உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/குறட்செல்வம் திறனாய்வு

விக்கிமூலம் இலிருந்து

குறட் செல்வம் திறனாய்வு


இன்பமே எந்நாளும் துன்பமில்லை


உயிரினம் அவாக்களால் உந்தப்பெற்று, விருப்பு வெறுப்புகளுக்குள்ளாவது இயற்கை. ஆசைகள் விருப்பு வெறுப்புகளின் தாய். விருப்பு வெறுப்புகள் வினைகளின் நிலைக்களன். வினைகள் இன்ப துன்பத்திற்குக் காரணம். இன்ப துன்பங்கள் பிறப்பிற்கு அடிப்படை பிறப்பு துன்பத்தோடு தொடர்புடையது. ஆனாலும், பிறப்பின் வழிப்பட்ட இவ் வாழ்க்கையின் இலட்சியம் பிறப்பிலிருந்தும், அவ்வழி வரும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுவது. ஒன்றின் இயல்பு ஒன்றாக இருக்குமானால் அதனோடு அதற்கு மாறுபட்ட இயல்பொன்றை முறையாகக் கூட்டு வித்தால் அவ்வியல்பு மாறும்-வளரும்.

உயிரின், மேற்கூறிய இயல்பை மாற்றி, அன்பின் வழிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு துய்மையான நல்வாழ்க்கையைப் பெறச்செய்ய வேண்டுமானால் இயல்பிலேயே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட கடவுளோடு-சிவ பரம்பொருளோடு இந்த உயிருக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும். அத்தொடர்பின் வழி, உயிர் மாட்டுள்ள குற்றங்கள் குறைந்து நிறைவு பெருகும். அவ்வழி உயிர்கட்கு எங்கும் எப்பொழுதும் இன்பமே கிடைக்கும். இக்குறிப்பினையே அப்பரடிகள் "இன்பமே எந்நாளும் துன்ப மில்லை" என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தினையே திருவள்ளுவரும் "யாண்டும் இடும்பை இல" என்று பேசுகின்றார்.

ஆதலால் வாழ்க்கையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேண்டுதல் வேண்டாமை பாராட்டுவது சமய ஒழுக்கமாக மாட்டாது. வேற்றுமைகளைக் கடந்த விழுமிய மனித குல ஒருமைப்பாடே சமய உலகத்தின் நியதி. ஆதலால், அன்றாட வாழ்க்கையில், இந்தச் சமய சமுதாய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து உய்தி பெறுவோமாக!

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”.


வானும் ஒழுக்கமும்

திருவள்ளுவர் மனித குலத்தின் ஒழுக்க நெறியை உயர்த்த நூல் செய்தவர். அவர் செய்த திருக்குறள் ஒரு முழு ஒழுக்க நூல். பல்வேறு வகையான துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உரிய இயல்பான ஒழுக்கத்தை வலியுறுத்தி உள்ளார். ஆனாலும் திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும்பொழுது நாட்டின் நடைமுறையை யதார்த்த நிலையை மறந்து விட்டு உபதேசிக்கவில்லை. சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தே சொல்லுகிறார். பொதுவாக ஒழுக்கத்தைப்பற்றி உபதேசிப்பது எளிமையானதொன்று. ஆனாலும், அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பதும், மற்றவர் கடைப்பிடித்து ஒழுகுதற்குரிய முறையில் சூழ்நிலையை உருவாக்குவதும் அவசியமாகும்.

பெரும்பான்மையான மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள். ஆனாலும் தவறுகள் செய்தற்குக் காரணம் அவர்களின் சூழ்நிலையேயாகும். உதாரணமாகக் களவு, பொய், வெஃகுதல், அழுக்காறு ஆகிய ஒழுக்கக் கேடுகள் மனித குலத்தில் தோன்றிய செயற்கைத் தவறுகளே. ஏன்? வாழ்க்கைக்குரிய இன்றியமையாத தேவைகளை மனிதன் பெற்றுவிட்டால், இக்குறைகள் குறையும்-இல்லாமலே கூடப் போகலாம். மேலும், செல்வ உலகத்தில் அருவருக்கத் தக்க வகையில்-விபத்துக்களை உண்டாக்கக் கூடிய வகையில் மேடு பள்ளங்கள் இருப்பதும் குறைகளை வளர்க்கத் தக்க சூழலே. ஆதலால் எல்லோரும் எல்லாச் செல்வங்களும் உடையவர்களாக வாழும் சூழல் அமைந்த சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும். இத்தகு சமுதாயத்தை, இருப்பதை விநியோகிப்பதன் மூலம் அமைக்க முடியாது. இம்முறையில் வறுமையைத்தான் பங்கிட முடியும். எனவே, வளத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மனித குலத்திற்குத் துணை நிற்க வேண்டியது-துணை நிற்பது மழையேயாகும். மழையின்றேல் மண்ணில் வளமில்லை. ஊற்று வளமும் குன்றும். இதன் பயனாக வறுமையே தோன்றும். பசிப்பிணியால் உந்தப் பெற்ற மக்கள் ஒழுக்கக் கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள், ஆதலால், மனிதகுல ஒழுக்கத்திற்கு மழையே இன்றியமையாதது என்கிறார் திருவள்ளுவர்.

"நீரின் றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு" (20)

என்பது திருக்குறள். இக் குறட்பாவை மேற்கூறியவாறு சிந்தனை செய்யாமல், "வான் இன்றி மழையில்லை" என்று பொருள் காண்பது நிறைவாகாது.

மேலும், ஒழுக்கச் சூழல் காண, குளித்தலும் தண்ணிர் குடித்தலும் அவசியமாகும். மனித உடலின் வெப்ப நிலை அதிகமாகும் சூழ்நிலை ஒழுக்கக் கேடுகளையும் விளைவிக்கிறது. உடலின் வெப்பநிலையை அளவோடு வைத்துக்கொள்ளத் தண்ணிரில் குளித்தலும், தண்ணீரைக் குடித்தலும் அவசியம். அதனாலன்றோ உடல்நலம் பற்றிய நூல்கள் பலகாலும் குளித்தலையும், தண்ணிர் குடித்தலையும் வற்புறுத்துகின்றன. நல்ல உடல், நல்ல மனம் ஆகியவை ஒழுக்கத்தின் விளை நிலங்கள். எனவே, வான் இவ்வுலகிற்குத் தண்ணிர் வளம் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கவும் உதவுகிறது.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்." (131)

உணர்வார் கண்ணே உலகு

உயிர் ஓர் அறிவுப் பொருள். உயிரின் இயல்பு பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தின் வழிச் செல்வதன்று. வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது உயிரின் கடமை. ஆனால் நடைமுறையில் கோடானுகோடி உயிர்கள் இங்ஙனம் வாழ்வதில்லை. இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களின் கூட்டினால் ஆனது. இப்பருவுலக நடைமுறைக்கும், உயிரியல் வளர்ச்சிக்கும் நிறையத் தொடர்புண்டு. உயிரின் அனுபவ வாயில்கள் புலன்கள். புலன்களின் அனுபவக் கருவிகள் பொறிகள். அனுபவக் களம் ஐம்பூதங்களாய் உலகமும், பூதங்களின் வழித்தாய உணர்வுகளுமாம். பூதங்கள்-அவைகளாலாய உணர்வுகள் வழியே உயிர்கள் செல்லுமாயின், இம்மையிலும் பயனில்லை, மறுமையிலும் பயனில்லை. அதற்கு மாறாக அவற்றின் கூறுபாடுகளை அறிந்து, அவைகளைத் துய்மை செய்து, உணர்ந்து உணர்வு கொண்டு அனுபவிக்கும்பொழுது வாழ்வின் குறிக்கோள் கைகூடுகிறது. அவர்கள் பக்கத்தில் உலகம் நிலைபெற்றிருக்கும். இக்கருத்தினையே திருவள்ளுவர்.

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு." - (27)

என்று பேசுகின்றார்.
மனத் தூய்மையே அறம்

கருதியதை முடிப்பதற்குரிய வழி வகைகளைக் காட்டுவதில் திருவள்ளுவர் வல்லவர். ஒன்றினைச் சாதித்துக் கொள்வதன் மூலம் பலவற்றை அடைந்து அனுபவிக்கும் வண்ணம் வழி காட்டுவதில் வல்லவர் அவர். அறம் செய்தல் பற்றிப் பல்வேறு வகையான கருத்துக்கள் இவ்வுலகில் உண்டு. "அறத்தைச் செய்க" என்று ஆணையிடுவது பிறமொழிகளின் மரபு. "அறம் செய விரும்பு” என்பது தமிழ் மொழியின் மரபு.

மனம், மொழி, மெய்-இவற்றின் துணை கொண்டு, அறம் இயற்ற வேண்டும்; செய்ய வேண்டும். இவற்றுள் மொழியால்-மெய்யால் செய்யக் கூடிய அறங்களில் பொய்ம்மையும், வஞ்சனையும் இருக்கக் கூடும். மனத்தால் எண்ணிச் செய்யக் கூடிய அறமே சிறந்தது. மொழியும், மெய்யும் இரட்டை வேடம் போட முடியும். ஆனால், மனத்தால் இரட்டை வேடம் போட முடியாது. அதன் இயற்கை இயல்பு ஒரு தன்மைத்தாக இருக்கிறது. செயல்கள் அனைத்திற்கும் சிந்தனையே அடிப்படை சிந்தனையின் நிலைக் களன் மனம். நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் துய்மை காண வேண்டும் என்று தனித் தனியாக முயல்வதை விட செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றி வைத்துக் கொள்வது நல்லது; சிறந்தது. இதன் மூலம் நாம் செய்யும் அறங்களும் மிகச் சிறந்து விளங்கும். -

மேலும், வாழ்வியல் முறை எண்ணத்தின் வழி இயங்கி பயன் கூட்டுவிக்குமே அன்றி செயல்கள் வழி மட்டுமல்ல. மனத் தூய்மை இன்றிச் செய்யப் பெறும் அறங்கள் செய்பவர்க்கும் பயன் தராது: செய்யப் பெறுவோர்க்கும் பயன் தராது. மனத் தூய்மை வாழ்க்கை முழுவதையுமே சாதித்துத் தரக் கூடியது. அதை முயன்று பெறுவதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மையுடையன என்றே திருவள்ளுவர் கூறுகிறார்.

"மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற." (34)

அறமும் சிவிகையும்

திருவள்ளுவர் முற்போக்கான கருத்துக்களையுடையவர். அவர் சமுதாயத்தின் குணங்களையும் குறைகளையும் நடுநிலை உணர்வோடு விமரிசனம் செய்கிறார். அந்த விமரிசனப் போக்கில் பழமையை ஏற்றுக் கொண்டதும் உண்டு; பழமையைச் சாடியதுமுண்டு.

ஒருவன் பல்லக்கிலே போகிறான். இன்னொருவன் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போகிறான். பல்லக்கில் ஏறிச்செல்பவன் அறம் பணணினான் என்றும், பல்லக்கைத் தூக்கிச் செல்வோன் அறம் செய்யாதவன் என்றும், அதன் பயனாகவே பல்லக்கைச் சுமந்து செல்லுகிறான் என்றும் சொல்லுவது தமிழகத்தின் பழைய பழக்கங்களில் ஒன்று. "அறத்தாறிது என வேண்டா” என்ற இந்தக் குறளுக்குக் கூட அந்தப் பழைய வழக்குப்படியே பலர் பொருள் கொண்டுள்ளார்கள். ஆனால், திருவள்ளுவரின் கருத்து அஃதன்று. திருவள்ளுவர் பல்லக்கில் சவாரி செய்வதையும், பல்லக்கைத் தூக்குவதையும் காரணமாகக்காட்டி, அறத்தாறுதான் இந்த வேற்றுமைக்குக் காரணம் என்று சொல்லாதே என்று சொல்லுகின்றார். "இதுவென வேண்டா" என்ற சொற்றொடர் இந்தப் பொருளையே தருகிறது.

சிவிகை ஊர்தலுக்கும், தூக்குதலுக்கும், அறத்திற்கும் உறவில்லை. காசுக்குத்தான் உறவு. நிறையச் செல்வம் உடையவர்கள் - ஜமீன்தார்கள் - ஜமீன்தாரிணிகள் ஆகியோர் கூலி கொடுத்துத் துரக்கச் செய்து போகிறார்கள். இஃதெப்படி அறமாகும்? செல்வமுடைமையும் அறமன்று. 'பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்று பின்னே வள்ளுவர் பேசுகிறார். அதனால், சிவிகை ஊர்தல்-தாங்குதல் என்ற வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்து.

ஒரோ வழி அறத்தின் காரணமாகவும் சிவிகை ஊர்தலும் உண்டு. சிவிகை தாங்குதலும் உண்டு. அப்பொழுது சிவிகை ஊர்கிறவர்களும் சிவிகை தாங்குகிறவர்களும் ஒத்த உணர்வினராய்...ஒத்த தகுதியுடையவராய் இருப்பர். அங்கு ஒருவருக்கொருவர் பெருமைப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டின் வழியிலேயே சிவிகை தாங்குதல் நிகழ்கிறது. அங்கு சிவிகை தாங்குதலும் அறமேயாம். இக்காட்சியைத் திருஞான சம்பந்தர் ஊர்ந்த சிவிகையைத் திருநாவுக்கரசர் தாங்கியதிலிருந்து நன்கு உணரலாம்.

"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தனோ டூர்ந்தா னிடை (37)

மனையறத்தார் கடமை

வாழ்க்கை குறிக்கோள் உடையது. தோழமை கொள்வதும் துணை நிற்பதும் துயர் துடைப்பதும் வாழ்க்கையின் இன்றியமையாத பணிகள். இப்பணிகளற்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. மனிதன் ஊன் உண்பதும் காதற் பெண்டுடன் களித்து மகிழ்ந்து மனையில் வாழ்வதும் குறிக்கோள் பாதையில் இனிதே நடைபோடத்தான். இன்று பலர் உண்பதே தொழிலாகக் கொண்டு இருக்கின்றனர்; பெண்ணின்பமே இன்பமெனக் கருதுகின்றனர். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்; உணர்ச்சியில் விலங்குகள். வனத்திடை வாழ்வதற்குத் தப்பிப்போய் நாட்டில் நடமாடுகின்றனர். வள்ளுவம் வாழ்வாங்கு வாழும் நெறியுணர்த்தும் நூல். வாழும் மனிதனுக்குத் துறைதோறும் கடமைகளுண்டு. சில துறைகளைத் திருவள்ளுவரே எடுத்து விளக்குகின்றார். உழைப்பையே உயர்துணையாகக் கொண்டு பொருள்பல செய்து குவித்துப் பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்தல், வாழ்வாங்கு வாழும் நெறியாகும். இங்ஙனம் பொதுவகையாக மட்டும் கூறாமல் பகுதி பிரித்தும் கூறுகிறார்.

"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." (42)

துறந்தார் என்பவர் யார்? கனிந்த கனியென உள்ளத்தாற் பழுத்து யாதொரு பற்றுமின்றிப் புகழ் இதழ்களில் நாட்டமின்றிப் பழுத்த மனத்தடியாராக வாழ்பவர்களே துறவிகள். அவர்கள் உள்ளம் கருணையின் ஊற்று; நாடெலாம் வாழக் கருதும் பேருள்ளம். அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்பாகும்; மனையறத்தின் மங்கலத்திற்கு அரணாகும். துறந்தாரோ உரிமையுடையதென யாதொன்றையும் பெற்றிலர்; ஒடும் பொன்னும் ஒக்க நோக்கி வாழும் சீலமுடையார் கந்தை ஆடையும் மிகையெனக் கருதுவோர். ஆதலால் அவர்களுக்காக அவர்கள் நலங்கருதி, மனையறம் நிகழ்த்துவோர் பணி செய்தல் பாங்காகும். இந்தத் திருக்குறள் நெறியையே திருத்தொண்டர் புராணம் விளக்கி அருளுகிறது.

அடுத்துப் பேணத் தக்கவர் "துவ்வாதவர்". திருவள்ளுவர் துவ்வாதவர் என்ற ஓரினத்தைப், பேணுதற்குரியவராக விளக்கி அறம் வகுத்தல் மிக உயர்ந்த பெருநெறியாகும். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும். உயிர்கள் துப்பானவற்றைத் துய்த்து வேட்கை தணிந்துழியே நலமுறுகின்றன. இதுவே சமயத்தின் அடிப்படை நியதி. துய்த்து அனுபவிக்கப் பிறந்த உயிர்களுக்குத் துய்ப்பன வழங்காமல் ஏழ்மையில் அவலமுறச் செய்துவிட்டு துய்க்கும் நெறிக்கும் அப்பாற்பட்ட இறைவன் முன்னே துய்த்தற்குரிய பொருள் களைப் படைப்பது பேதைமையேயாம். அதுமட்டுமின்றி ஏமாற்றமுமாகும். இறைவன், துய்த்தற்குரிய பொருள்களைப் படைத்துக் காப்பது உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, உய்தி பெறுதற்காகவேயாம். அங்ஙனம் துய்த்தற்குரிய புலன்களைப் பெற்றிருந்தும் துய்த்தற்குரிய வாயில்களாகிய பொறிகளைப் பெற்றிருந்தும் இறைவன் கருணையால் துய்த்தற்குரிய பொருள்களைப் பெற்றிருந்தும், பலர் துய்க்கும் வழியின்றித் தொல்லைப்படுகிறார்கள். தன்னலச்செறிவின் காரணமாகவும், துய்த்தல் துறத்தலுக்கு வாயில் என்ற அறிவின்மையினாலும், இறைநெறி பல்லுயிரையும் பேணிப் பாதுகாக்கும் நெறியே யென்ற உணர்வின்மையினாலும் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன. மனையறத்தைப் பெயரளவிலன்றி உண்மையிலேயே அறமாக நிகழ்த்த வேண்டுமாயின் துவ்வாதவரைப் பேண வேண்டும்.

அடுத்துப் பேணத் தக்கவராக வருபவர் இறந்தாராவர். அதாவது நம்முடைய தமிழ் மரபுப்படி, அவாவும் வேட்கையும் தணிந்துழிதான் உயிர் நிலையான நிலையை எய்துகின்றது. அதுவரையில் பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கிச் சுழல்கிறது. சில சமயங்களில் பருவுடலோடு இந்த உலகிடை நடமாடித் துய்த்து மகிழும்; சில பொழுது பருவுடலினின்று பிரிந்து இறந்துபட்டதாகக் கருதப்பட்டாலும் நுண்ணுடலோடு உலவிப் பொறிகளால் துய்க்காமல் புலன்களால் மட்டும் துய்க்கும். அங்ஙனம் பருவுடல் இறந்துபட்டு நுண்ணுடலில் திரியும் இறந்தார்க்கும் இல்வாழ்வோர் துணையாக நின்று, நீத்தார் நினைவு நாட்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களுடைய துய்ப்புக்குத் துணை நின்று அவ்வழி வேட்கை தணியச் செய்யவேண்டும். இங்ஙனம் நுண்ணுடலில் வாழ்வோர் உலகியலில் இறந்து பட்டா ரென்று கருதப்பெற்றாலும் உண்மையில் இறந்தவர்களாகார். இவர்கள் நிலை பரிதாபகரமானது. துய்ப்பார்வத்தைத் தூண்டும் புலன்கள் செத்தபாடில்லை. ஆனால் துய்ப்பன வற்றைத் தேடிப் பெறுதற்குரிய கருவிகளாகிய பொறிகளோ இல்லை. புலன்கள் எண்ணும், கற்பனை செய்யும்; ஆசைப்படும். ஆனால் தாமே அடைதற்குரிய ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆதலால், அந்த உயிர்களின் துய்ப்பு நலன்களைப் பாதுகாப்பது இல்வாழ்வோரின் கடமையாகிறது.

"இறந்தார்" என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டாலும் யாப்பில் பிழையில்லை. அப்படி "இரந்தார்” என்று கொண்டால் யாதொரு பற்றுக்கோடுமின்றி - உடலில் உறுப்புக் குறையினராக உடற் தொழிற்பாடு செய்ய முடியாமல் பிறரை நோக்கி வாழ வேண்டிய நிலையில் இராது நிற்பாரைக் குறிக்கும்.

இன்றைய உலகில் இரப்பாரினம் கண்டு கொள்ள முடியாமல் குழம்பிக் கிடக்கிறது. யாதோர் உடற் குறையுமின்றி உழைப்பிற்கேற்ற முழுத் தகுதியுடையதாய் உடல் விளக்கமுற இருந்தும் கருவி கரணங்கள் யாதொரு பிழையுமின்றி இயங்கினாலும் உழைக்கும் சுபாவம் இன்மையின் காரணமாக இரந்து வாழ்கின்ற “சுகவாழ்வினர்" பலரைச் சந்திக்கிறோம். மனத்தால் துறவாது துறவை வாழ்க்கையின் வாயிலாகக் கருதி மேற்கொண்டோர் பலரும் இரவலர்களாக ஆங்காங்குத் திரிவதைப் பார்க்கின்றோம். துறவி இரக்க மாட்டான்.

துறவி இரவலன் ஆதல் இடும்பைக்கு வழி வகுக்கும். உடல் கட்டுக்கோப்புடையவன். அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காமல் ஏய்த்து வாழ்ந்தாலும் இரத்தலோடொக்கும். ஆனால் இத்தகையோரை இரவலர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லூழின்மையின் காரணத்தாலோ அல்லது இயற்கையின் கொடுமையினாலோ உடற்குறை யுடைய ராயிருப்போரே இரவலர் ஆவர். அவர் தமக்குங்கூட என்றும் இரந்து வாழ்தல் ஏற்ற நெறியன்று. இரத்தல் வாழ்க்கைக்காக அன்று வாழ்க்கையை வகைபட நடத்துவதற்குரிய முதலை இரத்தலே இரத்தலாகும். பின் அம்முதலைக் கொண்டு இயன்ற தொழில் செய்து முதலை உண்ணாது வருவாயை உண்டு மகிழ்ந்து வாழ்தலே ஏற்றமுறை. இந்த அடிப்படையில் இரப்பவராயிருப்பவர்க்கு உற்றுழி உதவுவதும் மனையறத் தார்க்குரிய மாண்புள்ள கடமை.

இங்ஙனம் பலருக்கும் துணை நின்று வாழச் செய்வது, வாழ்தலே இயல்புடைய இல்லறம் என்றார் வள்ளுவர். இன்றோ, பலருக்கு பால்வேறுபட்ட இருவர் கூடி ஒரு வீட்டில் உண்டு உடுத்தி வாழ்ந்து மக்களைப் பெருக்கி வாழ்தலே மனையறம் என்றாகிவிட்டது. அதனாலேதான் துன்பம் சூழ்ந்து வருத்துகிறது. வள்ளுவம் காணும் மனையறம் வையகத்தில் மலர்ந்தால் துன்பம் நீங்கும்; இன்பம் பொங்கும்.

மனிதன் தெய்வமாகலாம்

வாழ்க்கை மிகவும் சுவையுடைய ஒன்று. வாழ்வது என்பதும் ஒரு கலையே. மனிதன் முறையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முறையான வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதே சமய நெறியின் விழுமிய பயன்.

வாழ்க்கைக் கலையில் கைவந்தவர் திருவள்ளுவர். அவர், இந்த வையகத்து மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளமுறவே திருக்குறளைச் செய்தார்.

உலகியலில், மக்களிற் பலர் தெய்வத்தைத் தேடிச் செல்வதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில், தெய்வத் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து தங்கள் வாழ்க்கையில் அவற்றை மேற்கொள்ளாத நிலைமையையும் பார்க்கிறோம்.

இயற்கையில் மானிட யாக்கைகளுக்குள் யாதொரு வேற்றுமையுமில்லை. உயிர்களுக்குள்ளும் பொதுவில் வேற்றுமையில்லை; தகுதிப்பாட்டிலேயே வேற்றுமை உண்டு. வீணை பொதுவாக இருந்தாலும் மிழற்றுபவனின் திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இசைவெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதைப் பார்க்கிறோம். மிழற்றத் தெரிந்தவர் வீணையை மிழற்றினால் இன்னிசை பரவும். மிழற்றத் தெரியாதவர் மிழற்றினால் அபசுரமே பிறக்கும்.

வீணை போன்றதே மானிட யாக்கை. அந்த யாக்கையை அறிவின் விளக்கமாகவும் ஆக்கலாம். அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத்தின் செயற்பாடாகவும் ஆக்கலாம். அங்ஙனமின்றிக் குப்பைத் தொட்டியைவிடக் கேடானதாகவும் ஆக்கலாம். அது இயக்குவோரின் ஆற்றலையும் தகுதிப்பாட்டையும் பொறுத்தது. இதையுணர்ந்தே,

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
.......................................
வல்லமை தாராயோ? - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

என்று கேட்கிறார் பாரதியார்.

காடுகளைக் கழனிகளாக்கிப் பயன் காண்பது மனித ஆற்றல். கல்லைப் பேசும் பொற்சிற்பமாக்கிக் கவின் செய்வது மனித ஆற்றல். இவைபோன்றே, குறைமலிந்த மனித வாழ்க்கையை நிறைவுடையதாக்கித் தெய்வத்தின் நலம் பொதுளச் செய்வதும் மனித ஆற்றலேயாகும். ஏன்? மனிதனே தெய்வமாகலாம்; வாழ்வாங்கு வாழ்ந்தால்! ஆம்! தெய்வமாக மதிக்கப் பெறுவான். இத்தகு பேராற்றல் அவனுக்குள்ளே அடங்கிக் கிடக்கிறது. "தெய்வம் நீ என்றுணர்” என்று நமக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார். 'கைவருந்தி உழைப்பவர் தெய்வம்' என்கிறார்.

இந்தப் பேருண்மைகளை உள்ளடக்கியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (1001)

என்றார் திருவள்ளுவர்.

பெய்யும் மழை

தெய்வம் தொழாஅள் கொழுநற் றோழுதெழுவாள்' என்ற திருக்குறள் இன்றைய யுகத்தில் விவாதத்திற்குரிய குறளாக இருக்கிறது. சிறந்த கற்புடைய பெண்ணுக்கு இலக்கணம் வடித்துத் தருவது இந்தக் குறள். ஒருவருக் கொருவர் நம்பிக்கையும் கடமைப்பாடும் தாங்கியதே நல்வாழ்வு. இந்த உயரிய வாழ்க்கை நெறியில் உலக மனித சமுதாயம் செல்லும்வரை இன்பமே; எந்நாளும் துன்ப மில்லை. கணவனுக்கு மனைவி நம்பிக்கைக்குரியவளாக இருக்க வேண்டும். மனைவிக்குக் கணவன் நம்பிக்கைக்குரிய வனாக இருக்க வேண்டும். நண்பனுக்கு நண்பன் நம்பிக்கைக் குரியவனாக இருக்கவேண்டும். ஏவல் கொள்வோர் - ஏவல் செய்வோர் இவர்களுக்கிடேயேயும் நம்பிக்கை நிலவ வேண்டும்; கடப்பாட்டு நெறி உயிர்ப்போடிருக்க வேண்டும். இந்நெறிமுறை பிறழும் காலங்களிலெல்லாம் மனித உலகம் துன்பத்தால் சூழப்படுகிறது. பெண்ணினத்துக் கற்பை மட்டும் பெரிதுபடுத்தியதற்குக் காரணம், பெண்ணிடத்து நம்பிக்கை மோசம் ஏற்படும்பொழுது, ஏற்படும் ஏமாற்றமும் பகையும் அளத்தற்கரியதா யிருப்பதேயாகும். நிலப் பிரபுத்துவ சமுதாயமும், தனியுடைமை ஆதிக்கமும், பெண்ணடிமைத் தனமும் பரவலாக இருப்பதன் காரணமாகப் பெண்ணின் ஒழுக்கக்கேடு மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. அதனால், மற்ற இனத்திற்குத் தேவையில்லையென்று கொள்ளக் கூடாது. ஆதலால் மனித சமூகத்தின் எல்லா உறவுகளிலும் நம்பிக்கையும் கடமைப்பாட்டுணர்வும் நிலவ வேண்டும். சிறந்த கற்புடைய பெண் தெய்வம் தொழமாட்டாள். தெய்வம் கடவுளாகாது. தெய்வம் என்ற சொல்லைப் பெரும்பாலும் சிறு தெய்வங்கள் மேற்றே அறிஞர்கள் ஏற்றுவர். கணவனைக் கூட்டுவிக்கும் காமதேவதையைத் தொழுதலையே "பீடன்று" என்று மறுத்தாள் கண்ணகி. காரணம், தெய்வத்தைத் தொழும்பொழுது தன் கணவனின் குற்றத்தைக் கூறித் தொழவேண்டும். தன்னுடைய கணவனின் பழியை மற்றவர் அறியக்கூறுதலும் தூற்றுதலும் கற்புடைப் பெண்ணுக்கு அழகல்ல. அதனையே, பிறிதோரிடத்தும் திருவள்ளுவர், சொல் காத்தலையும் பெண்ணுக்குக் கடமையாக்கினார். ஆதலால், தெய்வம் தொழுகின்ற பழக்கத்தைக் கற்புடைப் பெண்ணுக்கு திருக்குறள் விலக்குகிறது.

"கொழுநன் தொழுதெழுவாள்” என்பது கற்புடைய பெண்ணின் அடுத்த இலக்கணம். திருக்குறளின் சொல்லமைப்பு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. "தொழுதல்” என்பதற்கு உடலால் செய்யும் வணக்கம் என்பது மட்டும் பொருள் அன்று. உள்ளத்தால் உணர்வில் ஒன்றாகி-உணர்வு தலை காட்டும்பொழுதெல்லாம் இனந்தெரியாத பணிவும், பரிவும் கொண்டு வாழ்தலென்றும் பொருள் கொள்ள வேண்டும். "தொழுது எழுவான்" என்ற சொல்முறை வைப்பு இந்தப் பொருளையே சிறப்பாகத் தருகிறது. உடல் வணக்கம் என்றே பொருள் கொள்வதாயின் "எழுந்து தொழுதல்” என்ற முறைவைப்பு இருக்க வேண்டும்.

அடுத்து, உணர்வில் கலந்து ஒன்றான பெண்ணுக்கு கணவனின் இயல்பு, குறை, நிறை, தேவை அனைத்தும் தெரியும். அவனுக்கு எது, எப்பொழுது தேவையோ, அப்பொழுது அவ்வண்ணம் அவள் துணை செய்வாள். வேளாண்மை செய்த ஒருவன் விரும்பியபொழுது மழை பெய்தால் அம்மழையினால் அவனடைந்த வேளாண்மைப் பொருள் பெருக்கமும், மன மகிழ்வும் அளவிடற்கரியன. அது போலவே, உற்ற இடத்து உரியவாறு துணை செய்யும் வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவன் காரியங்களின் சாதனையைப் பெறுகிறான்; மகிழ்வு கலந்த இன்பமும் பெறுகிறான்; புகழும் பீடு நடையும் பெறுகிறான்; வேண்டிய பொழுது பெய்யும் மழைபோல வேண்டியபொழுது உதவி செய்வாள். அதிலும் நுட்பமிருக்கிறது. வேண்டாத பொழுது மழை பெய்யக்கூடாது. அதுபோலவே கணவன் வேண்டாத பொழுதும் மேவித் துணை செய்யக்கூடாது. அங்ஙனம் செய்யப்புகின் அடக்கமின்மையாகவும், தன் முனைப்பாகவும் கருதப்பெற்று உறவு கெடும். ஆதலால் "பெய்யெனப் பெய்யும் மழை" யென்ற சொற்றொடர், சிந்தனைக்கு இன்பம் தருவது. வேண்டியபொழுது காலந் தாழ்த்தாமலும் உடனடியாகப் பெய்யும் மழையும் சிறப்புக்குரியது. அது போலவே கணவனுக்கு வேண்டிய பொழுது உடனடியாகத் துணை செய்யாமல் "இதோ வருகிறேன்" என்றோ "இப்பொழு தென்ன அவசரம்?" என்றோ நீட்டித்துக் காலத்தாழ்த்தாமல் உதவி செய்யும் பெண்ணே உயரிய வாழ்க்கைத் துணைவியாவாள்.

சிறு தெய்வங்களைத் தொழாது கணவனுடன் ஒன்றிய உணர்வால் ஒன்றித்து வாழ்தலின் காரணமாக உணர்வு நிறைந்த உறக்கத்தினின்று கண் துயில் நீங்கியவுடனேயே கணவனை உள்ளத்தால் நினைந்து, உணர்வால் தொழுது எழுகின்ற பெண், வேளாண்மை செய்தவன் வேண்டியவாறு பெய்யும் மழை வேளாளனுக்குப் பயன்படுவதைப் போல இந்தப் பெண், தன்னைக்கொண்ட கணவனுக்கு ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியாக விளங்குவாள்.

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" (55)


தலையாய கற்பு

உலகியல் வாழ்க்கையில் உறவின் சிறப்பே தலை தூக்கி நிற்கிறது. நட்பு, காதல் ஆகிய எத்துறை உறவானாலும் சரி, இயற்கையில் அமைந்ததாக இருப்பின் சிறப்புடையதேயாம். செயற்கை முறையில் ஏற்பட்டு வரும் நட்பும், காதலும் சிறப்புடையன அல்ல. மேலும், இத்தகு உறவு வெஃகுதலைப் பெருக்கி, அழுக்காற்றை வளர்த்துத் துன்பியல் பிரிவைத் தரும். முன்னையதில் காவல் இல்லை. பின்னையதில் காவலே உண்டு.

திருவள்ளுவர் இயற்கையைத் தழுவிய இயல்பாய் அமைகின்ற ஒழுகலாறுகளையே எடுத்துக் கூறுகின்றார். மனித சமுதாயத்தின் இனிய ஒழுக்கங்களுள் ஒன்று கற்பு நெறி. மனித இனம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்தபிறகு கால்கொண்ட ஒழுக்க நெறி கற்பு நெறி.

அடுத்து, பல்வேறு தீமைகளைத் தோற்றுவிப்பது காமம். பகை, போர் முதலியனவும் கூட காமத்தால் விளைதலுண்டு. இத்தகு துன்பங்களின் முடிவிலேயே கற்பொழுக்கம் வகுக்கப் பெற்றது.

கற்பு நெறியை இயல்பிலேயே ஒழுக்கமாகக் கொள்ளுதலே சிறப்பு. அஃதன்றிச் செய்கை முறையில் கற்பொழுக்கத்தைக் காக்க முற்படுவதில் சிறப்பில்லை. காவல் மூலம் காக்கப் பெறும் கற்பு நிலைத்து நிற்காது. சந்தர்ப்பம் வரும் பொழுது கெடும். அதனாலேயே எதிர்த் தாக்குதல் வந்த பொழுதும், காக்கப் பெற்ற கற்பைப் பெரிதெனப் புகழ்ந்து பேசுகின்றன நமது காவியங்கள்.

"இதயத்தால் விரும்பிக் காக்கும் கற்பே தலையாய கற்பு” என்று திருவள்ளுவர் போற்றுகின்றார்.

"சிறைகாக்கும் காப்புஎவன் செயும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை." (57)

அறிவறிந்த மக்கட்பேறு

வீடும் நாடும் சிறப்பது நன்மக்களாலேயாம். நன் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களன் மனையற வாழ்க்கை. வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் "மக்கட் பேறு” பேசுகின்றார். ஒன்றிற்கொன்று தொடர்பிருக்கிறது. நன்மக்கட்பேறு வேண்டுமானால் தலைவனும் தலைவியும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். ஒழுக்கம், பண்பு போன்றவை வழி வழி வளரக்கூடியன. அதனாலன்றோ கம்பன் 'குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்', என்று பேசுகின்றான். திருவள்ளுவரும் 'குலமுடையான் கண்ணே யுள' என்கிறார்.

பொதுவாக பால்வேறுபட்ட இருவர்-ஒருவன் ஒருத்தி கூடி வாழ்ந்தாலே குழந்தை பிறக்கும்-மக்கட்பேறு கிடைக்கும். அஃது இயற்கை. ஆனால், திருவள்ளுவர் இத்தகு இயற்கையான மக்கட்பேற்றினைப் பாராட்டிப் பேசவில்லை. அவர் விரும்புவதெல்லாம் 'அறிவறிந்த மக்கட்பேறு'. இந்த அறிவறிந்த மக்கட் பேற்றினைப் பெற விரும்பும் தலைவனும், தலைவியும் தங்களை முதலில் செழுமைப் படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் சீலத்தாற் சிறந்த வாழ்வு நடத்துதல் வேண்டும். வித்தின் இயல்பு - நிலத்தின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்தே பயிரின் இயல்பு பயிரின் - நலம்.

அடுத்து, இன்பத்திற்காக மட்டுமே மனைவாழ்க்கையல்ல. இலட்சியத்தை நோக்கி நடைபோடும் வாழ்க்கையில்வழியிலே களைப்புத் தோன்றாமல் பயணம் செய்யவே உலகியல் இன்பங்கள். மனைவாழ்க்கையும் அத்தகைத்தே. சிலர் கருதுவது போன்று அது தீமையுமன்று-சிற்றின்பமுமன்று. எனினும், இலட்சியத்தை மறந்த நிலையில் இங்கேயே தங்கிக் கிடக்கும்போது சான்றோரால் அது தவறு எனக் கண்டிக்கப்பெற்று வந்திருக்கிறது. வாழ்க்கையின் இலட்சியம் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதல். பிறப்பு இறப்புச் சுழற்சியினின்றும் நீங்கி திருவருட் சார்பு பெறுதல். இந்நோக்கத்தை நோக்கிப் பயணம் செய்யும்போதே, பிற உயிர்களுக்குத் தொண்டு செய்தலும் இணைக்கப் பெறுகிறது. மனையுறத்தில் தலைவன், தலைவியாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி, இன்பம் பெற்று வாழ்தல் அமைப்பு.

இந்த அமைப்பிலேயே, இலட்சிய உணர்வோடு கூடிய வாழ்வியற் பயணம் செய்ய உதவும் மனித உடம்பைப் பெறாத உயிர்களுக்கு-துணை செய்யக் கூடிய மனித உடம்பைப் பெறாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு மனித உடம்பைத் தந்து உதவி செய்யக்கூடிய அரிய சாதனமாகவும் மனைவாழ்க்கை பயன்படுகிறது. ஆதலால், மனைவாழ்க்கையைச் சாதாரண ஒன்றாகக் கருதாமல் அதையே 'தவம்' செய்யும் சாதனமாகக் கருதிப் பயன்படுத்தினால் அறிவறிந்த மக்கட்பேறு கிடைக்கும்.

திருஞானசம்பந்தரை ஈன்றெடுத்த குடும்பம் மனையறத்திலேயே தவம் செய்த குடும்பம். சிவநெறி வளர்க்கும் திருப்பிள்ளை வேண்டும் என்ற குறிப்பிட்ட குறிக்கோளோடு தவம் செய்தே அவர்கள் அப்பேற்றினைப் பெற்றார்கள். இத்தகு நோன்பினை எல்லாக் குடும்பங்களுமே நோற்க வேண்டும்.

திருவள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியமையான், "தந்தை தாயாரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த” என்ற குறிப்பினை உணர்த்துகின்றார். கருவிலே அறிவுடையவர்கள் -இளமைப் பருவத்திலேயே-குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியுடையராகத் திகழ்கின்றார்கள். திருஞான சம்பந்தர் தம் மூன்றாவதாண்டிலேயே திருநெறித் தமிழைப் பாடியது நினைவு கூரத்தக்கது. கவிஞன் பாரதியும், பிறப்பிலேயே கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்கள் கருவிலேயே அறிவுடையர் என்று குறிப்பிடுகின்றார். இதனையே வள்ளுவர்,

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற." (61)

என்ற குறட்பா வாயிலாக உணர்த்துகின்றார்.

வெய்யிலும் அறமும்

காய்கதிர்ச் செல்வன் ஆக்கத்தின் சின்னம். இருள் நீக்கி ஒளி தருவது கதிரொளி; மடிநீக்கி ஏற்றத்திற்குரிய எழுச்சியை ஈவது ஞாயிறு. செந்நெல்லும் செங்கதிரும் பயனுறச் செய்வதும் செங்கதிரோன் ஒளியே யாம்! எழுகின்ற ஞாயிற்றின் ஒளி இருள்நீக்கும்-ஒளி பெருக்கும்-உறுதி பயக்கும்-வாழ்வளிக்கும்! எனினும், எலும்பில்லாத புழுக்களை அது தாக்கி வருத்தும் வெயிலின் கொடுமையினின்றும், தற்காத்துக் கொள்ள எலும்பு தேவை. எலும்பிருந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றிக் கதிரவனின் ஒளி கொண்டு வாழவும் முடியும்.

அநீதியை நீக்கி நீதியை நிலை நிறுத்துவது அறம். துன்பத்தை நீக்கி இன்பத்தை நிலைபெறச் செய்வது அறம். அறத்திற்கு விலை அன்பேயாகும். அன்புடையோருக்கு அறம் தென்றல்! அன்பில்லாதவர்களுக்கு அது வருத்தும் வாடை - துன்பப் புயல்! ஏன்? அன்பின் விளைவு அறம். அன்பின் பயன் அறம். அன்பு பண்பு, அறம் பயன்! இன்பத்தின் தாய் அன்பு. அன்பில்லாமல் மனித குலத்திற்குத் தீமை செய்து வாழ்பவனை அறக் கடவுள் வருத்தும். இதிகாச உலகில் இராவணனும், பௌராணிய உலகில் பத்மாசுரனும், அரசியல் உலகில் ஜார் மன்னனும் இதற்கு எடுத்துக் காட்டாவர்.

வெய்யிலின் காய்ச்சலிலிருந்து ஒரோவழி தப்பித்துக் கொள்ள முடியும். வெளியில் தலைகாட்டாமல் மண்ணிற்கு உள்ளேயே புழு வாழுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அறக்கடவுளின் காட்சியிலிருந்து அன்பில்லாத மனிதன் தப்பித்துக் கொள்ள முடியாது. அறக்கடவுள் எல்லாமாய்-முழுவதுமாய் இலங்குகிறார். அவரது பார்வை ஆழ்ந்தகன்றது. ஆதலால், அன்புடையராக வாழ்தலும், அறக் கடவுளின் கருணையில் வளர்தலும் நமது கடமை.

அன்புடையராக வாழ்தலின் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் முன்னேறுதல், இன்பத் துய்த்தல், திருவருள் நிலை பெறுதல் ஆகிய பேறுகள் கிடைக்கின்றன. அன்பின்மையால் இவற்றை இழக்கிறோம். அழிவும் ஏற்படுகிறது.

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." (77)

மனிதனும் மரமும்

றண்ட பாலைவனம்!

நீருற்றின் சாயலே இல்லாத நிலப் பரப்பு. அந்தப் பாலைவனத்தில் ஒரு பட்டமரம்! அது தளிர்த்தது!

என்ன திகைக்கிறீர்களா? நாம் சொல்வது வியப்பாக இருக்கிறதா?

ஆம்! மேலே சொன்னவை நடக்கக் கூடாதவை. நடக்க முடியாதவை என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! அது போலவே, அகவாழ்வில் அன்பைப் பேணி வளர்க்காதவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமில்லை! அவர்கள் செல்வத்தால் செழிக்க முடியாது! புகழால் பீடுநடை போட முடியாது! தமிழின் மரபுப்படி நிலம் நான்குதான். அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன. ஐந்தாவது நிலம் ஒன்றுண்டு! அதுதான் பாலை. ஆனால் பாலை, இயல்பாக இருப்பதல்ல. நான்கு நிலங்களின் திரிபாலும் மாறுபாட்டாலும் தோன்றுவதுதான் பாலை.

இத்தகு மாறுபாட்டின்-திரிபின் காரணமாக வளம் தருகின்ற பொருள்களின் உறவிலிருந்து நிலம் ஒதுங்கு வதனால், வளத்தைப் பெறவோ, தரவோ முடியாத வறட்சி நிலை ஏற்பட்டு விடுகிறது. வளம் பெறுதலும் தருதலும் ஆகிய சூழல் அல்லது கடமைப்பாடு என்ற இயற்கை நியதியி லிருந்து மரம் விலகி விடுதலின் காரணமாகப் பயன் தராதபெறாத நிலையில் அது வற்றிப் போய் விடுகிறது.

அதுபோலவே, கொண்டும் கொடுத்தலும், அன்பும் உறவும் காட்டிக் கூடிவாழ வேண்டிய மனிதன், அன்பு காட்டும் ஒழுக்க நெறியிலிருந்து விலகியவனின் சுற்றுச்சூழல் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பைச் சொரிதற் குரிய வாய்ப்பையும், அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் அவன் இழந்து விடுகின்றமையின் காரணமாக வற்றல் மரம் போலச் சாரமற்றவன் ஆகிவிடுகிறான்.

வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ, அது போலவே மனத்தகத்தே அன்பில்லாதவனின் வாழ்க்கை சிறக்காது. ஆதலால், மற்றவர்களிடத்தே மனங் கலந்த அன்பு காட்டுவதே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுதற்குரிய வழி என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி. ஆம்; பிறரை வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலுமே நல் வாழ்க்கையின் இயல்பு என்ற உண்மையினை அழகாக உவமையின் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். இதோ குறளைப் பாருங்கள்.

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." (78)

வித்துமிடல் வேண்டுமோ?

தமிழர் நாகரிகத்தின் மிகச் சிறந்த ஒழுக்கம் விருந்தோம்புதல். உண்பதன்முன், தன் வீட்டு முகப்பில் உணவருந்த வேண்டியவர்கள் யாரேனும் உளரோ என்று பார்த்து, அவ்வாறு எவரேனும் இருந்தால் அவர்களை அழைத்து உண்பித்துப் பின்னர் தாம் உண்பதென்பது தமிழர்களின் விழுமிய ஒழுக்கம். விருந்தினர்கள் சுதந்திரமாக-உரிமையுடன் வந்து தங்க திண்ணைகள் அமைத்து வீடு கட்டுவது நமது மரபு.

திருமூலர் திருமந்திரம்,

"யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி"

என்று வரையறுத் தோதுகிறது.

விருந்தோம்பும் சால்பினர் வாழும் ஊரில் அடிக்கடி அயலூர்ச் சான்றோர் வருவர். அவ்வழிச் சிறந்த அறிஞர்கள், புலவர்கள், முனிவர்கள் ஆகியோருடைய உறவும் உள்ளக் கருத்தும் எளிதிற் சமுதாயத்திற்குக் கிடைக்கும். வந்தோரை உண்பித்தலின் காரணமாக அவ்வூரின் புகழும் பரவும்.

இத்தகு சிறப்புக்களுக்குக் காரணமாகத் திகழ்கின்ற நல்லோரின் கழனிகள் நல்லோரின் உடைமைகள் உரிமையால் ஒருவருடையவையாக இருப்பினும் அதன் விளைவுகள் பலருக்கும் பயன்படுவதன் காரணமாக உரிமையாளரைவிட ஊரினரே அவர்தம் உடைமைகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். அவர்களே விருந்தோம்பி வேளாண்மை செய்வோரின் நிலங்களை வளப்படுத்துவதோடு மட்டுமின்றி, விதைகளும் தூவுவார்கள். அங்கே, உடைமை உரிமை உணர்வு-இன்மையுணர்வு இரண்டுக்கும் மோதல் ஏற்படாது. ஏற்பட்டால் ஒரு சிறந்த சமுதாய அமைப்பே கால் கொள்ளுகிறது. அதனாலேயே திருவள்ளுவர்.

"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்." (85)

என்று கேட்கின்றார். இக்கருத்தினில் நம்பிக்கையில்லாதோர் சில பேர் இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதினார்கள்.

பாவேந்தர் பாரதிதாசன்கூட இதில் நம்பிக்கையில்லாமல், "மிடல்" என்பதனை வேலி என்று பொருள் கொண்டு வேலியிட வேண்டுமோ? என்று பொருள் கண்டிருக்கிறார். அதிலும் அவர் ஊரின் நல்லெண்ணத்தில் துளியும் ஐயப்படவில்லை. அத்தகைய பண்பாடுடையவர்களின் நிலத்துக்கு வேலியடைக்க வேண்டியதில்லை-ஊரே காப்பாற்றும் என்று கூறுகிறார். அவர் அத்தகு கருத்துக் கொண்டதற்குக் காரணம், நிலம் விதை போடாமலேயே விளையும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதியதே போலும்!

திருவள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. நிலத்தையுடையவர்கள் விதை பாவ வேண்டுமோ என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் என்று கருதுவதில் தவறில்லை.

இம்மையும் மறுமையும் இன்பந் தரும்

மனித வாழ்வின் இலட்சியம் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுதல். சில ஒழுக்கங்கள் இம்மைப் பயன் மட்டுமே தரும். மிகச் சிலவே இம்மை மறுமை ஆகிய இரண்டுக்கும் இன்பந் தரும். இருமையும் இன்பந் தரும் அம் மிகச் சிலவற்றுள்ளும், பெரும் முயற்சியின்றி எளிமையில் கைவரக் கூடிய ஒழுக்கம் இனியவை கூறல்.

மனித குலத்தின் உறவுக்கும் இன்பத்திற்கும் அடிப்படை இனியவை கூறலேயாகும். இனியவை கூறலினும் இனிய வார்த்தைகளைப் பேசலினும், அகமும் புறமும் ஒத்துப் பேசுதல் பெருந் தவ ஒழுக்கமாகும். சிலர் உதட்டில் இனிய வார்த்தைகளைப் பேசுவர். ஆனாலும் அகத்தே கருப்பு வைத்து வாழ்வர். அதனாலேயே திருவள்ளுவர் சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்று குறிப்பிடுகின்றார்.

இதற்குச் சிறுமைப் பண்புகள் நீங்கிய மனிதன் சொல்லும் இன்சொல் என்றும் பொருள் காணலாம். சொல்லும் சொற்களுள் விளைவினால் தீமையில்லாத - தீமை பயவாத நற்சொல்லும் இன்சொல்லேயாம். சிறுமை - சிறுமிய மரபுகள் அகத்திலும் கூடா-செயல்களிலும் கூடா. சிறுமையினின்றே சிறுமை தோன்றும். பிறருக்குச் சிறுமை தரத்தக்க செயலைச் செய்கின்றவனும் சிறுமை உடையவனேயாம்.

இனிய பண்புகளிலிருந்தே இனிமை பிறக்கிறது. இனிமை - இனிய சொற்கள் இம்மை வாழ்வில் நண்பர்களைக் கூட்டுவிக்கும்; துன்பத்தை நீக்கும். இன்பத்தைப் பெருக்கும். அவ்வழி மறுமையும் கூட்டுவிக்கும்; மறுமை இன்பத்தை அளிக்கவல்ல இறைவனும் இனிமை தவழும் புன்சிரிப்பையுடையவன். ஆதலால், வருந்தி உழைத்துப் பெறக் கூடிய மறுமை இன்பத்தையும் இனிய சொற்களை வழங்குவதன் மூலம் எளிதிற் பெற்றுவிட முடியும் என்பதும் திருவள்ளுவர் கருத்து. ஆனால் உலகியலில் இந்த இனிய - எளிய பண்பு கூட வளராதது வியப்பாக இருக்கிறது.

"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்."(98)

செய்நன்றி

றைமை என்பது நற்குணங்கள் பலவற்றின் கூட்டு. குணங்கள் பண்பு; இறைவன் பண்பி. நற்குணங்கள் பல வற்றுள்ளும் தலையாயது நன்றியறிதல். சிசிரோ என்ற பேரறிஞன் 'நற்குணங்களுக்கெல்லாம் தலையாக விளங்கும் நற்குணம் நன்றி காட்டுதல்' என்றும் எல்லாக் கடமைகளுக்கும் மூலமுதல் நன்றி காட்டும் குணம் என்றும் கூறிச் சிறப்பிக்கிறார். அதாவது, ஒருவர் செய்த நன்மையை - உதவியைப் பாராட்டி நினைவிற் கொண்டு கடமைகளாற்றுதல். நன்றி காட்டும் ஒழுக்கம் சொல்லி வரக்கூடியதன்று. இயல்பாகவே மனிதன் கொண்டு ஒழுக வேண்டிய ஓர் ஒழுக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் 'செய்ந் நன்றியறிதல்' என்றே குறிப்பிட்டார்.

வாதவூரடிகள் தமது தேனமுதத் திருவாசகத்தில் அடிக்கடி நாயினை இழுப்பார். நாயினுங் கடையேன் என்ற சொற்றொடர் பெருகிக்கிடக்கின்றது திருவாசகத்தில். ஆதாவது, நாய்க்கு நன்றிகாட்டும் உணர்ச்சி உண்டு. பகுத்தறிவு படைத்த மனிதனாகிய எனக்கு அக்கீழான நாய்க்குள்ள குணமும் இல்லாமற் போயிற்றே என்பது குறிப்பு. நாயும்கூட மனிதனை நோக்க நன்றி காட்டும் உணர்ச்சியில் பாராட்டக்கூடியதே யன்றி அதனிடத்திலும் முழுமையாக நன்றி காட்டும் பண்பில்லை.

இறைவனின் திருவருளைப் பெறுதற்குரிய வாயில்கள் கருணை காட்டுதல், நன்றி காட்டுதல் ஆகியவைகளேயாம். இறைவன் மகிழ்வுடன் தங்கியிருக்கும் இடங்கள், ஒன்று சொர்க்கம் அல்லது விண்ணுலகம். மற்றொன்று அமைதியான நன்றி காட்டும் பண்பிற் சிறந்த உள்ளம். ஆதலால் நன்றியறிதல்-நன்றி காட்டுதல் என்பது உலகியல் ஒழுக்கம் மட்டுமன்று, அருளியல் ஒழுக்கமுமாகும்.

உலகில் செய்யக்கூடாத பாவங்கள் பல. அவற்றை யெல்லாமே செய்தாலும், வருந்துதல், நோன்பிருத்தல் முதலியவைகள் மூலம் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்றும் நன்றி மறக்கும் தவறு செய்தால் கழுவாய் இல்லையென்றும் கூறுகிறது தமிழரின் வாழ்வியல் காட்டும் புறநானூறு.

"ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாய் உளவென"

என்று கூறி, நிலமே நடுக்குற்றுப் பெயர்ந்தாலும் நன்றி மறக்கக் கூடாதென வலியுறுத்துகிறது; அது.

"நிலம்புடை பெயர் வதாயினு மொருவன்
செய்திகொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ"

என்றும் பேசுகிறது.

கற்றோர் ஏத்தும் கலித்தொகையும், "ஒருவன் தனக்கு இடர்வந்துற்ற போது உதவியவர்க்கு அவருக்குத் தேவைப்படும் காலத்தே உதவாது போனால், தானே தானாகத் தேய்வான்” என்று கூறுகிறது. நன்றி கொன்ற பாவம் இவ்வுடல் ஒழிந்த பிறகும்கூட உயிரைத் தொடர்ந்து நின்று துன்புறுத்தும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

"கற்பித்தான் நெஞ்சழுங்கப்
பகர்ந்துண்ணான் விச்சைக்கட்
டப்பித்தான் பொருளே போற்
றமியவே தேயுமா
ஒற்கத்துள் உதவியார்க்
குதவாதான் மற்றவன்
எச்சத்துள் ஆயினும் அஃது
எறியாது விடாதே காண்".

கவியரசன் கம்பன் "உதவி கொன்றோர் உய்தற்கு உபாயமே இல்லை" என்று கூறுகின்றான். திருவள்ளுவர், வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்துக் காட்டிய அறநெறிகளுள் செய்ந்நன்றி மறவாமை ஒன்று. திருவள்ளுவர்,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (110)

என்ற குறட்பாவில் பயன்களை அல்லது விளைவுகளை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது உணர்ந்தின்புறத்தக்கது.

எந்நன்றி என்பதன் மூலம், நன்றல்லா எல்லாவற்றினையும் உள்ளடக்கினார். கொன்றார்க்கும் என்பதிலுள்ள உம்மை நன்றல்லாதனவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. உய்வுண்டாம் என்ற சொல்வழி 'உய்தல் கூடும்' என்று பொருள் கொள்ள முடிகிறதே யன்றி, உறுதிப்பாடில்லை. “செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை' என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கக் காண்கிறோம், உய்வில்லை என்பதனாலேயே பல பிறப்புக்களிலும் உய்வில்லை என்பதும் பெறப்படுகிறது.

ஆதலால், நாம் அனைவரும் நன்றியறிந்து கடமைப் பாடுடையவர்களாக வாழ வேண்டும். நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடப்பாடாக அவனை வாழ்த்துதல் வேண்டும். வாழ்த்துதல் மட்டும் இறைவனை மகிழ்விக்காது. அவன் உவக்கக்கூடிய வகையில் அவனுடைய அருமைக் காரியப்பாடாக இருக்கின்ற உயிரினங்களுக்குத் தொண்டு செய்தலும் ஒருவகை வழிபாடேயாகும். பல்வேறு உயிர்வர்க்கத்தின் உழைப்பினாலும், உதவியினாலுமே நாம் வாழ்கின்றோம். மீண்டும் அந்த உயிர்வர்க்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டாமா என்ன? அதுவே நன்றி காட்டும் பண்பு. அதுவே சிறந்த இறை வழிபாடு.

ஆண்டவன் எண்ணத்தோடு அல்லது திருவருட் சிந்தனையோடு தொண்டு செய்யவேண்டும். நன்றி காட்டுதலும் ஒருவகை வழிபாடேயாகும்.

"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமத் துடைத்தவர் நட்பு." (107)
எச்சத்தால் காணப்படும்

னித குலத்தின் விழுமிய சிறப்புக்களுள் ஒன்று தன்னை அவ்வப்பொழுது நினைந்தும், நினைவுறுத்தியும் ஒழுக்க நெறிப் படுத்திக் கொள்வதாகும். இவ்வாறு ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு இன்றியமையாத தேவை பகுத்தறிவு. இங்கு பகுத்தறிவு என்பது நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்தலும், அறிதலும் ஆகும். அங்ஙனம் ஆராய்ந்தறிகின்ற போழ்து, சார்பின்றி ஆராய்தல் வேண்டும். செய்திக்கு உரியாரிடத்திலும், அச்செய்தியால் விளையக்கூடிய பலாபலன்களிலும் பற்றுதல் இருக்கு மானால் பகுத்தறிவுத் தரத்துடன் செயல்பட முடியாது. ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து நின்று ஆராய்வதற்குப் பகுத்தறிவு என்று பெயரில்லை. எந்த விதமான சார்பும் பற்றுக்கோடும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செய்தியைச் செய்தி அளவிலேயே ஆராய்ந்து அறிதலும், அவற்றை வலியுறுத்தலும் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்துதலும் போற்றுதலுக்குரிய பண்பாடாகும். இப்பண்பாட்டையே "நடுவு நிலைமை" என்ற அறநூல்களும் ஒழுக்க நூல்களும் வலியுறுத்துகின்றன.

திருவள்ளுவர் நடுவு நிலைமை என்றே ஒரு அதிகாரம் வைத்தார். நடுவு நிலைமைக் கொள்கையை மேற்கொண் டொழுகுதலை. "தவம்" என்று கூடச் சொல்லலாம். நடுவு நிலைமைக் கொள்கையை ஏற்றுக் கோடலில் வருகிற இடுக்கண்களைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலிலே பேராசிரியர் விளக்குகின்றார்.

செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சோர்ந் தோடா நிலைமை. என்று காட்டி, “அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது” என்றும் பேசுகின்றார்.

நடுவு நிலைமைக் கொள்கையுடையேர் விருப்பு வெறுப்புக்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இறைவனும் “வேண்டுதல் வேண்டாமை இலன்" அன்றோ? அவ் இறைவனை வாழ்த்து வணங்குகிறவர்களுக்கும் இக் குணவியல்பு இன்றியமையாததுதானே! நடுவு நிலைமைக் குணம் இல்லார், நல்லவர்களாக இல்லாததோடு மட்டு மின்றித் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தீயவர் களாக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கெடுத்து அறமில்லாத வழிகளில் செலுத்துவார்கள்.

அரசு அமைச்சின் வழி. அமைச்சு கெட அரசு கெடும். கெட்ட அரசு-கொடுங்கோல் அரசு. கதிரவன் கடுகிக் காய் கின்ற காய்ச்சல் பயிர்களைச் சுடுதல் போன்று மக்களைச் சுடும். ஆதலால், அமைச்சர் நடுவு நிலைமை' உடையோரா யிருத்தல் வேண்டும், இக்கருத்தினைப் பாலைக் கலி,

"நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதூர்ந்த மன்னவன் கோல்போல் ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெரிதலின்"

என்று பேசுகிறது.

நியாயம், நியாயமின்மை ஆகியவற்றிற்குக் கருவி நடுவு நிலைமையுணர்வேயாகும். செல்வர்க்கும், வறியர்க்கும் ஒப்ப நியாயம் வழங்குவதே வாழ்வியல் முறை. இதனை,

"முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறை தெரியா நேரொக்கல் வேண்டும்”

என்று பழமொழி பேசுகிறது. ஆனால் உலகியலில் இன்று செய்தியை ஆராய்வதற்குப் பதிலாகச் செய்தி யாரால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பெறுகிறது. மேலும் செய்தியைச் சொல்லுகிறவர்கள் செய்தும். காட்ட வேண்டும் - அப்பொழுது தான் சொல்லலாம்" என்றும் சொல்லப்பெறுகிறது. தீமையின் அனுபவத்தின் விளைவில் தான் நன்மை அரும்புகிறது. ஆனாலும், அந்த நன்மையைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்த அந்தத் தீய அனுபவத்தில் எப்படி நன்மையைக் காண முடியும்! அதனால் ஆராய்வு செய்தி பற்றியதாகவே இருத்தல் வேண்டும்.

நடுவுநிலைமைக் கொள்கை பண்படாத சமுதாயத்தில் - நட்புலகின் தொடக்கத்தில் இன்பம் இருக்காது. மாறாகத் துன்பம் தரும். நண்பர்களும் பகைவர்களாவர். எனினும், தொடர்ந்து நடுவு நிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித் தொழுகின் இறுதியில் இன்பம் வந்தெய்தும், தன்னுடைய வாழ்க்கை --- தன்னலம் ஆகியவற்றைவிடக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உய்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும் கூட உலகத்து மக்கள் அக்கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும்கூட “அக்கொள்கைகள் தங்கி நின்று விளக்கம் பெற வாய்ப்பில்லாது போயிற்றே” என்று உலகத்து மக்கள் இரக்கமுறுதலின் மூலம் புகழ் சேர்ப்பர். நடுவு நிலைமையை “நன்னர் நடுவு" என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. அதாவது, "நன்மையை உடைய நடுவு நிலைமை" என்கிறது. திருவள்ளுவர்.

"தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)

என்கிறார். இக்குறட் பாவுக்கு உரை கண்ட பரிமேலழகர் எச்சத்தை தன்மக்கள் மீதேற்றினார். அதோடு இயற்கைக்கு மாறாக--உடற்கூற்றுக்கு முரண்பாடாக மக்கட்பேறு உண்டாதலையும் இல்லாமற் போதலையும் உள்ளடக்கியும் உரை கண்டுள்ளார். நன்மக்கள் என்ற உரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது. பின்னையது ஏற்றற்கில்லை. மணக்குடவர் ஆரவாரத் தொழிலின் மீதேற்றினார். காளிங்கர் ஒழுக்கத்தின்பாற் படுத்தினார். மேற்கண்ட உரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குரியனவாகவே தோன்றுகின்றன. திருவள்ளுவரின் திருவுள்ளத்தைக் கண்ட அமைதி தோன்றவில்லை. மேலும், உரையாசிரியர்கள் தத்தம் காலத்தே வழக்கில் இருந்த செய்திகளின் சார்பிலேயே உரை எழுதியிருக்கின்றனர்.

இலக்கண மரபுப்படி எஞ்சுதல் எச்சம். ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு அவனுடையதாக இந்த உலகில் எஞ்சுவது அவனுடைய புகழ் அல்லது பழியேயாகும். நடுவு நிலைமை கொண்டொழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி நிற்கும், வரலாற்றுப் போக்கிலும் இவ்விரண்டு காட்சிகளையும் பார்க்கிறோம். பாரியின் புகழ் எஞ்சி இன்றும் உலவுகிறது. அழுக்காற்றின் காரணமாக நடுவிகந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தரின் இகழ்ச்சியும் -- பழியும் இன்றும் எஞ்சி நிற்கிறது. ஆதலால்,

"தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” (114)

என்ற குறட்பாவுக்கு எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கின்ற புகழ் அல்லது பழி இவையே அவர்களின் நடுவு நிலைமைச் சிறப்பைக் காட்டும் என்று பொருள் காண்பதே சிறப்பாகத் தெரிகிறது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

னிதனைக் கெடுதலில் வீழ்த்தும் குணக் கேடுகளில் தலையாயது ஆணவம். ஆணவத்தின் வழிப்பட்டது அகங்காரம். அகங்கார குணம் படைத்தவன் பிறரை மதிக்க மாட்டான். நல்ல வார்த்தைகள் பேச மாட்டான். இழித்துப் பேசுதலையும், பழித்துக் கூறுதலையுமே தொழிலாகக் கொள்வான். அதன் காரணமாகப் பகை வளர்ப்பான்; நண்பர்களை இழப்பான். தான் உயர்ந்தவன் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருப்பதனால், வளர்ச்சிக்குரிய கூறுபாடுகள் அவனிடம் இரா. அவன் வாழ்க்கையில் மாறுதலும் இருக்காது வளர்ச்சியும் இருக்காது. ஆணவத்தின் பகை அடக்கமுடைமை. அடக்கமுடைமையை அணிகலனாகக் கொண்டவர்களுக்கு ஆணவத்தின் வாசனையே இருக்காது. பணிவும் இன்சொல்லுமே அவர்கள் பால் குடிகொண்டி ருக்கும்.

அடக்கமுடைமை என்பது அச்சத்தினால் பணிந்து செல்லும் கோழைத்தனத்தைக் குறிப்பதன்று. எதிர்த் தாக்குதல் செய்யும் ஆற்றல் இருந்தும், அதனைச் செய்யாமையே அடக்கமுடைமை! 'அறிவு, செல்வம் புகழ் ஆகியவைகள் இல்லாமற் போயினும் அடக்கமுடைமையின் காரணமாக மேற்கண்டவற்றைப் பெறுவதோடன்றிச் சிறப்பாகவும் வாழ முடியும்! ஆனால், மேற்கண்ட எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் அடக்கம் இல்லாமற் போனால், அவர் பெற்றிருக்கிற அனைத்திலுமாய சிறப்புக்களையும் இழந்து இழிநிலை எய்துவார். ஆகையால், நற்குணங்களுள் மிகமிகச் சிறந்தது அடக்கம் உடைமை!

அடக்கமுடைமை எல்லோருக்கும் தேவை, எப்பொழுதும் தேவை. அதுவும் எல்லாவிதமான தகுதிப் பாடுகளும் இருக்கின்ற போழ்து, அடக்கமுடையராக இருத்தல் சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. 'ஒருவனுடைய இயல்பான பண்பை அவனுடைய செல்வம், புகழ், பதவி ஆகிய தகுதிப்பாடுகள் உயர்கின்ற போழ்து காணவேண்டும்' என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. பொதுவாக அறிவினாலும், செல்வத்தினாலும், பதவியினாலும், தவத்தாலும் இன்ன பிறவற்றாலும் செருக்கு தோன்றுவதுண்டு. அறிவினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று அருணந்தி சிவாச்சாரியார்; செல்வத்தால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று ஜார் பேரரசன். பதவியினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று நான்முகன். தவத்தினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று கொங்கண மாமுனி. ஆதலால், திருவள்ளுவர் அறிவு, செல்வம், புகழ், பதவி முதலிய இல்லாதார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பதைவிட இவையனைத்தும் உடையார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பது ஆபத்தானது என்று குறிப்பிடுகிறார். ஆம், செல்வத்திற்குப் பிறிதொரு செல்வமாகத் திகழக் கூடியது அடக்கமுடைமை. ஆதலால், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அடக்கமுடைமை விரிந்த ஒழுக்க நெறி. ஒழுக்கத்தின் பாற் பட்டதாகவும் அடக்கத்தினைக் கருதலாம். கற்றோர் போற்றும் கலித்தொகை, அடக்கம் அறிவால் சிறந்ததென ஆராயப் பெற்று முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது எனக் குறிப்பிடுகிறது. வேண்டியவாறு ஒழுகுதலை அடக்கமின்மை என்றும், ஆற்றல் இருந்தும் அடங்கி நிற்றலே அடக்க முடைமை என்றும் கலித்தொகை பேசுகிறது.

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி

என்பது கலித்தொகை தோற்றத்தால் புரவலன்-வாரி வழங்குவதில் வள்ளல்-எனினும் இரந்து வாழ்வோர் கூறி இரக்கின்ற பணிவான மொழிகளைச் சொல்லிப் பழகுகின்றானாம். இதற்குப் பழங்கால அரசர்கள் புலவர் களிடத்தே பழகிய முறையைச் சான்றாகக் காட்டலாம்.

"கொள்ளிக் கட்டை கூரையைக் கொளுத்தும் ஆற்றல்
உடையது. ஆயினும் கூரையைக் கொளுத்துமுன்,
கூரையில் செருகப் பெற்ற பொழுது அது பலருக்குத்

தெரிவதில்லை. அதுபோல அதியமான் மாற்றாரை
வீழ்த்தும் வல்லமை யுடையோனாகக் களத்தே
தோன்றி விளங்குவான். ஆயினும் தன்னுடைய
நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இருக்கும் பொழுது
அடங்கியே இருப்பான்”

என்று அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாராட்டுகிறார்.

இல்லிடைச் செருகிய ஞெலிகோல் போல என்பது ஔவையின் வாக்கு. அடக்கமின்றி நடத்தலை தருக்கித் தலையில் நடந்தேன்' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கின்றார். தருக்கித் திரிவோரை நெறியில் நீங்கியோர் என்று பேசுகின்றார் இளங்கோவடிகள். அதனாலன்றோ சிவநெறி விளக்க நூலாகிய சிவஞான சித்தியார். சைவ சீலங்களுள் முதன்மையாக எடுத்துக் கொள்ளக் கூடியது தாழ்ந்து செலல்’ என்று குறிப்பிடுகின்றது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

'தாழ்வெனுந் தன்மையோடு
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது.'

என்பது சித்தியார் வாக்கு.

ஆக, அடக்கமுடைமை ஓர் உலகியல் ஒழுக்கம். ஏன்? அருளியல் ஒழுக்கமும் கூட. அடக்கமுடைமை இம்மையில் ஏற்றம் தரும். இனிய புகழ் சேர்க்கும். மறுமையில் திருவடி இன்பம் தரும்.

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து."

(125)

என்பது திருக்குறள்.

குடிமை

ழுக்கம் என்பது ஒன்றல்ல - இரண்டல்ல. பல கூறுகளை உடையது. எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று. பிறிதொன்று, தனிமனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைக் குடிமை ஒழுக்கம் என்று சொல்லலாம். இதையே தான் குடிமைப் பயிற்சி என்று தமிழிலும், Citizenship என்று ஆங்கிலத்திலும் வழங்குகிறார்கள்.

ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டுக் குடிமக்களின் சிறப்பாலேயே அமைகின்றது.

குடிமக்களின் நிலையுயர சமுதாயக் கூட்டு ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய வாழ்வியல் நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவர் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். திருக்குறளின் ஒழிபியலே குடியியல் பேச எழுந்ததாகும்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.” (133)

என்பது குறள். இக்குறளுக்குச் சாதிகள் வழிப்பட்ட நச்சு நாகரிகச் சூழலில் வாழ்ந்த பரிமேலழகர் சாதி முறைகளுக்கு உட்பட்டு உரை எழுதுகின்றார். ஒழுக்கத்திற்கு அவர் தரும் விளக்கம் "அவரவர் வருணத்திற்கேற்ற ஒழுக்கம்” என்பது. வள்ளுவத்தில் இல்லாத வருணத்தைக் கூட்டிக் கலக்க முயற்சிக்கிறார். ஆனால் திருவள்ளுவர் கருதிய கருத்து வேறு. ஒரு மனிதன் ஒரு பெரிய சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக இருக்கவேண்டு மானால், அந்தச் சமுதாயம் முழுமைக்கும் நலன்தரக் கூடியதென முடிவெடுக்கப் பெற்ற அடிப்படைச் சமுதாய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். குடி என்பது நாட்டுக் குடிமகன் என்பதை உணர்த்துமே தவிரச் சாதியை உணர்த்தாது.

தனிமனித ஒழுக்கங்களைப் போலவே, நாட்டு ஒழுக்கங்கள் என்றும் சில உண்டு. சிறப்பாக இன்று நம் பாரத நாட்டை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய உரிமையைப் பெற மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். இவை இன்றையச் சூழலில் பாரதநாட்டுச் சமுதாயப் பொது ஒழுக்கம்.

இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத வேறுபாடின்றி ஒரே குலம்' என்று கருதிப் போற்றுவது முதல் ஒழுக்கம்.

தன்னிச்சை வழி இயங்காமல், பலர் கருத்தறிந்து, பலரின் முடிபுக்கிணங்கி வாழும் மக்களாட்சிப் பண்பு இரண்டாவது ஒழுக்கம். அடுத்து, இந்நாடு பொது வீடு-இவ் வீட்டிலுள்ள உடைமை அனைத்தும் எல்லோரும் அனுப வித்தற்கேயாம். சிலரிடத்துப் புளிச்ச ஏப்பமும், இன்னும் பலரிடத்தில் பசியேப்பமும் இருப்பது - இருக்க அனுமதிப்பது நியாயமுமல்ல - நீதியுமல்ல. ஆதலால், எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்புச் சமுதாயத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது மூன்றாவது ஒழுக்கம். வாழ்வில் இம் மூன்றொழுக்கங்களையும் கடைப் பிடித்தொழுகுவோரே இந்தியக் குடியுரிமைக்கு ஏற்புடையராவர். அவர்தம் பெயரே பாரத நாட்டு மக்கள் பட்டியலில் என்றும் நின்று விளங்கும். அப்படி வாழாதார் பெயர்கள் மக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பெற்று, இழிதன்மையுடைய கால்நடைகளின் கணக்கில் சேர்க்கப்படும். இக் கருத்திலேயே 'ஒழுக்க முடைமை குடிமை என்ற குறள் எழுந்தது.


உண்மைக் குடிமக்கள் யார்?


னித சமுதாய அமைப்பின் வழியிலேதான் நகர, நாட்டு அமைப்புகள் தோன்றுகின்றன. மனித சமுதாயம் நாடுகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில், நாட்டின் வழி மனித சமுதாயம் பெருமை பெறுகிறது; புகழ் பெறுகிறது. இந்த உணர்ச்சி வடிவத்தில் தோன்றுவதுதான் தாய்நாட்டுப் பற்று. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று வாழுதல், மனிதனின் விழுமிய சிறப்புகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை பெறாத மக்கள் நாடற்றோர் என வாழ்கின்றார்கள். அது பீடன்று. மேலும் நிரந்தரமான நல்வாழ்வுக்கும் உத்தரவாதமில்லை.

ஒரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றால் மட்டும் போதாது. அந்நாட்டு மக்களின் மொத்த நலனை எண்ணத்திற் கொண்டு ஒழுகுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கங்களைப் போல, நாட்டு ஒழுக்கங்கள் என்று சில இருக்கும். அவ்வொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களே உண்மையான குடிமக்கள்.

ஒரு நாட்டில் பிறந்து விட்டதனாலோ அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்கள் கணக்கில் சேர்த்து விட்ட மையினாலோ ஒருவர் ஒரு நாட்டின் உண்மையான குடிமகனாகி விடுவதில்லை.

முடியாட்சி நிலவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் சிறந்த குடிமக்கள் ஆட்சியைப் பற்றியும் கூறுகிறது. திருவள்ளுவர், நாட்டு ஒழுக்கம் பற்றி நகைச்சுவை ததும்பப் பேசுகின்றார். மக்கட் கணக்கு எழுதி வைக்கும் அலுவலர் மக்கள் வரிசையில் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார். ஆனால், அவரிடத்திலோ, சமுதாய ஒழுக்கம், நாட்டு ஒழுக்கம், என்பது சிறிதளவும் இல்லை. அவர் சாதிப் பகையை வளர்ப்பார். ஒன்றுபட்டு வாழுதலுக்கு உலைவைப்பார். பிறர் கருத்தை அறிய மறுப்பார். தன் கருத்தையே சாதிப்பார். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழுகின்ற சமநிலைச் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். தன் லாபம் ஒன்றையே கருதுவார். சமுதாய பகை ஒழுக்கக் கேடுகளாகிய அழுக்காறு, வெஃகுதல், வெகுளி, புறங்கூறல், கலகம் செய்தல் ஆகியவற்றையே மேற்கொண்டு ஒழுகுவார். சமுதாய ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்ற அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல் ஆகிய இனிய ஒழுக்க நெறிகள் அவர் அறியாதன. இப்படிப்பட்ட ஒருவர் பெயர் மக்கள் கணக்கில் இருக்கிறது. திருவள்ளுவர் சொல்கிறார், மக்கள் கணக்கிலிருந்து அவர் பெயரை நீக்கி விடும்படி நீக்கி விடுவது மட்டுமின்றி, இழிந்த உயிர்வர்க்கங் களுக்கு ஏதாவது கணக்கிருந்தால், அதில் சேர்த்துக் கொள்ளும் படியும் சொல்லுகின்றார்.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கும்
இழிந்த பிறப்பாய் விடும்.” (133)


குடிமைப் பண்பை எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரந்த பாரத நாட்டு மக்களிடத்தில், சிறந்த குடிமக்கள் இயல்பு வளர்ந்து, நாட்டு ஒழுக்கம் சிறந்து வளர வேண்டும். பாரத நாட்டில் நாட்டு ஒழுக்கமாகச் சிலவற்றை நாம் நியதி செய்துகொண்டு அந்நெறியில் ஒழுக வேண்டும்.

பாரத நாடு மிகப் பெரிய நாடு. பல்வேறு சமய நெறிகளைக் கொண்டு ஒழுகுகிற நாடு. எனினும் மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்த ஓர் உணர்ச்சி பூர்வமான ஒருமைப்பாட்டைக் கொள்வது நமது நாட்டொழுக்கங்களில் ஒன்று.

இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி, ஒரு பரிபூரண மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மக்களாட்சி முறைப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கவும் கருதவும் உரிமை உண்டு. அவ்வழி, அஃதாவது, கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் காழ்ப்பும் பகையும் காட்டுதல் கூடாது. அவ்வழி, கலகங்களும் தோன்றக் கூடாது. மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் கருத்து மாற்றம், மனமாற்ற முயற்சிகள் நடை பெற வேண்டுமே ஒழிய, பகைவழி முயற்சிகள் கூடாது.

மூன்றாவதாக, இந்நாடு கூட்டுக் குடும்ப அமைப் புடையது. இந்நாட்டின் உடைமைகள் அனைவர்க்கும் பொதுவுடைமை. இந்நாட்டின் செல்வ வாழ்வு சமநிலை உடையதாக இருக்க வேண்டும். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை நாம் விரும்பி மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று தலையாய ஒழுக்கங்களும் இன்றைய பாரத நாட்டின் நாட்டொழுக்கங்கள். இவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாக ஏற்று ஒழுகுபவர்களே திருவள்ளுவர் கருத்துப்படி இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் ஆவார்கள்.

நிலத்தியல்பு

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். கனவிலும், கற்பனையிலும் திளைக்கும் வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும், திருக்குறள் உணர்ச்சியைத் தொடுகிறது - தூண்டுகிறது - தூண்டி வளர்க்கிறது. எனினும், உணர்ச்சிகளால் மட்டும் நடத்தப் பெறும் வாழ்க்கை இயலை - வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் மறுக்கிறது. இன்ப வேட்கை கொண்டு நடத்துகிற வாழ்க்கைய்ை விடத் துன்பங்களால் தொடரப்பெற்ற வாழ்க்கையாயினும் நெறிமுறைப் பட்டதாக - வளர்ச்சி யுடையதாக அமைவதே சிறந்தது என்பது திருவள்ளுவர் கருத்து.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன போலத் தோன்றும். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்ட மக்களுக்கு அவை அரியவாம். அறிவும் தெளிவும் கொண்ட மனிதர்களுக்குத் திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன. திருக்குறள் பொறையுடைமைப் பணபை மிகுதியும் வற்புறுத்துகின்றது. பொறையுடைமைப் பண்புக்கு திருக்குறள் கூறும் உவமை நிலம். நிலம் கொடிய கருவிகளால் தன்னைக் கொத்திக் கிளறிக் கொடுந்துன்பம் இழைப்பாரையும் வீழ்த்தாமல் தாங்குகிறது. தனது மாசற்ற மேனியில், மாசுகளை உண்டாக்கினாலும் பொறுத்தருளி அவர்கட்கும் வாழ்வு தருகிறது. பொறுப்பதோடு மட்டுமின்றி, அத்துன்பங் களையே தன்னுடைய செழிப்புக்கு உரியவைகளாக மாற்றிக் கொண்டு தன் பெருமையை உயர்த்தி வளம் பெருக்கித் தீங்கிழைத்தோருக்கும் உண்ண உணவும் பருக நீரும் தந்து வாழ்விக்கிறது. ஆக, தீங்கு செய்தோரைப் பொறுத்தல், அத் தீங்குகளையே தன்னுடைய வளர்ச்சியின் நிலைக்களன் களாக மாற்றிக் கொண்டு வளர்தல், பொறுத்தலினும் மிஞ்சிய வாழ்விக்கும் பணியினைச் செய்தல் ஆகியவற்றால் நில்த்தின் பெருமை உயர்கிறது. அதுபோலவே, தீங்கு செய்வோரை எதிர்த்து அழித்தல் நலமன்று. அங்ங்ணம் அழித்தால், தீங்கு செய்யப்பட்டார் மட்டும் அழிவதில்லை. தீங்கு செய்தாரின் நல்லியல்பும் கெட்டு - காலப் போக்கில் அவர்தம் செங்குருதி முறிந்து அழிவையும் அணைத்துக்கொள்ள நேரும்.

உலகியல் பரிணாமத் தத்துவப்படி, ஒன்றிலிருந்து பிறிதொன்று தோன்றாது. அழிவிலிருந்து அன்பு தோன்ற முடியாது. - ஆக்கம் தோன்ற முடியாது. அழிவிலிருந்து அழிவே தோன்றும். பகைவரை ஒறுக்கத் தோன்றும் பகையுணர்ச்சி நம்மையும் அழித்தொழிக்கும். அதனாலன்றோ, புராணங்களிலும் கூட அசுரர்களின் அழிவு பேசப் படவில்லை. அவர்களின் மனமாற்றமே பேசப்படுகிறது. பகைவர் நமக்குச் செய்யும் தீங்குகளால் நாம் அழிகிறோம் என்பது உண்மையன்று. நம்முடைய குறைகள் மிகுந்திருக்குமானால் பகைவர்களுக்கு இடமேற்படும். இதற்கு மாறாக அவர்களால் நமக்கு விளையும் துன்பங்களையும் தொல்லைகளையுமே வாயில்களாகக் கொண்டு புது அறிவும் புது முயற்சியும் செய்வோமாயின் கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் - ஆற்றலால் செழித்து வளர முடியும். நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். நாமும் வாழ்வளிக்க முடியும்.

பழிவாங்குதல் பழியினைச் சுமத்தும் - புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் - புதுமை நிறைந்த பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்துச் சிந்தனை செய்து வாழ்க்கையோ டிணைத்துச் செயல்படுத்த முயல்வோமாக!

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." (151)

"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்." (154)


ஏன் சுற்றம் கெடும்?


குற்றம் செய்தவனுக்குக் குற்றத்திற்குத் தண்டனை உண்டு. அதுதான் நியாயமும் நீதியும் கூட. ஆனால் திருவள்ளுவர் ஒருவன் செய்கின்ற குற்றத்திற்காக, அவனுடைய சுற்றம் முழுவதுமே உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்று கூறியுள்ளார். இதில் என்ன நியாயத் தன்மை இருக்கிறது என்று ஆராய்தல் வேண்டும்.

ஒரு தனி மனிதன் உருவத்தால், தோற்றத்தால் தனிமனிதனைப் போலக் காட்சியளிக்கிறான். அவன் பருவுடல் தோற்றத்தால் தனி மனிதனே தவிர, உண்மையில், அவன் தனி மனிதனல்லன். ஒரு தனி மனிதனிடத்தில் முக்கியமாக விளங்குவன மனமும் உள்ளமுமேயாம். அதாவது மனச்சாட்சியும், உள்ளத்து உணர்வுமே மனிதனின் வாழ்வில் இன்றியமையாதன. உணர்வோ அறிவோ, ஒழுக்கமோ கூட, தனி மனிதனின் விளைவுகளுமல்ல; படைப்புக்களுமல்ல. அவற்றை அவன் வாழும் மனித சமுதாயத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறான். உள்ளுணர்வு களை உருவாக்குவதில், ஒரு தனிமனிதன் வாழும் சுற்றம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. திருவள்ளுவர் "மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளதாகும் அறிவு” என்று கூறுகிறார். "குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகளுக்கு எல்லாம்" என்று கம்பனும் பேசுவான். "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்” வாழும் ஊரில் வாழ்தல் முப்பையும் தடுக்கும் என்று புறநானூறு பேசும்.

ஒருவன் ஒருவனுக்கு ஒன்றை வழங்க இருக்கிறான். அதை அழுகாறுடையவன் தடுக்கிறான். தடுக்கும் குணம் தன்னலத்தால் மட்டும் வந்து விடுவதில்லை. தன்னலத்தின் நோக்கம், தான் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இங்கு அனுபவிக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கு வழங்குவதைத்தான் அழுக்கா றுணர்வோடு தடுக்கிறான். அழுக்காற்றுக்கும் அவாவுக்கும் வேறுபாடுண்டு.

அழுக்காறு பிறர் துய்ப்பதைக் கண்டு பொறாதது. எனவே அவன் அனுபவிக்காமல் இருந்தாலும் இருப்பான்; மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்றே எண்ணுவான். அழுக்காறுடையவன் தன்னையும் உயர்த்திக் கொள்ள மாட்டான். மற்றவர் உயர்வையும் தாழ்த்துவான். இந்த அழுக்காற்றுணர்வு இயல்பாக ஒரு மனிதனிடத்து வந்துவிடுவதில்லை. அவனுடைய குடும்பமும் சூழ்நிலையுமே படைத்துக் கொடுக்கின்றன. ஆகவே அழுக்காற்றுக் குணத்தைக் கற்றுக் கொடுத்த சுற்றம் கெடும் என வள்ளுவர் கூறுகிறார்.

மேலும், ஒருவன் தன்னுடைய சுற்றத்திற்குத் தேவையாக இருக்கக் கூடும். என்ற எண்ணத்தில் அழுக்காறு கொள்கிறான். அந்த அழுக்காற்றுக்கும் காரணமாக இந்தச் சுற்றம் இருப்பதால் திருவள்ளுவர் சுற்றம் கெடும் என்று சொல்கிறார். ஆதலால் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழும் ஆர்வம் தனி மனிதனுக்குத் தேவையாக இருந்தாலுங்கூட, ஒழுக்க நெறிகளை, இளமையிலேயே படைத்துத் தருவது அவனுடைய சுற்றமேயாகும் என்பது தெளிவாகிறது. ஆதலால்,

"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுரஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்" (166)

திருவள்ளுவர் கூறுகின்றார்.


அழுக்காற்றை அகற்ற வழி


னித வாழ்க்கையின் சிறப்பியல்கள் உணர்வுகளாலும் குணங்களாலும் அமைவனவேயாம். பல கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் பெறுவதால் சுவர் எழுந்து வீடு உருவாகிறது. அவ்வீட்டின் நிழல் வாழ்வதற்கு இனிமையாக இருக்கிறது: பாதுகாப்பாக இருக்கிறது; அமைதியும் அளிக்கிறது. அதுபோல, பல்வேறு வகைப்பட்ட நல் உணர்வுகளாலும், குணங்களாலும் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சமுதாயம் என்ற கட்டிடத்தை எழுப்புகிறது. அவ்வாறமைந்த சமுதாய அமைப்பு இனிய அமைதி கலந்த வாழ்க்கை அமைப்பைச் சமுதாயத்திற்குத் தருகிறது. நற்குணங்களிலும்கூட ஒன்றிலிருந்து தொடர்ச்சியாகப் பல நற்குணங்களை வளர்க்கிற தாய்மை நிலையுடைய நற்குண முண்டு. அழுக்காறாமை, அதாவது பொறாமைப் படாதிருத்தல் ஒரு முதனிலைத் தாய்மை நற்குணம். அழுக்காறாமையை மேற்கொண்டொழுகுவதன் மூலம் அவாவை அறுக்கலாம். ஆசைகளினின்று விடுதலை பெறலாம். ஏனெனில், ஆசையின் தாயே - அழுக்காறு. ஆசையிலிருந்து விடுதலை பெறுவதால், வெகுளியினின்றும் விடுதலை பெறலாம், வெகுளியினின்று விலகினால் இன்னாச் சொற்களைப் பேசல், ஒறுத்தல் முதலிய பல்வேறு தீச் செயல்களினின்றும் விடுதலை பெறலாம். அழுக்காறு கொள்ளுதல் நரகத்தை இந்த நிலவுலகத்தில் உருவாக்குவதையே ஒக்கும்.

அழுக்காறு, கொண்டவரை மட்டும் அழிப்பதில்லை. யாரை நோக்கிக் கொள்ளப் படுகிறதோ அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. முடிவில் சமுதாயம் முழுவதுமே பற்றி எரிந்து விடும். தன்னைக் கொண்டவரையும் அழித்து, சமுதாயத்தையும் அழிக்கின்ற பேராற்றல் அழுக்காற்றிற் குண்டு. அதனால், பெறுதற்கரிய உயர்ந்த மாமேதைகளுக்கும் மகாத்மாக்களுக்கும் கூட துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஏன்? கடைசியில் அவர்களை இழந்தே விடுகிறோம். உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள போர்கள் யாவற்றுக்கும் அடிப்படை அழுக்காறேயாகும். இயேசு, நபிகள், சாக்ரடீஸ், அண்ணல் காந்தி அடிகள் ஆகியோரை எல்லாம் காலத்திற்கு முந்தியே நாம் இழந்ததற்குக் காரணம் அழுக்காறேயாகும். அதனாலன்றோ , எந்த நற்குணம் இருந்தாலும், இல்லை யாயினும் அழுக்காறாமை ஒன்றைப் பெற்றிருப்பது பெரும்பேறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் அழுக்காறாமை என ஓர் அதிகாரமே வகுத்து, பத்துக் குறட்பாக்களில் அழுக்காற்றின் தீமையை விளக்குகின்றார். உலகியல் வழக்காற்றுச் சொல்லால் அழுக்காற்றைப் "பாவி” என்று ஆத்திரத்தோடு குறிப்பிடு கின்றார் திருவள்ளுவர்.

"அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.” (168)

என்பது திருக்குறள். பாவங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பதால் அழுக்காற்றைப் 'பாவி' என்று குறிப்பிடுகின்றார். அழுக்காறு வேறு - பாவி வேறல்ல, என்ற கருத்தை விளக்குவதற்காக “என ஒரு பாவி" என்று குறிப்பிட்டிருக்கிறார். சில தீமைகளை யாரை நோக்கிச் செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கே - செலுத்துவோர்க்குத் தீமை தராது; செலுத்தப்படுவோர்க்கே தீமை தரும். அமுக்காறோ பெரும்பாலும் செலுத்துவோர்க்கே அதிகத் தீமை தரும். அழுக்காற்றின் நிலைக்களன்கள் பெரும்பாலும் செல்வமுடைமை, அறிவுடைமை. புகழுடைமை ஆகியன வாம். இவற்றை, மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமலும் அவற்றை அவர்களைப் போல நன்கு முயன்று பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவதே அழுக்காறு. அழுக்காற்றின் காரண மாகப் பிறருடைய செல்வம், அறிவுடைமை, புகழுடைமை ஆகியவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து அழுக்காற்று நெஞ்சுடையோர் களங்கப்படுத்துவர். இதன் விளைவு, தன் முயற்சியை அழித்துக் கொள்ளுதல், பிறர் முயற்சிக்கும் ஊறு விளைவித்து அழித்தல், பொதுவில் - முடிவாக, முன்னேற்றமும் ஆக்கமும் தடைப்படுகின்றன. இதனை விளக்க வந்த திருவள்ளுவர் 'திருச் செற்றுத் தீயுழி உய்த்துவிடும்' என்றார். அழுக்காறுடையான் ஒருவன் செல்வத்தைப் பெறுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டான். அவனுடைய முழுநேர வேலை குற்றங் காணல், தூற்றல், தீங்கு விளைவித்தல் ஆகியனவே. இத் தீயவரிடம் செல்வம் எப்படிச் சேரும்? ஆதலால் செல்வத்தை அழித்து என்றார். செல்வம் இன்மையின் காரணத்தாலும், அழுக்காற்றின் காரணத்தாலும் பல்வேறு தீச்செயல்களைச் செய்வதால் நரகத்திற்குச் செல்ல ஏதுவாகிறது. இதனைத் தீயுழி உய்த்துவிடும் என்றார். இம்மைக்கு வேண்டிய செல்வம், மறுமைக்கு வேண்டிய வீடு இரண்டையும் கெடுத்தலால் அழுக்காறு கொடுமையினும் கொடுமை யானது. வள்ளுவரே 'பாவி' என்று வசைபாடுவாராயின் நம்நிலை என்ன?

அழுக்காறு கொள்ளுதல் தீது. முற்றிலும் உண்மை - முக்காலும் உண்மை. எந்த ஒரு தீமையும் தோன்றாமல் தடுப்பதும் பாதுகாக்க வழிவகை யுண்டல்லவா? அத் தீமை தோன்றாமல் தடுப்பதும் சமுதாய நெறியில் மிகச் சிறந்ததாகும். கயவர்களின் அழுக்காறு மாற்ற முடியாதது. அவர்கள் கொல்லத்தான் பயன்படுவார்கள். ஆனாலும், சாதாரண-நடுத்தர மக்களிடமிருந்து அழுக்காற்றை அகற்ற உடையோர் முயன்றால் முடியும். அழுக்காறு கொள்ளுதல் எப்படித் தீதோ அப்படியே பிறர் எளிதில் அழுக்காறு கொள்ளும்படி நடந்து கொள்ளுதலும் தீதாகும்.

அதனால் செல்வம் உடைமையினும் எளிய வாழ்க்கை - கொடுத்து உவந்து - ஒப்புரவு அறம்பேணி வாழ்தல் அவசியம். அறிவுடைமையில் தன்னடக்கம் தேவை. புகழை விரும்பாமல் அடக்கமாய் வாழ்தல் அவசியம். பிறர் புகழ்ந்து கூறும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவிர்க்க முயலவேண்டும். இங்ஙனம் வாழ்ந்தால் இல்லாதோரிடம் அழுக்காறு எழாமல் - தோன்றாமல் தவிர்க்கலாம். காரணம் அங்கு இன்மை அவ்வளவு பெரியதாகத் தோற்றம் அளிக்காது.

அழுக்காறாமைக் குணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதன் முயற்சி மற்றவர்கள் எல்லாவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புதல் - பிறர் இன்பத்தில் தான் மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அழுக்காறு அகலும் - அருளியல் தோன்றும்.
முறை மாற்றம்

னித குலத்தை அலைத்து வரும் தீமைகளுள் அழுக்காறு தலையாயது, அதுவே முதல் தீமை. அந்தத் தீமையிலிருந்தே பிற தீமைகள் தோன்றுகின்றன. அதனால் அன்றோ, திருவள்ளுவரும் "அழுக்காறு என ஒரு பாவி" என்று வன்மையாகப் பேசுகின்றார். அழுக்காறு எங்கும் தீது; எதிலும் தீது; எப்பொழுதும் தீது. ஆனால் ஒருசிலர் கல்வியில் - நன்மை செய்வதில் - புகழ் வேட்டலில் அழுக்காறு கொள்ளலாம் என்பது போலக் கூறிவருகின்றனர். ஆனால், எத்துறையிலும் அழுக்காறு கொள்ளுதல் தீதே, அதன் பயன் அழிவே. அழுக்காறுடையான் தான் ஒன்றைப் பெற அவாவ மாட்டான். பிறர் பெற்றிருப்பதை அழிக்கவே முயற்சிப்பான். அங்ஙனம், அழிக்க இயலாத போது அவன், பெற்றிருப் போருக்குக் குற்றங்கள் கற்பிப்பான். இந்த உலகை வருத்தும் தீமைகளுள் தீமை அழுக்காறேயாம். அழுக்காற்றைத் தொடர்ந்துதான் அவா பிறக்கிறது; அவாவைத் தொடர்ந்து தான் வெகுளி பிறக்கிறது; வெகுளியைத் தொடர்ந்து இன்னாச்சொல் - பகை முதலியன தோன்றுகின்றன. ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய காலமும், மனித சக்தியும் பயனின்றி அழிவுக்குத் துணை போவதாகி விடுகிறது. ஆதலால், அழுக்காறுடையான் ஒருபோதும் உயரமாட்டான். வறுமொழியாளர் அரங்கில் வாயடைக்கும்போது, உயர்த்திக் காட்டுதலைத் தவிர, வேறு எந்த வகையான உயர்வும் மறந்தும்கூடக் காணமுடியாது. "அழுக்காறுடையான்கண் ஆக்கம் போன்றில்லை” என்று திருக்குறள் தெளிவாக ஐயத்திற்கிடமின்றி ஓதுகிறது.

இங்ஙனம் ஓதிய திருக்குறள் பின்பு, “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப் படும்" என்று கூறுகிறது. இத் திருக்குறள் புதிர்போல அமைந் துள்ளது. திருவள்ளுவர் வினாவும் எழுப்பாமல், விடையும் கூறாமல் ஐயத்தில் வைத்த திருக்குறள் இஃது ஒன்றேயாம். “நினைக்கப்படும்” என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ஆயிரம் ஆயிரம் சிந்தனையைத் தூண்டுகிறது. “நினைக்கப் படும்” என்ற சொல்லுக்கு; “ஆராயப்படும்” என்று கொண்டு ஆக்கமும் கேடும் ஊழின் வழிப்பட்டது, என்றெழுதியுள்ளார் பரிமேலழகர். “அழுக்காறுடையானது செல்வமும், செவ்வி யான் கேடும் நினைத்த அந்தப் பொழுதிலேயே அழியும் - அதாவது அவை நிலைத்து நில்லா" என்பது பரிதியார் உரை. பரிமேலழகர் உரையினும் பரிதியார் உரை சிறந்ததாக இருக்கிறது. ஆயினும், “நினைக்கப்படும்” என்ற சொல்லில் அமைந்திருக்கின்ற, உணர்வு அழுத்தத்திற்கு ஏற்றவாறு விளக்கமில்லை. “நினைக்கப்படும்” என்ற சொல்லில் ஒரு "கடுமை” தொனிக்கிறது. "ஆராய்க!"- அஃதோர் ஆணை! அரசிற்கிடப்பெற்ற ஆணை! சான்றோர் உலகுக்கு . இடப்பெற்ற ஆணை! அழுக்காறுடையான் கண் ஆர்வம் இல்லை; ஆள்வினை இல்லை; அவ்வழி ஆக்கமும் இருத்தற்கு வாய்ப்பில்லை ; ஆயினும், ஆக்கம் இருக்கிறது! அது எப்படி?

திருவள்ளுவர் ஊழ் தத்துவத்திற்கு உடன்பாடுடை யவரே! ஆயினும், இன்று திரித்துக் கூறப்படுகின்ற ஒருபால் சார்புடைய ஊழ்த் தத்துவம் - ஊழ்க்கொள்கை திருவள்ளுவர்க்கு உடன்பாடன்று. உடைமை, உடலோடு தொடர்புடையது, அது பிறப்பு மாறுபடும் பொழுது உயிரைத் தொடர்ந்து செல்லாது. உயிரைத் தொடர்ந்து நுண்ணுடம்பு சார்பினதாக நீங்காது செல்லக் கூடியவை அறிவு, ஆற்றல், சீலம், பண்பு முதலியனவேயாம். இதுதான் திருவள்ளுவர் கருத்து என்பதைப் பல்வேறு திருக்குறள்களின் மூலம் உணரமுடிகிறது. உயிர்ச்சார்புடைய நலன்கள் பற்றியே திருக்குறள் பல்வேறு அதிகாரங்களில் ஓதுகிறது. உடைமை அதாவது பொருளுடைமை என்று ஓர் அதிகாரமே வைக்கவில்லை. அதற்கு மாறாகப் "பொருள் செயல் வகை" வைத்தது அறிதற்குரியது. பொருள் ஊழின் வயப்பட்டு வந்து அமையுமென்றால், அவர், பொருள் செயல் வகை என்று ஆணையிட்டுப் பொருள், பிறப்பால் அமைவதன்று, செயற்பாலதே, என்று விளக்கியிருக்கமாட்டார். அடுத்து ஊழ் அதிகாரத்திலும் கூட, "சூழின் துய்த்தல்” போன்ற வினைச்சொற்களின் அடிப்படையிலேயே ஊழின் வலி யுறுத்தல் பேசுகிறார்.

“ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்." (380)
"வகுத்தான் வருத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." (377)

என்பன இங்கு நோக்கத் தக்கன:

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான் கண் .ஆக்கம் முறையானதன்று. அதில் ஏதோ தவறு இருக்கின்றது; சூது இருக்கிறது; ஆராய்ந்து அவ்விய நெஞ்சத்தானிடம் உள்ள ஆக்கத்தை அகற்றுக! என்பதே வள்ளுவர் ஆணை! செவ்வியான் -- செம்மை நலமுடையான் - செம்மை நலத்துள் பிறரை வஞ்சித்து வாழாததும், பிறர் பங்கைத் திருடாததும் அடங்கும். காலம் என்ற களத்தில் நின்று உழைத்தல் உயர்ந்தோரியல்பு. இங்ஙனம் உழைத்திடும் உத்தமர்கள் வறுமையால் கேடுற்றிருப்பது புரியாத புதிர்! “ஆக்கத்திற்குரிய அனைத்துப் பண்புகளும் இருக்கக் கேடு எப்படி வந்தது? ஆராய்க!" என்று ஆணையிடுகிறார் வள்ளுவர். "ஆராய்ந்தால், செவ்லியார். கேடு நீதிக்கு முரண்பட்டது; கேட்டினை உடன் அகற்றுக!” என்பது வள்ளுவரின் ஆணை!

செவ்வியான் கண் இருக்கவேண்டிய ஆக்கம், அவ்விய நெஞ்சத்தான் கண்ணும், அவ்விய நெஞ்சத்தான் கண் இருக்கவேண்டிய கேடு செவ்வியான் கண்ணும் இடம் மாறி விட்டன. இடம் மாறினமைக்குக் காரணம், அவ்விய நெஞ்சத்தானின் தீய ஆற்றலும், செவ்வியானிடம் உள்ள வலிமையற்ற நற்பண்புகளுமாகும். சமூகத்தில் ஏற்பட்டுள்ள முறைப் பிறழ்ச்சியை மாற்றியமைப்பது அறிஞர் கடன்! அரசின் கடன்! என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறைமொழி மாந்தராகிய திருவள்ளுவர் ஆணையிட்டது, இன்று உலக அரங்கில் செயற்படுகிறது. அதன் பயனாக நல்லவர்களாகிய உழைப்பாளர்களுக்கு உலகம் உரிய பங்கை -- மரியாதையைத் தரச் சட்டங்கள் இயற்றுகின்றன - நெறிமுறைப்படுத்துகின்றன!

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான்கண் ஆக்கம் இருத்தல் இயல்புமன்று; அறமுமன்று, முறையுமன்று. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம், அறம் விழைவோரால் வெறுக்கத் தக்கது; மாற்றத்தக்கது. செவ்வியான் கேடு நீதியொடு படாதது; நெறிக்கு இசைவில்லாதது; மாற்ற வேண்டியது; மாற்றப்பட வேண்டியது. அன்றே சமூகநீதி விளங்கி மேன்மையுறும்! இதுவே திருவள்ளுவர் கருத்து!

வெஃகாமை

பொருள் விருப்பமும் வேட்கையும் மனிதனின் இயல்பான உணர்ச்சி, பொருட்பேற்றைத் துறத்தல் அருமையினும் அருமை. இவ்வுலகு பொருளியலாலே நடைபெறுகிறது. அதனாலன்றோ, முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார் மாணிக்கவாசகர். பொருள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சிறந்த வழி உழைப்போடு கூடிய முயற்சியேயாம். அஃதல்லாத வழியில் பொருள் வருதலைப் பொருள் வரவாகக் கருதப்பெற மாட்டாது. அந்தப் பொருளாக்கம் நீடித்தும் இருக்காது; நிலைபெற்றும் இருக்காது. பொருள் தேடுதற்குரிய நேரிய வழியை விட்டுவிட்டுப் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் தீய உணர்வே சாதாரணமாக மக்களிடம் மேலோங்கி நிற்கிறது, இக்குறை ஏழைகளிடமும் உண்டு. செல்வந்தர் களிடமும் உண்டு. ஆதலால், பிறர் பொருளை வௌவக் கருதுதல் ஒழுக்க நெறிப் பட்டதன்று என்று திருக்குறள் பேசுகிறது.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடியொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.” (171)

என்பது திருக்குறள். பிறர் பொருளை வௌவுதல் நடுவு நிலைமையாகிய நன்னெறியைக் கடந்தது என்று கூறுகிறார், திருவள்ளுவர். நடுவு நிலைமை என்பது, எடை காணவேண்டிய பொருள்களையும், எடை காட்டும். கற்களையும் ஒப்பத் தட்டுகளில் இட்டு எடை காண்பது போல ஏற்றத் தாழ்வின்மை. அதுபோல நம்முடைய விருப்பம், உரிமைகள் ஆகியவைகளோடு ஒப்பப் பிறருடைய விருப்பம், உரிமைகள் ஆகியவற்றையும் மதித்துக் கருதுதல் நடுவு நிலைமை ஒழுக்கமுமாகும். பிறருடைய பொருளை வௌவுதல் அல்லது வௌவக் கருதுதல் தவறு என்று வாளா கூறாது, நன்பொருள் என்று அடையிட்டுக் கூறியிருப்பது சிந்தனைக்குரியது. ஒருவர் பெற்றிருப்பதின் காரணமாகவே அது அவருடைய பொருளாகி விடாது. நெறியல்லா நெறி முறைகளில் பிறர் பொருளை அப்பொருளுடையார் வௌவிச் சேர்த்திருப்பாராயின் அஃதெப்படி அவருக்கு உரிமையாகும்? திருடர் கையிலிருக்கும் பொருள்கள் திருடருக்குச் சொந்தமாக மாட்டா. அவற்றை எந்த நேரத்திலும் திரும்பப் பெற உரிமையுண்டு. ஆதலால், ஏழைகளை வஞ்சிக்கும் பிறர் பொருள்களைச் சூழ்ச்சிகளின் வழியாகவும் பெற்ற ஒருவரிடமிருக்கும் பொருள்களை ஒருவர் வௌவக் கருதுதல் தவறென்று வள்ளுவர் கருதுகிறாரோ? காரணம் அப்பொருள் உடையாரிடம் உள்ள பொருளன்று. நல்வழியில் உழைப்பாலும் உயரிய முயற்சிகளாலும் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருள்களை வௌவக் கருதுதல் நன்றன்று. காரணம் அவர்களுடைய பொருள் நன்பொருள். உழைப்பு என்ற உரிய சாசனத்தின் வழி கிடைத்த பொருள். அங்ஙனமின்றி, மறைமுகக் கொள்கைகளால் ஈட்டப் பெற்ற பொருள் "தீப்பொருள்”. அது பூரண உரிமையாக மாட்டாது. அப்பொருள்களை வௌவக் கருதுதல் ஒரோவழி பொய்ம்மையும் வாய்ம்மையிடத்தாதல் போல, ஏற்றுக் கொள்ளப்படும் என்பது வள்ளுவர் கருத்தா? அங்ஙனமாயின், மனித சமுதாயத்தில் தோன்ற வேண்டிய சிறந்த பொருளாதாரப் புரட்சியின் அடிப்படைக் கருத்து இக்குறிகளிலே அமைந்து கிடக்கிறது.

விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? என்று சாதாரணமாக ஒரு பழமொழியுண்டு. வினைப்பயன் விளைவது உறுதி என்பது நம்முடைய மரபு. வினைப்பயன் என்பது, நம்முடைய சொந்தச் செயல்களின் பயன்களேயாகும். வௌவுதல் வழியாகப் பிறர் பொருளைக் கைப்பற்றுதல் பிறிதொரு தீமையைத் தோற்றுவிக்கவே செய்யும். யார் ஏமாற்றப்பட்டார்களோ அல்லது வஞ்சிக்கப் பட்டார்களோ அவர்கள் வௌவிப் பொருள் சேர்த்தானுக்கு நிரந்தரப் பகைவர்கள். அவர்களுடைய கை ஓங்குகிற போது, மீண்டும் தம் பொருளைச் சேர்த்துக் கொள்ளவும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவுமே முயற்சிப்பர். ஆக, தொடர்ச்சி துன்பமே தரும். இதனையே, "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தீமையிலிருந்து நன்மை தோன்ற முடியாது. ஆனாலும் ஒரு தீமையை ஒழிக்க இன்னொரு தீமையைக் கையாளுதல் அதுவும் தனிமனிதர்கள் தனக்குள்ளாகவே கையாளுதல் தவறு. நன்மை தராது. அதுமட்டுமன்று. - தீரா இடும்பையே தரும். இதனைத் தவிர்க்கவே நீதி தேவதை உருவாயிற்று. ஒரு மனிதன் தனக்கு இழைக்கப் பெற்ற அநீதியை நேரடியாக எதிர்க்கின்றபொழுது அநீதியான முறைகளையே கையாளுவான். நீதி தேவதை வழிச் செல்வானாயின் அநீதி அகற்றப்படும். நீதி நிலைநிறுத்தப் பெறும். இவ் வழியில் விருப்பு வெறுப்புக்கள் குறையும். தங்கத்தின் தரத்தைக் காட்டும் உரைகல்லில் - கட்டளைக் கல்லில் தங்கத்தை உரசிப் பார்த்துக்கொள்ளும் பொழுது கொள்வோருக்கும், கொடுப்போருக்கும் இடையே இருந்த அவநம்பிக்கை அகன்று விடுகிறதல்லவா? அதுபோலவே, நீதியில் வைத்துப் பார்க்கும்பொழுது, மாறுபட்டவர்களின் மனமருட்சிகள் நீங்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படி நீங்குவதில்லை. ஒன்றன்பின் ஒன்றாகப் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துத் தொல்லைகள் தருவதைக்கூட ஒரு தொழிலாக, பழிவாங்கும் ஒரு கருவியாகக் கையாளுகிறார்கள். நீதி தேவதை நீதிமன்றங்கள் வழியாகவும் நீதி கிடைக்கும்படிச் செய்யலாம். நீதி வேட்கையுடைய பல மனிதர்களிடத்தே சிந்தனையைத் தூண்டி புரட்சியை விளைவித்து நீதியை நிலைநாட்டவும் செய்யலாம். இம்முறையே சாலச் சிறந்தது. காரணம், புரட்சி செய்தவர்கள் நீதியை உணர்கிறார்கள். இது ஒரு பெரும் படிப்பினை. அநீதிக்கு ஆளாகிறவன், தனி மனிதனல்லன். அவன் ஒப்பற்ற மானிடச் சமுதாயத்திற்கு உடைமையான ஓர் உறுப்பினன். அவனுடைய துன்பத்திற்காக அவனே நொந்து அழுதல் சமுதாய மரபன்று - என்ற சமுதாய உணர்ச்சி மேலோங்குகிறது. இன்று வளர்ந்து வரும் சமுதாயத்தின் நல்ல அறிகுறி, இந்த அடிப்படையில் தானே. இறந்த வீட்டில் ஊராரும், உற்றாரும் சேர்ந்து அழும் நடைமுறை தோன்றியிருக்க வேண்டும். கணவனை இழந்த பெண் அழுகிறாள். அவளுக்கு உண்மையிலேயே இழப்பு. அவளோடு கூடி இன்னும் பல பெண்களும் அழுகிறார்களே அவர்களுக்கு என்ன இழப்பு: அவள் ஒருத்தியினாலேயே அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அழுது தீர்க்க முடியாது என்பதனால் துன்பத்தில் பங்கு போட்டுக் கொண்டு அழுகிறார்கள். கணவனை இழந்தவள் தன்னுடைய இழப்புக்காக அழுகிறாள். அவளோடு அழும் மற்றவர்கள் இழக்கக்கூடாத ஒன்றை இழக்காமல் இருப்பதற்காக அழுகிறார்கள். அந்த ஒன்றுதான் சமுதாய உணர்ச்சி என்பது. ஒருவன் பலரைத் துன்புறுத்தும் வழியில் வௌவிப் பொருள்களைச் சேர்ப்பானாயின் அப்பொருள் களைச் சமுதாய நீதியென்ற பெயரில் திரும்ப அவனிட மிருந்து எடுத்துக்கொள்ள சமுதாயத்திற்கு உரிமையுண்டு. அங்ங்ன மெடுத்தல் வௌவுதலன்று என்ற குறிப்பில் நன்பொருள் வெஃகின் என்று கூறினாரோ என்பது ஆய்ந்து உணரத்தக்கது.

புறஞ்சொல்லும் புன்மை

திருக்குறள் நடைமுறை வாழ்வியலின் விளைவுகளை விளக்கும் நூல். குற்றங்களையும் குணங்களையும் அவற்றின் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கி வழிகாட்டுகிறது. அதுமட்டுமன்று. ஒன்றின் முழுத்தன்மையையும் அளந்து காட்டுவதில் திருக்குறள் மிகச் சிறந்து விளங்குகிறது. மனித சமுதாயத்தில் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பகை. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்-புறங்கூறி வாழ்தலின் மூலம் பொய் பெருகுகிறது. பகை வளர்கிறது; நட்பு கெடுகிறது; நல்லவை தேய்கிறது; அல்லவை பெருகுகிறது. புறங்கூறுதலைவிட மோசமான குணக்கேடு பிறிதொன்றில்லை என்று ஒழுக்க நூலார் வரையறுத்துக் காட்டுகின்றனர். புறங்கூறுதல் வெறுப்பை வளர்க்கிறது. வெறுப்பு வேற்றுமைகளை விளைவிக்கிறது - வேற்றுமைகள் பிரிவினைகளை உண்டாக்குகின்றன! என்று குவாரில்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் கூறுகிறார்.

மனித இயலும், திருவருட் சிந்தனையும் இல்லாத மனிதர்கள் தீமைகலைளத் தோண்டி எடுக்கிறார்கள். அத்தீமைகளை உதட்டில் தாங்கிப் பகை என்னும் பெரு நெருப்பை எரிக்கிறார்கள், தற்காலிகமாகப் பிறர் குற்றத்தில் குளிர் காய்கிறார்கள். ஆனால் அடையக் கூடிய பயனோ அழிவு! அழிவு! அழிவு!

அதனாலன்றோ அப்பர் அடிகளும்கூட சமுதாயத் தோடு பழகுதற்குரிய இனிய பழக்கமாக, குணங்களைச் சொல்லியும் குற்றங்களைப் பேசியும் வாழவேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

சொல்லுதலுக்கும் பேசுதலுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அப்பரடிகள் பெரிய வேற்று மையைக் காண்கிறார். சொல்லுதல் என்பது பிறரிடத்தில் ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிய குற்றங்களைச் சொல்லுதலைக் குறிக்கும். அவ்வாறு சொல்லுதல் குற்றம். சொல்லுதல் மட்டும் குற்றமன்று. அத்தகு சொல்லாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் குற்றம். அதனாலன்றோ, அறங்கூறவையில் இருபாலும் கேட்டு, மறுக்கவோ உடன்பாடாகவோ உரிய வாய்ப்புக்கள் முழுமையும் கொடுத்து, பின் அறங்கூறப் பெறுகிறது. ஆனால், இன்றோ புறங்கூறலே பெருகி வளர்ந்திருக்கிறது. அதையும் உண்மை யென்று நம்பி உரியவரைக் கேட்காமலேகூட மாறுபாடும் சினமும் கொள்கிறவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களிற்கூட இருக்கிறார்கள் என்றால் என்னென்று கூறுவது?

ஒருவர் இல்லாதபோது அவருடைய குற்றங்களைச் சொல்லுதல் -- கூறுதல் புறங்கூறல் ஆகும். அதனைக் கூடாதென்று தேவாரம் கூறுகிறது. அடுத்து, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையிலும் கூட புறங்கூறும் குற்றம் விளக்கப் பெறுகிறது. “தீக்குறளைச் சென்றோதோம்” என்பது ஆண்டாள் வாக்கு. குறளை என்பது கோள், புறம் ஆகிய சொற்களைக் குறிக்கும். அதுவும் தீக்குறளை என்று சொன்னது உண்மையல்லாத பொய்யை, தீமை பயக்கக்

தி-18, கூடியதை வலியத் தாமே சென்று மற்றவர்களிடம் சொல்லுதலைக் குறிக்கும். அதனால், குற்றங்களைச் சொல்லுதல் தீது. குணங்களைச் சொல்லவேண்டும். குற்றங்களைப் பேசவேண்டும் என்கிறார் அப்பர் அடிகள். பேசுதல் என்பது நேரில் நின்று பேசுதலைக் குறிக்கும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும்பொழுது அவர்தம் குற்றங்களை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பேச வேண்டும். அது குற்றமுடையார் திருந்துதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனையே திருவள்ளுவரும்,

"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.” 184

என்று குறிப்பிடுகின்றார்.

புறங்கூறுபவர்கள் -- பிறர் குற்றம் பேசித் திரிபவர்கள் அறம் பேசுவது போல நடிப்பார்கள். நன்மைக்காகப் பரிந்து பேசுவதாகப் பாவனை காட்டுவார்கள். நடிப்பிலும் பாவனையிலும் மயங்குகிறவர்கள், அவர் கூற்று உண்மையோ என்று ஐயப்படுவார்கள். ஐயத்தின் வழி களங்கம் பிறக்கும். களங்கத்தின் வழி மனங்கலந்த நட்புக்கெடும். பிரிவர் - பேதுறுவர். அதனாலன்றோ தமிழ் மறை. 'ஆழ்க தீயது' என்றோதுகிறது. தீயவர் அழிதல் அன்று. அதனாலன்றோ, புராணங்களிலும்கூட, அரக்கர்கள் தீமையொழித்து நல்லவர்களாக மாறி வளர்ச்சியுற்றுத் திருவருளுக்குப் பாத்திரரானார்கள் என்ற செய்தி பேசப் பெறுகிறது.

சொற்களால் பகை வளர்க்கும் ஒருவர் நெஞ்சம் எங்ஙனம் அறச்சார்புடையதாக இருக்க முடியும் என்பது வள்ளுவர் கேள்வி. புறங்கூறுபவர் சொல்லை நம்ப வேண்டாம்.

நெஞ்சத்தின் இயல்பு எதுவோ, அதை விளைவுகள் காட்டும். சொற்களெல்லாம் நெஞ்சத்தின் இயல்பு முழுவதையும் காட்டுவதும் இல்லை. நமது தலைமுறைக் கவியரசு கவிஞர் கண்ண தாசன் அவர்கள்,

சொல்லில் வருவது பாதி-நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி

என்று குறிப்பிடுகிறார். அறநெஞ்சுடையார் குற்ற முடையோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். காரணம், குற்றத்தைத் திருத்தமுடியும் என்று நம்புவார்கள். அதற்குரிய வழி வகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள், அறநெஞ்சுடையார்க்குக் குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமேயன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப் பிருக்காது. அவனுடைய மனம் அறவழிப்பட்டதன்று. அவனுக்கு அறம் தெரியவே தெரியாது. அவன் மனம் தீது. கருதியது முடிக்க அறம் சொல்லிக்கொள்வது போலக் காட்டுகின்றான் என்று திருக்குறள் விளக்குகிறது. நீரில் நெருப்பிருக்காது என்பது போலப் புறம் சொல்லும் புன்மையவரிடத்து அறம் இருக்காது -- இருக்கமுடியாது என்பதை யுணர்ந்து வாழ வேண்டும். புறம்கூறும் பழக்கத் தினின்றும் நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். அதனைக் கேட்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.

"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்." (185)
தீது உண்டோ?

னித உலகத்தின் விழைவு. இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமேயாம். இங்ஙனம் கூறுவது "இன்னாதம்ம இவ்வுலகம்" என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாதது ஒன்றேயாம். மாற்றுதலுக்கும், மாறுதலுக்கும் உரியன எல்லாம் இயற்கையாகா. அவை ஒருவாறு செயற்கை யேயாம். அதனாலேயே “இன்னாதம்ம இவ்வுலகம்" என்று மொழிந்தவர் அதனைத் தொடர்ந்து "இனிய காண்க” என்று ஆணையிட்டார்.

இன்னாதன எனக் கருதத் தக்கவை பெரும்பாலும் முறைகேடான தன்னலச் சார்புகளிலும், தற்சலுகைகளிலுமே தோன்றுகின்றன. முறைகேடான தன்னலச் சார்பு என்பது பிறர்க்குத் தீங்குகளைத் தந்து அவ்வழி தன்னலமாக விளங்குபவையாகும். ஆதலால் ஒரு தனி மனிதனிடத்தில் திடீரென்று குற்றங்கள் தோன்றிவிடா. அந்தக் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள்- - குற்றங்கள் தோன்றுவதற்கு உரியவாறு வாழுகிறவர்கள் தங்களுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல் தங்களுடைய குற்றங்களின் காரணமாகப் பிறரிடம் தோன்றும் குற்றங்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறார்கள். காவிரியைத் தஞ்சையிலும் பார்க்கிறோம். திருச்சியிலும் பார்க்கிறோம். அதனால், காவிரி தஞ்சையிலோ திருச்சியிலோ தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. அது குடகு மலையில், தோன்றியே தஞ்சையையும், திருச்சியையும் வந்து சேர்ந்தது. அது போலவே குற்றங்களுக்குரிய காரணங்கள் தோன்றும் இடம் வேறு. குற்றங்கள் விளங்கிப் புலனாகின்ற இடம் வேறு.

உண்மையை ஒத்துக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள் பொய்யைத் தோற்றுவிக்கிறார்கள். நியாயமான உரிமைகளை ஏற்று வழங்காதவர்கள் பொய்யினைத் தோற்றுவிக்கிறார்கள்: மற்றவர்களுடைய மன உணர்ச்சிகளை மதித்து உடன்படவோ அல்லது மாற்றலோ சக்தி அற்றவர்கள் ஒடுக்கம் கொள்கையின் மூலம் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். இவறிக் கூட்டிச் செல்வம் சேர்ப்பவர்கள் -- செல்வத்தின் பயனை மறைப்பதின் மூலம் கள்வர்களைத் தோற்றுவிக்கிறார்கள். அழிபசி தீர்க்கும் பொருள் வைப்புழித் தெரியாத புல்லறிவாளர்கள் களவினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்கள் அன்றாட வாழ்வுக்கே வறுமையில் ஆழ்ந்து அவல்ப்படும் பொழுது வளம்பல படைத்து ஆடம்பரமாக வாழ்பவர்கள் அழுக்காற்றினைத் தோற்று விக்கிறார்கள். பலர் துய்க்காதனவற்றைப் பலர் அறியத் துய்த்து மகிழ்கிறார்கள்.அவாவினைத் தோற்றுவிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அடிமைத் தனத்தையும் அதுவே வளர்ந்துழி அடங்காமையும் தோற்றுவிக்கிறார்கள். இங்ஙனம் ஆய்வு செய்யின் குற்றங்களை உடையோரும் குற்றங்களைச் செய்வோரும் மட்டுமே பொறுப்பினர் ஆகார். அவர்களோடு தொடர்புடைய மற்றவர்களுக்கும், குறிப்பாகச் சமுதாய அமைப்பிற்கும் நிறையப் பொறுப்பும் பங்கும் உண்டு, இங்ஙனம் ஆராய்ந்து முடிவு செய்வதே நியதியும், நீதியும் ஆகும். இந்த ஒப்பற்ற நீதியைப் புதுமை என்றும், பொதுமை என்றும் இன்று பலர் கூறுகின்றனர். ஆனால் நமது வள்ளுவர் அன்றே கூறியுள்ளார்.

"ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு." (190)

என்பது குறள். இந்தக் குறள் நினைந்து நினைந்து உணரத் தக்க குறள். புதுமையும் புரட்சியும் நிறைந்த குறள். நிலைபெற்ற மனித உயிர்கள் உலகத்தைப் பற்றிப் பிடித்து அலைக்கும் பகைமைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் அருமருந்தென விளங்கும் குறள். ஏதிலார், அயலார் என்பது பொதுவான பொருள். சிறப்பாக மாறுபட்ட பகை உணர்ச்சி உடையவர் என்றும், பொருள் கொள்ளலாம். முதலில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அயலார் பகைவர் என்று கருதுதலே அடிப்படையில் தவறு. அங்ஙனம் கருதுகின்ற பகையினாலேயே நல்லனவும் தீயனவாகத் தோன்றும். அன்புடையார் மாட்டுத் தீமையே தோன்றினாலும், நன்மையே தோன்றும். ஆதலால் ஒருவன் பிறிதொருவனை ஏதிலானாகக் கருதுதல் மூலமே குற்றங்கள் தோன்றுவதற்குரிய களம் ஏற்பட்டுவிடுகிறது. அடுத்து பிறரிடத்தில் காணப்படும் குற்றங்களுக்குத் தன்னிடத்தில் உள்ள குற்றங்கள் எவ்வளவுக்குக் காரணமாக அமைந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்கக்கூடிய தைரியம் ஏற்பட்டு சுய விமரிசனத்திற்கு உரிய அறிவு பெற்றுத் தன்னுடைய குற்றங்களை நீக்கிக் கொண்டால் பிறருடைய குற்றங்களும் நீங்கிப் போகும். அதன் மூலம் சமுதாயத்தில் குற்றங்கள் குறையும்; நிறை பெருகும்; பகை மாறும்; பண்பு வளரும். இதனையே இந்த அறநெறியை இந்தக் குறள் வலியுறுத்துகிறது. அதாவது ஒழுக்கக்கேடு என்பது ஒருவரை மையமாகக் கொண்டது மட்டுமன்று; பலரை -- அதாவது மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு வளருவதே ஒழுக்க நெறி.

இந்தக் குறள் புறங் கூறாமையில் இருக்கிறது. புறங் கூறுகிறவர்கள் நேரடியாகச் சொல்லுதற்குரிய ஆளுமையும் அசைவிலா உறுதியும் இன்மையின் காரணமாகவே புறங் கூறுகிறார்கள். புறங்கூறுவதே ஒரு குற்றம் என்று கருதும் அறிவு இருக்குமானால் புறங்கூறமாட்டார்கள். அவ்வழித் திரிபுகள் ஏற்படா. ஒரு தவற்றில் பலர் பங்கு ஏற்கக்கூடிய வாய்ப்பும் தடைப்படும். காலமும் மிஞ்சும். மனித சக்தியும் மிஞ்சும். பகையும் குறையும். எதிர்பார்க்கின்ற குறைகளும் நீங்கி, நிறைகளும் ஏற்படும்.

ஆதலால் பிறர் குற்றம் காண்பதற்கு முன் நமது குற்றத்தை நாமே பார்த்துக் கொள்வோமாக.

நாம் அனைவரும் நல்லவர்களாகி அவ்வழி மற்றவர் களையும் நல்லவர்களாக வாழச் செய்வோமாக!

பயனில சொல்லாமை

ன்றைய உலகியலில் பேச்சு அதிகம். மனிதர்கள் தம்முள் ஒரு சிலர் கூடினாலும் பேசித் தீர்க்கிறார்கள். பலர் கூடினாலும் (கூட்டங்கள் என்ற பெயரில்) பேசித் தீர்க்கிறார்கள். ஆக, கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பேச்சு அதிகம். வீட்டிலும் அதிகம். நாட்டிலும் அதிகம். இங்ஙனம் வளர்ந்துவரும் பேச்சு முறை ஆக்க வழிப்பட்டதாக -- பெரும் பயன் தரத்தக்கதாக வளரு மானால் அது பாராட்டுதற்குரியதாகும். மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே. பொருளை உணர்த்துவதற்குத் தான்! பொருள் வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொல்லாட்சியின் இறுதி இலட்சியம். மேலும், உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டி உறவு முறையை வளர்த்துக் கொள்ளலே சொல்லாட்சி. மனிதர்களுக்குள் வளர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்குப் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாததோர், சொற்களைத் தகுதியில்லாத முறையில் கையாளுவதேயாம். இயற்கையமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சி யால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாகப் போவதைப் பார்த்துத் திருவள்ளுவர் வருந்துகிறார். சொல்லாட்சியும் உழைப்பின் விளைவே. இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும்பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும் பயனில்லாமலே அழிவதைப் பார்த்துக் கழிவிரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்கும் புல்லிய மாந்தரை இளங்கோவடிகள் 'வறுமொழியாளர்' என்று ஏசுகின்றார். திருவள்ளுவர் பயனற்ற சொற்களைக் கேட்டு மகிழ்வோரையும் கண்டிக்கின்றார்.

'பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.” (196)

என்று கூறுகிறார். நெல்லோடுதான் பதரும் சேர்ந்திருக்கிறது. அதனாலேயே, அதுவும் நெல்லாகி விடுமா என்ன? பயன்படுத்துவோர் விழித்தெழும் வரையில், பதரும் நெல் லோடு சேர்ந்திருக்கும், பின்னர் பதர் தூற்றப்பெறும். நெல்லினின்றும் பிரிக்கப் பெற்றுக் கழிக்கப் பெறும். அது போலவே, பயனற்ற சொற்களைப் பேசிக் கொண்டு தம்மை . உயர்ந்தார் போல -- நீதிமான்களைப் போலக் கருதிக் கொண்டும் -- காட்டிக் கொண்டும் சிலர் வாழ்கின்றார்கள். ஏன்? பலர் வாழ்கின்றார்கள். எனினும் தவறாகாது. ஆனாலும் காலம் வருகின்ற போழ்து, பயனில் சொல் பாராட்டித் திரிந்தவர்களை நாடு ஒதுக்கும்; ஒறுக்கும்.

ஒரு மனிதனுடைய உள்ளுணர்ச்சி எத்தகையது என்பதை அவனுடைய சொற்கள் காட்டும். நிலத்தின் இயல்பைத் தண்ணீர் காட்டுவது இயற்கை. அதுபோலவே, உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றின் இயல்புகளைச் சொற்களே காட்டும். “பயனற்ற சொற்களை வழங்குகின்றவன் அறிவுடையவனாகவோ, இனிய பண்புடையவனாகவோ இருக்க முடியாது. நீதி நெறி வழிப்பட்ட வனாகவும் இருக்க முடியாது" என்று திருவள்ளுவர் கருதுகிறார். பயனில பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பது சொல்லும்--என்று திருக்குறளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும் போழ்து. அமுதினும் இனிதாக இருக்கிறது, கருத்துச் சுவை. சொல்லும் சொற்களோ பயனற்றவை. அதையும் சுருங்கச் சொல்லுகிறார்களா? உண்ட உணவு செரித்து அடுத்தவேளை பசி தோன்ற வேண்டுமே! அதுவரையில் பேச வேண்டும்; பேசித் தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியோடு தெருவோரத்தில்திண்ணைகளில் உட்கார்ந்து வம்பு அளப்பவர்களுக்குக் காலத்தின் அருமை தெரியாது! ஆதலால், பயனற்ற சொற்களாக இருந்தும்கூட, விரித்துரைத்து மகிழும் இயல்பு இவரிடத்திலும் இருக்கிறது. இந்த அளவிலேயே திருவள்ளுவர் முடிவு சுட்டச் சொல்கின்றார். என்ன முடிவு? பயனற்ற சொற்களைப் பேசித் திரிவோரை அறிவில்லாதவர் என்று கருதி எட்டடி தூரத்தே நிறுத்து; அல்லது நெருங்காதே. நெருங்கினாலும் காது கொடுத்து விடாதே! நீதியற்றவன் என்று கருதி நீண்ட தூரத்தில் காணும் போழ்தே உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று திருவள்ளுவர் வலியுறுத்து கின்றார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் கருத்து நடைமுறைக்கு வரவில்லை. எல்லார்க்கும் வாய் இருக்கிறது. எல்லாரும் பேசலாம் என்று பேசுகின்றார்கள். பொய்க்குப் புனைந்த வடிவம் கொடுத்து மெய்யாக்கு கின்றார்கள். பொழுது போகாதவர்கள், உழைத்து வாழும் அவசியம் இல்லாதவர்கள், தற்பெருமையில் களிக்கும் செல்வந்தர்கள், போக்கிரிகள் இன்றும் பயனில சொற்களைச் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின் றார்கள். இந்தச் சூழ்நிலையில் எங்ங்னம் மனிதகுலம் ஆற்றல் நிறைந்த முயற்சிகளில் ஈடுபட முடியும்? எப்படி, அவர் களிடையே நம்பிக்கையுணர்வு வளர முடியும்? சிந்தனை செய்து பாருங்கள். "பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள். அது போலவே, அவற்றைக் கேட்காதீர்கள்: இம்முயற்சியால் காலத்தின் அருமை வெளிப்படும். கருத்தில் தெளிவு ஏற்படும். நம்பிக்கை வளரும். நாடு செழிக்கும். மீண்டும் ஒரு தடவை அக்குறட்பாவைப் படித்து, நினைத்து அன்றாட வாழ்க்கைக்கு உரியதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோமாக.

"நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை." (193)


தீயும் தீவினையும்


ற்காத்துக் கொள்ளுதல் என்பது இயல்பான உயிரியல் உணர்வு. உயிர்வர்க்கம் எல்லாமே தம்மைத் துன்பத்தினின்றும் மரணத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றன - முயற்சி செய்கின்றன. விலங்கியலில் உயிர் அறிவும் உணர்வும் மிகமிகக் குறைவு. மனித இயலிலும் உடலியலை விட உயிர் உணர்வும் அறிவுமே மிகுந்து காணப் பெறுகின்றன. அது இயற்கை. பரிணாம வளர்ச்சியிலும் கூட இதுவே நியதி.

விலங்குகள் உடல் தற்காப்பிலேயே ஈடுபடும். உயிரியல் . அறிவு கைவரப் பெற்றமையின் காரணமாக மனிதன் ஆன்மாவையும் தற்காத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கிறான். அதனாலேயே விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும், விருப்பம், சிந்தனை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி வற்புறுத்தப் பெற்றன. 'தீவினை அச்சம்' என்றே திருக்குறள் அதிகார வைப்பு ஓதுகின்றது. தீவினை செய்தலில் அச்சமல்ல -- தீவினை பற்றிய அளவிலேயே அச்சம்! பெரு வெள்ளத்தைக் கண்டு விலகி ஓடுதல் போன்றது. தீவினையுணர்வுகளினின்றும் அஞ்சி ஒதுங்கிக் கொள்ளுதல். தனக்குத்தான் உண்மையான அறிவொடுபட்ட விருப்பம் இருக்குமாயின் அவன் பிறருக்கு யாதொரு தீங்கும் - சிறியதேயாயினும் செய்யற்க என்று திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.

"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.” (209)

என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.

பிறருக்குத் தீங்கு செய்யும்போது - பிறருக்குத் துன்பம் உண்டாக்குவது போலத் தோன்றினாலும், அது பயன் விளையுங் காலத்துத் துன்பம் செய்தாருக்கும் துன்பம் தருதலின் தற்காத்துக் கொள்க என்ற கருத்து இங்கு பெறப் படுகிறது.

நாம் பிறிதொருவருக்குத் தீங்கு செய்யத் திட்டம் தீட்டலாம் - பேசலாம் - திட்டப்படி செய்யலாம். நம்மால் துன்பம் இழைக்கப் பெறுகிறவன் நம்முடைய துன்பத்தை அனுபவிக்கவும் செய்யலாம். அவன் திருப்பித் தீங்கு செய்யத் தெரியாதவனாக இருக்கலாம். செய்தற்குரிய ஆற்றல் அற்றவனாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அறக்கடவுள் தீங்கு செய்தார்க்குத் தீங்கு செய்யத் திட்டமிடும் சூழ்ந்து செய்யும். துன்பப்பட்டவன் பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் -- ஆனால், பிறர் இழைக்கும் துன்பத்தால், அவதியுறுபவன் கேடும் இழப்பும் இல்லாமலேயே நலம் பெறுகிறான். காரணம், அறக்கடவுள் அவனுக்குப் பாதுகாப்பாக இயங்குகிறது. அறக் கடவுளின் ஆற்றல் அளப்பரிது. ஆதலால், தீங்கிழைத்தவனை அது துன்புறுத்தியே தீரும். இதனை,

"மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.” (204)

என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.

இனி, பிறருக்குத் தீமை செய்ய நினைக்கின்ற அளவிலேயே நினைக்கின்றவன் தீமையுறுகின்றான் என்பது சான்றோரின் அனுபவ உரை. “தீங்கு நினைக்கின்றவனுக்கே தீங்கு” "Evil to him who evil thinks" என்பது ஆங்கிலப் பழமொழி. தனக்குத் தீங்கு நேராமல் இன்னொருவனுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று ஓர் அனுபவ உரையுண்டு.

திருவள்ளுவர், தீமையையும் தீயையும் ஒப்பு நோக்கி தீச் செயலின் இழிநிலையை -- அதன் கொடுமையை நமக்கு உணர்த்துகின்றார். தீ, வைத்த இடத்தில் மட்டுமே எரியும். தீ, வைக்கின்றவனின் கை, பற்றி எரிவதில்லை. தீ, வைக்கப்பெற்ற கூரை மட்டுமே பற்றி எரியும். இது ஒருபால் கேடு.

அது மட்டுமின்றி தீயினை யார் வைத்தாலும் வைத்தவர்களே அணைக்க வேண்டுமென்ற அவசியமில்லாமல் மற்றவரும் அணைக்கலாம். ஏன்? இன்று தீயணைக்கும் படையே இருக்கிறது. ஆனால் ஒருவரிடம் உள்ள தீமையைப் பிறிதொருவர் தணிக்க முடிவதில்லை. ஆனால், முயலலாம். அந்த முயற்சி தூண்டுதலும் வழி நடத்தலும் என்ற அளவிலேயே அமையும். தீமையுடையவர் உணர்வசைந்து உடன்பட்டாலேயே மாறுதல் உண்டு. அப்படியில்லையேல், ஒருவரிடமுள்ள தீமை தணிவதில்லை. இந்தச் சிறந்த நோக்கந்தான் தன்னிடமுள்ள தீமையைத் தானே உணர்ந்து நொந்து வருந்தி அழுது பாடித் தீமையிலிருந்து விடுதலைபெறச் சான்றோர்கள் முயன்றிருக் கிறார்கள். இந்தச் சிறந்த நோக்கத்துடனேயே சமயங்களில் பிரார்த்தனையும், வழிபாட்டுமுறைகளும் தோன்றின. உண்மையான பிரார்த்தனை என்பது ஓருயிர் தன்னையே நோக்கித் தன் தீமையைக் கழுவுதலேயாம். ஆனால், மனிதனின் வியாபாரப் புத்தியும், சோம்பலும் இந்தத் தூய சமயத்தையும் விட்டபாடில்லை. இதன் விளைவாகவே புரோகித சமயம் தோன்றிற்று. ஒருவருக்காகப் பிறிதொருவர் அழத்தொடங்கி விட்டனர். பாபர் போல அழுதால் பயனிருக்கலாம். அது உண்மையிலேயே அழுதது. ஆனால், இவர்கள் அழுவதோ பெறக்கூடிய காசுகளுக்கேயாம். காலப் போக்கில் அழுவதுகூட விடுபட்டுப் போயிற்று. அவர்கள் சமயத்தின் முதலாளிகளாகி விட்டார்கள். முழுநிலவை மறைத்த நிழலைக் கருதி முதலைக் கண்ணீர் வடித்துக் குளத்தில் மூழ்கும் மனிதர்கள் - நிறைவுடைய நன்னெறியாம் சமயத்தில் படிந்த தீமையை நினைத்து அழாதது ஏனோ? ஒருவனிடமுள்ள தீமையை அவனே உணர்ந்துதான் மாற்றிக்கொள்ள முடியும். பிறர் அணைக்கும் தீயைவிடத் தம்மிடமே பொறுப்புள்ள தீமை கொஞ்சம் சிக்க லானதேயாம்.

அதோடு, தீ எரியத் தொடங்கியவுடனேயே வெளிப் படையாகத் தெரிகிறது. ஆதலால், உடனடியாக அணைக்கும் முயற்சியும் தோன்றிவிடுகிறது. ஆனால், தீமையோ உடனடி யாகத் தெரிவதில்லை. உடனிருந்தும் ஒட்டியும், பச்சை உறவு காட்டியும் இன்ப நயங்காட்டியும் பையப் பைய அரித்துக் கெடுப்பது. பலர், தன்னிடமுள்ள தீமையையேகூட அறியாமையின் காரணமாக நன்றென்றே கருதிக் கொண்டி ருக்கிறார்கள். அல்லது "அவரிடமில்லையா? இவரிடமில்லையா? அதற்கு இது என்ன மோசம் போய்விட்டது?" என்று சமாதானம் கற்பித்துக் கொள்கிறார்கள். பலரிடம் வறுமை இருப்பதனால், வறுமையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றார்களோ? சிலரிடமுள்ள செல்வத்தில் தானே நாட்டம் வைக்கிறார்கள்! ஆதலால் வெளிப்பட இருந்து காட்டி, சீக்கிரத்தில் அணைக்கப்பெறும் தீயைவிட உள்ளிருந்து எரித்து அழிக்கும் தீமை மிகவும் கொடியது.

தீயினால் எரிவது வீடுகளேயாம். வீடுகள் மனிதனின் படைப்புகள். ஆனால் தீமையினால் அழிவதோ மனிதனே யாம். படைப்புப் பொருள்கள் அழிந்தால், திரும்பப் 'படைக்கலாம். படைப்புக்குரிய மனிதனே அழிந்து போனால்... இந்த வகையிலும் தீமை மிகக் கொடியது. தீயினால் விளையும் தீது ஒரோ வழி எல்லைக்குட்பட்ட தன்று. நில எல்லைக்கும் உட்பட்டதன்று. கால எல்லைக்கும் உட்பட்டதன்று. தீமை மனித சமுதாயத்தையே அழிக்க வல்லது. ஏழேழ் தலைமுறைக்கும் அழிக்கவல்லது. இந்த வகையிலும் தீயினும் தீமை கொடியது.

தீ, கூரையிலிருந்தால் கேடு. ஆனால், அடுப்பிலிருந்தால் ஆக்கம். அணையா அடுப்பு, வளம் நிறைந்த மனையின் சிறப்பு. ஆதலால், அடுப்பிலிருக்க வேண்டும். ஆனால், தீமை யினால் ஒரு வழியிலும் பயனில்லை. எந்த அளவிலும் பயன் தராது. பயன் தருவதுபோலத் தோற்றமளித்தாலும் சர்க்கரைப்பாகு தடவிய நஞ்சுருண்டையேயாம். நாவில் கரும்பின் இனிமை தென்படும். உடனேயே உயிர் கொல்லும் நஞ்சும் தென்படும். தீமையினால் வரும் பயன் கள்ளுண்டு களித்தல், வரைவின் மகளிர் மயக்கு -- எல்லாவற்றையும் விடப் பிணந்தழுவிய முயக்கு ஆகியன போலாம். ஆக ஒருபோதும் பயன்படாது. ஆதலால், தீயைவிடத் தீமை கொடியது. அதனாலன்றோ திருவள்ளுவர்,

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்." (202)

என்று குறிப்பிடுகின்றார். தீயவை தீய பயத்தலால் என்ற சொற்றொடரும், தீயினும் என்பதிலுள்ள உம்மையும் அறிவுக்கு விருந்து, ஆழச் சிந்திப்பாரின் அக உலகிற்குப் பாதுகாப்பு.

தீமை செய்வோர் தீமை செய்யட்டும். செய்து கொண்டே இருக்கட்டும். அதனால் நாய்கள் தாம் கக்கியவற்றைத் தாமே தின்பது போலத் தம்முடைய செயல்களின் விளைவுகளை, அவர்களே அனுபவிப்பார்கள். அறக்கடவுள் சூழ்ந்து ஊட்டுவிக்கும். ஆதலால், அச்சமின்மை பேசிய திருவள்ளுவர் அஞ்சச் சொல்லுகிறார். தீயனவற்றிற்கு அஞ்சச் சொல்கிறார். புறத்தில் தாக்கும் தீமைகளைக் கண்டு அஞ்சுவது போலவே, ஏன், அதனினும் ஒருபடி மேலாக அகத்தில் தோன்றித் தாக்கும் தீமையைக் கண்டு, அஞ்சச் சொல்கிறார். மடியில் தீயினை கட்டிக்கொண்டு, நானிலத்தில் நடப்பாரில்லை. அதுபோல் மனத்தில் தீமை தாங்கி நடப்பாருமில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். அதுவே வள்ளுவர் உலகம்.

உயிர் வாழ்வான் யார்?

திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. 'மனிதன் ஒரு சமூகப் பிராணி' என்கிறார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோ வழி சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கைமுறை இருந்தாலும் கூட அது அச்சத்தின்பாற் பட்டதே யொழிய, அன்பிற்பாற் பட்டதன்று. சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்ப தென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும் பொறிகளின் மீது தனியரசு செலுத்துவோரே பொது வாழ்விலும் கூட்டுப் பொதுவாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.

ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் 'இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் -- உதவி செய்தல்' என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை - இயல்பை, ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார். ஈகை, ஒப்புரவறிதல் இவ்விரண்டும் ஒன்று போலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு உடையன. ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையோர் -- இல்லோர் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ்வழிப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதூக்கி நிற்கும். ஒப்புரவறிதலில் உடையோர் இல்லோர் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும் கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்."(214)

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம் போல பரிமேலழகர் 'உலக நடையினை' என்று எழுதித் தப்பித்துக் கொண்டு விட்டார், அது நிறைவான கருத்தன்று. 'தன்னைப் போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்க நெறிவாக்கு. இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை. பலருக்கு எது ஒத்ததோ அதற்குச் சிலர் இணங்கியே வாழவேண்டும். அதுவே சமுதாய நியதி - ஒழுக்கம். அங்ஙனம் உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். மற்றோர்க்கும் அவர்தம் வாழ்க்கையாற் பயனுண்டு. இங்ஙனம், ஒத்ததறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருதவேண்டும் 'என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும் உணர்ச்சியில்லை. உதவும் பணியில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு, சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள். பிணத்தை நடுவீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும். காற்றைக் கெடுக்கும். சமுதாயத்திற்கு நோய் தரும். அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழமுடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம்போல் நாறுவான். அந் நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். உபத்திரவம் செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வதுபோல், சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.

ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார், இதையே (Volounteer Service) என்று குறிப்பிடுகிறார்கள்.

இரப்பாரும் ஈவாரும்

யிர்கள் குறைகளினின்று விடுதலை பெற்று நிறைவைப் பெறவே மனித வாழ்க்கை தரப் பெற்றது. இந்த நிறைவைப் பெறும் சாதனங்களிற் சிறந்தது. கிளர்ந்தெழும் அன்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வது. . அவ்வாறு செய்யும் போது உயிரின் தன்மை வளர்கிறது. சிறப்படைகிறது. அப்பொழுதே உயிருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக உயிர், உயிர்த்துடிப்போடு வாழ்கிறது. ஓர் உயிர் நலம்பெற்ற உயிரோட்டத்தோடு கூடி வாழ வேண்டுமானால் அதற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தேவை. அந்த வாய்ப்புகள் இல்லையானால், உயிரின் இயல்புகளும் ஆற்றல்களும் வெளிப்படுதற்கு வழியில்லாமற் போகும். அதனாலேயே திருவள்ளுவர், இரப்பாரே இல்லாத உலகம் உயிரற்ற பாவை சென்று வந்தாற் போன்றது என்றார்.

மனித உணர்வின் வெளிப்பாடுகள் துன்பங் கண்டபோது அழுதலும், இன்பங் கண்டபோது மகிழ்தலும் ஆகும். இத்தகு பண்பு தன்னளவினதாக இருக்கும் பொழுது பெரிதும் பயன்தராதது மட்டுமின்றி ஆக்கமில்லாமலும் போய்விடுகிறது. பிறர் துன்பங் கண்டு நோதலும், பிறர் இன்பங் கண்டு மகிழ்தலும் பண்பாட்டின் விளைவு; உயிர் வாழ்தற்குரிய வழி. இக் குறிப்பிலேயே திருவள்ளுவர் இரப்பாரும் இவ்வுலகில் இருத்தல் வேண்டும் என்று பேசுகின்றார். இரப்பார் ஏழைமையின் காரணமாக இரக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறரின் அன்பு உணர்ச்சியைத் தூண்டி உயிர்பெற்று வாழவும், உய்தி பெறவுமேயாகும். இப் பார்வையோடு இரப்பாரைப் பார்த்தால் ஏழைமையின் துன்பமும் ஏளனமும் தோன்றாது. இடுவோர் இயல்பு, இரப்பாரின் துன்பம் மாற்றுவதாக இல்லாமற்போனால் இரப்போர் வாழ்க்கை கொடுமை யானது. ஈத்துவக்கும் இன்பம் பெற விழைவோர்க்கு இரப் பார் இல்லையானால் அவ் வின்பத்தைப் பெற முடியாமல் அன்றோ போய்விடும்! வைத்துடைமை வண்கணாளர். வாழும் நாட்டிலே இரப்பார். இருத்தலைவிட இறத்தலே நன்று என்று வள்ளுவரே வகுத்துப் பேசுகின்றார்.

ஆனால், வள்ளுவர் காலச் சூழல் வேறு. நாம் வாழும் சூழல் வேறு. வள்ளுவர் காலத்தில் பிறர் துன்பம் மாற்ற முடியாதபோது - பிறருக்கு உதவி செய்ய முடியாத இயல்பு

தி.19. -- வந்துற்றபோது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்ட காலம். இன்றோ பொருள் பெரிதாகி, ஈர நெஞ்சின்றி இவறிக் கூட்டிப் பொருள் சேர்க்கும் காலம், இந்தக் காலத்தில் இரப்போர் - நிலை இரங்கத்தக்கதாக உள்ளது. முழங்கால் கடுக்க முயன்று ஏறி “முதலாளி" என்றாலும் காசு தராமல் “உடம்பு சரியில்லையா?” என்று கேட்கும் காலம். ஆதலின் இரப்போர் தொகை குறைவதே நல்லது. எனினும் உதவி, சேவைகளின் மூலம்தான் மனித உயிர்கள் வளர்ச்சியடைய முடியும்.

ஆதலால், இரப்பார் நிலையில் உள்ளார் இரக்காமலேயே வலியச் சென்று கொடுப்பது -- அல்லது வாழ்விப்பது நலம் தரும். அத்தகு சமுதாயப் பணிமனைகள் நாடு முழுவதும் பெருக வேண்டும். இக் கருத்திலேயும் வள்ளுவர் கூறி உள்ளார்.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
'குலனுடையான் கண்ணே யுள." (223)

என்ற குறள் இக் குறிப்பினதே யாகும்.

ஈதலும் இரத்தலும்

னித குலம் பலவகையாலும் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழக்கூடியதே வாகும். அறம் விளக்கும் அறநூல்களும், ஒழுக்க நூல்களும், சமய நூல்களும் ஒருமுகமாக, ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. தமிழ் இலக்கியங்கள் கூட ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. காதலின்பத்தைவிட ஈதலால் பெறுகின்ற இன்பம் பெரிது என்பது தமிழர் கருத்து. ஈந்து வாழ முடியாத வாழ்க்கை மரணத்திலும் கொடுமையானது என்பது திருவள்ளுவர் கருத்து.

நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் கருதுவார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். குறுந்தொகையில் தலைவன் பொருள்வயிற் பிரிகின்ற பொழுது, தலைவியிடத்தில் பொருள் திரட்டிக் கொண்டு கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிச் செல்கின்றான். அந்த உறுதிச் சொல்லை, நிறைவேற்றாமல் தவறிவிட்டால், “இரவலர் வாரா வைகல் பலவாகுக; யான் செலவுறுதகவே” என்று குறிப்பிடுகின்றான். கொடுத்து உவந்து வாழாத வாழ்க்கை, கொடிய துன்பமான வாழ்க்கை என்பது தமிழ்க் கருத்து.

சிலர் நாள் தோறும் பலர் தம்முடைய உதவியை நாடு தலைப் பேறாக -- சிறப்பாகக் கருதுவர். இரத்தல் எவ்வளவு துன்பமோ அதுபோலவே இரக்கப்படுதலும் சான்றோர்க்குத் துன்பம் தரும். இரந்து கேட்பவர்களுடைய மனம் நிறைவு பெறும்வண்ணம் ஈவதுதான் ஈதலுக்குச் சிறப்பு. அங்ஙனம் இன்றி, ஏதோ பெயரளவில் கொடுப்பதும் இரந்தவர் களுடைய வறுமை நோய்க்கு மருந்தாகாவண்ணம் வழங்குதலும் சால்பல்ல. இரந்தார் பேராசைக்காரராக இருந்தால் இரக்கப்படுதலும் தீது. அதுமட்டுமின்றி திளைத் துணை நன்றி செய்யினும் அதைப் பனைத்துணையாகக் கொண்டு மனநிறைவு அமையத்தக்க பண்பாடு இல்லாதவர்களாக இருப்பின் ஈதலில் மகிழ்ச்சி ஏது?

அதனாலன்றோ, உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்ததல்ல -- உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது என்று திருக்குறள் கூறுகிறது. சான்றோர், நன்மனமுடையோர் ஒருவேளை உப்பில்லாக் கூழே குடித்திருந்தாலும் அதை என்றைக்கும் எண்ணிப் பார்ப்பர். அக் கூழ் இட்டவர்க்கு நல்லது எண்ணுவர். நல்லது செய்வர். அற்பமனத்தர் கீழ்மக்கள் எவ்வளவு பெற்றாலும் பெற்றதைச் சுருக்கிப் பெறாததையே பெரிதுபடுத்திக் காட்டுவர். பெற்ற உதவிக்கு நன்றி செலுத்தும் இயல்பின்றி, பெறாது போனவைகளுக்குப் பகை காட்டுவர். ஆதலால், ஈதல் இழப்பே எனினும் வறியோர்க்கு ஈதல் வேண்டும். வறியோரினும் இன்றியமையாத் தேவை கிடைத்தவுடன் மனநிறைவு கொண்டு மகிழ்ந்து வாழத் தெரித்தவர்களே இரப்பவர்களாக வந்தால் ஈதல் இனிது இனிது! மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என்ற பெருவேட்கை யுடையவர்களாக இரக்கப்படுதல் தீதேயாம்.

இன்றைய உலகில் தன் தேவைகள் மட்டுமே தெரிந்தவர்கள் பெருகி இருக்கிறார்கள், கொடுப்பவர் சக்தி அறிந்து கேட்பவர்கள் இல்லை. கிடைத்தமட்டும் பார்க்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அதிலும் வறியவர்கள் மட்டும் இரப்பதில்லை. வாழ முடிந்தவர்களும் கூட இரக்கிறார்கள். கொடுப்பதன் மூலம் பெறுகிறவர்களுடைய இனிய மகிழ்ச்சி நிரம்பிய முகத்தைக் காண்பதென்பது இன்றைக்கு அருமையாகிவிட்டது. அப்படியே ஒரோவழி கண்டாலும் நீரின் மேல் சலனத்தைப் போல சில பொழுதேயாம். வாங்கிக் கொண்டேயிருக்கும் போது மகிழ்ச்சி. ஒருநாள் தடைபட்டாலும் மகிழ்ச்சி மறைந்து ஆச்சரியம் தோன்றும்.

இந்த உலகத்தில் எப்படிப் பலர் கேட்கக் கொடுத்து வாழும் வாழ்க்கையை இன்பம் என்று கருத முடியும்? அதனாலன்றோ திருக்குறள்,

"இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு." (224

என்று உலக நடையை அறிந்து ஓதுகிறது.

யாக்கை பொறுத்த நிலம்

"நாடென்ப நாடா வளத்தன" என்பது திருவள்ளுவர் வாக்கு ஒரு நாடு பல்வளமும் கெழுமிய நாடாக இருத்தல் வேண்டும். இயல்பாக வளம் தருகின்ற நாடாகச் சில அமைந்து விடுவதுண்டு. நீர்வளமும், நிலவளமும் உள்ள நாடுகள் மட்டும் வளமுடையனவாக இருப்பதில்லை. அந்நாட்டில் வாழும் மக்களுக்கும் வளத்திற்கும் தொடர்புண்டு. அதனாலன்றோ புறநானூற்றுப் புலவர், நாடு நாடாக இருந்தாலென்ன? காடாக இருந்தாலென்ன? கவலையில்லை. அந் நாட்டில் வாழும் ஆடவர்கள் மட்டும் நல்லவர்களாக - உழைப்பாளிகளாக - உத்தமர்களாக இருப்பின் காடும் நாடாகும் - பள்ளமும் மேடாகும் என்றார். ஒரு நாட்டின் வளத்திற்கும், வறுமைக்கும், எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அந்நாட்டு மக்களின் மனநிலையே அடிப்படையாக அமைகின்றது. கற்றோர் போற்றும் கலித்தொகையிலும்கூட மலைவாழ் மக்கள் அல்லன செய்து வாழ்தலின் மலைபடு வளம் சுருங்குகிறது என்று கூறப்பெறுகிறது.

ஒரு தாய், தான் பெற்றெடுத்து வளர்த்த அருமையான பிள்ளை புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறாள். அந்நோக்கத்தோடு வளர்க்கிறாள். ஆனால் அவன் தவறுகள் பல செய்து தண்டனைக்கு ஆளானான் என்ற செய்தியை அந்தத் தாய் கேட்டால், அவள் நிலை என்னாகும்; துன்பத்தால் துடிதுடிப்பாள் - உணர்விழந்து ஊக்கமிழப்பாள். அவள் உள்ளமும் உடலும் கொதிகலனாக மாறும். இந்த நிலையில் அவளிடத்தில் எப்படி ஆக்கபூர்வமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்: அதுபோல, நிலமகளும் ஓர் அன்னை, அவளுடைய மணிவயிற்றில் கோடானு கோடி மக்கள் தோன்றி வளர்கிறார்கள்-வாழ்கிறார்கள். இனிய பல நறுஞ்சுவை உணவுகளை ஊட்டி வளர்க்கிறாள் நிலமகளாகிய அன்னை. தன்னுடைய மக்கள் அன்போடும், பணிவோடும் ஒன்றுபட்டு. வாழவேண்டும் என்பதே நிலமகளின் விருப்பம். அதற்கு மாறாக, இவர்கள் தம்முள் மோதிப் பகை வளர்த்துக் கொண்டு, தம்முடைய வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதைக் கண்டும் கேட்டும் கலங்குகிறாள் - கவலை கொள்கிறாள். நிலவளம் வெப்பத்தன்மை அடைகிறது! ஆறாத் துயரத்தில் நிலமகள் அழுந்துகின்றமையின் காரணமாக, நிலமகளின் வளம் குன்றும் என்பது திருவள்ளுவரின் கருத்து. "குற்றமற்ற நிலையில் குறைவிலாது வளம் பெருக்கும் நிலம்கூட வளம் சுருங்கும், புகழற்ற உடம்புகளை நிலமகள் தாங்கும்பொழுது” என்று குறிப்பிடுகிறார். இசையிலா யாக்கை என்று குறிப்பிட்டது, சிந்தனைக்குரிய செய்தி. உயிருடைய ஒருவன் அன்பு காட்டுவான் அறஞ் செய்வான். புகழ்பட வாழ்வான். அஃதில்லையானால், உயிரற்றவன் என்பது தெளிவு. இக்குறிப்பினை இசையிலா யாக்கை என்ற குறிப்பின் மூலம் உணர்த்துகிறார். உயிருள்ள மனிதனால் நிலத்திற்குப் பயனுண்டு. உயிரற்ற பிணத்தைத் தாங்குதலால், நிலத்திற்குப் பயனில்லை என்பதைக் குறிக்க, பொறுத்த நிலம் என்று குறிப்பிட்டார். ஆக, மனிதர்கள் நல்வாழ்க்கையின் மூலம் தான் நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைய முடியும். இக் கருத்தினை,

"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (239)

என்ற குறட்பாவின் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.

செல்வத்துட்செல்வம்

லகியல், அருளால் வந்த விளைவு. இவ்வுலகத்தின் தோற்றமும், வளர்ச்சியும்கூட அருள் ஆக்கத்தின் பொருட்டேயாம். இவ்வுலகைக் கவிந்து எழிலும், இனிமையும் தரும் இயற்கை அருளின் சின்னம். இயற்கைக்கு எழிலும் வளமும் வழங்கும் வான் மழையே அருளின் பொழிவு. அருளென்னப் பொழியேலோர் எம்பாவாய்' என்பது மணிமொழி. இத்தகு அருட் செல்வம் பலவற்றுள்ளும் சிறந்ததாகும். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்வத்தைப்பற்றிய தவறான கருத்து மக்கள் மன்றத்தில் நிலவியது. அஃதாவது நிலம், வீடு, பொன் ஆகியவைகளையே செல்வம் எனக் கருதினர். அதனாலன்றோ இன்றையப் புற உலகில் செல்வம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அறிவுச் செல்வம், அருட் செல்வம் இரண்டும் செல்வம் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்க்கத் திருவள்ளுவர் முயற்சித்தார். அது செல்வம் மட்டுமல்ல. செல்வத்துள்ளும் சிறந்தது - தலையாயது என்று வலியுறுத்துகின்றார். பொருட் செல்வம் ஈட்டும் பொழுதும் துன்பம் தரும் - இழப்பிலும் துன்பந்தரும். அதுமட்டுமின்றி, பொருட் செல்வம் அருளோடு - அருள் உணர்வோடு உறவு கொள்ளாத பொழுது குவியும். பயன்படாதவர்களிடம் தேங்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெகுளி போன்ற குணக்கேடுகள் தோன்றத் துணைசெய்யும். அருட்செல்வமோ, எஞ்ஞான்றும் இன்பந்தருவது. உடையவருக்கும் இன்பம் தரும். மற்றோர்க்கும் இன்பம் தரும். அருட் செல்வத்தினால் - அருட் செல்வம் உடைமையினால் சான்றாண்மை வளரும்; புகழ் பெருகும். அருளுடையோர் நெஞ்சம் தண்ணென்றிருக்கும். அங்கு அன்பின் ஈரம், கருணையின் கசிவு, எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். இத்தகு அருட்செல்வம், பொருட் செல்வத்தைப் போல எளிதில் கிடைக்கக் கூடியதன்று. பலகாலும் முயன்று பெறவேண்டிய பெரும் பேறு. அன்பு நெறியில் பல்லாண் டொழுகியவர்களுக்கே அருள் உணர்வு அரும்பும். உலகியலில் பொருள் உடையார் பலர். அருளுடையார் அருமையினும் அருமை. எனினும், வள்ளுவர் காலத்திலேயே ஒரு பொய்வாதம் தோன்றியிருந்திருக்கிறது. செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் - அருளின் ஆக்கம் என்றெல்லாம் பிழைபடக் கருதி வந்திருக்கின்றனர். இதனைத் திருவள்ளுவர் கடுமையான குரலில் மறுக்கிறார். பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று இடித்துக் கூறுவதன் மூலம், மனிதனின் தகுதிப்பாட்டுக்கு, பொருள் உடைமையைத் திருவள்ளுவர் அளவுகோலாகக் கையாள விரும்பவில்லை. திருவள்ளுவர் மனிதகுலத்தை ஒன்றாக இணைத்து 'ஓருலகம் சமைப்பதையே இலட்சியமாகக் கொண்டவர். அத்தகைய இலட்சிய உலகத்தைப் படைப்பதற்கு அன்பும் அருளுமே இன்றியமையாத் தேவை. அவையே துணை செய்ய முடியும் என்று அவர் கருதினார். அந்த நம்பிக்கையில் தோன்றியதே திருக்குறள்.

வாழ்க்கையின் தொடக்க நிலை அன்பு. முழுநிலை அருள். இத்தகு அருள் உணர்வு துன்பத்தைக் கண்டால் துடிக்கும். துன்புறுத்தலுக்கு நாடு, இன மொழி வேறுபாடு ஏது? யார் துன்புற்றாலும், எவ்வுயிர் துன்புற்றாலும், இதயங்கலந்த அருள் உணர்வோடு துன்பம் துடைப்பவனே மனிதன். அதனாலன்றோ, வாடிய பயிரிலிருந்து, வாட்டமுறும் மக்கள்வரை, வாட்டம் நீக்கி வளம் சேர்க்கும் வான்மழை அருளாயிற்று! பற்றுக் கோடின்றி பாரில் உள்ள உயிர் அனைத்தும் துய்த்து வாழ்ந்து தூநெறிசேரத் துணைநிற்கும் இறைவனின் கருணை அருளாயிற்று. பொருட் செல்வம் தேடி அலையும் மனித உலகம் உடன் கருணையையும் நோக்கி அலையுமானால், பெரும் பயன் பெறும்; அமைதி நிலவும்: வந்த காரியமும் நிறைவுறும்.

ஈர நெஞ்சினர் இறைவனைக் காண்பார் என்றார் அப்பரடிகள். உமிழ்நீரால் தொண்டையை நனைத்து உலாவருதல் போல, பருகும் நீரால் வயிற்றை ஈரப்படுத்துவது போல, காய்ச்சற் பாட்டில் திகழும் இவ்வுடலை. நீரில் அமிழ்த்தி நனைப்பதுபோல, நெஞ்சத்தையும் இனிய அருளில் நனைக்க முயற்சிப்போமாக!

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை!

மனித சமுதாய வாழ்க்கையின் இரட்டை நாடிகள் பொருளும் அருளும் ஆகும். இவை இரண்டும் முரண்பட்டன அல்ல. இணைந்த இரட்டைகளாம். ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றற்கொன்று அரணுமாகும். ஒன்று பிரிதொன்றைக் கொண்டு வந்து சேர்க்கும். இவ்விரட்டை எங்காவது பிரிந்து காணின், அது பொருளுமன்று; அருளுமன்று. அறியாதார் சிலர், அருள் உணர்ச்சியால் பொருளை இழக்க நேரிடும் என்பர். பொருள் இழத்தலே, மேலும் பெறுதற்குரிய வழி! ஆனால், சூதில் இழத்தல் இதில் சேராது. அருள் கருதி, பசித்தவர் பசிப்பிணி நீக்கப்பொருளை இழப்பவர் பொருளை இழப்பதில்லையே! இதனை வள்ளுவம், பொருள் வைப்புழி என்றது.

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை. இது வள்ளுவத்தின் தெளிந்த முடிபு. ஆனால், இன்று நாட்டில் பொருள் என்பதற்குப் பிழையான கருத்தே கொள்கின்றனர். பொருள் என்பது இன்று நாணயமாற்று விகிதத்தில் நம்மிடையே நடமாடுவதன்று. நாணயத்திற்குள்ள மதிப்பு அதில் கலந்திருக்கிற உலோகத்தைப் பொருத்ததன்று. ரூபாய் நோட்டுக்குள்ள மதிப்பு, அது செய்யப்பட்டுள்ள தாளுக்குரியதன்று. அதனுடைய மதிப்பு, அதற்குப் பின்னணியாகவுள்ள மனிதர்களுடைய அனுபவத்திற்குள்ள பொருள்களை வைத்தேயாகும். இன்னும் தெளிவாகக் கூறினால் அப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மனிதன் செலவழித்த அறிவு - உடல் உழைப்புக்களை மையமாகக் கொண்டதேயாகும். பொருள்களை உற்பத்தி செய்வதற்குரிய உழைக்கும் சக்தியை எவர் உடையவராக இருக்கிறாரோ அவரே அந்த அளவுக்குப் பொருள்களையோ நாணயங்களையோ, பெறவும் அனுபவிக்கவும் உரியவர் என்ற தியதியே உயர்ந்த ஒழுக்கமான நியதி. இந்த நியதி நின்று நிலவினால் நீதியும் நின்று நிலவும். இன்று நம்மிடையில் இந்த நியதியுமில்லை; நீதியுமில்லை! உழைப்பென்றால் இன்னதென்றே அறியாத ஒரு நூறு பேர்களிடம் பல நூறு கோடியல்லவா முடங்கிக் கிடந்திருக்கிறது! இந்த முடக்கத்தை உடைத்து, மக்கள் மன்றத்திற்கு மடைமாற்றிய பெருந்தகைமை சான்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த நாட்டின் வரலாற்றில் புதுயுகத்தைத் தோற்றுவித்து, புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

பொருள் என்பது மனிதன் உண்டு, தின்று, உடுத்தி அனுபவிக்கத் தக்கனவேயாம். உடல் - உயிர்க்கூட்டு நிலைபெற்றியங்க இந்த எந்திர வாழ்க்கைக்கும் எரிபொருள் தேவை. அதுவே தம் உணவு. உணவில்லாதார், இவ்வுலகத்தில் இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடுதல் இயலாது. இதனையே திருவள்ளுவர் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றார். இவ்வுலகம் என்பது அண்மைச் சுட்டு. இவ்வுலகம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். பொருள் பெற்று கூடித் துய்த்து மகிழ்வதுதானே குடும்பம்! அஃதில்லையேல் குடும்பம் ஏது? அதனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் கூறலாம். அடுத்து அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்று கூறுகிறார் அவ்வுலகம் என்பதை வீடு என்று பொருள் கொள்வது மரபு. அங்ங்ணம் பொருள் கொள்வதில் தவறில்லை. ஆயினும், இந்த 'அவ்வுலகம்' என்பது கேள்விக்குறி! அஃது அறிவொடு படாதது. அதனால் ஆய்வு இருக்கவே செய்யும், அதைவிடச் சிறப்பாக அருளின் பொருள் விளக்கமாக விளங்கும் சிறந்த பொருள் ஒன்று கொள்ளமுடியும். அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்! பொருளுடையான் அருள் உணர்ச்சியுடையவனாக - மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறிவிடுவானானால் அவனுக்குச் சேய்மையில் விளங்கும் சமுதாயம், அவனை நினைத்துப் பார்க்கமாட்டாது. அவனை ஒரு பொருளாக மதிக்கமாட்டாது. சமுதாயத்தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சு இருக்காது. ஒரோ வழி இருந்தாலும் அது பேணுதற்குரிய பெருமையைத் தராது; சிறுமையையே தரும் அவ்வுலகம் என்பதற்குச் சமுதாயம் என்று பொருள் கொள்வதே ஐயத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகவும், அருளுடைமை விளக்கத்தின் மையமாக இருக்கிற சமுதாயத்தைப்பற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இது சிறந்த கருத்தாகும்.

"அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலக மில்லாகி யாங்கு." (247)


பொருளைப் போற்று


திருவள்ளுவர். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தது. எதார்த்த உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர். ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிகமிக இன்றியமையாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்டதன்று. குழப்பமானது மன்று மிக மிகத் தெளிவானது. பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும், சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே! மனிதன் அடையக்கூடிய பேறுகள் நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றுள் நடுவனதாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ்நூல் முடிபு. அதனாலன்றோ திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடு பற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன்முயன்று செய்யக் கூடியவை - பெறக் கூடியவை. ஆனால் வீடு, அறம் பொருள் இன்பத்தை முறையாகச் செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனிவியல் அமைக்கவில்லை. எனினும் ஒரோ வழி குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஒரு பொருளியல்துறை அறிஞர். பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவைபற்றித் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார். வறட்சித் தன்மையுடைய மாயா வாதம், பௌத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கியபிறகுதான் தமிழர் வாழ்வியல் கெட்டது: வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது. இந்த நிலையினை உணர்ந்த தமிழக சிவ நெறிச் சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர். "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்" என்பது மாணிக்கவாசகரின் வாக்கு, "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்" என்றும், "பொன்னானாய், மணியானாய்" என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.

பொருள் உலகியலின் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர் பொருளைப் போற்ற வேண்டும் என்று கூறுகின்றார். பொருளைப் போற்றுதல் என்றால், பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. பொருளைப் பாதுகாத்தல் என்பதுதான் பொருள். பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், ஈத்துவந்து மகிழ்தல் ஆகியன செய்யாமல் பூட்டி வைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லுக்கு நிறைந்தபொருள் உண்டு. போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துக்களும் அடங்கும்.

"பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள" என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற் குணம், பொருளின் மதிப்பினை - சிறப்பினை உள்ளவாறு உணர்தல். பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதேயன்றிக் குறையும் இயல்புடைய தன்று. பொருட் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீருற்றிச் சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பேயாகும். உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும். அதனாலன்றோ, அப்பரடிகள், "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றார். ஏரிக்குக் கரைகட்டித் தண்ணிரைக் காப்பதுபோல், பொருளுக்குச் சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கனம் என்றால் கஞ்சத்தனம் என்று பொருளல்ல - அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது. ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவதில்லை. மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்துள்ள வாய்ப்புக்களை இழக்காமல் முறையாகப் பயன்படுத்திப் பொருளிட்ட வேண்டும். வாய்ப்புக்களை இழப்பதும் கூடப் பொருள் இழப்பேயாகும். அதுபோலவே ஒரு களம் - அதற்குப் பயன்படுத்தக்கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் சட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்ட வேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும். பொருள் இழப்பு ஒற்றையல்ல - அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச் சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.


"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் "புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்தில் வைத்து விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துதற்கேயாம்.


திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்' அதிகாரத்தை துறவற இயலில் வைத்துள்ளார். ஆனால், புலால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்கமன்று என்று திருவள்ளுவர் கருதினார் போலும் எனக் கருதவும் இடமுண்டு. திருவள்ளுவர் இல்லற இயலிலும், குடியியலிலும் புலால் உண்ணாமையைக் கூறவில்லை. துறவிகள் அல்லாதார் புலால் உண்ணுதலுக்கு உடன்பட்டார் என்பது நமது கருத்து. தற்போது உலகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள உணவுச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வு புலால் உண்ணுதலைப் பெருக்குதல் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றைய அறிஞர்களின் கருத்து இரண்டாயிர மாண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் சிந்தனை! ஆனாலும், துறவிகள் புலால் உண்ணக் கூடாது என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்து. இன்றைய உலகியலில் உயிர்க்கொலையை அடியோடு எதிர்த்த புத்தரின் வழிவந்த பௌத்தத் துறவிகள் புலால் உண்ணலில் முதலிடம் வகிக்கிறார்கள். அருளொழுக்கத்தின் தாயகமாகிய தமிழகத்திற்கு அண்மையில் வந்திருந்த திபெத்தின் பௌத்தமதத் தலைவர் தலாய்லாமா இனிமேல் புலால் உண்பதில்லை என்று நோன்பெடுத்துள்ளார். துறவிகளின் வாழ்க்கைக் கடமை புறநிலைத் தொடர்புடையது மட்டுமன்று. உள்ளுணர்வு சார்புடையதுமாகும். சிறப்பாக அவர்கள் இதயத்தில் அருளுணர்வு இடம்பெற வேண்டும். அருள் என்பது யார் மாட்டும், எதன் மாட்டும் விருப்பு, வெறுப்புக்களின் கலவையில்லாத மாசற்ற பரிவும் பாசமும் காட்டுதலாகும். இத்தகு அருளுணர்வுடையோர் எங்ஙனம் கதறக்கதறக் கழுத்தையறுத்து இரத்தம் சொட்டச் சொட்ட இரக்கமின்றிப் புலாலை உண்பார்கள்? அப்படி உண்பவர்களை எங்ஙனம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்: என்று வினவுகின்றார் திருவள்ளுவர். "துறவற உலகிற்கு" அருளாட்சியும், இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன. இவ்விரு வேறு உலகமும் தமக்குரிய அருளாட்சியையும், பொருளாட்சியையும் போற்றுமாயின், பொருளால் அருள் வளரும் - அருளால் இன்பம் பெருகும்!

"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை. ஊண்தின் பவர்க்கு."

(252)

எது தவம்?

திருக்குறள் ஓர் ஒழுக்க நூல் - அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட - நடைமுறை சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. "வாழ்வாங்கு வாழ்தல்" என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்கனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது. சைவ நாயன்மார்கள் இத்தகு கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவியனவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதிகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத - பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளே உண்டு. இங்கு விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலே யாகும். துறவறம் அல்லது தவவாழ்க்கை என்றால் கடமை களினின்றும் விடுதலை பெறுதலல்ல. கதே என்ற தத்துவ ஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடி விடுவதன்று. உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் வீழாமல் - வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.


திருவள்ளுவர் துறவற இயலில் 'தவம்' என்ற அதிகாரத்தில்,

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு”

(266)

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்ற வர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙனம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டும் பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று ஆழமாக - விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது. "தம் கருமம் செய்வார் தவம் செய்வார்' என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும். மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும் கேடு செய்கிறார்கள். இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து, மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, கடமைகளைச் செய்வதன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தித் தகுதிப்படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து பாவத்தை விளைவித்துக் கொள்ளுகின்றனர். ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் 'தவம்' என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் தமது மனைவி மக்கள் சுற்றம் தழுவிப் பாதுகாத்து வாழ்தல் கடமை.துறவறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள் நன்னெறி நின்றொழுகி நல்லின்ட்த்தோடு வாழ சிந்தனை யாலும் செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி, உலகியலை ஒழித்த தவம் என்று பொருள் கொள்ளுதல் சிறப்புடையதன்று.


"கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது" என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

‘கடமையே மிகச் சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறதுட என்று லக்கார்டயரும்,

'கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்' என்று கெய்லரும்.

கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும் மனத்தையும் பலவீனப்படுத்தித் துய்மையான திவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது என்று ட்ரயான் எட்வர்ட்ஸ் என்பாரும்,

'உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி' என்று பேகனும் பேசியிருக்கின்றனர்.

பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும் தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுவதும் பரக்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப்படுத்தும்போது, "மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்" என்று கூறுவதாக சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந் தின்புறத்தக்கது.

ஆதலால், திருக்குறள் காட்டும் தவம், தத்தம் கடமைகளைச் செய்தல்; அவம் கடமைகளைச் செய்யாதொழித்துப் பிறவற்றைச் செய்தல்.

காரணம் என்ன?

ந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர். வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள்தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாகவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது. பலர் தோல்வியடைகின்றனர். இந்த வெற்றி தோல்வியின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பனவாகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந்துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்துக் கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின - தோன்றுகின்றன. இந்த அவல நிலை பற்றிய ஆய்வு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் - பொருளியல் வல்லுநர் - நடைமுறைக்கு இயைந்த சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர்.

செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாராகப் பலரும் இருப்பதற்குத் திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது - புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத் தினும் ஆன்ற சிறப்புடையது. எனினும் வள்ளுவரை விளக்க வந்தவர்கள் அவர்தம் கருத்துக்கு மாறாக. பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளையே கூறி, அவருடைய புதுமைக்குத் திரையிட்டனர். இடைக் காலத்தில் செல்வம், ஆதிக்கம் ஆகியவற்றோடு இறுகப் பிணைத்துக் கொண்ட சமயக் கணக்கர்கள் செல்வம் முன்னைத் தவத்தின் பயன், வறுமை முன்னைத் தவமின்மையின் பயன் என்று மயக்க உணர்வோடு கூறி வைத்தனர். அதன் காரணமாகப் பொது மக்களிடத்தும்கூட செல்வம் முன்னைப் புண்ணியத்தின் பயன் - வறுமை பாவத்தின் பயன் என்ற கருத்து வேரூன்றி நிலவியது. திருவள்ளுவரோ, செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் அன்று என்பதை உறுதியாக மறுக்கின்றனர். பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள என்று கூறுகின்றார். செல்வம் அற்றவர்கள், முயற்சியால் செல்வம் உடையவராக முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளுகின்றார். 'பொருளற்றார் பூப்பர் ஒருகால்' என்று குறிப்பிடுகின்றார். ஆதலால் திருவள்ளுவர், செல்வம் உடைமைக்கும், இன்மைக்கும் முன்னைத் தவத்தையோ, பயனையோ காரணமாக ஒத்துக் கொள்ளவில்லை.

"இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்."

(270)

என்பது குறள்.

நோன்பு முறை பலப்பல. எல்லா நோன்புகளினுள்ளும் மிகச் சிறந்தது செல்வத்தின்கண் உள்ள பற்று நீங்கி, அவ்வழி தான் பெற்ற செல்வத்தைப் பலருக்கும் வழங்கி அவர் தம் வறுமையை மாற்றுதல். அதனாலன்றோ, ஈகையிலுங்கூட,

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்"

(225)

என்று கூறுகின்றார்.

புறநானூற்றிலுங்கூட, கடலுண்மாய்ந்த இளம் பெருவழுதி, இவ்வுலகம் உள்ளதாக விளங்குவதற்குப் பல்வேறு காரணங்களை வகுத்துக் கூறிவிட்டு இறுதி முடிவாக, 'தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்று கூறுகின்றார். அதாவது, தனக்கென முயற்சி செய்யாது பிறருக்கென முயன்று பொருள் ஈட்டி வாழ்விப்பான் உள்ளமையானே, உலகம் இருக்கிறது - நடைபெறுகிறது - இயங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.

அகநானூற்றிலுங்கூட தலைமகள், தன் தலைவனுக்குத் தன்மீது உள்ள, காதலைவிடப் பொருளின்மீது காதல் அதிகம். ஆதலால், பொருள்வழியிற் பிரிந்து சென்றவன் திரும்பி வருவானோ மாட்டானோ என்று ஐயுறுகின்றாள். தலைமகனுக்குப் பொருள்மீது காதல் மிகுந்தமைக்குக் காரணம் தான் நுகர்ந்து வாழவேண்டும் என்பது அன்று. இல்லாதவர்களுக்கு வழங்கி, அவர்களது வறுமையைத் தொலைக்கவேண்டும் என்பதேயாகும் என்றும் அவள் கூறுகின்றாள்.

இரப்போர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லர நெஞ்சம் வலிப்ப.

"நம்மினும் பொருளே காதலர் காதல்" என்பது அகநானூறு. இங்கு, இயைவது என்று குறிப்பிட்டது பொருளுடைமையின் தகுதி மட்டுமன்று. அப்பொருளை ஈட்டக்கூடிய ஆற்றலையும் உட்படுத்தி நிற்கிறது. புறநானூறு தெளிவாகக் கூறுகிறது. "செல்வத்துப் பயனே ஈதல்” என்று. ஆதலால், செல்வத்தை ஈட்டுதலும், அச் செல்வத்தைப் பிறர்க்கு வழங்குதலும் ஒரு நோன்பாகும். இந்த நோன்பைச் செய்கின்றவர்கள் - நோற்பவர்கள் சிலரேயாக இருக்கிறார்கள். எனவே இலர் பலராக இருக்கிறார்கள். இந்த நோன்பை நோற்பார் பலரானால், செல்வம் உடையரும் பலராவார்கள். இதுதான் நியாயமான உரை. இன்றையப் பொருளியல் சிந்தனையுலகும், புதுமை உலகும் தெளிவாகப் பேசுகின்றன. "மனிதன் ஒரு சமுதாய உறுப்பினன்; அவனுடைய ஆற்றல் சமுதாயத்தின் பொதுவுடைமை. அவனுடைய ஆற்றலால் விளைகின்றவை அனைத்தையும் அனுபவிக்கச் சமுதாயத்திற்கு உரிமையுண்டு” என்பது. ஒருவர் தனது ஆற்றலால் செல்வம் ஈட்டினாலும் அவர் ஓரளவே அனுபவிக்கலாம். எஞ்சியதைச் சமுதாயத்திற்குத் தருதல் வேண்டும் என்று இன்றைய நியாயம் கூறுகிறது - நீதி பேசுகிறது - சட்டம் வழி வகுக்கின்றது. இக் கருத்தினையேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் செல்வத்தை முயன்று ஈட்டிப் பலருக்கும் வழங்கும் நோன்பை நோற்பார் பலரானால் செல்வம் உடையாரும் பலராக இருப்பார்கள் அங்ங்ணம் நோற்பார் சிலராயின் வறியவர் பலராவர் என்று தெளிவாகக் கூறினார்.

திருக்குறளைக் கீழ்க்கண்டவாறு இணைத்துப் பொருள் கொண்டு சிந்திக்கவும்.

"இவர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.”

(270)

இக்குறட்பாவில், "நோற்பார் சிலர்” என்று ஒரு பகுதியும், "பலர் நோலாதவர் இலர் பலர்" என்றும் கொண்டு கூட்டிப் பொருள் காணுதல் சாலும். குறட்பாவில் இலர் வெளிப்படையாகச் சொல்லப் பெற்றுள்ளது. உடைமை உய்த்துணர்விக்கப் பெற்றுள்ளது. நோற்பார் என்றும், சிலர் என்றும் இருப்பதால், நோற்பாண்ர உயர்வு கருதிய ஒருமையாக ஏற்றுக் கொண்டு பொருள் காணுதல் வேண்டும். அவ்வழி நோற்பாரும் சிலரும் ஒருவரேயல்லர்; நோற்பார் வேறு; சிலர் வேறு. நோலாதவர் வேறு; பலர் வேறு. உலகியலுங்கூட ஒரு மனிதனுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனைச் சார்ந்த சமுதாயம் பொறுப்புள்ளதாகிறது என்ற வழக்கின் அடிப்படையையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேற்கண்ட உரை துறவியலில் வரும் தவம் என்ற அதிகாரத்திற்குப் பொருந்துமோ என்ற ஐயப்பாடு சிலருக்குத் தோன்றலாம். பொருந்தும் - முக்காலும் பொருந்தும் என்பதே நம்முடைய கருத்து. 'தவம்' ஒழுக்கத்தின் முதற்படி. பொருட் பற்று நீங்குதலேயாம். அதனால், பொருந்தும். தவமுடையார்க்குப் பொருள் ஏது என்ற வினா எழலாம். தவமுடையார் தாமே நேரில் பொருள் ஈட்டாது போனாலும், அவர் தம் தவத்தினால் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் - நன்மைகளைப் பெற்றவர்கள் காணிக்கை தருவார்கள். அங்ஙனம், சாதாரண மக்களும் மன்னர்களும் கூடத் தந்துள்ளனர் என்பதை நமது நாட்டு வரலாறே பேசுகின்றது. அவ்வழித் தோன்றியவையே அறநிலையங்களும், திருமடங்களும். அங்ஙனம் தரும்பொழுது, அவற்றையும் வழங்கிப் பிறரை வாழ்வித்துத் தான் வறியவராக வாழ்தலே தவத்திற்கு அழகு. இக்கருத்தினை அப்பரடிகள், "கந்தை மிகையாம் கருத்தும்" என்று பேசுகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகளும்,

"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கடும் அன்பினில் கும்பிடலே யன்றி
விடும் வேண்டார் விரலின் விளங்கினார்."

என்றும், அடுத்து,

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணியலா தொன்றில்லை

என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆதலால், தவத்தினை மேற்கொண்டவர்களாவது தமக்குக் கிடைத்த செல்வத்தைப் பிறருக்கு வழங்கி மற்றவர்தம் வறுமையை மாற்றி - அல்லல் நீக்கி - அவலம் போக்க சிவ சிந்தனையில் ஈடுபட வேண்டியது அவசியம். எனவே, இவ்வுரை முற்றிலும் பொருந்துவதேயாகும்.

மழித்தலும் நீட்டலும்!

தவம் ஒரு சோதனைப்பட்டறை. பட்டறையில் இடப்பட்ட பொன் துய்மை பெற்று ஒளிர்தல் போல, தவத்தில் ஈடுபட்டோர் துன்பங்களால் தூய்மைப்படுத்தப் பெற்று, ஒளி பெற்றுத் திகழ்தல் வேண்டும். துன்பம், இருவகையது. ஒன்று உடல்வழி வரும் பசி, நோய் முதலியன. பிறிதொன்று உயிர்வழி விருப்பு வெறுப்புக்களால் வரும் உணர்வுகள் ஆசைகள் முதலியன. இவ்விருவகைத் துன்பங்களையுமே கவலையின்றி, மகிழ்வுடன் ஏற்று அனுபவித்துத் திருவருளை நினைந்து வாழ்தல் தவம். அதனாலன்றோ திருவள்ளுவர், "உற்ற நோய் நோன்றல், உயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு" என்று தெளிவாகத் தேற்றேகாரம் போட்டு அறிவுறுத்தினார். உற்ற நோய் நோற்றல் முதல் வகை. அந் நோயிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புதலும் விருப்பம், முயற்சி ஆகியவற்றின் காரணமாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் பிறிதொரு வகை.

தவம் செய்யும் ஒரு பழக்கம் உடற் பழக்கம் - உயிர்ப் பழக்கமும்கூட உடலையும், உள்ளத்தையும் முறைப்படி பழக்குதல் எளிதன்று. கிண்ணத்தில் தண்ணிரை நிரப்பி எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல, கிண்ணம் ஆடினாலும் தண்ணிரும் அலையும்; வெளியே சிந்தும். தண்ணிர் அலைந்தாலும் கிண்ணம் ஒரோ வழி ஆடும். ஓடுவதோ ஓட்டம். இந்த அமைப்பில் ஓடவும் வேண்டும். கிண்ணத்தை. ஆடாமல் பாதுகாக்கவும் வேண்டும். அதனுள் இருக்கும் தண்ணிர் அலைந்து வழியாமல் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகையத்ே தவம் செய்யும் முயற்சி. நாம் வாழும் உலகியல் ஆசைகளால் நிறைந்து அலைவது. இதில் உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாக்க வேண்டும். உடல் கெட்டாலும் உயிர் கெடும் - உயிர் உணர்வு கெட்டாலும் உடல்கெடும். ஆதலால், உடலை, உயிர்நிலைப் பாதுகாப்பு என்று கருதுவதில் தவறில்லை. உடல்நிலை உயிர் உணர்ச்சி களைத் தோற்றுவிக்கும் நிலைக்களன். உடலியற் கூறுகளுக்கு ஏற்றவாறு, உயிர் உணர்ச்சிகள் தோன்றும் - வளரும். அதனாலன்றோ தவம் செய்வோர் உடல், ஆசைகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களனாக விளங்குவதை விரும்புவதில்லை.

ஆதலால், உடலைத் தவத்தால் வருத்துவர். உடல் அழகினைக் கெடுத்துக் கொள்வர். இவ்வழித் தோன்றியதே மழித்தலும், நீட்டலும் ஆகிய செய்முறை. ஒரோ வழி நீட்டல்மட்டும் தன் இயல்பாகவே நிகழ்தல் உண்டு. அதாவது தன்னையும், தன்னுடைய உடலையும் மறத்தலின் காரணமாகத் தோன்றுதல். எனினும் இங்கு நீளுதல் என்றின்றி நீட்டல் என்றே திருவள்ளுவர் வினைவழிப் படுத்திக் கூறியிருத்தலான் செய்முறை என்றே கொள்ளல் வேண்டும்.

திருவள்ளுவர் இச் செய்தவத்தின் முறையை மறப்பதுபோலப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக இருப்பது.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகு
பழித்தது ஒழித்து விடின்"

(280)

என்ற குறள். திருவள்ளுவர் உலகியல் முழுவதும் கண்டு உணர்ந்த சான்றோர் ஆதலின், அவர் முறையாகவே கூறியுள்ளார். அவர், மழித்தலையும் நீட்டலையும் முழுதுமாக மறுக்கவில்லை. அச் செயல் முறையைத் தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திப் பழக்கத்திற்குச் சாதகமாகக் கைக் கொள்வதற்கு உடன்படுகிறார். தவம் முடிவல்ல - முயற்சியே. இம் முயற்சியில் வெற்றியடைவோர் சிலர், தோல்வியுறுவோர் பலர். ஆனாலும் தவம் செய்வதை மனப்பூர்வமான இலட்சியமாக ஏற்றுக்கொண்டு, தவம் செய்யும்பொழுது ஏற்படும் வெற்றி தோல்விகள் வேறு.

அந் நிலையில் ஏற்படும் தோல்விகளை, தவறுகளைப் பற்றியதல்ல திருவள்ளுவரின் கவலை. தவம் செல்வாக் குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உல்கியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, உலகியல் வாழ்க்கையை இலட்சியமாகக் கொண்டு அதனையடைய தவத்தினை ஒரு கருவியாகத் திட்டமிட்டு வஞ்ச மனத்தோடு மேற்கொள் வாரைப் பற்றியதே திருவள்ளுவரின் கவலை. இதனை,

"வலியின் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புவியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"

(273)

"தவம்மறைந்து அல்லவை செய்தல் புதர்மறைந்து
வேட்டுவன் புன்சிமிழ்த் தற்று"

(274)

ஆகிய குறட்பாக்களில் வருகின்ற இரு உவமைகளும் திட்டமிட்டுச் செய்கின்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாக இருப்பது அறிந்துணரத் தக்கது. ஆதலால், உலகியல் இன்பங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தவ வேடம் பூண்டாலும் அதாவது தவம் செய்வதற்குத் துணை செய்யக்கூடிய மழித்தல், நீட்டல் ஆகிய சாதனங்களை மேற்கொண்டாலும் தாம் விரும்பிய - விருப்பு வெறுப்புகளுக்கு ஆளான உலகியலையே செய்வதால், திருவள்ளுவர் அவர்களை நோக்கி அறிவுறுத்துகின்றார். இன்றைய நிலையை நுண்ணியதாக உணர்ந்தவர்களுக்கு இந்த உரை விளங்கக் கூடும்.

உலகம் பழித்ததை ஒழிக்கவன்றோ தவம். அம்முயற்சிக்குரிய சாதனமல்லவா மழித்தலும், நீட்டலும். அங்ங்ணமிருக்க உலகு பழிப்பதை ஒழிக்க விருப்பமேயின்றி அதனைச் செய்வதையே இலட்சியமாகக்கொண்டு சாதனங்களை மேற்கொண்டவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கூறுவது. உலகு பழிப்பதைச் செய்து கொள்வதற்குரிய சாதனம் அல்ல தவ வேடம். உலகு பழித்ததை ஒழித்துவிடின் சாதனமே வேண்டாம் என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகின்றார்.

உலகம் பழித்த தொழித்துவிடின் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்பதே திருவள்ளுவரின் தெளிவான கருத்து.

அருளும் பொருளும்

மானிட வாழ்க்கை அருள் நலத்தால் சிறக்கவேண்டிய ஒன்று. அருளின்பம் அன்பினால் பெறக்கூடிய ஒன்று. ஒன்றினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டப் பெறுவது அன்பு. யாதொரு குறிக்கோளுமின்றிக் காட்டப் பெறுவது அருள். இறைவன் உயிர்கள் மாட்டுக் காட்டுவது அருள். உயிர்கள் அருளைப் பெறுவதற்கு இறைவன்பாற் காட்டுவது அன்பு. இதனை,

"...........யாமிரப் பவை
பொன்னும் பொருளும் போகமு மல்ல
அருளும் அன்பும் அறனும் மூன்றும்."

என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர்களுக்கு யாதொன்றும் எதிர்பாராமலே அருள் வழங்குகின்றான். அதனாலேயே அவனுக்குப் பித்தன்' என்று பெயர் வந்தது. "குறியொன்றும் இல்லாத கூத்து” என்று திருவாசகம் பேசுகின்றது.

இறை நெறி நிற்போரும் அருள் நலம் கனிந்தவர்களாக இருப்பர். தேனிலோ, உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவதுபோல இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து, அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள். அவர்களே அந்தணர்கள் - துறவிகள் - சான்றோர்கள் - அருளாளர்கள். இத்தகு சிறப்புடைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதன்று. பலர் அன்புடையராதல் உண்டு. மக்களிடத் திலும், இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்பு, அருள் கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான். பொருளைக் கவர்வதற்குத் திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று - நடிப்பு, அது கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னது போல, வெள்ளாட்டுக்கு இரை வைக்கும் மனிதர்களின் கருணையை ஒத்தது. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது - நிலை பெறாது. அவர்கள் தாம் கருதியது முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர். அதாவது தம்மோடு பழகுகின்றவர் களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். காலம் வாய்க்கும்போது கருதியதை முடித்துக் காற்றெனக் கடுகி விடுவர்

அத்தகையோரிடத்து ஒரு பொழுதும் அன்பு இருந்ததில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான். நேர் வழியில், உழைப்பால் பொருளிட்ட முடியாதவர்கள் இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும்.

"அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்”

(285)


துறவும் துய்த்தலும்

னித குலத்தில் ஏக்கம் பெரும்பாலும் ஏன்? முழுமையும்கூட பொருளியலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. பொருள், உலக இயக்கத்தின் அச்சாணியாக அமைந்து விளங்குகின்றது. மண்ணோடு தொடர்புடைய வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருள் தேவை. அதனால் அன்றோ, ஞானநிலையில் நின்ற மாணிக்க வாசகரும், முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார். அருள் பழுத்த நெஞ்சினராய் அவர் எடுத்த திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்கும் பொருள் வேண்டுவதாயிற்று. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக மிக இன்றியமையாது வேண்டப்படுவதாகிய இப்பொருளினிடத்து மக்களுக்குப் பற்றிருத்தல் இயற்கையேயாம் - முரண்பாடன்று. எனினும், பொருளை நாம் அடையும் வழிவகைகளில் நன்றும் தீதும் தோன்றுகின்றன. பிறர் பொருளை விரும்புதலும், வழி தவறிய முறைகளில் பொருள் பெறுதலும் நேரிய வழியாகா.

துறவற இயலில் திருவள்ளுவர் கல்லாமையை வைத்திருக்கிறார். முறை வைப்பு திருவள்ளுவர் வைத்ததா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக் கிறது. அதன் முடிவு எப்படியாயினும், ஆகுக. திருவள்ளுவர் அதிகார முறைவைப்பைச் செய்யாமல் அவருக்குப்பின் வந்தோர் எவரேனும் செய்திருப்பாரேனும் முறை வைப்புக்கும் பொருள்காண வேண்டுமல்லவா? துறவி பொருட் பற்றிலாதவர்; பொருள் தேடும் முயற்சியினின்றும் தன்னை விடுதலை செய்து கொண்டவர். அத்தகைய வாழ்வில் களவுக்கு இடமேது? களவினும் இருவகையுண்டு. வறுமையின் காரணமான ஏற்படும் களவுணர்ச்சி ஒருவகை. பொருள் வந்தடைந்தபின் அதைப் பாதுகாத்துத் தமக்கே அல்லது தம்மைச் சார்ந்த ஒரு சிலருக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் களவுணர்ச்சி பிறிதொரு வகை. இவற்றில் முன்னையது பெருங்குற்றமன்று - மன்னித்தற் குரியது.

துறவிகள் சான்றோராக வாழ்வர். பலருடைய நலனுக்குப் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டியவர்கள். அதன் காரணமாகப் பொது மக்கள் தமது ஆன்ம நலன் உள்ளிட்ட பெருநலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுத் துறவிகளிடம் (தமக்குரியனவற்றை உரிய போழ்து செய்வார் என்று கருதி) நம்பிப் பொருளைக் கொடுத்து வைத்தல் உண்டு. பின்னர், தரையில் ஓடிய நீர், தரையினை ஈரமாக்குதல் போல, தீரத் துறவாதார் கையில் பொருள் புழங்கினாலும், பொருள்வழிப் பற்று அவர்களைச் சாரும்; அதுபோழ்துதான் துறவுடையவர்களைச் சார்புடைய பெருநிறுவனங்கள் தோன்றுகின்றன. நிறுவனங்களின் தொடக்கம் அன்பு, அருள், துறவு ஆகியவைகளின் வழியதாகத் தோன்றிய பொதுமக்களின் நம்பிக்கை காலப்போக்கில் இது தலைகீழ்ப் பாடமாகி வரலாறு கறைபடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்படி ஒரு நிறுவனம் தோன்றியது. தோன்றுதற்குக் காரணமாக இருந்தவர் தமது கடைசிக் காலத்தில், அந்நிறுவனத்தைத் தம்முடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு (கொள்கைவழி உறவல்ல - குருதிவழி உறவு) எழுதி வைத்துவிட்டார். அறநிலையங்களின் அடிப்படை நம்பிக்கையேயாகும். ஆதலால் துறவு வழியில் பொருள் சேரும். அங்ங்னம், சேர்வதியற்கை. அங்ங்ணம் சேர்ந்த பொருளை அதாவது, பிறர் நலனுக்காகத் தம்மிடம் விடப்பெற்றிருக்கும் பொருளைத் தமக்காக்கிக் கொள்ளுகின்ற கீழ்மையைத் துறவற இயலில் 'கள்ளாமை' என்ற அதிகாரத்தின் மூலம் கடிந்துரைக்கின்றது திருக்குறள்.

பாபிலோனியாவில் ஓர் அரிய அனுபவ வாக்கு உண்டு. “எவனொருவன் தன்னுடையதை உன்னுடைய தென்றும், உன்னுடையதை உன்னுடையதே என்றும் கூறுகின்றானோ அவன் சாது; எவனொருவன் தன்னுடையதாகத் தன்னுடையது என்றும், பிறருடையதைத் தன்னுடையது என்றும் கூறுகின்றானோ அவன் இழிந்தவன்” என்பதே அந்த அனுபவ வாக்கு. அதனால்தான் தமிழகத் திருமடங்களின் தலைவர்கள் பலகாலும் 'நாம்' என்றும், 'நம்முடையது' என்றும் வழங்கி வருகின்றனர் போலும்! இச்சொல் வழக்கு பொருள் விளக்கமாக வளர்ந்து, வாழ்க்கையில் பொதுளின் பெரும்பயன் விளையும். ஆதலால், துறவற இயலில் கள்ளாமை அதிகார இயல்பு இயல்புடையதேயாகும்.

"அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் கனவின்கண்
கன்றிய காத லவர்."

(286)

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது. முன்னர் விளக்கியுள்ளது போல, பொருள் வரலாம். அங்ஙனம் வருவது துறவிகளின் நலன் கருதி மட்டுமல்ல - பலர் நலன் கருதியேயாகும். ஆயினும், பலர் நலன் கருதிப் பொதுப் பணி ஆற்றுவோருக்கும் துறவுநெறி மேற்கொண்டோருக்கும்கூட வாழ்க்கையுண்டு - அவர்களுக்கும் தேவை யுண்டு. அத்தேவையை அவர்கள் அளவோடு அடைந்து அநுபவித்தல் தவறன்று. அங்ங்ணமின்றிப் பொதுப் பணியின் பேரால் துறவு நிலையை முதலாகக் கொண்டு தோன்றிய பொருளைத் தவறான வழிகளிலும், தேவையற்ற ஆடம்பரங்களிலும் செலவழித்துத் துய்த்தலும் - அனுபவித் தலும், அவ்வழி அச்சம் தோன்றுதலால் தன்னலம் கருதித் தனி நிதி சேர்த்து வைத்துக் கொள்ளுதலும் களவேயாகும். ஆதலால், பெரும் பொருள் தேட வேண்டும் - அனுபவிக்க வேண்டும், என்ற விருப்பத்தோடு "தவம் மறைந்து அல்லவை செய்வார் அளவின்கண் நின்றொழுகார்". தம்முடைய வாழ்க்கைக்குத் தேவைகளை எளிய முறையில், அளவுக்கு உட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அளவிறந்த ஆடை ஆபரணங்கள் சுகபோக வசதிகள் ஆகியவற்றில் வாழ் வார்கள். அவர்கள் மகிழ்வார்கள். ஆனால் அந்தப் பொருளின் தோற்றம் அவர்கள் மகிழ்தற்கல்ல - பிறரை மகிழ்வித்து வாழ. பிறரை மகிழ்விக்கத் தோன்றிய பொருளில் தாம் மகிழ்தல் துறவின்பாற்பட்டதன்று. இதனையே திருக்குறள் வலியுறுத்துகின்றது.

அறிவிற்குப்பயன்

னித வாழ்வுக்கு அறிவு இன்றியமையாத ஒன்று. வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவு. குழப்பத்தி னின்றும் தெளிவு தருவது அறிவு. வாழ்வுக்கு ஆக்கம் தருவது அறிவு. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது அறிவு. அதனாலன்றோ திருவள்ளுவர் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று கூறினார். திருவள்ளுவர் அறிவு பெறும் முயற்சிகளைப் பலபடக் கூறுகின்றார். கற்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கற்றிலராயினும் கேட்கவென்று அறிவுறுத்துகின்றார். இத்தகு அறிவு முயற்சி மானிட சாதியில் வளர்ந்து வந்திருக்கின்றது. இன்னமும் வளரும். இங்ங்னமெல்லாம் மானிடர் அறிவில் முயன்று அறிவு பெறுவது எதற்காக? ஏன்? என்ற கேள்விகள் கேட்கப்படாமலில்லை. அறிவு ஆராய்ச்சிக்காக மட்டும் தானா? அல்லது குற்றங்களே காணும் ஆராய்ச்சிக்காகவா? அதிலும், விவாதத்திற்காகத்தானா? அல்லது புலமைக் காச்சலில் சிக்கித் தவிப்பதற்காகவா? அல்லது குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகப்படியான மக்களைக் கொன்று குவிக்கலாம் என்ற ஆராய்ச்சிக்காகவா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. ஆம், இன்றைய உலகப்போக்கைக் கவனிக்குமிடத்து வேறு என்ன சொல்லமுடியும்?

ஆனால் பண்பட்ட அறிவு பகைமைக்கு அப்பாற்பட்டது. விவாதத்திற்குட்பட்டதல்ல. விளங்க வைக்கும் தகைமை உடையது. தண்ணளி மிக்கது. அறிவுடைமையைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அறிவினால் பெறும் பயன் பற்றியும் கூறுகின்றார். பயன்பட வாழ்தலே சிறப்புடைய தொன்று. பொருள் வேறு பயன் வேறு. அறிவுடைமை வேறு, அதன் பயன் வேறு. இந்தத் தத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளப் பெறுதல் வேண்டும். இந்திய அரசின் உறுதி முத்திரையிட்ட நாணயத்துக்குத் தனியே ஒரு மதிப்பில்லை. அந்த நாணயத்தைக் கொடுத்து அதற்கு மாறாகப் பெறக்கூடிய பொருளை வைத்துத்தான் (பண்டங்களை) நாணயத்துக்கு மதிப்பு. அது போலவே அறிவுக்கும் அறிவுடைமையின் பயனாகத் திருவள்ளுவர் காட்டுவது கருணையேயாகும்.

பழனி மலைமீது வீற்றிருந்தருளும் இறைவனை வழிபட ஒரு பக்தர் போகின்றார். அவர் செல்வமுடையவர். அவர் மலைமீது ஏறிச் செல்லும்போது படிகளின் ஓரத்தில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு அவதி உறுவோருக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டு போகின்றார். திருவள்ளுவர் இந்தக் காட்சியைப் பார்க்கின்றார். நாம் எல்லாம் நினைக்கின்றோம். இந்தச் செல்வர் பெருமகனை வள்ளுவர் பாராட்டுவார் என்று. ஆனால் வள்ளுவர் பாராட்டவில்லை. அச்செல்வப் பெருமான் நோயாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததை வள்ளுவர் சடங்காகக் கருதுகிறார். செல்வத்தின் எக்களிப்பு என்று கருதுகின்றார். அல்லது பழக்கத்தின் வழிப்பட்ட செயல் மட்டுமே என்று கருதுகின்றார். அள்ளிக் கொடுத்த செயலுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பில்லை, என்று வள்ளுவர் கருதுகின்றார். அங்ஙனம் அள்ளிக்கொடுப்பதைவிட அந்த நோயாளிகளின் நோயின் வழிப்பட்ட துன்பு அனுபவத்தைத் தமதாக எண்ணி அனுபவித்து அவதிப்படுவோனை அன்பால் முழுக்காட்டுவதையே அறிவுடைமைக்கு ஏற்ற பயன்படுசெயலென்று வள்ளுவர் கருதுகின்றார். இதனை,

"அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை"

(315)

என்று திருக்குறள் விளக்குகிறது.

பகுத்துண்ணாமையும் கொலையே

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்பினைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ங்ணமின்றி இந்த அதிகார முறை வைப்புகள் திருவள்ளுவரால் செய்யப் பெறவில்லை யென்றும், பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு. யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடி வைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கமிருக்கிறது. பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை

தி.21. திரும்பத் திரும்ப நினைந்தாலேயே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால் ஒரு நன்னெறியினைப் பல வகைகளில் - பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உணர்தலே வாழ்க்கைக்கு உற்றமுறையென்பதால் அதிகார அமைப்பு சாலச் சிறந்ததேயாம்.

இங்ஙனம் தனித்தனி நெறிகளுக்கேற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று. உயிர்கள் உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தித் தம்மை வளர்த்து உயர்த்திக் கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ் வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை - உறவைப் பாதுகாப்பது ஒரு பேரறம், ஆதலாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்றார் திருமூலர். உடம்பிற்கும் உயிர்க்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே கொலை என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பேயாயினும் உயிர்க்கொலை என்றே கூறுகிறோம். காரணம் உடம்பு இவ்வழி உயிரின் இயக்கமும் - துய்த்தலும் நுகர்தலும் வளர்ச்சியும் - இல்லாது போதலினாலேயாம். அதுபோலவே உயிர்தாங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலைப் பேரறம் என்றும் கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கமில்லை. உடலியங்காவழி உயிர்க்கும் இலாப மில்லை. அதனாலேயே உடல், உயிர் உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாலும், அதுபோலவே உடல் உயிர் உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில் கொல்லாமை 70 ஓர் அதிகாரமுண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்துக் கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாகக் கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி அடுத்த குறளில்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை”

(322)

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார். இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை விருந்தோம்பலில் கூறக் கூடாதா? அல்லது ஈதலில்தான் கூறக் கூடாதா? இங்ங்ணம் அங்கெல்ல்ாம் கூறாமல் கொல்லாமை அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவதும் ஆகும் என்பதை உணர்த்த இங்கு கூறினார்.

கூடி வாழும் மனித சமுதாயத்தில் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக விளங்கும் மனிதனுக்கு சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. சமுதாயத்தில் ஒரு உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றி சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும். அதையே ஒரு கொலைகாரச் சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலையென்பதன்று, பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து பலரையும் பேணி வளர்க்காமல், சோறிட்டு மருந்து முதலியன வழங்கி பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே, இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கிக் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்ற வினா எழுந்தால் மறுப்பார் யார்?

இறப்பும் பிறப்பும்

னிதன் ஓயாது உழைக்கும் இயல்பினன். பகலெல்லாம் உழைக்கின்றான். உழைப்பில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டால் ஓரளவே மனிதசக்தி செலவாகும். சூழ்நிலையின் காரணமாக விருப்பமின்றி உழைப்பில் ஈடுபட்டால் நிறைய மனித சக்தி வீணாகிறது. உழைப்பில் இழந்த மனித சக்தியை ஈடுசெய்ய மனிதன் உறங்குகின்றான். உறக்கம், அதியற்புத மான மருந்து உழைப்பில் இழந்த சக்தியை ஈட்டித் தருவதுடன் சோர்வை யகற்றிச் சுறுசுறுப்பைத் தருகிறது. மனிதன் உறங்கிய பிறகு எழுச்சியுடன் எழுந்திருக்கின்றான். இது இந்தப் பருவுடலைப் பொறுத்த நிகழ்ச்சி முறை.

அதுபோலத்தான் ஆன்மாவும் அதன் நுண்ணுடலும் இப்பிறப்பில் பல்வேறு வகையான வேதனைகளுக்கு ஆளாகிறது. அதில் உயிருக்கு அலுப்பும் சோர்வும் ஏற்படு கிறது. அதனாலேயே பிறப்பைத் துன்பமென வர்ணிக் கின்றனர். இந்த ஆன்ம நுண்ணுடல் சம்பந்தமான துன்பங்கள் நீங்கவே, மனிதனுக்கு இறப்பு வருகிறது. சிந்தனையிலும் உணர்விலும் கிழடுதட்டித் துன்பத்தில் உழன்று அழுது கொண்டே சாகும் மனிதன் திரும்பவும் கிழடு இல்லாத - இளமை நலங்கள் செறிந்த உடலுடன் தன்னுடைய ஆன்மப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறான். ஆனாலும் முன்னைய அத்தியாயத்தின் துன்பச் சார்புகள் சூழ்நிலைக்கு அமுங்கிப் போகும். நினைவிற்கு வாரா முன்னைப் பயணத்தின் பயனாகப் பெற்ற அறிவும் பண்பும் மட்டும் கைகொடுக்கும். மீண்டும் வாழ்ந்து தன்னுடைய இலட்சியப் பயணத்தை அடைகின்றான். ஆதலால், ஒரு மனிதன் துன்பச் சூழலில் இறப்பது குறித்து அவ்வளவாக வருந்த வேண்டிய அவசியமில்லை. அஃது அவனுக்கொரு கொடையே; இதனைத் திருவள்ளுவர்.

"உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

(339)

என்று கூறுகின்றார். அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ங்னம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்ற இயல்பானதொன்று மரணமென்பது வள்ளுவர் கருத்து. இதனையே அப்பரடிகளும்,

"துறக்கப் படாத உடலைத் துறந்துவெம் துரதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மருகிடுமே.”

என்று பாடுகிறார்.

இதுபோலவே மிகப் பெரிய அளவில் தோன்றிய உலகம், திரும்பத் திரும்பத் தோன்றுதலுக்கு 'இளைப் பொழித்தல்' என்று மாதவச் சிவஞானமுனிவர் கூறுவர்.

ஆதலால், மரணம் பற்றிக் கவலைப்படுவதை விட வாழ்க்கையைப் பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டு முயலுதலே முறையான வாழ்க்கை. ஆதலால், எல்லோருடைய மரணம் பற்றியும் அழுதல் நெறியன்று. முறையாக வாழத் தெரியாதவன் மரணத்திற்கு ஆட்படுதல் மீண்டும் புதிய வாய்ப்பு கிடைத்தற்கு ஏதுவாகும். ஆனால், இந்தப் பொதுவிதி நல்லோருக்கல்ல. அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாதலால் மரணவாயிலில் அழமாட்டார்கள்; மகிழ்வார்கள்.

ஆனால், இந்த நிலத்தியலின் வாழ்க்கைக்கு வித்தென விளங்கும் நல்லவரை இழப்பது குறித்து அழுவார்கள். நாம் சிரிக்க மற்றவர்கள் அழ, வாழ்க்கை முடியுமானால் அது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை! நாம் அழவும் மற்றவர்கள் சிரிக்கவும் வாழ்க்கை முடியுமானால் அஃது இரங்கத்தக்கது. இத்தகையோரின் மரணமும் வரவேற்கத்தக்கது.

சார்புகெடின் நோயில்லை!

லகியற்கையின் அமைப்பு இன்பமேயாம். உலகத்தின் தோற்றம், வைப்பு, நடைமுறை ஆகிய அனைத்தும் உயிர் இன்பத்தினை மையமாகக் கொண்டதேயாம். ஆக இன்பமே இயற்கை. துன்பமோ செயற்கை. ஆனால், துன்பத்தின் கர்த்தாக்களாகிய, தீய மனிதர்கள் அல்லது அறியா மாந்தர்கள் துன்பமும் இயற்கையென்றே பறை சாற்றுகின்றனர். பலர் நம்பியும் விடுகின்றனர். துன்பத்தின் தொடக்கம் பருப்பொருளிலுமல்ல; பரந்த உலகத்திலுமல்ல. துன்பம் மிக நுண்ணிய இடத்தில் -நுண்ணிய அளவிலேயே தோன்றி வளர்கிறது. ஆனால், தோற்றம் நுண்ணிய இடத்திலேயாயினும் அது வளர்ந்து வளர்ந்து பரந்த இடத்தைப் பிடித்து விடுகிறது. துன்பம் ஒரு மனிதரிடத்துத் தோன்றி பல மனிதரைப் பற்றியதா? அல்லது பல மனிதரிடத்தில் ஒரே நேரத்தில் பற்றியதா? என்று ஆராய்ந்தால் ஒருமனிதரிடத்தில் தொடங்கித்தான் உலகைக் கவிழ்ந்து மூடியது என்று அறியலாம்.

ஒரு வீட்டின் கூரையில்பட்ட நுண்ணணுப் பிரமாணமான ஒரு நெருப்புப்பொறி, பல நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்தழிப்பதைப் போலத் துன்பமும் ஒரு முனையில் தோன்றிக் கவிந்திருக்க வேண்டும். துன்பம் காரியமேயாம். காரணமன்று. உடல், உணர்வு, அறிவு ஆகிய வற்றை நிறைநல உழைப்பில் ஈடுபடுத்த மறுப்பவர்கள் காரியங்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். காரணங் களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்குக் காரியம் நடந்தால் சரி. காரணம் வேண்டிய அவசியமில்லை. இந்த மனப்போக்கு உடையவர்களே உயர்ந்த மாளிகையைக் கட்டியவர்கள். மதிற் சுவர்களைக் கட்டியவர்கள், பூட்டுகளைப் படைத்துத் தந்தவர்கள். களவு, காவல் தத்துவத்தின் படைப்பாளர்கள். இவர்களே நியதியாகிய விதிக்கு இல்லாத வலிமையை உண்டாக்கியவர்கள். காரியங்களைப் பற்றிக் கவலைப்படுவது பயனற்றது. ஆனால், காரணங்களைப் பற்றிக் கவலைப்படுதல் வாழ்க்கையின் இன்றியமையாக் கடமை. துன்பத்தின் காரணம் தீமை. துன்பம் சேய், தீமை தாய். அது என்ன தீது? தன்னையே சுற்றி வட்டமிடும் தீமை. ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் தன்னைத் தானே சுற்றினால் மயக்கம் வராதா? வேடிக்கைக்காக வேண்டுமானால் ஓரிரண்டு தடவை சுற்றலாம். பக்திக்காக வேண்டுமானால் இன்னும் சில தடவை சுற்றலாம். இந்த இரண்டு வகையில் சுற்றுவதற்கும் அடிப்படை உணர்வு உண்டு. அந்த உணர்வுக் கலப்பின் சிந்தனையை, நிறுத்திச் சுற்றினாலேயே பொருளுண்டு. மயக்கமும் வராது. உணர்வின் ஆற்றல், மயக்கத்தோடு போராடி மயக்கத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். வெறும் சுற்று வெற்றுச் சுற்றேயாம். மயக்கத்தைத் தரும். அஃதென்ன உணர்வு? எல்லா உலகமும் ஒன்று. 'எவ்வுயிரும். எமதுயிர் என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டினை - மனிதகுல ஒருமைப்பாட் டுணர்வினை எண்ணி நினைந்து அதற்கேற்ப ஒழுக வேண்டுமென்ற விழுமிய விருப்பத்தைப் பெற்று அதை நிலைநிறுத்திக் கொள்ள, உலகின் சிறுவட்டமாகிய நான்கு திசைகளைத் திருப்பிச் சுற்றுதல் ஒரு பாடம்; ஒரு பயிற்சி முறை. முன்னையது உடற் பயிற்சி; பின்னையது உணர்வுப் பயிற்சி.

இங்ஙனம் காரணங்களை யறிந்து நெறி முறையில் நின்று வாழுதல் தீமையினின்றும் விடுதலை தரும். துன்பமும் மாறும், தீமைக்கெல்லாம் தீமை தன்னலமேயாம். தனது நலமின்றி மனிதன் வாழ முடியுமா? நியாயமான வினா. நலம் வேறு. தன்னலம் வேறு. எல்லாரும் நலமுடையராகவே வாழவேண்டும். இஃதே இயற்கை. இதுவே பொதுவிதி. இதுவே மனித உலகத்தின் ஒழுக்கமும்கூட நலம் இரு வகையன. தான் படைத்துக் கொள்ளும் இன்ப நலன், பிறர் படைத்து வழங்கும் இன்ப நலன். தான் படைத்துக் கொள்ளும் நலன்களாவன; அறிவு, அன்பு, ஆள்வினைத் திறன் முதலியனவாம். பிறர் வழங்கும் நலன்களாவன, தான் பேணப்படுதலும் போற்றப்படுதலுமாம். தன்னைத்தானே பேணிக் கொள்வதையிடப் பேணப்படல் சிறப்பாகும். தன்னலம் என்பது பிறருக்கு நலமின்மை விளைத்துத் தனக்கு வருகிற நலனே தன்னலம் என்று கூறப்பெறும். தன்னிடமுள்ள தன்னலச் சார்பினையறிந்து அச்சார்பு கெடவும் பிறர் நலம் பேணும் சார்பு பற்றி நின்று ஒழுகவும் எல்லோரும் முயன்றால் தனிமையிலும் துன்பமில்லை. பொதுவிலும் துன்பமில்லை; எங்கும் இன்பம். எல்லோருக்கும்.இன்பம். எப்பொழுதும் இன்பம். இதனை,

"சார்புணர்ந்து சார்பு கெடலொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்"

(359)

என்று திருக்குறள் கூறுகிறது.

இருவேறு உலகத்து இயற்கை

ந்த உலகில் அறிவுடையவர்கள் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். அறிவில்லாதவர்கள் சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இஃது உலகியலின் நியதி ஆகாது; நீதியும் ஆகாது. முறைகேடான ஓர் அமைப்பை - முறையை நியாயத் தன்மைப்படுத்துவது அநீதியேயாகும். வாழும் மனித உலகிற்கு அறம் பேசவந்த வள்ளுவர் மனித உலகத்தின் நலனையே நியாயமெனக் கருதுகிறார்; நீதி என்று கருதுகிறார். வழக்கில் பொய்மையாக இருந்தாலும் மனித உலகம் தீதற்ற நன்மையே பெறுமானால் அதுவே முறையென உரை கண்டவர் வள்ளுவர். வள்ளுவம் மனிதகுலத்தின் நலனையே மையம்கொண்டு கால்பரவி நிற்கிறது.

இன்று அறிவுடையோர் ஏழையாக யிருக்கலாம். எத்தனையோ எழுத்தாளர்கள் - புலமை நலம் பெற்றவர்கள் பதிப்பாளர்களின் உடும்புப் பிடியில் சிக்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர் சம்பாதிப்பது பல ஆயிரங்கள்! படித்தவர் சம்பாதிப்பது சில நூறுகள். இந்தக் கொடுமைக்கு இன்னும் விடுதலை வரவில்லை. ஆனால், அறிவுடையோர் எல்லாரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளரும் பதிப்பாளரும் ஒருவராகவே விளங்கும் புலமைச் சான்றோர், இன்று இல்லையா? டாக்டர் மு.வ. அவர்கள் இல்லையா? அறிவு என்றால் ஒரு காலத்தில் இலக்கியப் புலமைமட்டுமே என்ற கருத்து இருந்தது. அதுபோலவே, செல்வம் என்றால் நிலவுடைமை என்ற கருத்தேயிருந்தது. நிலவுடைமை பரம்பரையானது. நிலவுடைமைச் செல்வமுடையோர் அறிவாற்றலோ தொழில் நுட்பமோ, தொழில் திறனோ உடையவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லாம லிருந்தது. முதற்காரணம் பரம்பரை. அடுத்த காரணம் அவர்கள் உழுவோரல்லர். வேளாண்மைக் கல்வியும் திறனும் உடையோரைக்கூட நில உடைமை முறை வற்றச் சிதறடித் திருக்கிறது. அந்த யுகத்திற்கு வேண்டுமானால் பழையமுறை பொருந்தும். அறிவு என்றால் ஒருதுறை அறிவு முழு அறிவாக முடியாது. அதிலும் உடல் தேவைக்குரிய பொருள்களை ஈட்டத்தெரியாத அறிவு முழுத் தன்மை உடையதாக ஆக முடியாது. நம்முடைய மொழியும் நம்முடைய இனமும் மற்றை நாடுகளைப்போல மேலோங்கி , வளராததற்கே காரணம் அறிவும் உழைப்பும் இணைந்து செயல்படாததே யாகும். கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. இந்த முறைகெட்ட மரபை - அநீதியை - நெறியல்லாத நெறியை வள்ளுவரும் நியாயப்படுத்தியிருக்கிறாரென்று கூறுவது வள்ளுவத்திற்குப் பெருமையன்று.

"இருவேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதனும் வேறு”

(374)

என்ற குறளுக்கு அறிவும் செல்வமும் உலக இயற்கையில் மாறுபாடுடையன. இவ்விரண்டும் உடையவராக வாழ்வ தரிது என்பது புலால் வேட்கையுடையவன் கடவுள் பெயரால் பலியிட்டதைப்போலவே யாகும். 'திரு' என்ற சொல்லுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மை என்று பொருள் கொண்டார் பேராசிரியர். இது மிகச் சிறந்த கருத்து. கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையவராக வாழ்தல் அரிய முயற்சியாகும். அறிவோ, ஆற்றலோ, வளம்பல உடைமையோ கண்டோரால் விரும்பத்தக்க வாழ்க்கையை வழங்கி விடுவதில்லை. தன்ன்லத் துறவும், பிறர் நலம் பேணும் வேட்கையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்கும் உண்மையும் கொண்டு தொண்டலால் உயிர்க்கு ஊதியமில்லை என்று கருதிக் கருதி இனிய அன்பால் அருளார்வத்தால் பலரைத் தழுவி வாழும் வாழ்க்கையே பலரால் விரும்பப்பெறும் வாழ்க்கை. இதனையே, "திரு” என்றார். தெள்ளிய அறிவுடையோர் பலர் சமுதாய வாழ்க்கையில் தோற்று இருக்கின்றனர். அறிவின் காரணமாகவே பலரையும் ஆராய்ந்து பகை வளர்த்துக் கொண்டவர் இல்லையா? அறிவுடையோர் என்ற முனைப்பால் அழிந்தவர்க ளில்லையா? அறிவுடையோ ரெல்லாம் அன்புடையோராக இருப்பதில்லை என்ற ஐயத்தின் வினாவே,

"அறிவினால் ஆகுவ துண்டோ? பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை".

(315)

என்ற குறள். ஆதலால் தெள்ளிய அறிவும் கண்டோரால் விரும்பப்படும் எளிமையும் ஏற்றப் பண்பும் ஒரு சேர உடையவராக வாழ்தல் அரிது.


மாணிக்கவாசகர் கடவுளைத் "திரு” என்றே அழைக்கிறார். "திருவே, என் செல்வமே" என்பது மணிமொழி. இறைவனை சிந்தித்தலுக்கும் அவன்றன் திருவருளைப் பெறுத லுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. தெள்ளிய அறிவுடையோர் இறைவனைப்பற்றியே ஆராய்ந்தாலும்கூட இறை வனை ஆராய்கிறார்களே தவிர அனுபவிப்பதில்லை. எந்த ஒன்றையும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டேயிருப்பவர்களுக்கு அவர்கள் ஆராயும் பொருளில் ஒன்றி உடனாகும் வாய்ப்புக் கிடைக்காது. இறைவனும் அவனது இன்பமும் ஆய்வுக் கூடத்திற்கு உரியனவல்ல. அனுபவத்திற்கு உரியன. தெள்ளிய அறிவுடையோர் ஆராய்கிறார்கள்! ஆராய்கிறார்கள்! ஆனால், ஐயகோ, அவர்களுக்கு அனுபவமில்லை! இதனைத்தானே "கற்றதனால் ஆயபயனென் கொல்?” என்று வள்ளுவர் வினவுகிறார். மாணிக்கவாசகரும் "கற்றாரையான் வேண்டேன்" என்று ஒதுக்குகிறார். திருஞான சம்பந்தரும் "தெளிவினுள் சிவமாகி" என்று குறிப்பிட்டுத் தெளிவு சிவமாதலிலேயே பயன் கூட்டுகிறது என்று அருளிச்செய்துள்ளார். ஆதலால், "திரு வேறு தெள்ளிய ராதலும் வேறு” என்ற குறளுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையாராதலும், தெள்ளிய அறிவுடையாராதலும் உலகியற்கையில் வேறுபட்டன என்றும், இறைவன் திருவருளைச் சிந்தித்துப் பெற்று அனுபவித்தலும் தெள்ளிய அறிவும் உலகியற்கையில் வேறுபட்டன என்பதுமே சிறந்த கருத்துக்களாகும். இந்த இரண்டு உணர்வுகளும் அதாவது கண்டோரால் விரும்பப்படும் தன்மையும், இறைவன்றன் திருவருளைப் பெற்று அனுபவித்தலும் தன் முயற்சியினாலேயே ஆகக்கூடியனவாகும்.

செல்வமுடையராதல் தன் முயற்சியின்றியே பிறர் முயற்சியினாலும் ஆகமுடியும். எப்படிச் செல்வந்தர் களானோம் என்று தெரியாமலே உலகத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஏன்? பரிசுச் சீட்டுக்கூட செல்வந்தன் ஆக்கிவிடுகிறதே! தெள்ளிய அறிவினைப் பெற்று அதனைச் சார திருவுடையோராகவும் ஆக முயலுவோமாக.


கசடறக் கற்க

யிர் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை இன்பம். இன்பம் நேரிடையாகக் கிடைப்பதன்று. பிறர் வாயிலாக வந்து அமைவதேயாம். இன்பத்தினை வழங்கும் ஆற்றல் நல்லறிவுக்கே உண்டு. நல்லறிவைப் பெறுதற்குச் சாதனம் கல்வி. இன்று நம்மிடையில் கல்வி வேறு, அறிவு வேறு என்ற உணர்வுகூட வளரவில்லை. கல்வி அறிவைப் பெறுதற்குரிய வாயிலேயாம். நம்முள் கற்றாரிலும் மூடர்கள் உண்டு. அவர்கள் எழுத்தெண்ணி ஒப்பிப்பர். எடுத்துக் காட்டுகள் ஏராளம் காட்டுவர். நமக்கே பிரமிப்பு ஏற்படும். ஆயினும் அண்டி நின்று பார்த்தால் கல்வியின் - கற்ற கல்வியின் அடையாளத்தைக்கூட அவர்தம் வாழ்க்கையில் பார்க்கமுடியாது. உண்ணும் உணவு செரித்துச் செங்குருதி யாதல் வேண்டும். செங்குருதி வலிமையாகப் பயன்பட வேண்டும். இதுவே உணவின் பயன். அதுபோலவே கல்வி வாழ்க்கைப் பட்டறையில் அறிவாக மாறி ஒழுக்கமாகப் பயன் தரவேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் நடைபெறாது போனால் கல்வியாற் பயனில்லை.

கல்வி இருதரப்படும். ஒன்று பொதுக் கல்வி. மற்றொன்று சிறப்புக் கல்வி. பொதுக் கல்வி எல்லோருக்கும் தேவையான சில பொது அறிவு தரும் செய்திகளைக் கற்றுக் கொள்வதாகும். சிறப்புக் கல்வி என்பது தன் தகுதியினை மேலும் உயர்த்திக் கொள்ளக் கற்பதாகும்.

ஒருவர்க்கு உடலில் நலமில்லையானால் மருத்துவரிடம் உடலைக் காட்டிச் சோதனை செய்தல் வேண்டும். மருத்துவர் உடலைச் சோதனை செய்து நோயுற்ற உடம்பினில் இன்னின்ன உயிர்ச்சத்து இல்லையென்று குறிப்பிடுவர். இல்லாத உயிர்ச்சத்தைப் பெறக்கூடிய உணவை - மருந்தைத் தேடியுண்டு இன்மையை ஈடு செய்து கொள்வது இயல்பு. அது போலவே நம்முடைய உயிரியலில் சில தகுதிக் குறைபாடுகள் இயல்பிலேயே உண்டு. அந்தத் தகுதிக் குறைபாடுகள் என்ன என்பதை நாமே நம்முடைய நேற்றைய வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது நமது வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புடைய பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோர் மூலமாவது எந்தவகையில் நாம் தகுதிக் குறைபாடுடையோம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் தெரிந்து கொண்ட பிறகு நம்முடைய உயிர்த் தகுதிக் குறைபாட்டை நீக்கி நிறை நலத்தை வழங்கக் கூடிய இலக்கியங்களை - கருத்துக்களைக் கற்றுத் தகுதியுடையவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதனை,

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

(397)

என்ற குறளால் அறியலாம்.

இந்தக் குறளை, "கசடறக் கற்பவை கற்க" என்றும் "கசடறக் கற்க" என்றும் "கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக" வென்றும் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்து கொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். எகிப்தியப் பழமொழி ஒன்று உண்டு. "நல்ல நூல்கள் உயிர்க்கு மருந்து போல்வன” என்பது அது. குற்றம் நீங்குகிறவரையில் கற்க வேண்டும். குற்றம் நீங்கியபிறகு பெற்ற புதுநெறியில் நிலைத்து நின்று ஒழுகவேண்டும் என்பதே குறளின் திரண்ட கருத்து. இங்ங்ணமின்றிக் "கசடறக் கற்க" என்பதற்கு ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று பொருள் கூறுவது பொருந்துமாயினும் சிறப்புடையதாகாது.

இந்தப் பார்வையில் வெகுளியுடையவர்கள், பொறையுடைமையை வற்புறுத்தும் நூல்களையும், கோழைமைத் தன்மையுடையவர்கள் ஆள்வினையாற்றலைத் தரும் நூல்களையும், இன்னமும் அவரவர் தம் தம் நிலை நோக்கிக் கற்கவேண்டும். இங்ஙனம் கற்றால் தவறுகள் தொடர்ந்து வாரா. உலகில் தனிமனித வாழ்க்கையிலும், சமுதாயப் பொது வாழ்க்கையிலும் மாறுதல்கள் நிகழும். இத்தகு சிறந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் ஒன்று திறந்தால் ஒன்பது சிறைச்சாலையை மூடலாம் என்பது ஆன்றோர் கருத்து. ஆனால் இன்றோ கல்வியும் பெருகி வளர்கிறது. சட்டப் புத்தகங்களும் மலைபோல் குவிகின்றன. சிறைச்சாலைகளும் மூடப்பட்டபாடில்லை. காரணம் கசடறக் கல்வி இல்லாமையே யாகும்.

பல நூறு ஆயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்களின் பாட்டுடைப் பொருளும் மாறாமலே இருந்து வருகிறது. எழுத்தாளருக்கும் அதே கதிதான். ஏன்? சொற்பொழிவாளர் பரம்பரையும்கூட ஓராயிரம் ஆண்டுகளாக ஒரே மையத்தைத் தான் சுற்றி வருகிறார்கள். கடவுள் அவதாரங்களில்கூட வடிவ மாறுதல்கள் ஏற்பட்டாலும், நோக்க மாறுதல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்தச் சமுதாயத்தில் சென்ற நூற்றாண்டில் குற்றமாகத் திகழ்ந்த ஒன்று, குற்றம் என்று கண்டு உணர்த்தப்பெற்ற ஒன்று இன்னமும் நீங்கின பாடில்லை. பலரறிய அதைக் குற்றம் என்று கற்றாலுங்கூடக் குற்றத்தை நீக்குவதில்லை. கற்றபடி நின்று ஒழுகுவதில்லை. இது ஒரு பாணி. அதனால் கவிஞர் உலகக் கருத்துச் சிந்தனையும் வளரவில்லை. நாடும் நாளும் வளரவில்லை. ஆதலால் குற்றத்தை உணர்த்தி நீக்கும் கல்வியும் குற்றம் நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத் தரும் கல்வியும் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது வள்ளுவத்தின் திரண்ட முடிபு.

மொழியும் உறவும்

மிழகத்தின் வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு பெருமைப்படத் தக்கதாக அமைந்திருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு வருத்தப்படுதற்குரிய செய்திகளும் உள. தமிழர்கள் கடல்நாடு என்று கருதப் பெறுதற்குரிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கு முன்னோடியாகவே கடலில் கலம் செலுத்தியவர்கள். கடல் கடந்த நாடுகளோடு வாணிகம் செய்தவர்கள். சிறப்பாக இந்திய கிழக்காசிய நாடுகளைத் தன்னகத்தே கொண்ட பெருந்தமிழ்நாடு உடையவர்கள். இமயத்தின் மடியிலும், கங்கைக் கரையிலும், சிந்துநதியின் ஓரத்திலும் தமிழர்கள் உலாவினர் - வாழ்ந்தனர் என்று வரலாறு பேசுகின்றது. எனினும் இன்றையத் தமிழர்கள் நிலை என்ன? அந்தப் பழைய தமிழகம் எங்கு போயிற்று? தமிழர்கள் தங்களுடைய உறவு கலந்து வாழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையின் காரணமாகவே, இவற்றை யெல்லாம் இழந்தனர் - இழந்து கொண்டிருக்கின்றனர் - இனியும் இழப்பர்போல் தோன்றுகிறது.

வேறுபட்ட பல்வேறு மனித இனத்தினரிடையேயும் அன்பைப் பெருக்கி உறவை வளர்ப்பது மொழியினாலாய விழுமிய பயன். மொழியின் இந்த விழுமிய நோக்கத்தைக் காலப்போக்கில் தமிழர்கள் மறந்தார்கள். நாம் வேறொருவரோடு உறவு கொண்டு வாழ விரும்பினால், அவரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்துகொண்டு பேசிப் பழகி வாழ்வதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் சிங்கள வர்களைப் புரிந்து கொண்டு பழக, இவர்கள் சிங்களத்தைப் படித்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள - பழக அவர்கட்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கவுமில்லை. இந்த நிலைமையில் மொழி அல்லது இனத்தினாலாய ஒற்றுமைகள் வளர்ந்து காலப் போக்கில் பகைமையாக மாறி உறவைக் கெடுத்துவிட்டது. நாம் எந்த நாட்டில் வாழுகிறோமோ, அந்த நாட்டை நம்முடைய நாடாக ஆக்கிக்கொள்ள முயலவேண்டும். அச்சாதனையை நாம் அடைவதற்காக அதற்குரிய வகையில் நமது கல்வியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களும், ஆரியர்களும் எந்தெந்த நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தார்களோ அந்தந்த நாடுகளின் மொழிகளைப் படித்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்கள். அதுபோலவே, ஆங்காங்குள்ள மக்கட்குத் தங்கள் மொழியைக் கற்றுக் கொடுப்பதிலும் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலம் உலக மொழியாயிற்று. சமஸ்கிருதம் இந்திய மொழியாயிற்று. தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரணமாக - தமிழ் மொழி தமிழ்நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழ வேண்டுமானால், பல மொழிகளையும் பயில வேண்டும். பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்,

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு"

(397)

என்று கூறியிருக்கிறார்.

ஆள் முக்கியமல்ல

னிதர்களுக்குள் பொருளியல் சண்டைகள் வருவது போலவே, கருத்துவழிச் சண்டைகளும் தோன்றுவதுண்டு. ஒருவருடைய கருத்தைவிட இன்னொருவருடைய கருத்து உயர்ந்தது என்கிற எண்ணம் தோன்றுகிறபோதும் தன் கருத்தை மற்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சி தலைகாட்டுகிற பொழுதும் சண்டைகள் தோன்றுகின்றன. ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்பதனை அக்கருத்தைச் சொல்லுகின்றவர்களை வைத்து மட்டும் முடி வெடுக்க முடியாது. எந்த ஓர் இனத்திற்கும் தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பது மனித இயல்பை ஒட்டியதுதான்; தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதும் பிறருடைய கருத்தை ஏற்றுப் போற்ற மறுப்பதும் ஒன்றல்ல. தனித் தன்மையைக் காப்பாற்றாது போனாலும், ஒரு இனவழிப்பட்ட நாகரிகத்திற்கு - கலாச்சாரத்திற்கு அடிச்சுவடே இல்லாமற் போய்விடும். அது மட்டுமல்ல - நாடுகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவண்ணம் ஒழுக்கம், ஒழுக்கமின்மை களிற்கூட வேறுபாடுகள் நிலவுவது இயற்கை.

மகாபாரத கலாச்சாரத்தில் ஒருத்தி ஐவருக்கு மனைவியாக இருக்கமுடியும். அது சமுதாய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒழுக்கம். இதை நாம் அநாகரிகம் என்று கூறுவதற்கில்லை. இதற்கு அடிப்படை அந்தச் சமுதாயத்தில் உள்ள ஆண் பெண்களின் விகிதாசார எண்ணிக்கையேயாகும். ஆனால் தமிழகத்தின் சூழ்நிலை வேறு. ஆதலால் பிறருடைய கருத்தைக் கேட்டு, சிந்தித்து, அக்கருத்து தன்னுடைய தனித் தன்மைக்கு இடையூறு செய்யாமல் -தன்னுடைய நாகரிகத்தை வளர்த்துச் செழுமைப்படுத்த


தி.-22. உதவுமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது என்பதே வள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சமய சமுதாயக் கருத்துக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மோதின. புத்தரின் கருத்துக்கள் பரவின. மகாவீரர் கருத்துக்கள் பரவின. ஆரிய மதக் கருத்துக்களும் பரவின. இக்கருத்துக்களைச் சார்ந்தோர் அனைவரும் தங்களைப் பல்லாற்றானும் உயர்த்திக் கொண்டு கூறினர். அந்தச் சூழலில்தான் திருவள்ளுவர், யார் சொல்லுகிறார் என்பது பற்றிக் கவலைப் படாதே! என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தெரிந்து - தெளிந்து - அது உண்மையானதாக - வாழ்க்கைக்கு இயைபுடையதாக இருக்குமானால் ஏற்றுக் கொள் என்று கூறினார்.


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(423)


தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க

ரசு பொறுப்புள்ள ஒன்று. அரசன் அதிகாரத்திற்கு எல்லைகளுண்டு. ஆனால் அரசினுடைய பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பரந்தன. நாட்டு மக்களிடையே நல்லொழுக்கமும் நன்னெறிச் சார்பும் நிலைபெற்றிருக்கும் படி செய்ய வேண்டிய பொறுப்பு அரசினுடையதேயாகும்.

அதனாலன்றோ நன்னடை 'நல்குதல் வேந்தர்க்குக் கடனே' என்று புறநானூறு பேசுகிறது. நன்னடை நல்குதல் என்றால் உத்தரவுகள் மூலம் என்பது பொருளன்று. சட்டங்கள் மூலமும் அன்று. கட்டுப்பாடுகள் மூலமும் அன்று. தண்டனைகள் மூலமும் அன்று. அரசன், தான் வாழ்தலின்மூலம் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துத் தர வேண்டும். மேலும் நாட்டில் தனிமனிதனுடைய - சமுதாயத்தினுடைய ஒழுக்க நெறிகளைப் பற்றி உரத்துப் பேசினால் போதாது. அல்லது தண்டனையைக் காட்டி அரசும், நரகத்தைக் காட்டி மதத் தலைவனும் மிரட்டினால் ஒழுக்கம் வளர்ந்து விடுமா என்ன? போக்குமடை கட்டாமல் அணையில் தண்ணிரைத் தேக்கினால் உடைப்பெடுப்பதைத் தவிர, வேறு வழியென்ன?

அதுபோலவே வாழ்க்கையின் தேவைகளைப் பெற்று சீராக வாழும் வழிவகைகளைக் காட்டாமல் - பெற துணை நிற்காமல் - அல்லலுற்று அழச் செய்தால் ஒழுக்கமா வளரும்? நரகத்தைத்தான் காட்டுங்களேன்?. ஒருக்காலும் முடியாது.

குற்றம் இருக்கிற இடம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் குற்றத்தின் பிறப்பிடம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மறுக்கிறோம். காரணம் நாமேகூட அந்தக் குற்றங்கள் தோன்றக் காரணமாக இருப்பதனால்தான். பொய் சொல்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றமுடையது பொய் சொல்ல உருவாக்கிய சமுதாயமேயாம். திருடுவது பெரிய குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் திருடக்கூடிய சூழலில் சமுதாயத்தை அமைத்திருக்கிறோம். அழுக்காறு கொள்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் அழுக்காறு தோன்றுமளவுக்கு ஏகபோகமாக வாழ்வதை அனுமதிப்பது. மேற்கண்ட குற்றங்களின்றி சமுதாயத்தின் நடைமுறையை ஒழுங்குபடுத்தி எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று வாழும் இயல்புடைய சமுதாயமாக அமைப்பது அரசின் பொறுப்பு. ஆனால் இன்றோ அரசுகள் இந்தப் பொறுப்பினையா மேற்கொண்டு செய்கின்றன? இன்றோ அரசு வல்லாளர்கள் கையிலேயே சிக்கி அவர்கள் கைப்பொம்மையாக இருக்கிறது. அரசு நாட்டு மக்களிடையே குற்றத்தைப் பார்க்குமானால், அந்தக் குற்றம் மக்களிடையே தோன்றி வளர்வதற்கு அரசின் ஆட்சிமுறையின் குறைபாடே காரணம் என்பதை அறியவேண்டும். இது முற்போக்கான அரசாங்கத்தின் கருத்தும் அமைப்புமாகும்.

ஆதலால் அரசு மக்களிடமுள்ள குற்றத்தைக் காணுமானால் அந்தக் குற்றங்கள் தோற்றுதற்குரிய தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்களிடையே குற்றங்கள் தோன்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமற் போகும். எவ்வளவு சிறந்த முற்போக்கான அரசியல் கருத்து என்பதை எண்ணி மகிழ்ந்து செயற்படுத்தவேண்டும். இதனை,


"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு"

(436)


என்று திருக்குறள் பேசுகிறது.

அரசின் தன் குற்றம் நீங்கிய அளவிலேயே, பிறர் குற்றம் ஒன்று இல்லையென்பது உணரத்தக்கது. ஆனால் இன்றைய நடைமுறையில் அரசுகள் அதிகார அமைப்பின் மேல்மட்டங்களாக விளங்குகின்றனவே யொழிய, அறநெறியின் மேல்மட்ட அமைப்புகளாக விளங்கவில்லை. ஆட்சியின் வட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இலாபம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பலரும் அந்த மையத்தைப் போட்டா போட்டி மனப்போக்குடன் வட்டமிடுகிறார்கள். அங்கு ஆர்ப்பாட்டமிருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. போட்டா போட்டிகள் இருக்கின்றன. தந்திரங்களும் மந்திரங்களும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. இவைகள் அரசு அறநெறிச் சார்பினின்றும் பிறக்கின்றனவோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி அரசின் அறிக்கைகளும்கூட குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அரசு சாதித்த சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காண்பிக் கின்றன. அதற்கு மாறாக மக்கள் மன்றத்தின் நிறைநல வளர்ச்சி குறித்து மதிப்பிடுவதில்லை.

பொதுவாக இன்று ஒரு அரசு மிக மிகச் சாதாரணமான காவல் உத்தியோகத்தையே வகிக்கிறது. ஆனால் அரசினுடைய பொறுப்போ தன் குடிமகனுடைய அறிவைத் தொட்டுத் தூண்டி வளர்ப்பது; ஆள் வினையாற்றலை வளர்ப்பது: ஒழுக்க நெறியில் நிறுத்துவது. என்னுடைய தேவைகளை நான் பெற என்னை முறையான வழியில் வழி நடத்துவது. பெற வேண்டுவனவற்றைப் பெற்று வாழத் துணை நின்று பாதுகாப்பது. இவ்வளவும் அரசின் பொறுப்பு. இத்தகைய எந்தவொரு பொறுப்பினின்றும் அரசு நழுவினால், மக்கள் மன்றத்தில் குற்றம் மலியும். குற்றத்தைக் கூறிப் பயனில்லை. அரசு குற்றமுடையதாக இருந்து கொண்டு, மக்களுக்குத் தண்டனை வழங்குவது அற நெறியும் அன்று. அதனாலேயே தன் குற்றம் கண்டு தன்னுயிர் தந்தனன் பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலனிடத்தில் குற்றமில்லை. பாண்டியனிடத்திலிருந்த குற்றம் கோவலனிடத்தில் குற்றத்தை உண்டாக்கியது என்பதையும் அடியிற் கண்ட குறளையும் இணைத்து நோக்கினால், தமிழர் அரசியலின் விழுமிய சிறப்புக்கள் விளங்கும்.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு"

(436)

என்பது திருக்குறள்.

ஊழா? முயற்சியா?
'ழ் சர்வ சக்தி படைத்தது; அதை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது; மனித ஆற்றலை விட ஊழின் ஆற்றலே வலிமை படைத்தது என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலத்தில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

பொதுவாக நம்முடைய மக்களிடத்தே இன்றுவரை விவாதத்திற்குரியதாக இருப்பது ஊழ் பெரிதா? உலையா முயற்சி பெரிதா? என்பதுதான். ஊழ் வலிமையானது என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டுவார்கள்.


கல்பொருந் திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தனம்."

- புறம்

ஆற்று வெள்ளத்தில் போகும் படகு வெள்ளத்துடனேயே அடித்துச் செல்லப்படும் என்பது உவமை. படகு ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுதலில் என்ன வியப்பு? அது சடப் பொருள்தானே? படகுக்கு ஏது பகுத்தறிவு: படகுக்கு ஏது சிந்தனை? ஏது அறிவு? ஏது செயல் திறன்? மனிதனோ சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அறிவும் செயல் திறனும் உடையவன். இவன் வெள்ளம் போகிற போக்கிலேயே இழுத்துச் செல்லப் பெறுவானானால் மதியிலி - நீந்தத் தெரியாதவன் - ஆற்றல் இல்லாத சோம்பேறி என்றுதான் கொள்ளவேண்டும். சக்தி படைத்த - மதியுடைய - நீந்தித் தெரிந்த மனிதன் படகில் இருந்தால் ஆற்றுப் போக்கை எதிர்த்தன்றோ செல்லுவான்?

திருவள்ளுவர் பெருமகனாரின் 'ஊழிற் பெருவலி யாவுள?' என்ற வினாவை எழுப்புவர் சிலர். ஆம். "ஊழிற் பெருவலி யாவுள"? என்பது வள்ளுவர் வாக்குத்தான். ஆனாலும் அவர் எடுத்துக்கொண்ட ஒரு பொருளை எப்படி முடிக்கிறார்? கருத்துக்கு எப்படி ஊட்டங் கொடுக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அந்தக் குறளையே முடிக்கும் பொழுது ஊழ் முந்துறும் என்கிறார்.

ஊழ், உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடைய முயற்சியை முந்திக் கொண்டு வந்து நிற்கும் என்கிறார். எனினும் ஊழ் வெற்றி பெற்றதாக அவர் சொல்லவில்லை. நீண்ட ஓட்டப் பந்தயத்தில் முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஓடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போகத் தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு. அதுபோலவே ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின் தள்ளப்படுதற்குரியது - பின் தள்ள முடியும். அந்த ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும்போது,

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்"

(620)

என்று குறிப்பிடுகிறார்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூவி தரும்."

(619)

"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு"

(269)

என்ற குறட்பாக்கள் முயற்சியின் பேராற்றலை வலியுறுத்துகின்றனவேயன்றி ஊழே வெற்றி காணும் என்று அறுதியிட்டு உணர்த்தவில்லையே!

புராண வழி பார்த்தாலும், ஊழின் வழி ஏற்பட்ட மரணத்தை முயற்சி வழி பெற்ற நோன்பின் பயனாக வென்ற மார்க்கண்டேயன் வரலாற்றை நாம் பார்க்கிறோம்.

நிலத்தினுடைய இழுப்பாற்றல் விண்ணோக்கிச் செல்லும் பொருளை இழுத்துத் தள்ளும் வலிமையுடைய தேயாயினும். அதையும் தடுத்து நிறுத்தி வானத்தே மனிதன் மிதக்கவில்லையா? ஆதலால், ஊழின் வலியைவிட, நமது முயற்சியே வலிமையுடையது என்று கருதி முயற்சியுடைய வாழ்க்கையில் ஈடுபடுவோமாக!

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்!
சிரித்திடுக! சிந்தனை செய்க!

திருவள்ளுவர் வாழ்க்கையின் மாளிகையை முறையாக முழுதுறக் கட்டி முடிப்பதற்கு உரிய வழிவகைகளைக் கண்டவர். இன்ப மாளிகை அமைப்பதற்கு முன்பு துன்பம் உறவருதல் இயற்கை துன்பத்தில் துவளுதல் கூடாது. துன்பம் வந்துற்ற பொழுது என்ன செய்யவேண்டும்? என்பதைத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார். இதனை,


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துரர்வ தஃதொப்ப தில்."

(621)


என்று கூறுகிறார்.

துன்பம் வந்துற்ற பொழுது சிரித்திடுக. துன்பம் தொலைந்து அதனை அடுத்து இன்பம் வரும் என்பது வெளிப்படையான கருத்து. ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்படும் கருத்து திருக்குறளின் மாண்புக்கு இயைந்ததன்று. துன்பத்தைப் பார்த்துச் சிரித்தால் துன்பம் போகாது. அதோடு இங்குச் சிரித்தல் என்று மட்டும் பொருள்கொள்ள முடியாது. சிரிப்பில் பலவகையுண்டு. இங்குக் குறிப்பிடப் பெறும் சிரிப்பு "நகுதல்” ஆகும். அதாவது பரிகாசச் சிரிப்பு. துன்பம் காரியம்; காரியமிருந்தால் அதற்கொரு காரணமுண்டு. துன்பத்திற்குரிய காரணம் நம்முடைய அறியாமை; செயமாட்டாமை. ஆள்வினையின்மை ஆகியவையேயாம். தன்னுடைய குறைகளை நினைத்துத் தன்னைத் தானே நொந்து சிரித்து விமர்சனம் செய்து கொண்டால், காரணங்கள் நீங்கும். அவ்வழி துன்பம் தொலையும்; இன்பம் பெருகும். பொதுவாக ஏதாவது ஒரு துன்பம் வந்தபொழுது தலையிலடித்துக் கொண்டு அழுவது வழக்கம். தலையில் அடித்துக்கொள்ளும் வழக்கம் எப்படி யேற்பட்டதென்றால், தலைக்குள் இருக்கிற புத்தி வேலை செய்யாததால் துன்பம் வந்திருக்கிறதென்பதை உணர்ந்து புத்தி இயங்காமல் தேங்கிக் கிடப்பதைத் தெரிவிக்கத் தலையிலடித்துக்கொள்ளும் வழக்கம் வந்தது. இப்பொழுது பலர் தலையில் அடித்துக்கொண்டாலும் உள்ளே இருக்கும் புத்தி சற்றேனும் அசைந்து இயங்குவதாகத் தெரியவில்லை. ஆதலால், துன்பம் இயற்கையென்றோ, தலைவிதியென்றோ நம்பி வாளாகிடத்தல் கூடாது. துன்பத்திற்குரிய காரணங் களை அறிந்து மாற்ற வேண்டும். அதோடு, துன்பத்தை வெற்றுக் கவலையாக்கி வாழ்க்கையைச் சுமையாக்கிக் கொள்ளுதலும் கூடாது.

துன்பம் வந்தவுடன் தட்டிக்கழிக்காமல் ஏற்று அனுபவித்துக்கொண்டும் அந்த அனுபவத்தை ஆசிரியனாகக் கொண்டும் நேற்றைய தவறுகளுக்குரிய காரணங்களை மாற்றியும் புத்துணர்வோடு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே வாழ்க்கை இன்பமாவதற்கு உரிய சிறந்த வழி.

அமைச்சுப் பண்பு

திருவள்ளுவர் ஒரு சிறந்த அரசியல் அறிஞர். அலை கடலனைய அவாக்களால் அலைமோதி ஒருவருக்கொருவர் பொருதிக் கொள்ளும் இயல்புடைய மனித சமூகத்தை நெறிப்படுத்துதல் எளியதொன்றன்று. அதுவும் செப்பமடை யாத சமூக அமைப்பு நிலைபெற்றிருக்கும் பொழுது மனித சமூகத்தை நெறிப்படுத்துதல் மேலும் கடுமையானதாக அமைகின்றது. நோய், நோய்க்கு மருந்தாதல் இயலாது. அதுபோலவே, ஆற்றலிலும், அரிய பண்புகளிலும், சீலத்திலும் தொய்வுள்ளவர்கள் நொய்ந்து கிடக்கும் சமுதாயத்தை நடைமுறைப்படுத்துதல் ஒரு பொழுதும் சாலாது. சிலபொழுது அடக்குமுறையால் - அச்சத்தால் அல்லது வரம்பிகந்த முறைகேடான கொடைகளால் - அரசு எந்திரம் ஓடலாம். ஆனாலும் அந்த ஓட்டம் நிலையானதுமன்று நெடிது நிற்பதுமன்று; சேம வைப்பிற்குரியது மன்று. மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்குச் செவியாகவும், கண்ணாகவும், கைகளாகவும் உடனிருந்து வழி நடத்தும் அமைச்சர்களே யிருந்தனர். இந்த மக்களாட்சித் தலைமுறையில் அமைச்சர்களே ஆளுநர். அமைச்சர்களுக்கு வேண்டிய சிறந்த தகுதிகளைத் திருவள்ளுவர் முறைப்படுத்திக் கூறுகிறார்.

வினை செய்தல் எளியதன்று. வினை செய்தல் இலட்சிய நோக்காக - அமையவேண்டும். இடையீடுகளில் திறனிழந்து நிற்றல் கூடாது. வினை செய்யும் ஆற்றலை ஐம்பொறிகளிலும் புலன்களிலும் உருவாக்கித் தேக்கிப் பயனுறத் தக்க வகையில் வளர்த்து, வினைவல்லாராக விளங்குதல் வேண்டும். வினையின் கண் இவர்க்குரிய வல்லமையை அவர் எடுத்துக் கூறி அறிமுகம் செய்துகொள்ளக் கூடியதாக அன்றி அவர் செய்த வினையின் பயனாக விளைந்த பயனும், சாதனையும் இவர் வினைவல்லார் என்பதைப் பறைசாற்ற வேண்டும்.

அமைச்சு ஒரு தொழில். பொறுப்புள்ள பணி. அவர்களின் கடமை குடிமக்களைக் காத்தல். அகத்தாலும் புறத்தாலும் குடிமக்கள் கேடுறாவண்ணம் பாதுகாக்கப் பெறவேண்டும். காத்தல் என்பதனால், காவல் என்ற பொருள் மட்டும் கொள்ளக்கூடாது. அஃது ஒரு பொருள் பொதிந்த சொல். பல நோக்குப் பொருள் பொதிந்த சொல். குடிமக்கள் முறையாக அகத்தாலும் புறத்தாலும் வளர வேண்டிய அளவுக்கு வளரத் துணை நிற்றலும் அமைச்சின் கடமை - ஏன்? இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் இறைவனுடைய உயர்நீதிமன்றத்திற்கு எந்த ஓர் உயிரும் குற்றம் சுமந்து செல்லும்படியும் அமைச்சு அனுமதித்தலாகாது. குடிகளைக் காத்தல் என்ற குறிக்கோளை வள்ளுவத்தின் பார்வையில் முழுதும் தழுவிய அரசு தோன்றுதல் இயலுமா? நாட்டு நடப்பில் உள்ள நொய்வின் காரணமாகக் கோடனைய அரசின் பொறுப்பும் உயர்ந்திருக்கிறது.

சிறந்த அமைச்சு, குடிமக்களை மன நலத்துடனும், வளத்துடனும் பேணிப் பாதுகாக்க வேண்டும். மக்களுடைய வாழ்க்கைத் துய்ப்புக்குரிய நியாயமானவைகளை யெல்லாம் வழங்கி நல்குரவால் நலியாமல் பாதுகாக்க வேண்டும். அது மட்டுமன்று. ஒவ்வொரு மனிதனும் அளவு கடந்த ஆற்றல்களால் பெய்யப்பட்ட படைப்பின் வடிவமான மனிதனின் படைப்பாற்றலும், சக்தியும், குறையாமலும் வளர்ந்து படைப்புப் பல படைக்கும்படியும் பாதுகாக்க வேண்டும்.

அமைச்சுத் தொழில் பூண்பவர்களுக்குத் தேர்ந்த கல்வி தேவை. இயற்கை, பிறநாட்டு அரசுகள், மனிதகுலத்தின் வளர்ச்சி, வளர்ச்சியில் ஏற்படும் சிக்கல்கள் இவைக ளனைத் தையும் அவ்வப் பொழுது துறைபோகக் கற்று உணர்ந்த வரால்தான் அமைச்சுத் தொழிலைச் செம்மையாகச் செய்யமுடியும். அதிகாரம் எப்பொழுதோ உபயோகப்படுத்த வேண்டிய ஒரு சின்னமே தவிர அன்றாட வாழ்க்கையில், அது அரசால் பயன்படுத்தக்கூடிய தொன்றன்று. அப்படிப் பயன்படுத்தினாலும், அந்த அதிகாரம் காலப்போக்கில் தன்னுடைய சக்தியை இழந்துவிடும். ஆனால், சிறந்த கல்வியும் நடைமுறை அறிவும் அமைச்சுக்குத் தேவை.

அடுத்து எவ்வளவுதான் கற்றறிந்தாலும் நெஞ்சில் உறுதியில்லையானால், எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்ற முடியாது. அச்சமும் சோர்வும் குடிகொள்ளும். அறிவினால் ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு உறுதியாகச் செயற்பட வேண்டும். ஆக, அஞ்சாமையும் குடிப்பிறப் பிறப்பும் காக்குந் திறனும் கற்றறிந்த அறிவும் முயற்சியும் - ஆகிய இந்த ஐவகைப் பண்புகளும் அமைச்சரின் ஐம்புலன்களிலும் - ஐம்பொறிகளிலும் நிறைந்து நிலைபெற்றிருக்கவேண்டும். ஒருபொறி, சிறந்த பண்பிலீடுபட்டுப் பிறிதொருபொறி அதற்குத் தடையாக இருக்குமானால், செயற்பாட்டில் ஒருமை நிலவாது. செயலும் செப்பமாக அமையாது; பயனும் கிடைக்காது. ஆதலால் இந்தச் சிறந்த பண்புகள் ஐம்பொறிகளிலும் பெற்றிருக்கவேண்டும் என்று உரை கானுதலே சிறப்பு.

"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு”

(632)

என்பது குறள்.

தாழ்விலாச் செல்வர்


திருவள்ளுவர் அறநெறியாளர்; அரசியலறிஞர்; பொருளியல் மேதை சமுதாய இயல் அறிந்து இலக்கியம் படைத்த வல்லாளர். நாடு, மக்கள், அரசியல், சமுதாய அமைப்பு ஆகிய துறைகளில், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ரூஸோ, கார்ல் மார்க்ஸ் ஆகிய பேரறிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். ஏன்? அவர்களிலும் காலத்தால் முந்தித் தோன்றிய மூத்த அறிஞர் திருவள்ளுவர். இவர் இயற்றிய திருக்குறளை இலக்கியத் திறனாய்வு செய்தால் மட்டும்போதாது. சமுதாய இயல் ஒழுகலாற்றுத் துறையில் திறனாய்வு செய்தல் வேண்டும். அங்ங்னம் திறனாய்வு செய்யும்பொழுது, திருவள்ளுவர் காலத்தால் முந்தியவர் மட்டுமல்லர் கருத்தாலும் மூத்தவர்; மிகமிக முற்போக்கானதொரு கருத்துலகைச் சார்ந்தவர் என்ப புலனாகும்.

நாட்டுக்கு இலக்கணம் படைக்கின்றார் திருவள்ளுவர். நாடு என்பது ஓர் ஒப்பற்ற அமைப்பு. அந்நாட்டில் வாழும் மக்களுக்கு வயிற்றுச் சோற்றுக்கு வறுமையிருத்தல் கூடாது. ஆதலால் தள்ளா வினையுள் நாட்டுக்கு முதல் தேவை. நிலவளம் இன்றியமையாதது. நிலத்திற்கு இயல்பிலேயே ஒன்றைப் பதின் மடங்காகப் பெருக்கித் தரும் வளம் உண்டு. ஆயினும் பேணுவாரில்லையேல் அந்த வளம் வற்றிச் சுருங்கும். நாளுக்கு நாள் நிலத்திற்கு எரு முதலியன இட்டு வளம்குன்றாத நிலையில் பேணினால், இளமை குன்றாது. எழில் பூத்துக் குலுங்கிப் பயன் பல நல்கும். நிலத்திற்கு இளமை முறுக்கும் உண்டு. முதுமைத் தன்மையும் உண்டு. ஆனால் நிலத்தின் இளமையும் முதுமையும் பருவத்தால் வருவதன்று. பேணுதலால் இளமையும், பேணாமையினால் முதுமையும் வருகின்றன. சில நிலங்கள் தம்மைப் பேணு வாரின்மை காரணமாக - கொள்ளுதலின்றிக் கொடுப்பதறியா மாக்களிடம் சிக்கியதன் காரணமாக வலி விழந்து - பொலிவிழந்து காட்சிதரும். ஆங்கு மரமும் புல்லாகக் காட்சியளிக்கும். நில்த்தின் வற்றல் தன்மையை - முதுமையை, ஆங்குத் தோன்றும் புல்லும் காட்டும். பசுமை யற்று வெளிறிக் காட்சியளிக்கும்.

இத்தகு நிலத்திற்குத் தள்ளாமை வந்து விட்டது என்றும் கூறலாம். நிலம் மாறா இளமையிலிருக்க வேண்டும். மனிதனின் செய்யும் முறைகளினால், செப்பமாக்கப் பெறு தலின் "செய்” என்ற பெயராலேயே நிலம் வழங்கப் பெறுகிறது. எண்களில் கூட்டல் - கழித்தல், பெருக்கல், வகுத்தலிற் பிழை வராதது போல, நன்முறையில், பேணப் பெற்ற நிலத்தில் எதிர்பார்ப்பதும் பிழையாது. நிலம் பிழைப்பின் மனிதனின் பிழையே காரணமாகும்.

சில நிலம், மனிதனை எதிர்பார்க்காமலேயே வளமாக இருக்கும். பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திற்கு இந்த இயல்பு உண்டு. "பல்வளம் கெழீஇய பாரியின் பறம்புமலை உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து” என்று பாராட்டப் பெற்றுள்ளது. குறிஞ்சி நிலம் மலையும் மலைசார்ந்த இடமுமாகும். மலையோடு இணைந்தது சோலை. மலையிடை நிலவிவரும் மரங்கள், நிலத்தினின்றும் உரத்தை எடுத்துக் கொண்டு வளர்கின்றன. அந்நிலத்திற்குத் திரும்பவும் தம்முடைய சருகுகளை உரமாகத் தருகின்றன. அதுபோலவே தம்மை வளர்க்கும் நிலத்தைக் காய் கதிர் சுடாத வண்ணம், விரிந்த கிளைகளைப் பரப்பிப் பாதுகாத்து விடுகின்றன. தம்மிடம் பெய்த மழையை இறுக வைத்துப் பின்னர் அருஞ்சுனையாக மாற்றித் தரும் ஆற்றலும் மலைக்கு இருக்கிறது. உயர வளர்ந்தமையினாலும் மிக உயரிய பண்பாகிய தன்மையைப் பெற்றிருத்தலாலும், வானினைத் தடுத்து ஆட்கொண்டு மழை காண முடிகிறது. தண்ணளியிற் சிறந்த நெஞ்சமுடையார் பயன்பல காண்பர். இதுவே நெறியும் நியதியுமாகும். ஆதலின் குறிஞ்சி நிலத்திற்குப் பேணும் மனிதரின்றியே வளமுண்டு. மனிதன் அவற்றைப் பேணாமல் தள்ளினாலும், அவனை வெறுத்துத் தள்ளாவிளையுள் என்று பொருள் கொண்டால் பிழை யில்லை.

இங்ஙனம், கொள்ளலும், கொடுத்தலும் முறைமையி லுடைய கருப்பொருளை உடைமையினால் தான் போலும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை, இன்பம் கொடுத்தலும், கொள்ளுதலுமாகிய புணர்தல் என்று வகுத்தார்கள் போலும்!

அடுத்து, நிலத்திற்கு இன்றியமையாதது தக்கார் ஆவர். பொதுவாக மனித இனத்தில் "பகைப் பூண்டு" வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது. விருப்பு வெறுப்புக்களால் சமுதாயம் அலைக்கப்படுகிறது. காய்தல் உவத்தலின்றி மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்கும். தகைமையே தக்கார்க்கு இலக்கணமாகும். தக்காரையே சான்றோர் என்றும் அழைத்தல் மரபு. சான்றோருக்கு நபர்கள் முக்கியமல்லர். அவர்களுக்கு உற்றாருமில்லை; உறவினருமில்லை. அவர் களுக்கு அன்பினைக் காட்டுதற்கு எல்லை வரம்புகள் கிடையா. அதனாலேயே தக்கார் தகவிலார் என்பதை எச்சத்தால் அறியும்படி வள்ளுவம் கூறிற்று. "எச்சம்” எஞ்சி நிற்கும் புகழ். தம் சுற்றத்தாரிடையே புகழ் பெற்று விளங்குதற்குத் தகைமை வேண்டிய அவசியமில்லை. பரிவும், பாசமும் போதும். இன்று இதற்கே பஞ்சம்! ஆதலால் சாதி, இனம், மொழி, கட்சி வேறுபாடுகளின்றி அறம் நோக்கி மனித சமுதாயத்தினிடத்து அன்பு செலுத்துகின்ற தக்கார் நாட்டிடை இருந்தால் தான் மோதல்கள் தவிர்க்கப் பெறும். உறவு முறை வளரும். ஆதலால் தக்கார் நாட்டிற்கு இன்றியமையாதவர் என்றார்.

தள்ளா விளையுளைச் சார்ந்து தக்காரைச் சொன்னதற்குக் காரணம் யாதெனின், தள்ளா வினையுள் இருந்தும். விளை பொருள் பல்கிப் பெருகியும், ஒருவரோடொருவர் உறவு கலந்து பங்கிட்டு உண்ணும் நெறி முறைக்கு அறநெறியிற் செலுத்தும், தக்கார் இலராயின் தள்ளா விளையுளால் ஆய பயன் இல்லாமற் போகிறது. அதனாலேயே தள்ளா விளையுளைச் சார்ந்து தக்காரைக் கூறினார்.

அடுத்து நாட்டிற்குத் தேவை தாழ்விலாச் செல்வர் என்பது வள்ளுவத்தின் கருத்து. குறைவுபடாச் செல்வமுடையர் என்று பரிமேலழகர் எழுதுகிறார். செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்பது வள்ளுவத்தின் கருத்தாக இருக்க முடியாது. அங்ங்ணமாயின் நத்தம் போற்கேடு என்ற குறளோடு முரண்படும். செல்வத்தின் பயன் ஈதலும், துய்த்தலுமேயாம். செல்வமுடையானை மருந்து மரம் போல வடுக்கள் பெற்றும், உறுப்புக்களை யிழந்தும், மனித குலத்திற்குப் பயன்பட வாழ்க என்று குறிப்பிடுவார். அதோடு தாழ்தல் என்ற சொல் குறைவு படுதல் என்ற பொருளில் வழங்கப்படுதல் பெருவழக்கில் இல்லை. 'தாழ்தல்' என்ற சொல் பெரும்பாலும் துலாக் கோலில் - தூக்கும்போது தட்டுகள் உயர்தலும் தாழ்தலும் என்ற வழக்கு நிலவுகிறது.

துலாக் கோலின் தட்டுக்கள் சமமாக இல்லாமல் ஒன்று கீழிறங்குவதைத் 'தட்டு தாழ்கிறது' என்று சொல்லுதல் நாடறிந்த வழக்கு. ஒருவனுடைய உரிமையின் பாற்பட்ட செல்வமுடைமையை ஒரு தட்டிலும், பிறிதொரு தட்டில் அவனது தனித் திறன்களையும் இட்டுச் சீர்தூக்கும் பொழுதும் செல்வமுடைமைத் தட்டுக்கு அவனுடைய திறன்களின் தட்டு தாழாமல் இருக்க வேண்டும். உழைக்கும் திறன், அறிவாற்றல் ஆகியவற்றினுடைய தகுதிக்கேற்பவே செல்வமுடைமை இருக்க வேண்டும். அப்படியாயின் திருவள்ளுவர் உழைப்பின் வழிவரும் செல்வமுடைமையைத் தான் செல்வமெனக் கருதுகிறார். வழி வழிச் செல்வமுடைமை வள்ளுவரால் மறுக்கப்படுகிறது. வள்ளுவர் காலத்தும் பொருட் செல்வம் யாதொரு திறனுமற்ற பூரியர் கண்ணும் இடம் பெற்றிருந்தமையை அவரே "பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்று கூறுகிறார். ஆதலால் "தாழ்விலாச் செல்வர்” என்பதற்குத் தன்னுடைய உடைமையின் மதிப்புக்களை நோக்கத் தனித் திறன்களில் தாழாதவர்கள் - அதாவது செல்வமுடைமைக்குத் தகுதியானவர்கள் நாட்டுக்குத் தேவை என்பதாகும்.

செல்வத்தின் ஊற்று உழைப்புத் திறனேயாகும். இவ்வூற்றுடையோர் மேலும், மேலும் செல்வம் பெருக்குவர் என்பதனால், தேக்கமடையாத - தேக்கமடைய முடியாத மனிதனின் திறன்களை முதன்மைப்படுத்தியே "தாழ்விலாச் செல்வர்" என்று அருளினார்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” (731

என்பது குறள்.

வகுத்தான் யார்?

னித வாழ்க்கையிலும், இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் ஊழின் உண்மையும் வலிமையும் வலியுறுத்தப் பெறுகின்றன. அண்மைக்கால முற்போக்குச் சிந்தனை யாளர்கள் ஊழின் உண்மையை மறுக்கின்றனர். ஊழைப் பற்றிய தெளிவான அறிவின்மையால், மனித வாழ்க்கை யிலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன. இது, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

"ஊழின் உண்மை மறுக்க முடியாத ஒன்று. ஊழை மறுப்பதால் உலகாயதமே வளரும், பயனில்லை. ஊழ் தெய்வீக சக்தியுடையது. அது மாற்ற முடியாதது; அழிக்க முடியாதது” என்றெல்லாம் கருதுவது பேதைமை. ஊழ் உடல் தொடர்புடையதன்று. அஃது உயிர்த் தொடர்புடையது. உயிரின் நேற்றைய, அதற்கு முந்திய சிந்தனை - அதன் வழிப்பட்ட செயல் ஆகியவற்றின் பதிவுகளுக்கே ஊழ் என்று பெயர். ஒன்று, பிறிதொன்றின் விளைவு. விளைவற்ற சிந்தனையும், செயலும் உலகில் இல்லை . உயிர்கள் தாம் எண்ணிய - நினைத்த - உடலின் துணை கொண்டு செய்த செயல்களின் பயன்களை அவை அனுபவிக்கத் துணை நிற்பதற்கே ஊழ் என்று பெயர். நேற்றையச் சிந்தனை -- செயல் நல்ல வண்ணமாக இருக்குமானால், நல்லூழ். அவை தீயனவாக இருக்குமானால் தீயூழ் 'விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?' என்ற பழமொழியுங்கூட இந்தக் கருத்தினை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது;

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" (377)

என்ற திருக்குறள் ஊழின் வலிமையை உணர்த்தும் குறள். இந்தக் குறட்பாவில் 'வகுத்தான்' என்ற சொல்லுக்கு தெய்வம்' என்று பொருள் கொள்ளுகின்றார் பரிமேலழகர்.

தி.23. ஊழிற்குத் தெய்வம் என்று மறுபெயர் உள்ளமையான், உரை பொருத்தமானதேயாம். ஆனாலும், தெய்வம் என்ற சொல்லை, கடவுள் என்ற வழக்கில் பொதுமக்கள் நம்புவதால் கடவுள் விட்ட வழி என்று கருதுகின்றார்கள். ஊழிற்கும் கடவுளுக்கும் உறவில்லை. ஊழிற்கு மனித ஆற்றலினும் மிகுந்த பேராற்றலும் இல்லை. வகுத்தான் என்ற சொல் மனிதனையே குறிக்கும். மனிதன் தன் உள் உணர்வுகளால் என்ன நினைத்தானோ அச்செயல்களின் விளைவையே அவன் அனுபவிக்க வேண்டும். சில பொழுது உள் நினைப்பு ஒன்றாகவும் செயல் அதற்கு மாறுபட்டதாகவும் இருக்கும். பலன் நினைப்பிற்கேயன்றிச் செயலுக்கல்ல. இதனை மாதவச் சிவஞான முனிவரும் சிவச் சிந்தனையோடு செய்யும் பாவமும் அறமாகும். சிவச் சிந்தனையின்றிச் செய்யும் அறமும் பாவமாகும் என்கிறார். செயலைவிட நினைவிற்கே வலிமை அதிகம். ஆதலால், ஒருவன் தன் உள்ளத்தால் ஒன்றை வகுத்துக்கொண்ட வழி நின்று வேறு வகையாக அனுபவிக்க முடியாது என்பதே இக்குறட்பாவின் கருத்து.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" (377)
செய்க பொருளை

பொருளியல் சாத்திரம் மிகவும் நுட்பமானதொன்று. பொருளியல் பற்றிய அறிவு மக்களிடத்து மிகுந்தாலேயே நாட்டுப் பொருளியலின் தரம் நிலைபேறுடையதாக இருக்க முடியும். அரசு பணமுடைப்படுகிறது என்று சொன்னால், அரசுக்கு என்ன பணமுடை? அவர்கள்தாம் நோட்டு (Currency Notes) அடித்துக் கொள்ளலாமே என்று அறியாத மக்கள் சொல்லுகிறார்கள். நாட்டில் உள்ள பொருள் ஆக்கத்திற்கு ஏற்றவாறே நாணயங்களை. நோட்டுகளை அரசு வெளியிட முடியும். பொருளின் மதிப்பைத் தாங்கி வருகின்ற ஒரு சின்னமே நாணயம். பொருளின்றிச் சின்னம் இருப்பின் மதிப்பிராது.

பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும்கூட பொன் வேறு, பொருள் வேறு என்று பகுத்துப் பிரித்தே பேசப்பட்டு வந்திருக்கிறது. பரிபாடல் பொன் பொருள் போகம் என்று முறை வைத்துப் பேசுகின்றது.

மக்களினத்தில் சுலபமான பொருள் கொடுக்கல் வாங்கலுக்காக (பரிவர்த்தனைக்காக) நாணயமாற்று முறை வந்ததேயொழிய நாணயத்தின் செல்வாக்குப் பெருகுவதற்காக அன்று. ஆனால் சாதாரண மக்களிடத்தில் நாணயத்திற்கு மதிப்புக் கூடி, பொருளுக்கு மதிப்புக் குறைந்து விட்டது. ரூ. 1000 பெருமதிப்புடைய மாடுகள் வைத்திருப்பவனை நாடு மதிப்பதில்லை. ஆனால் ஒரு தங்க மோதிரம் போட்டவனை நாடு மதிக்கிறது. 40 ரூபாய் விலை மதிப்புள்ள நெல்லை, அணிலும் எலியும் தின்ன, போதிய பாதுகாப்பின்றி வெளியில் போட்டிருக்கிறான். ஆனால் 25 பைசா நாணயத்தைத் துணியில் முடிந்து, பெட்டியில் பூட்டிப் பத்திரப்படுத்துகின்றான். மக்கள் இப்படியிருந்ததால் ஆட்சியாளர் வரிகள் மூலம் நாணயம் திரட்டிக் குவித்தனர். இப்படி நாணயத்தின் மதிப்புப் பெருகியதால் பொருள் செய்யும் விருப்புக் குறைந்து பணம் சம்பாதிக்கும் ஆசை பெருகியது. அதனால் மறைமுகமான சுரண்டல் முறைச் சமுதாயம் தோன்றியது. வட்டித் தொழில், வாணிகம் போன்ற அதிக உழைப்புத் தேவையில்லாத - உற்பத்திக்கே தொடர்பில்லாத - குறுகிய வழி முறைகளில் அல்லது இரவு முதலிய இழிவான வழிகளில் பணத்தை அடைய முயலும் எண்ணம் வளர்ந்தது. நாட்டின் பொருள் வளம் சீர்குலைந்தது. வறுமை பெருகியது. இதனையுணர்ந்த திருவள்ளுவர் பணத்தின் மீது இருக்கும் ஆசையைப் பொருள் உற்பத்தியின் மீது திருப்ப விரும்புகிறார். நாட்டின் முதல் மனிதனாகிய அரசனைப் பார்த்துக் கேட்கிறார் - இல்லை - கோபக் குறியுடன் ஆணையிடுகிறார். வரி - வரி என்று நாணயங்களை வாங்கிக் குவிப்பதற்குப் பதிலாக, அயல் நாடுகளிலிருந்தெல்லாம் செல்வத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமான - அவர்கள் விரும்பும் பொருள்களைச் செய்க! அவ்வழி நாட்டை நடத்துக என்று ஆணையிடுகின்றார். அப்பொழுது பகையொடுங்கும்! பார் செழிக்கும்!

"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்" (759)

சோரவிடுக!

ருவன் எத்தனையோ - எண்ணிக் காண முடியாத அருஞ் செயல்களைச் செய்ய மண்ணில் பிறந்தான். மக்கள் வாழ்க்கையே செயல் முடித்தலின் பாற்பட்டது. நற்செயலைச் செய்வதற்கே உயிர் வாழ வேண்டும். அழிவறிந்த ஆள்வினையும் செயலுமற்ற வாழ்க்கை வாழ்க்கையாமோ? கறங்கெனச் சுற்றும் கால தேவதையின் சுழலிற்பட்டு அழியும் வாழ்க்கை அவல வாழ்க்கை. இந்த வாழ்க்கையுடையவர்கள் உண்பதும் கேடு உண்டு நடமாடித் திரிவதும் கேடு; இங்ஙனம், செயல் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ளவே ஒருவன் இன்னொருவனோடு உறவு கொள்ளுகிறான். இந்தப் பழக்கம் எந்த வகையில் அமைந்தாலும் - குருதி வழிப்பட்ட உறவானாலும் - தொழில் வழிப்பட்ட அலுவல் முறையானாலும் - அல்லது இவ்விரண்டினும் வளர்ந்து மேம்பட்டதாகக் கருதப்பெறும் நட்பாயினும் அல்லது காதல் வழிப்பட்ட வாழ்க்கைத் துணையானாலும் எல்லாமே, ஒருவர் தாம் எண்ணிய கருமம் செய்து முடிக்க பெறுந்துணையேயாம். ஒரு வகையில் நட்பேயாகும். இந்த மனப்போக்கில் இன்றைய சமுதாயத்தில் சிலர் இணைந்து வாழும் இயல்புகளை ஆராய்ந்தால் வேதனையே மிகும். ஆங்கு, அந்த இணைப்பிலும் உறவிலும், குறிக்கோள் வேட்கை இல்லை. செயல் பற்றிய எண்ணமே இல்லை. பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்பைக் குறியாக வைத்தே நடைபெறுகின்றன. ஒரு பகுதி செல்வாக்குப் பெறும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. பிறிதொரு பகுதி யாதும் குறியற்ற இன்பப்பொழுது போக்காக அமைந்துவிடுகிறது. இந்த அடிப்படைகளில் ஏற்படும் உறவுகளினாலோ, நட்புகளினாலோ யாதொரு பயனுமில்லை. இத்தகைய நட்பு - காதல் உறவில் வீணாகும். காலமும் பொருளும், வெற்றடுப்பில் விறகெரித்தது போலாகும். அப்படியெரித்தாலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அணைத்தால் கரியாவது கிடைக்கும். இந்த உறவில் எதுவுமில்லை. இங்ஙனம் வீணாகும் உறவில் கூடி வாழ்வோரை வீடுகள்தோறும் பார்க்கிறோம்; மடங்கள்தோறும் பார்க்கிறோம்; தெருக்கோடிகளில் பார்க்கிறோம்; திண்ணைகளில் பார்க்கிறோம்; மன்ற மனைகளில் பார்க்கிறோம்; எங்கெங்கோ பார்க்கிறோம்!

இன்று எந்த ஒருவனும் தனித்திருப்பதில்லை. இந்த உயரிய பேராற்றலை மாந்தன் இழந்து எத்தனையோ நாளாயின. கூடிக் கூடிக் குலவுகின்றார்கள்; குழைகிறார்கள்; சிரித்துப் பேசுகிறார்கள்; என்னென்னவோ வேலை செய்வது போலக் கைகளும் வேலை செய்கின்றன. ஆனால் விளைந்த பயனோ, அம்மம்ம! நம்மைச் சூழ்ந்துள்ள வறுமையேயாம். வளத்தில் மட்டும் வறுமையன்று. அன்பிலும் வறுமை ஏற்பட்டிருக்கிறது! ஆதலாலன்றோ பலநாள் பழகிய பின்பும் பகைமை கால் கொள்கிறது; வஞ்சினம் மேலிடுகிறது; வாழ்க்கை சூறையாடப்படுகிறது. இத்தகு இயல்புகள் நிறைந்த மாந்தர் வாழ்க்கை - இல்லை! இல்லை! விலங்கு வாழ்க்கை மன்னிக்க முடியாத ஒன்று.

இப்படியெல்லாம் அழிவதற்கு எல்லோரும் செய்யத் தெரியாதவர்களா? அல்லது செய்யத்தான் முடியாதவர்களா? மக்களால் முடியாததொன்றும் உண்டோ? மாந்தன் வளர்ந்தால் மாதேவனும் மடிதற்று முன்வந்து ஏவல் கேட்கிறான். இல்லத்தின் முன்பு எளிய பணியாளனாக நிற்கிறான். மாந்தனால் முடியும். நம்முடைய நண்பனாலேயே முடியும்; நம்முடைய அலுவலராலேயே முடியும்; நம்முடைய உயிர்த் துணைகளாலேயே முடியும்; இது முக்காலும் உண்மை. ஆனால், அவர்கள் மனம் வைத்துச் செய்தால் தானே! அவர்களுக்குத் தான் செய்வதற்கு நோக்கமில்லையே! ஆதலால், என்னால் முடியுமா என்று வினாவுகிறார்கள்; முன் பட்டறிவு வேண்டாமா என்கிறார்கள்; வேலை அதிகம் என்று சொல்கிறார்கள்; சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்கிறார்கள்; காலம் ஒத்துவரவில்லை என்கிறார்கள்; வீட்டில் இடர்ப்பாடாக இருக்கிறது என்கிறார்கள்; இடுக்கண் நீங்கி மன அமைதியாக இருந்தால் தானே வேலை பார்க்கலாம் என்கிறார்கள்; மனநிறைவு என்ற தேவதையே, உழைப்பாளரின் உளவழிபாட்டுத் தேவதை என்பதை அறியாமல், "ஒரு கை தட்டினால் ஒலியெழுப்புமோ? இரண்டு கைகளும் தட்டவேண்டாமா?" என்கிறார்கள்; முடிந்த வரையில் செய்திருக்கிறோம் என்கிறார்கள்; நம் முயற்சியில் இவ்வளவுதான் முடிந்தது என்கிறார்கள்; நம் முயற்சியில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் முடியாது என்கிறார்கள்; தவறிப்போய்விட்டது என்கிறார்கள்; மறந்து போய்விட்டது என்கிறார்கள்; செய்யக்கூடாதென்றோ எண்ணுகிறோம் என்கிறார்கள்; உயிர் மேல் உயிர் வைத்திருப்பதாகக் கசக்கியெடுக்கும் கண்ணீரில் காட்டுகிறார்கள்; பெரிய கும்பிடு போடுகிறார்கள்; செயலாற்ற மாட்டாத சவலை வாழ்க்கை வாழ்வோர் கையாளும் முறைகளை முன்னே கண்டோம்!

மேலே கூறிய இயல்புகளுடையவர்களின் நட்பைத் திருவள்ளுவர், தீ நட்பு என்றே கூறுகிறார்.

"ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை

சொல்லாடார் சோர விடல்"

(818)

என்பது குறள். திருவள்ளுவர் தெளிவாகத் தொடங்குகின்றார். "ஒல்லும் கருமம்" என்று குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் செய்து முடிக்கக்கூடிய கருமம் என்றே கூறுகிறார்; ஆனால் அவர்களுக்கோ மனமில்லை. தம் வலிமையை எளிமையாக்குகிறார். ஊதியம், பெருமை, பரிசு ஆகியன பெறுங்காலத்தில் தம்மை உயர்வுடையோராக்கிக் காட்டமுயலுபவர் கருமத்தின் முன்னே அதைச் செய்ய விருப்பமின்றி - கருமத்தைச் செய்யாது - சோம்பலைச் செய்தலினாலே அந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய பொய்ப்பெருமையை வீழாது காக்க விரும்பிக் கருமத்தைக் கடுமையானதாக்குகிறார். எளிதில் முடியக்கூடிய ஒன்றை - முடியக்கூடாத ஒரு பெரிய காரியமாக முயன்று ஆக்குகிறார். அற்பக் கடமைகள் மலையென ஆக்கப்படுகின்றன. மலையணைய மாந்தன் அற்பமாகின்றான். கேட்பவர் மனங்குழம்பச் சிக்கல் இல்லாத கருமத்தைச் சிக்கலுடையதாக்கி "இது என்றும் . அது என்றும்" போட்டு உழப்பி, மயக்கமடையச் செய்கின்றனர். இத்தகையோர் நட்பைப் பெறற்க! அவரிடம் அத்தவறுகள் குறித்துப் பேசவேண்டா என்று ஆணையிடுகிறார் வள்ளுவர். ஏனெனில் எத்தனை தடவைதான் அறியச் சொன்னாலும், அவர்கள் அதுபோது அறிந்து கொண்டதுபோலத் தோன்றினும் பின்னும் அதை மறந்து தம் இயல்பிலேயே செல்வர். நட்பாய் ஒழுகுவர். ஆயினும் நட்பாய் விளங்க மாட்டார்கள். எடுத்து சொல்லித் திருத்த முயற்சி செய்வதன் மூலம் நாம் அந்த நட்பை இழக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாகிறோம். காரணம், பாசம் வேர்விடும். பயனற்ற நட்பில் - உறவில் பாசம் வேர்விடுதல் நம்முடைய ஆற்றலையும் ஆக்கத்தையும் கெடுக்கும். ஆதலால், அத்தகையோர் நட்பை - உறவை ஒரு காலைக்கு ஒரு காலையாக ஓயவிட்டுப் பைய விலகிக்கொள்க! என்று கற்றுக் கொடுக்கிறார். நட்பு - உறவு என்ற ஒன்று உடனடியாக முறிதல் இயல்பன்றானமையின் 'சோரவிடுக' என்கிறார். பழகிய நட்பை - உறவை விலக்கவும் பலநாள் பிடிக்கும் என்பது பெறப்படுகிறது. இங்ஙனம் இந்தத் தெளிந்த வாழ்வியலை வடித்துத் தரும் வள்ளுவரின் பெருமை நினைந்து இன்புறத் தக்கது.
நிலமும் உரிமையும்

னித சமுதாய அமைப்பில் நிலவுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயிற்று. வேறு உடைமைகள் உணர்வும், அறிவும் தோன்றுதற்கு முன்னே தோன்றியது நிலவுடைமைச் சமுதாய அமைப்பு. தொடக்கத்தில் உழைப்பின் வழியாகவே உரிமையும் கிடைத்திருக்கக்கூடும். காலப்போக்கில் உரிமையும், உழைப்பும் வேறுபட்டன ஆயின. உழைப்பாரிடத்தில் உரிமையிருப்பதில்லை - உரிமையுடையார் உழைப்பதில்லை என்ற நிலைமை தோன்றிற்று. திருவள்ளுவர் காலத்தில் உரிமையும் உழைப்பும் பிரிக்கப்பெறவில்லை. உழைப்பாளரிடத்திலேயே நிலத்தின் உரிமையும் இருந்திருக்கிறது. நிலத்திற்கு உரிமையுடையவனைக் "கிழவன்" என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். உழவு என்ற அதிகாரத்தில் உழவனைப் பற்றிப் பேசுகிறார். உழவனே உழுதுண்டு வாழ்கிறான். மற்றவர்கள் தொழுது பின் செல்கிறார்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். உழாதவன், அதாவது உழைக்காதவன் உண்பதற்கும் உரிமையில்லாதவன். ஆயினும் தொழுது இரந்து செல்வதால் உழைக்காதவனுக்கும் பிழைப்பு நடக்கிறது.

வள்ளுவர், உழவனை - உழைத்து உற்பத்தி செய்பவனைப் புகழ்ந்து பாராட்டுகின்றார். உழைக்காதவனை எள்ளி நகையாடுகிறார். "நிலமென்னும் நல்லாள் நகும்" என்று கூறி நகைக்கின்றார். இங்ஙனம், உழுபவனை உயர்த்திய திருவள்ளுவர், அவனையே நிலத்திற்குரிய கிழவனாகக் கருதி யிருக்க வேண்டும். நிலவுடைமைச் சமுதாயமென்றும், உழவர் சமுதாயமென்றும் இரு வேறு பிரிவு திருவள்ளுவர் காலத்திலிருக்க நியாயமில்லை. கணவனுக்கும் மனைவிக்குமுள்ள உரிமையைப் போன்றதோர் உரிமையை நிலத்திற்கும் கிழவனுக்கும் திருவள்ளுவர் கற்பிக்கின்றார். கணவனுக்கு மனைவி உரிமையுடையவள். அவனே, அவளை முழுதுறப் பயன்படுத்துதற்கு உடையவன். அதிலும் தமிழக மரபில் ஒருவர் மனைவியைப் பிறிதோர் ஆடவர் நெஞ்சினால் நினைத்தற்கும் உரிமையுடையவரல்லர். "மறந்தும் பிறர் நெஞ்சு புகாள்" என்று மணிமேகலை கூறும். "பிறர்மனை நயவாமை" என்றே ஓரதிகாரம் வைத்தார் வள்ளுவர். பெருமான். நிலத்திற்கும், அதன் உடைமையாளனுக்கும் உள்ள உரிமையைப் போன்றது என்று கூறுவதால் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு நில உடைமைக்கும், உழைப்புக்கும் இடையில் மனிதர்கள் இல்லையென்பதும் திருவள்ளுவர் காலத்தில் பைய நில உடைமைச் சமுதாயம் தலைகாட்டியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

நிலத்திற்கு உரியவன் நிலத்திற்குப் போகாதிருப்பானாகில் வீட்டிற்கு வராத கணவனிடம் மனைவி கோபித்துக் கொள்வதைப்போல நிலமும் புலந்து விளையாது என்று வள்ளுவர் பேசுகிறார். "செல்லான் கிழவன் இருப்பின்" என்பது வள்ளுவர் வாக்கு. "செல்லான்" "இருப்பின்" என்ற சொற்கள் அவர் காலத்தில் கால்கொள்ளும் நில உடைமைச் சமுதாயத்தைத் தெளிவாக விளக்குகின்றன. நிலத்திற்கு உரிமையுடையவன் நிலத்தை நாள்தோறும் பேணுகின்றவனாக இருக்கவேண்டும். இந்திய நாட்டின் வேளாண்மை குன்றி, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கே காரணம், நிலவுடைமைச் சமுதாய அமைப்பேயாகும். உடைமையாளன் எங்கோ வாழ்கிறான். உழைப்பாளன் கையில் காசில்லை. அவன் பரம்பரை ஏழை. செல்வத்தில் மட்டு மல்ல, சிந்தனையிலும்கூட. ஆதலால், தரமான வேளாண்மை யில்லை; பொருள்வளம் குறைந்தது. நாள்தோறும் கணவனை இல்லில் கண்டு மகிழாத மனைவி, துன்புறுதல் இயற்கை அவளைப் பேணுவார் யார்? அவரவர்களையே பேணிக் கொள்ளுதல் அண்மைக் காலத்து வழக்கு; சமுதாயச் சீர்கேட்டில் தோன்றிய வழக்கு. ஒருவர் பிறிதொருவரைப் பேணுதலே பெருமைக்குரியது. கணவன் மனைவியைப் பேணவும்; மனைவி, கணவனைப் பேணவும் கடமையை மேற்கொள்ளுகின்றனர். அள்ளி உண்பதைவிட ஊட்டி உண்பது சுவை. எடுத்து உண்பதைவிடக் கொடுத்து உண்பது சுவை. சிரித்து மகிழ்வதைவிடச் சிரிக்கக்கண்டு மகிழ்வது சிறப்பு. தன்னையே கண்ணாடியில் கண்டு மகிழ்வதைவிடத் தன்னைக் கண்டு மகிழும் பிறிதோருயிர் நிழலாடியைக் கண்டு மகிழ்தல் மகிழ்ச்சியுளெல்லாம் தலை.

அதனாலன்றோ தமிழிலக்கிய மரபில் காதலர்ப் பிரிவு பேரிலக்கியங்களாக வடிவம் பெற்றன. "செல்லாமை உண்டேல் எனக்குரை" என்பது வள்ளுவர் கால வழக்கம். இன்றோ வையகத்தில் வழியனுப்பும் விழா நடத்துகிறார்கள்.

நில உடைமையும், உழைப்பும் பிரிக்கமுடியாத ஒன்று. தமிழ்ப் பண்பில் கணவன் மனைவி உறவு, மிகப் பழைய காலத்திலே தூய்மையானதாகக் கருதப் பெற்றது. ஒரு பிறப்பில் மட்டும் கணவன் மனைவி அல்லர். ஏழு பிறப்பிலும் கணவன் மனைவி என்பது தமிழர் கருத்து. ஒருவனுக்கே ஒருத்தி உரிமையுடையவள். அவனுக்கும் அவளுக்குமுள்ள உறவே கற்பு. அவன் கற்புடையவளாகவே இருந்தாள். இந்த அடிப்படையிலேயே இளங்கோவும் "கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி" என்று பாடுகிறார்.

தமிழ் மரபில் ஒருத்தி பலரை மணத்தலோ, ஒருத்தி பலருக்கு உரிமையாக இருத்தலோ அறவே இல்லை. பரத்தையர்கூட ஒருவனிடத்திலே இருந்தனர். மனைவியாக இல்லாத குறையே தவிர, பரத்தையரும் ஒருவனிடத்திலேயே இருந்து வாழ்ந்தார்கள். பொதுமகளிர் வழக்கு மிகப் பிற்காலத்திலேயே தமிழ்ச் சமுதாயத்தில் கால்கொண்டது. ஒருத்தி பலருக்குப் பெண்டாக இருக்கலாம் என்ற இதிகாச மரபு தமிழகத்திற்கு வந்த பிறகே பொதுமகளிர் தோன்றியிருக்கவேண்டும். அதற்குச் சான்று, பரத்தையர் குலத்தைச் சார்ந்த மாதவி, சமூகப் பழக்கத்தால் மனைவியாக வாழவில்லையே தவிர, ஒரு சிறந்த மனைவியாகவே கடமையைச் செய்திருக்கிறாள். அந்த வகையில் கண்ணகியையும் மாதவி விஞ்சியிருக்கிறாள். தென்றல் போலத் திரிந்த கோவலனைத் தன் வழிப்படுத்தியிருக்கிறாள். அதாவது தன்னைத் தவிர, வேறொரு பெண்ணை நாடச் செய்யாது செய்திருக்கிறாள். மாதவியைப் பிரிந்தவுடனும், வேறொரு பரத்தையை நாடாமல் கண்ணகியை நாடிவரச் செய்திருக்கிறாள். இந்த இடைக்காலத்தில் கோவலனை, மாதவி செழுமையுற வளர்த்திருக்கிறாள் என்பதை யார் மறுக்க முடியும்?

ஆதலால், கணவன் மனைவி உறவு பெண்ணைப் பொறுத்த வரையில் ஒருவனேதான். அதனாலேயே அவனைப் பிரிந்துழி பரிவும் புலம்பலும் ஏற்படுகிறது. பெண்ணுக்கும் பலராக ஆகுமானால் பிரிவுமில்லை, பரிவுமில்லை. கணவனைப் பிரிந்த காரிகையின் பரிவு நிறைந்த புலம்பலை, ஒருவன் ஒருத்தி என்ற மரபு வழிப்பட்ட இராமகாதையில் பார்க்கமுடிகிறது. இராமனைப் பிரிந்த சீதையின் பிரிவுக்கு - வருத்தத்திற்கு இணையேது, ஈடேது? அத்தகைய ஒரு பரிவையும் வருத்தத்தையும் நாம் பாஞ்சாலியிடத்துப் பார்க்கமுடியவில்லை.

நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்திற்குச் செல்லாது போனால் - கடமையின் காரணமாக வெளியிற்சென்ற கணவன் உரியபொழுது, வீட்டிற்கு வராது போனால் - கணவனிடத்தில் மனைவி புலத்தலைப் போல நிலமகளும் ஊடிப் பிணக்குக் கொள்ளும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஆதலால் நிலத்திற்கு நாள்தோறும் வருகின்றவனே - வந்து உழைப்பவனே நிலத்திற்கு உரிமையுடையவனாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் என்பது தெளிவாகப் பெறப்படுகிறது. ஆக உழைப்பவர்களிடத்திலேயே உற்பத்தி கேந்திரங்கள் இருக்கவேண்டுமென்ற இன்றைய சமுதாயத்தின் முற்போக்குக் கருத்து திருவள்ளுவரால் அன்றே ஏற்றுக்கொள்ளப் பெற்றிருக்கிறது. இந்தத் திருக்குறள் சிறந்த எடுத்துக்காட்டு.

"செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலத்து

இல்லாளின் ஊடி விடும்"

(1039)

என்பது குறள்.

அறம்சாரா வறுமைக்கு ஆதரவில்லை!

றுமை மிகமிகக் கொடுமையானது. "பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்" என்ற மாணிக்கவாசகரும்கூட நல்குரவைத் "தொல்விடம்" என்று வருணித்தார். விடத்திலும் கொடியது வறுமை. வறுமை, நலத்தினைக் கெடுக்கும்; அறிவைப் பேதலிக்கச் செய்யும்; ஆற்றலைக் கெடுக்கும்; ஆள்வினையின் திறனைக் குறைக்கும்; மதிப்பைக் கெடுக்கும்; அவமதிப்பைத் தரும்; உறவைக் கெடுத்துப் பகையை வளர்க்கும். ஆதலால், வறுமை எந்தவகையிலும் கொடியது. அதனை எதிர்த்து முற்றாக ஒழிப்பது மனித குலத்திற்கு நல்லது.

ஆனால், வறுமைக்கு மாற்று, இரத்தலாக முடியாது. வறுமைக்கு மாற்று வளமேயாகும். இரத்தலின் மூலம் வறுமை தற்காலிகமாகவே மறைகிறது. அஃதொரு நிரந்தரமான மாற்றாக இருக்க முடியாது. வறுமைக்கு மாற்று, உழைப்பேயாம். உழைத்துச் செல்வம் பெருக்கினால் மட்டும் வறுமை போய்விடாது. திட்டமிட்ட வாழ்க்கை வேண்டும். பொருட் செல்வத்தைப் போற்றவேண்டும். தேவைப்பட்டியல் பெருகினாலும் வறுமை வந்தடையும். ஊரைப் பார்த்தோ, நாட்டைப் பார்த்தோ நம்முடைய தேவையை உறுதி செய்துகொள்ள முடியாது. நம்முடைய தேவையை நிர்ணயிப்பதற்கு நம்முடைய உழைப்புத்திறனும், அவ்வழி படைக்கும் படைப்புமே மையமாக இருக்கவேண்டும்.

இரந்தோ, கையூட்டு வாங்கியோ, கடன் பெற்றோ அரிசிச்சோறு சாப்பிடுவதிலும் உழைத்து கேழ்வரகுக் களி சாப்பிடுவது பாவமாகாது. இயற்கையின் நியதி எல்லாத் தரப்பு மனிதர்களுக்கும் இடந்தருவதாகவே அமைந்திருக்கிறது. அரிசிச் சோற்றுக்குக் கேழ்வரகு உணவு ஊட்டச் சத்தில் இம்மியும் குறைந்ததன்று. இருக்கும் பிரச்சினையெல்லாம் கௌரவம்தான். ‘காபிக்கு’ சோற்று நீரோ, நீர்மோரோ பயன் தருவதில் இம்மியும் குறைந்ததல்ல. ஆனால், இன்றைய சமூகத்தில் ‘காபி’ கௌரவப் பொருளாகிவிட்டது. செல்வப் பற்றாக்குறை இருக்கும் நாட்டில், இத்தகைய மனப் போக்குகள் இருக்கும் வரையில் உடைமை இல்லாதவனுக்கும் வாழ்க்கையில்லை. உடைமையானவனுக்கும் வாழ்க்கையில்லை.

உழைக்காத - திட்டமிட்டு வாழாத சிலருக்கு உறவு - நட்பு - மரியாதை - தயவு - தாட்சண்யம் என்ற பெயரால் உடைமைக்காரர்கள் மூலம் வழங்கப்பெற்றபொருள், மீண்டும் பொருளுற்பத்திக்குப் பயன்படாமையின் காரணமாக, உடைமையுடையவர்களையும் காலப்போக்கில் வறுமை வந்து வாட்டுகிறது. அதற்குப் பயந்து, கொடுக்கும் மனமுடையவர்கள்கூடக் காலப்போக்கில் மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு அவர்களையே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி வந்துவிடுகிறது.

உடையவர்கள், இல்லாதவர்களுக்கு உழைத்துத் தொழில் செய்து முன்னேறுவதற்குரிய வாய்ப்புக்களைத்தான் வழங்கலாம். முதலுதவியாகச் செல்வ உற்பத்திக்குப் பயன்படக்கூடிய களத்தினையும் கருவிகளையும் வழங்கலாம். சமூகத்தில், உடையவனுக்குரிய கடமை அது. வறியவன் தான் பெற்ற களத்தினையும் கருவியையும் முறையாகப் பயன்படுத்தித் திட்டமிட்டு உழைத்து உற்பத்தியைப் பெருக்கி நெறிபட வாழ்ந்து தன்னுடைய செல்வத் தகுதியை வளர்த்துப் பேணிக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இதுவே வாழ்க்கை முறை.

இப்படி வாழும் ஒருவருக்கு எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமூகம் பொதுவாகவும், உடையவர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவி செய்து ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே தமிழர் இல்லங்களில் நிகழும் திருமணங்கள் - மரணங்களில் மொய் எழுதுதல் என்ற வழக்கம் ஏற்பட்டது. ஒருவன் செல்வமுடையவனாக இருப்பதை வறுமையுடையவர்கள் கண்டு, அந்தச் செல்வம் சேர்ந்ததற்குரிய நெறி முறைகளில் நியாயமானவைகளை, தான் ஏற்று நடவாமல் அழுக்காறு கொள்வதனால் மட்டும் பயன் விளையாது. அல்லது கொடுத்தால் என்ன, குறைந்தா போகிறது? என்று கருதுவதனாலோ கேட்பதனாலோ வறுமை தொலைந்துவிடாது.

செல்வம் என்பது உழைப்பினால் மட்டுமே உருவாவது. செல்வ உற்பத்திக்குப் பயன்படக்கூடிய களமும் கருவியும் இன்றைய சமூக அமைப்பின் காரணமாகச் சிலருக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் சமூக உறவுகள் இன்னும் முற்றாக அழிந்துவிடவில்லை. களமும், கருவியும் உடையவர்களோடு அவை இல்லாதவர்கள் பூரணமாகத் தம்முடைய உழைப்பினை நல்கிச் செல்வத்தை உற்பத்தி செய்து, நியாயமான முறையில் உடையோன் - இல்லோன் என்ற மன வேறுபாடின்றித் தம்முட் பகிர்ந்து வாழ்வது அறவொழுக்கமாகும். இத்தகைய மனப்போக்கும் பரவலாக வளரவில்லை. செல்வ உற்பத்தியில், கவனம் செலுத்தாமல் உடையோனுக்கும் இல்லோனுக்கும் இடையில் இன்று நிகழ்வது ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றிக்கொள்வது என்பதேயாம். இதனால் என்ன பயன் விளைய முடியும்?

இன்று, பொதுப்படையாக உடையோனிடத்திலிருக்கும் அளவுக்குச் சிக்கன மனப்பான்மை இல்லாதவர்களிடத்தில் இல்லை. உதாரணம், திரைப்படக் கொட்டகைகளில்கூட மூன்றாம் வகுப்பே நிரம்பி வழிகிறது. இங்ஙனம் வரவுக்கு ஏற்பச் செலவு செய்யும் மனமில்லாதவர்க்கும் - செல்வத்தைப் போற்றி வாழாதார்க்கும் உதவி செய்தும் உயர்த்திவிட முடியாது. அவர்கள், பெறும் உதவியின் எல்லையையும்கூடத் தம்முடைய தேவைக்கு ஏற்ப நீட்டி பெற்றது கொண்டு அமைதி கொள்ளமாட்டார்கள். கொடுத்தவனுக்கும், கொடுத்து உயர்த்த முடிந்ததே என்ற மன நிறைவு இருக்காது. பெற்றவர்களுக்கும் எவ்வளவு பெற்றிருந்தாலும் பெற்றோம் என்ற மனநிறைவு இருக்காது. இத்தகைய மனப்போக்குகளின் காரணமாக வறுமை மாறாமலே நம்முடைய நாட்டில் நிரந்தரமாக இருந்து வருகிறது. இத்தகைய இழி மனப்போக்கு இருக்கும்பொழுது பொதுவுடைமைச் சமுதாயத்தைத் தோற்றுவித்தாலும் "உழைக்காது போனால் தண்டனையுண்டு" என்ற நியதியை வலியுறுத்தாவிடில் பயனில்லை. நம்முடைய நாட்டில் கூட்டுறவு - பொதுத்துறைத் தொழில்கள் வளமாக அமையாததோடன்றி ஊழலும் பெருகியிருப்பது இதற்கோர் எடுத்துக்காட்டு.

திருவள்ளுவர் சமுதாய ஒப்புரவு வாழ்க்கையை விரும்புவர். வறுமையை எதிர்ப்பவர். அதனாலன்றோ,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான்"

(1062)

என்று முழங்கினார். ஆயினும் ஒரு சிலருடைய வறுமையைக் கண்டு, திருவள்ளுவர் மனம் கொதிப்படையவில்லை! அவர்களை அந்நியர்களாகவே பார்க்கச் சொல்லுகிறார்.

நம்மை மட்டுமல்ல. பெற்ற தாயைக்கூடத் தான் ஈன்ற மகனை அந்நியனைப்போலப் பார்க்கச் சொல்லுகிறார். இல்லை! பார்ப்பள் என்றே முடிவாகக் கூறுகிறார். "அறம்சாரா நல்குரவாளனை, ஈன்ற தாயும் பிறன் போலப் பார்ப்பாள்” என்பது வள்ளுவர் கூற்று.

அறம் என்ற சொல், ஆழமும் அகலமும் உடையது. வருவாய்த்துறையிலும், அறநெறிகள் உண்டு; செலவுத் துறையிலும் அறநெறிகள் உண்டு. முறையான உழைப்பின்றிச் சுரண்டுதல் மூலம் வரும் வருவாயும் இன்றில்லையானாலும், என்றோ ஒரு காலத்தில் வறுமைக்கே ஆளாக்கும். அதாவது சமூகத்தில் ஏமாற்றப்படுவோர்கள், விழித்துக்கொண்டவுடன் வருவாய் தடைப்படும்; வறுமை வந்தடையும். ஆதலால், உடற்சக்திக்கேற்றவாறு உழைத்தும் தம்முடைய நியாயமான பங்கைப்பெறுதல் அறவழிப்பட்ட வருவாயாகும். செலவை நிர்ணயிப்பதில் ஆசைத் தேவதையை அளவு கோலாகக் கொள்ளாமல் தன்னுடைய உழைக்கும் திறனையும் வருவாயையுமே மையமாகக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி ஒரு காசில் நடைபெறக் கூடிய காரியத்திற்குக் கூடுதலாகக் கொஞ்சம் செலவழித்தாலுங்கூட அஃது அறத்திற்கு மாறுபட்டது. எவ்வளவு குறைந்த தேவையில் வாழ முடியுமோ, அவ்வளவு குறைந்த தேவையில் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதுவே அறம்சார்ந்த வாழ்க்கை. இயற்கையாலோ, தெய்விகத்தாலோ, சமூக அநீதியாலோ வறுமை வந்திடின், அந்த வறுமையைத் துடைப்பது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், அறம்சாராத வாழ்க்கையின் மூலம் வறுமைவரின், ஈன்ற தாய்க்கும்கூடப் பொறுப்புக்களில்லை. அந்நியனைப் போலப் பாராது ஒதுக்கிவிடுதலே இயற்கையென்று வள்ளுவம் கூறுகிறது.

"அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்"

(1047)

என்பது குறள்.

கயமையின் காழ்ப்பு!

னிதன் ஒரு விசித்திரமான பிறவி. மனிதப்பிறவி மற்ற உயிர்ப்பிறப்புக்களைவிட உயரியது; அறிவொடு தொடர்புடையது; ஆள் வினையுடையது; நெறிப்படுத்தப் பெறுவது. ஆயினும், மனிதனின் விழுமிய கருவிகளுள் தலையாயதாகிய உள்ளம் ஒழுங்காக இருந்தால் தான் எதுவும் சீராக அமையும். உள்ளமோ ஒரு தன்மையுடையதல்ல. ஆயினும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் மனிதன் செய்து கொள்ளக்கூடிய அன்றாடக் கடமை. அஃது ஒரு பொழுது இருந்ததைப் போல பிறிதொரு பொழுது இருப்பதில்லை. உள்ளத்திற்குத் தற்சார்பும் தன்முனைப்பும் இயற்கையிலே உண்டு. அதனை மாற்றிச் செழுமைப்படுத்திக் கொள்வது மனிதனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அவனையே முதன்மைப்படுத்துகிறது. அதனாலேயே அழுக்காறும் ஆணவமும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் தனது உள்ளம் தன்னை முதன்மைப்படுத்துவது தனக்கு நல்லதல்ல என்பதை முதலில் உணரவேண்டும். அதற்கு மாறாகத் தமது உள்ளத்தை, மற்றவர்களை முதன்மைப்படுத்தப் பழக்க வேண்டும். இங்ஙனம் பழக்கிக்கொள்பவர்கள் நல்லவர்களாக வாழ்வர்; அவர்களும் வாழ்வர்; மற்றவர்களுக்கும் வாழ்வு அளிப்பர். அங்ஙனமின்றித் தன்னையே மையமாகக் கொண்டு எண்ணி வாழ்பவர்கள் தங்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கும் கேடு செய்கிறார்கள். இவர்களே கீழ்மக்கள்.

கீழ்மக்கள் மனித உருவில் நடமாடினாலும் அவர்கள் அவர்களுடைய பிறவிக்குணம் ஆங்காரமும்

தி.24. அழுக்காறுமாகும். அவர்கள் மற்றவர்கள் மகிழ்வுடன் வாழ்தலைக் காணப் பொறார். மற்றவர் புகழினைக் கேட்கவும் பொறார். மற்றவர்கள் இனிது உண்டு, உடுத்து வாழ்தலைப் பார்த்து வெய்துயிர்த்து எரிச்சலடைவர். குற்றமிலராகிக் குடி செய்து வாழ்ந்தாலும் குற்றம் கண்டு பிடிப்பர். குணம் மறைத்துக் குற்றம் தூற்றுவர். இத்தகையோர் சமுதாயத்தின் எலும்புருக்கி நோயாவர். இவர்களிடத்தில் கொஞ்சமும் தயவு, தாட்சண்யம் காட்டக் கூடாது.

இத்தகைய மனிதர்கள் உழைப்பொடு தொடர்புடைய எந்த வேலையும் செய்யார். ஆங்காங்கிருந்து வருமொழி பேசி அரட்டையடித்து அயர்தலே இவர்கள் வேலை. இவர்கள் மற்றவர்கள் புகழுக்குக் களங்கம் படைப்பர். மற்றவர்கள் வாழ்விலும் மாசுகளைக் கற்பனை செய்து ஏற்றுவர். இத்தகையோர்களாலேயே சமுதாயம் அடிக்கடி அலைப்புறுகிறது. இத்தகைய கீழ்மக்கள் எங்கு எந்தக் கோலத்தில் உலவினாலும் கண்ணோட்டமின்றிக் கடிந்து ஒதுக்குதல் கடமை.

"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்"

(1079)

என்பது குறள்.

திருவள்ளுவர் இங்கு உடுப்பதையும், உண்பதையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். செல்வச் செழிப்பைக் கூடக் குறிப்பிடவில்லை. மேம்பாடான வாழ்க்கையைப் பற்றிக் கூடக் குறிப்பிடவில்லை. மிகச் சாதாரணமான உண்ணலையும், உடுத்தலையும் கண்டாலே காழ்ப்புற்றுக் குற்றம் காண்பர். திருவள்ளுவர் காலத்தில் உண்ணலும் உடுத்தலுமே ஒரு பெரிய கேள்விக் குறியாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. இன்றோ, உண்ணல்-உடுத்தல் மட்டுமல்ல, பதவி-புகழ் முதலியனவும் சேர்ந்திருக்கின்றன என்பது அறியத் தக்கது.

தம்இல் இருந்துண்ணும் தனி இன்பம்!


யிர்தங்கி நின்றுலவும் உடலியல் வாழ்க்கைக்கு உழைப்பு அணிகலனாகும்; அழகாகும். உழைப்பே மனிதனின் இயற்கைக் குணம். உழைத்து உலகிடைச் செல்வத்தைப் பெருக்கிப் பலருக்கு வழங்கிப் பயன்பட வாழ்தலும், தாம் துய்த்து வாழ்தலும் இன்றியமையாத குணமாகும். உழைத்து வாழும் இயல்புடைய சமுதாயத்தில் பரம்பரைச் சொத்துரிமை மதிப்பினைத் தராது. அதுமட்டுமின்றிச் சுரண்டி வாழும் தீய இயல்புடையவர்களும் இல்லாதொழிவார்கள். பரம்பரைச் சொத்துரிமை மனிதனின் இயல்பாய அறிவையும் ஊக்கத்தையும் உழைப்பாற்றலையும் காலத்திற்குக் காலம் கெடுத்து மனித சமுதாயத்திற்குத் தீங்கை விளைவிக்கிறது. சுரண்டி வாழ்பவனோ அறிவு, ஊக்கம், உழைப்பு ஆகியவற்றை இழப்பதோடுமட்டுமின்றி ஒழுக்கக் கேடுகளுக்கும் ஆளாகிறான்; மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் இயல்புடையவனாகிவிடுகிறான். காலப்போக்கில் இந்த இரண்டு வர்க்கத்தினரும் தம்மை வறுமையில் ஆழ்த்திக் கொள்வதோடன்றி வற்றாத வளங்கொழிக்கக்கூடிய நாட்டையும் வறிதாக்கிவிடுவர். அதனாலன்றோ, "வினையே ஆடவர்க் குயிரே" என்று குறுந்தொகை பேசிற்று. ஆடவன், ஆள்வினையுடையவன் ஆக்கப்பாடு உடைய வாழ்வுக் குரியவன். எவன் ஒருவனது வாழ்க்கையில் ஆள்வினைத் திறன் பெருகி வளர்ந்திருக்கிறதோ அவனே ஆடவன். ஆனால் இன்றோ, ஆள்வினையின்றி ஆயிழையைத் தேடியலைந்து மக்கட்பெருக்கம் செய்து வறுமையுலகை வழங்குவோரே ஆடவர் என்று பெயர் சொல்லித் திரிகின்றனர். ஐயகோ, கொடுமை!

தமிழின மரபில் பழங்காலத்தில் ஆடவன் ஒருவன் காதலியைப் பெறவேண்டுமென்றால் ஆள்வினைத் திறனையும், உழைப்பையும் விலையாகக் கொடுக்கவேண்டிய திருந்தது. மிகப் பழங்காலத்தில் - இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்த காலத்தில் துன்பம் தரும் வனவிலங்குகளை அழித்து வெற்றி கொள்ளுதல் விலையாகக் கருதப்பெற்றது. அப்பொழுதே, காதலிக்கு தான் அடித்துக்கொன்ற புலியின் பல்லை அணிகலனாக வழங்கிக் காதலியை அடையும் வழக்கம் ஏற்பட்டது. அந்தப் புலிப்பல் அணியும் வழக்கமே படிப்படியாகத் தேய்ந்து உருவம் மாறி இன்று தாலியாக இடம் பெற்றிருக்கிறது. தங்கம் யாருக்கோ சொந்தம்! பொற்கொல்லன் தாலி செய்கிறான்! புதுமணத் தம்பி தாராளமாக எடுத்துப்பூட்டி விடுகிறான்! அதற்கு அடுத்த கட்டத்தில் இயற்கையைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் தொழில் தோன்றி மனிதனிடத்தில் செய்தொழில் பெருகி வளர்ந்த பொழுது புலிப்பல்லுக்குப் பதில் காதலிக்குப் பொருள் வழங்கிக் காதலியையடையும் வழக்கம் தோன்றிற்று. இந்த அடிப்படையிலேயே அகத்திணை இலக்கண இலக்கியங்களில் காதலியைக் காதலன் ‘பொருள் வயிற்’ பிரியும் துறை பேசப்படுகிறது. நெடுந்தொலைவிற் பிரிந்து சென்று பெரும்பொருள் ஈட்டிவந்து காதலிக்குத் தந்தே, காதலன் காதலியை அடைந்திருக்கிறான். ஆனால் இன்றோ, காதலன் தான் மணக்கப்போகும் பெண் வீட்டில் பொருள் கேட்டு வாங்கி பெண்ணைச் சார்ந்து வாழ்கிறான். இத்தகைய பேதைகளையும் பெருநிலம் தாங்குதல் பொறையுடைமை கருதிப்போலும்!

திருவள்ளுவர், காதல் வாழ்க்கையை அறநெறிப்படுத்தி அழகுற விளக்கியவர். காதலன் காதலியுடன் கூடி மகிழ்ந்து இன்புறுதலுக்கு வள்ளுவர் காட்டும் உவமை மிகமிக உயரியது. மனித சமுதாயத்தின் இன்பநுகர் உணர்ச்சியை எதிர்த்து அழிக்காமலும் ஒடுக்காமலும் அந்த இன்பத் துய்ப்பை அறவுணர்வின் பாற்பட்டதாகவும் சமுதாய நலத்தைப் பின்னணியாகக் கொண்டதாகவும் கொண்டு விளக்கும் திறனை என்னென்போம்!

மனிதன், எட்டடிக் குச்சு ஆனாலும் தானே முயன்று கட்டிய குடிசையில் வாழ்வதற்கு ஈடு ஏது? இணையேது? பலர், பரந்த இடத்தில் அடுக்கிய மாளிகையில் குடியிருக்கின்றனர். ஆனால் அஃது அவர்தம் சாதனையன்று, தன் உழைப்பின்றிப் பிறருழைப்பில் உருவாய உயரிய மாளிகையில் உலவி வாழ்வதிலும், தான் எழுப்பிய குடிசையில் வாழ்வது இன்பத்துள் இன்பமாகும். அடுத்து, தான் உழைத்து ஈட்டும் பொருளில் அறுசுவை உணவாக்கிப் பலருக்கு வழங்கி, அவர்கள் உண்ண மகிழ்ந்து தாம் உண்டு வாழ்தல் பெருமையுள் பெருமையாகும். இந்த இன்பம் காதலியின் பால்பெறும் இன்பத்தை நிகர்த்தது என்று இயைத்துக் காட்டுகிறார் வள்ளுவர். உடலுக்கு உழைப்பில் இன்பம்; உணர்வுக்கு ஒப்புரவில் இன்பம்; உயிருக்குக் காதலில் இன்பம். இம்மூன்றும் நிகழ நிழல்தந்து இன்பந்தந்து நிற்பது தன் குடிசை. இந்த இயைபுகளை எண்ணிப் பார்க்கும் பொழுது நெஞ்சம் உவகை கொள்கிறது. உடல், உழைப்பில் திளைத்து மகிழ்தலும், உணர்வு ஒப்புரவில் கலந்து மகிழ்தலும்; உயிர், காதலில் கலந்து மகிழ்தலும் ஒரு சிறந்த தலைமகனின் சிறப்பு. இத்தகைய தலைசிறந்த ஆடவர்களாலேயே நிலவுலகம் செழிப்புறும்; துன்பம் தொலையும்; உறவு பெருகி வளரும்; காதலின்பம் விளையும். இதனை,

"தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு"

(1107)

என்ற திருக்குறளை நினைந்து இன்புறுக.

அறிவின் இலக்கணம்!
திருவள்ளுவர் ஓர் இலக்கியப் படைப்பாளர் மட்டுமல்லர், அறநூல் செய்த அறவோர் மட்டுமல்லர்; அவர்ஓர் அறிவுத்துறை அறிஞருமாவார். அவர் செய்த திருக்குறள் ஓர் உயிரியல் - அறிவியல் நூலாக விளங்குகிறது.

திருவள்ளுவர் ஒரு சிறந்த முற்போக்கு அறிஞர். இன்றைய உலகில், ‘முற்போக்கு’ ‘பிற்போக்கு’ என்ற வார்த்தைகள் சரளமாக அடிபடுகின்றன. காக்கை கறுப்பாகவும் இருக்கலாம் என்று கூறப்படுவதுகூட முற்போக்கு என்று பெயர் பெற்று விளங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், திருவள்ளுவர் இந்த வகையினர் அல்லர். அவர் உண்மையிலேயே ஒரு முற்போக்கு அணியைச் சார்ந்தவர். சமுதாயத்தில் பழைய பழக்க வழக்கங்களே சிறந்தவை என்று கண்மூடித் தனமாக நம்பும் மனப்போக்கு இன்னமும் இருந்துதான் வருகின்றது. நேற்றைய அறிவே, அறிவு என்றும், இன்றைய அறிவு பயனற்றது என்றும் கருதுபவர்கள் இன்றும் நம்மிடையில் பலரிருக்கின்றனர். முன்னோர் அறிவே, மூதறிவு என்றும், பின்னோர் பேதைகளென்றும் பேசுபவர்கள் சமுதாய அரங்குகளில் இல்லாமலா இருக்கிறார்கள்? ஆனால், நம்முடைய ஆன்றோர்கள் இங்ஙனம் கருதவில்லை. முன்னைப் பழமை எப்படிச் சிறந்ததோ, அதுபோலவே பின்னைப் புதுமையும் சிறந்தது என்றே திருவாசகம் கூறுகிறது. ஒரு மரம் என்றால், அதில் சருகுகள் விழும். பழுப்புகள் இருக்கும். இவையனைத்தும் ஒருசேர, ஒரு காலத்திலோ அல்லது ஒன்றன்பின் ஒன்றாகவோ தோன்றி விளங்கும். ஆதலால், பழமைக்கும் புதுமைக்கும் எப்பொழுதும் போர் வராது; போர் வரவும் கூடாது! இரவும் பகலும் போலப் பழமையும் புதுமையும் ஒன்றினையொன்று தொடர்ந்து வருவதே இயற்கை. தொன்மையானவையெல்லாம் சிறப்புடையன என்று கருதவும் முடியாது. இன்று தோன்றுவனவெல்லாம் புதுமை என்று தள்ளவும் முடியாது. பழமைக்கும் புதுமைக்கும் இடையே நிகழும் போராட்டம் தான் தமிழர் சமயப் போராட்ட வரலாறாக வடிவம் பெற்றது.

திருவள்ளுவர் சிறந்த அறிவுக்கு இலக்கணம் வகுத்துத்தந்தார். நேற்றைய அறிவு இன்றையப் புதுமையை ஏற்றுக் கொள்ள மறுத்தால் வாழ்க்கையில் உயிர்ப்பு இல்லை. வாழ்க்கை தேங்கிய குட்டையாகப் போய்விடும். தேங்கிய குட்டையின் தண்ணீர் குடிக்கவோ, குளிக்கவோ பயன்படாது. அதுபோலவே, சிந்தனையிலும் அறிவிலும் தேங்கிய மனிதர்கள் ஒருபோதும் பயன்படமாட்டார்கள். திருக்குறள் கருத்துப்படி அறிவுக்கு எல்லைக்கோடு இல்லை; அறிவின் இயல்பு மேலும் மேலும் வளர்தலுக்குரியது. இன்றைய அறிவை நோக்க நேற்றைய அறிவு அறியாமையாகத் தெரியவேண்டும். அப்படித் தெரிந்தால்தான் மனிதன் சிந்திக்கிறான் என்பது வெளிப்படும். சிந்தித்துத் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளாத மனிதன் காலத்தை வென்று நிற்பதில்லை. மேலும் மேலும் வளராத அறிவு இன்பம் தராது. உலகியல் வரலாற்றிலேயே நேற்றைய அறிவை, வளரும் அறிவு வென்று விளங்குவதைத்தான் பார்க்கிறோம். விஞ்ஞானத்தின் சாதனைகூட இதுதானே!

நேற்று அம்புலி! முந்தாநாள் சந்திரன் தெய்வம்! அதற்கு முந்திய நாள் சந்திரன், பல மனைவிகளுள்ள குடும்ப நிலையினன் என்றிருந்த செய்திகளை அறியாமையாக்கி, முக்காடிட்டு, மூலையில் கிடத்திவிட்டு ‘அப்போலோ’ பறந்திருக்கிறது. சந்திரன் பூமியைப்போல் ஒரு கண்டம் என்று உலகத்திற்கு உணர்த்த! சென்ற சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, அணு என்றால் பிளக்க முடியாதது என்ற கருத்து விஞ்ஞானிகளிடையே நிலவியது. ஆனால், இந்த நூற்றாண்டில் அணுவைத் துகள்களாக உடைக்க முடியும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள் ஆதலால், அறிவு நிலைத்த ஒன்றன்று; அது வளரும் தன்மையது. அறிவு வளர வேண்டுமென்றால் அக்கறையோடு நேற்றைய அறிவை ஆய்வு செய்து சமுதாயத்திற்குத் தீங்கு தராத வகையில் ஏற்றுக்கொள்ளும் துணிவுவேண்டும். காதல் வாழ்க்கையில், உணர்வு கலந்து ஒத்துக் கூடி வாழும் வாழ்க்கையில் இன்பம் மேலும் மேலும் கூடும். அந்த இன்ப வேட்கை தணியாது. மேலும் மேலும் வளரும். சுவைக்கச் சுவைக்க நேற்றையச் சுவையினும் இன்றையச் சுவை மேம்பட்டு விளங்கும். தலைமகன் - தலைமகளிடையே மாறுபாடில்லாது போனாலும், காதற் சுவை புதிது புதிதாகத் தோன்றும். அது, காதலின் இயற்கை அதுபோலத்தான் அறிவு இயல்பாகவே நாளுக்கு நாள் தழைத்து வளரும்.

ஆதலால் அறிவைத் தேங்கிக் கிடக்கும் குட்டையாக்கிக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிய சிந்தனையால் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவள்ளுவரின்,

"அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறுஞ் சேயிழை மாட்டு”

(1110)

என்ற குறளால் அறியலாம்.

ஒப்பற்ற உவமை!

ஒருவனும் ஒருத்தியுமாக வாழ்வது தமிழ் மரபின் ஐந்திணை ஒழுக்கம். அதாவது விழுமிய அன்பு வாழ்க்கை, ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிக் கலந்து வாழும் வாழ்க்கையை விளக்கக் கவிஞர்கள் பல்வேறு உவமைகளை எடுத்துக்காட்டுகின்றனர். இன்று, ‘மணியும் ஒளியும்போல’, ‘மலரும் மணமும் போல’, ‘தமிழும் இனிமையும் போல’ என்றெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசுகின்றார்கள். இந்த எடுத்துக்காட்டு உவமைகள் ஒன்றினும் ஒன்று தரத்தில் தாழ்ந்ததாக இருக்கின்றன. ஒன்றில்லாமலும் ஒன்று இருக்கலாம். மலர் நீங்கிய வேறொரு பொருளிலும் மணம் உண்டு. மணி நீங்கிய வேறொரு பொருளிலும் ஒளியுண்டு. அதேபோல, இனிமை வேறொரு பொருளிலும் உண்டு.

காதல் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் பிற துறைகளில் கிடைக்கமுடியாது. காதல் வாழ்க்கையின் மூலம் கிடைக்கக்கூடிய இன்பத்தை ஒருவன், ஒருத்தியில்லாமலும், ஒருத்தி, ஒருவன் இல்லாமலும் பெற முடியாது.

மணமற்ற மலர்களும் உண்டு. ஒளியற்ற மணிகளும் உண்டு. இன்சுவையற்ற தமிழும் உண்டு. அதுபோலக் காதல் வாழ்க்கை இருக்க முடியாது. காதல் வாழ்க்கை முழுமையானது தப்பாமல் இன்பம் தரவல்லது. ஆதலால், திருவள்ளுவர் இந்த இன்ப வாழ்க்கையை விளக்கப் புதிய முறையை எடுத்தாளுகின்றார். இந்த இனிய வாழ்க்கையின் இயல்பை, பொருள்களை மையமாகக் கொண்டல்லாமல், உணர்வையும், உறவையும், நட்பையும் மையமாகக் கொண்டு விளக்குகிறார். உடலுக்கு, உயிர் இன்றியமையாதது. அதுபோலவே உயிர்க்கு உடலும் இன்றியமையாதது. ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை ஒன்றின் பயன் பிறிதொன்றினைச் சார்ந்தேயிருக்கிறது. இன்புறுதலும், இன்புறுத்தலும் ஒன்றினுக்கொன்று செய்து கொள்கின்றன. உயிர், உணர்வால் உடலுக்கு இன்பம் தருகிறது. உடல் துய்த்தல் வழி உயிர்க்கு உணர்வைச் சேர்க்கிறது. உயிருணர்வின்றி, உடலின் இயக்கத்திற்குச் சுவையில்லை; இன்பமில்லை! உயிரின் பண்புகள் உடலின் இயக்கத்தினாலும், துய்த்தலினாலும் முழுத்தன்மை அடைகின்றன. இதனை உணர்ந்த திருவள்ளுவர்,

"உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு"

(1122)

என்று பேசுகிறார்.

உடலுக்கும் உயிருக்கும் இடையேயுற்ற நட்பே இந்த உலகில் மிகவுயரிய நட்பு; எந்தக் காரணத்தினாலும் பிரிக்க முடியாத நட்பு; இன்பமோ, துன்பமோ இரண்டுக்கும் இயைபானது. உடலுக்குற்ற துன்பத்தை உயிரே அனுபவிக்கிறது. உயிரைப் பிரிய நேரிட்டால் உடல் தன்னைப் பயனற்றதாக்கிக்கொண்டு எரியில் இடத்தக்க நிலைமையைத் தோற்றுவித்துக்கொள்கிறது. அறிவின் விளக்கமோ அல்லது அன்பின் விளக்கமோ உயிரும் உடலும் ஒன்றியிருந்தால்தான் ஏற்பட முடிகிறது.

இங்கு, உடம்பு என்பதைப் பருவுடலாகக் கொள்ளாமல்; நுண்ணுடலாகக் கொண்டால் மிகச் சிறந்த பொருள் கிடைக்கிறது. நுண்ணுடலும் உயிரும் எப்பொழுதும் பிரிவது இல்லை. தூய காதல் அதுபோலவேயாம். காதலர்கள் பிறப்புக்களுக்கு அப்பாற்பட்டும், காதலர்களாகவே மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்கின்றனர்.

அதாவது உயிரினுடைய அகக் கருவியாகிய புத்தி தத்துவத்திலேயே இந்த விழுமிய காதல் தோன்றித் தழைத்து வளர்ந்து அங்கேயே தங்குவதால், உலகியலில் ஏற்படும் மரணம், காதல் வாழ்க்கையை மறைத்து விடுவதில்லை. ஆதலால், காதல் வாழ்க்கை, நுண்ணுடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினையொத்ததாக அமைதல் வேண்டும். அத்தகைய காதல் வாழ்க்கையே தூய காதல் வாழ்க்கை. இந்தக் காதல் வாழ்க்கையையே தெய்வத்தன்மையுடையதாக ஆன்றோர் கருதுகின்றனர். உடற் சார்புடைய வாழ்க்கை காதலுமன்று; காமமுமன்று; தாழ்வான தீமை. நாடு முழுதும் சிறந்த காதல் வாழ்க்கை மலர்தல் வள்ளுவ்த்திற்குப் புகழைத் தரும்.

வாழும் ஊர்!

னிதர்களின் இன்ப வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகள் பற்பல. ஒன்றிருந்து ஒன்றில்லையானாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. தேவை பலவற்றுள்ளும் தலையாயது அவன் வாழும் ஊரின் நல்லியல்பாகும். இன்று பல ஊர்கள் பெயரளவில் ஊர்களாக இருக்கின்றனவே தவிர, உண்மையில் ஊராக இல்லை. ஊர் என்றால் பலபேர் கூடி வாழும் இடம் என்று பொருள்படும். ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்தது அறிந்து உணர்வால் ஒன்றுபட்டுக் கூடித் தொழில் செய்து உறவு கலந்து உண்டு மகிழ்ந்தும், மகிழ்வித்தும் வாழும் மக்களையுடையதே ஊராகும். ஊரில், வடிவத்தால் பல்வேறு தனி மனிதர்கள் வாழ்ந்தாலும், உறவாலும் உற்று உதவும் பண்பாலும் வேறுபாடற்ற ஒரு சமுதாய உணர்வு நிலவவேண்டும். பெயரளவில் பல்வேறு குடும்பங்களாக வாழ்ந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு குடும்ப உணர்வு கால்கொண்டிருக்கவேண்டும். இத்தகைய ஊரே, ஊரெனப்படும்.

ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு, அவனுக்கு இயைபான பலர் வாழக்கூடிய ஊராக இருந்தாலொழிய அவன் முன்னேற முடியாது. அவன் வாழும் ஊரையும் முன்னேற்ற முடியாது. இவ்வியைபுயென்பது வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடிய வழிகளிலேயாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, ஒவ்வொரு மனிதனுக்கும் கூட்டு வாழ்க்கைப் பொறுப்பு இருக்கிறது. ஒருவருக்கொருவர் துணை நின்று தோளொடு தோள் கொடுத்து வாழ, ஓரூரில் இருக்கிறவர்கள் கற்றுக்கொள்ளத் தவறினால் ஆங்குத் துன்பமே நிலவும்; பண்புக்குப் பதில் பகைமை குடிகொள்ளும்; உழைப்புக்குப் பதில் உறிஞ்சி வாழ்தலே உருக்கொள்ளும்; வளத்திற்குப் பதில் வறுமை இடம் பெறும்; நெஞ்சு நிறைந்த அன்பு வழிப்பட்ட உறவுக்குப் பதில் வஞ்சினம் வேர்விடும்; ஊர், ஊராக விளங்காது. காலப்போக்கில் சுடுகாடாக மாறும். ஒத்த உணர்வு படைத்த இனம் இல்லாத ஊரில், ஒருவன் எந்தக் காரியத்தையும் வெற்றியுடன் செய்து முடிக்க முடியாது. சுருதியில்லாத பாட்டு உண்டா? பண் இல்லாத பாட்டு உண்டா? இருக்க முடியாது; இருந்தாலும் சுவைக்காது. அதுபோலத்தான் தமக்கு இனம் அல்லாத மக்களோடு கூடி வாழும் வாழ்க்கை கொடிய துன்பத்தைத் தரும். நம்முடைய இயல்பிற்கும் இலட்சியத்திற்கும் இசைவாகத் துணை நிற்கக் கூடிய இனத்தைப் பெறுவோமானால், வாழ்க்கையில் எல்லா வெற்றிகளும் கிடைக்கும். அதனாலன்றோ, வறட்சித்தன்மையுடைய கிழத்தன்மை வராமல் வாழ, சான்றோர் வாழும் ஊரில் வாழ்தல் துணையென்று புறநானூறு பேசுகிறது.

ஆதலால், பொருளற்ற வாழ்க்கையைவிட - அழிவற்ற வாழ்க்கையைவிட - தமக்கு இனமல்லாதவர் வாழும் ஊரில் வாழ்தல் கொடுமையினும் கொடுமையானதாகும். நம்மோடு வாழ்பவர், நம்மொடு முரண்பட்ட இனமாக இருப்பின், நம்முடைய வாழ்க்கை வறிதே பாழாகப் போய்விடுகிறது. வித்துக்கு இனமாகிய மண் கிடைக்காது போனால், முளையும் இல்லை, செடியும் இல்லை; மரமும் இல்லை; பூத்துக் குலுங்குதலுமில்லை; வழிவழி வாழ்தலும் இல்லை. அதுபோலவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒத்த இனமல்லாது போனால், ஊக்கமில்லை; உணர்வில்லை; உழைப்பில்லை; முன்னேற்றமில்லை. அவனுக்கும் பயனில்லை; அவனுடைய சமுதாயத்திற்கும் பயனில்லை. ஏன்? கடவுளுக்கேகூடப் பயனில்லை.

ஆதலால் நமக்கு ஒத்த இனமுள்ள ஊர்களைத் தேடி வாழ்தல் நல்லது. அங்ஙனம் இல்லாது போனால், நம்மோடு வாழ்பவர்களையாவது நமக்கு ஒத்த இனப்பண்பு உடையவர்களாக உருவாக்கிக் கொள்வது அவசியம். இங்கு இனம் என்பது புறத்தால் அல்ல; உணர்ச்சி வயப்பட்டதுமல்ல; தேர்ந்து தெளிந்த அறிவும், நல்லுணர்வும் இன்றியமையாதது. அவர்கள் கோவலன் மாட்டுக் கண்ணகி காட்டிய பரிவையும், பாண்டியன் நெடுஞ்செழியனிடத்தில் கண்ணகி காட்டிய வெகுளியையும் ஒத்து, நம்மிடத்தில் பரிவும், உரியபோது கண்டிப்பும் உடையவர்களாக இருக்கவேண்டும். விரைந்தோடும் வண்டிக்கும் தடைக் கருவி (பிரேக்) தேவையே. அதுபோல, முன்னேற்றத் திசையில் உந்திச் செலுத்தி - உரியபோது விபத்துக்களின்றித் தடுத்து நிறுத்திப் பாதுகாப்புச் செய்யும் தகுதியுடையவர்களே உண்மையான இனம்.

காதலிக்குக் காதலனைப் பிரிந்து வாழ்தல் துன்பம் தருவது. அதற்கிணையான துன்பம் உலகத்தில் வேறு இல்லையென்பது தமிழிலக்கிய முடிவு. காதலி, காதலன் பிரிந்து வருந்தும் துன்பியல்பை வடித்துக் காட்டும் அகத்துறை இலக்கியங்கள் தமிழில் ஏராளம் உண்டு. "நிற்பிரியேன், பிரியின் தரியேன்” என்பதே காதலியின் சூளுரை. பிரிவுத் துன்புத்தைப் பிறிதோரிடத்தும் திருக்குறள் - தலைவி வாயிலாக,

"செல்லாமை உண்டேல் எமக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை"

(1151)

என்று பேசுகிறது.

காதலி, காதலனைப் பிரிந்து வாழும் துன்பத்திற்கு இணையான துன்பமாக வேறொன்றையும் சொல்ல முடியாது. வேறு எதை இழந்தாலும் அல்லது பிரிந்தாலும் வேறொன்றின் மூலம் ஈடுசெய்து துன்பத்தை மாற்றிக் கொள்ளலாம். காதலர்ப் பிரிவில் அஃதிலாது. இயன்றால், அது காதலுமில்லை. ஆனால், காதல் பிரிவுத் துன்பத்திற்கு நிகராக இனமல்லாதவர் வாழும் ஊரில் வாழும் துன்பத்தைத் திருவள்ளுவர் இணைக்கின்றார். ஆம்! காதலின்பம் ஒரு வகையான உயிரின்பம். அந்த இன்பத்திற்குக்கூட இடையூறு செய்யாமல், துணை நிற்பதோடன்றி வேறு பிற துறைகளிலும் துணை நிற்கக்கூடிய இன்றியமையாத ஒன்று இனமேயாகும். ஆதலால், நமது வாழ்க்கைக்கு ஒத்த இனத்தை ஊரில் உருவாக்கி ஒத்ததறிந்து வாழ்வோமாக,

தமக்கு இனமல்லாதவர்கள் வாழும் ஊரில் வாழ்தல் துன்பம். அதனினும் துன்பம், இன்பத்திற்குரிய காதலனைப்

பிரிந்து வாழ்தல்.

"இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு”

(1158)

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

வாழ்வாரும் வீழ்வாரும்

லகப் பொதுமையிலிருந்தே தனிமையும் தோன்றியது. பொதுமை தாயென்றால், தனிமை சேய், பொதுமையும் தனிமையும் அன்பும் ஆர்வமும் உடைய இடத்தில் முரண்பாடுடையன அல்ல. அப்படியன்றி வறண்ட மனப்போக்கு உடையவரிடத்தில் தனிமையும் பொதுமையும் முரண்பாடுடையனவாகி, மோதத்தான் செய்கின்றன. வான்மழை வையகத்திற்குப் பொது. வான்மழைக்கு நாடு, மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகள் கிடையா. வையகத்தை வாழ்வித்து வாழும் வான்மழைக்கு ஈடேது? இணையேது? ஆதலாலன்றோ, வள்ளுவம் தனக்குவமை இல்லாதவனை வாழ்த்திய பிறகு, வான்மழையையும் சிறப்பித்துப் பேசுகிறது.

இந்தப் பரந்த வையகத்திற்கு வடிவமும், வண்ணமும், வளமும், உணர்வும் அனைத்தும் வழங்குவது வானின் கொடையேயாம். வானம் வழங்காதெனில், இந்தப் பாரினில் பசும் புல்தலையும் காண்பதரிது என்பது வள்ளுவம். ஏன்? மனிதனின் உயர்ந்த வானோர்க்கும் கூட பூசனை கிடைக்காது என்றும் வள்ளுவம் உணர்த்துகிறது. ஏன்? அலைகடலின் வளம்கூட, வானின் வளம் சுருங்கின், சுருங்கும் என்பது வள்ளுவத்தின் முடிவு. ஆதலாலன்றோ அருளாளர்களும் கூட வான்மழையை இறைவன் தன் திருவருளேயென்று போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

வான்மழை வையகத்திற்குப் பொதுவானாலும், பொருளறிந்து போற்றினால்தானே பயனுண்டு! வான்மழை பொழிகிறது. அங்ஙனம் பெய்யும் பொழுது வாரி பெருக்கி ஏரி நிறைத்துப் பயன் கொண்டால்தானே? அங்ஙனம் பயன் கொள்ளாமல் மழை பெய்கிறது என்று கூறி வீட்டில் ஒரு மூலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டுபடுத்துத் தூங்கினால் வாரி வளம் பெருக்குமா? அல்லது வளம்தான் பெருகுமா? வான்மழை பயனுடையதே ஆயினும், பயன்படுத்துவோரின் திறனைப் பொறுத்தே மிகுதியும் பயன்படுகிறது. நிலம் உண்டு. ஆனால் தரிசு! திலங்கள் தரிசாகக் கிடக்குமாயின் ஏது பயன்? வாழ்தல் ஒரு கலை, நுண்கலை; கவின்கலை, மானிடரில் சிலரே வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழ்வதில்லை. ஊனுக்குரிய குற்றேவல் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

அதாவது, ஊனினுக் குணவளித்து வளர்த்து, அதனைச் சுமந்து உலாக்காட்டி, உறங்கல் செய்து ஏவல் செய்வார்கள். ஊனினால் ஆய பயனை அடையமாட்டார்கள். வாழ்தல் என்பது ஆற்றல் மிக்க ஒரு கலை. அப்படி வாழ்பவர்கள் வாழ்க்கையில் தெளிந்த சிந்தனையின் பதிவுகள் இருக்கும். காலமனைத்தும் கடமைகளாக வடிவுற்றிருக்கும். ஆன்ற அறிவும், ஆள்வினையும் வையகத்திற்கு வளம்பல சேர்க்கப்பயன்படும். அவர்தம் வாழ்க்கையில் துன்பமில்லை. ‘இன்பமே எந்நாளும், துன்பமில்லை’ என்ற அருள் வாக்குக்கு இலக்கியமாகத் திகழ்வர். வையகத்தையும் திகழவைப்பர். அதனால் வான் சிறப்புக்குப் பயனுண்டேயாயினும் அந்தப் பயனைத் தரத்தக்கவர்கள் வாழ்பவரே. வாழ்வார், வீழ்வார் இரண்டும் முரண்பட்ட சொற்கள். வாழ்வதற்குத் தன் முயற்சி தேவை. வீழ்தலுக்கு யாதொரு முயற்சியும் தேவையில்லை. அஃதியற்கை. பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணீரை ஏற்றுதற்கு முயற்சி தேவை. ஆனால் மேட்டிலிருந்து பள்ளத்திற்குத் தண்ணீரைக் கொண்டு வர முயற்சியே தேவையில்லை. மனிதரில் பலர் வாழ்வது போலக் காட்டிச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை மாணிக்க வாசகரும், "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" என்று அழகுறக் காட்டுகின்றார். இந்த வையகம், வாழ்வார்களை நம்பி இருக்கிறது. வையகத்திற்கு, இயல்பில் சில வளமுண்டாயினும், வாழ்வார்கள் இல்லையாயின், அவையும் பயனற்றுப் போகின்றன. அதனாலன்றோ திருவள்ளுவர் ‘வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்’ என்று கூறுகின்றார். வான்மழை பெய்யும் பொழுது வாழ்வார் மகிழ்ந்து முழுதாகப் பயன் துய்ப்பார். வாழாதார், மழையைக் கண்டால், நனைந்தாலுமேகூட உள்ளவாறு உரிய பயன் காணார்; பயனும் துய்த்தறியார். அதுபோலவே, காதல் வாழ்க்கையென்பது, அரிய ஒன்று. காதல் வாழ்க்கை செவ்வியதாக அமைய ஆற்றல் அதிகம் தேவை. காதல் வாழ்க்கை எளிதாகத் தோன்றலாம். ஆனால், அருமையானது. அஃது ஒரு பருப்பொருள் அன்று, நுண்பொருள். உடற்சார்பு உடையது அல்ல; உயிர்ச்சார்புடையது. அறியாமையின் பாற்பட்டதல்ல; அறிவின் பாற்பட்டது. இன்புறுதல் மட்டுமல்ல; இன்புறுத்தலும் இயைந்தது. மிக மிக மென்மையானது. வள்ளுவம் ‘மலரினும் மெல்லிது காமம்; சிலரதன் செவ்வி தலைப்படுவார்’ என்று கூறுகிறது. சார்பால் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வோர், காதலராகி விடமாட்டார்கள்.

கணவன் - மனைவி என்ற பெயர் பூண்டமையாலும் - மனைகளில் வாழ்கின்றமையாலும், மக்கள் பலரைத் தந்தமையினாலும், அவர்கள் காதலராகி விடமாட்டார்கள். அவையெல்லாம் ஊன் விளையாட்டாகவும் இருக்கலாம். ஊனைக் கடந்தது காதல். உயிர்கள் ஒன்றாதல் காதலின் சித்து. இங்ஙனம் காதல் செய்து வாழ்பவர்கள் வாழ்க்கையிலேயே கலவி, பயனுடையதாக, பொருளுடையதாக உயிர் வாழ்க்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அப்பொழுதே விருப்பமும் விழுமியதாகி தவமும் கை கூடுகிறது. இத்தகு தவம் நிறைந்த நற்றவக் காதல் வாழ்க்கை, வள்ளுவம் காட்டும் காதல் வாழ்க்கை. வானம் எல்லோருக்குமாகத்தான் பெய்கிறது. ஆனால் வாழ்வோரே பயன்படுத்திக்கொள்கிறார்கள். எல்லோருந்தான் கூடி வாழ்கிறார்கள்.

ஆனால் வாழ்வோரே காதலாக்குகின்றனர். மற்றவர்கள் காதற் பயனின்றி வையகத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வையகத்திற்கு ஆள் சேர்ப்பதில் செயற்கை முறை வந்தாலும் வரலாம். ஆனால் உயிர்களைத் தழைக்கச் செய்து வளர்க்கும் காதலுக்கு மாற்றாகச் செயற்கைமுறை வரமுடியாது. அதனாலன்றோ பாரதியும்,

"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

என்று கூறுகின்றார். ஆதலின் வையகத்தை வாழச் செய்யும் காதலே வள்ளுவம் காட்டும் காதல்.

"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி"

(1192)

என்பது குறள்.

கனவுலக வாழ்க்கை

மனித வாழ்க்கை விசித்திரமானது. நாழிகைக்கு நாழிகை ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் அலைமோதப்படுகின்றோம். இத்தகைய வாழ்க்கையில் கனவும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. மனிதனுடைய ஆசை உலகம் அவன் அயர்ந்து உறங்கும்பொழுதும் விடுவதில்லை. உடல் உறங்கினாலும் உணர்வுப் புலன் வேலை செய்கிறது; கற்பனை செய்கிறது. வாழ்க்கையைப் பற்றிய கனவு காண்கிறது. இந்தக் கனவு, நடைமுறைக்கு வருமா? வராதா? என்பது ஆண்டாண்டுக் காலமாக நம்முடைய சமுதாயத்தில் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்கு அறுதியிட்ட விடையை நாடு இன்னும் அறியவில்லை. ஆனாலும் விடை வராமலும் இல்லை.

தி.25.

சில கனவுகள் பயன்தரும் என்று கூறியுள்ளார்கள். அதாவது கனவு, நினைவுலகத்தின் விரிவாக அறிவுப்புலனொடு கூடிக் கண்ட கனவாக இருக்குமாயின் பயன்தரும். அதுவும் நாட்காலைக் கனவாக இருக்குமானால் முக்காலும் பயனளிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அங்ஙனமின்றி நினைவுலகத்துக்குத் தொடர்பில்லாமல் - அறிவுப் புலனுக்கு இயைபின்றிக் காணப்பெறும் கனவுகள் பயன் தாரா. அதோடு கனவினை நினைவுலகத்துக்குக் கொண்டுவந்து செயற்படுத்தி இன்பம் காண வேண்டியவனும் மனிதனே! அதற்குரிய ஆன்ற அறிவும் ஆள்வினையும் இல்லாதவர்களின் கனவு, ஒர் அமாவாசைக் கற்பனையே. இந்தக் கனவுக்கு இனமில்லை; தோற்றக்கால்கள் இல்லை. அஃதொரு வெற்றுச் சூன்யமாகவே விளங்கும். இத்தகைய கனவு காண்போர் பெரும்பாலும் சோம்பேறிகள்; மூடர்கள்; காமுகர்கள்; தாமும் வாழாது மற்றவர்களையும் வாழவிடாது தடுப்பவர்கள்.

கனவு நினைவுலகத்திற்கு - நடைமுறைக்கு வராது போனால், துன்பம் தொலையாது; மாறாகப் பெருகும். இன்பத்தின் எல்லையைத் தீண்டுதல்கூட அரிது. ஆனால் கனவு, காண்கின்ற நேரத்தில் இன்பமாக இருக்கும். கனவு, காண்கின்ற நேரத்திற்கு இன்பமாக இருப்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டுவதன் மூலம், கனவுலகில் வாழ்வதை மறுக்கிறார். கனவு, நிலைத்த பயன் தராது. சிலர் கனவுலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு நிலையான ஒரு நினைவுலகம் இருப்பதே தெரியாது. பலர் சோம்பேறிகளாக ஆவதற்குக் கூடக் காரணம் கனவுதான்.

ஒருவர் பரிசுச் சீட்டில் ஐந்து இலட்சம் பரிசு விழுந்து விடுவதாகக் கனவு காணத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கனவு, காணத் தொடங்கிய பொழுதிலிருந்தே அவருடைய உணர்வுகளும் அறிவுப் புலன்களும் நல்ல பகல் பொழுதில் கூட கண்முன்னும், கை முன்னும் கிடக்கும் கடமைகளை விட்டு விட்டுப் பரிசு கிடைக்கும் கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். கனவில் பரிசு கிடைக்கும். பரிசுக்குரிய திட்டங்கள் தீட்டப்படும். கனவு கலைந்து நினைவுலகத்திற்கு வரும் பொழுது கூட அந்தக் கனவினுடைய சக்தி பரிசு கிடைத்துவிடும் என்பதை உறுதிப்படுத்தி உணர்வுகளைக்கெடுத்துக் கடமைகளைச் செய்யவொட்டாது தடுக்கும். ஆனால் பரிசோ விழவில்லை. இங்கோ வேலையும் கெட்டது. மீண்டும் மீளா வறுமை! ஆதலால் கனவு இம்மியும் நெடிய பயனைத் தராது; நிலைத்த பயனைத் தராது; வாழ்க்கையின் அனுபவத்திற்கு எதையும் கொண்டுவந்து சேர்க்காது. அதனாலன்றோ வள்ளுவம், ‘கனவுந்தான் கண்டபொழுதே இனிது’ என்று கூறுகிறது. அதாவது, கனவு கண்ட நேரத்திற்கே - அதுவும் உணர்ச்சிக்கு மட்டும் இன்பம். மற்றபடி யாதொரு பயனுமில்லை. இதனை,

"நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்

பொழுதே இனிது"

(1215)

என்ற குறளால் உணரலாம்.

குறளில் குடும்பக் கட்டுப்பாடு!
ன்று நாடு தழுவிய குடும்ப நலத்திட்டம் பேசப்பெறுகிறது; செயற்படுத்தப்பெற்று வருகிறது. செயற்கை முறையில் குடும்பத்தின் எண்ணிக்கை உயராமல் தடுத்து நிறுத்த அரசு ஆன முயற்சியெல்லாம் செய்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் இந்தக் குடும்ப நலத்திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால், அவர் முறை மிகமிக உயர்ந்தது. உள்ளத்திற்கு வலிமை. தரவல்லது உடல் நலத்தினைப் பேணத்தக்கது. ஆராக் காதலை அனுபவிக்கச் செய்வது; அன்பினைப் பெருக்கி வளர்ப்பது.

மனித வாழ்வின் இரட்டை நாடிகள் நட்பும், காதலும். இவ்விரண்டுமின்றி மனித வாழ்க்கை, இல்லை. அதனாலன்றோ பாரதி, "காதல் இன்றேல் சாதல்" என்று சொன்னான். மனிதன் முதலில் சந்திக்கும் காதல் நட்பேயாகும். காதல் என்ற சொல் பொதுவானதே. ஒருவருக்கு ஒன்றன்பால் ஏற்படும் ஆரா அன்பினை - தன்னலச் சார்பற்ற அன்பினை - இடையீடுகளைக் கடந்தும் காட்டப்படும் அன்பினை - மதிப்பு, அவமதிப்புகளைக் கடந்த அன்பினை தோளொடு தோள்மட்டுமல்ல, உயிருக்கு உயிரென ஒன்றித்து வளரும் அன்பினைக் காதல் என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம். காதல் காழ்ப்பு அகற்றும்; கணிவினைத் தரும். காதல் உடம்பொடு பட்டதன்று; உயிர்த்தொடர்புடையது. காதல் உடம்பினை வளர்ப்பதன்று; வாயினால் சிரித்து மகிழ்தலுக்கன்று; உயிரைத் தழைக்கச்செய்து வளர்ப்பது காதல்; நெஞ்சு நிறைந்த களிப்புக்கும் கிளுகிளுப்புக்கும் பயன்படுவது காதல். இக்காதல் ஒருவருக்கு, எல்லாம்வல்ல இறைவனிடத்திலும் ஏற்படலாம். "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி" என்று திருஞானசம்பந்தர் ஓதியுள்ளார். ஓர் ஆண், மற்றோர் ஆணிடத்தில் காட்டும் நட்பைக்கூட முற்றி முறுகி வளரும்போது காதல் என்று சிறப்பித்துக் கூறுகிற அருகிய வழக்குண்டு. ஆனால், உலகியலில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள அன்புணர்ச்சியைத்தான் காதல் என்று குறிப்பிடுவது பெருவழக்காகிவிட்டது. அதற்குக் காரணம் பிறதுறைக்காதல் உலகில் அருகிப் போனமையேதான். இறைவனிடத்தில் இன்று காதல் செய்வார் இருக்கிறார்களா? என்ற வினா எழுப்பின் விடை கிடைப்பதரிது. ஏன்? இல்லையென்றே துணிந்து கூறலாம். இறைவனிடத்தில் காதல் செய்வோர் உளராயின் இறைவன்தான் மண்ணில் விளையாடுவானே! நட்புலகிலும் கூடக் காதற்கிழமை அனைய ஆழமான நட்பு அருமையாகவே இன்று காணப்படுகிறது.

ஆதலால் காதல் என்பது ஒரு சிறந்த கலை; அருளார்ந்த கலை. மனித உலகத்தை அரித்து அலைக்கும் தன்னலத் தொழுநோயை மாற்றிடும் மாமருந்து காதல். பால்வேறுபட்ட இருவர் திருமணம் என்ற ஒரு சடங்கின்மூலம் இணைக்கப்பெற்று, ஒரு மனையில் சமைத்து உண்டு இனம் பெருக்கி வாழ்வதைக் காதல் என்று கருதிவிட முடியாது. சமூகத்தின் நிர்ப்பந்தங்களும், வயிற்றின் பசியும், பால் பசியும் இவைகளை நிர்ப்பந்தமாகப் படைத்திருக்கலாம். காதல், கட்டுப்பாடுகளைக் கடந்தது. ஆனாலும் சிந்தனையின் வரம்புக்கும், சீலத்தின் மாண்புக்கும் நிறை நலத்திற்கும் கட்டுப்பட்டதே காதல்.

இந்தக் காதல், உடற் புணர்ச்சிகளை அவாவி நிற்பதன்று. அஃதில்லாதபோது, அந்தக் காதல் உணர்ச்சி மங்கி மறையாது. பற்றிப் படரும் கொம்பும் மாறாது. அந்தக் காதல் பிரிவில் பேதலிக்காது. பிரிவில், நெருங்கி நின்ற பொழுதினும் அதிகமாக வளரும். இந்தக் காதல் ஊடலில் குலையாது; உலைவின்றி வளரும். சிறந்த காதல் நினைத்த அளவிலேயே இன்பத்தைத் தரும். கண்களால் கண்டபொழுதே இன்பத்தைத் தரும்; நினைத்தலிலும் காண்டலிலும் இன்பம் பெறும் சிறந்தவர்களே காதல் நன்மக்கள். இதனை,

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

(1281)

என்றார் வள்ளுவர், தட்பியலிலும்,

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்"

(785)

என்றும் கூறியுள்ளார். இன்றோ, புணர்ச்சியின்றேல் அது காதலில்லையென்று பலர் கருதுகின்றனர். அதனால் ஆழமான அன்பைச் சமூகம் இழக்கிறது. காதலிக்கப்படும் பொருள் எதிரே இருந்து அன்புணர்ச்சி தலைப்படுவது புலாலுடம்பின் கவர்ச்சி மிக்க தூண்டுதலாகவும் இருக்கலாம். உடனடியாக நிறைவேற்றத் துடிக்கும் அகோர உடற்பசியாகவும் இருக்கலாம். அது நெருப்புப்போன்றது. நெருப்பிற்படும் பொருள் எல்லாம் அழியும். இதனை யாரும் காதல் என்று சொல்வதில்லை. புறத்தூண்டுதலில்லாது நெடுந்தொலைவிலிருக்கும்பொழுது நெஞ்சத்திற்குள் ‘உள்குதல்’ என்ற அகத்தொழிற்பாட்டின்மூலம் காதல் செய்து இன்பம் ஆர்தலே உயரிய காதல். இந்தக் காதல் பழக்கம் கணவன் மனைவியரிடையே ஏற்படுமாயின் அன்பும் பெருகும்; நலன்களும் நாளும் வளரும்; குடும்ப நலனும் இயற்கையிலமைந்த கடலணைபோல அணைகட்டும். ஆதலால், புணர்ச்சிகளின் வேட்கை தணிந்து நெஞ்சு நிறைந்த காதலில் மக்கள் உலகம் திளைத்து மகிழவேண்டுமென்பதே வள்ளுவர் படைத்த காதல்!
உற்ற துணை!

வாழ்க்கை ஒரு போராட்டமே! தனிமனிதனின் பிறந்தநாள் தொட்டு வாழ்க்கைக் களத்தில் போராடி அடி அடியாக முன்னேறுகிறான். மனிதனைச் சூழ்ந்திருக்கும் பகையோ அளப்பில. அகத்திலும் புறத்திலும் பகையே சூழ்ந்திருக்கிறது. ஆயினும், மொத்தத்தில் ஆராயும்பொழுது, பகைப்புலத்தின் ஆற்றல், மனித ஆற்றலிலும் விஞ்சியதன்று. அகப்பகையேயானாலும் புறப்பகையேயானாலும் அவை இயற்கையல்ல. மனிதன் தன் அறியாமையை ஓயாது எதிர்க்கும் போர்க்குணத்துடன் போராடிக் கொண்டிருப்பானானால் இறுதியில் அவனுக்கு வெற்றியே கிடைக்கும். ஒருகால் வெற்றி கிடைக்காது போனாலும், பகையின் ஆற்றல் தடுத்து நிறுத்தப்பெற்று வெற்றிக்குரிய வழி துலங்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் கணக்குப் பார்க்க முடியாது. ஆனால், கணக்குப் பார்க்காமலும் இருக்கக்கூடாது. வாழ்க்கைப் போராட்டத்தில் கிடைக்கும் வெற்றிகள் கட்புலனுக்கு வாராமலும் இருக்கலாம். தத்துவ வளர்ச்சிகள் - சமூக மனமாற்றங்கள் உடனடியாக ‘பளிச்’ சென்று வரக்கூடியவையல்ல. உடனடியாகக் கட்புலனுக்குத் தெரியும் பயன்கள் நெடிய பயனைத் தராது போகலாம். ஏன்? தற்காலிக நலன்களைத் தந்து போர்க்குணத்தை மாற்றினாலும் மாற்றலாம். எப்பொழுதும் சமுதாயத்தை வருத்திக் கொண்டிருக்கும் பிற்போக்கு சத்திகள் அடிப்படை மாற்றத்தை ஒத்திப்போடுவதற்காகத் தற்காலிக நலன்களைத் தாராளமாக வழங்கும். புகழ்ச்சொற்களால் அர்ச்சித்துப் புகழ்ப்போதையில் மயக்கும். கண்ணயர்ந்தால் கையூட்டும் தரும். தயவு - தாட்சண்யங்களுக்குக் கட்டுப்படுத்தும். இந்தக் கட்டங்களிலெல்லாம் புகழ்ப்போதை வசப்படாமலும், மயங்காமலும் இடையில் நிற்காமலும், ஓயாமலும் வாழ்க்கைக் களத்தில் போராடுபவன்தான் இலட்சியச்சார்புடைய - பயனுடைய வாழ்க்கை வாழுகிறான். இல்லையெனில், ‘அவனும் வாழ்ந்தான்’ என்ற அவலப்பேச்சே எழும்.

வாழ்க்கையில், எரியும் மின்மினிப் பூச்சியைப்போல சிலருக்கு இலட்சிய வேட்கையிருக்கிறது. ஆனால், பொருள் காட்டா ஆற்றலற்ற விளக்கே போல, அந்த இலட்சியம் கனலாகப் பற்றி எரிவதில்லை. இத்தகையோர் இலட்சியங்களைப் பற்றிக் கனவும் காண்பர். நிறையக் கயிறு திரிப்பர். ஆனாலும், செயலிருக்காது. ஏனென்று கேட்டால் "அது ஓட்டை, இது ஓட்டை" என்று சந்தர்ப்பங்களின் மீது பழியைப் போடுவர். "காலம் நன்றாக இல்லை. கலியுகம் அல்லவா?” என்று அங்கலாய்ப்பர். "நல்ல ஆட்கள் இல்லை" என்பார்கள். "காசில்லை" என்பார்கள். இப்படிச் சார்புகளின் மீதே பழியைப் போடுவர். கொடி, கொம்பை நாடி வாழலாம். ஆனால், மனிதனுக்குச் சார்புகள் தேவை. அவன் தேடிப்பெறவேண்டிய ஒன்றும் சார்புதான். ஆயினும், சார்பையே கதியென நம்பி வாழ்வதும் சிறப்பன்று. புறச்சூழல்களையும், சார்புகளையும் கூட ஒரு மனிதன் உளமார முயன்றால் தனக்கியைந்தவாறு சீரமைத்துக்கொள்ள முடியும். ஆதலால்தான் திருவள்ளுவரும், "பொறியின்மையார்க்கும் பழியன்று” என்று எடுத்தோதுகின்றார்.

ஒரு மனிதன் தன்னுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் தன்னுடைய சார்புகளின் மீது குற்றம் சுமத்துவது அறிவும் அன்று; ஆள்வினையுமன்று; புகழும் அன்று. இந்தக் கருத்தைத்தான் நாட்டிடை வழங்கும் சாதாரணப் பழமொழி விளக்குகிறது. "ஐந்தும் உண்டானால், அறியாத பெண்ணும் கறி சமைப்பாள்" என்பது பழமொழி. அதாவது, பெண்ணின் சமையற்கலையில் திறனில்லை. சுவை தரும் பொருளனைத்தும் குறைவற இருப்பதால் அவளும் சமைத்தாள். ஐந்தில் ஒன்று குறைவாக இருந்தது. எனினும் அவள் தன் திறனால் சுவைபடச் சமைத்தாள் என்றாலே சமைத்த பெண்ணின் திறன் வெளிப்படுகிறது. அதுபோல் வேண்டிய அனைத்தும் ஒழுங்காக அமைத்துக்கொடுத்துச் செய்யச்சொல்லிப் பார்க்கட்டுமே! என்று கூறுவது ஆள்வினையன்று. இருப்பதை வைத்துக்கொண்டு தன் ஆற்றலால் சீர்பெறச் செய்வது தான் செயல்திறன் ஆகும்.

ஒரு மனிதன் தான் நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்துக்கு முதல் துணையெனக் கொள்ளத்தக்கது அவனுடைய நெஞ்சமேயாகும். ஐயோ, பாவம்! சிலருக்கு அப்படி நெஞ்சு என்று ஒரு பொருள் இருப்பதாகவே தெரியாது. சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது கடிவாளம் இல்லாத குதிரையாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மனிதன் அதை இழுத்துப் பிடித்து ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல் அடிமையாகிக் கிடக்கிறான். இத்தகைய மனிதன் எப்படி வாழ்க்கைக் களத்தில் போராட முடியும்? அவனுக்குக் கடமைப்பட்ட - அவனுக்கு அடங்கி ஆட்படக் கூடிய நெஞ்சமே அவனுக்குத் துணையில்லையென்றால் அவன் கெட்டுவிட்டான் என்று பொருள். அவனுக்குக் கேளிர் கிடைக்கமாட்டார்கள்; உறவினர்கள் கிடைக்கமாட்டார்கள்; நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். எனவே, வாழ்க்கையை அவன் முடித்துக்கொள்கிறான் என்பதே பொருள். ஆதலால், நெஞ்சை நன்முறையில் பழக்குக! நாள்தோறும் பழக்குக! நன்றில் நிலைநிற்கச் செய்திடுக! உற்றதுணையாக நெஞ்சத்தினைப் பெற்றிடுக! தன் நெஞ்சம் தனக்குத் துணையின்றேல் இந்த நீளுலகில் யாரும் உறவில்லை.

"அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே

நீயெமக் காகா தது"

(1291)

என்பது குறள்.

நெஞ்சமே துணை!


னிதன் ஓர் அற்புதமான படைப்பு. உலகில் மிக உயர்ந்த படைப்பும் மனிதனே! தொன்மையில் உலகத்தைப் படைத்தவர் யாரோ? ஆனால், இன்று உலகியலைப் படைப்பவன் மனிதனே! நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தப் பழைய உலகத்திற்குப் புதுப்புது வடிவம் கொடுக்கிறான். அவனுடைய ரசனை உணர்ச்சிகளின் ஆற்றல்தான் என்ன? பேசும் மொழி படைத்தான், கனிந்துருகக் கலை படைத்தான். உணர்ச்சியில் திளைத்து மகிழக் காதலும் கண்டான். உணர்ச்சியினைத் தரமுடையதாக்கவும், மேலும் மேலும் உயர்வற உயர்ந்து விளங்கவும் கடவுளைக் கண்டான்.

இத்தகு சீரும் சிறப்புமுடைய மனிதப்படைப்பில் அவனுடைய உடலும் உள்ளமும் புகழ்பெற்று விளங்குகின்றன. மானிட உடம்பு கட்டையா? அப்படிச் சொல்லுபவர் உணர்ச்சியற்ற மரக்கட்டைகள்! இது புழுக் கூடா? ஐயோ, பாவம்! புண்ணியத்தின் புண்ணியமாகிய சிவன் தந்த இந்தப் புகழ்க் கூட்டை - புண்ணியத்தின் கூட்டைப் புழுக் கூடு என்னலாமோ? அதைவிடப் பாவம் வேறொன்றில்லை. கையில் ஒரு காசு கிடைத்தால் பத்திரப்படுத்துவோருங்கூட விலைமதிப்பற்ற இந்த உடலை வருத்தும் நோய்களுக்கு ஆளாக்கி, நெறி கடந்ததனைப் பயன்படுத்தி அழிக்கின்றனர். திருமந்திரம் அருளிச்செய்த திருமூலரே, "உடம்பார் அழியின் உயிரா ரழிவர்" என்றார். அதுபோதாதென்று மேலும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!" என்றார். இங்கே வளர்த்தலென்பது சதைவளர்த்தலைக் குறிப்பிடுவதன்று. உயிர்க்குக் கருவியாக உடல் கிடைத்தது. கருவி, எளிதில் தாங்குதற்குரியதாக இருந்தாலே பயன்படும். சிலர் உடம்பிற்கு உயிரின் நலமறியாது, நாவின் சுவைக்கு அடிமையாகித் தீனி நிறையத்தின்று தொங்கு சதைகளை வளர்த்துக்கொண்டிருப்பர். உயிரின் ஆற்றல் இந்தத் தொங்கு சதைகளைத் தூக்குவதிலேயே வீணாகப்போகிறது. உடலினை அலட்சியப்படுத்துதலே உயரிய பண்பென்று கருதி, "நான் அதெல்லாம் பார்ப்பதில்லை, எதையும் சாப்பிடுவேன், எப்பொழுதும் சாப்பிடுவேன்" என்று மனித உருவில் விலங்காக வாழும் வேறு சிலர் கூறுவர். இன்னும் வேறு சிலர் காலத்தில் கறங்கென இயங்கும் உலகியலைப் பார்த்தும் காலம் கருதாதவர்களாக இருக்கின்றனர். எல்லாம் வல்ல சிவபெருமான் காலங்கடந்தவர் என்பார்கள். இன்றைய மனிதகுலத்தில் பலர் காலங்கடந்தவர்கள். காலங்கடப்பதே அவர்கள் இயல்பு. கடிகாரங்கள் - மணிக் கூண்டுகள் - காலங்காட்டும் சங்கொலிகள் - இவ்வளவும் பல்கிப் பெருகியிருந்தும் இந்த உலகில் நம்மவர்களே காலங்கடத்த வல்லவர்கள். இதற்கொரு நோபல் பரிசு வைத்தால் நமது நாட்டு ஆளே தட்டிக்கொண்டு வருவான். சிவபெருமான் காலங்கடந்தவன் என்பதற்குப்பொருள், அவன் காலத்தைவென்று நிற்கிறான் என்பதேயாகும். காலங்கடத்தி, காலத்தைப் பயனற்றதாக்குபவன் என்பதல்ல.

ஆதலால், உடலியக்கத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் முறைப்படுத்திக் காலத்தில் செய்தல் அதிகப் பயனைத் தரும். குறிப்பாக ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்தற்குரிய ஆற்றல் வீண் போகாமல் தடுக்கலாம். இங்குத் திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்த்தல்’ என்பது உடற்கருவி பயன்படு திறனை வளர்த்தல் என்பதேயாகும். இந்த உடற்கருவி பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும் மாபெரும் தொழிற்கேந்திரங்களை உடையது. ஒன்றோடொன்று உடன் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படும் இயல்புடையது. கண் பார்த்தால் பார்வை அளவோடு நிற்பதில்லை. உடன் அறிவுப்புலன் வேலை செய்கிறது. கை, கால்களும் தேவைப்பட்டுழி வேலை செய்கின்றன. அவசியமிருந்தால் நினைவுப் புலனும் வேலை செய்யும். இங்ஙனம் கடிதில் ஒன்றோடொன்று துணைசெய்து வேலை செய்யும் பொறி புலன்களின் கூட்டுறவே இந்த உடம்பு. இந்தக் கூட்டுறவு குலையும்பொழுதே நோய் என்று சொல்கிறோம். மனித குலத்திலும் கூட்டுறவு குலைந்தால், மனிதகுலம் வளர்ந்து வாழ்வதற்குப் பதில் அழியும். எந்த ஒன்றினுடைய முதல் இலட்சியமும் கூட்டுறவாகவே இருக்கவேண்டும். ஆனால் மனிதனின் தற்பெருமை உணர்வும், தன்னல உணர்வும் கூட்டுறவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

இத்தகைய விந்தைமிகு மனிதப்படைப்புக்கு மையமாக - நினைப்பின் களமாக - உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்ணாக - சீலங்களின் பிறப்பிடமாகத் திகழ்வது நெஞ்சமேயாம். புறக்கருவிகளில் கண் எங்ஙனம் சிறந்ததோ, அதேபோல, ஏன்? அதனையும்விட நெஞ்சு சிறந்தது.

ஏனெனில் கண்கருவி மட்டுமே. அதற்குக் கருத்தையோ அல்லது பண்பையோ அல்லது நோக்கத்தையோ சேர்ப்பது நெஞ்சமேயாம். ஆதலால் மனிதனின் ஈடு இணையற்ற உறுப்பு நெஞ்சு. மனிதன் வாழப்போகிறானா? வீழப்போகிறானா? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தி நெஞ்சத்திற்கே உண்டு. மனிதன் அடையக்கூடியது நரகமா? சொர்க்கமா? என்பதை நிர்ணயிக்கக்கூடியது நெஞ்சமேயாம். இறைவனேகூட நெஞ்சத்தில் கோயில் கொள்ளவே விரும்புகின்றான். இத்தகைய பேராற்றலுடைய நெஞ்சினிடத்து உறவும் உரிமையும் ஏற்படுத்திக்கொண்டு வாழ்தலே வெற்றிக்குரிய வழி.

இத்தகைய இனிய தத்துவத்தைத் திருவள்ளுவர் காமத்துப்பாலிலே அழகுற விளக்குகின்றார். காதல் உடல் வழிப்பட்டதன்று; உயிர் வழிப்பட்டது. பல்லூழிக்காலம் தொடரக்கூடியது. புணர்ச்சியில் மகிழ உடல் தேவை. உணர்ச்சியில் மகிழ உடல் தேவையில்லை. புணர்ச்சிக்குக் கால எல்லையுண்டு; நில எல்லையுண்டு. உணர்ச்சிக்கு இவ்விரண்டுமில்லை. புணர்ச்சியைவிட உணர்ச்சியே சிறந்தது. அதனால்தான் போலும் கூடலினும், ஊடல் இனிதென்றார் வள்ளுவர். கூடலில் இணைவது வியப்பன்று. ஊடலிலும் மாறுபடா அன்பும் உறவும் உடையராயிருத்தல் உணர்ச்சியின் நிறைவைக் காட்டும். அது மட்டுமின்றி உணர்ச்சி நிறைந்தவர்கள் ஊடல் கொள்ளும் பொழுது வடுக்காணார்; வசை பேசார், உணர்ச்சியற்றார், நெஞ்சிலே புண்படுத்துவர். ஆதலால் நெஞ்சினும் இனிய உறவில்லை. ஒரு மனிதன் எப்பாடுபட்டேனும் நெஞ்சினை உறவாக்கிக் கொள்ளவேண்டும். அதனால்தான் போலும், திருஞானசம்பந்தரும் ‘நன்னெஞ்சே’ என்று நெஞ்சை இரந்து கேட்டு தன்வயப்படுத்த முயலுகின்றார். எப்படியோ நிகழ்ந்துவிட்டது? என்று சிலர் கூறுவர். அஃதொரு பொய். "நெஞ்சிற் சிறந்த கரியிலை" என்று கலித்தொகை கூறும். நெஞ்சறியாத பொய்யில்லை, சூதில்லை. ஏன்? ஒரு மனிதன் தன் நெஞ்சறியாது எதையும் செய்ய முடியாது. வேறு எந்த உறுப்பையும் எதிலிருந்தும் மறைக்கலாம். ஆனால் நெஞ்சினிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அதனால் தான் போலும் "தன் நெஞ்சறிவது பொய்யற்க!" என்றது வள்ளுவம். இஃதொரு நல்ல குறள். சிலர் பொய்யையே மெய்யாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகரும் ‘பொய்யர் தம் மெய்யும்’ என்றார். வாயிலிருந்து வெளிப்படும் ஒலி ஒரு பொய்க்கு மெய்ம்மைக் கோலம் தந்து உலவவிடுகிறது. அரங்கில் நிற்பவன் இராணியானாலும் ஒப்பனை அறையிலிருந்தவர்களுக்கு, அவள் நடிப்புக்கூலி வாங்கும் ‘சிகப்பி’ என்று தெரியாதா? என்ன? ஆதலால் மெய்போலப் பொய் கூறுபவரைப் பார்த்துத்தான் வள்ளுவர் நெஞ்சறிந்த பொய்யைக் கூறவேண்டாம் என்றார். ‘கெட்டிக்காரன் புளுகு’ என்பதும், பொய்யை மெய்யாக்கிய அறிவுப் புலனின் ஆற்றல் பற்றியதேயாம். ஆனாலும், நெஞ்சு எப்பொழுதுமே உள்ளதை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் உறுப்பாகும். அதற்கு உள்ளதை மறைக்கத் தெரியாது. ஒப்பனை செய்யவும் தெரியாது.

நெஞ்சமே நமக்கு உறவில்லாது போகும்பொழுது எப்படி அயலார் உறவிருக்க முடியும்? அயலார் உறவைப்பெற்றுத் தருவதும், பெற்ற உறவைப் பேணிக்காப்பதும், அன்புவழிப்பட்ட நெஞ்சங்களின் கடமையாகும். அந்த நெஞ்சு அது தவறும்பொழுது எங்ஙனம் அயலார் உறவாக இருப்பர். ஆதலால், இந்த உலகியலில் காதலில் வெற்றி பெறவேண்டுமானாலும் சரி, நட்பில் வெற்றிபெற வேண்டுமானாலும் சரி, அல்லது எடுக்கும் காரியங்களில் வெற்றிபெற வேண்டுமானால் சரி, முதலில் நெஞ்சை உறவுபடுத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய நெஞ்சே நமக்கு உறவில்லாத வழி எதைத்தான் செய்யமுடியும்? என்பது வள்ளுவத்தின் வினா.

                                                    "தஞ்சம் தமரல்ல ரேதிலார்
                                                    தாமுடைய நெஞ்சம் தமரல் வழி" (1300)

என்பது குறள்.

பிணங்கலும் இன்பம்!

வாழ்க்கை, மிகமிக மென்மையானது. இன்பமே இயல்பாகவுடையது. தகுதி சான்றவர்களுக்கு வாழ்க்கை, புணர்ச்சியிலும் இன்பம் தரும்; பிணங்குதலிலும் இன்பம் தரும். தகுதிக் குறைவானவர்கள் புணர்ச்சியில் மட்டுமே இன்பம் காண்பர். பிணங்குதலைப் பெரும் பகையாகக் கருதுவர். வாழ்க்கை புணர்ச்சியிலேயே நிகழுமாயினும் நெடிய பயன் விளையாது. அது போலவே, பிணங்குதலில் பெரும்பொழுது கழியுமாயினும் பயனில்லை. இவ்விரண்டும் கலந்ததே வாழ்க்கை.

நிலத்தொடு தண்ணீர் கலக்கிறது; ஒன்றாகிறது. கட்புலனுக்காகும் நீர் வெள்ளம் நிலத்தின் இயல்பைப் பெற்று விளங்குகிறது. நிலத்தின் வண்ணத்தை நீர் அடைகிறது; நிலத்தின் சுவையையும் நீர் அடைகிறது. இதனையே

'செம்புலப் பெயல்நீர் போல'

என்று குறுந்தொகையும் பேசுகிறது. தண்ணீருக்கு வண்ணம் இல்லை; சுவையில்லை. ஆனால், செம்மண் தரையைச் சார்ந்த தண்ணீர், அச் செம்மண்ணின் வண்ணத்தையும் சுவையையும் பெற்று விளங்குகிறது. நிலத்திற்கும் நீருக்கும் உள்ள உறவைப் போல, உள்ளத்தால் ஒன்றாகிய உறவுடையோர், புணர்தலினும் இன்பம் காண்பர்; பிணங்குதலிலும் இன்பங் காண்பர். ஏன்? இத்தகையவர்கள் புணர்தலில் காணும் இன்பத்தை விடப் பிணங்குதலில் புத்தேள் நாட்டு இன்பத்திலும் சிறந்த இன்பத்தை அனுபவிப்பர். அன்பிற் கலந்து ஒன்றாய நெஞ்சுடை யோர்க்குத் தன்னிடத்து அன்புடையோர் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. அதேகாலத்தில் தன்னுடைய தவறுகளைத் தெரிந்து ஒத்துக் கொள்ளும் சிறந்த குணமிருக்கும். தரத்திற் குறைந்தவர்களோ அல்லது அன்புணர்வு அற்றவர்களோ தங்களுடைய குறைகளை உணர்வதே இல்லை. மற்றவர்களுடைய குறையை மலையாக்குவர். உணர்வு கலந்த உறவு வளர்ச்சிக்கு, மற்றவர் குற்றம் பார்க்கும் குணம் கூடாது. அதேபோழ்து தன் குற்றத்தை உணரும் ஆற்றலிருக்க வேண்டும். யாதொரு சிறப்பும் இல்லாத குற்றங்களுடைய நம்மிடத்திலேயே இவ்வளவு அன்பைக் காட்டுகிறார்களே என்று உணரும் பொழுதுதான் அடக்கம் முகிழ்க்கிறது; அன்பு வளர்கிறது; இன்பம் கால்கொள்ளுகிறது; இத்தகு இயல்புடையவர்களிடையில் பிணங்குதல் ஏற்பட்டாலும் அதுவும் இன்பமே.

உறவுடையவர்கள் இன்னாமையைச் செய்தாலும் அஃதின்பமே யென்று, குறுந்தொகை பேசுகிறது. உறவுடையார் செய்வனவற்றுள் சில இன்னாதனவாகத் தோன்றினும், அவை முடிவில் இனியனவாகவே முடியும். காரணம், இனியனாக இருப்பவர். இன்னாதன செய்வதால் அந்தத் துன்பம் நிரந்தரமானதன்று. உறவுடையார் செய்யும் துன்பம் இனிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகவும் இருக்கலாம். வரம்பிகந்து போகாமல் விதிக்கும் தடையாகவும் இருக்கலாம். புலன்களையும் உணர்வுகளையும் வளர்த்துச் செழுமைப்படுத்தவும் இன்னாதன செய்யலாம். ஆதலால், இனிய இயல்புடையோர் செய்யும் துன்பமும் இன்பமேயாம்.

                     "இனிய னாகலின் இனத்தி னியன்ற
                      இன்னா மையினும் இனிதோ
                      இனிதெனப் படுஉம் புத்தேன் நாடே."

என்பது குறுந்தொகை. புத்தேள் நாட்டு இன்பம் என்றும் இன்பமாக இருப்பது. என்றும் இன்பமாக இருப்பதில் இன்பச் சுவை இருக்காது. பசிக்காது உண்போருக்கு பசியின் சுவையும் இல்லை; ஊணின் சுவையும் இல்லை. இத்தகையோர்க்கும் உடல் வாழ்க்கையும் சுவையாக இல்லாது சுமையாகவே இருக்கும். ஆதலால் புத்தேள் நாடு இன்பம் அன்று.

பிணங்கலில் இன்பங் காண்பதே இன்ப வாழ்க்கை! அன்பு வாழ்க்கை; காதல் வாழ்க்கை; நனி சிறந்த நல்வாழ்க்கை.

திருநீலகண்ட நாயனார் குடும்ப வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டு. திருநீலகண்டர் இளமையின் காரணமாக மனையறத்தில் வாழ்ந்தும், இன்பத்துறையில் எளியராகிப் பரத்தையின் பால் சென்றார். இதனையறிந்த திருநீலகண்டரின் மனைவி பிணங்கினார். பிணங்கி, "தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்” என்று ஆணை வைத்தார். ஆணை கேட்ட அடியவர் திருநீலகண்டர், இளமையின் காரணமாக எளியராய்ச் சென்றவராயிருந்தும் ஆணையின் காரணமாக மாதரை மனத்தாலும் நினையாத நோன்பு நெறிவாழ்க்கை மேற்கொண்டார். ஒரே வீட்டில் நாயனார் மனைவி, கணவனார்க்குரிய பணிவிடைகள் செய்தும், அயலவர் அறியாமல் புணர்ச்சியின்றி வேறு வேறாகப் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்குப் பிணக்கு இருந்தது உண்மை. ஆனாலும் அந்தப் பிணக்கு பகையை வளர்க்கவில்லை. அந்தப் பிணக்கு பக்கத்து வீட்டுக்கும் தெரியவில்லை. பரமன் ஒருவனுக்கே தெரிந்தது. இப்பிணக்கு பேரன்பினை இழக்கச் செய்யவில்லை. பேரின்பத்தையே வழங்கியது. இத்தகு நெறியில் காதல் வாழ்க்கையும் நட்பு வாழ்க்கையும் சிறக்குமானால், எங்கும் இன்பம் பெருகும். இதனை,

     "புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
     நீரியைத் தன்னா ரகத்து (1323)

என்று குறள் கூறுகிறது.