கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பிறந்த மேனியுடன் போட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. பிறந்த மேனியுடன் போட்டி

ஒலிம்பிக் போட்டியில் ஓடிய, தாண்டிய வீரர்கள் அனைவரும் பிறந்த மேனியுடனேயே போட்டியிட்டனர் என்றால் நமக்கு ஒரே வியப்பாக இருக்கிறதல்லவா! பைத்தியக்காரர்கள் என்று நமக்குப் பேசத் தோன்றுகிறதல்லவா! நமக்கு வியப்பாக இருப்பது அவர்களுக்கு அது வியப்பாக இல்லை, ஏன்? வெட்கமாகக்கூடத் தோன்றவில்லை. தங்களுக்கு அதுதான் கௌரவம் என்றே எண்ணி திருப்தியுற்றனர்.

கேவலம் மானத்தைக் காக்கும் உடை கூடவா இல்லை என்றால், அவர்களுக்கில்லாத ஆடையா! பின் ஏன் அவர்கள் பிறந்த மேனியுடன் நிர்வாணமாகப் பந்தயத்தில் பங்கு கொண்டனர்? அதுதான் அவர்களின் குறிக்கோள். தாங்கள் பெற்றிருக்கும்பெருமைமிக்க உடலின் பேரழகை, கலையழகு சொட்டும் கட்டுமஸ்தான தேகத்தை, தான் ரசித்து அனுபவிப்பது போலவே, மற்றவர்களும் காண வேண்டும் ரசித்து மகிழ வேண்டும் என்று விரும்பினர்.

உடலழகை ஊரே பேணுகின்றது! அவரவர் காத்த உடல் அழகை, ஆடை மறைக்காத ஆற்றலுள்ள தேகத்தை, அத்தனை மக்களும் அப்படியே கண்டு ரசிக்க வேண்டும் என்றே எண்ணினர். மத சம்பந்தப்பட்ட விழாவாக இருந்தாலும், உடல் வலிமைக்கும் உகந்த விழாவாக அது இருந்ததால், நாடே ஏற்றுக் கொண்டது, போற்றி நின்றது.

ஆண் இனம் போற்றியது என்றால், பெண் இனம் என்ன செய்தது? தடையை ஏற்றுக் கொண்டது. பெண்கள் யாரும் பந்தயக் களத்திற்குள்ளே நுழையவே அனுமதிக்கப்பட வில்லை. பின், போட்டியாளர்களாக எப்படி உள்ளே நுழைய முடியம்?

நாடே கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் போது வீரர்களைப் பெற்றெடுத்த வீராங்கனைகள். வீர மூட்டி விவேகம் ஊட்டி, வீரர்களை அல்லும் பகலும் காத்து வளர்த்த அன்னைமார்கள் அனைவரும். வீட்டிற்குள்ளேயே ஏங்கிக் கிடந்தனர். ஓங்கி உயர்ந்த புகழில் ஒலிம்பிக் பந்தயம் நடக்கும் போது உள்ளத்தில் ஏக்கத்தோடு ஒதுங்கிக் கிடந்த பெண்கள், மறைந்திருந்தாவது பார்க்கக் கூடாதா என்றால், ஏமாற்றிப் பார்க்கும் பெண்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? மரண தண்டனை!

விளையாட்டை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் வீரத்தாய்க் குலத்திற்குப் பரிசு-மரண தண்டனை! அதுவும் எப்படி என்றால், குற்றவாளியாகக் கருதப்பட்ட பெண்ணை மலையுச்சிக்குக் கொண்டு போய், அங்கிருந்து கீழே தூக்கி எறிந்து விடுவார்கள். உடல் சிதறிப் போகும் மரண தண்டனையை மாபாவிகள் நிறைவேற்றியதால்தான் அந்தத் திடல் பக்கம் போகவே அனைவரும் அஞ்சினர். அடங்கினர்.

அச்சம் எத்தனை நாள் ஆட்டிப் படைக்கும்? காலம் எத்தனை நாள் கொடுமையை செய்யும்? தடைகள் எத்தனை நாள் வழியை அடைத்து நிற்கும்? போட்டியிட வழியில்லை பார்வையாளராக வரும் பாக்கியம் கூட இல்லையே என்ற அப்பாதையை மாற்றினாள் ஒரு பெண், மரண தண்டனையை வெறும் தூசி என்று எண்ணி அரங்கிற்குள் நுழைந்து விட்டாள் ஆண் உடையோடு. மாற்றுடை போட்டு வேடமேற்று வந்த அந்த மங்கையை யாரும் கவனிக்கவில்லை. உள்ளே சென்று எல்லோரும் அமர்ந்திருக்கும். இடத்தில் உட்கார்ந்து, நிகழ்ச்சிகளில் மனம் லயித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குத்துச் சண்டைப் போட்டித் தொடங்கி விட்டது. பிசிடோரஸ் என்ற பெயருள்ள வீரன் போட்டியில் கலந்து கொண்டான். அவன் செய்த சண்டை எல்லோருக்கும் மயிர் சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருந்தது. தன் எதிரியை எளிதாக மட்டும் அல்ல. இலாவகத்தோடும் சண்டையிட்டு மாபெரும் வெற்றியும் பெற்று விட்டான்.

பார்வையாளர் பகுதியிலே, மாறு வேடத்தில் பதுங்கியிருந்த மங்கைக்கோ அளவில்லாத ஆனந்தம்! ஆனந்தம் மிதமிஞ்சி வெறியாகியது. அந்த வெறி தந்த ஆவேசத்தினால், தன்னை இழந்தாள். தன் நிலையை மறந்தாள், ஓடிப் போய் அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். ஆசை தீர முத்தமிட்டாள், அவள் நடந்து கொண்ட ஆவேச நிலையிலே; அவள் தலைப்பாகைக் கலைந்தது. ஒப்பனை உருவிழந்தது. ஆண் பெண்ணானது கண்டு அந்த அரங்கமே. அதிர்ச்சியுற்றது, ஆத்திரமடைந்தது.

ஆமாம்! பெண்ணொருத்தி உள்ளே புகுந்து விட்டாள் என்றதும், பிரளயமே வந்து விட்டது போன்ற ஓர் உணர்வு மக்கள் மருண்டனர். மயங்கினர். பரிதாபத்திற்குரிய பெண்ணைப் பலமுறை பார்த்தனர். தானாகவே சாவைத் தேடி வந்த தையலைக் கண்டு ஆத்திரப்பட்டவர் பலர். அனுதாபப்பட்டவர் சிலர்.

அதிகாரிகளின் முன்னே நிறுத்தப்பட்டாள் அந்தப் பெண். மரண தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கே எல்லோரும் வந்து விட்ட நேரம், மங்கையோ, மாணவாக்கு மூலம் போல, தன் கதையைக் கூறத் தொடங்கினாள். அதிகாரிகளும் குறுக்கிடவில்லை.

என் பெயர் பிரன்ஸ், போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற பிசிடோரஸ் என் மகன், என் தந்தை. தயாகரஸ் மற்றும் என் சகோதரர்கள் அனைவருமே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்கள்தான். வெற்றி வீரர் பரம்பரையில் வந்த எனக்குக் கணவனாக வாய்த்தவரும் பெரிய வீரர்தான். அவர், தன் மகனை ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாக்கி விடவேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு உழைத்தார். இராப்பகலாக, உழைத்தார். ஆனால், அதற்குள் என் கணவர் அகால மரணமடைந்துவிட்டார்.

அவருடைய நோக்கத்தை, குறிக்கோளை நிறைவேற்றினால்தான் என் மனம் சாந்தியடையும், அவர் ஆத்மாவும் சாந்தியடையும். ஆகவே, அவர் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு, என் மகனுக்கு தினமும் பயிற்சியை நான் கொடுத்தேன். அவனைப் பந்தயத்திற்கும் அனுப்பி வைத்தேன். அவன் எவ்வாறு சண்டை செய்கிறான் என்பதைப் பார்க்க எனக்கு ஆவல் எழுந்தது. அதை சட்டம் தடுத்தது. இருந்தாலும், என்னால் சட்டத்தை மீறாமல் இருக்க முடியவில்லை. என் மகன் வெற்றி பெற்று விட்டான். என் கனவு நிறைவேறியது இறப்பதற்கு இப்பொழுதும் நான் தயார். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் மரணத்தை.

சொல்லி முடித்தாள் அன்னை தன் கதையை. என்ன சொல்ல முடியும் அவர்களால்? மன்னிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் கேட்டார்கள். அன்னையர் குலத்திற்கும் வீரம் உண்டா? போட்டியில் கலந்துகொள்ளுவதற்கான பயிற்சி தரும் தீரம் உண்டா? குழந்தைகளைப் பெற்றுத் தரமட்டும் தெரிந்தவர்கள் அல்லர் குலம் காக்கும் அழகு மகளிர், வீரமகளிராகவும் வாழ முடியும் என்ற உண்மையை அன்று உணர்ந்தனர். பிரனிசை மன்னித்தனர். பெரும் தடையை நீக்கி, பெண்கள் பார்வையாளர்களாக வரலாம். போட்டிகளில் பங்குபெறலாம். என்ற விதிகளையும் சேர்த்தனர்.
இந்த வீர நிகழ்ச்சிக்குப் பிறகு, பெண்களும் போட்டியிட்டனர். 128வது ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில், தேர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் பெலிச்சி என்பவள் வெற்றி பெற்றாள் என்றால், பெண்களுக்குரிய ஆர்வம் எவ்வளவு என்பது புரிகிறதல்லவா! அதற்குமுன்னே பெண்களுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹிரா என்ற இடத்தில் போட்டி நடக்கும் என்றும். 100 கெஜ ஓட்டமே நடந்தது என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. தாய்ப்பாசம் தந்த வீரம், பெண்களுக்கு விடிவெள்ளிபோல் தோன்றி, ஓர் நிரந்தர நன்மையைத் தந்துள்ளதே!