காஞ்சி வாழ்க்கை/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து
முடிவுரை

[1]

என் காஞ்சி வாழ்வு எட்டு ஆண்டுகளே யாயினும் அந்த எட்டு ஆண்டுகள் என் வாழ்வில் எதிர்பாராத வகையில் பலப்பல அனுபவங்களையும் வாழ்வின் சூழல்களையும் பெற எனக்கு உதவின எனலாம். இளமை கடந்து, காளைப் பருவமாகக் கழிந்த அந்த எட்டு ஆண்டுகளில் நான் காஞ்சியில் நல்லவரோடு கலந்து பழகி நலம் பெற்றிராவிடின், என் பிற்காலம் எப்படி அமைந்திருக்கும் எனச் சொல்ல முடியாது. கிராமங்களிலிருந்து காஞ்சிபுரத்துக்கு அக்காலத்தில் படிப்பிற்காகவும் பிற செயல்களுக்காகவும் வந்த என் உறவினர் சிலர் நிலைகெட்டமையின் என் அன்னையர் என்னைக் காஞ்சிபுரம் அனுப்பவே அஞ்சினர் என்பதை நூலுள் குறித்துள்ளேன். எனவே அவர்கள் அச்சத்தைப் போக்கும் வகையிலும் மிக எச்சரிக்கையாக நான் நடந்து கொண்டு, நல்ல பெயருடன் காஞ்சியைக் கடந்து சென்னை வந்து சேர்ந்தேன்.

இந்த நூலின நான் என் 55-வது வயதில் (1989) எழுதினேன் எனக் குறித்தேன். அதுவும் நான் தங்கி இருந்த ஏர்க்காட்டு மலை உச்சியில் குறிஞ்சி மாளிகையில் இருந்து எழுதினேன். அந்த மலைவாழ்வும் அதன் இடையில் அமைந்த மக்கள் நிலையும் எனக்கு இதை எழுத ஊக்கம் ஊட்டின. எனது நூல்களில் சில சொற்பொழிவுத் தொகுப்புக்களாக அமைய, சில ஆய்வு நூலாக அமைய, சில பயண நூல்களாகவும் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளன.

இவற்றுள் சிலவற்றை நான் மலை உச்சியிலிருந்தும், தனி இடங்களிலிருந்தும் எழுதினேன். என் 'இளமையின்  நினைவுகள் உதகை மலை உச்சியில் இருந்து எழுதினேன் என்பதை அந்த நூலிலே குறித்துள்ளேன். அப்படியே 'கவிதையும் வாழ்க்கையும்' போன்ற வேறு சில நூல்களையும் அங்கிருந்தே எழுதினேன். '19ம் நூற்றாண்டின் தமிழ் உரை நடையும்'. வேறு சில நூல்களும் கோடைக்கானல் மலை உச்சியிலும் அதைச் சார்ந்த சண்பகனூரிலும் எழுதப்பெற்றவை. 'சமுதாயம் பண்பாடும்' ஈரோடு நகரை அடுத்த பெருந்துறை மருந்தகத்து விருந்தினர் விடுதியில் எழுதப்பெற்றது. சில கட்டுரைகள் குற்றாலத்தில் எழுதப் பெற்றன. அப்படியே இந்த நூலையும் ஏர்க்காட்டு மலையில் எழுதி முடித்தேன்.

இந்த நூல் எழுதி இன்றுப் பத்து ஆண்டுகளிக்குமேல் கழிந்து விட்டன. இதை எழுதின உடனே பதிப்பித்திருக்கலாம். இதற்குப் பிறகு எழுதிய என் நூல்கள் சிலவும் வெளிவந்து விட்டன. ஏனே இதுமட்டும் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவருகின்றது. இதற்கு என்ன காரணம் என்று என்னாலேயே சொல்லமுடியாது. இப்போதாவது இது வெளிவந்தமை குறித்து நான் மகிழ்கின்றேன்.

இந்நூல் எழுதியபோது எனக்கு வயது ஐம்பத்தைந்து --ஓய்வுபெற வேண்டிய காலம். ஒய்வுபெற்ற பின் நிறையப் படிக்கலாம் அல்லது எழுதலாம் என்று எண்ணிய நேரங்கள் உள. எனினும் நான் ஒய்வு பெறுவதன் முன்பே என் அன்னையின் நினைவாக 'வள்ளியம்மாள் கல்வி அறத்' தினைத் தொடங்கினேன். 1968ல் 5 பிள்ளைகளுடனும் மூன்று ஆசிரியர்களுடனும் தொடங்கிய பள்ளி தற்போது 1600 பிள்ளைகளையும் 65 ஆசிரியர்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. பள்ளியின் முதல்வரின் தளரா முயற்சியாலும் ஆசிரியர்தம் உழைப்பினாலும் பெற்றோர்தம் ஒத்துழைப்பாலும் இப்பள்ளி இக் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்ததோடு நல்ல தரத்தினையும் நிலைநாட்டியுள்ளது. நான் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தப் பள்ளிப் பணியில் என்nai மூழ்குவித்துக் கொண்ட காரணத்தாலே என்படிப்பும் எழுத்தும் பெரும் அளவு குறைந்துவிட்டன எனலாம். இன்றியமையாத ஆய்வுக் கட்டுரைகள்-சொற்பொழிவுகள் அடிப்படை பற்றி எழுதிய எழுத்துக்கள் தவிர்த்து மற்றவைகளை நான் நினைக்கவே முடியவில்லை. என் பழைய எழுத்துக்களை ஒருநாள் துருவி ஆராய்ந்த போதுதான் இந்த எழுத்துப் பிரதியும், தென்னாட்டுக் கோயில்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய (250 பக்கம்) மற்றொரு எழுத்துப்பிரதியும் கிடைத்தன. உடனே இதை வெளியிடவேண்டுமென நினைத்து ஆவண மேற்கொண்டேன். (ஆங்கில நூலாகிய மற்றொன்றையும் விரைவில் வெளியிட ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.) என், 'எம்.லிட்.' பட்டத்துக்கு எழுதப் பெற்ற (82 ஆண்டுகளுக்குமுன்) தேவாரம் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையும் இன்னும் வெளியிடப் பெறாமலேயே உள்ளது.

இந்த நூலில் ஒரு சிலரையும் கொள்கைகளையும் சற்று வன்மையாக காட்டியுள்ளதாக நினைக்கிறேன். இன்று எழுதுவேணாயின் இந்த அளவு வேகம் இருக்காது. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய எழுத்தினை அப்படியே விட்டு விடுதலே சரி என்ற எண்ணத்தில் மாற்றம் ஒன்றும் செய்யாமலேயே விட்டுவிட்டேன்.

இந்த நூலை எழுதிய காலத்துக்கும் இதில் காணப் பெறும் காஞ்சி வாழ்வின் காலத்துக்கும் இடையில் கால் நூற்றாண்டு கழிந்தது. அதற்கிடையில் எத்தனையோ மாறு பாடுகள் உண்டாகி விட்டன. அப்படியே இந்த நூல் எழுதிய அன்றைக்கும் இன்றைக்கும்--சுமார் பத்து ஆண்டுகள் இடைவெளியில்--எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. மக்கள் வாழ்க்கை முறை--வாழ்க்கைத் தரம் அரசியல் நெறி, பிறவகைகள் அனைத்திலும் எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. இந்நூலில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப் பெற்றுள்ள சிலர் இன்று மறைந்துவிட்டனர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் என் முன்னவள் திரு. காளப்பர், ஆத்மானந்த அடிகளார் போன்றவர்கள். எனவே நூலில் அவர்கள் வாழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சிகள் பல அவர்தம் கடந்தகால நிகழ்ச்சிகளாக அமைந்துவிட்டன என்பதை இங்கே குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நூலின் வழியே என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டினேன் என்றாலும், இதனால் யாருக்கும் பயனோ பிறவோ விளையும் என்று நான் கருதவில்லை. பல பேரறிஞர் தம் வாழ்க்கை வரலாறுகள் வையத்தில் உலவுகின்றன. தமிழகத்திலும் திரு. வி. க. போன்ற பேரறிஞர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் மக்கள் வாழ்வின் வழிகாட்டிகளாய் கலங்கரை விளக்கங்களாக நின்று நன்கு நிலவும் என்பது உண்மை. அத்தகைய ஒன்று இது அன்று. ஏதோ நான் என் வாழ்வில் பெற்ற அனுபவங்களை எழுதவேண்டும் என்ற ஆசை தூண்டிய காரணத்தாலே இதை எழுதினேன். என் "இளமையின் நினைவுகளை"க் கண்டசில அன்பர்கள்-காஞ்சியில் வாழ்ந்த சில நல்லவர்கள் - அவர்களொடு தொடர்புடைய 'காஞ்சி வாழ்க்கை'யைப் பற்றியும் என்னை எழுதத் தூண்டிய காரணமும் ஒன்றாக அமைந்தது. ஆயினும் அவ்வாறு எழுதப்பெற்ற இந்த எழுத்து பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும்போது அவருள் சிலர் இல்லை. அவர்களும் இருந்து இந்த நூலின் படியினை அவர்கள் கையில் தந்திடும் வாய்ப்பினைப் பெற்றிருப்பேனாயின் நான் இன்னும் பெரிதும் மகிழ்ந்திருப்பேன். எப்படியோ இன்று இந்த நூல் என் நூல் வரிசையில் ஒன்றாக இடம்பெறுகின்றது. இதைத் தொடர்ந்து பெரும்பாலாக அமைந்த என் சென்னை வாழ்வைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றுள்ள என் வாழ்நாளில் பாதிக்கு மேல் சென்னை வாழ்வாகவே அமைந்துவிட்டதோடு. இனியும் இச்சென்னை வாழ்வே நிலைபெறுமோ எண்ணுமாறு செயல்கள் அமைகின்றன. எனினும் சிற்சில சமயங்களில் வற்றையும் விடுத்து, வேறு எங்கேனும் தனி இடத்தைச் சார்ந்து இறையருளில் ஒன்றிக் கிடக்கலாமா என்ற உணர்வும் அரும்புவதுண்டு. எது எப்படியாகும் என்று சொல்ல முடியாத வாழ்வுப் பாதையில், என் பிற்காலம் எப்படி அமையும் என நான் அறுதியிட முடியுமா? எல்லாம் அவன் செயலே என அமைதியுற்று வாழ்ந்து வருகின்றேன்.

எங்கோ கிராமத்தில் பிறந்து எப்படியோ வளர்ந்து பயின்று, எங்கெங்கோ திரிந்து, பச்சையப்பரில் பாதி வாழ்வைக் கழித்து, அன்னையின் பெயரால் அமைந்த பள்ளியின் முழுப்பொறுப்பினையும் ஏற்று, இன்று செயல் புரிகின்ற நான் இனியும் இக்காஞ்சி வாழ்வு பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அதிகமாகக் கூறி உங்கள் பொன்னான நேரத்தையும் வீணடிக்காது இந்த அளவோடு என் எழுத்தினை இப்போது நிறுத்திக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் வணக்கம்.


அ. மு. ப.வின் நூல்கள்

(மொத்தம் 75)

உள்ளவை

ரூ. காசு
சமுதாயமும் பண்பாடும் 10-00
கவிதையும் வாழ்க்கையும் 15-00
தமிழக வரலாறு 15-00
பல்கலைக்கழகச் சொற்பொழிவுகள் 20-00
காப்பியக் கதைகள் 5-00
வாழ்வுப் பாதை (நாவல்) 4-00
வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் 3-00
இளமையின் நினைவுகள் 2-50
கொய்த மலர்கள் 4-00
துன்பச் சுழல் (நாவல்) 2-00
மக்கட் செல்வம் 2-00
பெண் 1-50
மனிதன் எங்கே செல்கிறான் 1-50
மணி பல்லவம் 1.25
தாயின் மணிவயிற்றில் 0-75
தொழில் வளம் 5-00
எல்லோரும் வாழவேண்டும் 3-00
வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் 3-00
வழுவிலா மணிவாசகர் (அச்சில்) 4-00
மலைவாழ் மக்கள் மாண்பு 5-00
வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி 2-50
கவிதை உள்ளம் - 5-00
சிறுவர்களுக்கு (வானொலி) 2-50
வானெலி வழியே 3-00
நாலும் இரண்டும். 2-50
தமிழ் உரைநடை 8-00
வையைத் தமிழ் 3-50
கங்கைக் கரையில் காவிரித் தமிழ் 5-00
வாய்மொழி இலக்கியம் 6-00
19 நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி 7-00
சாத்தனர் 6-00
மு.வ. தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு 5-00
புதிய கல்விமுறை 3-00
Gleanings of Tamil Culture 1-50
  1. நூல் வெளீயீட்டின் போது (1980) எழுதியது.