குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/சொர்ணம்மாள் நினைவுக் சொற்பொழிவுகள்
திருக்குறள் சிறப்பு
நல்ல இலக்கியங்கள் வாழ்க்கையை மையமாகக்கொண்டு தோன்றுபவை. வாழ்க்கையை முறையாக வளர்க்கும் இயல்பின சிறந்த இலக்கியங்கள். உலக மொழிகளில் இலக்கியங்கள் காடென மண்டிக் கிடக்கின்றன. இவற்றுள் இலக்கியத்தின் தரத்தை பிரான்சிஸ் பேக்கன் என்ற ஆசிரியன் முறைப்படுத்தும்போது "சில இலக்கியங்கள் கற்கத்தக்கன. சில இலக்கியங்கள் கற்று உணரத்தக்கன. சில இலக்கியங்கள் கற்று உணர்ந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத்தக்கன" "Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested, that is, some books are to be read only in parts, others to be read but not curiously, and some few to be read wholly, and with deligence and attention. Some books also may be read by deputy, and extracts made of them by others."-(Essays on Studies-Francis Bacon.) இந்த இலக்கிய வரிசையில் திருக்குறள் கற்று, உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றத்தக்க சிறப்புடைய இலக்கியம். "நூல்கள் கற்கும் முயற்சியைவிட எந்த நூலைக் 'கற்பது? என்று தேர்ந்தெடுப்பதில் வாழ்க்கையில் வெற்றிக்குரிய பகுதி மிகுதியும் அமைந்துவிடுகிறது" "How long most people would look at the best book before they would give the price of a large turbot for it" - என்கிறார் ரஸ்கின். இங்ஙனம் இந்த இலக்கிய வரையறைக்கேற்றவாறு சிறந்து விளங்கும் நூல் திருக்குறள். திருக்குறள், கடவுளை நம்புகிறது; ஆனால் கடவுளுக்காகச் செய்யப்பெற்றதன்று. திருக்குறள் மனிதனை வளர்ப்பதற்காக மனிதனையே மையமாகக் கொண்டு செய்யப்பெற்ற நூல். மனிதராகப் பிறந்தோர் பேசுகிற வேறு எம்மொழியிலும் திருக்குறளைப் போன்றதோர் வாழ்க்கை நூல் இதுவரையில் தோன்றவில்லை.
வாழ்வாங்கு வாழ்தல்
வாழ்க்கை என்பது நோக்குடையது; பயனுடையது. வாழ்க்கை என்பது தற்செயலாக வந்த ஒன்றன்று. அது தற்செயலாக நீரிற் குமிழிபோல மறைந்து விடுவதுமில்லை . வாழ்க்கைக்கு அளப்பரிய நோக்கங்கள் உண்டு. வாழ்தல் என்பது எளிதன்று. வாழ்வாங்கு வாழ்தல் அருமையுடைய முயற்சி. வாழ்க்கையில் வெற்றி பெறுவோர் கோடியில் ஒருவரே, மற்றவர் வாழ்க்கை பாழுக்கிறைத்த நீரைப் போலப் பாழாகிறது. சிலர் வாழ்க்கை , பாழாவது மட்டுமின்றி மற்றவர்களுக்குத் துன்பமும் பழியும் தருவது உண்டு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பெற்ற மாளிகையன்று. வினாடிக்கு வினாடி எண்ணங்கள் என்ற கற்களை அடுக்கி, ஊக்கம் என்ற சாந்து கூட்டி, அன்பு என்ற நீரில் கலவை செய்து, ஆள்வினையென்ற கொற்றாள் துணைசெய்யக் கட்டி முடிக்கப்பெறும் மாளிகையாகும். ஆதலால் வாழ்க்கையில் அதிகக்கவனம் தேவை. வாழ்க்கை, நமக்குரிய ஒவ்வொரு வினாடியும் நாம் பயன்படுத்தும் முறையினைப் பொறுத்து ஆக்கத்தினை அல்லது அழிவினைத் தரும். உலகில் எல்லாப் பொருள்களுக்கும் காலத்துக்குமிடையே ஓயாத இழுபறிப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போரில் காலத்தை வெற்றி கொள்பவர்கள் ஆயிரத்தில் ஒருவரே! காலம், வெற்றி பெறுதலே மிகுதி. காலம் மானுடச் சாதியை வெற்றி பெற்றுவிட்டால் மூப்பு, நோய், அழிவு ஆகிய முத்திரைகளைப் பொறிக்கும். மனிதன் விழிப்பாக இருந்து காலத்தைப் பயன்படுத்தி வெற்றிகொண்டால் ஆக்கம், இன்பம், புகழ் என்ற முத்திரைகளைக் காலத்தின்மீது பொறிப்பான். ஆதலால் வாழ்க்கையில் வெற்றிக்கு முதல் தகுதி காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக்கொள்ளுத்ல்.
அறிவு என்பது எது?
உயிர், அறிவுப்பொருள்; அறிதற்குரியது; அறிவு மயமாய் விளங்குதற்குரியது. ஆயினும் அறியாமையைத் தழுவிக்கிடக்கிறது. வாழ்வியல் வெற்றிக்கு முதல் தேவை, அறிவு. அறிவுக்குப் பின்தான் பிற தேவைகள்.
"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"
(430)
என்று பேசுகிறது, திருக்குறள். எது அறிவு? அறிவுடைமைக்கு அடையாளம் என்ன? தெளிவாக உணரவேண்டும். தமிழக வரலாற்றுப் போக்கைக் கூர்ந்து நோக்கினால் நம்மில் பலருக்கு நேற்றும் இன்றும் அறிவே இல்லையோ என்று ஐயப்படத்தக்க அளவுக்கு வரலாற்று நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இன்றைய தமிழகத்தின் நிலையும் அதை உறுதிப்படுத்துகிறது. விவரங்கள், தகவல்கள் தெரிந்து வைத்திருப்பது அறிவன்று. நிரந்தினிது சொல்லும் திறமை பெறுதல் அறிவன்று. அவற்றிலும் சிறந்த மாட்சிமையுடைய உயரிய பணி ஒன்றுளது. அது என்ன? மனித உலகம் துன்பத்திலிருந்து காக்கப்பெற வேண்டும். நேற்றும் துன்பம், இன்றும் துன்பம்; நேற்றும் தோல்விகள், இன்றும் தோல்விகள்; நேற்றும் சாதிச்சண்டைகள், இன்றும் சாதிச்சண்டைகள்; அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக என்ன நடை பெற்றிருக்கிறது? தனிமனித நிலையிலும் சமுதாயப் பொது நிலையிலும் அனுபவித்த வறுமை முதலிய கொடிய துன்பங்கள் மாற்றப்படவில்லை. ஆதலால், அறிவின் இயக்கம் இல்லை என்பது தானே பொருள். அறிவு என்பது அகராதிக்கு மறுபதிப்பன்று. புத்தகங்களில் உள்ள செய்திகளை ஒலிப்பதிவுத் தட்டுப்போலப் பதிவு செய்து திருப்பித்தருதலன்று. அறிவு, நுண்மையதாக உணர்விற்கலந்து வாழ்க்கையின் துறைதோறும் துணை நிற்பதாகும்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”
(140)
என்று கூறுகிறது. ஆதலால் கற்றவர்களில், கல்லாதவர்களும் அறிவிலிகளும் உள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுக்குக் கல்வியை இயக்கமாக்கித் தந்த பெருமை திருக்குறளுக்கு உண்டு. திருக்குறள் "கற்க" என்று விதிக்கிறது. வள்ளுவம் மிக மிக இன்றியமையாத இடங்களில் தான் இவ்வாறு விதிக்கிறது. அவற்றுள் "கற்க" என்பதும் ஒன்று; எத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்? உடல் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுதல் போல, உயிர்க்குற்றம் அல்லது மனக்குற்றத்திற்கு மருந்தென விளங்கக்கூடிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். மனக்குற்றங்கள் கருத்துக்களால்தான் மாறும். ஒவ்வொருவரும் தம்தம் மனக்குற்றம் இன்னதென அறிந்து அக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும்; குற்றம் நீங்கி, நன்னெறி வாழ்க்கைக்கு வந்தபிறகு அந்நிலையில் மீண்டும் சோர்வுபடாமல் நிலைநிற்க வேண்டும்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
(391)
வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளைச் சந்திக்கின்றோம். அவற்றில் இன்பந் தருபவையும் இருந்திருக்கலாம்; துன்பம் தருபவையும் இருந்திருக்கலாம். அவைகளை எண்ணிக் கவலைப்பட்டுப் பன்னிப் பன்னிப் பேசுதல் பலருடைய வழக்கம். நேற்று நடந்தது, நடைபெறக் கூடாத ஒன்று தான்! ஆயினும் என்ன செய்வது? நடந்தது நடந்ததுதான்! இனி, நேற்று நடந்ததைத் தவிர்க்க முடியுமா? கவலைப்பட்டு அழுவதில் என்ன பயன் சென்றதை மறந்து இனி வருவதை எதிர்நோக்க வேண்டும்.
"சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடிஇன்புற் றிருந்து வாழ்வீர்'
அஃதன்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா”
(பாரதியார் கவிதைகள், சுயசரிதை: 32-33-1)
சென்றதை நினைந்து கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்தால் எதிர்காலமும் வருந்துதலுக் குரியதாகிவிடுகிறது. சிறப்புடைய நிகழ்காலமே சிறப்புடைய எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால், சென்ற காலத்தை நினைந்து வருந்தாது, சென்ற காலப் படிப்பினைகளை ஏற்று அறிவாக மாற்றிக்கொண்டு இனி எதிர்வருங் காலத்திற்கு உரியனவற்றை நாடிச் செய்ய வேண்டும். அதுவே சரியான வாழ்க்கைமுறை,
"அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்
(427)
என்று திருக்குறள் பேசுகிறது. ஆள்வினை
வாழ்க்கையின் உயிர்ப்புடைய செயல் தொழிற்படுதல். அறிவு, அன்பு, ஈதல், ஒப்புரவறிதல், சான்றாண்மை, நாகரிகம், பண்பாடு முதலிய பல்வேறு நற்பண்புகளையம் இயக்கிச் செயற்படுத்தித் தாமும் வாழ்ந்து உலகையும் வாழ்விக்கச் சிறந்த தொழில்திறன் தேவை. உழைப்பு என்பது உயிரின் இயற்கை உழைக்காது சோம்பியிருத்தலே செயற்கை. அயர்விலாது உழைத்தல் நல்வாழ்வு, உழைத்திடாது சோம்பியிருத்தல் நோய். உழைத்தல் தெய்வத் தன்மையுடையது. உழைப்பே உலகை இயக்கும் ஒப்பற்ற சக்தி. மனித குல வரலாற்றின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைவது உழைப்பேயாம். உழைக்கும் சக்தி என்றும் எப்பொழுதும் செலாவணியாகக் கூடிய ஒப்பற்ற செல்வம்; உடைமை. உலகில் புதிய புதிய புனைவுகளும் படைப்புகளும் உழைப்பின் படைப்பு அல்லவா? அதனால் தான் திருக்குறள்,
"உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
(592)
என்று அறுதியிட்டுக் கூறுகிறது.
ஆக்கம், மந்திரத்தில் வருவதன்று. ஆக்கத்திற்குரிய திருமகள் வந்து சேர்தலுக்குரிய முகவரியை அடையாளம் காட்டிவிட்டால் போதும். ஆக்கம் வீடு தேடி வந்து சேரும். அது என்ன முகவரி: அஞ்சலக முகவரியா? அதுதான் இன்று எல்லாருக்கும் இருக்கிறதே. வேறோர் அடையாளமுமல்ல! இவன் ஊக்கம் உடையவன். இவனை நாம் சென்றடைந்தால் நமக்குரிய விலையைக் கொடுப்பான் என்ற அடையாளத்தைக் காட்டவேண்டும்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
(594)
- "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
- ஆள்வினை இன்மை பழி" (618)
- "ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
- நீள்வினையால் நீளும் குடி" (1022)
என்ற அறிவறிந்த ஆள்வினை வழி நமது வாழ்வியல் சிறப்பதாக!
அன்பு
மனித உலகத்தை இணைத்து வாழச் செய்யும் அற்புதசக்தி அன்புக்கே உண்டு. விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பேராற்றல் அன்புக்கே உண்டு. உலகத்தின் குற்றங்குறைகளை, கொடுமைகளைக் கழுவித் தூய்மை செய்யும் ஆற்றல் அன்புக்கே உண்டு. அப்பரடிகள் ஆற்றல் மிக்க அன்பு என்று பாராட்டுவார். திருமூலர் அன்பே சிவம்' என்று பாராட்டுவார். அம்மம்ம! இந்த அன்பிற்குத்தான் எவ்வளவு ஆற்றல்! கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்கிறது! “தேவர்கோ அறியாத தேவதேவ” னையும் தெருவில் நடமாட வைக்கிறது. அன்புத் தேவதையின் முன்னே ஆதிக்கச் சக்திகள், ஆதிக்க அரசுகள் நிற்கமுடியா. பணத்தாசை முதலியனவும் அன்புத் தேவதையின் பிரவேசத்தால் மாறும். மண் குளிர மனித குலம் தழைக்க அன்பின் ஊற்று தடையின்றிப் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடவேண்டும். இன்று 'தடையிலா அன்பு இந்த உலகத்திற்குத் தேவை. இத்தகைய உயரிய அன்பியலை வாழ்வியலில் 'உயிர் நிலை'யாகக் காட்டுகிறது வள்ளுவம்.
உயிர் எங்கிருக்கிறது? சிலர் உடம்பில் தேடுவர், உடம்பில் இந்த இடத்தில் இருக்கிறது என்பர். அஃது யார்க்கு? உடல் வாழ்க்கை மட்டுமே வாழ்பவர்க்கு! சிலருக்கு உயிர் பணத்தில் இருக்கும். பணத்திற்கு இழப்பு வந்தால உயிர் பிரியும். அய்யோ ‘பாவம்' மனிதன் பணத்தைப் படைத்தான், அவன் படைத்த பணமே அவனுக்கு ஆண்டவனாகி அவனை ஆட்டிப்படைக்கிறது. அவன் உயிரையும் கொள்ளை கொள்கிறது என்றால் என்னே இழிநிலை? இவ்விரண்டு நிலையினரும் இழி மக்கள். வேறு சிலருக்கு மானத்தில், மரியாதையில் உயிர் நிலை இருக்கும். இது நல்லதே. ஆனாலும் இழந்த மானத்தைத் திரும்பப் பெறாமல் இறப்பது, வாழ்க்கையின் நோக்கத்தை முறியடிப்பதாகும். ஆதலால் தவறில்லையாயினும் இதனைப் பாராட்ட முடியாது. காதலில், நட்பில், கடமையாற்றுவதில் உயிர்நிலை வைத்துப் போற்றுவோர் நம்மால் போற்றுதற்குரியோர். காதலில் உயிர் நிலை வைத்திருந்த பாண்டிமா தேவியும், நட்பில் உயிர்நிலை வைத்திருந்த பிசிராந்தையாரும், முறை வழங்கும் அரசுக்கடமையில் உயிர்வைத்திருந்த பாண்டியன் நெடுஞ்செழியனும் வானும், நிலனும், நீரும், தீயும், வளியும் உள்ளளவும் நினைந்து நினைந்து போற்றப்படுவர். ஆம்! அவீர்கள் - 'வாழ்வதற்காக வாழவில்லை; அன்பிற்காகவே வாழ்ந்தார்கள் கடமைக்காகவே வாழ்ந்தார்கள்; அவற்றை இயற்ற இயலாதபொழுது மாறாக உயிரை விலை கொடுத் தார்கள். வள்ளுவம் இத்தகைய அன்பினையே போற்றுகிறது.
- "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
- என்புதோல் போர்த்த உடம்பு" (30)
எவ்வளவு கடுமையாக அன்பின்மையை வள்ளுவம் விமர்ச்சிக்கிறது என்பதை அறிதல் கடமை. ஒருவர்க்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அவர் சுவாசிப்பதிலிருந்து நம்ப வள்ளுவம் தயாராயில்லை. அவன் வாழ்க்கையில் அன்பின் விளக்கமிருந்தால் தான் அவனுக்கு உயிர் உண்டாம். இல்லையானால் உயிரற்ற உடம்பு ஒன்று உலாவருகிறது என்று வள்ளுவம் கூறுகிறது. அது மட்டுமா? உயிர், உடலோடு தொடர்புகொண்டு பிறந்ததே அன்பு செய்தற்குத்தானாம். உடலோடு கூடிய உயிர் அன்பு செய்தல் என்பது தான் வழக்கம். அது மாறியிருந்தால் வழக்கமில்லாத ஒன்று.
- "அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
- என்போ டியைந்த தொடர்பு" (73
என்று வள்ளுவம் அன்பியல் வாழ்க்கையை இயல்பு ஆக்குகிறது: வழக்கம் ஆக்குகிறது. அன்பு எத்தகையது? வாயினால் 'அன்பு அன்பு என்று உச்சரிப்பது அன்பாகுமா? அன்பினைப்பற்றி ஆயிரம் பாடல்கள் பாடி அரங்கேற்றிவிட்டால் அது அன்பாகுமா? பட்டி மண்டபங்களில் 'அன்பே உயரியது என்று உரக்கத் தீர்ப்புக் கூறினால் அன்பாகிவிடுமா? ஆகாது! வாழும் மானிடச் சந்தையில் அன்பை அடையாளம் கண்டு கொள்ள வள்ளுவம் வழி காட்டுகிறது. அன்பிற்கு உருவம் இல்லை. அன்பைக் காண முடியாது. அன்பு "குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல இதுதான் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது” என்று கூறியவரும் உண்டு. ஆனால். தி.8. வள்ளுவம் அன்பிற்கு உருவம் காட்டுகிறது. அதைக் காணமுடியும் என்றும் கூறுகிறது, வள்ளுவம் அன்பிற்குத் தந்த உருவம் என்ன? அடையாளம் என்ன? தனக்கு நெருங்கிய கேண்மையுடையாருக்கு யாதானும் இடையூறு ஒன்றுற்றபொழுது அவ்விடர் தமக்கே வந்துற்றது போல நினைந்து வருந்தி யாருடைய கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றனவோ- அவர்களுக்கு அன்புண்டு. அக் கண்ணீரே அன்பின் வடிவம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” (71)
என்ற வள்ளுவம் காட்டும் அன்பியல் நமது வாழ்க்கையில் துறைதோறும் பொருந்துவதாக.
இன்று மனிதகுலத்தைப் பிடித்திருக்கும் பீடைகளுக்கு எல்லாம் இந்த அன்பு நெறி மூலம்தான் முடிவுகாண முடியும். அன்பு சில பொழுது இயங்கும்; செயற்படும். ஆனாலும் வணிகப் பாங்கில் தன்னயப் புணர்வுடன், தற்காப் புணர்வுடன் இயங்கும். இது ஒரோ வழி இருபாலும் பயன் விளைவிக்குமாயின் அன்பு, முதிர்ந்த அன்பு. பழுத்த அன்பு யாதெனில். தன் னயப்பின்றி, தற்காப்புணர்வின்றி இடர்கள் பல வரினும் தன்னையே அழித்துக்கொண்டு மற்றவர்க்கு அன்பு காட்டுவது தான்! இதனை
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு" (குறள் 72)
என்று குறள் விளக்குகிறது.
இத்தகைய தூய அன்பியல் வையகத்தில் வாழ்வு நெறியாக மலரவேண்டும்.ஒழுக்கக் கட்டுக்கோப்பு
மனித வாழ்க்கையை முறையாக வளப்படுத்தி வளர்ப்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது மருந்துமன்று; பத்தியமுமன்று. ஒழுக்கம் வாழ்வாங்கு வாழும் பாங்குடையவர்க்கு எளிதாக இனிதாக அமைவதேயாகும். மனிதன் பெற்றுக்கொண்ட, வளர்த்துக்கொண்ட அறிவு, ஆள்வினையாற்றல், அன்பு முதலியன சிதறிச் சிறு நெறிகளில் சென்று வீணாகாமல் தடுத்து நிறுத்தி அவனை அக நிலையில் வளர்த்துப் புறநிலையில் உயர்த்திச் சிறப்பிப்பது ஒழுக்கமேயாம். ஒழுக்கம் என்பது ஓர் உயர்நெறிச் சொல். அதற்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. இன்று ஒழுக்கம் என்ற சொல் அங்ஙனம் பல்வேறு பொருள்களை உணர்த்தாமல், ஒன்றையே குறிக்கும் சொல்லாகப் பெரும்பாலும் வழங்கப் பெறுகிறது. மனிதன் செய்யும் முயற்சிகள் அனைத்திலும், மற்றவர்களோடு பழகும் வாயில்களிலும் ஒழுக்கம் சிறப்புறுதல் வேண்டும். மனிதனின் புலன்கள் - பொறிகள் அனைத்தின் வாயிலாகவும் ஒழுக்கம் சிறப்புற்று விளங்க வேண்டும். காலம் போற்றுதலிலிருந்து கடமையை முறையாகச் செய்வது வரையில் ஒழுக்கநெறிக் கால்கள் பரவியுள்ளன. கண்கள், களங்கமுள்ள காட்சியை நோக்கக் கூடாது; எரிப்பான பார்வை எப்போதும் கூடாது. செவிகள், கோளும் தீக்குறளும் கேட்டல் கூடாது. முக்கு, முல்லை மலர்கள் மணமன்றிய சூரணங்களின் நெடியை முகரக்கூடாது. வாய், பல தவறுகளைச் செய்யும்; புறங்கூறும். பொய்புகலும், பயனில பேசும். வள்ளுவம் இவையனைத்தும் கூடாது என்று எதிர்மறை முகத்தால் மறுக்கிறது. பின் மனத்தால் - உள்ளத்தால் நெகிழக்கூடிய ஒழுக்கக்கேடு களையும் உணர்த்திக் காட்டுகிறது. அழுக்காறு! அம்மம்ம! ஒழுக்கக்கேடுகளுள் எல்லாம் கொடியது அழுக்காறுதான்! "கல்வி, புகழ் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்” என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர் இப்பொழுது. கூடவே கூடாது! திருவள்ளுவர் இரண்டு கொடிய தீமைகளைப் பாவி என்று உருவகம் செய்கிறார்; ஒன்று வறுமை; பிறிதொன்று அழுக்காறு. இவ்விரண்டுக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. அழுக்காறே வறுமையையும் வழங்கும்.
- அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
- தீயுழி உய்த்து விடும்" (168)
அழுக்காறு, நன்னெறியில் மனத்தைச் செலுத்தாது; மற்றவர் பெற்றிருப்பதைத் தாமும் பெறும் முயற்சியில் வழி நடக்காது; தூண்டித் தொழிற்படுத்தாது. அதற்கு மாறாக மற்றவர்கள் பெற்று இருப்பதற்குக் களங்கம் கற்பிக்கவும், அவற்றை அவர்கள் இழப்பதற்குரிய, தீமைகளைச் செய்யவும்தான் அழுக்காறு தொழிற்படுத்தும். மற்றவர் கல்வியில் சிறந்திருந்தால் தானும் சிறக்க வேண்டுமென்ற உணர்வை வழங்காது. மற்றவர் பெற்றிருக்கிற கல்வித் திறனை அற்பப்படுத்தியும், குற்றங்கள் கண்டும் தூற்றவே மனம் வரும். அதோடு அழுக்காறு தனித்து வருவதில்லை. அதற்கொரு படையே உண்டு. அழுக்காற்றின் முதல் படை அவா, உரிய தகுதியில்லாமலும், அத்தகுதியினைப் பெறாமலும் ஒன்றைப் பெற விரும்புவது அவா. அந்த அவா கூடத் தனக்குத் தேவை தேவையென்று அவாவுது. தெளிவாகக் கூர்ந்து நோக்கின் இவர்களுக்குத் தேவையும் இருக்காது. அவா இருந்தால் போதுமா? அவாவை அடைதற்குத் தகுதி வேண்டாமா? தகுதியின்மையாலும், தகுதியைப் பெறும் முயற்சியின்மையாலும் அவாவை அடைய இயலாது. உடன், வெகுளி வரும். வெகுளி வெடிச் சத்தங்களுடன் கேட்பதற்கு இயலாத, இனியன அல்லாத, இனியன தர இயலாத கடுஞ்சொற்களைக் கொட்டும். ஆதலால் அழுக்காறு தீது! தீது! இன்று எங்கும் அழுக்காறு, அலங்கார நடை நடப்பதுபோல் தெரிகிறது. தெருவில் விளையாடும் பாப்பாவின் கன்னத்தில் கறுப்புப் பொட்டு! புதியதாகக் கட்டும் வீட்டின் முகப்பில் கரும்புள்ளிகள் இட்ட பூசணிக்காய் தொங்குதல்: வைக்கோல் மனிதன் நிற்றல்! காய்த்துக் குலுங்கும் தோட்டத்தில் கறும்புள்ளி செம்புள்ளி இட்ட பானைகளைத் தாங்கிய கம்புகள்! இவையெல்லாம் என்ன கூறுகின்றன? இவை அழுக்காற்றைத் தாக்கிக் காக்கும் காப்புச் சாதனங்களாம்! அவை காக்கின்றனவோ இல்லையோ, இன்று அழுக்காற்றின் விளையாட்டுக்கள் நம்முடைய நாட்டு அரசியலையும் தாக்குகிற அளவுக்கு வளர்ந்துள்ளன. ஆனால், அழுக்காறு அரசியலிலிருந்து தானே புறப்பட்டு மக்களை நோக்கி வருகிறது என்று சிலர் கூறுவர். அதிலும் உண்மையில்லாமல் இல்லை. சிறந்த அறிவோ, பொருட் செல்வமோ, பதவிகளோ பெற்றால் அவைகளால் விளையக்கூடிய பயன்களை வேறுபாடின்றி மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தால் அழுக்காறு தோன்றாது. மற்றவர் அறிவை மதிக்கின்ற பாங்கு தோன்றினால் அறிவில் அழுக்காறு தோன்றாது. செல்வம் பெற்றவர், "ஈதல் இசைபட வாழ்தல்” என்று வாழ்ந்தால் செல்வத்தின் காரணமாக அழுக்காறு தோன்றாது. பதவிகளைப் பெற்றோர் அவற்றின் பயனைத் தாம் துய்க்காமலும் பதவியைத் தாம் பெற்றிருக்கிறோம் என்பதை மற்றவர்கள் காண வேண்டுமென்பதற்காக அடக்கமின்றி ஆரவாரமாக நடந்து கொள்வதாலும் பதவியின் பயன்களைத் தன்னைச் சார்ந்தவர் சிலர் பெறவும், சாராதவர் பெற முடியாமற் போவதாலும் அழுக்காறு தோன்றுகிறது. ஆதலால் அழுக்காறு கொள்ளுதல் எங்ஙனம் தீதோ அதைவிடத் தீது மற்றவர் நெஞ்சத்தில் அழுக்காறு கொள்ளும்வண்ணம் நடப்பது என்பதை மறந்து விடக் கூடாது. அழுக்காறு தோன்றா மைக்குரிய அணைகள் - ஆள்வினையுடைமையும் வெஃகாமையும் ஆகும். ஒன்று, ஆள்வினை யுடைமை உடன்பாட்டில் துணை செய்வது; எதிர் மறையில் துணை செய்வது வெஃகாமை. தீயொழுக்கம் இல்லாதிருந்தால் மட்டும் போதாது. தீமையை நேரடியாக அகற்றும் முயற்சி மட்டும் பயன்தராது. ஒளியை ஏற்றுகிறார்கள்! இருள் இரிந்து ஓடுகிறது. இருளை ஓட்டுவார் யாருமில்லை, நன்மையைக் கொண்டுவரும் முயற்சி களில்தான் தீமை அகல வேண்டும். நல்லொழுக்கங்களை மேற்கொண் டொழுகுவதன் மூலம்தான் தீயொழுக்கத்தைத் தவிர்க்க முடியும். நல்லொழுக்க நெறிகள் பலவற்றை வள்ளுவம் முறைப்படுத்திக் காட்டுகிறது. அவை ஒன்றற்கொன்று நெருங்கிய தொடர்புடையன. ஒன்றற்கு ஒன்று வாயிலாக அமைவன, அரண் செய்வன. இத்தகைய ஒழுக்க நெறிகள் யாவும் வாழ்க்கையில் பொருந்தி அமைகிறபோதுதான் வாழ்க்கை வளமும் பொலிவும் உடையதாக அமையும்.
திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகளில் யாதொன்றிலாது போனாலும் வாழ்க்கை முழுமையுறாது. அதுமட்டுமின்றி மற்ற நெறிகளால் பெற்ற பயன்களை அடைய முடியாமற் போனாலும் போகும். ஆதலால் வள்ளுவத்தின் ஒழுக்க நெறிகள் உறுதி பெற்றால் வாழ்வு சிறக்கும்; வையகம் பயனுறும். வள்ளுவம் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு விரிந்த பொருளைக் கண்டது; காட்டுகிறது. ஒழுக்க நூல் ஆசிரியர்களுள் முதன் முதலாக "உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலும் ஒழுக்கம்” என்று எடுத்துக்காட்டியவர் திருவள்ளுவரே. சிலர் தன்னளவில் சூதாடாதவராக - கள்ளுண்ணாதவராக - களவு செய்யாதவராக இருப்பர்; ஆனால் அவரிடம் இனியவை கூறல், ஒப்புரவறிதல் ஆகிய நல்லொழுக்கங்கள் இல்லாமற் போகும். ஒரு மனிதனின் ஒழுக்க நெஞ்சத்தை உணர்த்துவது இனியவை கூறுதலும் ஒப்புரவு மேற்கொண்டு ஒழுகுதலும் தானே! ஆதலால் வள்ளுவத்தின் வழியில் ஒழுக்கெெநறிக் கற்களை அடுக்கி, வாழ்க்கை என்ற மாளிகையை எழிலுடையதாக அமைப்போமாக. பலரோடு பழகுதல், அவர் காலத்தில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை, தேவைகளை, அறிந்து கொள்ளுதல் ஒழுக்க வாழ்க்கையின் மணி முடியாகும், இதனை வள்ளுவம்,
- "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
- கல்லார் அறிவிலா தார்" (140) என்று விளக்குகிறது. இன்று ஆசாரம் என்ற பெயரில் அன்னை மொழி பேசாமலும் அனைவருடனும் பழகாமலும் ஒதுக்கியும் ஒதுங்கியும் வாழ்வது ஒழுக்கம் அல்ல என்று வள்ளுவம் ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. மக்களின் உணர்வறிந்து பழகுதலே ஒழுக்கத்தின் சிறப்பு.
நட்பு
மனித வாழ்க்கையை வளப்படுத்திச் செழிப்பூட்ட நிறை முயற்சி தேவை. அவரவர் முயல்வதோடு மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தித் தூய்மைப்படுத்திச் சிறப்புடையதாக அமைக்க வேறு சில துணை உறுப்புகளும் தேவை. துணை உறுப்புகள் உயிர்ப்பும், உணர்வுமுடைய மனிதர்களாகவே அமைவது அல்லது அமைத்துக்கொள்வது என்பது வாழ்வியல் நடைமுறை. அவற்றில் முதல் உறுப்பு நட்பு. நட்புப் பயிலுதல், நட்புப் பெறுதல் இரண்டும் அருமையான முயற்சி. நட்புத் துறையில் எளிதாக வெற்றி பெற முடியாது. கெழுதகை நட்பு, உணர்ச்சியால் அமைவது; நலம் தருவது. நட்பு, ஒருவனின் அகவாழ்க்கை வளர்ச்சிக்கும் புற வாழ்க்கை வளர்ச்சிக்கும் துணையாய் அமைவது; உடன் நின்று உஞற்றுவது; நன்மையை வழங்குவது; தீமையிலிருந்து காப்பது. இத்தகைய நட்புநெறி, தோழமை பாராட்டப் பெறும். தோளொடு தோளாகத் துணை நிற்பவர் தோழரானார் போலும்! சோவியத்து புரட்சியைக் கண்டு வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த மந்திரச்சொல் 'தவாரிஷ்' என்பதாகும். உருசிய மொழியில் இச்சொல்லுக்குப் பொருள் "தோழர்" என்பது. வாழ்க்கையில் நட்பே சிறந்த உறுப்பு. ஒருவர் வாழ்க்கைக்கு உருக்கொடுக்கும் படைப்பாளன் நண்பன்தான். தாய்க்கு அடுத்து நண்பன்தான். நன்மை தீமை ஆகிய அனைத்துக்கும் பொறுப்பேற்று வாழ்க்கைப் பயணத்தின் உடன் வருபவன் அவன். நண்பன் அற்புதமான பாத்திரம். அதனால்தான் போலும் காதலிக்காமற்கூட இருக்க முடியும், நட்புச் செய்யாமல் இருக்க முடியாது" என்று வாழ்க்கை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கை முற்றாகச் சிறப்புற்று விளங்கிச் செயற்கரியன செய்ய நட்பே தேவை. அதனாலன்றோ வள்ளுவம்,
- "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
- வினைக்கரிய யாவுள காப்பு"
(731)
என்கிறது. செயற்கரிய யாவுள? என்று வினாக் கேட்டு, நட்பே என்று முடித்துக் காட்டுகிறது. நட்பு உருவாக்கப் பெறுவது, பழக்கங்களில் உருவாவது. அஃது இயற்கையில் அமைவதன்று. நட்பமைவுக்கு, இயற்கைத் தேவை எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கையில் முதலில் பெறுவது ஓடிவிளையாடும் பருவத்திலிருந்து நாடி நாடிப் பெற்று வளர்ப்பது நட்பேயாம். இயற்கைத் தேவையின் பாற்பட்ட உறவுகள் இருபாலின் தேவைகருதி நீடிக்கலாம். அவற்றில் முறிவுகள் ஏற்படின் இருபாலரின் வாழ்க்கையும் பாதிக்கும். ஆனால் நட்பு அத்தகையதன்று. நட்பிற்குத் தேவை கிடையாது. ஆனால் இலட்சியங்கள் உண்டு. நட்பு, உடனிருந்து ஒரு தட்டில் உண்டு சிரித்துப் பேசிப் பழகினால்தான் வளரும் என்பதில்லை. நட்பின் வளர்ச்சிக்குக் காலம் தடையில்லை; இடம் தடையில்லை; இன்பமோ துன்பமோ தடையில்லை.
- "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
- நட்பாங் கிழமை தரும்”
(785)
அந்த ஒப்பரிய அருள்நலம் சான்ற நட்பு நெறி வளர்க! வளர்க! வாழ்க! வாழ்க!
காதல் வாழ்க்கை
வாழ்க்கையின் வளர்ச்சிக்கு இரண்டாவதாக அமையும் உறுப்பு, காதல் மனைவி. நட்பிற்குப்பின்தான் காதல். இடம் காலம் வரிசையில் மட்டுமன்று; அமைவும் அப்படித்தான். காதல் இயற்கையில் அமைந்தது. மலர்வது; ஒருவர்க்கொருவர் தேவையானது. நட்போ அப்படியன்று. நட்பில் ஒருபால் இன்பமும், ஒருபால் துன்பமும் ஒருபால் ஆக்கமும் ஒருபால் இழப்பும் நேரிடக் கூடும். அங்ஙனம் நேரும்பொழுதும் தடம் புரளாமல் நிற்கும் நட்புணர்வே முழுமையான நட்பு வளர்த்த நட்பு வாழ்விக்கும் நட்பு. காதலுக்கு அத்தகைய விழுமிய வாய்ப்புக்கள் இல்லை. காதலிலும் தியாகம் உண்டு. தன்னல மறுப்பு உண்டு. ஆனாலும் இயற்கை அமைப்பு அப்படியல்ல. காதல் வாழ்க்கையில் இன்புறலும் இன்புறுத்தலும் உடன் நிகழ்வன. ஆதலால், நட்பிற்கு அடுத்ததே காதல். அங்ஙனம் கூறுவதால் காதல் வாழ்க்கை எளிதென்று கருதற்க. பால்வேறுபட்ட இருவர் கூடி வாழ்தல் எல்லாம் மனையறம் ஆகிவிடாது. ஒரு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நேரமும் விளைந்த பயிரை அறுவடை செய்யும் காலமும் சிறு பொழுதேயாம். ஆனால் மாளிகையைக் கட்டி முடிக்க நீண்டகாலம் பிடிக்கும். அதுபோலத்தான் - வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளைச் செழுமைப்படுத்தி வளர்க்கப் பலகாலும் முயற்சி செய்ய வேண்டும். ஆதலால் இல்வாழ்க்கையென்ற மனையறம் சிறக்க, அவ்வழி சமுதாயம் செழிக்கக் காதல் வாழ்க்கை சிறப்புற அமையவேண்டும் என்பதனால் தனியே காமத்துப்பால்” என்றே ஒரு பாலை அமைத்து ஓதிய வள்ளுவத்தின் அருமை அறிக.
காதல் வாழ்க்கை அருமையுடையது; சிறப்புடையது: செவ்விய தன்மையுடையது. எளிதில் காதலராதல் இயலாது; காதலின்பத்தினை முழுதுணர்ந்து துய்த்தல் அரிது: இத்துறையில் வெற்றிபெற்றார் சிலரே! இது வள்ளுவத்தின் கருத்து.
"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
(1289)
காதல் தோன்றி மறைவதன்று இடையீடின்றி வளர்வது; உயிரில் கலந்து சிறந்து விளங்குவது; பிறப்பு இறப்பைக் கடந்தும் தொடர்வது பிரிவிலாதது. பிரிவு நேரிட்டபோதும் பிரியாமல் நினைவில் உணர்வில் கலந்து கரைந்து வாழ்வது காதல்.
"இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
(1315)
என்பது குறள். காதல் வாழ்க்கை நினைந்து பார்த்தற்குரிய தன்று. காரணம் ஆங்கு மறப்பு இல்லை. இத்தகைய உயர்ந்த காதல் நெறியில் நழுவாமல் வாழ்ந்தால் மணவிலக்கு, மறுமணம், பெண்ணின் உரிமை போன்ற பேச்சுகளுக்கு இடம் வந்திருக்காது. வள்ளுவர் கூறும் காதல் வாழ்க்கை தடம் புரண்டு, கலியாணங்களாக மாறி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு உடைமைகளுள் பெண்ணும் ஒன்றாகி, அனைத்து உரிமை நலங்களையும் அவள் இழந்தபிறகு வள்ளுவத்திற்கு மாறான குரல்கள் இன்று ஒலிக்கின்றன. காதல் வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் பிரிக்கப்படாத உரிமையுடையவர்கள்; உறவுடையவர்கள்; நலமுடையவர்கள். இதனை விளக்க வள்ளுவம் எடுத்துக்காட்டியுள்ள உவமை நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.
"உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
(1122)
உடம்பு - உயிர் இணைப்பு பிரித்தற்கு இயலாதது. உடம்பின்றேல் உயிர்க்கு இயக்கமில்லை; துய்ப்பில்லை. ஆதலால் உடம்பும் உயிருமாக வாழும் மனை வாழ்க்கையில் உரிமைப் பாகுபாடு ஏது: உயர்வு தாழ்வு ஏது? செயற்கைப் பிரிதல் ஏது? இயற்கைப் பிரிவுகளையும் கூடத் தேடிப் புதுமைப்படுத்தி ஏற்றுக் கொள்ளுதல் தானே உயர் தனி மரபு! வள்ளுவம் காட்டும் காதல் வாழ்க்கை வெற்றி பெறுமானால் தலைமகன் சிறப்பான்; புகழ் ஒளியில் தோய்வான். தலைமகள் மனைமங்கலமாகத் திகழ்வாள்; வற்றாத வளமனையாக ஆக்குவாள். நன்மக்கட் பேற்றின் மூலம் நாடே பயன்பெறும். அது தானே மனை வாழ்க்கை. வாழ்க்கைக்குத் துணையாக அமையும் தலைவியை வள்ளுவம் "வாழ்க்கைத் துணை" என்று வாழ்த்துகிறது. வாழ்க்கைத் துணை மட்டுமல்ல, வாழ்க்கையின் நலமாகவே விளங்குவதால் "வாழ்க்கைத் துணை நலம்" என்கிறது. வள்ளுவத்தின் தலைவி கற்புக் கடம் பூண்ட தெய்வம். அவள் தன் கற்பை மட்டும் தானா காத்துக் கொள்கிறாள்? தன்னுடைய தலைவன் கற்பையும் காத்துக் கொள்வதில் சோர்வடையாள் என்பதைத் தலைவன் உணர்கிறான். பரத்தமை வழி தலைமகன் செல்லாது தலைவி தடுத்தல் வேண்டும். புத்திளம் தன்மைமிக்க இன்ப உணர்வுகளை அவன் துய்க்குமாறெல்லாம் வழங்கி இன்பப் பெட்டகமாக அமைந்து அவன் புறத்தே செல்லாமல் தடுக்கிறாள். ஒரேவழி, தன் தலைவன் சோர்வு உடையவனாக விளங்கினாலும் புறத்தே தூற்றாமல் அயலறியாவண்ணம் மறைத்துத் தலைவனின் புகழைக் காப்பாற்றுகிறாள். வள்ளுவத்தின் தலைவி, "தன் குடும்பம்” என்ற சிற்றெல்லைக்கு ஆளாகித் தலைவனின் கொடை வளத்தைத் தடுத்து நிறுத்துவதில்லை. அவன் வாக்களித்த சொல்லைத் தனது சொல்லென எண்ணிக் காத்து வழங்குகிறாள். அதாவது குடும்பப் புகழைக் காக்கிறாள். இதனை,
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
(56)
என்று வள்ளுவம் விளக்கிக் காட்டுகிறது. இத்தகைய மனையற வாழ்க்கை எளியது போலத் தோன்றுகிறது. ஆனாலும் அந்த மனையறம் வள்ளுவத்தின் வழி சிறக்க அரிய முயற்சிகள் தேவை. இல்வாழ்க்கை பொறுப்புடையது என்கிறார் திருவள்ளுவர். பலரைப் புரந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இல்லறம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அறநெறி அறிந்த மூத்தவராக, உயிர்க்குலம் அனைத்துக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவராக, அந்தணராக, தென்புலத்தில் வீற்றிருந்து தம் அருள்ஞானப் பெருக்கால் உலகை வாழ்வித்து வரும் அந்தணாளர்க்கு உரியன வழங்குதல் வேண்டும். தெய்வத்தைப் பராவித் தொழுதல் வேண்டும். நாடுவிட்டு நாடு அறிவுச் செலவினும், அருட் செலவினும் பயணிகளாக வரும் புதியவர்களை விருந்தினர்களாக ஏற்றுப் போற்றுதல் வேண்டும். இதுவே விருந்தோம்பல். "இன்று வாடகைக்குத் தங்கும் விடுதிகளும் உணவை விற்கும் சிற்றுண்டி, பேருண்டிச் சாலைகளும் மலிந்துள்ளனவே, இந்த அறம் இன்றைக்கும் பொருந்துமா?" என்று சிலர் கேட்பர். தங்கும் விடுதிகளும் சிற்றுண்டிச் சாலைகளும் வாணிகக்கூடங்களே தவிர அன்புப் பணிமனைகள் அல்லவே! அந்த உண்டிக் கடைகளால் ஒருவர்க்கு உவப்பன செய்ய இயலாதே; உறவு கலத்தலும் நிகழாதே. அதனால் நாட்டுக்கும் நாட்டுக்குமிடையே நிகழ வேண்டிய உறவுகள், உணர்வுப் பரிமாற்றங்களும் நடைபெறா அல்லவா? எந்த ஒரு நிகழ்வும் உணர்வைத் தொடுவதாக அமையவேண்டும். வாணிகக் கடைகள் இலாப நோக்குடையன. ஆங்கு அன்பின் ஆக்கமும் உறவின் வளர்ச்சியும் நாடுகளை இணைக்கும் பாங்கும் வளரா. இல்லத்தில் தலைவியில்லாது போனாலே விருந்தெதிர் கோடல் செய்தற்கியலாது என்ற மரபு, செய்யக் கூடாது என்று மாற்றம் பெற்றுவிட்டது. ஏன்? அகங்கனிந்த உணர்வால் அந்த விருந்தினை ஏற்றுப் போற்ற முடியாது என்பது தானே பொருள். உணவுக் கடைகள் விற்பனையே செய்கின்றன. அதை விருந்தோம்பலோடு ஒத்துப்பார்க்க முடியாது. ஆதலால் விருந்தோம்புதல் என்ற விழுமிய பண்பு வளர்ந்தேயாகவேண்டும்.
இவை மட்டுமா, இல்லறத்தாரின் பொறுப்பு? மேலும் வள்ளுவம் வகுத்துக் கூறுகிறது.
'துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்
(42)
அருமையான குறள்! துறந்தார்க்கு இல்லறத்தார் துணை! ஆம் அவர்கள் யாதொரு உடைமையும் இல்லாதவர்கள். (வள்ளுவர் காலத்தில்) அவர்கள் வீடும் ஊரும் உலகமும் வளர்ந்து வாழத் தவம் இயற்றுகிறார்கள். ஆதலால் அவர்களைப் புரத்தல் - இல்லறத்தார் கடன். இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் குறிப்பிட்ட காலம் துய்த்து மகிழ்ந்து பின் மக்களுக்குப் பொறுப்பைத் தந்து துறவறம் பயிலுதல் தமிழர் மரபு. அங்ங்ணம் வாழும் துறவிகளை உண்டியும், உறையுளும், உறுநோய்க்கு மருந்தும் தந்து காப்பாற்றுதல் இல்லறத்தார் கடன்.
அடுத்துவரும் கடமை நெஞ்சைத் தொடுகிறது. வள்ளுவத்தின் மாட்சி மலையென உயர்கிறது. உலகில் துய்ப்பதற்குரிய பொருள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. இவற்றில் பலவற்றைப் பலர் துய்க்கமுடியாமல் ஏக்கமுற்றிருப்பர். தாம் துய்க்காததை, மற்றவர் துய்ப்பது அறிந்து அலமரலாம்; அழுக்காறு கொள்ளலாம்; அதனால் தீவினைகள் செய்யத் தலைப்படலாம். ஆதலால் துய்க்க வேண்டியவற்றைத் துய்க்காமல் இருப்பவர்க்குத் துய்ப்பன வழங்க வேண்டும். துய்ப்பன வழங்குதல் தீவினை செய்வதைத் தடுத்து உய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தி அறத்தினில் ஊக்கும். அப்பரடிகள்,
"துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ" (தேவாரம் அடங்கல் 7173) என்பார். இன்றைய உலகியலோ வள்ளுவத் திற்கு முற்றும் முரணாக இயங்குகிறது. துய்க்கும் பொருள் களை நிறையப் பெற்றிருப்போருக்கு விருந்து உபசாரம், மரியாதை என்ற பெயரில் திரும்பத் திரும்பக் கிடைக்கிறது. மருத்துவ இயலார் கூற்றுப்படி அவர் உண்ணக் கூடாதனவும் ஒதுக்கப்பெற்றனவும் கிடைக்கின்றன. ஆனால் துய்க்கும் வாய்ப்பினைப் பெற்றும் வசதியற்றவர்க்கு யாதொன்றும் கிடைப்பதில்லை. ஒரோவழி கிடைத்தாலும் அவர்கள் துய்த்துத் துய்த்து அலுத்துப்போன சோறும் புளிக் குழம்பும்தான் கிடைக்கும். அறுசுவை உணவு அவர்களுக்கு அட்டிப்போட்டால் கட்டுப்படியாகாதாம். இது பெரிய இடத்து "பாஷை”. ஆதலால் இல்லறத்தார் துவ்வாதவர்கள் துய்க்குமாறெல்லாம் தேடி வழங்க வேண்டும்.
அடுத்த கடமை வியத்தற்குரியது. "இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை” என்பது. இறந்தார்க்கு எப்படி இல்வாழ்வான் துணை ஆகமுடியும்? நீத்தார் கடமை என்ற பெயரில் இறந்தாரை நினைத்துச் செய்தல் என்பர் சிலர். அக்கருத்து தவறுடையதில்லையானாலும் நெறியுடையதென ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம்மோடு சிலர், இலட்சிய உணர்வோடு வாழ்ந்த சிலர் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இலட்சியப் பயணத்தில் இறந்திருப்பர். அவர்கள் நமக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் தமக்கென வாழாது மற்றவர்க்கென வாழ்ந்து இலட்சியப் பயணத்தில் இறந்து போனவர்கள். அவர்களுடைய இலட்சியத்தைத் தொடர்ந்து நாம் பயணம் செய்து அந்த இலட்சியத்தை நிறைவு செய்தல் அவர்களுக்குத் துணை செய்வதாகும். வேறு சிலர் தமது குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு உரியன செய்து வைக்காமல் பச்சிளங்குழந்தைகளை விட்டு இறந்து போயிருக்கலாம். அங்ஙனம் இறந்தார்க்கு நாம் செய்யக் கூடிய துணை அக் குடும்பத்தினை வளர்த்துப் பாதுகாத்து நிலை நிறுத்துதல். இவ்விரண்டும் இறந்தார்க்குச் செய்யும் துணை என்று கருதுகிறோம். வேறு சில கடமைகளையும் வள்ளுவம் கூறுகிறது. விரிவஞ்சி விடுக்கின்றோம்.
வள்ளுவம் காட்டும் இல்லற வாழ்க்கை இத்தகைய பொறுப்புகள் உடையது என்பதை உலகம் உணரவேண்டும். அது மட்டுமா? இல்லறம், வளரும் வரலாற்றுக்கும் கூடப் பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் ஆணை. தலைமுறையின் தோற்றத்திற்கு அடிப்படையாக, வாயிலாக அமைவது மனையறம். அத்தகைய மனையறத்தில் அறிவறிந்த காதல் வாழ்க்கையில் தோய்ந்து நன்மக்கட்பேறடைதல் வேண்டும் என்று வள்ளுவம் எடுத்துக் கூறுகிறது. ஒரு குடும்பத்தின் இல்வாழ்க்கை சிறப்புற்று விளங்கியதா? பெற்றோர், வரலாற்றில் இடம் பெறத்தக்க நல்ல தாயா? நல்ல தந்தையா? என்பதனை உறுதிப்படுத்தத் துணை செய்பவர் அவர்களுடைய மக்களே! நாடறிந்த, புகழ்மிக்க குடும்பங்களில் கூட, தந்தை தாய்க்கு நற்புகழ் வாங்கிக் கொடுக்கக் கூடிய பிள்ளைகள் தோன்றவில்லை. இதனைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறள் எச்சரித்திருக்கிறது. மனையற வாழ்க்கை பெயரும், புகழும், சிறப்பும் பெறுவது அம்மனையற வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய மக்கள் மூலமேயாம். ஒரு குடும்பத்தின் செல்வமும், புகழும் விரிவடைய வேண்டிய ஒன்று. அது தேய்ந்து குறுகுதல் கூடாது. ஒரு குடும்பம் வளர்ச்சிக்குரிய இயற்கை நியதிகளின் படி வளர்ந்து வருமானால் குடும்பத்தின் முன்னோரை வைத்தோ மூத்தோரை வைத்தோ அந்தக் குடும்பம் அறிமுகமாவது சிறப்பன்று. இன்றைய வாழ்க்கைக் களத்தில் புகழ் பூத்திருக்கும் தலைமுறையைப் பொறுத்து அறிமுகம் ஆகவேண்டும் என்பது திருவள்ளுவர் குறிப்பு. அதாவது பாட்டனை வைத்துப் பெயரனுக்கு அறிமுகம் வருதல் வளர்ச்சியன்று. தந்தையை வைத்து மகனுக்கு வரும் அறிமுகம் வளர்ச்சியின் சின்னமன்று. மகனை வைத்துத் தந்தைக்கும் பாட்டனுக்கும் கிடைக்கும் அறிமுகமே சிறப்புடையது; போற்றுதலுக்குரியது; புகழ்ச்சிக்குரியது.
எனநோற்றான் கொல்லெனும் சொல்"
(70)
என்பது குறள். "இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்ற குறட் சொற்றொடரைத் திரும்பத் திரும்பச் சிந்தனை செய்து உணர்க. இங்ங்ணம் புகழ்மிக்க வரலாறு படைக்கும் தலைமுறையினரை நமது நாடு பெற்று மகிழத்தக்க வகையில் வள்ளுவத்தின் வழி மனையறம் சிறப்பதாக.
சமுதாய வாழ்க்கை
மனிதன் கூடி வாழப் பிறந்தவன். மனிதனை ஒரு சமூகப் பிராணி (Social animal) என்பர். மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் கிடிவாழ்தல் தவிர்க்கமுடி யாதது மட்டுமன்று தேவையும் கூட. சமுதாயம் என்ற அமைப்பு உயிர்ப்புள்ள ஒன்று. அந்தச் சமுதாயக் கூட்ட மைப்புக்குள்ள சக்தி, மகத்தானது. அந்தச் சக்தி ஆக்கவும் செய்யும்; அழிக்கவும் செய்யும். ஆனால் அப்படியொரு உயிர்ப்புள்ள, உணர்வு பூர்வமான சமுதாய அமைப்பு இன்னும் தோன்றவில்லை. வரலாற்றுக்கு முந்திய தொன்மைக் கால்த்தில் அத்தகைய சமுதாய அமைப்பு இருந்ததாக மார்க்ஸ் கூறுகிறார். சமுதாய அமைப்பு, கட்டுக் குலைந்து நெகிழ்ந்து போகும்பொழுதுதான் ஒழுக்க நெறிகள் கற்பிக்கப்படுகின்றன; சட்டங்கள் தோன்றுகின்றன; தண்டனைகள் தரப்படுகின்றன; ஆனால் இந்த முறையும் காலப் போக்கில் தடம் புரண்டது. ஆட்சியாளர்கள் மக்களிடத்திலிருந்து பெற்ற அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்திச் சுதந்தரத்தைப் பறித்துக் கொத்தடிமையாக்கி விடுகின்றனர். இவை, வரலாற்று நிகழ்வில் காணப்பெற்ற உண்மைகள். இன்று இருப்பது ஒரு கூட்டமைப்பே சமுதாய அமைப்பன்று! ஒர் உயர்ந்த சமுதாய அமைப்புக்கு எடுத்துக்காட்டு எவ்விதக் குறையு மில்லாது விளங்கும் ஒரு நல்லுடம்பாகும். உடம்பில் அமைந்துள்ள பொறிகளுக்கு, புலன்களுக்கு வேறு வேறு பணிகளுண்டு. அவை தம்முள் ஒத்திசைந்து விளங்கும். ஒன்றோடொன்று மோதா ஒன்றினைப் பிறிதொன்று பாதுகாக்கும். இந்தக் கூட்டு நிகழ்வில் பிழை ஏற்பட்டு விட்டால் அந்த உடம்பு நோயுற்றது என்பது பொருள். இன்றைய சமுதாய அமைப்பு இங்கனமா அமைந்திருக்கிறது? சமுதாயத்தைச் செப்பமுற அமைத்துக் கொண்டால்தான் தனிமனித நலம் சிறக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். சமுதாய அமைப்புத்தான் ஒரு மனிதனின் குறையை நிறையாக்கத் துணை செய்கிறது. இந்தச் சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் பணியில் முதல்பணி ஈதல், அது முதலுதவி போன்றது. அது நிலையானதன்று. சமுதாய அமைப்பிற்கு - கூடி வாழ்வதற்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி ஒப்புரவாகும். ஒப்புரவுத் தத்துவம் மிக உயர்ந்தது. ஒப்புரவு வாழ்வில் கொடுப்பாரும் இல்லை; கொள்வாரும் இல்லை. ஒப்புரவு வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு; கடமைகளும் உண்டு. "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக் காகவும்” என்ற தத்துவமே ஒப்புரவின் சாரம். தம்மிடம் மற்ற வர்கள் எப்படி நடந்து கொண்டால் மகிழ்ச்சியும் இன்பமும் ஏற்படுமோ, அதுபோலவே தாம் மற்றவர்களிடம் நடந்து கொள்வதே உயர்ந்த ஒழுக்கம். மற்றவர்க்ளின் இயல்பறிந்து, ஒத்ததறிந்து நாம் ஒத்துப்போதலே ஒப்புரவு வாழ்க்கையின் சிறந்த இலக்கணம்.
"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"
(214)
என்பது குறள். அறிஞர் அண்ணா அவர்கள் ஒத்து வரவில்லை என்று கூறுகிறவர்களை நோக்கி "மற்றவர்கள் ஒத்துவருவது அப்புறமிருக்கட்டும்; முதலில் நீங்கள் ஒத்துப்போங்கள்” என்று கூறினார். இது வள்ளுவத்திற்கு உரை விளக்கம் போல இருக்கிறது ஒப்புரவு நெறியை வள்ளுவம் பல்வேறு உவமைகள் வாயிலாக விளக்கும் அருமைப்பாடு அறிதற்குரியது. தற்சார்போடு மற்றவர் 簧° உதவும் ஒப்புரவுக் கொள்கை ஒன்று; தன்னை மறந்து தி.9 மற்றவர்களுக்கு உதவுவது தன்னுடைய நீங்காக் கடமைகளுள் ஒன்று என்று கருதி உதவுதல் பிறிதொன்று தன்னயப்பில்லாமல் தன்னைமறந்து தனக்கு வரும் இடர்களையும் ஏற்றுக்கொண்டு உதவிசெய்தல் - ஒப்புரவு இயற்றுதல் மற்றொன்று என்று ஒப்புரவுச் செயற்பாட்டைத் தரப்படுத்தி, 'ஊருணி', 'பயன்மரம்', 'மருந்து மரம்' என்று ஒப்புமைப் படுத்தி விளக்கிக்காட்டுகிறார். இந்த மூன்று குறள்கள் ஒரு சொற்பொழிவுக்குரிய செய்திகளையுடையன; அருமை வாய்ந்த செய்திகளை உடையன. அறிஞர்களாகிய நீங்கள் அறிந்து அனுபவித்திருப்பீர்கள்.
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு”
(215)
"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"
(216)
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"
(217)
இத்தகைய ஒப்புரவு நெறிதான் உலக அரங்கில் கூட்டுறவு இயக்கமாகப் பின்னர் வளர்ந்தது. ஆனால் அந்தக் கூட்டுறவு இயக்கம் அதனுடைய நோக்கங்களுக்கு ஏற்றவாறு மக்கள் மன்றத்தில் காலூன்றவில்லை. சமுதாய அமைப்பில், அதுவும் மக்களாட்சி நிலவும் நாட்டில் திட்டங்களை இயற்றுதல், மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குரிய பணிகளைச் செய்தல், ஒருவரிடம் இருக்கும் செல்வம் இழப்பில்லாமல் மற்றவர் முன்னேற்றத்திற்குப் பயன்படுதல் ஆகிய பணியைக் கூட்டுறவு இயக்கம் மேற்கொள்ள வேண்டும், "கூட்டுறவு இயக்கமும் இருக்கிறது" என்பதுபோலத்தான் நம்முடைய நாட்டில் கூட்டுறவு இயக்கம் இருக்கிறது. தமக்குத் தேவையிருந்தாலும் தேவையில்லாது போனாலும் கூட்டுறவில் சேர்த்து நாட்டுமக்களுக்குரிய பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத் துடிப்பு, படித்தவர்கள் வசதியுடையவர்கள் பக்கலில் தோன்றவில்லை. நாட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கூட்டுறவாளர்களாக மாறினால் தானே கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாக முடியும்! ஏழை மக்களின் வரியில் கல்வி கற்றுப் பதவிக்கு வருபவர்கள் திரும்ப அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகிறார்கள். கடமை என்ற சொல் கடன் என்ற சொல்லிலிருந்துதான் வந்தது. வாங்கும் ஊதியத்திற்கு ஏதோ என் வேலையைச் செய்தேன் என்றிருப்பது கடன் செலுத்தியது ஆகாது. ஏழை உழைப்பாளிகள், உழைப்பால் படைத்த பொருள்களைச் சுவைத்து மகிழ்கிறவர்கள் அது போலத் தம்முடைய உழைப்பால் அந்த ஏழை மக்களின் மனம் மகிழத்தக்க ஒன்றைப் படைத்து வழங்கும் பொழுது தான் அறநெறியின் அடிப்படையில் கடன் நிறைவு பெறுகிறது. இன்று இந்த மனப்போக்கு எங்கிருக்கிறது: வசதியற்ற, பின்தங்கிய மக்கள் நல்வாழ்வுக்காகத் துணிவுடன் கூட்டுறவுகளைத் தொடங்கி, அவர்களின் நல்வாழ்க்கைக்குத் துணை செய்வதற்கு வசதியுடைய சமுதாயத்திற்கு மன மில்லை, எங்கே, எதிலிருந்து ஆபத்து வந்துவிடுமோ? என்று பயப்படுகிறார்கள். செயல் முனைப்பு இல்லை. கோழைத்தன மான தற்காப்புணர்ச்சி தான் இருக்கிறது. ஒரு சிலர் துணிந்து கூட்டுறவு இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூட்டுறவுத் தத்துவங்களை முழுமையாகச் செயற்படுத்துவதில்லை. அவர்கள் பெற்றிருக்கிற பல்வேறு பதவிகளின் வரிசையில் இதுவும் ஒன்று. அவர்கள் ஒரு "தனிக் கடை" நடத்துகிறார்கள். ஆனால் கூட்டுறவு என்று பெயர். நாட்டிலுள்ள எல்லாக் கூட்டுறவுகளும் இந்த நிலையின என்று கூறவில்லை. சிறந்த கூட்டுறவு நிறுவனங்களும் உள்ளன. அந்தக் கூட்டுறவு நிறுவனங்களில் பங்கேற்று உழைப்பவர்களைப் பாராட்டுகின்றோம். கூட்டுறவு வாழ்க்கையில் ஒரு மனிதன் வெற்றி பெற்று விடுவானானால் அவன் அகநிலையிலும் புறநிலையிலும் நல்ல வளர்ச்சி பெற்றவன் எனலாம். கூட்டுறவில் சமுதாயம் வெற்றி பெற்று விடுமானால் நாட்டில் உழவும் தொழிலும் பெருகும்; வளம் கொழிக்கும், ஆங்கு வறுமை இருக்காது. மார்க்சும் லெனினும் "சோஷலிச சமுதாய அமைப்பின் முதற்படி கூட்டுறவே" என்று கூறியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவம் காட்டிய ஒப்புரவு வாழ்க்கைதான் கூட்டுறவு வாழ்க்கை. அதுவே சோஷலிச சமுதாயம். ஒப்புரவுநெறி எளிதில் பொதுமைச் சமுதாயத்தைப் படைத்துத் தரும்; உலகுக்கு ஒரு தனி நெறியாக விளங்கும். வள்ளுவம் தந்த ஒப்புரவு நெறி வையகத்தின் உரிமை நெறியாகுக.
குடியியல்
திருவள்ளுவர் தனி மனித வாழ்வியல் சிறக்கவும், சமுதாயம் சிறப்புற்று விளங்கவும் நூல் செய்தார். நூல் முழுதும் தனிமனிதனை வளர்த்துச் சமுதாயத்தோடு அவனை இணைத்துச் சமுதாய அமைப்பை வளமும் வலிமையும் உடையதாக அமைக்கும் ஆர்வலராக விளங்கு கிறார். அந்தக் கங்குகரையற்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு அதிகாரப் புனைவுகளில் நல்ல சமுதாய அமைப்புக்கு வடிவம் கொடுத்து உறுதிப்படுத்துவதற்கு முயல் கிறார். அங்கனம் தணியாத ஆர்வத்தின் து.ாண்டுதலாகப் பிறந்த அதிகாரங்கள் "குடிமை", "குடி செயல்வகை" என்பன போலும்! முன்னர்ப் பல அதிகாரங்களில் விரித்துரைத்த செய்திகளிற் பல "குடிசெயல்வகைக்கு உரியன. அங்ங்ணம் இருந்தும் மீண்டும் "குடிமை”. "குடிசெயல்வகை” அதிகாரங்கள் அமைக்கக் காரணம் என்ன? குடிமைப் பண்பைக் காப்பதிலும் குடிசெயல்வகை இயற்றுதலிலும் சோர்வு படக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே! தாம் பிறந்த குடியை வளர்த்துப் பாதுகாப்பது தான் மனிதனின் முதற் கடமை. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் குடிமைப் பண்பை இழக்காது குடிசெயலில் தயங்காது செயற்படுதல் வேண்டும் என்பது வள்ளுவத்தின் ஆணை. குடி செய்து வாழ்கின்ற வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கை. தமிழ்க் குடியினருக்கு இந்தப் பண்பு வழக்கமாகக் குறைவு. தமிழ்க் குடியினர் குடியைக் காப்பதிலும் குடி மேம்பாட்டுக்குரியன செய்தலிலும் அடிக்கடி சோர்வுபட்டுக் குடி செய்தலுக்கு மாறாகத் தம்முள் குழுக்கள் அமைத்துக்கொண்டு போராடி நிறைதமிழ்க்குடியின் புகழ் பூத்த வாழ்க்கையை இழக்கச் செய்திருக்கின்றனர். தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதில் பருவம் முதலிய பார்த்து நாள்களைத் தள்ளக் கூடாது. குடி செய்தற்குரிய பணியைச் சோம்பல் காரணமாக "இன்று" "நாளை” என்று கடத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, மான அவமான உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தம்முடைய குடியைச் சார்ந்தவர்களிடத்தில் பகை பாராட்டி ஒதுங்குதல் கூடாது; ஒழிக்கும் முயற்சியும் கூடாது. தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்காகத் தம்முடைய மானமே பெரிதென்று கருதாமல் இனமானம், குடிமானம் காத்துத் தம்மைப் பழித்துரைத்தாரிடத்தும் பகைபாராட்டாது அன்பு பாராட்டி உறவு கொண்டு குடி சிதறாமல் காக்கவேண்டும்.
- "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
- மானம் கருதக் கெடும்" (1028)
என்பது திருக்குறள். இந்தத் திருக்குறளுக்கு மிகப்பலர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒருவர்தாம் வள்ளுவத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வாழ்க்கை விளக்கத்தில் உரை கண்டவர். அந்த அற்புதமான மனிதர் நம்முடைய காலத்தில் வாழ்ந்தவர். அவருக்குத் தமிழ் மூச்சு:; தமிழ் இனம் அவருடைய சுற்றம். தமிழ் இனத்தின் பாதுகாப்புக்காக, முன்னேற்றத்திற்காகப் பணி செய்த ஒரியக்கத்தில் தலைவருக்குக் கட்டுப்பட்டுப் பணி செய்தவர். இடையில் தவிர்க்க முடியாமற் பிரிவு தோன்றியது. பிரிந்தவர் சோர்ந்து போகாமல் பேரியக்கம் கண்டார். பிரிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பிரிந்த இப்பெருமகனாரை இழித்தும் பழித்தும் பலப்பல பேசினார்கள். அம்மம்ம அவர்களின் ஏச்சுக்கு மறுவார்த்தை பேசவேண்டுமே. "துறந்தாரில் தூய்மை யுடையார்” போலத் தம்மைப் பழித்தாரைத் தாம் பழிக்காமல் வாழ்ந்தார். ஓர் இயக்கத்தையே வளர்த்தார். இப்பெரு மகனாரின் முன்னேற்றத்தை எப்படியும் தடை செய்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்பு எதிர்த் தரப்பில் இருந்தது. ஆனால் இவருக்கு ஆத்திரமும் இல்லை; காழ்ப்பும் இல்லை. தம்மை எதிர்த்தாரையும் உள்ளடக்கி மகத்தான வெற்றி பெற்றார்; வெற்றிக் களிப்பில் அகங்காரம் கொள்ளவில்லை; தமது வெற்றிக்குத் தடையாயிருந்தவர் களை பெற்ற அதிகாரத்தைக் கொண்டு துன்புறுத்த நினைக்கவில்லை; கமிஷன்களை நியமித்து விசாரிக்க வில்லை; ஏசியவர்கள் இருந்த இடம் நோக்கிச் சென்று பணிவைக் காட்டினார்; பண்பாட்டைக் காட்டினார். இவ்வாறு பகையையும் உறவாக்கிக்கொண்டு இனம் காத்த ஒப்பற்ற தலைமகனைப் போன்ற மற்றொருவனைத் தமிழக வரலாறு கண்டதில்லை. அவரும் வாழ்ந்து மறைந்துவிட்டார். அந்த ஒப்பற்ற தலைமகன் - தமிழ்த்தாயின் தவப்புதல்வன், இனத்தைக் கட்டிக் காப்பாற்றிய அருமைப்பாட்டை நினைத்தால் நெஞ்சு நெகிழும். எனதருமைத் தமிழ்ப் பெருங்குடி மக்களே! வள்ளுவத்திற்கு விளக்கமாகக் குடி செயற்பண்பின் இலக்கணமாக வாழ்ந்த அத் தலைமகனை இனம் கண்டு கொள்ளுங்கள். அவர் போற்றிய இன நலம் காக்கும் பணியை உறுதியுடன் செய்யுங்கள்.
நாகரிகம்
மனித வாழ்க்கை, நாகரிகம் உடையதாக அமைய வேண்டும். நாகரிகம் என்பது உலகை இடையறாது உய்த்து நடத்தும் ஒரு சிறப்புடைய உணர்வு வழிப்பட்ட ஒழுக்கமாகும். நாகரிகம் என்பது உடலில் கலந்து, உயிரில் கலந்து, உணர்வில் கலந்து, வாழ்க்கையின் விளக்கமாக அமைவது, மனிதச் சந்தையில் வாழ்கிறோம். மனிதச் சந்தையில் எவர் நல்லவர்? எவர் தீயவர்? என்று எளிதில் காணமுடியாது. நல்லவர்களாக இருப்பவர்கள் எதிர்பாராமல் கெட்டுப் போதலும் உண்டு. கெட்டவர்கள் எதிர்பாராமல் நல்லவர் களாக மாறி வளர்வதும் உண்டு. முன்னையதுதான் பெரும் பான்மை, உருவங்களை வைத்து மக்களை மக்கள் நம்பக் கூடாது. ஆம்! சிலர் மனிதர்களாகத்தான் நடமாடுகிறார்கள்! ஆனாலும் மக்கள் நன்மையுடையவராக அல்லாமல் பசுத்தோல் போர்த்த புலியென நடமாடுபவர்களும் உண்டு. திருவள்ளுவர் சிரிக்கவும் சிந்தனை செய்யவும் தக்கவகையில்,
"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
(1071)
என்று கூறியிருப்பதை ஒர்க. சந்தையில் வாங்கப்படும் விலங்குகள், காய்கள் தோற்றத்தைப்போலவே அவற்றின் பண்பும் இருக்கும்; ஆனால் கயவர் மேற்கொள்ளும் வாழ்க்கையில் தோற்றத்திற்கும் நடப்பிற்கும், சொல்லுக்கும் செயலுக்கும் யாதொரு இயைபும் இருக்காது, ஒரோவழி நாம் பழகியவர்களே, இத்தகைய கொடுமை யுடையவர்களாக மாறி நமக்குத் தீங்கு விளைவித்தால் என்ன செய்வது? நஞ்சைக் கொடுக்கிறார்கள். அந்த நஞ்சையும் கூட மனவேறுபாடின்றி வாங்கிக் குடித்தால் மரணம் வாராது. நஞ்சு கொடுத்த நண்பனும் கூட நாணமுற்றுத் திருந்துவான். அத்தகைய உயர்ந்த நாகரிகப் பண்பு மனித குலத்தில் வளர வேண்டுமென்பது வள்ளுவத்தின் இலட்சியம்.
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்".
(580)
பகை கொள்வதற்கும் பிரிவதற்கும் வாய்ப்பில்லாமற் போகாது. அந்த வாய்ப்புக்களையும் கடந்து அன்பை, உறவைக் கட்டிக் காப்பாற்றுவதுதான் நாகரிகம். அத்தகைய நாகரிகப் பண்பு மனித குலத்தில் வளருமானால் மனிதன் மனிதனோடு போராட மாட்டான். போரற்ற சமாதான உலகம் தோன்றும். மனித சக்திகள் முழுதும் பொருள், கலைப் படைப்புகளுக்குப் பயன்படுவதால் மக்கள் இன்புற்று வாழ்வர்: மண்ணகம் விண்ணக மாகும்.
புகழ்
மானிட வாழ்க்கையின் பயன் புகழ். எது புகழ் ? விளம்பரம் வேறு; புகழ் வேறு. முகமன் வேறு; புகழ் வேறு. இரப்பார் கொடுப்பாரைப் பாராட்டிக் கூறும் உரைகள் புகழாகா. புகழ் உயர்ந்தது; உலகில் உயர்ந்தது. ஒருவரின் சாதனையை அனுபவித்த ஒருவர் மகிழ்ந்து, தம் உள்ளம் நெகிழ்ந்து மொழியும் சொற்களே புகழ்! புகழ் அஃது ஒரு வேள்வி. புகழ் எளிதில் கிடைக்காது. வள்ளுவத்தின் வாழ்க்கைநெறிகள் அனைத்தையும் பின்பற்றி நெறிமுறை பிறழாது வாழ்ந்தால் புகழ் வந்து பொருந்தும். அஃதென்ன எளிய காரியமா? புகழ்பட வாழ விரும்பினும் நம்முடைய பழையபழக்கம் இழுத்துத் தள்ளுகிறது. தன்னயப்பு உணர்வுகள், தன்னலமறுப்புக்குத் தடை செய்கின்றன. தட்டுத்தடுமாறிச் சமுதாயச் சந்தையில் வீழ்ந்து அதன் துணை கொண்டு புகழ் வேள்வி நிகழ்த்தலாம் என்றால் அங்கே பேரிரைச்சல்! பச்சை நிர்வாணமான சுயநலக்கூட்டம் பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது. அரசுப் பணிமனை முதல் ஆண்டவன் சந்நிதி வரை மனிதன் தன் உரிமைகளைப் போராடிப்பெற முடியவில்லை. பரிந்துரைச் சீட்டுகள், கையூட்டுகள் எங்கும் மலிந்து கிடக்கின்றன. ஏன் அம்மையாக, அப்பனாக விளங்கும் ஆண்டவனையே காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஆரத்தழுவி உச்சிமோந்து வழிபாடியற்ற அவன் உரிமையில்லாதவனாக இந்திய உயர்நீதி மன்றம் செய்து இருக்கிறது. இந்தச் சமுதாயத்தில் அவன் எப்படிப் புகழ் பெறுவான்? கழனியில் வேளாண்மை செய்யவரும் உழவன் காடு வெட்டி நிலந்திருத்த வேண்டும். அதுபோலச் சமுதாய நன்மைக்கு எதிராக இருக்கும் தீமைகளை அடியோடு களைந்திடல் வேண்டும். தீயவர்களோடு சமாதானம் கூடாது. அவர்களோடு ஒட்டும் உறவும் கூடாது. தீமை, தீயைவிடக் கொடியது.
"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்."
(202)
தீமை இருபாலும் கேடு செய்யும். தீமை எளிதில் மாற்ற முடியாதது. தீமை ஒரு தலைமுறைக்கு மட்டுமல்லாது பல தலைமுறைக்கும் கேடுசெய்யும். ஆதலால் சமுதாயத்தில் புகழ் பூத்த வாழ்க்கை வாழ வேண்டுமானால் தீமையை எதிர்த்துப் போராடும் மனப்போக்கும் உறுதியும் வேண்டும். தீமையைத் தவிர்ப்பதற்குரிய சிறந்த வழி, தீமையை எதிர்ப்பது மட்டுமல்லாமல், தீமையை முற்றாக மாற்றக்கூடிய நல்லன. இயற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, நன்மையைச் சமுதாயத்தில் படைக்க வேண்டும். அப்பொழுது புகழ் பூத்த வாழ்க்கை கிடைக்கும். புகழ், ஒரு போதைப் பொருள் அல்ல. புகழ், போதைப் பொருளாகவும் கூடாது. அது நெடி இல்லாத மெல்லிய மணம்! உயிர்ப்புள்ள மணம்! மேலும் மேலும் மனித குலத்தை அது வளர்க்கும். அத்தகைய புகழ்மிக்க சமுதாயத்தைப் படைப்பதே வள்ளுவத்தின் வாழ்வியல். உலகுக்கு ஒரு பொதுநெறியைச் சொன்னதால் திருக்குறள் உலகப் புகழ்பெற்றது. உலகப் பொதுமறையைத் தந்ததால் தமிழ் உலகப்புகழ் பெற்றது. உலகப் பொதுமறையைத் தந்ததால் திருவள்ளுவர் உலகம் தழிஇய புகழ் பெற்றார். திருவள்ளுவரை ஈன்றெடுத்துத் தந்ததால் தமிழகம் உலகு தழுவிய புகழ்பெற்றது. இன்று திருவள்ளுவர், திருக்குறள் என்ற பெயர்கள் புகழைச் சேர்க்கும் மந்திரங்களல்ல. வள்ளுவத்தின் வாழ்வியலைத் தமிழினத்தின் வாழ்வியலாகச் செய்தாலேயே இன்றைய தமிழினம் புகழ்பெற முடியும். வள்ளுவம் வளர்க! வெற்றி பெறுக!