காகித உறவு/ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்

விக்கிமூலம் இலிருந்து

ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்


பிறந்த நாள் போஸ்டர்களைப்போல் அமர்க்களமாக விளம்பரம் செய்யப்பட்டு வரும், ‘எங்கள் தர்மம் சமதர்மம்’ என்ற அந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளுக்கு, ஸ்டுடியோவில் டைரக்டர், காமிராமேன், ஸ்டில்மேன் உட்பட வரத் தகுந்தவர்களும், தகாதவர்களுமாகப் பலர் இருந்தார்கள்.

காலை பத்து மணிக்கு ஷூட்டிங் ‘ஷெடுல்’ ஆகியிருந்தது. ஆனால் கதாநாயக நடிகர் கமலனையும் நாயகி நடிகை நளினி குமாரியையும், மணி 12 ஆகியும் இன்னும் காணோம்.

மூவி காமிரா கோணம் எட்ட முடியாத தூரத்தில் மூங்கில் பரணில் டும் லைட்டுகளோடு உட்கார்ந்திருந்த லைட் பாய்களும் கஷ்டப்பட்டார்கள். அவர்களால் ஷூட்டிங் முடியும் வரை கீழே இறங்க முடியாது. இதே போல், ஸெட்டில் ஒரு முனையில் பத்து மணி படப்பிடிப்பிற்கு அஸிஸ்டெண்ட் டைரக்டர் உத்திரவுப்படி எட்டு மணிக்கே வந்த ஐம்பது அறுபது துனை நடிக-நடிகைகளும் டைரக்டரே என்று உட்கார்ந்திருந்தார்கள்.

மேலே பரணியில் பத்தாம் நம்பர் டூம் லைட்டைக் கவனித்துக்கொண்டிருந்த லைட்பாய் நாராயணனின் உடம்பு வியர்த்தது. அவன் குழந்தைக்கு வலிப்பு அதற்கு மருந்து கொடுத்த ஒரு ஆர்.எம்.பி. டாக்டர் ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் குழந்தை பிழைக்கும் என்று கையை விரித்து விட்டார். லைட்டாய் கையில் ஒன்றும் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் கையைக் காலைப் பிடித்து...

திடீரென்று ஸெட்டில் ஒரு மயான அமைதி. தயாரிப்பாளர் உட்படத் துணை நடிக-நடிகைகள் அனைவரும் எழுந்து நின்றார்கள்.

கதாநாயாக நடிகர் கமலன் காரிலிருந்து இறங்கி உற்ற நண்பர் ஒருவர் முன்னால் வர, உயிர்த் தோழர் ஒருவர் பின்னால் வர, பத்திரிகை நிருபர் பக்கத்தில் வர, பந்தாவோடு வந்தார்.

“அவள் இன்னும் வரலியா?”

“நளினி குமாரி தானே. இதோ வந்துக்கிட்டே இருக்காங்க.” டைரக்டர் இழுத்தார். "ஐ காண்ட் வேஸ்ட் மை டைம். அவள் இப்படி அடிக்கடி லேட்டா வர்றாள். நீங் அவள்கிட்ட பங்சுவாலிட்டியைப் புரிய வைக்கணும். ஐ காண்ட் வேஸ்ட் மை டைம்" என்று சொல்லிக் கொண்டே நடந்தவர், முகத்தில் புன்னகை தவழத் திரும்பி வந்தார். கதாநாயகி நடிகை நளினி குமாரி, ஓர் இம்பாலா காரில் தன் அம்மாவோடும், பணிப் பெண்ணோடும் ஒரு நாயோடும் வந்து இறங்கியதே காரணம்.

நடிகை நளினி குமாரி கமலனுக்கு அருகே தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே “சாரி லேட்டாயிட்டுது” என்றாள்.

"அதுக்கென்ன. அப்படி ஒண்ணும் லேட் இல்லை. நானும் இப்பதான் வந்தேன்' என்றார் கமலன்.

“படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா?” என்றார் டைரக்டர், வினயமாக. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்களுக்கு ஆப்பிரிக்கா போக அழைப்பு வந்திருக்காமே? என்றார் கமலன் நளினியிடம். அதற்குள் புரொடக்ஷன் மானேஜர், “படப்பிடிப்பை துவக்கலாமா?” என்று கேட்டார்.

"மிஸ்டர் டைரக்டர் இந்த ஆசாமி என்ன புதுசா? சும்மா தொன தொனத்துக்கிட்டு இருக்கான். கொஞ்சம் சொல்லி வையுங்க..." என்றார் கமலன்.

லைட்பாய் நாராயணனுக்கு ஒரே ஆத்திரம். படப்பிடிப்பு முடியுமுன்னால் அவன் கீழே இறங்க முடியாது. குழந்தைக்கு இப்போது எப்படி இருக்கிறதோ...

ஒரு வாலிபன் லெட்டை நெருங்கி வந்து, "ஐ ஆம் ஸெண்ட் பை ஐ.டி.ஒ." என்றான். இன்கம்டாக்ஸ் ஆபீஸில் இருந்து வருகிறான்? அட பாவி கமலன், நளினி எல்லோரும் எழுந்து நின்றார்கள். கமலனும், நளினியும் எழுந்து நின்றதால் ஐ.டி.ஒ விற்கு எந்த ஜென்மத்திலும் சம்பந்தமில்லாத துணை நடிக நடிகைகளும் எழுந்தார்கள்.

அந்த வாலிபன் ஒரு அதிகாரிக்குரிய புருஷ லட்சணத்தோடு "நீங்க தான் மிஸ்டர் கமலனா? இவங்கதான் மிஸ் நளினியா?" என்றான்.

“ஸார், ஏதாவது சாப்பிடுகிறீர்களா? நளினி தனக்கே உரிய பாணியில் குழைந்தாள். "நோ, தாங்ஸ், இப்போதான் ஐ.டி.ஓ. அண்ணன் வாங்கிக் கொடுத்தார்."

"நீங்க என்ன சொல்றீங்க? ஐ.டி.ஓ. அண்ணனா?” அந்த வாலிபன் கள்ளமின்றி சிரித்துக் கொண்டே 'ஐ.டி.ஒட்டக்கூத்தன் அண்ணன் தானே இந்த ’எங்கள் தர்மம் சமதர்மம்' படத்தைத் தயாரிக்கிறாங்க... எனக்கு ஷூட்டிங் பார்க்க ஆசை... நான் மதுரையில் எம்.ஏ. படிக்கிறேன்... ஐ.டி.ஒ. அனுப்பினதா சொல்லு ஸ்டுடியோவுக்குள் விடுவாங்கன்னு சொன்னாங்க" என்றான்.

ஈயாடாமல் இருந்த பெரிய புள்ளிகள் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. துணை நடிகர் கூட்டம் தங்களுக்குள் சிரித்துக் கொண்டது.

ஐம்பது வயதைத் தாண்டிய ஆபீஸ்-பாய் ஆடலழகன் அவன் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் கூர்க்காவிடம் விட்டுவிட்டு, அந்தக் கூர்க்காவையும் திட்டிவிட்டு வந்தான். வெளியே கேட்டில் கூர்க்காவுக்கும் அந்த வாலிபனுக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தபோது, ஸெட்டில் ஷூட்டிங் ஆரம்பமாகத் துவங்கியது.

வசனகர்த்தா, கமலனிடம் ஸ்கிரிப்டைக் கொடுத்தார். டைரக்டர் ஸ்டார்ட் என்றார். பிறகு கிளாப் என்றார் உடனே புரடெக்‌ஷன் மானேஜர், டென்-ஏ-டேக் ஃபோர் என்றார். ஷூட்டிங் துவங்கியது. லைட் பாய்கள் டூம்களைப் பல கோணங்களில் துவக்கினார்கள்; மூவி காமிரா சுழன்றது.

கொத்து வேலை செய்யும் தொழிலாளி உழைத்த களைப்பில் உட்கார்ந்திருக்கிறான். அவன் முதலாளி, ஏண்டா சோமாறி!. நான் வரேன். கண்ணு தெரியலியா?. பெரிய மனுஷன் மாதிரி உட்கார்ந்திருக்கே என்கிறார்; உடனே அந்தத் தொழிலாளி கொதித்தெழுகிறான். “மூளைகெட்ட முதலாளியே! நான் உனக்கு அடிமையல்ல... தேவைக்குக் குறைவாய்க் கொடுத்து, சக்திக்கு அதிகமாக உழைக்க வைக்கும் உலுத்தனே!” என்று வசனத்தைப் பொழிந்து கொண்டிருந்த நடிகர் கமலன், திடீரென்று மீதி வசனத்தைப் பேசாமல் ஒரு துணை நடிகரைக் கோபமாகப்பார்த்தார். அவன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்! விஷயத்தைப் புரிந்து கொண்ட அனுபவசாலியான டைரக்டர், கட்கட் என்று சொல்லிவிட்டுத் திரையுலகிற்குப் புதிய ஆசாமியான அந்தத் துணை நடிகரின் எச்சில் சிகரெட்டைப் பிடுங்கி, கீழே எறிந்தார். அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவனைக் கேட்டை நோக்கி இழுத்துக் கொண்டு போனார்.

அந்தக் காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்கியது. நடிகை நளினிக்கு எழுத்துவாசம் தெரியாததால் அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

"நீங்க ஒரு ஏழைப் பொண்ணு. கொத்து வேலை செய்துகிட்டு இருக்கீங்க." என்று சொன்னபோது, புரொடக்‌ஷன் மானேஜர் ஒரு சின்னாளப்பட்டி புடவையை நீட்டினார். "வாட்... நான் சின்னாளப்பட்டி புடவையைக் கட்டுறதா?. நோ. நோ. ஃபாரின் நைலக்ஸ் கொண்டுவாங்க" என்றாள் நளினி. நடிகையின் மம்மி, என் பொண்னை என்ன நினைச்சிட்டீங்க? ஆயிரம் ரூபா புடவைக்குக் குறைஞ்சு அவள் கட்டினதே கிடையாது" என்றார்.

டைரக்டர் குழைந்தார் "ஒண்ணு சொல்றேன் கேளுங்க... அம்மா இந்த சேலையை சும்மா பத்து செகண்ட் கட்டட்டும். உடனே ஒரு ட்ரீம் காட்சி வச்சு. ஒரு பாட்டை வச்சுடறேன். 'உன்னைக் கண்டேன்' என்று பாடும்போது ஆகாய கலரில் ஒரு புடவை. ‘என்னைக் கண்டாய்’ என்று பாடும் போது ஆரஞ்சு கலரில் ஒரு புடவை. இருவரையும் அம்மா கண்டாள் என்கிற வரி பாடுறப்போ ஒரு வைர நெக்லஸ்... இப்படி விதவிதமாக ஜோடிச்சு சமாளிச்சுடறேன். ஆனால் பத்தே செகண்ட். இந்த சுங்கடி சாரியைக் கட்டடட்டும்." என்றார்.

‘ஐ ஆம் சாரி. இந்த சாரியை கட்டிக்க மாட்டேன். என் வேலைக்காரிகூட இதைக் கட்டிக்க மாட்டாள்’ என்றாள் நளினிகுமாரி.

டைரக்டர் சிந்தித்தார். பிறகு "ஆல்ரைட்... அந்தக் காட்சியே வேண்டாம்" என்றார் தீர்மானமாக உடனே புரொடக்‌ஷன் மானேஜர் துணை நடிகைகளிடம் பேசினார். கமலாவும் விமலாவும் தவிர, மற்றப் பொண்ணுங்க போயிடுங்க. நீங்க நடிக்க வேண்டிய காட்சியை நீக்கிட்டோம் உங்களைத்தானே, போகமாட்டீங்க... போங்க! போயிடுங்க... அட! எருமை மாடு மாதிரி நிக்கிறதைப் பாரு போங்கன்னா போங்க..."

ஐந்து ரூபாய்க்காக ஐந்து மணி நேரம் காத்திருந்த துணை நடிகைகள் எழுந்து மலைத்துக் கலைந்தார்கள்.

டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்வதற்காக உதடுகளை நீக்கினார்.

நளினிகுமாரி ஓர் ஆப்பிளை லேசாகக் கடித்துவிட்டுக் கீழே வைத்தாள்.

படப்பிடிப்பு துவங்கியது. கதாநாயகியும், அவள் தோழியும் பாட வேண்டும். அப்போது கதாநாயகன் வருவான் அதைப் பார்த்துத் தோழி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் உடனே டூயட். இதுதான் காட்சி.

டைரக்டர் "ஸ்டார்ட்" என்று சொல்லுகையில் காமிராமேன் ஒன் மினிட் என்று சொல்லிவிட்டு, லைட்கன்ட்ரோலர் காதை மைக் மாதிரி நினைத்து ஏதோ சொல்ல, கன்ட்ரோலரின் வாய் ஒலி பெருக்கியாகியது. "ஏய் எட்டாம் நம்பர்....டூம் லைட்டை ப்ரைட்டாக்கு. ஏய் ஒன்பது..டூமை டல்லாக்கு. ஏய் பத்து! நாராயணா! உன்னைத்தான் அட! உன்னைத்தாண்டா... லைட்டை லெப்டா திருப்பு. ஏய் பேமானி. எங்க பார்க்கிற. திருப்பு. திருப்பு. லெப்டுக்கா... லெப்டுகக்கா... ஏய்...ஏய்...!"

“ஐயோ!” லைட்பாய் நாராயணன் பரணிலிருந்து கீழே விழுந்தான். டூமைத் திருப்பும்போது நளினி கடித்துப் போட்டிருந்த அந்த ஆப்பிளைப் பார்த்ததால், குழந்தை நினைவு வரவே, கால் தவறிவிட்டது. அடித்துப்போட்ட அணில்போல் கீழே விழுந்தான். ஒரே ரத்தம். பரட்டைத் தலையை ரத்தம் நனைத்தது.

எல்லோரும் ஓடி வந்தார்கள். “பாழாய் போற பயல் விழுந்து படப்பிடிப்பைக் கெடுத்திட்டானே... ஏய் கார்! காரை எடு... கார் எங்கே?” டைரக்டர் கத்தினார்.

"காரா. ஆபீஸ் காரா...... அம்மா நாயை ஏத்திக்கிட்டு வெட்னரி டாக்டர்கிட்டே போயிருக்கு..."

"அப்படியா! ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணு."

கமலனின் சவர்லட் காரையோ, நளினியின் இம்பாலா வையோ கேட்க யாருக்கும் தைரியம் வரவில்லை. லைட்டாய் நாராயணன் நாய் கவ்வி உதறிய நண்டு போல் துடித்தான். நடிகை நளினி குமாரியும், கமலனும் தங்கள் இடத்தில் வந்து அமர்ந்தார்கள்.

திடீரென்று நளினிகுமாரியின் அம்மா கூப்பாடு போட்டாள். "ஐயையோ.. என் பொண்ணைப் பாருங்களேன்! அவள் முகத்தில் வேர்த்திருக்கே அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் ஆகாதே அவள் உடம்பு ஆடுதே! ஐயையோ!'

நளினி குமாரி பொங்கி வந்த வேர்வையைக் கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே சிணுங்கினாள்.

லைட்பாயைச் சுற்றி நின்ற கூட்டம் நளினியை நோக்கி ஒடி வந்தது. "ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை", என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல், "நோ, நோ, நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்" என்று சொல்லிவிட்டு, நடிகர் கமலன், அவளை அனைத்தவாறு தம் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார். நடிகையின் அம்மாக்காரியும், படத்தயாரிப்பாளர், டைரக்டர் முதலியவர்களும் இன்னொரு காரில் ஏறிபின்னார் போனார்கள். லைட்பாய் நாராயணனைச் சுற்றி நின்றவர்கள் ஆம்புலன்ஸ் வண்டியை எதிர்பார்த்து நின்றார்கள்.

ஒரு வழியாக எங்கள் தர்மம் சமதர்மம் வெளியாயிற்று. வெற்றிகரமாக ஓடுகிறது. சோஷலிஸத்தை விளக்கும் இந்தப் படத்தை ஒரு மகத்தான சித்திரம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். மனிதர்களுக்குள் பேதமில்லை என்ற சித்தாந்தத்தை விளக்கும் தத்துவப்படம் என்று பாமாலை சூட்டினார்கள். நடிகர் கமலனுக்கு "சோஷலிஸம் கொண்டான்' என்று நளினி குமாரிக்கு சோஷலிஸத்தின் தலைமகள் என்றும், டைரக்டருக்கு "சோஷலிஸ் திலகம்" என்று கலையன்பர்கள் பட்டம் சூட்டினார்கள்.

தனக்கு விடிவு காலம் பிறக்காதா என்று "லைட்பாய்' நாராயணன் ஆஸ்பத்திரியில் ஏங்கிக் கொண்டிருக்கிறான். முறிந்திருந்த அவன் தொடை எலும்பிற்குப் பிளாஸ்திரி போட்டு அந்தக் காலை மேலே தூக்கி, நாலடி உயரத்தில் ஒரு 'ஸ்லிங்கில்' வைத்திருக்கிறார்கள்.

***