குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/அட்டனில்
கலைகள் கருத்தைக் கவர்வன; களிப்பைத் தருவன. கருத்தற்ற கலைப் படைப்புக்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி நின்று வாழ இயலாதவை. கருத்து, கற்றறிந்தோர் உள்ளத்திலே தேங்கி நின்று தேசிய உணர்ச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் உதவக்கூடியது; காலத்தால் மூத்த நமது இனம் கருத்திலே நாட்டம் கொண்டதாலேதான் கருத்தரங்கங்களில் ஏறி நின்று ஏற்றம் பெற்றது; கருத்துவழி வாழ்வு வாழ்ந்து மகிழ்ந்தது; கருத்துக்களிலே நல்லனவும் தீயனவும் உண்டு. கருத்து என்ற பேரில் உண்டாகும் எல்லாமே வாழ்வுக்கு உகந்தனவாக இருந்ததில்லை - இருப்பதுமில்லை. இருக்கவும் முடியாது.
இயல் இசை நாடகம் போன்ற கலைகள் தமிழனைப் பொறுத்த மட்டில் மகிழ்வை ஊட்டியதோடு-வாழ்வையும் காட்டின. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற உண்மையைத் தமிழர்களின் கலைகள் எடுத்தியம்பின. இதனாலே கலைவழிக் கலாசாரம் முகிழ்த்து, அன்பும் அறனும் பண்பும் பணிவும் மலர்ந்தன. கருத்து வழிப்பட்ட வாழ்வு அரும்பி மலர்ந்து மணம்வீசக் கலைகள் பயன்படவேண்டும். இசை நாடகம் போன்றவற்றை அழகுக் கலைகள் என்கிறோம். அழகுக் கலைகள் ஆழ்ந்தகன்ற நுண்ணறிவை ஆக்கவேண்டும். இறந்த காலத்தைப் பற்றிய அறிவையும் நிகழ்காலத்தை யொட்டிய கருத்தையும் வருங்காலத்தைப் பற்றிய திட்டத்தையும் தமிழ்க் கலைகள் எடுத்துச் சொல்லவேண்டும். கல்லூரிகளிலே கற்கும் சிறார்களின் நற்சிந்தனைக்கும்-நல்ல முன்னேற்றத்திற்கும் கல்லூரி விழாக்களில் இடம் பெறும் கலைநிகழ்ச்சிகள் உதவவேண்டும். பருவம் அறிந்து, பக்குவம் தெரிந்து கலை நிகழ்ச்சிகளின் மூலம் நற்கருத்துக்களைத் தூவி விடவேண்டும். இன்றைய நிலையிலே பள்ளிகளின் மூலமாகப் போதிக்க முடியாத நற்கருத்துக்களை மாணவர்க்குக் கலைகளின் வழியே போதித்து விடலாம். இப்போது கலைகளை அனுபவித்துப் போற்றும் சூழ்நிலை இளைஞர்களிடத்திலே உருவாகி யுள்ளது. அந்த நல்ல நிலையைப் பயன்படுத்தி நயத்தக்க கருத்துக்களைக் கலைகள் மூலம் கற்பிக்க வேண்டும்.
“கற்றிலனாயினுங் கேட்க” என்றார் வள்ளுவர். அதைப் போல் படிப்பிலனாயினும் பார்க்க எனலாம். இளைஞர்கள் நடிப்பு நடனம் போன்றவைகளைப் பார்த்து அனுபவிக்க விரும்புவது போல் அவைகளினூடாக வரும் கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேள்வியறிவு பேரறிவைத் தரவல்லது. பார்த்துப் பெறுமனுபவங்கள் பாரிற் சிறக்க வழிசெய்யும்; புத்தகத்தையே தொடாத-படிக்காத சில பாமரமக்கள் கேள்வியறிவினாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உயர்வதைப் பார்க்கிறோம். கல்வியாற் பெற்ற உண்மைகளோடு காட்சியாலும் கேள்விகளாலும் பெறும் கருத்துக்களும் உலகியல் வாழ்க்கைக்கு உறுதுணையாய் நின்று உதவக் கூடியன; கலைகள் காட்டும் கருத்துக்களிலே கழிப்பதைக் கழித்துக் கொள்வதைக் கொள்ள வேண்டும். உலகப் பெரியார் சொன்னதைப் போல் குணம் நாடிக் குற்றம் கொள்ள வேண்டும். வாழ்வுக்குப்பயன் அளிக்காத வாழ்வையே அழிக்கக்கூடிய சில கருத்துக்கள் சுவையுடன் வெளிப்படுத்தப் படுவதால் இளைஞர்களை அவை ஈர்த்து விடுகின்றன. கள்ளமோ களங்கமோ இல்லாத வெள்ளை உள்ளங்கள் அக்கருத்து வழிச்சென்று வாழ்வின் பயனை அனுபவிக்காது அல்லலுறுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களை நற்கருத்துக்கள் பிணிக்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஈதல், இசை படவாழ்தல், இன்னர்செய்தார்க்கு நன்னயம்செய்தல், காலத்தினாற் செய்யும் உதவி, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ், அறனெனப்பட்டதே வாழ்வு, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் போன்ற வேண்டப்படும் கருத்துக்கள் கலைகளின்மூலம் புகுத்தப்படவேண்டும்.
நல்லெண்ணமும், நல்லுறவும் நற்சிந்தனையும் நாடு முழுவதும் பரவிப் பெருகக் கலைகள் பயன்படவேண்டும். அறிவைத் தேடிக் கொள்ளாதவர்கள் வாழமுடியாது அவதிப் படுகிறார்கள். அதிகம் படித்தவர்கள் திக்கு முக்காடுகிறார்கள். நடுத்தரப் பிரிவினர் இரண்டுங் கெட்ட நிலையில் இன்னலுறுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவை, நிம்மதியை, சலனமற்ற நிலையைக் கலைகள் காட்ட வேண்டும். நாட்டிலே நாடகமேடைகளிலே மட்டும் கலையும் கலையைச் சார்ந்த கருத்துக்களும் மின்னி முழங்கிவிட்டாற் போதாது. வீடுகள் தோறும் கலையின் விளக்கம், என்று கவிஞன் பாரதி கூறியது போல் கலைகள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இருள் நீக்கி ஒளிபரவவேண்டும். நமது நாட்டிலே நம்மிடையே கலைப்பெருக்கத்திற்குக் குறைவில்லை. பெருக்கமிருக்கிறதே தவிர பெருக்கத்தை யொட்டிய பலனைக்காணோம். நமக்குள் ஒருநல்ல மனப்பான்மை யுண்டு; அது எதையும் பாராட்டுதல். வீணை வித்துவானை, நடிப்புச் செல்வனை-பாடலாசிரியனை-இசை விற்பன்னனைப் பாராட்டி மகிழ்வதில் நமக்கு ஒரு தனிவிருப்பு. பாராட்டி மகிழ்வதோடு பயன்களையும் விளைவிக்கவேண்டும். கலைகள் வெறும் பாராட்டுகளோடு நின்றால் வாழ்வுக்குப் பயன்படாத வீண்பொழுது போக்காய் முடியும். நம்மிடையே சந்தேகமும் கள்ளத்தனமும் இப்போது உருவாகியிருக்கின்றன. பொருள் உள்ளவனிடத்திலே இல்லாதவன் களவாய்க் கவர்ந்து செல்ல நினைக்கின்றான். பொருள் உள்ளவன் நல்லவனைக் கூடச் சந்தேகித்துத் தற்காப்புத் தேடிப் பொருட்காப்புச் செய்கின்றான். முன்பெல்லாம் பனி, மழை, வெய்யில் போன்றவற்றிற்கும் விலங்குகள் போன்றவற்றிற்கும் தப்பித்துக்கொள்ளவே தற்காப்புத்தேடி வீடுகளைக் கட்டினார்கள். இன்று பக்கத்து விட்டானைப் பகைவனாக்கி அவனை நம்பாமல் திருடனாக்கி அயோக்கியனாக்கி அவனிடம் இருந்து நம்மை நாம் காப்பாற்றவே வீடுகளை எழுப்புகிறோம். களவு காவல் என்ற தத்துவ அடிப்படையில் வீடுகளைக் கட்டுகிறோம்.
இந்த நிலை மாறவேண்டும். மாற்றத்தைக் கலைகள் போதிக்க வேண்டும். மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வேண்டிய நல்லுணர்வுகளைக் கலைகள் காட்ட வேண்டும். உழைத்துப் பிழைத்து முன்னேற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். பாடுபடுபவன் உழைப்பவன் நல்லபடி வாழ-அதிக ஆசையற்றுப் போதுமென்ற மனத்துடன் பொதுமை வாழ்வில் அக்கறை கொள்ள மனிதனை ஆற்றுப்படுத்தி ஆவன செய்ய வேண்டும். கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று நொந்த, நைந்த மனோபாவத்துடன் தூங்கும் ஏழையை விழிக்கவைக்க வேண்டும். சமுதாய விழிப்பிற்கும்-அகத் துறைப் புரட்சிக்கும். கலைகள் தொண்டாற்றி வெற்றிபெற வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில் ஊறிய-தெய்வக் கொள்கையைப் பாராட்டுகிற மனித சமுதாயத்தை உண்டாக்கி - சமவாய்ப்புச் சமுதாயத்தில் நாட்டம் கொண்டவர்களை வாழ்த்தவும் கலைகள் வழி வகுக்க வேண்டும். முதலாளி தொழிலாளிகளுக்கிடையே இருக்கிற வேற்றுமைகளை அழித்தொழித்து அருள் வெள்ளம் பெருக்கெடுத்தோடுமாறு செய்ய வேண்டும். இறைவன் ஒருவனே நமக்கெல்லாம் முதலாளி. நாம் எல்லோரும் அவனது தொழிலாளிகள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அரும்பி மலர வேண்டும். தாய் மொழிப் பற்றும் தாய்மொழி நாகரிகமும் தாய்மொழி வழிபாடும் எங்கும் எல்லோரிடத்திலும் பரவ வேண்டும். மனிதர்களிடையே ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை ஜாதியில் என்ற மனோதத்துவம் தேவை. மனிதர்களிடையே பாமர மனிதர்கள் இருப்பது நமக்கு இழிவைத் தருகிறது; மரங்களிலே கூட பாமரங்கள் இல்லை. தென்னையிலோ, பனையிலோ, பலாவிலோ பாமரர்கள் உண்டா? ஆனால் நம்மிடையே எத்தனை வகைப்பட்ட பாமரர்களை உண்டாக்கி இருக்கிறோம்.
எனவே கலைகள் கருத்தைக் கொண்டனவாக - கருத்தை இருத்தி இன்ப அன்பு வாழ்வுக்கு அடிகோலுவனவாக இருக்கவேண்டும். மனித மனங்களைத் தவிர ஏனைய உயிர்களின் உள்ளங்களைப் பிணிக்கும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. குறிப்பாக ஆனாயநாயனாரின் வரலாறு இசைமூலம் மிருக இனத்தையும், பறவையினங்களையும் ஈர்த்திழுத் தமையைக் காட்டி நிற்கிறது. ஆகவே கருத்தைப் பிணிக்கும் கலைகள் நயத்தக்க கருத்துக்களைப் பரவச் செய்யப் பயன்படவேண்டும்; கலைஞர்களும் தேவையானவற்றைக் காட்ட வேண்டும்; போதிக்கவேண்டும். மக்கள் விரும்புவதைக் காட்டக்கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைக்காட்ட வேண்டும்! வாழ்க்கை ஒரு நாடகம்; நாம் எல்லாம் நடிகர்கள். நடிகர்களிடத்திலே நல்லுணர்ச்சி உண்டென்றால்தான் நாடகம் சிறக்க வழியுண்டு; நல்லுணர்ச்சியோடு நற்சிந்தனை யாளரைப் படைக்கக் கலைகள் உதவ வேண்டுமெனக்கேட்டு வாழ்த்தி விடைபெறுகிறோம்.