கவியகம், வெள்ளியங்காட்டான்/வைகறை
Appearance
அழகிய வைகறையே - என்னை
அகமகிழ் விக்கிறது!
பழகிய இடமெங்கும் - புதுமை
பார்த்திட வைக்கிறது!
குவளை எழில்மலரில் - கூடிக்
குவிந்துள திருவெனவே
பவள ஒளிப்பரிதி - பருவப்
பல்கதிர் விரிக்கிறது!
விசும்பிடை விளக்குகளாம் - உடுக்கும்
விடிகையில் வெருண்டனவாய்ப்
பசும்புல்லில் பதுங்குவபோல் - பற்பல
பனித்துளி படிகிறது!
பற்பல மலர்களிலே - மதுவைப்
பருகிய மதுகரங்கள்
அற்புதப் பண்ணிசைத்துச் - செவியில்
அமுதென வார்க்கிறது!
கொத்தி உனைக்கொல்ல - மீனே
கொக்குகள் வருகிறதென்
றத்தி மாத்தணிலும் - அபாய
அறிக்கை கொடுக்கிறது!
நீண்டகொம் பினிற்குரங்கு - இனிது
நீங்கிய திரவெனவே
பூண்டபே ரன்புடனே - மந்தியின்
புறத்தை அணைக்கிறது!
உய்வகை தனையுணர்ந்து - வாழும்
உயிர்களின் உவகையிலே
தெய்வீக அன்புணர்ச்சி - எழும்பித்
தேங்கிடச் செய்கிறதே!