காரைதீவு கண்ணகையம்மன் கோயில் கிராமிய இலக்கியம்
காரைதீவு கண்ணகையம்மன் கோயில் கிராமிய இலக்கியம்
காரைநகர் கண்ணகையே
கற்புநிறை பெண்ணணங்கே
பாரையெல்லாங் காப்பவளே
பத்தினியே பொன்மகளே
மாரைப் பிய்த்தெறிந்தாய்
மதுரையைப் பற்றவைத்தாய்
ஆரைத்தான் பணிவேனம்மா
ஆத்தாளே உனைவிடுத்து
சோழநாட்டில் பிறந்தவளே
சொல்லரிய தமிழ்மகளே
கீழைப் பாண்டிநாடலற
கிணுகிணுத்ததம்மா உன்சிலம்பு
ஆழக்கடல் ஆண்டசேரர்
ஆளு(ம்)நாடதனில் அணங்காகி
ஈழத்தமிழ் நாட்டிருந்தே
ஈசுபரி நீ அருள்புரிவாய்
கயவாகு கொண்டுவந்த
கடல்கடந்த பரிவாரம்
உயர்வாகக் கொண்டுவந்த
உன்னுருவச் சிலைகளினை
அயலயலாய் இறக்கிவைத்து
ஆலயங்கள் அமைத்தார்கள்
தயவான தயாபரியை
தாழ்பணிந்து தொழுதார்கள்
தேவந்தி அம்மை கையில்
தாங்கிவந்த தென்னகத்து
மூவழகுச் சிலையுறைந்தாய்
மூத்ததமிழ் தம்பிலுவில்
தீவான திருக்காரை நகர்
திடரெடுத்த பட்டிநகர்
ஆவலுடன் கண்ணகையே
அன்னையே நீ குடிபுகுந்தாய்
கண்ணுக்குக் கண்கொடுத்தாய்
கங்கனிடம் காணிகொண்டாய்
பெண்ணுக்குள் பேரொளியாய்
பிறந்தவளே பத்தினியே
விண்ணேகிப் பறந்தவளே
விரிகடல் தாண்டி வந்தாயே
கண்ணகையே கற்புநிறை
காரை தீவுறையும் காவியமே
வைகாசித் திங்களிலே
வாக்கென்றும் தவறாமல்
மையிருட்டுக் குழலாட
மாந்தளிர்மேனியிலே பட்டாட
தையலாரே தாயாரே
தரை மீதிறங்கி வரருமம்மா
கைராசி கண்ணகையே
கற்பு மகராசி வாருமம்மா
நம்புவியில் நிலைத்திருக்க
நாயகி நீ நாட்டம்கொண்டாய்
தம்பிலுவில் பட்டிநகர்
தரணிபுகழ் காரைநகர்
கும்பிடவே குடிபுகுந்தாய்
குலந்தளைக்க மனமுவந்தாய்
கொம்பிலுறை கண்ணகையே
கோயில்கொண்ட காரிகையே
சின்னக்கொம்பாட கும்மியாட
சீர்வசந்தன் ஊஞ்சலாட
வண்ணப்பள்ளுக் கூத்தாட
வழக்குப்பாட உடுக்காட
உன்னடியில் கூடிநின்றோம்
உழுபொங்கல் படையலிட்டோம்
கண்ணகையே காரணியே
காரை மாநகரம் காப்பாயே