உள்ளடக்கத்துக்குச் செல்

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/நோபல் பரிசு பெற்ற ‘கீதாஞ்சலி’ கூறும் வாழ்வியல்

விக்கிமூலம் இலிருந்து

11. நோபல் பரிசு பெற்ற
‘கீதாஞ்சலி’ கூறும் வாழ்வியல்

‘கீதாஞ்சலி’யில் கவிஞர் வாழ்வு

எங்கே மனம் அச்சமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்ந்திருக்கிறதோ
எங்கே அறிவு உரிமையுடனிருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய குடும்ப எல்லைகளால்
துண்டு துண்டாகப் பிளவு படாதிருக்கிறதோ
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து
சொற்கள் பிறக்கின்றனவோ
எங்கே சலியாத உழைப்பு
விழுமிய நிலையை நோக்கி நீளுகிறதோ
எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த ஓடை
மூடப் பழக்க வழக்கம் என்னும்
வறண்ட பாலையில் போகாதிருக்கிறதோ
எங்கே என்றும் விரிந்து நோக்கும்
எண்ணத்திலும் செயலிலும்
மனத்தை நீ முன்னின்று அழைத்துச் செல்கிறாயோ
அங்கே, அந்த உரிமையுள்ள இன்ப உலகத்தில்,
என் தந்தையே, என் நாடு விழிப்புறுக.

(கீதாங்சலி-35ம் பாடல்)

மரணத்திற்கு விருந்து

மரணம் உன் வாழ்வின் கதவைத் தட்டும் அந்த நாளில் நீ அதற்கு என்ன நல்குவாய்?

ஆ! என் விருந்தாளியாக வந்த மரணத்திற்கு முன் என் வாழ்வு என்னும் நிறை குடத்தையே வைத்திடுவேன்; வந்த விருந்தாளி வெறுங்கையுடன் திரும்பிப் போக விட மாட்டேன்.

மரணம் என் வாழ்வின் கதவைத் தட்டும் இறுதி நாளில் மரணத்தின் முன்னிலையில் மழைக்காலப் பகல்களுக்கும், வேனில்கால இரவுகளுக்கும் உரிய இனிய தேனையெல்லாம் வைத்திடுவேன்; என் வாழ்வில் முயன்று தேடிய பயனை எல்லாம் வைத்திடுவேன்.

(கீதாஞ்சலி பாடல்-90)

ஓ! மரணமே! என் மரணமே! வாழ்வின் இறுதிப் பேறே! வருக வந்து என் செவியருகே மெல்லச் சொல்லுக

உன்னை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் நான் காத்து வந்தேன்; ஏன் எனில், உன் பொருட்டாகவே நான் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பொறுத்து வந்தேன்.

யானாக இருப்பவை, என்னிடம் இருப்பவை, என் நம்பிக்கை, என் அன்பு எல்லாம் யாரும் அறியாமல் உன்னை நோக்கி என்றும் சென்று கொண்டிருக்கின்றன; உன் கண்களின் இறுதிப் பார்வை ஒன்று போதும்; என் வாழ்வு என்றும் உன்னுடையதாகி விடும்.

(கீதாஞ்சலி பாடல் 91)

நான் விடை பெற்றுக் கொண்டேன். என் சகோதரர்களே விடைகொடுங்கள். எல்லோர்க்கும் வணக்கம் செலுத்தி விடைபெற்றுப் புறப்படுகிறேன்.

இதோ என் இல்லத்தின் சாவிகளை எல்லாம் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் வீடு பற்றிய உரிமைகளை எல்லாம் விட்டு விடுகின்றேன்; உங்களிடமிருந்து இறுதியான அன்பு மொழிகளே வேண்டுமென்று கேட்கின்றேன்.

நாம் நெடுங்காலம் அடுத்து வாழ்வோராக இருந்தோம். ஆனால், நான் கொடுக்கக்கூடியதை விட மிகுதியாகப் பெற்றுக் கொண்டேன். இப்போதோ பொழுது விடிந்து விட்டது. என் இருண்ட வீட்டை ஒளி பெறச் செய்திருந்த விளக்கோ அணைந்துவிட்டது. புறப்பட ஆணை பிறந்து விட்டது. யானும் பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றேன்.

(கீதாஞ்சலி பாடல் 93)

இந்த வாழ்வின் வாயிலுக்குள் நான் சேர்ந்தது எப்போது என்பது எனக்குத் தெரியவில்லை.

நள்ளிரவில் காட்டில் மலரும் அரும்புபோல் இந்த வியப்பான சூழலில் நான் தோன்றுமாறு செய்த சக்தி எதுவோ?

காலையில் ஒளியைக் கண்டபோது, நான் இந்த உலகத்திற்கு அயலான் அல்லன் என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்தேன். பெயரும் வடிவும் அற்ற அந்தப் பரம் பொருள் என் தாய் வடிவாக இருந்து, என்னைத் தன் கையில் அனைத்துக் கொண்டது.

அதுபோலவே, மரணத்திலும், நான் என்றும் அறிந்த ஒன்றாகவே, உணர முடியாத அந்தப் பரம் பொருள் என் முன் தோன்றும். இந்த வாழ்க்கை யான் விரும்புகிறேன். ஆகையால், மரணத்தையும் அவ்வாறே விரும்புவதாக உணர்கின்றேன்.

தாய் தன் குழந்தையை வலது மார்பிலிருந்து எடுத்திடும் போது அது அழுகின்றது. ஆனால் அடுத்த நொடியிலேயே இடது மார்பில் அமைந்து ஆறுதல் பெறுகின்றது.

(கீதாஞ்சலிபாடல் 95)