கள்வனின் காதலி/பொழுது புலர்ந்தது
பொழுது புலர்ந்தது
முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு வேளை அவள் வருவதற்கு மறுத்து விடலாம் என்றும் நினைத்தார். அதோடு கூட, முத்தையன் இருக்குமிடத்தை கல்யாணி தெரிவித்ததற்குக் காரணமான மர்மம் ஏதோ இருக்க வேண்டுமென்பது அவருடைய மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. இவ்வளவு கண்டுபிடித்த பிறகு அதைக் கண்டுபிடிக்காமற் போனால் என்ன பிரயோஜனம்?
அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த விஷயங்களையும் வைத்துக் கொண்டு, கல்யாணிக்கும் முத்தையனுக்கும் இருந்து வந்த சம்பந்தத்தை ஒருவாறு அவர் ஊகித்து அறிந்து கொண்டார். அவர்கள் காதலர்கள் என்பதிலும் சென்ற சில தினங்களாகக் கல்யாணிதான் முத்தையனுக்கு உணவு அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டுமென்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அன்றைய தினம் அவளுடைய மனக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? முத்தையனுடைய 'உண்மைக் காதலி'யைப் பற்றி ஏதோ சொன்னாளே, அது என்ன? அப்படியெல்லாம் இருக்குமோ? முத்தையன் அத்தகைய மனிதனாய்த் தோன்றவில்லையே? அவனைப் போலீஸார் சூழ்ந்த போது அங்கே வேறு ஸ்திரீயும் இருக்க வில்லையே? என்ன காரணத்தினால் அவளுக்கு அப்படிப்பட்ட விபரீதமான சந்தேகம் இருக்கக்கூடும்?
கல்யாணியைப் பார்த்துப் பேசினால்தான் இந்த மர்மம் வெளியாவதற்கு வழி உண்டு என்று எண்ணிய சாஸ்திரி ராயவரத்திலிருந்து இரவு மூன்று மணிக்கே குதிரை ஏறிப் பூங்குளத்துக்குப் பிரயாணமானார். திருடனைப் பிடிக்கிற வரையில், குதிரையில் போனால் அவனுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்தது போலாகுமென்று அவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இப்போது அந்த பயமில்லையாதலாலும், இரவு நேரமாதலாலும் குதிரை ஏறிக் கிளம்பினார்.
அவர் பூங்குளம் மூங்கில் பாலத்துக்குக் கிட்டத்தட்ட வந்தபோது சுமார் நாலரை மணி இருக்கும். கிழக்குத் திசையில் அப்போது தான் சிறிது வெண்ணிறம் கண்டது.
நன்றாய் விடிந்த பிறகே ஊருக்குள் போகவேண்டுமென்று எண்ணிய சாஸ்திரி, குதிரையின் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். வாய்க்காலின் அந்தப்புறம் அவர் தற்செயலாகப் பார்த்தபோது, ஒரு பெண் உருவம் தலைமயிரை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. அந்த வேளையில் அத்தகைய காட்சியைக் கண்டபோது, மகா தைரியசாலியான சாஸ்திரி கூடச் சிறிது கலவரம் அடைந்தார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "யமனே! வா! சீக்கிரம் வந்து என்னைக் கொண்டுபோ!" என்ற குரலைக் கேட்டதும், அவருடைய பயங்கரம் அதிகமாகத்தான் ஆயிற்று. ஆனால் அடுத்த நிமிஷம் அந்த உருவம் தண்ணீரில் தலை குப்புற விழ அதனால் உண்டான 'குபுக்' என்ற சத்தத்தைக் கேட்டதும் சாஸ்திரியின் கலவரம் எல்லாம் பறந்து போயிற்று. உடனே குதிரையிலிருந்து குதித்து, மூங்கில் பாலத்தை இரண்டே எட்டில் தாண்டி, இக்கரைக்கு வந்து வாய்க்காலின் கரையோரமாய் ஓடினார். தண்ணீரில் மேலே மிதந்த தலைமயிரின் மூலமாய்க் கல்யாணி போகுமிடத்தைக் கண்டு பிடித்து, கரையிலிருந்தபடியே அவளைத் தூக்கிக் கரை சேர்த்தார்.
கீழ்த் திசையிலே தோன்றிய வெளிர் நிறம் சிறிது சிறிதாகப் பவுன் நிறத்துக்கு மாறிக் கடைசியில் பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறத்துக்கு வருகிறது. நட்சத்திரங்கள் நன்றாய் ஒளிமங்கி மறையத் தொடங்குகின்றன. ஆகாயத்தின் கருநிறம் நல்ல நீல நிறமாக மாறி வருகின்றது. நாலாபுறத்திலும் பட்சிகளின் கோலாகலமான சங்கீதக் கச்சேரி நடக்கின்றது. இத்தகைய நேரத்தில் தான் கல்யாணி கண் விழித்தாள். முதலில் அவள் கண்களுக்குத் தெரிந்தது சாஸ்திரியின் முகம். இதென்ன? இந்தப் பிராமணன் இங்கு எங்கே வந்தான்? தன்னுடைய உடம்பெல்லாம் ஜில்லென்றிருப்பதைக் கல்யாணி உணர்ந்தாள்; ஈரப் புடவை; ஈரத் தலை. ஓஹோ! தண்ணீரிலிருந்து தன்னை இந்தப் பிராமணன் கரையிலே இழுத்துப் போட்டிருக்கிறான். தான் அதிகாலையில் எழுந்து உயிரை விடுவதற்காக அங்கு வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அக்கரையில் குதிரை ஒன்று சேணம் போட்டு நிற்பதையும் பார்த்தாள். குதிரையின் மேல் இந்தப் பிராமணன் வந்ததைத்தான் யமன் வருவதாகத் தான் எண்ணியிருக்க வேண்டும்.
கல்யாணி எழுந்திருந்து உட்கார்ந்தாள். சாஸ்திரியைப் பார்த்து, "ஐயா! உங்களை என் உயிரைக் கொண்டு போக வந்த யமன் என்று நினைத்தேன். நீங்களோ என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்" என்றாள்.
அதைக் கேட்டதும் சாஸ்திரியின் முகத்தில் புன்னகை தோன்றியது. ஆனால், கல்யாணியின் அடுத்த வார்த்தையில் அந்தப் புன்னகை எரிந்து போயிற்று.
"...ஆனால் ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்? ஐயோ! நான் இறந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்?" என்றாள்.
"உனக்கு என்ன துக்கமோ, எதற்காக நீ சாக நினைத்தாயோ, எனக்குத் தெரியாது அம்மா! ஆனால் உன்னை அழைத்து வருவதாக முத்தையனிடம் வாக்கு அளித்து விட்டு வந்தேன். நான் வந்ததும் நீ ஆற்றில் விழுந்ததும் சரியாயிருந்தது."
"என்ன? முத்தையனா? முத்தையன் என்னை அழைத்து வரச்சொன்னானா? நிஜந்தானா? நிஜமாக முத்தையன் என்னை அழைத்து வரச் சொன்னானா?" என்றாள் கல்யாணி.
"திருச்சிற்றம்பலம் பிள்ளை மகள் கல்யாணி என்பது நீ தானே?"
"நான் தான் அந்தப் பாவி."
"முத்தையன் உன்னைத்தான் பார்க்கவேண்டுமென்று சொன்னான். வந்தால் அழைத்துப் போகிறேன்."
"வந்தாலா! முத்தையன் அழைத்து நான் வராமலும் இருப்பேனா? இதோ இப்படியே வருகிறேன். அழைத்துப் போங்கள்."
"அது சரியல்ல, அம்மா! நீ வீட்டுக்குப் போய்ப் புடவை மாற்றிக் கொள். வாய்க்காலில் குளித்துவிட்டு வந்ததாக வீட்டில் சொல்லு. நான் பிறகு வந்து, முத்தையன் கேஸில் சாட்சிக்காக நீ வரவேணுமென்று சொல்கிறேன். அப்புறம் நீ வரலாம்."
"ஐயா! சத்தியமாய்ச் சொல்லுங்கள்; நீங்கள் யார்?" என்றாள் கல்யாணி.
"கோபித்துக் கொள்ளாதே, கல்யாணி! நான் போலீஸ் இன்ஸ்பெக்டர். நேற்று உன்னை ஏமாற்றித்தான் விட்டேன். அதற்குப் பரிகாரம் தேட இப்போது வந்திருக்கிறேன். என்னை நம்பி வா!" என்றார் சாஸ்திரி.
கல்யாணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்ன நடந்தாலும் சரி, அவருடன் போவது என்று உறுதி கொண்டாள்.