கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயம் நடந்த விதம்
முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம் ஒரேநாள் மட்டும்தான் நடந்தது. என்றால், போட்டியும் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. அதுதான் ஓட்டப் போட்டி(Foot race) அந்த ஒருபோட்டியில் வெற்றிபெறுவதற்குள், வீரர்கள் பலமுறை அதாவது கால் இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என்று அடைய மிகவும் சிரமப்பட்டுத்தான் ஓடவேண்டியிருந்தது அவர்கள் ஓடிய தூரம் 215 கெஜ தூரம்தான்.
அதிகாலையிலேயே ஓட்டப்போட்டி ஆரம்பமாகிவிடும். அதிகாரிகள் அனைவரும், பந்தயம் முடிவு பெறுகின்ற இறுதிக் கோட்டில், தங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான உயர்ந்த முக்காலிகளில் அமர்ந்துகொண்டு விடுவார்கள். ஒரு தேர்வோட்ட முறையில் (Heat) ஓடுவதற்கு 4 பேர்தான் அனுமதிக்கப்பட்டனர். ஆகவே அந்த நான்கு பேர் யார் யார். என்பதற்காகச், சீட்டுப் போட்டு பெயர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களே ஓடவும் அனுமதிக்கப்பட்டனர்.
ஓடத்தொடங்கும் கோட்டில் வந்து அவர்கள் நிற்பார்கள். அந்தக் கோடு வெண் சலவைக் கல்லால் ஆக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஓட்ட முடிவெல்லைக் கோடும் (Finishing Line) தங்கமுலாம் பூசியக் கற்களால் பதிக்கப்பெற்றிருந்தன. அங்கே தான் அதிகாரிகள் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வீற்றிருந்தனர்.ஓட்டத்தைத் தொடங்கி வைக்க இப்பொழுது விசில் அல்லது துப்பாக்கி வெடிச் சத்தத்தைப் பயன்படுத்துகின்றார்கள். அந்தக் காலத்தில், விசிலோசைக்கும் வெடியோசைக்கும் பதிலாக, முரசத்தைப் பயன்படுத்தினார்கள், முரசம் முழங்கினால் ஓடவேண்டும் என்ற விதிக்கேற்ப வீரர்கள் ஓடி வெற்றி பெற்றார்கள்.
வீரர்கள் ஓடிய வேகத்தையும் நேரத்தையும் குறிக்க, இன்றுபோல் அன்று நிறுத்துக் கடிகாரம் (Stop watch) இல்லை. ஆகவே, ஓட்ட நேரத்தை, முயல் ஓடியது போல வேகமாக ஓடினான், குதிரைபோல விரைவாக ஓடினான் என்பதற்காக, முயல் வேகம், குதிரைவேகம் என்று கணக்கிட்டுக் கொண்டனர். இவ்வாறு நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரனின் பெயர் கரோபஸ் என்பதாகும்.
ஒரே ஓட்டப் பந்தயம் என்று இருந்தது 13வது ஒலிம்பிக் பந்தயத்தில் மாறியது. ஓட்டத்தின் எல்லையைப் பல அளவுகளில் நிர்ணயித்து, பல பிரிவுகளாக்கி, அவற்றிலே போட்டிகள் நடத்தினர். இதனால், பந்தயங்கள் நடக்கும் நேரமும் அதிகமாகியது. இளைஞர்களுக்கு ஓட்டப் பந்தயம், அத்துடன் குத்துச்சண்டை, மல்யுத்தம், தட்டெறிதல், தேரொட்டப் போட்டிகளும், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் சேர்ந்துகொண்டன.
காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகள் கூடலாயின, 76வது ஒலிம்பிக் பந்தயங்களின்போது, போட்டி நிகழ்ச்சிகள் பெருகிப் போகவே, நடத்துகின்ற நேரமும் மாறிக்கொண்டே வந்தது. போட்டி நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறுகின்றது என்பதை நிர்ணயிக்க முடியாததால், இரவு நேரங்களில்கூட நடத்துகின்ற நிலை ஏற்பட்டது. அதனால் போட்டியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க அந்நிலையே காரணமாயிற்று, பகல் முழுதும் தேரோட்டப் போட்டியை நடத்திவிட்டு, எங்களை இரவு நேரத்திலே, நிலா ஒளியிலே, குத்துச் சண்டைபோட வைக்கின்றீர்களே என்று குத்துச்சண்டை வீரர்க்ள இதயம் குமுறி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே தான் வரலாயின. அதனால், ஒரே நாள் நடந்துவந்த பந்தயம் கி.மு.5-ம் நூற்றாண்டில், 5 நாள் பந்தயமாக மாறியது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்பந்தயங்களை அமைதியின் சின்னம் என்றே எல்லோரும் கருதினர். அதற்குரிய காலமும் பத்துமாதம் என்றே கூறினர். தங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமையும் விரோதமும் நிறைந்திருந்தாலும், பந்தயங்களை மிக மிகப் பக்தியோடும் பண்போடும் கிரேக்கர்கள் நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.