உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/துறவுறல்

விக்கிமூலம் இலிருந்து

துறவுறல்


தனிமை தான்தவமாம்-தவிர்க்காத்
தன்மை சிலவமைந்தால்
இனிமை யிதிலுண்டாம்! - இருமைக்
கின்ப மிதிலு ண்டாம்!

ஒப்பு யர்வெல்லா - முள்ள
ஒழுக்க மிதுவொன்று,
அப்ப முக்கில்லா - துள்ள
அன்னை யனையதுவாம்!

ஈன மென்பவெலா - மில்லா
தேற்றம் தருகின்ற
ஞான மிதுவொன்று. - நமக்கு
நல்ல தந்தையுமாம்!

கடனெ னக்கொண்டு - காட்டும்
கருணை யிதுவொன்று,
உடன்பி றப்பெனவே - உலகில்
உதவ வுறுந்து ணையாம்!

நீதி நெறிநீங்கா - நெஞ்சம்
நிறைந்த சொல்லொன்று,
காதல் மனைவியெனக் - கடுகிக்
கைகொ டுத்திடுமாம்!

சின்னஞ் சிறுமதியால் - சேர்ந்தார்
செய்யும் சிறுமைகளை
மன்னிப் பதுவொன்று - மறுக்கா
மகனெ னத்தகுமாம்!

தனிமைத் தவம்புரியத்-தலையாம்
தன்மை களைத் தாங்கி
மனம்பொ ருந்திநணி - மதிக்கும்
மனித னாவதுவே!