கவியகம், வெள்ளியங்காட்டான்/வாடகை வீடு

விக்கிமூலம் இலிருந்து





இரண்டாவது


அறிவுறல்
வாடகை வீடு

வீடொன்று வேண்டி இருந்தது - அதுவும்
வீதிப் புறத்தில் விசாலமாய்!
வாடகை ஒன்றரை கூடினும் - சற்று
வசதி யுடனுள்ளதாகவே.
தேடிப் பிடிக்கத் தொடங்கினேன் - தினம்
தெருத்தவறாமல் திரிந்து நான்;
வீடென் றிருக்கும் இடமெலாம் - சென்று
விவரம் முழுதும் வினாவியே!

காற்றுப் புகாத குடிசைக்குள் - சதா
காரிருள் தங்கிடும் பொந்துகள்;
சேற்றக் குழிசல தாரைகள் - சூழச்
சிதலை அரித்திடும் கூரைகள்;
கூற்றுவன் கூடக் குடிபுகும் - புறா
கோழிகட் குத்தக்க கூடுகள்;
நூற்றுக் கணக்கில் இருந்தன - கெட்டு
நொந்து வசிப்பவர்க் காகவே!

தற்பொழு துள்ள இவ் வீடுதான் - வெயில்
தன்னைத் தடுக்க அமைந்தது:
சொற்ப மழைபெய்த போதிலும் - உள்ளே
சொட்டி வடியத் தொடங்குது
கற்புக் கரசிதா ராஅவள் - வந்து
காலடி வைத்த மறுகணம்,
வற்புறுத் திச்செப்பிச் சென்றனள்-'இதில்
வாழ்வு தொடங்கத்தகாதென.

பூவினைப் போன்றெழில் மேனியாள்-என்றன்
புலன்கட் கணிகல மானவள்;
காவியம் போலும் இனியவள் - என்னருங்
கண்ணெனத் தக்க துணைவியை,
கேவல மான இடங்களில் - வைத்துக்
கேடு விளைக்கத் துணிந்திலேன்;
ஆவி கலங்க வருந்தினேன் - செய்ய
யாதென நொந்துளங் குன்றியே!

'வேதனை எல்லையை மீறுது-உம்மை
விட்டுப் பிரிந்திங் கிருப்பதால்;
காதல! வீடு கிடைத்ததா? - அன்றிக்
கட்டி முடிந்ததா? கூறுங்கள்.
சோதனை மேலும்செய் வீரெனில் - உள்ளம்
சுக்குநூறாகும் உடைந்'தென,
மாதம் இருமுறை காகிதம்- அவள்
மலர்க்கரம் நோக வரைகிறாள்.

நண்பன் ஒருவன் நவின்றனன்- 'மிகவும்
நல்லதோர் வீடுளதங்'கென
எண்பது ரூபாய்தான் வாடகை - ஈந்தால்
இன்றே ஒழித்துத் தருவராம்!
பண்புடன் முப்பது நாட்களும் - சென்று
பாடுபட்டால்முதல் தேதியில்
உண்ப துடுப்பதற்கேற்பவே வரும்
ஊதிய மேஓரு நூறுதான்!

வாடகை எண்பதும் போனபின் - என்றன்
வாழ்க்கைச் சகடமும் ஒடுமோ?
தேடரும் மாமணி அன்னவென்-உயிர்த்
தேவியொ டிந்தப் பிறவியில்
கூடி மகிழ்ந்திடக் கூடுமோ! - எனினும்
குறித்துப் பதிலும் அனுப்பினேன்!
'வீடு விரைவில் கிடைத்திடும் - கண்ணே
வேதனை விட்டிரு நீ யென்றே!