குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/நடந்ததும் நடக்கவேண்டியதும்

விக்கிமூலம் இலிருந்து

1


நடந்ததும் நடக்க
வேண்டியதும்

      "என்னால் அறியாப் பதம்தந்தாய்
          யான தறியா தேகெட்டேன்
      உன்னால் ஒன்றும் குறைவில்லை
          உடையாய் அடிமைக் காரென்பேன்
      பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
          பழைய அடியா ரொடுங்கூடா(து)
      என்னா யகமே பிற்பட்டிங்(கு)
          இருந்தேன் நோய்க்கு விருந்தாயே!”
                                  - ஆனந்த மாலை-2

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் எண்ணி இன்புறத்தக்கது. இப்பாடற்கருத்து நம்முடைய வாழ்க்கைக்கு நூற்றுக்குநூறு பொருந்தும்! ஆம், யாதொரு குறையுமில்லாமல் முதற்சுற்று முடிந்திருக்கிறது. யாதொரு குறையும் இல்லை யென்றால் "முழு நிறை" என்று பொருள் கொள்ளக்கூடாது. "குறை”யைக் குறையென்று கருதி அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கைப்பயணம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் நம்முடைய சமுதாய உணர்வுகள் அடிக்கடி பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. உலகியலைப் பொறுத்தவரையில் யாதொரு குறையும் இல்லை. ஆனால் நாட்டின் நிகழ்வுகளில் நமக்கு இருந்த அக்கறை சிலபொழுது மகிழ்வையும் சில பொழுது துன்பத்தையும் கொடுத்திருக்கிறது. இராமன், சீதையை நெருப்பிலிட்டுத் துய்மை காண முயன்றதைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் சோதனைகள் நடந்த துண்டு. ஆனாலும் இறைவன் திருவருளால் யாதுமோர் குறைவில்லை என்றாயிற்று! அந்தக் காலங்களிலெல்லாம் நம்மோடு உடனிருந்த பரிவுமிகுந்த நண்பர்களுக்கும் பொறுப் புணர்ந்து செயலாற்றிய அலுவலர்களுக்கும் நாம் எங்ங்னம் நன்றி செலுத்த முடியும்!

இந்த முதற்சுற்றின் நீண்ட பயணத்தில் சிந்தனையாலும், கருத்தாலும், எடுத்துக்கொண்ட பணிகளாலும் நாம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். இந்த ஒவ்வொரு படிநிலையிலும் நம்முடைய சிந்தனையும் கருத்தும் சமூகத்தைநோக்கி விரிந்து வளர்ந்தே வந்திருக்கிறது; பின்னடைவு ஏற்பட்டதில்லை. 1942-இல் நாட்டு விடுதலைக்காக, தனிமனிதர் அறப்போராட்டத்தை அண்ணல் காந்தியடிகள் அறிவித்தபோது நமது நெஞ்சத்தில் நாட்டுப்பற்று வித்திடப்பெற்றது. இந்த உணர்வை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

முதற்படிநிலையில் தருமபுர ஆதீனத்தில் துறவு ஏற்று ஆங்கிலத்தொடு அருந்தமிழும் கற்றிடும் இனியவாய்ப்பினைப் பெற்றோம். அங்கேயே எல்லார்க்கும் பணிவுடனிருத்தல், தொண்டு செய்தல் ஆகிய பண்பியல்புகளை அடையப்பெற்றோம்.

தருமையில் வாழ்ந்த காலம் “ஞானமுதலை”த் தேடிக் கொண்டகாலம். தொண்டுசெய்யும் பழக்கத்திற்கு ஆளான காலம். அந்த அமைதி நிறைந்த வாழ்க்கைச் சூழலிலும் ஒருபுயல் வீசியது, அப்புயல் வாழ்க்கையைச் சிதறடித்து விடக்கூடிய அளவுக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. ஆயினும் உறுதியுடன் கூடிய குரு பக்தியோடும் திருவருட் கடைபிடிப்போடும், “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று ஏற்றிருந்தமையின் காரணமாகப் புயல் தென்றலாக மாற்றம் பெற்றது. சிலதிங்கள் ஒறுக்கப்பட்டிருந்தாலும் அது திருவருட்சித்தம். "புளியம் வளாரால் மோதுவிப்பாய், உகப்பாய்' என ஆளுடைய அரசு அருளிச் செய்தது போலவும் "அடியார் தினம் தினம் செய்தபிழை பரியாது அறுத்துச்சுடுவது எல்லாம் அவர் பாசத்தையே” என்று குன்றக்குடி ஆதீனக்குரு முதல்வர் வாழ்த்தாக அமைந்துள்ள அனுபூதிப்பாடல்படியும் அமைந்தது. நாம் குருமூர்த்திகளின் அருளார்ந்த உகப்பினைப் பின்னர் பெற்று அனுபவிக்க முடிந்தது.

இந்தத் தென்றல் நீடித்து நிலவ முடியாமல் மீண்டும் ஒருசுழற் காற்று! அந்தச் சுழற்காற்றுதான் நம்மைக் குன்றக் குடித் திருமடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது! நாம் தருமையிலிருக்கும்பொழுது தருமபுர ஆதீனத்தின் பிரதி நிதியாக வெளியூர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வதுண்டு. அதுபோல் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்திற்கும் 1948ஆம் ஆண்டு குரு பூசைக்கு வந்திருந்தோம். அப்போதே குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் நம்முடைய சொற் பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இச்சொற்பொழிவு முடிந்ததும், திருமடத்தின் முகவர்கள் நம்மைக் குன்றக் குடியிலேயே தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டனர். நம்முடைய விருப்பமின்மையையும், ஏற்க இயலாமையையும் தெரிவித்துத் தருமபுரத்திற்கு மீண்டோம். சில திங்கள்கள் ஓடின. ஒருநாள் இரவு 10 மணி அளவில் நம்முடைய அறைக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தபொழுது, திருக்கடவூர் பிச்சக்கட்டளை உரிமையாளரும், நமக்கு மிகவும் நெருங்கிய உழுவலன்பராக விளங்கியவருமாகிய திருக்கடவூர் திரு. கைலாசம்பிள்ளை அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே அழைத்து இருக்கச்செய்து ‘என்ன! இப்படி இரவில்?’ என்று கேட்டோம். அவர்கள் குன்றக்குடிக்கு உடனடியாகப் புறப்பட வேண்டும் என்று சொன்னார்கள்? ஏன் என்று கேட்டோம். "குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவர் பொறுப் பேற்பதற்காக" என்று சொன்னார்கள். "திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடத்தில் உத்தரவு பெறவேண்டாமா?" என்று கேட்டோம். "முதலில் குன்றக்குடிக்குப் போய்ப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு வந்து சொல்லிக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை" என்றும் கூறினார்கள். 'நாம் கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்ற திருவாசகப்பாடலை எடுத்துக்காட்டிக் "கண்டிப்பாக இயலாது" என்று அனுப்பிவிட்டோம்! திரும்பத்திரும்ப வற்புறுத்தியதால் "திருவருள் திருமகா சந்நிதானம் அவர் களிடத்தில் கேட்டுப்பாருங்கள்" என்று போக்குக் காட்டினோம். சிலநாள் கழித்து, திரு. கைலாசம்பிள்ளை அவர்கள், குன்றக்குடித் திருமடத்துக் கைலாசத்தம்பிரான் அவர்கள், குன்றக்குடித் திருமடத்து முகவர் ஆகியோர், திருவருள் திருமகாசந்நிதானம் அவர்களைக் கண்டு கொண்டு நம்மைக் குன்றக்குடிக்குத் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் நம்மை அழைத்துக் கேட்டார்கள். ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பது "கல்விக்கும் தொண்டுக்கும் இடையூறாக இருக்கும். ஆதலால், வேண்டாம்" என்று நாம் கூறினோம். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களும் வந்தவர்களிடத்தில் "அவருக்கே விருப்பமில்லை. நாம் என்ன செய்வது?" என்றுகூறி அனுப்பி விட்டார்கள். இடையில் வேறொருவர் குன்றக்குடித் திரு மடத்திற்குப் பொறுப்பேற்கத் தயாரிக்கப்பட்டார். ஆனால் குன்றக்குடித் திருமடத்தின் தலைவரும் இசைந்து வரவில்லை. மீண்டும் குன்றக்குடியிலிருந்து அருட்டிரு கைலாசத் தம்பிரான் முதலியோர் நம்மை நாடி அழைத்து வருவதற்கு தருமபுரத்திற்கு வந்தனர். அருட்டிரு கைலாசத் தம்பிரான் அவர்கள் குன்றக்குடி திருமடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலிருந்தவர். குன்றக்குடித் திருமடத்தின் மீது அவருக்கு அளவற்ற ஈடுபாடு. அதனால் அந்த வயது மூத்தவர், திருவருள் திருமகா சந்நிதானத்தின் திருமுன்பு நிலமிசை வீழ்ந்து வணக்கம் செலுத்தியவர், எழுந்திருக்காமலேயே அழுதுபுலம்பிக் "குன்றக்குடியைக் காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார். அவருடைய கோரிக்கை நம்மைக் குன்றக்குடிக்குத் தரவேண்டுமென்பதே திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் அறச்சங்கடத்திற் காளானார்கள். ஒருபுறம் குன்றக்குடி ஆதீனத்தின் பாது காப்பு: பிறிதொருபுறம் நம்முடைய விருப்பமின்மை! கடைஒ யாகச் சொக்கநாதர் சந்நிதியில் திருமுறையில் கயிறுசாத்திய பார்ப்பது, உத்தரவு கொடுத்தால் நாம் குன்றக்குடிக்குப் போது வேண்டும்” என்று திருவருள் திருமகா சந்நிதானத்தில் உத்தரவு செய்தார்கள். மறுநாட் காலை சொக்கநாதர் வழிபாடு வழக்கம்போலப் பூசைமடத்திற்குப் போயிருந்தோம். குன்றக் குடி மடத்து அருட்டிரு கைலாசத் தம்பிரான் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் வந்திருந்தார்கள். இன்றைய தருமபுரம் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களும் உடனிருந்தார்கள். பூசைமுடிந்த பிறகு அடங்கன் முறையில் கயிறுசாத்தப் பெற்றது. திருஞானசம்பந்தர் அருளிச்செய்த "திருக்கடவூர் மயானப் பதிகம்” கிடைத்தது.

இப்பதிகத்தின் முதல் திருப்பாடல்,

      'வரிய மறையார் பிறையார்
      மலையோர் சிலையா வணங்கி
      எரிய மதில்கள் எய்தார் எறியும்
      முசலம் உடையார்
      கரிய மிடறு முடையார் கடவூர்
      மயானம் அமர்ந்தார்
      பெரிய விடைமேல் வருவார் அவர்
      எம் பெருமா னடிகளே!'

என்ற திருப்பாடலில் "பெரிய விடைமேல் வருவார்" என்ற குறிப்பு இருந்தமையால் நாம் குன்றக்குடி வருவது தவிர்க்க முடியாததாயிற்று. ஒருவாறாகப் பிரியா விடைபெற்று குன்றக் குடிக்கு வந்து சேர்ந்தோம். திருமடத்து மரபுப்படி 5-9-1949-இல் பட்டம் கட்டப்பெற்றன. உரிம ஆவணங்கள் எழுதப்பெற்றன. 1952 வரையில் திருமடத்தில் குன்றக்குடி ஆதீனத்தின் சின்னப்பட்டமாக அமர்ந்து குரு, சிவம், அடியார் கூட்ட வழிபாடுகள் செய்து கொண்டு அமைதியாக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் காலத்தில் நல்ல ஆய்வு மனப்பான்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குன்றக்குடி திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் பழைய மரபுகளில் பிடிப்புள்ளவர்கள். நாம் திருமடத்திற்கு வெளியில் செல்வதை விரும்புவதில்லை. இதனால், பேச்சுப் பணிக்குத் தடை ஏற்பட்டது. ஆயினும் நம்விருப்பம் கருதி ஒரோ வழி அனுமதித்தார்கள்.

இந்தத் திருமடத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு புயல் சுழன்று அடிக்கும் சூழல் ஏற்பட்டது. அதாவது, திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடம், சிலர் கோள்களைச் சொல்லி நம்முடைய உரிம ஆவணத்தைச் செல்லாததாக்கி விடுவது என்ற அளவிற்கு முயற்சியினை மேற்கொண்டார்கள். திருவண்ணாமலைத் தைப்பூசத் திருவிழாச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது புகைவண்டியில் பயணம். நாம் திருவண்ணாமலைக்குப் பேசச் சென்றிருந்த பொழுது கோள் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் உரிம ஆவணத்தை இரத்து செய்வதற்காக மதுரை சென்று விட்டார்கள். அப்பொழுது ஆதீனத்தின் வழக்கறிஞராக திரு. D. C. சீனிவாச ஐயங்கார் இருந்தார். இவர் அப்பொழுது மதுரைத் தமிழச் சங்கத்தின் தலைவ ராகவும் இருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் D. S. சீனிவாச ஐயங்கார் அவர்கள் அழைப்பின்பேரில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பேசிவிட்டு வந்திருந்தோம். அதனால் அவர்களுக்கு நம்மீது ஈடுபாடு. அவர் உரிம ஆவணத் தள்ளுதலுக்கு இசைவு தரவில்லை. மதுரையிலிருந்து குன்றக்குடிக்குத் திரும்பும்பொழுது திருப்புத்துாரில் அப்பொழுது ஆதீன வழக்கறிஞராக இருந்த திரு. அ. இராமச்சந்திரன் பிள்ளை அவர்களிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அவர்களும் இசைவு தரவில்லை.

இதற்கிடையில் நாம் திருவண்ணாமலை சென்று விட்டுக் காரைக்குடிப் புகைவண்டி நிலையத்தில் இறங்கினோம். ஒரேஒரு எழுத்தர்மட்டும் அங்கு வந்திருந்தார். அவரும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வந்திருந்தார். விவரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. வழக்கம்போல நாம் அமைதியாகக் குன்றக்குடிக்கு வந்தோம். பூசைமடத்தில் வழிபாடு செய்து கொண்டு அமைதி காத்தோம். சிலநாள்கள் ஓடின. ஆனால், திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் மட்டும் நம்மோடு பேசுவதில்லை. மாலையில் போய் விசிறிக் கொண்டு நிற்போம். அப்போதும் பேசுவதில்லை. இப்படிச் சிலநாட்கள் ஓடின. ஒருநாள் மாலைநேரத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு "என்ன குற்றம் செய்தேன்" என்று மகாசந்நிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டோம். உடன் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடத்திலிருக்கிற அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாகச் சற்று அழுத்தக்குரலில் சொன்னார்கள். உடன் நாம் வீழ்ந்து வணங்கி "அப்படி ஒன்றும் எண்ணமில்லை, சொன்னவர்களை விசாரிக்க வேண்டும்" என்று விண்ணப்பித்தோம், கரவிலாத் திருவுள்ளமுடைய அவர்கள் சிலரை அழைத்து விசாரித்தார்கள். சாட்சியங்கள் கேட்டார்கள். விசாரணையின் முடிவு "நாம் குற்றமிலோம்” என்றாயிற்று. மீண்டும் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களின் அரவணைப்பில் மகிழ முடிந்தது. இந்தத் தகவல்களை நாம் தருமபுரத்திற்குத் தெரிவிக்கவில்லை. ஆச்சாரியன் திருவுள்ளம் எப்பரிசாயினும் மாணாக்கன் அப்பரிசே ஏற்கவேண்டும் என்பது விதிமுறை. வேறு வழிகளை நாடக்கூடாது என்பது மரபு. நாம் இந்தப் பகுதியை விரிவாகச் சொன்னதற்குக் காரணம், நாம் தமிழ் நாட்டின் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டபொழுது பதவியாசையால் ஏற்றுக்கொண்டதாகச் சிலர் பழி கூறினர்; புறம் பேசினர். ஒரு ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கே வலிய அழைத்தும் வரமறுத்த நாம், சட்டமன்ற மேலவைப் பதவிக்கு எளிதில் வசப்படு வோமா? சட்டமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது டாக்டர் கலைஞர் அவர்களின் எண்ணம். அன்றைய சட்ட அமைச்சராக இருந்த வரும் நம்பால் உழுவலன்பு கொண்டவருமாகிய மாண்புமிகு செ. மாதவன் அவர்கள் மூலம் கேட்டனுப்பினார். நாம் முடிவு சொல்ல மூன்று நாட்களாயின. நாம் அமைதியாக ஆலோ சித்து, நம்முடைய வாழ்க்கையில் அக்கறையுடைய தருமையா தீனம் திருவருள் திருமகா சந்நிதானம் கயிலைக்குருமணி அவர்கள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் அவர்கள் ஆகியோரைக் கலந்துகொண்ட பிறகே இசைவு தந்தோம். இந்தமாதிரிச் செய்திகளில் "ஊரார் தத்தம் மனத்தன. பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே" என்ற மணி மொழி நம்முடைய வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பொருந்துவதாயிற்று.

1952-இல் ஆதீனத்தின் முழுப்பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி, ஒரு சமய விழாவாக நடந்தது. அதன் தொடர்ச்சியாகத் தீண்டாமை விலக் கக்கு வித்திடும் பணியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வா ழம் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சியும் அமைக்கப் பெற்று நடந்தது. இதிலிருந்து மூன்றாம்படி நிலை தொடங்குகிறது. 1952-இல் இருந்து கடுமையாக உழைத்து ஆதீனம் திருக்கோயில் நிலபுலன்களை நேரில் சென்று கண்டு, வருவாய்ப் பெருக்கத் திற்கு வழி செய்யப் பெற்றது. 1952இல் அருள் நெறித்திருக் கூட்டம் தொடங்கப்பெற்றது. அருள்நெறித் திருக்கூட்டத்தொடக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. தலைவர் பெரியார் அவர்களின் திருவுருவ உடைப்பு அறிவிப்பாகும். அருள்நெறித் திருக்கூட்டத் தொடக்ககால அமைப்புக் குழுவில் காரைக்குடி கம்பன் அடிப்பொடி அவர்களும், ஈரோடு செஞ்சொற் கொண்டல் S.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களும் செயலாளர்களாக இருந்தார்கள். நாடு முழுதும் தீவிரசமயப்பிரசாரம் செய்யப்பெற்றது. ஒருபுறம் நாத்திகக் கொள்கைகளை எதிர்த்தும், பிறிதொரு புறம் சமயச் சீர்திருத்தக் கொள்கைகளை வலியுறுத்தியும் அதாவது சாதி வேற்றுமை நீக்குதல், தீண்டாமை நீக்குதல், திருமுறைத் தமிழில் அர்ச்சனை செய்தல், சமய நிறுவனங்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டுமெனல் ஆகியன எடுத்து மொழியப் பெற்றன. சாதி வேற்றுமைகள் நீங்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காக 1952இல் மயிலாடுதுறையில் நடந்த மகேசுவர பூசையில் வெளி நடப்புச் செய்தோம். தமிழ் நாட்டில் தீவிரமாக இயக்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் கரூர், புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை, காமராசர் மாவட்டம் மம்சாபுரம் ஆகிய ஊர்களில் திராவிடர் கழகத்தினருக்கும் நமது அணியினருக்கும் மோதல் ஏற்பட்டன. திராவிடர் கழகத்துத் தொண்டர்கள் கருப்புக் கொடி பிடித்தனர். இந்தச் சூழ்நிலையில் நமது இயக்கத்திற்கு அனைத்துச் செய்தித் தாள்களும் நல்ல விளம்பரம் அளித்தன.

அருள்நெறித் திருக்கூட்ட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ் இனத்தில் இருவேறு பிளவுகளை உண்டாக்கித் தமிழின மேம் பாட்டைத் தடுத்துவிடுமோ என்று கருதிய சில சான்றோர் நம்மிடம் தூது வந்தனர். 1954-இல் நாமும் பெரியார் அவர்களும் தமிழறிஞர்களின் ஏற்பாட்டின்படி ஈரோட்டில் திரு. சென்னியப்ப முதலியார் அவர்கள் வீட்டில் இரகசிய மாகச் சந்தித்தோம். சிலமணி நேரங்கள் பயன்தரத்தக்க வகையில் கலந்துரையாடினோம். அன்று தலைவர் பெரியார் அவர்கள் பழகினபாங்கு அவர் “பெரியார்” என்பதை உறுதிப் படுத்தியது. அதன்பிறகு, தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவைத் திருச்சி பொன்மலைப்பட்டியில் எடுத்தனர். விழாவுக்கு நம்மை அழைத்தனர். நாமும் இசைவு தந்து விழாவுக்குச் சென்றிருந்தோம். தலைவர் பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம். அதேபோழ்து நாம் ஆற்றிய உரை சமய நெறிக்கு அரண் செய்வதாகவும் அமைந்திருந்தது. மத எதிர்ப்பாளர்களுக்கும் "ஒரு நல்ல கடவுள் நம்பிக்கையுடையவர்” சொல்லும் பதிலாகவும் உரை அமைந்தது. வழக்கம்போல, தலைவர் பெரியார் அவர்கள் பெருந்தன்மையுடன்-நம்முடைய பேச்சு அவர் கொள்கையை மறுக்கின்ற பேச்சாக இருந்தும், பெரியார் அவர்கள் யாதொன்றும் கூறவில்லை. கூறாமைக்குக் காரணம் பண்பாடு காக்கவேண்டும் என்ற நெறி பற்றியேயாம். ஆயினும், கச்சிதமாகச் “சமுதாயத்தில் நிகழ்கின்ற தீமைக்குக் கடவுள் பொறுப்பில்லையென்றால் அதைத் திருத்தியமைக்க மகா சந்நிதானம் அவர்கள் வழி சொல்ல வேண்டும். மகா சந்நிதானம் அவர்கள் சொல்லும் வழியை மற்ற மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதையும் அறிந்து கொள்ள ஆசை” என்று கூறி முடித்தார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஒருசுற்று முடியப் போகிறது. தலைவர் பெரியாரும் மறைந்து விட்டார். ஆனால் அவருடைய ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. அதற்கு மாறாகச் சாதி வேற்றுமைகளை- தீண்டாமையைசமுதாயத்தை அமுக்கி வைக்கும் ஊழ்வினைத் தத்துவத்தைமதச் சண்டைகளை நாம் ஒத்துக் கொள்ளாததால் இவற்றையே கொள்கைகளாக உடையவர்கள், நம்மை "ஒத்த கருத்தில்லாதவர்” என்று சொல்லி ஒதுக்குகின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்கள் நம்மை அங்கீகரிப்பதை நாம் விரும்பவில்லை. சமய அடிப்படையில் மனிதகுல ஒருமைப் பாட்டைக் காண்பதும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய பொதுமை நலம் மிக்க சமுதாயத்தைக் காண்பதுமே நமது விருப்பம். இந்த விருப்பத்தை இலட்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நாம் அந்நியராக இருப்பது ஆச்சரியமில்லை. வரவேற்கத்தக்கதே. பெரியாருக்குப் பொன்னாடை போர்த்திய பிறகு உயர்குடி மனப்பான்மையுடன் மெல்ல ஒதுங்கினர். உடன்பாடு பேசினர். நாம் ஏற்கவில்லை. வெறுக்கத் தொடங்கினர். இருட்டடிப்புச் செய்தனர். அருள் நெறி இயக்கத்திலிருந்த சிலர் இயக்கத்தை விட்டு வெளியேறினர்; வேறு சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் நமது கருத்தைச் சார்ந்தோர் கூடி, தம்மீது நம்பிக்கை வாக்கையளித்து மாறுபட்ட சக்திகளை வெளியேற்றினர். இது ஒரு கால கட்டம்.

தொடர்ந்து இயக்கப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. 1955இல் அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்கப் பெற்றது. இது பூரணமான நிர்மானப்பணி செய்யும் இயக்கமாகும். இந்த நிறுவனம் விரைந்து வளர்ந்து வந்தது. இந்த அமைப்பு இன்று ஒரு கல்லூரி, இரண்டு மேனிலைப் பள்ளிகள், நான்கு உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், மூன்று தொடக்கப் பள்ளிகள், ஒரு மாணவர் புண்ணிய விடுதி, பிறிதொரு மாணவர் விடுதி (கட்டணம்) முதலியன நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டத்தின் நீண்ட நெடிய நாள் குறிக்கோளாகிய "தமிழகத் திருமடங்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்ற கருத்துக்கு 1966ஆம் ஆண்டில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த திருமிகு கோ. சாரங்கபாணி முதலியார் அவர்கள் மூலம் அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்களின் உதவியுடன் "தமிழ்நாடு தெய்விகப் பேரவை" தொடங்கப் பெற்றது. தமிழ்நாடு தெய்விகப் பேரவைக்கு முதல் தலைவராக சிறப்பான முயற்சியின் பயனாகத் தருமைக் கயிலைக் குருமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். அவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார்கள். அதன் பிறகு நாம் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றோம். பேரவைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பெறும் பொழுது நாம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தோம். டாக்டர் கலைஞர் அவர்கள் நம்முடைய சமுதாய எண்ணங்களைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு நம்முடைய பெயரை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்கள். தமிழ்நாடு தெய்விகப் பேரவையின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தோம். பேரவை, நாடு முழுதும் ஆல்போல் தழைத்து வளர்ந்தது. பேரவை வளர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டதால் நமக்கும் நம்முடைய நிறுவனங்களுக்கும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. அருள்நெறித் திருக்கூட்டத்தின் வளர்ச்சி பாதித்தது. ஆயினும், இது அனைவரும் சேர்ந்து செய்யும் பொதுப்பணி என்பதால் கடுமையான உழைப்புக் கொடுத்து வளர்த்தோம். நம்முடைய சமுதாய - சமயச் சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பேரவை வாயிலாக மக்கள் மன்றத்து ஏற்பினை அல்லது அங்கீகாரத்தினைப் பெற்று வந்தோம். இந்தச் சூழ்நிலையில் பேரவை தொடங்கிய காலத்தில் ஆர்வத்தோடு பங்கேற்ற காஞ்சி காமகோடி பீடம், தருமையாதீனம் மகாசந்நிதானம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றபிறகு பேரவைக் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதே போழ்து, உடன்பாடின்மையையும் காட்டிக்கொள்வதில்லை. நாம் தலைவராக வந்த பிறகு - தீவிரக் கொள்கைகள் பேரவையின் கொள்கைகளான பிறகு - காஞ்சி காமகோடி பீடத்தின் புதியவர் வந்தபிறகு பேரவைக்கும் காமகோடி பீடத்துக்கும் உள்ள இடைவெளி அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆவதற்குரிய வழி செய்யப்பட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. அதாவது "பிறப்பில் வேறுபாடின்றி அனைவர்க்கும் பயிற்சி கொடுத்து அனைவரையும் அர்ச்சகராக்குவது” என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது, சட்ட மன்றத்தில் இந்த மசோதாவை எதிர்க்கும்படி நம்மைக் காஞ்சி காமகோடிபிடப் புதிய பெரியவர் கேட்டுக் கொண்டார்கள். எதிர்ப்புக்குரிய காரண காரியங்களை நாங்கள் விவாதித்த பொழுது புதிய பெரியவர் எடுத்துக் கூறிய காரணங்கள் நிற்கவில்லை. அதுமட்டுமின்றிக் காமகோடி பீடமோ மற்ற மதத் தலைவர்களோ இதுவரை அர்ச்சகர் மசோதாவை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. பேரவை கூடி விவாதித்து எதிர்ப்பதற்குரிய கால எல்லையும் இல்லை. இந்நிலையில் அம்மசோதாவை எதிர்ப்பதற்குரிய நிலையில் நாம் இல்லை என்பதை அறிவித்தோம். பேரவையைக் கூட்டி அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக மறுத்துத் தீர்மானம் நிறைவேற்றினால் நிறுவனக் கட்டுப்பாடு என்ற அடிப்படையில் நாமும் நமது கொள்கைக்கு மாறாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினோம். இதற்குப் புதிய பெரியவர் "தாங்கள் பேரவையின் தலைவர்; ஆதலால், எதிர்த்தேயாக வேண்டும்” என்று கூறினார். புதிய பெரியவர் வேதனைப்படுவதை நம்மால் உணர முடிந்தது. இதிலிருந்து நமக்கும் காமகோடி பீடத்துக்கும் பேரவைக்கும் இருந்த இடைவெளி மேலும் அதிகரித்தது. காஞ்சி காமகோடி பீடத் திருமடத்தின் சார்பில் பரிசுகள் வழங்குவதற்குப் பேரவையிலிருந்து பணம் கேட்டு எழுதினார்கள். தனிப்பட்ட நிலையில் ஒரு திருமடம் நடத்தும் போட்டிகளுக்குப் பேரவை பணம் தருவதில்லை என்று பேரவைச் செயலாளர் எழுதிவிட்டார். இதனை எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எழுதியதில் தவறில்லை. இதற்குப் பிறகு பேரவையுடன் உறவைக் காமகோடி பீடம் விட்டுவிட்டது எனலாம். மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது நமக்கும், பேரவைக்கும், கிறித்தவ மதத்தின்பால் வெறுப்புணர்ச்சி இல்லையானாலும் கிறித்தவ மத நிறுவனங்களின் மதமாற்றச் செயல்களை எதிர்க்கும் உணர்வு இருந்தது. கிறித்தவமத இயக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட தென்கோடி மாவட்டத்தில் மாநாடு நடத்துவதென்று பேரவை முடிவு செய்தது. நாகர்கோயிலில் மாநாட்டை நடத்தினோம். அந்தச் சமயத்தில் கிறித்தவ மிஷனரிகளின் பள்ளி நடைமுறைகளை எதிர்த்து நெல்லை மாவட்டத்தில் இரண்டு நடுநிலைப் பள்ளிகளை நமது நிர்வாகம் தொடங்கியது. இந்தச் சந்தர்ப்பத்தில் பேரவையை நிலையான நிறுவனமாக்கவேண்டும் என்றும், அதற்கு நிலையான நிதிவாயில்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துத் தோன்றியது. தமிழ்நாடு அரசை அணுகிப் பேரவையை ஒருசட்டப் பூர்வமான நிறுவனமாக ஆக்கும் படிக் கேட்டுக் கொண்டோம். அது போலவே ஆணையர் அவர்களின் மாற்று ஆணை பெறாமல் நிதி நிலைத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்துகொண்டு, பேரவைக்கு நிதியளிப்பதை நமது எல்லாச்சமய நிறுவனங்களும் ஏற்கும்படி செய்யச் செய்தோம். சட்டமன்றத்தில் இந்தச் சட்ட வரைவுகள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப் பெற்றன. இந்தச் சூழ்நிலையில் காஞ்சி காமகோடி பீடம் புதிய பெரியவரிடமிருந்து பேரவை வளர்ச்சி பற்றிய தகவல்கள் கேட்டுத் தூதுவர்கள் வர ஆரம்பித்தார்கள். நம்மிடத்திலும் வந்து பாராட்டிச் சொன்னார்கள். பேரவையின் செயலாளரை அவர்கள் விருப்பத்தின்படி இரண்டொருதடவை சென்று பார்க்கும் படிச் செய்தோம். பேரவைச் செயலாளரிடம் பேரவைப் பணிகளைப் பலபடப் பாராட்டி, பேரவைப் - பணிகளை எல்லாரும் சேர்ந்து செய்ய விரும்புவதாகவும், நம்முடன் கலந்துபேச விரும்புவதாகவும் புதிய பெரியவர்கள் சொல்லி யனுப்பினார்கள். நாமும் சென்று சந்தித்தோம். மகிழ்ச்சியாகப் பேசினார். பேரவை மாநிலக்குழுவைக் கூட்டும்படிக் கேட்டுக்கொண்டார்கள். நாமும் அவர்கள் விருப்பத்தை ஏற்று, அப்போது பேரவை, மாநிலக்குழு கூடவேண்டிய அவசியமில்லையென்றாலும், கூட்டினோம். கூடுவதற்கு முதல்நாள் சந்தித்தபொழுது, முதல்தடவை சந்தித்த பொழுதிருந்த பாங்கு இல்லை; சற்றுமாறுபட்டிருந்தது. மாநில அரசைக் கடுமையாகச் சாடிப் பேசினர்; நாம் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தமைைையக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு இவையெல்லாம் மத்திய அரசுக்குப் பிடிக்காதவை என்றார். அவர் பேச்சின் தொனி அவருக்குப் பின்னணியாக ஒருபலம் இருக்கிறது என்பதை அன்று புலப் படுத்தியது. மறுநாட்காலை மாநிலக்குழு கூடியது. முதலில் தமிழ்நாடு அரசின் நமது சமய நிறுவனங்கள், பேரவைக்கு நிதிவழங்கும் சட்டத் திருத்தம்பற்றித்தான் விவாதம் எழுந்தது. அன்றைய மதுரை ஆதீன கர்த்தரவர்களும், காஞ்சி காம கோடி பீடம் புதிய பெரியவாளும் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்ததோடு, தமிழக அரசைக் கடுமையாகச் சாடினர். அப்பொழுது நாம் சொன்னபதில், "தமிழ்நாடு அரசு விரும்பி இதைச் செய்யவில்லை, நாம் கேட்டுக் கொண்டதன் பேரில் செய்திருக்கிறது. இது பேரவை வளர்ச்சிக்குப் பாதகமென்றால் வேண்டாம் என்று சொல்லிவிடலாம்" என்றோம். "இதனால் பேரவைக்கு நல்லது தானே தவிரக் கெடுதல் இல்லையே" என்றும் எடுத்துச் சொன்னோம். உடனே காஞ்சி காமகோடி பீடம் புதியபெரியவர் இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம் "பேரவை அரசு நிறுவனம் (தன்னாட்சி நிறுவனம்- Statutary Body) போல் ஆகிவிடுகிறது. இனி அவர்கள் பேரவையைத் தானே கலந்து ஆலோசிப்பார்கள்" என்றார். நாம் உடனே “இதுவரையில் நமது அமைப்பு அரசாங்க அந்தஸ்து பெறாதிருந்தது - இப்பொழுது பெற்றது நல்லது தானே! அரசினர் பேரவையைக் கலந்தாலோசித்துச் செய்வார்கள் என்றால், அதனால் பேரவைக்குப் பெருமை தானே.” என்கிறோம். புதிய பெரியவர்கள் “பேரவையில் தமிழர் மடாதிபதிகள் பலர் இருக்கிறீர்கள். நாங்கள் பார்ப்பனர்கள் ஒரிருவர் தாம் இருக்கிறோம். அதனால், உங்கள் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகிவிடுமே” என்று வெளிப்படையாகச் சொன்னார். தமிழர்-பார்ப்பனர் என்று பிரிக்கிறார்; அரசாங்கத்திலிருந்து பிரிந்து விடவேண்டுமென்கிறார். இதில் அடிப்படையில் நல்லெண்ணம் இல்லை என்று புரிந்துகொண்டோம் கூட்டம் ஒத்திவைக்கப்பெற்றது. அது மட்டுமா? புதிய பெரியவர் பேரவை அலுவலகத்திற்கு வந்த பொழுது ”சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்” என்ற அப்பரடி களின் அருள்மொழி தாங்கிய சுவரொட்டியைப் பார்த்து இந்தப் பாடல்களையெல்லாம் பேரவை பிரச்சாரம் செய்யலாமா? என்று கண்டித்தார். இரண்டொரு நாட்கள் ஓடின. தமிழ்நாடு அரசு கலைக்கப் பெற்றது. நெருக்கடி காலம் அறிவிக்கப் பெற்றதும் புதிதாக அமைந்த ஆளுநர் ஆட்சி, காஞ்சி காமகோடி பீடம் புதியவரின் குரலாக இருந்து பேரவையின் மீது பழிதுாற்றியது. நிதி உதவி இல்லை என்று அறிவித்தது. அன்று (28-12-1985) காமகோடிபீடம் புதிய பெரியவர் பேசிய பேச்சின் தொனிக்குரிய பின்னணியைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நெருக்கடி காலத்தில் நமக்கும் மிகுந்த நெருக்கடி இருந்தது; பேரவைக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மாநிலக் குழுவை மீண்டும் கூட்டினோம். மாநில ஆளுநராட்சிக்கு நம்மிடம் கடுமையான அணுகுமுறையிருப்பதை அறிந்து பேரவையைக் காப்பாற்றும் நோக்கத்தோடு, போற்றுதலுக் குரிய மயிலம் ஆதீனகர்த்தரவர்களைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பேரவை, அரசிலிருந்து விலகி விட்டதால் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடம் புதிய பெரியவர்கள் பரிந்துரையின்படி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். இதற் கிடையில் பேரவை பெயர் மாற்றத்திற்கும் வேறு சில மாற்றங்களுக்கும் புதிய பெரியவர் முயற்சி செய்தார். பேரவைத் தலைவர் அவர்கள் இடம் கொடுக்காததால் வெற்றி கிடைக்கவில்லை. பேரவைக் கணக்குக்குச் சிறப்புத் தணிக்கை செய்ய ஆளுநராட்சி ஆணை பிறப்பித்தது. அதில் பழி துாற்றுவதற்கேற்றவாறு ஒன்றும் கிடைக்கவில்லை. இடையில் புதியவர் எப்படியோ சில முயற்சிகளை மேற்கொண்டு திருப்பனந்தாள் மடத்துச் சுவாமிகளிடமிருந்த பேரவைச் சாவியை அரசிடம் ஒப்படைக்கும்படியும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும்படியும் செய்துவிட்டார். மீண்டும் பேரவை, கொல்லைப்புற வாயிலாக அரசிடம் ஒப்படைக்கப் பெற்றுவிட்டது. ஆயினும் நாம் தொடர்ந்து பேரவையை மீட்க அரசுடன் போராடிக் கொண்டு வருகின்றோம்.

இடையில் புரட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் அமைந்த அரசு, பேரவைக்குப் பச்சைக் கொடி காட்டியது. பேரவை மாநிலக்குழு கூடியது. இந்த நிலையில் காஞ்சி காமகோடி பீடம் பேரவையிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் எழுதியது. நாம் பேரவைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். பேரவை மாநிலக்குழு இருக்கிறது. ஆனால் இயங்கவில்லை! நிதி இல்லாதது முதற்காரணம்: இரண்டாவது காரணம் நமக்கு ஏற்பட்ட உள்ளப் பாதிப்பு: ஆனால் இன்றோ நாளையோ பேரவை இயங்கும்! திருவருளும் தமிழ்நாடு அரசும் துணை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நெருக்கடி காலத்தில் நம்முடைய நிறுவனத்திற்கும் நமக்கும் ஏற்பட்ட நெருக்கடிகள் பல! ஏராளமான ஆய்வுகள்! திருவருள் துணையால் சோர்வின்றி நடை போட் டோம். இந்த நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. ஏற்கெனவே இருந்த பல அத்தியாயங்களை விட இந்த அத்தி யாயமே பயனுடையது என்று உண்மையாகக் கருது கின்றோம். நெருக்கடி காலத்தில்தான் "குன்றக்குடி கிராம நலச் சங்கம்” தோன்றியது. கிராம முன்னேற்ற வேலைகள் பற்றி எண்ணித் திட்டமிடப் பெற்றது! இந்தப் பணிகளின் வளர்ச்சி, அதில் ஏற்பட்ட ஆர்வம், விருப்புக்கும் வெறுப்புக்கும் பலியாகக் கூடிய மேடைப் பேச்சுக்குச் செல்லும் நமது ஆர்வத்தைக் குறைத்தது. நீண்ட நெடுநாட்களாகச் சமுதாயத்தில் தீர்வு காணப் பெறாதிருக்கும் பல்வேறு ஆழமான பிரச்சனைகளில் வறுமை நீக்கம் சமூக உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த முடிந்தது. இதனுடைய வளர்ச்சிப் போக்கில் “கிராமநலத் திட்டக்குழு" தோன்றியது. இப்பணிக்குக் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் முன்வந்து கைகொடுத்து உதவி வருகின்றனர். விஞ்ஞானம் விவசாயிகளிடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அமரர் நேருஜியின் வாக்கினை இன்று காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் செயல்படுத்துகின்றனர். இவர்களுடைய அறிவுக் கொடைக்கு ஏது கைமாறு: தமிழ்நாடு அரசு போதிய ஆதரவு காட்டிவருகிறது. பல கிராமங்கள் ஏற்புத்திட்டத்தின் கீழ் வந்தன! தொழிற்புரட்சிக்கு வித்திடப் பெற்றது. நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பெற்றது. சோசலீச சமுதாய அமைப்புக்கு முதற்படியாகக் கூட்டுடைமைச் சமுதாயம் அமைக்கப்பட்டு வருகிறது! இந்தப் பணியில் ஒரு "ஆன்ம திருப்தி இருக்கிறது! குன்றக் குடி 1985-ல் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருக்கொள்ளும்! இந்தப் பணியைப் பாராட்டி எழுதி முன்னாள் பாரதத் தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் ஊக்கப்படுத்தி னார்கள். நடுவணரசின் திட்டக்குழு ஆலோசகர்கள் "இந்திய நாட்டுக்கு இஃது ஒரு முன்மாதிரியான பணி" என்று பாராட்டினார்கள். நம்முடைய வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று உறுதிப்படுகிறது. இந்த நிலையில் முதற்சுற்றை முடிக்கின்றோம்.

இனி அடுத்த சுற்றில் நிகழப் போவது என்ன? ஐயத்திற்கே இடமில்லை! இனி எண்ணச் சிதறல்கள், பிசிறல்கள் நம்முடைய வாழ்க்கையில் தலைகாட்ட வாய்ப்பில்லை. குன்றக்குடியைப்போல நூற்றுக்கணக்கான கிராமங்களைத் தன்னிறைவுடைய கிராமங்களாக நாடு முழுதும் காணவேண்டும். நாட்டை நலிவுறச் செய்யும் வறுமையை எதிர்த்துப் போராடுவதே இனி நமது வாழ்நாட்பணி! சாதி, மதச் சண்டைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்பட்டுக் கிராமங்கள் ஒளியிழந்து போகாமல் பாதுகாத்து வளர்ப்பதே நம்பணி! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார் திருமூலர். "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றார் மாணிக்கவாசகர். "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்றார் பட்டினத்தடிகள். இந்த நாட்டில் மதங்களின் பெயரால் பிரிவினைகளைத் தோற்றுவித்துப் பகைமையை வளர்த்துச் சண்டைகளை மூட்டுகிறார்கள்! இந்திய ஒருமைப் பாட்டைச் சிதைக்கின்றனர். பண்பட்ட சமய நெறியை வளர்ப்பதன்மூலம் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்த்துச் சமயப் பொதுநெறிகண்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு அரண் செய்வது ஆகியன நமது கடமைகள்-பணிகள்!

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். திருக்குறளை நாட்டுப் பொது நூலாக்குவதன் மூலம் திருக்குறளை வாழ்க்கை நெறியாக்க வேண்டும். இந்தப் பணிகளோடு நம்முடைய கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் தரவேண்டும். இப்போதுள்ள பணி நெருக்கடிகளின் காரணமாகப் பத்திரிக்கைப் பணி அடிக்கடி பாதிக்கிறது. பத்திரிகையை முறையாகக்கொண்டு நடத்துதல் வேண்டும். இரண்டாவது சுற்றில் மேடைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணம்; முற்றுப் புள்ளியாக இல்லாது போனாலும் கட்டாயம் குறைக்கவேண்டும். 1952-இல் நாம் பேசத் தொடங்கிய பொழுது மடத்தின் தலைவர்கள் என்றவகையில் நாம் மட்டுமே! மேடைப் பேச்சுக்கும் இன்று பல திருமடங்களின் போற்றுதலுக்குரிய தலைவர்கள் தமிழ் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றி வருகின்றனர். அதனால் நாம் மேடைக்கு வராமை தமிழ்நாட்டுக்கு ஒருபெரிய இழப்பாகாது. ஆனாலும் நம்முடன் வழிநடை போடும் இயக்க நண்பர்கள் அன்பர்கள் இடையில் உறவுகள் வளரவும், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறவும், கலந்துரையாடல்கள் நடைபெறும். கலந்துரையாடல்கள் அரங்கக் கூட்டமாக நிகழும். நாம் அவர்களிடத்தில் எடுத்து மொழியும் செய்திகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது நம்முடைய நம்பிக்கை. கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தவிர்க்க இயலாதது. இந்தக் கட்டுப்பாடு தென்காசி திருவள்ளுவர் கழகம், மதுரை அரச மரத்தடி விநாயகர் இசை இலக்கியப் பேரவை, மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயில், தேனி வரசித்தி விநாயகர் திருக்கோயில், கிருஷ்ணகிரி விஞ்ஞான ஆசிரியர்கள் கழகம் என்பன போன்ற அமைப்புகளுக்குக் கட்டாயம் விதிவிலக்கு உண்டு. இனி தொடர்ந்து “ஆழமாக கிராமச் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்வது, எழுதுவது என்பதுதான் நம்முடைய தலையாய கடமை” என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதோடு தமிழ்நாட்டு மக்கள் சமய ஞானமும், தெளிவும் பெறத்தக்க வகையில் எழுதுதல், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதோடு திருத்தொண்டர், நாயன்மார் அடிச்சுவட்டில் என்று நாம் தொடங்கிய செயற்பாட்டு வழிபாட்டு முறையினை மேலும் ஆழம்படச் செய்வது என்பதும் மற்றவர்களையும் செய்யத்துரண்டுவது என்பதும் நமது தலையாய நோக்கம். இனி எதிர்வரும் இரண்டாவது சுற்றில் இங்ஙணம் நம்முடைய பணிகள் நடைபெறத் திருவருள் துணை செய்யும் என்று நம்புகின்றோம். நம்மைச் சார்ந்த நண்பர்களும், அன்பர்களும் தொடர்ந்து நம்முடைய பயணத்தில் வருவார்கள். இந்த மாற்றங்கள் அவர்களையும், சமுதாயத்தையும் வளர்க்கும் என்று நம்புகின்றோம்.

        "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
        நட்பாங் கிழமை தரும்”

என்பது நமது இயக்க அன்பர்களுக்கு இனிய வாழ்க்கைப் பாடமாக அமைய வேண்டும். சமய அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் ஒரு சமுதாயத்தை அமைத்துச் சமயம் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியது என்பதை வரலாற்று ரீதியாக நிலைநாட்டுவதே இன்றுள்ள முதற்பணி. வெற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை மீட்டு, அறிவில் தெளிவும் ஞானமும் பெறச் செய்ய வேண்டும். இது இன்றைய வரலாறு நமக்கு விதித்துள்ள கடமை. அறிவியல் வளர்ந்து, பூதபௌதிக உலகை இணைத்திருக்கிறது. ஆனால், மனித இதயங்களை அறிவியலால் இணைக்க இயலவில்லை; இணைக்கவும் முடியாது. அதன் காரணமாக உலகு அழிவின் எல்லையில் நின்று கொண்டிருக்கிறது. இது நீர்வாயுக் குண்டு உலகம்! இந்தக் கெட்ட போரிடும் உலகினைமீட்டு, மனிதகுல ஒருமைப்பாட்டை வளர்த்து, மண்ணில் விண்ணகத்தைக் காண முயற்சித்தலே இன்றைய சமுதாயத்திற்குச் செய்யக் கூடிய கடமை. இந்தப் பணிகளை, இன்று காலம் விதித்துள்ள கடமைகள் என்று கருதி, திருவருள் நம்பிக்கையோடு செய்வோம். இந்த நெடிய பயணத்தில் நாம் வெற்றி பெற்றால் மனிதகுல வரலாறு நம்மை வாழ்த்தும். நம்முடைய தலைமுறையோடு வறுமை, தீண்டாமை, போர்வெறி முதலிய சமுதாயக் கேடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைத்து, அடுத்த தலைமுறைக்குப் புதுமையும் பொதுமையும் நிறைந்த வாழ்வைப் பரிசாக வழங்க வேண்டும், சமயம், சமுதாயத்தை வழி நடத்துவதோடு மட்டுமின்றி மேலாண்மையும் பெற்று, மானிடத்தை நிலைபெறச் செய்யவேண்டும். இந்த எண்ணத்தில் நம்மோடு ஒன்றியிருப்பவர்கள் அனைவரும் நம்முடைய அன்பர்கள்! நம்முடைய அகவினத்தார்கள்! பயணம் தொடரட்டும்! பணிகள் நடக்கட்டும்! பணிகளில் ஈடுபடுவதே ஆன்மாலை, நம்மை உயர்த்திக் கொள்ளும்வழி! திருத்தொண்டு நெறியே நம்மை உய்விக்கும் நெறி! நாட்டுக்கு ஏற்ற நெறி! மணிவிழா வந்து விட்டது. இல்லை! ஆர்வ மிகுதியால் வரவழைத்து விட்டனர். விழாக்காணும் அளவுக்கு விழா வாழ்க்கை நடத்தக் கற்றோமில்லை. ஆயினும், அன்புக்கு எங்கே குறை தெரிகிறது. அதனால், விழா எடுத்திருக்கிறீர்கள்! விழா, முற்றுப் புள்ளியாகி விடாமல் விழாத சமுதாய வாழ்க்கையை அமைத்திடும் வகையில் தொடருமாக! நம்முடைய பாதை கடினமானது தான்! ஆனால், அப்பரடிகளும் அண்ணல் காந்தியடிகளும் சென்ற பாதையே! அவர்கள் சென்ற பாதைதான் என்று தெரியாமல் இடைக்கால இடைவெளி மூடி மறைத்துவிட்டது. அதனால் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறைவென்று விளங்கவும் எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்கவும் பணி செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்!