கள்வனின் காதலி/போலீஸ் ஸ்டேஷன்

விக்கிமூலம் இலிருந்து

போலீஸ் ஸ்டேஷன்

தெரு வாசற்படியில் தள்ளப் பெற்ற கார்வார் பிள்ளை மெதுவாகத் தள்ளாடிக்கொண்டு எழுந்திருந்தார். மேல் வேஷ்டியை எடுத்துத் தூசியைத் தட்டிப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையென்பதைக் கவனித்துக் கொண்டு, அவசரமாய்க் கிளம்பி நடந்தார்.

கார்வார் பிள்ளையின் வாழ்க்கையில் இம்மாதிரி சம்பவங்கள் சாதாரணமானவை. பல தடவைகளில் அவர் ஏழை எளியவர்களின் வீடுகளிலே இதைவிட அதிகமான தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். அதையெல்லாம் அவர் லட்சியம் செய்வது கிடையாது. இது விஷயத்தில் அவர் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்க்கை நடத்தினார் என்றே சொல்லலாம்.

ஆனாலும் இன்று நடந்த சம்பவத்தை அவர் அவ்வாறு உதறித் தள்ளிவிட முடியவில்லை. இந்த முத்தையன், மடத்தில் தம் கீழே வேலையில் இருப்பவன். இனி மேல் அவனிடம் எப்படி வேலை வாங்க முடியும்? அவனிடம் தலை நிமிர்ந்து, பேசுவதுதான் எவ்விதம் சாத்தியம்?

எப்படியோ சமாளித்துக் கொள்கிறோமென்றாலும் அந்தப் பையன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பானா? சந்நிதானத்திடம் போய் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்தால் என்ன செய்கிறது? ஏற்கெனவே, தம் பேரில் புகார்களுக்குக் குறைவில்லை.

வீதியில் போய்க் கொண்டிருக்கும்போதே கார்வார் பிள்ளை இதையெல்லாம் பற்றிச் சாங்கோபாங்கமாக ஆலோசனை செய்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அதன் பலனாக, அவர் நேரே மடத்தின் காரியாலயத்துக்குப் போகாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்.




போலீஸ் ஸ்டேஷனில், ஸப் இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி அப்போதுதான் 'டிரஸ்' பண்ணிக் கொண்டு வெளியே வந்தவர், கார்வார் பிள்ளையைப் பார்த்ததும், "வாரும், சங்குப் பிள்ளை! நீர் வருகிறீர் என்று கால்மணி நேரத்துக்கு முன்பே எனக்குத் தெரிந்து போச்சு. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதை 'சங்குப்பிள்ளை வருவார் பின்னே, சவ்வாது வாசனை வரும் முன்னே' என்று மாற்றிவிட வேண்டியது தான்'. ஆனால் என்ன ஒரு மாதிரியாயிருக்கிறீர்? நெற்றியிலே என்ன அவ்வளவு பெரிய வீக்கம்? விஷயம் என்ன?" என்று கேட்டார்.

"ஸார்! அசந்தர்ப்பமாய் ஒரு காரியம் நடந்து போச்சு. நீங்கள் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், அப்புறம் இந்த ஊரிலே யாரும் இருக்க யோக்யதையில்லை. மடத்தை மூடிக் கொண்டு நாங்கள் எல்லாம் கிளம்பி விட வேண்டியதுதான்" என்றார் கார்வார் பிள்ளை.

"சங்குப் பிள்ளை! அப்படி ஏதாவது நடந்து விட்டால், இந்த ஊர் செய்த பாக்கியந்தான். ஆனால் அது நடக்காது என்று எனக்குத் தெரியும். என்ன சமாச்சாரம், சீக்கிரம் சொல்லும். கலெக்டர் துறை வருகிறாராம் சேந்தனூருக்கு, நான் போக வேண்டும், அவசரம்!" என்றார்.

"நல்ல வேளையாகப் போச்சு, நான் உடனே கிளம்பி வந்தது. பாருங்கள்; மடத்திலே ஒரு தறிதலைப் பயல் - யாரோ சிபார்சு பண்ணினார்களென்று - வேலைக்கு வைத்தோம். முத்தையன் என்று பெயர். அந்தப் பையன் நாளடைவிலே மடத்துப் பணத்தைக் கையாடி வந்தான் என்று தெரிந்தது. இன்றைக்கு மத்தியானம் பெட்டியில் ஐம்பது ரூபாய் பணம் குறைந்தது. பையனை விசாரிக்கலாமென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உடனே புறப்பட்டு அவன் குடியிருக்கிற வீட்டுக்குப் போனேன். அங்கே பாருங்கள், இந்தத் தடிப்பயல், அவன் தங்கச்சி கிட்ட ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டு வந்து போலீஸில் ஒப்புவிப்பதற்காக அவனைப் பிடித்தேன். அந்தத் தடிப்பயல் என்னைப் பிடித்துத் தள்ளிச் சுவரிலே வச்சு மோதிவிட்டான், ஸார்ன்னா! கொஞ்சம் நான் உஷாராயில்லாமற் போனால், மென்னியைப் பிடித்துக் கொன்றிருந்தாலும் கொன்றிருப்பான். நீங்கள் உடனே அவனை அரெஸ்ட் பண்ணியாக வேணும்." அப்போது ஸப்-இன்ஸ்பெக்டர், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம், ஐயா! நீர் சொல்கிறதற்கெல்லாம் சாட்சி உண்டா சொல்லும்" என்றார்.

"பேஷாய் உண்டு. உங்களுக்கு யார் எப்படி சாட்சி சொல்ல வேணுமோ, அப்படிச் சொல்லச் செய்கிறேன்."

"பொய்ச் சாட்சி தயார் பண்ணுகிறீரா?"

"சிவ சிவா! ஆண்டவனே; பொய்சாட்சியா? கண்ணாலே பார்த்தவாளைக் கொண்டு சாட்சி சொல்லச் சொல்கிறேன்; அப்புறம் என்ன உங்களுக்கு?"

ஸப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு, "நாயுடு இந்தச் சங்குப் பிள்ளையிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அவர் சொல்கிற பையனை அரஸ்டு செய்து கொண்டு 'லாக்-அப்'பில் வையும். நான் வந்து மற்ற விஷயம் விசாரித்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.

முத்தையன் வீதியோடு மடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் ஒரு புறம் கொதிப்பும், மற்றொரு புறம் வருங்காலத்தைப் பற்றிய ஏக்கமும் குடிகொண்டிருந்தன. "பண்டார சந்நிதியை உடனே பார்க்க முடியுமா, பார்த்தாலும் தான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை உண்டாகுமா, நியாயம் பிறக்குமா" என்று பலவித எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது எதிரே கொஞ்ச தூரத்தில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் வருவதை அவன் பார்த்தான். உடனே பண்டார சந்நிதியிடம் போய்ச் சொல்வதைக் காட்டிலும் ஏன் போலீஸில் போய்ச் சொல்லக்கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. அப்படி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே அந்த போலீஸ்காரர்கள் அவனண்டை வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன் "தம்பி! நீ தானே முத்தையன் என்கிறது?" என்றான். முத்தையன் "ஆமாம்" என்றதும், "இன்ஸ்பெக்டர் ஐயா உடனே அழைச்சுண்டு வரச்சொன்னாரு, ஒரு சமாசாரம் கேட்க வேணுமாம்" என்றான் போலீஸ்காரன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து விட்டது என்று எண்ணினான் முத்தையன். கார்வார் பிள்ளை அபிராமியை உபத்திரவப்படுத்துவதைத் தான் வருவதற்கு முன்னாலேயே வேறு யாராவது பார்த்துவிட்டுப் போலீஸில் போய்ச் சொல்லியிருப்பார்களோ என்று எண்ணினான். கான்ஸ்டபிளைக் கேட்டதற்கு, அவர்கள் தங்களுக்குத் தகவல் ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், ஹெட் கான்ஸ்டபிள் நாயுடு அவனை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு அவர் உட்கார்ந்திருந்த கூடத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறையைத் திறந்து, "தம்பி! இந்த ரூமுக்குள் போ!" என்றார். முத்தையன் அந்த அறையில் தன்னிடம் இரகசியமாக ஏதோ கேட்கப் போகிறார் என்று நினைத்தவனாய், உள்ளே போனான். உடனே அந்த ஹெட்கான்ஸ்டபிள் வெளிக் கதவைச் சாத்திப் பூட்டியதைப் பார்த்ததும், முத்தையனுக்குச் 'சொரேர்' என்றது.

"என்ன ஸார், இது! ஏன் என்னை வைத்துப் பூட்டுகிறீர்கள்?" என்று பரபரப்புடன் கேட்டான்.

"ஏனா? களவாணிப் பயலே! மடத்துப் பணம் ஐம்பது ரூபாயை அமுக்கிவிட்டு, ஏன் என்றா கேட்கிறாய்? போதாதற்குக் கார்வார் பிள்ளை மேலும் கை வச்சுட்டயாமே? திருட்டுப் பயலே!" என்றார் ஹெட்கான்ஸ்டபிள்.

"ஐயோ! இது என்ன படுமோசம்!" என்று அலறினான் முத்தையன்.

ஹெட்கான்ஸ்டபிள் இதற்குள் வெளியே போய் விட்டார்.

முத்தையன் "ஸார்! ஸார்!" என்று கதறிக் கொண்டே கதவைப் பிடித்து உலுக்கினான்.

அப்போது, "இரும்புக் கதவு, சாமி! வெறுங் கையாலே ஒடிக்க முடியாது, சாமி!" என்ற குரலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். குரல் வந்த பக்கம் பார்த்தான். அதே அறையின் மூலையில், கந்தல் துணியுடன் செம்பட்டை படர்ந்த மீசை தாடியுடனும், குறவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.