உள்ளடக்கத்துக்குச் செல்

காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்/கடவுள் வணக்கம்

விக்கிமூலம் இலிருந்து

காளமேகப் புலவர்
தனிப்பாடல்கள்

1. கடவுள் வணக்கம்

விநாயகப் பெருமான் துதி

திருவானைக்கா விநாயகர் மீது பாடிய செய்யுள் இது. விநாயகப் பெருமானைப் போற்ற அனைத்து நன்மைகளும் வந்தெய்தும் என்கிறார் கவிஞர்.

ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால்—வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவரும் சித்திவரும் தான். (1)

ஏர் ஆனைக்காவில் உறை என் ஆனைக்கு - திரு ஆனைக்காவிலே கோவில் கொண்டிருக்கும் என் அன்னையாகிய பெண் யானை வடிவெடுத்து நின்ற உமையம்மைக்கு, அன்று அளித்த போர் ஆனைக்கன்று தனை - அந்நாளிலே சிவபெருமான் அளித்தருளிய பேராற்றல் வல்ல ஆனைமுகனாகிய பிள்ளையாரப்பனை, போற்றினால் - போற்றி வழிபட்டால், வாராத புத்திவரும் - பிறவற்றான் வந்தடைதற்கில்லாத அறிவுத்திறன் எல்லாம் வந்து வாய்க்கும்; பத்தி வரும் - இறைவன் மீது பக்திமையும் வந்து சேரும்; புத்திர உற்பத்தி வரும் - நல்ல புத்திரர்களைப் பெறுகின்ற பேறும் வந்தடையும்; சத்திவரும் - சகல ஆற்றலும் உண்டாகும். சித்திவரும் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியும் அட்டமா சித்திகளும் வந்து வாய்க்கும்.

'வாராத' என்ற சொல்லை புத்தி பத்தி புத்திர உற்பத்தி சத்தி சித்தி என்றம் எல்லாவற்றுடனே கூட்டி, பிறவற்றான் வந்துறாத அவை அனைத்தும் ஆனைமுகனைப் போற்றினால் வந்து வாய்க்கும் என்று கொள்க. இதனால், வாழ்க்கை நலத்திற்கு வேண்டிய அனைத்தையுமே விநாயகப்பெருமான் தருவான்; அவனைத் தொழுதால் அனைத்தையுமே அடையலாம் என்பதும் கூறினார்.

கலைமகள் துதி

திருமலைராயன் தன் அவையிடத்தே வந்த கவிஞருக்கு இருக்கை தந்து உபசரியாமல் அலட்சியப் படுத்தினான். கலைவாணியின் அருளால் அவனுடைய சிம்மாசனமே வளர்ந்து பெருகிக் காளமேகத்திற்கு இடங்கொடுத்தது. கலைவாணியின் அந்த அருளை நினைந்து சொல்லிய செய்யுள் இது.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்-வெள்ளை
அரியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். (2)

வெள்ளைக் கலை உடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை நிற ஆடையை உடுத்தவளாகவும், வெண்ணிற அணிகளைப் பூண்டவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவினிலே வீற்றிருப்பவளான கலைவாணியே, வெள்ளை அரியாசனத்தில் - மாசற்ற சிம்மாசனத்திலே, அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய். அரசராகிய இத் திருமலைராயனோடு என்னையும் சமநிலையிலே வீற்றிருக்கும் படியாக அருளிச் செய்த தாயாவாள். 'அவள் மலரடியைப் போற்றுகின்றேன்' என்பது கருத்து.

தம்மை மதித்து உபசரியாத மன்னவன் நாணுமாறு அவனுக்குச் சரியாகத் தம்மை அமரவைத்த கலைவாணியைத் துதிக்கிறார். கலைவாணியின் அருள் தமக்கு இருக்கிறதென்ற உண்மையை அரசனும் அந்த அவையினரும் அறியப் புலப்படுத்தியதும் ஆம். தன் மகன் துயருறக் காணப்பொறுக்காத தாய்மை உளத்தினையே கலைவாணியும் அவ்விடத்தே மேற்கொண்டாளாதாலால் அவளையும் 'தாய்’ என்றனர்

'அரசரோடு சரியாசனம் வைத்த’ என்றதால், பிற புலவர்களினுங் காட்டில் தம்மை உயர்த்திவைத்த சிறப்பையும் வியந்து நன்றி பாராட்டுகிறார் எனலாம்.