கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/பந்தெறி முறை

விக்கிமூலம் இலிருந்து

5. பந்தெறி முறை (BOWLING)

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தெறிவதும், எறிந்து வரும் பந்தை மட்டையால் அடித்து அனுப்புவதும் அடித்தாடிய பந்தைத் தடுத்தாடி விக்கெட்டைக் குறிபார்த்து எறிவதும் தான் முக்கியத் திறன் நுணுக்க முறைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த பந்தெறி முறை, எத்தனை முறை மாறி மாறி, எவ்வளவு தடவை சிக்கலுக்கும், சச்சரவுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாகி, ஆர்ப்பாட்டம் நிறைந்த விசுவரூபம் எடுத்து, விளையாட்டு வல்லுநர்களைக் கலக்கித் தெளியவைத்து, நல்லதொரு முடிவினை எடுக்க வைத்தது என்ற வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கும் போது, ஒரு பெரும் திகில் மிக்கக் கதை ஒன்றைப் படிப்பது போன்ற உணர்வினை நாம் பெறுகிறோம். கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மெல்ல வளர்ந்து வரத் தொடங்கிய நாட்களில், பந்தடிக்கும் ஆட்டக்காரருக்கு எதிராகப் பந்தெறியும் ஆட்டக்காரர்கள், கீழாக கையைக் கொண்டு சென்று உருட்டுவது போல பந்தை எறிந்தார்கள். (Under Arm Bowling) விக்கெட்டுகள் புல் தரையில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த போது, பந்து புல்லில் பட்டு பலவாறு பல பக்கமாகத் திரும்பி விரைந்து செல்லும் போது, (Turn) வளைந்த தடியை மட்டையாகக் கொண்டு அடித்தாடத் தடுமாறிய காலமாக, ஆரம்ப கால ஆட்ட முறை அமைந்திருந்தது.

விக்கெட்டுகள் திருத்தமுற அமைக்கப் பெற்று, சீராக மாறியபோது, கீழாக எறிந்து ஆடிய எறிமுறை பலனளிக்கவில்லை. மாறாக, அடித்தாடும் ஆட்டக்காரருக்கு விரைந்து அடித்தாடி ஒட்டம் எடுக்க அது லாவகமாக அமைந்து விட்டிருந்தது. அதனால், பந்தெறியும் முறையில் புதுமையாக மாற்றம் இருந்தால் தான், அடித்தாடுவோரை ஆட்டமிழக்கச் செய்யமுடியும் என்ற அவசியமும் கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டது. கீழாக எறிவதற்குப் பதிலாக, கையை வளைத்து வட்டமிட்டு எறியும் எறி முறை (Round arm Bowling) 1807ம் ஆண்டு புதிதாக ஒன்று தோன்றியது. அதைத் தொடங்கி வைத்தவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஜான் வில்லிஸ். (John Willies) என்பவர், அது போன்ற அரிய யோசனை எப்படித் தோன்றியது என்றால், கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வீட்டிலே கிரிக்கெட் ஆட்டத்தை ஜான்வில்லிஸ் விளையாடிப் பழகிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை கிறிஸ்டினா என்பவள், பந்தெறிந்து கொண்டிருந்தாள். கிறிஸ்டினா அணிந்திருந்த கவுன் கம்பி போன்றவற்றால் (Wire) சுற்றிலும் பின்னப்பட்டு, குடை ராட்டினம் போன்ற அமைப்பில் சுற்றளவில் விரிந்து இருநத்தால் (Crinoline). பந்தைக் கீழாகத் தூக்கி எறிய முடியாமல் கவுன் தடுத்தபோது, அவள் கையை வளைத்து பக்கவாட்டிலிருந்து தான் எறிய வேண்டியிருந்தது. அப்படித்தான் எறிய முடிந்தது. பந்தடித்துக் கொண்டிருந்த ஜான்வில்லிசுக்கு இது ஆச்சரியமாக இல்லாமல், இப்படி எறிந்து ஆடினால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. அதையே நன்கு பழகிக் கொண்டு, பல ஆண்டுகள் எறிந்தாடிக் கொண்டிருந்தார். ஆனால் 1822ம் ஆண்டில் நடந்த போட்டிகளில், ஜான் வில்லிஸ் புதுமாதிரியாக பந்து எறிந்தபோது,'முறையிலா பந்தெறி' (No Ball) என்று நடுவர்கள் கூறியதால், கோபமடைந்த ஜான் வில் லிஸ் மைதானத்தை விட்டே வெளியேறிவிட்டார். அவர் சென்ற விதத்தைக் கூற வந்த ஒரு சரித்திர ஆசிரியர், 'கோபமடைந்த ஜான், தன் குதிரைமீது ஏறிக்கொண்டு, வெளியேறினார். மைதானத்தை விட்டா அல்ல! கிரிக்கெட் சரித்திரத்தை விட்டே' என்கிறார். ஜான் வில்லிஸ் இறந்தபோது, அவரது கல்லறையில், ஆண்மை நிறைந்த ஆட்டத்தின் தாளாளர்போல் ஆடிய ஜான் வில்லிஸ், கைவளைத்து எறிகின்ற ஆட்டமுறையை முதன் முறையாகக் கண்டு பிடித்து ஆடினார்' என்று எழுதப்பட்டிருந்தது. ஜான் வில்லிஸ் வெளியேறினாலும், பந்தெறிமுறையை யாரும் தங்கள் நினைவிலிருந்து வெளியேற்றி விடவில்லை. 1827ம் ஆண்டு வரை தொடர்ந்து இந்த கைவளைத்து எறியும் ஆட்சிமுறை தொடர்ந்து தான் வந்தது. 1827ம் ஆண்டு, இங்கிலாந்துக்கும் சசக்ஸ் என்ற இரு குழுக்களுக்கும் மூன்று போட்டிகள் சோதனையாக (புது எறிமுறையைப் பற்றி) நடைபெற்றன. சசக்ஸ் பகுதியில் இருந்த வில்லியம் வில்லி ஒய்ட், ஜேம்ஸ் பிராட்ரிட்ஜ் இருவரும் சிறப்பான முறையில் புது எறியை எறிந்து காட்டினார்கள். இம்முறை சரிதான் என்று, மெரிலிபோன் கிரிக்கெட் சங்கமும் (M.C.C.) ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. 1928 ம் ஆண்டு இந்த விதிமுறை அமுலுக்கு வந்து, ஆட்டத்தில் பங்கு கொண்டது. கை வளைத்து எறிகின்ற ஆட்டமுறை வந்தபோது, ஆடுகளங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படாத நிலையினில்தான் இருந்தன. 1850ம் ஆண்டுவரை, கிரிக்கெட் மைதானத்தில் உள்ள புல்லினை ஆட்டு மந்தைகள் வந்து மேய்ந்தது. மேடு பள்ளம் நிறைந்த தரையாக மாற்றி வைத்திருக்கும் அவலநிலையிலே தான் மைதானங்களும் இருந்து வந்தன. என்றாலும், ஆட்டத்தில் மந்த நிலையே வராத, விறுவிறுப்பான வளர்ச்சி நிலைதான் தொடர்ந்து இருந்து வந்தது. 1862ம் ஆண்டு, பந்தெறிமுறையில் மேலும் ஒரு புதிய திருப்பம் உண்டாயிற்று, இங்கிலாந்து, சர்ரே எனும் இரு குழுக்கள் ஆடிய போட்டி ஆட்டம், ஒவல் மைதானத்தில் நடைபெற்றபோது, எட்கர் வில்லிஷர் (Edgar willisher) என்பவர், முழங்கைக்கு மேல் அவர் முன் கை வராமல் பந்தைச் சுழற்றி எறியும் தன்மைக்கு மாறாக, தோளுக்கு மேலே முன்கையை உயர்த்தி (Overhand Bowling) எறியத் தொடங்கினார். நின்றிருந்த நடுவர், அதை முறையிலா பந்தெறி என்று அறிவித்தார். கோபமடைந்த எட்கர் மைதானத்தைவிட்டு வெளிவர, அவரது குழுவினரும் ஆட்டத்தை ஆடாமல் கூடவே வெளியேறி வந்தனர். அதனால் ஆட்டம் இடையிலே நின்று போனது.

இத்தகைய சூழ்நிலை அமைந்ததும், இதனை ஆராயவேண்டிய அவசியநிலைக்கு எம்.சி.சி.நிர்வாகிகள் ஆளாயினர். பல முறை சிந்தித்து, ஆராய்ந்து, கலந்துரையாடி, 1864ம் ஆண்டு ஜூன் மாதம் 16ந் தேதி, கையுயர்த்தி எறியும் முறை, விதிக்குட்பட்ட சரியான எறி முறைதான் என்று அங்கீகரித்தனர்.

கையுயர்த்தி எறிய எறிய, பந்தின் வேகம் அதிகமானதால், பந்தடித்தாடுவோரும் பாதுகாப்பாக ஆடவேண்டிய நிலைக்கு ஆளாயினர். பந்தாடும் தரையும் (Pitch) பள்ளம் மேடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அத்யாவசியமும் ஏற்பட்டது. அதன் பயனாக, 1870ம் ஆண்டு லார்ட் மைதானத்தில் இரும்புருளை (Roller) வைத்துப் பந்தாடும் தரையை உருட்டிவிடும் முறை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அல்லாமல் 1872ம் ஆண்டு, தரைப்பகுதியை உருட்டுவதோடு நின்று விடாமல், பத்திரமாக ஆட்டத்திற்கு முன்பு முடிவைத்துக் காக்க வேண்டும் என்கிற புதிய முறையும் பிறந்தது. சுழல் பந்தாக எறியும் முறையை (off-spin) இங்கிலாந்தைச் சேர்ந்த லாம்பர்ன் (lamburn) என்பவரும், விரைவாகப் பந்தை சுழலவிடும் எறிமுறையை (Swing Bowling) நோவா மேன் (Noah Mann) என்பார் கீழாகப் பந்தை எறியும் முறையிலும், எட்மண்ட் ஹிங்லி (Edmand Hinkly) பின்பார் பந்தைக் கைவளைத்து எறிவதிலும், கிங், கிரிஸ்ட் (King & Hirst) என்பார் கையுயர்த்தி எறியும் முறையைக் சின்டுபிடித்து எறிந்தனர் என்ற பெருமையை அடைந்தனர்.

முறையிலா பந்தெறி என்பது எவ்வாறு தோன்றியது. பிறகு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எவ்வாறு பந்தெறியும் முறையில் புதிய நுணுக்கமும், திறமையும் ஏற்பட்டது என்பதையெல்லாம் மேலே கண்டோம். இனி எட்டாத பந்தெறி (Wide Ball) என்ற விதிமுறை எவ்வாறு ஏற்பட்டது என்பதை தொடர்ந்து காண்போம்.