காளிதாசன் உவமைகள்/இயற்கை
முழு நிலா நீல வானிலிருந்து நம்மேல் தன் அமுதுக் கதிர்களைப் பொழிகிறான். அந்நிலவின் இன்பத்தில் நிலவில் உள்ள மறுவைப்பற்றி எவரேனும் நினைக்கிறார்களா? அதைக் காண்கிறார்களா? இல்லையே.
அதுபோல், நற்குணங்கள் நிறைந்து குவிந்த இடத்தில் ஒரு குறை இருந்தால் அது அக்குணத்திரளில் மறைந்து போகும். கு. 1:3
மழைக்கால முகில் இனிய, ஒலி ஒளியுடன் செல்கிறது. முகிலி மனைவியாகிய மின்னல் இணைந்து செல்கின்றது. மழை பொழிந்து மக்களையும், பயிர், செடி கொடி மரங்களையும், விலங்கு பறவைகளையும், மகிழ்வித்து அவை செல்கின்றன. மழை ஓய்ந்ததும் வானவில் தோன்றுகிறது.
திலீபனும் சுதட்சினையும் இனிய ஒலியுடன் தேரில் காட்டுக்குப் போகும்போது பொருள்களை அள்ளி வீசி அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டு போனார்கள்.அவர்கள் கடந்ததும், அவர்கள் ஏறிச் சென்ற வண்ணத்தேர் வானவில் போலக் காட்சி தந்தது. ர. 1:39
மழை, கடலிலும் நிலத்திலும் மலையிலும் பெய்கிறது: இடத்திற்கேற்பப் பயன் தருகிறது. கடலில் முத்துச்சிப்பி ஒன்று அங்காந்திருக்கிறது. அதில் மழைத்துளி விழுந்ததும் சிப்பி கருத்தரித்து, உரிய காலத்து ஒளிரும் முத்தை ஈனுகிறது.
ஆசிரியன், மாணவ மாணவியர் பலருக்குப் பல கலைகளைக் கற்பிக்கிறான். பயில்வோருள் ஒரு மாணவன், மாணவி, கலையைத் தன்னிடத்துத் தாங்கி உரிய காலத்து வெளிப்படுத்துகின்றனர்.அதனால் மாணவனோ, மாணவியோ, ஒளிர்கின்றனர். புகுந்த இடத்தின் பெருமையால் கலையும் உயர்கிறது. மா. 1:6
தேவர்கள் பயிர்கள்: இராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால், முகில், அவர் உதிர்த்த வாக்கு அமிழ்தம். பயிர் வறட்சியால் வாடியது; மழை பொழிந்தது; நீரால் வாட்டம் மறைந்தது.
தேவர்கள் இராவணனுடைய கொடுமையால் வாடினர். திருமாலின் திருவாக்கால் அவர்களுடைய வாட்டம் மறைந்தது. ர. 10:48
மறைந்திருந்த தசரதன் ஒலியைக் கொண்டே நீருண்ண வந்த யானை எனத் தவறாகக் கருதி சிரவண குமாரனை அம்பு எய்து கொன்று விட்டான். குமாரனுடைய தந்தையிடம் சாபம் பெற்றான். இதை வேறு எவரும் அறிகிலர்.
கடலுக்கு அடியில் வடவை என்ற ஊழித்தீ உள்ளது. பல ஆறுகளின் நீர் கணந்தோறும் கடலிற் பாய்ந்து கொண்டிருந்தாலும், அந்நீரால் கடல் பொங்காமல் காப்பது அத்தீ அத்தீ பரவாமல் காப்பது கடல் நீர் ஆயினும், ஊழிக்காலத்தில் அத்தீ பரவி, கடலையும் உலகையும் அழிப்பது உறுதி. தசரதன் மனத்தில் பாய்ந்த சாபம் யாரும் கண்டு அறியாத தீயாய் நின்றது. அவன் தண்மையும், பரப்பும், ஆழமும் உடைய கடலாக, அத்தீயைத் தாங்கும் ஆற்றல் படைத்திருந்தான். ஆனால், அக்கடல் ஒரு காலத்தில் வற்றப்போகிறது; சாபத்தீ ஒங்கப் போகிறது; இவன் அழியப்போகிறான். ர: 9:82
தன்னால் நிராகரிக்கப்பட்ட காதலியாகிய சகுந்தலையை எண்ணி வேறு எத்தொழிலிலும் ஈடுபடாமல், பித்தனைப்போன்று துஷ்யந்தன் இருந்தான். தேவர் தலைவன் அவனை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக மாதவியை அனுப்பித் துண்டுகிறான்.
கிளறினால் தீ கொழுந்துவிட்டு எரியும்; அடித்தால் பாம்பு நிமிர்ந்து படம் எடுக்கும். கொழுந்தும் படமும் முறையே தீயிலும் பாம்பிலும் இயற்கையாக உள்ளனவே. எனினும், பிறர் துண்டுவதால் இவை வெளிப்படுகின்றன. மனிதப் பண்புகளும் கிளர்ச்சியால் ஓங்குகின்றன. சா. 6:31
பருவத்திற்கேற்ப உருவும் திருவும் ஒருங்கே பெற்ற இந்து மதி மகவைப் பெற்றபின் இளமையின் முழுப்பொலிவுடன் பூங்காவில் அஜனுடன் இன்பத்தில் திளைத்திருந்த பொழுது அவள் மீது ஒரு மாலை விழுந்தது; மாலையுடன் அவளும் மயங்கி வீழ்ந்தாள் இறந்தாள். அஜனும் இறந்து இந்துமதியின் மேல் வீழ்ந்தான்.
விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது; அது எண்ணெயுடனும் எரிகின்ற திரியுடனும் கவிழ்கிறது: ஒரு கணத்தே திரி அணைகிறது; கொட்டிய எண்ணெய் மட்டும் தனியே நிற்கிறது. ர. 8:38
காட்டில் கோடையால் நிலம் வெந்து பிளந்திருக்கிறது. அதில், முதல் மழைத்துளிகள் வீழ்தலால் மண்ணின் மணத்துடன் கூடிய ஆவி எழும்புகிறது. அவ் ஆவி செங்காந்தள் முகையின் மேல்படுகிறது. பூ விரிகிறது.
இராமன் இக்காட்சியைச் சீதைக்குக் காட்டித் தம் திரு மணத்தின் போது நிகழ்ந்ததை நினைவூட்டுகிறான்.
ர. 13.25
கட்புலன் ஒன்றே எனினும் ஒளியில் பொருள்களைக் காணும் கண் இருளில் காண்பதில்லை. இருளில் பொருள்களைக் காண கட்புலன் மட்டும் போதாது; விளக்கின் ஒளியும் வேண்டும். ஒருவன் இடையூறுகள் நீங்கிப் பயன் பெறுவதற்கு வேண்டிய கருவிகள் இருந்தாலும் துணையும் வேண்டும். நல்ல துணையைக் கொண்டே ஒருவன் இடையூறுகளைக் களைந்து தன் குறிக்கோளை அடைய முடியும்.
மா.1:19
முகிலே அளகாபுரிப் பெண்கள் மின்னல் போன்ற உருவம் உடையவர்; வானவில் போன்ற அழகிய வண்ண ஆடைகளை அணிபவர்; அங்குச் சித்திரங்கள் நிறைந்த அரங்குகளில் முழங்கும் இடிபோன்ற முரசம் பாடலுக்கும் ஆடலுக்கும் இசைய அதிரும்; நீர் நிறைந்தவாவிகளும், விண்மீன்கள் போன்ற மணிகள் குவிந்து வானைத் தொடும் உயர்ந்த மாளிகைகளும் அங்கு உள; உனக்குப் பழக்கமான சூழ்நிலை அவ்விடத்தும் உண்டு; புதிதாக ஓரிடத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே உனக்கு உண்டாகாது.
மே. 2:1
கொண்டல் தென் நாட்டைக் கடந்து பனிமலையில் ஏறு கிறது; அங்கு மலைத்தொடரிலிருந்து தெளிந்த நீருடன் கங்கை இறங்குகிறது. ஏறும் கரு முகில் இறங்கும் நீருள் படிவது கரிய யானை ஆற்றுக்கு எதிரே தன் உடலின் பிற் பகுதியை நீட்டிப் படுத்துக் குளிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
முகிலின் கருநிழல் கங்கையின் வெண்ணீரில் சற்றுத் தொடர்ந்து செல்வது யமுனையும் கங்கையும் வேறு இடத்தில் ஒன்று கூடுகின்றனவோ என வியக்கத் தகும் காட்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
மே. 1:51
சீதை கருவுற்றவள் முன் வனவாழ்வில் நுகர்ந்த காட்சிகளையும் வனத்தில் உள்ள அன்னப்பறவைகள், அன்போடிருந்த பெண்கள்,தவ வனங்கள் ஆகியவற்றைக்கான விரும்பினாள்.தன் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, இலக்குமணனுடன் தன்னைக் கங்கைக் கரைக்குக் கணவன் அனுப்புவதாக நினைத்துக்கொண்டிருந்தாள்: இராமனைக் கற்பகமாகவே கருதினாள். ஆனால், அவன் கத்தி போன்ற கூர்மையான இலைகள் உள்ள வாள் இலை மரமாக மாறியதை, பாவம் அவள் அறியவில்லை. ர. 14:48
ஒரே நீர்நிலையில் தாமரை ஒரிடத்தும் ஆம்பல் மற்றொரு இடத்தும் உள்ளன. விடியற்காலையில் தாமரை மலர்கள் அலர, ஆம்பல் மலர்கள் கூம்புகின்றன.
இந்துமதியின் திருமண மண்டபத்தில் அஜனை அவள் மலையிட்டதால் முகம் மலர்ந்த கூட்டம் ஒன்று; ஏமாற்றத்தால் வாடிய அரசர் கூட்டம் மற்றொன்று. ஒன்றின் மலர்ச்சியில் மற்றதன் வாட்டம் இயற்கை. ர.6:86
உறுதியாகக் கட்டப்பட்ட பல மாடங்கள் கொண்ட அழகிய மாளிகை சிறந்த காவல் உடையது; அதன் மீது ஆலமரத்தின் சிறு விதை விழுந்து முளைத்துவிட்டது. என்ன முயன்றாலும் அவ்விதையில் தோன்றிய மரம் அம்மாளிகையை அழித்தே தீரும். விதை சிறிது:ஆனால் அழிவோ பெரிது. ர. 8:90
நாள் ஒளிவீசிய வெய்யோன் செக்கர் வானில் கறைபடிந்த கைகளுடன் மறையும் போது, கீழ்த் திசையில் குளிர்மதி எழுகிறது. சற்று நேரத்தில் அம் மதியின் அமுதக் கதிர்கள் தன் ஒளியைப் பரப்பி மக்கள் மனத்தை மகிழ்வித்து, பயிர்கள், மூலிகைகள் வளர உதவும்; மேல் திசையில் உள்ள இரத்தக் கறை யும் நீங்கும். மதி ஞாயிற்றினின்று பெற்ற ஒளியே ஞாயிற்றால் உண்டான வெம்மையை நீக்க உதவுகிறது; வெப்பத்தால் வருந்திய மக்களை மகிழ்விக்கிறது.
பரசுராமனின் வீழ்ச்சியும் தசரத இராமனின் எழுச்சியும் ஒருங்கே நிகழ்ந்தன. ர. 11:82
விசுவாமித்திரன் சூரிய காந்தக்கல்; அவனிடம் படைக் கலங்கள் இருந்தன. எனினும், அவற்றை இயக்க அவனால் இயலாது. இராமன் சூரியக் கதிர்; படைக்கலங்களை அவனிடம் அருளியதால் அவை இராமன் ஏவின செய்து நின்றன; அறந்தலை நிறுத்தவும் அரக்கரை அழிக்கவும் ஆற்றல் பெற்றன. ர. 11:21
பனிக்காலத்தில் மங்கிய திங்கள் கீழ்வானத்திலும், மாலையில் விழப்போகும் செங்கதிர் மேல் வானத்திலும் காணப்படுகின்றன. பனிமண்டலம் சூழ்ந்துள்ளது. சில மாங்களுக்கு முன்பு மழை ஒய்ந்து, வேனிற்காலத்தில் நீல நிறவானில் திகழ்ந்த முழு, மதியோ இது, என்ற ஐயம் எழுகிறது. இன்றோ செங்கதிர் மறைவுக்குப் பின்னரே மதியைச் செவ்வனே காணமுடியும்.
காமன் மனைவிரதி, ஒளி குன்றி, தன் முகத்தைப் பிறருக்குக் காட்டவும் நாணி ஒடுங்கியுள்ளாள். சிவனுடைய சீற்றம் தணிந்து, அவள் தன் நாயகனுடன் சேரும் காலத்தை எதிர்பார்த்து நாள்களைக் கழிக்கிறாள். கு. 4:46
புட்பக விமானத்தில் சீதையுடன் இலங்கையிலிருந்து திரும்பும் இராமன் துரத்தில் விமானம் வரும்போது, “அதோ சரயூ என் தாய்; என் தந்தையால் கைவிடப்பட்டாள்; துணை அற்றிருந்தாள்; இன்று, குளிர்ந்த காற்றுடன் கூடிய தன் அலைகள் என்னும் கைகளை நீட்டி என் தாய் என்னை அணைக்க விரும்புகிறாள்.” எனச் சீதையிடம் கூறுகிறான். ர. 13:63
இராம இலக்குமணரைக்கண்ட அவர் தாய்மார்கள், கோசலையும் சுமித்ரையும்,பதினான்கு ஆண்டுகள் அவர்களைப் பிரிந்ததால் உகுத்த சோகக் கண்ணிர் வெம்மையானது. இராம இலக்குமணரைக் கண்ட மகிழ்ச்சியால் உண்டான கண்ணீர் தண்மையானது. இமயத்திலிருந்து வந்த பனிநீர் வெந்நீரைத் தண்ணீர் ஆக மாற்றுவது போல, தாய்மாரின் ஆனந்தக் கண்ணீர் சோகக் கண்ணீரைக் குளிர்வித்தது. ர. 14:3
யமுனையும் கங்கையும் கலவாமல் தனித்தனி நீரோட்டங்களாகச் சிறிது தூரம் செல்கின்றன. பிறகு, ஒளிரும் நீல மணியும் முத்துச்சரமும் போலே, கலந்தும் கலவாமலும், கருநீர்த் துளிகளும் வெண் நீர்த்துளிகளும் தோன்றச் செல்கின்றன. பின், ஆங்காங்கு கருங்குவளை மலரும் வெண் தாமரையும் பின்னிக் கட்டப்பட்ட சரம் போலே பெருநீர்த்துளிகள் தோன்றுகின்றன.
ஓர் இடத்தில், பெரு நீர்த்துளிகள் நீர்த்தொகுதி கருநில அன்னங்களும் வெண்ணிற அன்னங்களும் தனித்தனிக் கூட்டங்களாக அமர்ந்தன போலவும், வேறோர் இடத்தில், காரகில் இலையாகிய தரையின் மேல் வெண் சந்தனக் கலவையால் தீற்றிய கோலம் போலவும் தோன்றுகிறது.
இனி, பிரிந்துள்ள யமுனை நீரும் கங்கை நீரும் சிறிது சிறிதாகக் கலக்கின்றன. கங்கையின் நீர் மேலும், யமுனையின் நீர் கீழும் பரவுவது இருள் குடிகொண்ட மரப்பொதும்பரின் இலைகளுடு நிலவு ஒளி உள் புகுவது போன்றுள்ளது. யமுனையின் நீர் மேலும் கங்கையின் நீர் கீழும் பாயும் இடம் நீல வானில் வெண் மேகங்கள் பரவுவன போலத் தோன்றுகிறது.
ஓரிடத்தில், கரும் பாம்பை அணிந்து வெண்பொடி பூசிய சிவபெருமானுடைய திருமேனி போலக் கருநீர்ச் சுழல்கள் வெண்நீர்த்திரளில் காணப்படுகின்றன.
கங்கையின் வெண் நீரினும், யமுனையின் கரு நீர் குறை வேனும் விரைவுடையது. நெடுந் துரம் சென்ற பின் யமுனை கங்கையுடன் இரண்டறக் கலந்து தன் கருமைச் சிறப்பை இழக்கிறது. ர. 151:57