காகித உறவு/இரத்தத் துளிகள் பயிராகின்றன

விக்கிமூலம் இலிருந்து


இரத்தத் துளிகள் பயிராகின்றன

ந்த 'வயக்காடு' முழுவதுமே, பொன் பச்சை நிறத்தில் மின்னியது. நிறத்தைக் காட்டி, தன் நிலையைக் காட்டும் நெற்பயிர்கள், பச்சை நிறத்திலிருந்து, பொன்னிறத்துக்கு மாறத்துடிக்கும் இறுதிநிலைக்கு இடைப்பட்ட இந்தப் பொன் பச்சை நிறத்தில், பச்சை மதலைகள்போல் நெற்கதிர்களும், இப்போது சுட்ட சட்டி நிறத்தில் சுடர்விட்டன. 'மூணு கோட்டை' பாசனம் கொண்ட அந்தக் கிணற்றின் சரல் குவியலில் இருந்து நிறம்மாறி, தன் நிலையைக் காட்டும் நெற்பயிரை, நிலத்தின் கேசங்கள் போல் தோன்றிய அந்த உணவுப் பயிர்களைப் பொதுப்படையாகவும், தன் மூணு மரக் கால்’ விதப்பாட்டை குறிப்பாகவும் பார்த்துக்கொண்டிருந்த வினைதீர்த்தான், சரலில் இருந்து இறங்கி, வரப்பு வழியாக, நடந்து தன் நிலத்துக்குப் போனான்.

நாலடி உயரங்கொண்ட நெற்பயிர்களுக்கு, ஐந்தே முக்கால் அடி காவல் தெய்வம் போல், மீசையில்லாமலே கம்பீரமாகவும், சிவப்பு நிறமில்லாமலே கவர்ச்சியாகவும் தார்மீக ஒளியுடனும், சட்டை போடாமலே, சட்டை கழட்டிய பாம்புபோல் மேனி மினுக்கும் வினைதீர்த்தான், வயலை மெய்மறந்து பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு பலமாக வீசிய காற்றில், நெற்பயிர்கள் தோகை விரித்தாடி, தங்கச் சரட்டில் தொடுக்கப் பட்ட முத்துக்கள் போலவும், 'மசக்கையான' பெண் போலவும், நெற்கதிர்கள் சாய்ந்து நிமிர்ந்தன. குலுங்காமல் அசைந்த நெற்பயிர் ஒன்றை கைகளால் வருடிவிட்டுக் கொண்டு, கரும்பச்சை புடவைக்கு, பச்சைக் கரைபோல் தோன்றிய அருகம்புல் மொய்த்த வரப்பில் உட்கார்ந்து, எதையோ யோசித்துக்கொண்டிருப்பவன் போலவும், எதையுமே யோசிக்காத யோகி போலவும், குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். பின்னாலிருந்து வெட்டுக்கிளிகள் தாவுவதை வைத்து யாரோ வருவதைச் சத்தம் தடையம் இல்லாமலே புரிந்து கொண்டு, திரும்பிப் பார்த்தான்.

அந்த பாசனத்தில், 'மூணு மரக்கால்' தவிர, அதாவது இவனுடைய இந்தச் சுண்டைக்காய் நிலத்தை தவிர்த்த பூசணிக்காய் பகுதிக்கு ஏகபோக உரிமையாளரான வீராசாமி, மோதிரக் கையை நீட்டிக் கொண்டே வந்தார். வயதைக் கருதியும், வசதியைக் கருதியும், வினைதீர்த்தான் எழுந்தான். "என்னடா... வெனதீர்த்தான். எத தீக்கரதுக்குடா... யோசனையில... இருக்குற..."

"ஒண்ணுமில்லை, மாமா! சும்மாத்தான்!”

“அகத்தின் அழகு... முகத்துல தெரியுன்னு சொல்றது தெரியாதாடா... ஒன்னப் பாத்தா... நீ இங்க இருக்கது மாதிரியும் தெரியல. இருக்க வேண்டியது மாதிரியும் தெரியல..."

"சும்மாத்தா..." "நானும். சும்மாத்தான் கேக்கேன். சும்மாச் சொல்லு"

வினைதீர்த்தான் சிறிது தயங்கினான். சிறிது நாணினான். பிறகு அவரைப் பார்க்காமலே நெற்பயிர்களைப் பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கியும், பிறகு தானாகப் பேசாமல் வேறு யாரோ பேசுவது போலவும் பேசினான்.

"ஒண்ணுமில்லே. ஒரு கிறுக்குத்தனமான எண்ணம் வந்தது. இந்த நிலத்தில்... நெல்ல. நானே... விதச்சேன்... நாலைஞ்சி வருஷமா அடமானத்துல இருந்த இந்தப் பூமிய மீட்டி...ராவும் பகலுமா உழச்சேன். இப்போ அதுகூட... எனக்குப் பெரிசாத் தெரியல... இந்த நெல் பயிருங்கள... முளைச்சதுல. இருந்து பார்த்துக்கிட்டு. வரேன் எனக்கு. இதுல. சொந்தப் பிள்ளைய மாதிரி தோணுது. இப்போ பாக்கையில். இதுவள எப்படிக் கஷ்டப்பட்டு வளத்தனோ... அது மாதிரி வளத்து. பத்து வயசில... பறிகொடுத்த. என் மகன் ஞாபகந்தான் வருது. அந்த ஞாபகங்கூட பெரிசாத் தெரியல... நானே வளத்த. இந்த நெல் பயிர. இன்னும் ரெண்டு மாசத்துல. நானே அறுக்கப்போறேன். இத...நினைச்சிப் பார்க்கவே... கஷ்டமா. இருக்கு..."

வீராசாமி சிரித்தார். குனிந்து ஒரு அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, தலைகீழாக வைத்துப் பற்குத்திக்கொண்டிருந்தவர், பல் குத்துவதை விட்டு விட்டு, மோவாயை துக்கி நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தார். சுயநினைவுக்கு வந்த வினை தீர்த்தான் சங்கோஜமாக மன்றாடினான்.

"மாமா.நீரு நல்லாயிருப்பியரு. நான் சொன்னதை ஊர்ல சொல்லிடாதேயும்.அப்புறம் நான் தலைகாட்ட முடியாது. எல்லாப் பயலுவளும் என்னைப் பார்த்துச் சிரிப்பாங்க... ஏற்கனவே... ஒரு மாதிரி பார்க்கறானுக."

வீராசாமி, இப்போது சிரிக்கவில்லை. கையில் தொங்கிய அருகம்புல்லை கையால் கசக்கிக்கொண்டே, அவனைப் பார்த்தார். பிறகு ஆறுதல் சொன்னார்.

"ஒன் மனசு... இளுகுன மனசுன்னு, மாமாவுக்குத் தெரியாதா.. ஊர்க்காரங்கதான் அவனுக்கு மனசு இளகுனது இல்ல. மூளை இளகுனதுன்னு சொல்லுதாங்க. சொல்லிவிட்டுப் போகட்டும்"

"எனக்கா மூளைக் கோளாறு? நான். எவன். பெண்டாட்டிய பிடிச்சி இழுத்தேன். நீரே சொல்லும்"

"போவட்டுண்டா... இந்த. பயிருங்கள... ஒன்கையால... பன்னருவாள வச்சி அறுக்க ஒனக்குச் சங்கடமா இருந்தா... பேசாம. இந்த நிலத்தை மாமாகிட்டே குடுத்துடேன்."

வினைதீர்த்தான், மாமா, விளையாட்டுக்குப் பேசுகிறார்: என்று நினைத்து, அவரை விளையாட்டுத் தனமாய்ப் பார்த்தான். அவரும் லேசாகச் சிரித்தார். வயலை விழுங்கிவிடுவது போல் அவர் பார்த்ததில், இவன் திடுக்கிட்டாலும், விளக்கேற்றி வைக்கும் மாமாவே, விளக்கை அணைக்கமாட்டார் என்ற தைரியத்தில் சிரித்தான். வீராசாமியும் விளைாட்டுக்குச் சொன்னவர்போல், “எழுந்திருடா. காலங்கார்த்தால... உரத்தப் போடுறத வுட்டுப்புட்டு. தத்துவம் பேசறான். தத்துவம்" என்று சொல்லி விட்டுத் துரத்தே தெரிந்த ஒரு சிவப்புச் சேலையைப் பார்த்து, ஓடாத குறையாக நடந்தார்.

நாலைந்து நாட்கள் ஓடின.

'சீம உரத்தை ஒர் ஒலைப்பெட்டியில் வைத்து, தோளில் சாய்ந்து அனை கொடுத்தவாறு, வயலுக்குப் போய்க் கொண்டிருந்த வினைதீர்த்தானைப் பார்த்ததும், டிராக்டரை ஒட்டிக்கொண்டு வந்தவனை நில்லுடா" என்று சொல்லி நிறுத்தி, பின்னார் உட்கார்ந்திருந்த வீராசாமி வினைதீர்த்தானையும் ஏற்றிக்கொண்டார். நேரடியாகவே கேட்டார்.

"என்னடா. நான். சொன்னத யோசிச்சுப் பார்த்தியாடா..."

"ஒமக்கு... கோயில்கட்டி கும்பிடப்போறேன் மாமா... இப்பல்லாம். நீரு சொன்னது மாதிரி தத்துப்பித்துன்னு நினைக்கிறதில்ல. நெல் பயிர... அழிச்சாலும்... நாமதான் அதிலிருந்தே. இன்னொன்ன உண்டாக்குறோமுன்னு நினைச்சி. மனச தேத்திக்கிட்டேன்"

"நான். அதச். சொல்லலடா... ஒன் வயல... மாமாவுக்கு குடுக்கச் சொன்னேன். யோசித்துப் பாத்தியா?"

"நீரு. என்ன சொல்றீரு?"

'அதாண்டா. ஒன் நிலத்த தாறியான்னு கேட்டேனில்ல?”

"மாமா... ஒமக்கே... இது நல்லா இருக்கா.”

“என்னடா பவுசு பண்ணுற... இந்த மூணு மரக்கால் விதப்பாட்ட வச்சிக்கிட்டு, என்னடா பண்ணப்போறே? கோட்ட கட்டப் போறியாக்கும்... மாமாவுக்குத் தந்தியான்னா எனக்குச் சேந்தாப்போல இருக்கும். டிராக்டர் நிறுத்தறதுக்கு. வசதியா இருக்கும்."

"அதோட நான் நடுத் தெருவில... நிக்கதுக்கும் வசதியா இருக்கும்."

"என்னடா... வாயி... நீளுது'

"பின்ன என்ன மாமா. நிலத்த. ஒம்ம மச்சினங்கிட்ட நீரு சொல்லித்தான். ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வச்சேன். பணத்த வச்சிக்கிட்டு... ஏதோ... சந்தைக்குச் சந்தை போயி... மசாலா சாமான்கள். வித்து. வயித்தக்களுவுனேன். ஒம்ம மச்சினன். அந்த மூணு மரக்கால் விதப்பாட்டுல. நீரு நெல்லு போட்டா. கரும்பு போட்டும் வரப்ப வெட்டியும் அட்டூழியும் பண்றாண்டா மாமாமவுக்காவது ஒன் நிலத்தத் திருப்புன்னு சொன்னதை வச்சி தோட்டத்த வித்து இதமீட்டுனேன் இப்ப. அரசன நம்பி புருஷன. விட்டது மாதிரி தோட்டத்த விட்ட என்னை வயலையும்விடச் சொன்னா என்னமாமா அர்த்தம்? நீங்க மட்டுந்தான் வயலு வச்சிக்கணுமா? அப்படியாவது சர்க்காருல. ஒரு சட்டத்தை போடச் சொல்லும்."

"ஒண்ணு கேட்டதுக்கு. ஒன்பது சொல்றியா. நீ எவ்வளவு. நாளைக்கி. வயல வச்சிருக்கன்னு பாத்துப்புடலாண்டா..."

"பாத்துப்புடலாம். மாடக்கண்ணு. டிராக்டரை நிறுத்து. எனக்கு. இது வண்டில்ல. என் பிணத்த சுமக்கிற ரதம்."

வினைதீர்த்தான், 'சீம' உர பெட்டியை பிடித்துக் கொண்டே, கீழே குதித்ததில் உரம் மண்ணில் சிதறியது. உரத்தை அள்ளப்போனபோது, டிராக்டர் எழுப்பிய தூசி, அவன் கண்ணை மறைத்தது.

ஒரு வாரம் ஒடியது.

வீராசாமியின் முப்பத்திரண்டு மரக்கால் விதப்பாட்டிலும் துள்ளிக் குதித்து நீர் பாய்ந்தது. வயல் முழுவதும் நீர்பாய்ந்து விட்டதும், பண்ணைப்பெண் சகதி சகிதமான மண்வெட்டியை வைத்துக் கொண்டு, கொன்னுப்புடுவேன்' என்பதுபோல் ஆட்டியபோது சரலில் உட்கார்ந்து டிரான்ஸிஸ்டர் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த வீராசாமி, இத்துடன் என்ற வார்த்தை வந்த வானொலிப்பெட்டியை, மூடிவிட்டு, பம்ப்செட் அறைக்குள் போய், என்ஜினை 'ஆப்' செய்துவிட்டு, கதவை மூடப்போனார். அலறிக்கொண்டு வந்தவன்போல் தோன்றிய வினைதீர்த்தானை, கண்களால் உருட்டிக்கொண்டே கதவை அங்குமிங்கும் ஆட்டினார்.

‘'எதுக்கு மாமா. ஆப் பண்ணுறிiயரு?"

"என் என்ஜின ஆப் பண்ண ஒன்கிட்ட கேக்கணுமா?"...

"மாமா ஒமக்கே இது நல்லா இருக்கா... என் வயலுக்கு தண்ணி பாயாண்டாமா?"

"ஒன் வயலுக்கு. தண்ணி பாய்ச்ச நான் என்ன... ஒன் வேலக்காரனா. என்னடா உன்மனசில. நினைச்சுக்கிட்டே."

'இப்படி பேசுறது நல்லா இல்ல மாமா... நல்லா நினைச்சிப்பாரும். கமலக்கிடங்கு ஒமக்கும்... எனக்கும் பொதுச் சொத்து. அது இருந்தாத்தான் நான். மாட்டை வச்சி. கமல அடிக்க முடியும்... மாடு வாங்கப்புறப்பட்ட என்கிட்ட என்ன சொன்னீயரு? ஏய். மூணு மரக்கால் விதப்பாட்டுக்கு. என் பம்ப் செட்டுலயே... தண்ணி பாய்ச்சிக்க... கமலக்கிடங்க... மூடி, நான் அதுல பயிர் வைக்கேன். ஒனக்கும் தண்ணி கிடச்சதுமாதிரி ஆச்சு'. எனக்கும், கொஞ்சம் நிலம் கிடைச்சது மாதிரி ஆச்சுன்னு சொன்னீரு. இப்போ கமலக் கிடங்கயும் எடுத்துக்கிட்டு. பம்பு செட்டையும் மூடுனா... என்னா மாமா அர்த்தம்?"

"ஒன் கமலக் கிடங்கு பங்கு எனக்கு வேண்டாம். ஒனக்கு அதுல... மூனடி வரும். தாராளமா எடுத்துக்க..."

"மாமா. நீரு பேசறது நியாயமில்ல."

"ஓஹோ ஹைகோர்ட் ஜட்ஜ் சொல்லிட்டியளோ. சரியாத்தான் இருக்கும். நீ. ஏமுழா. பல்லைக்காட்றே இந்தா. கதவை மூடு”

பண்ணைப்பெண், வினைதீர்த்தானுக்குப் பரிதாபப்பட்டுக் கொண்டும், வீராசாமிக்குப் பயந்து கொண்டும், கதவை மூடப் போனபோது, வினைதீர்த்தான் சுயமரியாதையை விட்டுவிட்டே மன்றாடினான்.

"மாமா... ஒம்ம காலுல. வேணுமுன்னாலும் விழுறேன்... இப்டிப் பண்ணாதையும். இன்னும் மூணு தண்ணி பாஞ்சால் போறும்.... மூணுகோட்டை நெல்லு கிடைக்கும். தயவு செஞ்சி வயத்துல... அடிச்சிடாதயும். பயிர் பட்டுப் போயிடும்.... போட்ட பணமுல்லாம்.... நாசமா போயிடும். தயவு செஞ்சு.... தயவு செஞ்சு...."

'ஒனக்கு வளர்த்த பிள்ள... இந்தப் பயிரு... அத ஒன்கையாலே. அறுக்காமல் போறதுக்கு சந்தோஷப்படாம. இப்டி வெக்க மானம் இல்லாம. எதுக்குடா... பிச்ச கேக்குற..."

"கதவ. உடைக்க... அதிக நேரம் ஆவாது மாமா..."

"எங்க... உடடா பார்க்கலாம். இத உடச்சிட்டு நீ ஊர்ல இருந்துடுறத பார்த்துடலாம். நாய்க்குப் பிறந்த நாயே... ஏழா வள்ளி. வீட்டுக்குப் போயி... நம்ம...மருதுவயும். பெருமாளயும். அரிவாளோட வரச் சொல்லுதா. போரழா. ஏல நாய்க்கிப் பிறந்த பயல நீ... ஒரு அப்பனுக்குப் பிறந்தவன்னா. கதவ. உடடா.. பார்க்கலாம்.'

வினைதீர்த்தான், கூனிக்குறுகி நின்றான். அந்த பம்பு அறையை இடித்து, அந்த ஆசாமியைப் புதைக்க, அவனுக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் பின் விளைவு. அவனை நம்பியிருக்கும் நாலைந்து பிள்ளைகளின் கதி. வயதுக்கு வரும் பருவத்துக்கு வந்திருக்கும் அவர் மகளின் கதி. அதோடு. அவர் குடும்பம், சிறை போகாத குடும்பம். நாற்பது வயதான அந்த உழவனின் குடும்பம் ஒரு சிவில் குடும்பம்.

என்ன செய்வது என்று புரியாமல், தலையில் கையை வைத்துக் கொண்டு, தன் வயலின் பரப்பில் உட்கார்ந்திருந்த வினைதீர்த்தான், நாளைக்கு வாடிப்போகப் போகிற பயிர்களுக்காக வாடி வதங்கியபடி, ஊர் முகப்புக்குள் வந்தபோது அங்கே சில வரவேற்பாளர்கள் நின்றார்கள். வீராசாமியின் கோபசாமிகள், உறவுக்குக் கை கொடுக்கும் கையாட்கள் வினைதீர்த்தானின் முன்னால் வந்து ஒருவன் வழிமறித்தான்.

"பம்பு செட்ட உடைப்பேன்னு எதுக்காவல சொன்ன? ஒன்னால உடைக்க முடியுமால..."

"அவன்கிட்ட எதுக்குடா. வாய்ப்பேச்சு. கையால பேசுடா..."

'ஏமுல. பதில் பேச மாட்டாக்க உடைக்கப்போற கையை ஏண்டா... மடக்குற... எங்க... அந்த. கைய... பாக்கலாமா?”

"இன்னுமாடா... பேசிக்கிட்டு இருக்கீக... தூக்கிப் போட்டு மிதிங்கல..."

இதற்குள் கூட்டம்கூடி விட்டது. வினைதீர்த்தான் அடிபடப் போவதற்கு முன்னால், நல்லவேளையாக நாலைந்து பேர் கூடிவிட்டார்கள். அடிபடப் போனவன் முறையிட்டான்.

"நீங்களே சொல்லுங்க... கமலக்கிடங்க... எடுத்துக்கிடுகிறேன். நீ பம்புல. தண்ணி பாய்ச்சுக்கன்னு சொல்லிட்டு. இப்போ. செட்ட... மூடுனா. நியாயமா... நீங்களே. சொல்லுங்க... நீங்க என்ன சொன்னாலும். கட்டுப்படுறேன்."

அடிக்கப் போனவர்கள் மிரட்டினார்கள்.

"நாங்க அப்படித்தான் மூடுவோம். நீ என்ன செய்யணுமோ செய்துக்க. வேணுமன்னா. கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும் போ. அதவிட்டுப்புட்டு. அதை உடைப்பேன். இத உடைப்பேன்னு. சொன்னியானா. உடப்புக்குள்ள போயிடுவே. ஜாக்கிரதையா நடந்துக்க. ஒன் பெண்டாட்டி பத்திரம்..."

மிரட்டியவர்கள், கூட்டத்தைப் பொருட் படுத்தாமல் போய்விட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு சில நீதிமான்கள், வக் கீல் படிப்பு படிக்க வேண்டிய அந்த ஆசாமிகள், வினைத்தீர்த்தானை வேறுவிதமாகக் கேட்டார்கள்.

'ஒனக்கு... அறிவு எங்கடா. போச்சி. அவன். ஏமாந்தா., ஆளையே. ஏப்பம்போடுகிற பய. கமலக்கிடங்க... மூடக்கூடாதுன்னு சொல்ல வேண்டியதுதானா? குடுமியை பிடிக்கக் குடுத்துட்டு. இப்ப வலிக்குதேன்னா... என்னடா பண்ண முடியும்"

வினைத்தீர்த்தான் விம்மினான்.

"மச்சான். இப்ப நடந்ததுக்கு வழிசொல்லும்”

"நீ... எங்கிட்ட கேட்டுக்கிட்டா. கமலக்கிடங்க குடுத்த? எடாத எடுப்பு எடுத்தால் படாதபாடு பட வேண்டியதுதானே.”

"நான் போட்ட பணமுல்லாம் நாசமா. போயிடுமே. அவர் நிலத்தக் கேட்டாரு... நான் மாட்டேன்னு சொன்னதுக்காவ... இப்படிப் பண்றாரு.. இது ஒங்களுக்கு தெரியமாட்டக்கே..."

"தெரியதுடா. ஆனா... அதெல்லாம். விவகாரமுன்னு வரும்போது. எடுபடாது. நீங்க, ஆயிரம் பேசியிருந்தாலும் சபையிலே நிக்காது, அவன் பழிகாரப் பயலாச்சே."

"பாத்துப் பேசும்வே. அந்தக் குடிகாரப் பய வரான். வாரும் மாப்பிள்ள... சந்தைக்குப் போயிட்டு வாரியரோ. வீராசாமி மாப்பிள்ள... இந்த வினைதீர்த்தான் பயல.. ஒமக்குச் ஜோடியா... எப்படியோ. பெரிய மனசு பண்ணி தண்ணி விடும். ஒழிஞ்சு போறான்"

வீராசாமி அவர்களை நிமிர்ந்து பார்த்தார். இரண்டு பேர் கடன் வாங்கியவர்கள். மூவர் கடன் கேட்டுக் கொண்டிருப்பவர்கள். ஒருவர் தன் மகனுக்கு இவருடைய தயவில் பஞ்சாயத்து யூனியனில் வேலை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர். வீராசாமி அலட்சியமாகப் பேசினார்.

“தனக்குப் போவத்தான்... தானம். கிணத்துல தண்ணி வத்திக்கிட்டு வருது. என் வயலுக்கே... தண்ணி பத்தல..."

"இருந்தாலும்.நீரு. பெரிய மனசு வச்சி."

'அவன் பம்பு செட்ட உடச்சி... எடுத்துக்குவானாம் மவராசானா. எடுத்துக்கட்டும்"

"அப்படியா. சொன்னான். கழுதப்பய... ஏல... பெரிய மனுஷனப்பார்த்து. அப்படியால கேக்கது. நாங்க... நியாயம் பேச. முடியாதபடி. பண்ணிப்பிட்டு. இப்போ பாசாங்கு போடுதியாக்கும். மாப்பிள்ள... நீரு. போவம்...'

ரண்டு நாட்கள் போயின.

வினை தீர்த்தானின், நெற்பயிர்கள் சவலைப் பிள்ளைகளாயின. நெற்கதிர்கள் சுருங்கத் துவங்கின. செடிகளின் அடிப்பாகம், உலரத் துவங்கியது. அன்றைக்குத் தண்ணீர் பாயவில்லையானால் வைக்கோல்கூடக் கிடைக்காது.

பம்ப் செட்டை 'ஆப்' செய்துவிட்டு, கதவை மூடிய வீராசாமியை வினைதீர்த்தான் கண்கள் குளமாகப் பார்த்தான். அவர், அருகில் போய் நின்று கொண்டு கைகளைப் பிசைந்தான். தலையைச் சொறிந்தான். "மாமா'

"ஒங்க. அத்தய. நான் வச்சிக்கிட்டா இருக்கேன். என்னை மாமான்னு சொல்லுத?"

அடிக்கத்துடித்த கைகளை அடக்கிக் கொண்டு, கொதித்த கண்களைத் தாழ்த்திக் கொண்டு வீராசாமி, தன் வயல் பக்கம் வந்தான். பயிர்களைப் பார்க்க பார்க்க, தன் பத்து வயது மகன் மரணத்துடன் போராடிய காட்சி, அவன் நினைவுக்கு வந்தது. அன்று கண்ணுக்குத் தெரியாத எமனைச் சபித்த அவன் கண்ணுக்குத் தெரிந்த இந்த எமனை, பார்த்துட வேண்டியதுதான் என்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு புறப்படப் போனபோது மாடக்கண்ணு மச்சான் வந்தார். பக்கத்து வயல்காரர் 'நாலு மரக்கால் 'விதப்பாட்டில் நாள் முழுதும் போராடுபவர். . "ஏமுல பித்துப் புடிச்சி நிக்குற. என் கிணத்துல. அர நாள். இறவ எனக்குவரும். அதுல. ரெண்டு நாழிய. நீ. எடுத்துக்கடா. என் வாய்க்கால் தண்ணி ஒனக்குப் பாயுமே..."

'மாடு. இல்லியே.. மச்சான்." "யாருகிட்டேயாவது கேளு... என் மாடு கிழடு. அரநாள் தாங்காது. மாடு கிடைக்காட்டா. இருக்கவே இருக்கு... என் மாடு."

வினைத்தீர்த்தான், கரையில் போய்க் கொண்டிருந்த வீராசாமியை, அலட்சியமாகப் பார்த்தான். பயிர்களை வாஞ்சையோடு பார்த்தான். வாடகை இறவைக்காக நாலைந்து பேரைப் பார்த்தான். ஆசாமிகள் நழுவி விட்டார்கள். ஏதோ ஒரளவு தைரியமுள்ள ஒரு விவசாயி தன் மாடுகளை தானே கொண்டு வந்து, தானே கமலை கட்டுவதாகச் சொல்லிவிட்டார். வாடகை ஐந்து ரூபாய் பெரிசில்லை.

வீட்டுக்கு வந்த வினைதீர்த்தான் மனைவி, இடிந்த முகத்தோடு வரவேற்றாள்.

"மாடக்கண்ணு மச்சான், தண்ணி தருவேன்னுட்டார். கவலய விடு"

"தலவலி போயி... திருகுவலி வந்துட்டு.”

"என்ன சொல்ற..."

"இது. வீராசாமி சின்னையாவோட நிலமாமில்லா..."

"இன்னுமாழா. அவன். ஒனக்குச் சின்னையா..."

"இந்த நிலத்துல இருக்க வீட்ட காலி பண்னணுமாம். நிலம் அவங்களுக்கு வேணுமாம்... காலி பண்ணாட்டா... இடிப்பார்களாம்."

"யாரு சொன்னா?” "வீராசாமி மவன் பெருமாள் வந்துட்டுப் போனான். ஏன் கவலப்படுறிரு. நாம இருபது வருஷமா குடியிருக்கோம். யாரும் எதுவும் பண்ண முடியாது" -

"நீ சொல்றது சரிதான். வீராசாமி. இப்பதான் குடிச போட்டேன்னு பிரிப்பான். நாம கோர்ட்டுக்குப் போவணும். வக்கீலப் பாக்கணும். அவனுக்கு வீட்டப் பிரிச்சது எத்தனாவது சட்டத்துல. குத்தமுன்னு சொல்லுறதுக்கே அம்பது ரூபாய் குடுக்கணும். குத்தத்த சொல்றதுக்கே இவ்வளவுன்னா... அத... நிரூபிக்கதுக்கு எவ்வளவு ஆவும். நினைச்சிப்பாரு..."

சரி... முதல்ல சாப்பிடும்... பேசாம... அந்த குடிகெடுப்பாங்கிட்டே... நிலத்த குடுத்திருக்கலாம்"

வினைதீர்த்தான் தூங்கவில்லை. மறுநாள், வீராசாமியின் எதிர்ப்புக்கு இடையிலும் தான் மனிதன் என்பதை நிரூபிக்கும் மாடக்கண்ணு மச்சானையும், வாடகை இறவைக்காரரையும் நெஞ்சார நினைத்துக் கொண்டு, சும்மா படுத்துக் கிடந்தான்.

காலையில் எழுந்து, வயலுக்குப் புறப்படப்போன அவனிடம், வாடகை இறவைக்காரர் வந்தார்.

“என்ன தாத்தா.. இன்னுமா. வயலுக்குப் போகல..."

"சுண்டைக்காய் கால்பணம். சுமகூலி முக்கால் பணம்."

"என்ன தாத்தா சொல்றீரு." "என் பேரன். மாடுங்கள. பத்திக்கிட்டு போயிருக்கான். ஒரு பீடியை பத்த வைக்கதுக்கு. அவன். நின்ன போது. ஒரு மாடு. வீராசாமியோட வைக்கோலுல ஒருவாய் வச்சிட்டு. உடனே. அவன் ரெண்டு மாட்டையும் பவுண்டரில. பத்தி. அடச்சிட்டான்."

"இது. வேணுமுன்னு நடந்திருக்கு. பரவாயில்ல. முன்சிப்ப பார்த்து. அபராதத்த கட்டிடலாம். நானே கட்டுறேன்..."

"நான் முன்சீப்ப தேடிப்போனேன். அந்தப் பயமவன் தலமறவா ஆயிட்டான். அவன். வீராசாமி. அக்கா மவன்தானே. சாயங்காலந்தான் வருவான்”

"அப்படின்னா என் பயிரு என் பயிரு”

வினைதீர்த்தான் ஓடினான். சத்திய ஆவேசத்துடன், அந்த ஆவேசமே ஒர் உந்தலாக, வயலைப் பார்த்து ஓடினான். தண்ணீர் கொடுக்க முன் வந்த மாடக்கண்ணு விழுந்து கிடந்த ஒரு கிழட்டு மாட்டின் வாலைக் கடித்து அதை, எழுப்பப் பார்த்தார். மாடு நகருவதாகத் தெரியவில்லை.

வினைத்தீர்த்தான் ஓடினான். தன் வயலை நோக்கி ஒடினான். விதவைப் பெண்போல், பதவியிழந்த அரசியல்வாதி போல, பட்டினி கிடந்த குழந்தைபோல, நெற்பயிர்கள் கருகப் போவதுபோல் தோன்றின. பக்கத்து வீராசாமி வயலில் நெற்பயிர்கள் ‘பேபிஷோ’ காட்சிபோல் தோன்றின. நீர் விரைந்து பாய்ந்தது அருகாமையில். அவற்றின் அருகில் நின்ற வீராசாமியும் அவரது வகையறாக்களும் “அடுத்த பருவத்துல. இந்த ஒரு தட்டுலயும். வாகை மரத்தையும் முருங்க மரத்தயும். வச்சிடணும்" என்று வினைத்தீர்த்தானுக்குக் கேட்கும்படியாகக் கேட்க வேண்டும் என்னும்படியாகப் பேசினார்கள்.

வினைதீர்த்தானால் தாள முடியவில்லை. தாங்க முடியவில்லை.

“ஏய்... அற்பப் பயலுவளா.. என் வயல...கருக்குனதுமில்லாம. நான் அடுத்த வருடத்திலேயும். பயிரிடாம போறதுக்காக. மரத்த வச்சி. என் வயலுக்கு... இருட்டி விடப் போறியளா... செய்யுங்கடா...அளிக்கப் பணமும்... அம்பலத்துக்கு ஆளும் இருக்கிற திமுறுலயாடா... பண்ணுறீங்க... பண்ணுங்கடா... ஊரு கேக்காட்டாலும். உதிர மாடன் கேக்காம போகமாட்டாண்டா.”

அவ்வளவுதான்

வீராசாமி நல்ல மனிதர், ஆகையால் அவர் எதுவும் பேசவில்லை. அவரது கையாட்கள், காலாட்கள் வந்தார்கள். வினை தீர்த்தானின் வயலை மிதித்துக் கொண்டே வந்தார்கள். "மூட்டம் போட்டால் பெருச்சாளி தானாவரும்” என்பது போல், திக்குமூட்டிய வினைதீர்த்தான், திட்டியே தீருவான் என்பதை எதிர்பார்த்தவர்கள்போல், கர்மயோகிகள் போல் வந்தார்கள். இருவர், வினைதீர்த்தானின் கைகளையும், கால்கைளையும் பிடித்துக் கொள்ள, எஞ்சிய மூன்று வீரர்கள், அவனை எட்டி உதைத்தார்கள் மண் வெட்டிக் கணையால் வாயில் குத்தினார்கள். வயிற்றில் இடித்தார்கள். அடித்தகளைப்போடு, முதுகை நிமிர்த்திக் கொண்டு, அவர்கள் இளைப்பாறப் போனபோது, வினைதீர்த்தான் வயலில் சுருண்டு கிடந்தான் வாயில் பொங்கிய ரத்தம், வயலை நனைத்தது. வயிற்றில் துளிர்த்த ரத்தத் துளிகள், நெற்பயிரில் பட்டன.

வினைதீர்த்தான் ஓடினான். வயலில் இருந்து வீட்டுக்கு வராமலே ஒடினான். அருகேயுள்ள சட்டாம்பட்டிக்கு ஒடினான். அங்கே வல்லமை பொருந்திய 'சண்டியர் மிராசுதாரும் வீராசாமியை எப்படிக் கையைக் காலை ஒடிக்கலாம் என்று குறிபார்த்து இருப்பவருமான ராஜதுரையிடம், மூச்சிரைக்க போய் நின்றான்.

"கும்பிடுறேன் அய்யா..."

"என்ன விஷயம் வினைதீர்த்தான்."

"என் மூணு மரக்கால் விதப்பாட்ட நீங்க எடுத்துக்கணும்:

"பணம் இல்லியே."

"எவ்வளவு வேணுமுன்னாலும் தாங்க..."

"எந்தப் பக்கமா இருக்கு”

"ஒங்க... மருமகன சந்தையிலே. ஆள் வச்சி அடிச்சாரு பாருங்க. வீராசாமி. அவரு வயலுக்குப் பக்கத்துல. பொது வரப்பு. பொதுப் பாசனம்..."

"அப்படின்னா... வாங்கிக்கிறேன். இந்த மூணு மரக்கால் விதப்பாட்ட வச்சி. அவன் மூணு கோட்டயயும். பொட்டல் காடாக்கப் போறேன். பாரு... மரக்கால் ஆயிரம் ரூபாய்தான் சரியா...'

'தப்போ... சரியோ... நிலத்த... ஒங்ககிட்ட கொடுத்தே ஆகணும்."

சட்டாம்பட்டிக்கும் குட்டாம்பட்டிக்கும் முட்டாப் பகை வீராசாமியும் ராஜதுரையும் தங்கள் 'எக்காளத்தை' திருப்திப் படுத்துவதற்காக, ஊர்ச்சண்டையை நடத்தியவர்கள். ஒரு கொலைகூட விழுந்திருக்கிறது. வீராசாமியைவிட எல்லா வகையிலும் வல்லவரான ராஜதுரை, வினைதீர்த்தான் நிலத்தை மலைப்பாம்பின் நோக்கோடு வாங்கிக்கொண்டான்.

இப்போது ஊர்க்காரர்களில் சிலர், வினைதீர்த்தானைச் சாடினார்கள்.

"நிலத்தை ஊரவிட்டு. ஊர்ல போயாடா... விக்கது? சட்டாம்பட்டிக்காரன் கொலகாரப் பாவி... நம்ம வீராசாமிய... கஷ்டப்படுத்துனால்... நாம் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒன்னால... ரெண்டு ஊருக்கு இடையிலயும் குத்துப்பழி... வெட்டுப்பழி வரப்போவுது."

வினைதீர்த்தான் சிரித்தான். அழுதான்.

வயலில், தன் சொந்த வயலில், கண்மணிபோல் காத்து நெல்மணியில் பட்ட தன் ரத்தம் - சொந்தப் பிள்ளையைப் போல் பாவித்த தன் நெற்பயிர்களில் நீருக்குப் பதிலாகப் பட்ட ரத்தத்துளிகள், வீராசாமியையும், அவன் ஆட்களையும், இந்த விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நில்லாத எல்லோரையும் சும்மாவிடாது என்ற அசுரத்தனமான திருப்தியில், ஆன்மீகக் கோபத்தில் சிரித்தான்.

அதே சமயம், விதைக்கும் போது தந்தையாகவும் நாற்றிடும்போது தாயாகவும், உரமிடும்போது ஆசானாகவும் களையெடுக்கும்போது காவலனாகவும், நீரிடும்போது தோழனாகவும் இருந்து, கண்ணுக்குக் கண்ணாய்ப் பராமரித்த வயலை தன் சொந்த வயலை நினைத்தும் அழுதான். சத்தியம் சத்தம் போடாது என்பதுபோல், அவன் சத்தம் போடாமலே அழுதான்.


***

 


மணிவாசகர் பதிப்பகத்தின்
பாடநூல் வரிசை


முனைவர் தமிழண்ணல்
தொல்காப்பியம் – சொல்லதிகாரம்
தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் – பொருளதிகாரம்
(3 தொகுதிகள்)

முனைவர் ச. அகத்தியலிங்கம்
திராவிட மொழிகள் 1, 11

முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
தொல்காப்பியம் (பையடக்கப்பதிப்பு)
தமிழ் இலக்கிய வரலாறு

முனைவர் சு. சக்திவேல்
தமிழ்மொழி வரலாறு
நாட்டுப்புற இயல் ஆய்வு
இதழியல்

வே.தி.செல்லம்
தமிழக வரலாறும் பண்பாடும்
தமிழக வரலாறு – புதிய பார்வை

பேராசிரியர் சோம. இளவரசு
தமிழ் இலக்கிய வரலாறு
நன்னூல் எழுத்ததிகாரம்
நன்னூல் சொல்லதிகாரம்
இலக்கண வரலாறு