காகித உறவு/அசைக்க முடியாது

விக்கிமூலம் இலிருந்து

அசைக்க முடியாது

பாங்க் மானேஜர் நீட்டிய கவரை, பெருமாள்சாமி ஆவலோடு பிரித்தார். அங்கே பணத்திற்குப் பதிலாக டைப் அடித்த காகிதம் இருந்தது.

“பணம் இல்லீங்களா?”

மானேஜர் அவரை மெளனமாகப் பார்த்தார். பிறகு, “உமக்கு எதுக்குக் கடன்?” என்றார்.

பெருமாள்சாமி சளைக்கவில்லை. “விவசாயத்தை விருத்திசெய்து, உணவு உற்பத்தியைப் பெருக்கி, நாட்டுக்குச் சேவை செய்யணுங்கற நல்லெண்ணம் தான் காரணம்.”

“அப்படின்னா சரி... இந்தப் பத்திரத்தைத் தயாராய் வைத்திரும். நாளைக்கு சப்-மானேஜரும், ஒரு வெட்னரி டாக்டரும் வருவாங்க... இதை அவங்ககிட்ட காட்டும்.”

“காட்டினதும் பணம் கொடுப்பார்களா?”

“கையில ரூபாயை கொடுத்தால், தரகர்கள் மோசடி பண்ணிடுவாங்க... அதனால். சப்-மானேஜரு சந்தைக்கு வந்து, மாடு வாங்கித் தருவாரு...”

“சப்-மானேஜருக்கு, மனுஷாள் விவகாரந்தான் தெரியும். மாட்டு விவகாரம் எப்படித் தெரியும்.”

“அதுக்காகத்தான் வெட்னரி டாக்டரையும் அனுப்பி வைக்கிறேன். அவர் அங்கீகாரம் பண்ணுவார்.”

“அப்படின்னா. கையிலே நோட்டைத் தள்ள மாட்டீங்களா?”

“உமக்கு. மாடுதானே தேவ?... வாங்கித்தாறோம்.”

“மேலத்தெரு சோணாச்சலம். அவரேதான் டிராக்டர் வாங்கினாரு...”

“டிராக்டர் கம்பெனிக்கு நாங்க தான் லெட்டர் கொடுத்திருந்தோம். பணம் கட்டினோம்.”

“அப்படிங்களா... போகட்டும் போகட்டும்... அவரு விவசாயத்துக்கு உபயோகிக்கறதா, சலுகையில் டிராக்டரை வாங்கி, லோடு அடிச்சாரே. அதுக்கு என்ன பண்ணுனிங்க?” “அது எங்க பாங்க் வேலையில்லை”

“போகட்டும்... விவசாயத்துக்குன்னு சொல்லி, குறைஞ்ச விலையில் வாங்கின டிராக்டரை... ஆந்திராக்காரர்களுக்கு மூவாயிரம் லாபத்துல வித்துட்டாரு.. லாப பணத்தை வட்டிக்கு விட்டு அதையே உங்களுக்குக் கட்டுறாரு... இதை விசாரிச்சிங்களா?”

“அவரு வித்தாரோ விக்கலியோ... எனக்குத் தெரியாது. மாசா மாசம் பணம் வந்துடுது.. அதுபோதும் எங்களுக்கு.”

“அதத்தான் நானும் சொல்கிறேன். பணத்தை என் கிட்ட கொடுத்திடுங்க. நான் மாசாமாசம் திருப்பிக் கட்டுகிறேன். கட்டாட்டா, ஏன்னு கேளுங்க...”

மானேஜர் பொறுமை இழந்தார். ஒரு கடனளிப்பு விழாவில் ஒழுங்காய் மனப்பாடம் செய்து பேசியதை, இப்போது ஒப்பித்தார்

பெரியவரே... நான் சொல்றதக் கேளும். அப்பாவி விவசாயிகள், அல்லும் பகலும் பாடுபட்டாலும்... உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், இருக்க இடமில்லாமல், தவிக்கிறார்கள். ஏன் அப்படி? அவர்களிடம் நல்ல மாடுகள் இல்லை. தரமான விதைகள் இல்லை. லேவாதேவிகாரரிடம் கடன் வாங்கி, மாடு வாங்குகிறார்கள். சந்தையில் மாட்டுத் தரகர்கள் கள்ளங்கபடமில்லாத இவர்களை ஏமாற்றி, மலையாளச் சந்தையில் கசாப்புக்கு போகும் மாடுகளை விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் வழியிலேயே படுத்து விடுகின்றன. பிறகு கொஞ்ச நாளில் உழைப்பின் சுமையைத் தாங்க முடியாமல் மரித்து விடுகின்றன. மாடு இறந்த கவலையில், அப்பாவி விவசாயி, தவியாய்த் தவித்து, புலம்பி அல்லலுற்று, துயரில் மூழ்கியிருக்கும் போது, வட்டிக்கு கடன் கொடுத்த "வன் நெஞ்சாளர்" வாட்டுகிறார். இருக்கிற நிலத்தையும் ஈட்டிக்காரனிலும் கொடுமையான உள்ளுர் லேவாதேவிக்காரருக்குக் கொடுத்து விட்டு, ஏழை உழவு மகன் இதயம் வேகக் கலங்குகிறான். ஏன் இந்த நிலைமை? அறியாமை, அதிக வட்டி இந்த இன்னல்களை அகற்றுவதற்காகத்தான் எமது பாங்க் முன் வந்துள்ளது. லேவாதேவிக்காரரிடம் போகாமல் இருக்க எங்கள் பணம்; தரகர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்க வெட்னரி டாக்டர்; மாடு இறந்தாலும், உழவர் நஷ்டப்படாமல் இருக்க இன்சூரன்ஸ் கவர். இத்தகைய அரிய திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?”

பெருமாள் சாமி பணிந்து பேசினார். “இப்போ புரிஞ்சுக்கிட்டேன். இதுவரைக்கும் ஏடாகூடமா பேசினதை, ஐயா மன்னிச்சுடுங்க... நாளைக்குப் போய் மாடு வாங்கிக்கிறேன்.”

மறுநாள், பெருமாள் சாமியும், வெட்னரி டாக்டரும், சப்-மானேஜரும் மாடுபிடிக்கப் போனார்கள். முதலாவது பார்த்த ஜோடி காங்கேய மாடுகள். இரண்டாயிரத்து ஐந்நூறு; வாங்கவில்லை.

இரண்டாவது பார்த்த ஜோடி ஹெல்தி புல்ஸ் என்று வெட்னரியார் கூற, சப்-மானேஜர் வாங்கிவிடலாம் என்றார். பெருமாள்சாமியும், நல்ல மாடுங்கதான் என்று சொல்லி விட்டு, மாடுகளை உற்றுப் பார்த்தார். பிறகு முகத்தைச் சுழித்தார். அவரைப் பார்த்து, ஏன் சுழிக்கிறீங்க என்றார் சப்-மானேஜர்.

“மாடுங்க நல்லாத்தான் இருக்கு. ஆனால். இந்த மாட்டோட பிட்டத்தைப் பாருங்க. ரெட்டைச் சுழி...” என்றார் பெருமாள்சாமி.

“ரெட்டைச் சுழின்னா என்ன?” என்றார் வெட்னரி,

“இதுக்குத்தான், பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாதுங்கறது. இதோ இந்த ரெட்டைச் சுழி மாட்ட வாங்குறதைவிட, ஒரு எரும மாட்டையும், அதோட எண்னையும் சேர்த்து வாங்கலாம். போன வருவடிம். என் மச்சினன் மவன் ரெட்டைச் சுழியை வாங்குனான். வாங்குன ரெண்டு மாசத்துல. சாவு...”

“மாடு செத்துடுச்சா?”

“இல்ல. மச்சினன் மவன் செத்துட்டான்.”

அந்த ஒன்றரை ஜோடிகளும் வேறு ஜோடிகளைப் பார்த்து விட்டு, இன்னொரு ஜோடி மாடுகளிடம் வந்தனர். விலை ரூபாய் 1800; வாங்கிவிடலாம்.

இதை வாங்கிடலாம் என்று சொல்லிக் கொண்டே பெருமாள்சாமி மாட்டை நெருங்கினார். பிறகு, “ஐயையோ.. இதுங்க... மயிலக்காளைங்க... மயிலயை வாங்கறதைவிட, மரணத்தை வாங்கலாமுன்னு எங்க தாத்தா சொல்லிட்டுச் செத்தாரு...”

“நிறத்துல என்னய்யா இருக்கு!” “என்ன அப்படிச் சொல்லிட்டிங்க... மாடு யாரு? லட்சுமி. பார்த்துத்தான் வாங்கணும். போன மாசம், எங்க பெரிய மயினி மவன்... மயிலக்காளைய வாங்கி... பார வண்டியை ஒட்டினான். லாரியில் அடிபட்டு. துள்ளத் துடிக்கப் போயிட்டான்.”

வேறு வழியில்லாமல், வேறு ஜோடிகளைப் பார்த்தார்கள். ஒரு வழியாக, ஒரு ஜோடி மாடுகளை நிச்சயித்தார்கள். விலையும் சகாயம். வாங்கிட வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டே பெருமாள்சாமி மாட்டுக்காரரிடம் “இதுல, எது இடத்தை. எது வலத்தை” என்றார்.

“ரெண்டுமே வலத்தைதான்” என்றார் மாட்டுக்காரர். அவர் மாட்டின் சொந்தக்காரர் அல்ல. அவரிடம் மாட்டிக் கொண்ட வேலைக்காரர்.

“அய்யய்ய... ஏய்யா... ரெண்டு வலத்தையும் மாட்டி ஜோடி சேர்க்கலாமா?” என்றார் பெருமாள்சாமி.

“வலத்தை இடத்தைன்னா என்ன?” என்றார் வெட்னரி.

“இதுகூடத் தெரியாதுங்களா? மாடுங்கள வண்டியிலேயாவது உழவிலேயாவது பூட்டும்போது ஸ்டிராங்கா இருக்கிற மாட்டை... இடது பக்கமா பூட்டணும். இல்லன்னா. முக்கு முடங்கலே திரும்ப முடியாது.”

“அதாவது கிரெடிட் சைட் இடது பக்கமும், டெபிட் சைட் வலது பக்கமும் எழுதுற மாதிரி” என்றார் சப்-மானேஜர், வெட்னரியைப் பார்த்து.

வேறு வழியின்றி, அந்த மூவரும் வேறு ஜோடிகளைப் பார்ப்பதற்காக நடந்தார்கள். கத்தரி வெயில் வேர்வை ஆறாக ஒடியது. கடைசியாக ஒரு ஜோடியைப் பார்த்துட்டு “இதை நீர் வாங்கித்தான் ஆகணும்” என்றார் வெட்னரியார்.

“இந்த ஜோடில... இந்த செவலக் காளை கருமயிலயை விட ரெண்டு விரக்கட குள்ளம்... ஜோடி மாட்ல.... ஏதாவது ஒண்ணு ஒரு விரக்கடதான் குள்ளமா இருக்கலாம்... ரெண்டு விரக்கட... கூடவே கூடாது.”

அந்த இருவராலும், பெருமாள்சாமியை விட முடியவில்லை. பல்வேறு மாடுகளைப் பார்த்துக் கொண்டே நடந்தார்கள். சில மாடுகளோ அவர்களைப் பார்த்து வைக்கோலைத் தின்னாமல் ஆச்சரியமாகப் பார்த்தன. வேறு சில மாடுகள், கிண்டல் செய்வது போல் கனைத்தன. வெட்னரியும், சப்-மானேஜரும், அலுத்துக் களைத்துக் கீழே விழப்போனபோது, “இந்த மாடுங்களை வாங்கலாம். வாய்ப்பான மாடுக” என்றார் பெருமாள்சாமி உருப்படாத ஒரு ஜோடியைச் சுட்டிக்காட்டி.

“இதுலேயும் ரெட்டச்சுழி இருக்கேய்யா?” என்றார் சப்-மானேஜர். வெட்னரி, அவர் வாயைக் கையை வைத்து அடைக்க முடியாததால், கையைக் கிள்ளினார். “எப்படியாவது வாங்கித் தொலைக்கட்டுமே! உமக்கென்னவே?”

பெருமாள் சாமி சமாதானம் கூறினார்.

“ரெட்டச்சுழி இருந்தாலும் முகத்துல மச்சம் இருக்கத பாத்தியளா? மச்சத்துல சுழி அடக்கம்.”

இறுதியில், பெருமாள்சாமி காட்டிய மாடுகள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டன. நிம்மதி, மகத்தான நிம்மதி.

பெருமாள் சாமி தனது மாடுகளையே சந்தைக்கு இன்னொருவர் மூலம் அனுப்பி வாங்கிக் கொண்டார் என்பது வெட்னரி டாக்டருக்கும், சப்-மானேஜருக்கும் தெரியாது.

பாங்க் மானேஜர் மட்டும் சப்-மானேஜரிடம் பீற்றிக் கொண்டிருந்தார் : “பார்த்தியா... அந்தப் பெருமாள்சாமி என்னை எப்படியெல்லாம் மடக்கப் பார்த்தான்? முடிஞ்சுதா? கடைசில... மனுஷன் நாம் சொன்னதைக் கேட்டுட்டானே இதுக்குத்தாய்யா... டெக்னிக் வேணுங்கிறது. நாம் சொல்ற விதத்துல சொன்னால், அவங்க புரிஞ்சுக்குவாங்க... நல்ல ஜனங்க... சர்க்காரும் பாங்குகளும் வழங்குகிற சலுகைகளை அயோக்கியங்கதான் தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு நீரு சொல்றது தப்பு.”