந்து கொண்டிருந்தது. அதில் தா ர் வாசனையும், 'பினைல்' வாசனையும் அதிகம் இருந்தனவாயினும், மற்றும் எத்தனையோ தினுசு தினுசான வாசனைகளும் கலந்து வந்து கொண்டுதானிருந்தன.
சப் ஜெயிலில் கீழ்ப்புறத்து அறைகளில் ஒன்றில் முத்தையன் அடைக்கப்பட்டிருந்தான். அவனை அங்கே கொண்டு வந்து சேர்த்ததும், சர்க்கார் ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டர் தமது கம்பவுண்டருடன் வந்து, அவனுடைய காயங்களையெல்லாம் நன்றாய்க் கட்டிவிட்டுப் போனார். முத்தையன் எப்படியாவது பிழைக்க வேண்டும். அவன் மேல் கேஸ் நடத்தித் தண்டனைக் குள்ளாக்க வேண்டுமென்ற ஆவல் போலீஸ் மேலதிகாரிகளுக்கு ரொம்பவும் தீவிரமாக இருந்தது. ஆனால் டாக்டர் அவர்களுக்கு இவ்விஷயத்தில் அதிக நம்பிக்கை கொடுக்கவில்லை. "நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன், பிழைத்தால் போலீஸாரின் அதிர்ஷ்டந்தான்" என்று சொல்லிவிட்டார்.
டாக்டர் திரும்பிப் போகுந் தறுவாயில், ஸர்வோத்தம சாஸ்திரி அவரை ஒரு கேள்வி கேட்டார்: "இனிமேல் ஒரு தடவையாவது பிரக்ஞை வருமா, வரவே வராதா?" என்று. "ஓ! பிரக்ஞை வரும். இன்று நடுநிசி சுமாருக்கே பிரக்ஞை வந்தாலும் வரும். ஆனால் அவனிடம் யாரும் அதிகம் பேச்சுக் கொடுக்கக் கூடாது" என்றார் டாக்டர்.
சப் ஜெயிலில் தென்புறத்துத் தாழ்வாரத்தையொட்டி இருந்த அறைகளில் ஒன்றில் குறவன் சொக்கன் அடைக்கப்பட்டிருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தார் ஸர்வோத்தம சாஸ்திரி.
அன்றிரவு சாஸ்திரி தூங்கவேயில்லை. இந்தக் கேஸில் ஆரம்ப முதல் சிரத்தை கொண்டவராதலாலும், கடைசியில் முத்தையனைப் பிடித்தவரும் அவரே ஆதலாலும், கைதிக்குப் பக்கத்திலேயே இருக்கவும், அவனுக்கு ஸ்மரனை வரும்போது அவசியமான விசாரணை செய்யவும் சாஸ்திரிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. முத்தையனுக்கு ஸ்மரணை வருவதற்குள்ளே, குறவன் சொக்கனிடம் சில விஷயங்களைக் கேட்க வேணுமென்று அவர் விரும்பினார்.
குறவன் சொக்கன் முன்னமேயே பிடிபட்டு விட்டானாயினும், அவனை எவ்வளவோ பாடுபடுத்தியும், முத்தையனைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டேனென்று ஒரே பிடிவாதமாயிருந்தான். இதனால் அவன் பேரில் சாஸ்திரிக்கு ஒருவித மதிப்பு கூட ஏற்பட்டிருந்தது. இப்போது முத்தையன் பிடிபட்டுவிட்டபடியால் சொக்கன் தனக்குத் தெரிந்ததைச் சொல்வானென்று நினைத்தது சரியாய் இருந்தது. முத்தையன் படுகாயமடைந்துவிட்டான் என்றும், அவன் பிழைப்பது துர்லபம் என்றும் அறிந்த போது சொக்கன் கண்ணீர் விட்டுச் சிறு பிள்ளையைப் போல் அழுது விட்டான். அப்புறம், சாஸ்திரி கேட்ட கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்த வரையில் பதில் சொன்னான். முதல் முதலில், திருப்பரங்கோயில் போலீஸ் லாக்-அப்பில் முத்தையன் அடைபட்ட அன்றிரவு நடந்ததெல்லாம் சொக்கனுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாதல்லவா? முத்தையனைத் தன்னுடன் தப்பித்து வரச் சொன்னபோது முதலில் அவன் மறுத்ததையும், பிறகு அவன் காவல் புரிந்த போலீஸ் சேவகனிடம் அபிராமியைப் போய்ப் பார்த்துவிட்டு வர அநுமதி கேட்டதையும், அதற்கு அந்தச் சேவகன் கூறிய துர்மொழியையும், அதன் பிறகே தன்னுடைய யோசனைக்கு முத்தையன் இணங்கியதையும் சொக்கன் சொன்ன போது, சாஸ்திரிக்கே கண்ணில் ஜலம் வந்து விட்டது. "ஐயோ! எப்படிப்பட்ட நல்லபிள்ளை! நெடுகிலும் பிறருடைய குற்றங்களினாலும் தவறுகளினாலும் அல்லவா இவன் இப்படிப்பட்ட துர்க்கதிக்காளாக நேர்ந்தது? உலகத்துக்கு இந்த உண்மையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? தெரிந்தால் தான் என்ன பிரயோஜனம்! உயிரற்ற இரக்கமற்ற சட்டம் இவனை மன்னிக்குமா?" என்று எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டார். நள்ளிரவு. வழக்கம்போல் பாராச் சேவகன் டங், டங் என்று 12-மணி அடித்தான். மணி அடித்து முடிந்ததும் மறுபடியும் நிசப்தம் குடிகொண்டது.
முத்தையன் தான் எங்கேயோ அதல பாதாளத்திலிருந்து மேலே மேலே வந்து கொண்டிருப்பதாக எண்ணினான். 'ஓகோ! தூங்கியல்லவா போய் விட்டோ ம்?' என்று ஒரு கணம் நினைத்தான். 'இது என்ன மணிச் சத்தம் கேட்கிறது? கோயிலில் உச்சிவேளை பூசை நடக்கிறதாக்கும்? ஆனால் ஏன் கல்யாணி இன்னும் வரவில்லை...?"
முத்தையனுடைய கண்கள் திறந்து கொண்டன. சுற்றுமுற்றும் பார்த்து விழித்தன. 'ஓ! இது கொள்ளிடக் கரையில்லை; பாழடைந்த கோயிலுமில்லை.' முதல் நாள் மத்தியானம் நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. சரி, சரி, இது ஜெயில்! ஆஸ்பத்திரிகளில் அவன் பார்த்திருப்பது போன்ற கட்டிலொன்றில் அவன் கிடந்தான். கால் கட்டு கைகட்டை யெல்லாம் அவிழ்த்தாகி விட்டது. ஆனாலும் கால்களை அசைக்க முடியவில்லை. அவ்வளவு பலஹீனமாயிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக உடம்பெல்லாம் வலி தெரிய ஆரம்பித்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் டக், டக் என்று யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. வேறு யாருமில்லை ஸப் இன்ஸ்பெக்டர் சாஸ்திரிதான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். முத்தையன் எழுந்திருக்க முயன்றான்; முடியவில்லை. அம்முயற்சியினால் உடம்பில் ஏற்பட்ட வலி முகத்தில் பிரதிபலித்தது.
சாஸ்திரி அவன் அருகில் சென்று கருணை ததும்பிய குரலில், "முத்தையா! இனி தப்பிக்கலாம் என்ற ஆசையையெல்லாம் விட்டுவிடு. உன் காலம் நெருங்கிவிட்டது. யாருக்காவது ஏதாவது சமாசாரம் தெரிவிக்க வேண்டுமென்றால் சொல்லு. அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றாலும் சொல்லு; முடியுமானால் அவர்களை வரவழைக்கிறேன்" என்றார்.
முத்தையன் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். அந்த மனுஷர் சொன்னது வாஸ்தவந்தான். தன்னுடைய அந்திம காலம் நெருங்கி விட்டது; அதனால் தான் அவ்வளவு பலஹீனமாயிருக்கிறது போலும்!
"கல்யாணியைப் பார்க்க வேணும்" என்று முத்தையன் முணுமுணுத்தான்.
"யாரை?" என்று சாஸ்திரி வியப்புடன் கேட்டார்.
"பூங்குளம் கல்யாணியை; திருச்சிற்றம்பலம் பிள்ளையின் மகளை" என்றான்.
சாஸ்திரி சற்றுத் தயங்கி, "அபிராமியைப் பார்க்க விரும்புவாயென்று நினைத்தேன்" என்றார்.
முத்தையனுடைய முகத்திலும் கண்ணிலும் ஆர்வம் ததும்பிற்று.
"என்ன? அபிராமியென்றா சொன்னீர்கள்?"
"ஆமாம்!"
"அபிராமியை உங்களுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?"
"திருப்பரங்கோயிலில் என்னுடைய வீட்டிலேதான் அவள் சில நாள் தங்கியிருந்தாள். என்னுடைய சம்சாரந்தான் அவளைப் பட்டணத்தில் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது." முத்தையன் கண்களில்தான் என்ன பிரகாசம்! என்ன மகிழ்ச்சி!
"ஐயா! இன்று என்னைப் பிடித்தது நீங்கள் தானே?" என்றான்.
"ஆமாம் அப்பா! என்ன செய்யலாம்? சட்டம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?"
"நான் என்றைக்காவது பிடிபட்டால், உங்கள் கையில் பிடிபடவேண்டுமென்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தக் கீர்த்தி உங்களுக்குத்தான் வரவேண்டுமென்று ஆசைப்பட்டேன். பகவான் என்னுடைய மனோரதத்தை நிறைவேற்றினார். உங்களுக்கு நான் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?" என்றான் முத்தையன்.
சாஸ்திரியின் கண்களில் அன்று மறுபடியும் ஒரு தடவை கண்ணீர் துளிர்த்தது.
"தம்பி! நீ அதிகம் பேசக்கூடாது. அபிராமிக்கு வேண்டுமானால் தந்தியடிக்கிறேன். அவள் வரும் வரையில் நீ உயிரோடிருந்தால் அதிர்ஷ்டந்தான்" என்றார்.
"சரி அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் கல்யாணியைப் பார்க்க வேண்டுமென்றுதான் சொன்னேன். ஐயோ! எனக்கு ஸ்மரணை இருக்கும்போது அவளை நான் பார்ப்பேனா?" என்றான் முத்தையன்.
"ஆகட்டும், அவளையும் தருவிக்கிறேன். நீ அமைதியாயிரு" என்று சொல்லிவிட்டுச் சாஸ்திரி வெளியே சென்றார். பாராக்காரன் கதவைப் பூட்டினான்.
முத்தையன் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். தலையைச் சுற்றுவது போலிருந்தது. மயக்கமாய் வந்தது. அந்த அரை மயக்கத்தில் அவன் காதில் பின் வரும் பேச்சு விழுந்தது.
"சங்கதி என்னவென்று தெரியாதோ! உனக்கு? பூங்குளத்திலே இவனுக்கு ஆசைநாயகி ஒருத்தி இருந்தாளாம். அவள் தான் இவனைக் காட்டிக் கொடுத்துட்டாளாம். சாஸ்திரியார் அதை மறைச்சு, தானே திருடனைக் கண்டு பிடுச்சுட்டது போல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அந்தப் பெண் மட்டும் துரோகம் பண்ணாவிட்டால், இவனையாவது, பிடிக்கிறதாவது?"
"உலகத்திலேயே பொம்பிளையால் கெடறவங்க தானே அதிகம்! தெரியாமலா பெரியவங்க 'இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே!' என்று பாடியிருக்காங்க?"
பாராச் சேவகர்கள் பேசிக்கொண்ட இந்த வார்த்தைகள் முத்தையன் காதில் விழுந்தபோது, அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்த கணம் அவன் மறுபடியும் பிரக்ஞை இழந்தான்.