உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/நான் ஒரு குருவியானால்

விக்கிமூலம் இலிருந்து

நான் ஒரு குருவியானால்...!

இரவ லாயேனும் - ஒருசிறு
இமைப்பி னளவேனும்
குருவி யாய்வாழ்ந்தால் - அதுவொரு
கோடி சுகமாகும்!

மெய்மறந்துதினம் - இதய
மின்ன லாமொளியை
வைக றைதனிலே - இசையாய்
வடித்து வழங்கிடலாம்!

துள்ளுங் கன்றெனவே - மண்ணில்
துகளெ முப்பி வரும்
பள்ளிப் பிள்ளைகளுக்- கினிய
பழமுதிர்த்திடலாம்!

காத, லர்வருகை - காணாக்
கற்புக் கன்னியர்க்காய்த்
துாது சென்றிடலாம் - பிரிவு
துயரம் தீர்த்திடலாம்:

பச்சை இளந்தளிர்கள் - பரிவாய்ப்
பயந்த மலரருகில்
உச்சி வேளைதனில் - குந்தி
உவகை யெய்திடலாம்!

குளிர்வ னங்களிலே - கோலக்
கொடிகள் கூட்டினிலே,
தளிர்ப்படுக்கையிலே-இரவில்
தனித்து றங்கிடலாம்!

புவியில் மானிடனாய்ப் - பிறந்து
போது மென லாச்சு!
கவலை கண்டறியாக்-குருவி
கணமும் வாழ்க்கையிலே!