உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கை விடு தூது/வாழ்த்துரை

விக்கிமூலம் இலிருந்து

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் நாவலர் டாக்டர் ச.சோமசுந்தர பாரதியார் எம்.ஏ., பி.எல், அவர்கள்

உளமுவந்து வாழ்த்திய
பாட்டியற்றமிழுரை வாழ்த்து

காக்கைக்குத் தூது சொல வாக்குதவும் வெண்கோழி
நீர்க்குட் சிறுமீனை நினைந்துணவின் நிலவிகிதம்
பார்க்குஞ் செங்கட்கள்ளப் பருந்தைத் திருந்துமென
நம்பும் வெளிறன்று, நன்னார் நமைகலிய
வெம்பும் கொடுவிரகே. வேட்பார் பகைசொலினும்
எள்ளற் கருமறப்போர் இசைந்து தொடங்குமுனே
உள்ளங் கரவா துரனோ டறிவுறுத்தி
விள்ளவொரு வாயில் விடுக்குஞ் செந்தமிழ்மரபு
உள்ளி உரை உதவும் வெள்ளை மனப் பண்பால்
துதிக்கைக் கருமாத் தொடராவாண நீயென்-றுணர்ந்தெவரும்
துதிக்க வெண்மையடை துலங்கப்பெயர் வாய்ந்ததுகொல்
இருபாற்கேட் டொருநோக்க மிறவாக் கரவற்ற
காரண்டக் காக்கைப்புள் கண்ணற்ற கருவுளத்தம்
மாரண்டு பகையஞ்சா வாயிலெனவிடுக்கச்
சூழ்ந்து துணிந்ததிறம் சொல்லுந் தரத்ததிலை
வாழ்ந்ததமிழ்த் தாய்தளரா வாறுரிய வாய்மொழிநின்
வெண்பா நமர்படையின் வேசறவைத் தீர்த்து
வண்புகழ் மூவாத் தண்தமிழ் தழையப்
பகைமற மழியப் பலநலம் பொலிய
விரைந்து வீறொடும் வெற்றிவிளைத்திடுக.


அன்பனே, தூதுரை படித்து மீதூரி மகிழ்ந்தேன். காக்கைபாற் பல பழியொழித்து வாழ்த்திய பகுதிகளும், தமிழர் வீறு கூறுங் கூற்றுக்களும் பெண்டிரும், தருக்கிய சிறைபுகுஞ் சிறப்புரையும் உளமினிக்கும் வளமுடையவாம். வனசகரந்துவருமங்கத நகைச்சுவை வாய்மைகுன்றா வனப்புடைத்து.


தமிழறமோம்ப ‘வண்போர்க்குக் கைவழங்க'த் தூது விட்டு வெட்சி சூடிய நின்செய்யுள், முறையே வஞ்சியுந் தும்பையும் மிலைந்து வாகையும் பெறுக: பாடாண் எம்மனோர் பகர்வோமாக.நாடொறும் நலனும் புகழும் பீடுடன் பெருகப் பல்லாண்டு கூறுகின்றேன்.

14-3-39

ச.சோ.பாரதி


பசுமலை