உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சமயமும் வழிபாடும்

விக்கிமூலம் இலிருந்து




6


தமிழும் சமயமும் சமுதாயமும்

(மலேசியச் சொற்பொழிவுகள்)


1. சமயமும் வழிபாடும்


போற்றுதலுக்கும் பாராட்டதலுக்கு முரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! நாம் அனைவரும் கூடிக் கலந்து பேசவும், பேசி மகிழவும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.

நாம் நன்கு நீராடின பிறகு கூடினால்கூட நாம் இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதை உணருகிறோம். இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதைப் போலவே உலக அரங்கத்திலும் வெப்பம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் எங்கு பார்த்தாலும் பதற்ற நிலை. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கொன்று குவிக்கின்ற காட்சிகள்; இவைகளையெல்லாம், ஆன்மீகத் துறையில், சமயத்துறையில் நம்பிக்கை உடையவர்கள், கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்து இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்தக் காரணத்தையே மாற்றினால்தான் ஆன்மீக உலகம் வெற்றி பெற முடியும்.

பொதுவாக விஞ்ஞான உலகம்-அறிவியல் உலகம் பூத பெளதிகத்தால் ஆன உலகத்தை நெருக்கிக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. காலையில் பனிரெண்டரை மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்த நான் மாலை 6.00 மணிக்கு மலேசிய நாட்டில் வாழ்கின்ற தமிழர்களோடு பேசுகின்ற அளவுக்கு, அறிவியல் விரைந்து நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது. உலகில் எல்லா அண்டங்களையும், கண்டங்களையும் இணைக்கின்ற சாலைகள் உருவாகிவிட்டன. வான்வெளிச் சாலைகள் கூடத் தோன்றி, கண்ணுக்கு அப்பாற்பட்ட அண்டங்களையும் கண்டங்களையும் கூட இணைக்கின்ற அளவுக்கு இன்றைக்கு அறிவியல் வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் நிலங்கள் நெருங்கி வருவதைப் போல, நிலத்தில் வாழ்கின்ற மக்கள் தமக்குள் நெருங்கி வருகிறார்களா? அவர்களுடைய இதயங்கள் இணைக்கப்படுகின்றனவா? இந்த உலக நெருக்கத்திற்குப் பயன்பட வேண்டிய ஆன்மீக அன்பு வளர்ந்திருக்கிறதா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகம் நெருங்கி வரவர நாம் ஏதோ இதயத்தால் பிரிந்து செல்வதைப் போலத் தோன்றகிறது. இந்த உணர்வு நிலையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். என்னுடைய நெடிய வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோளில் ஒன்று, நிச்சயமாக உலகத்திற்கு மனிதன் அமைதியாக வாழத்தான் வந்தான்; கடவுள் இந்த உலகத்தை மனிதனுக்கு ஒரு பெரிய கொடையாகத்தான் கொடுத்தான்; இந்த இனிய உலகத்தில் இனிமையாக வாழ்ந்து, தன்னை வளர்த்துக் கொண்டு, தன்னை உய்வுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான், இறையவனுடைய திருவுள்ளம்.

சிலபேர் மிகவும் அவசரப்படுகிறார்கள், “மோட்சத்திற்கு - சொர்க்கத்திற்குப் போய்விட்டால் தேவலாம்” என்று. நான் அதற்கு வேடிக்கையாகப் பதில் சொன்னேன்: ‘கடவுள் இப்பொழுது என்னிடத்தில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்; அதுவும் இரகசியமாகச் சொல்லி இருக்கிறார். சொர்க்கத்தைப் பூட்டி, மடியில் சாவியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் என்று. உடனே ஏன் என்று கேட்டார்கள். “உலகத்தைச் சொர்க்கமாக்குவதற்காக நான் மனிதனை அனுப்பினேன். அவன் அங்கேயே அதை நரகமாக்கி விட்டான். அவன் இங்கேயும் சீக்கிரமாக வந்து விட்டால், இதையும் நரகமாக்கி விடுவானோ என்று பயந்து நான் சொர்க்கத்தைப் பூட்டி வைத்திருக்கிறேன். உலகம் சொர்க்கமாகிற பொழுது இந்தச் சொர்க்கமும் திறக்கப்படும் என்று கடவுள் சொன்னார்” என்றேன். ஆக எங்கும் அமைதி, எங்கும் சகோதரத்துவ உணர்ச்சி நமக்குத் தேவை. வாழ்க்கையில் சமய உணர்ச்சி என்பதே மனிதனுடைய ஆன்மாவைத் தரப்படுத்துவதும், தகுதிப்படுத்துவதும்தான். கரடு முரடாகவும், முரட்டுத்தனமாகவும், மற்றவர்களுக்கு இசைவில்லாமலும், இயைபில்லாமலும் பழகுகிற பழக்கத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்துகிற ஒரு வாழ்க்கை முறைக்குத்தான் சமயம் என்று பெயர். அதற்கு ஓர் எளிய உதாரணம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. நம்மில் பெரும்பாலோர் அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள். ஆனால் எந்த நாட்டுக்கழனியிலும் எனக்குத் தெரிந்து சோறாகவே விளைந்த்தில்லை. நெல்லாகத்தான் விளைகிறது. ஆனால், மனிதன் முயன்று அதைச் சோறாக்கி வெற்றி பெற்றுவிட்டான். கடவுளைக் காண்பதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால், விடை மிகவும் சுருக்கமாக இருக்கும்.

ஆனால் நெல்லைச் சோறாக்குவதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால், அதில் எல்லோருமே வெற்றிபெற்று விட்டார்கள். நெல் அறுவடை செய்தபொழுது ஈரமாக இருக்கும். உண்பதற்குரிய தகுதி அதற்கு இன்னும் வரவில்லை. அந்த நெல்லை நன்றாக ஈரம் போகக் காயப் போட்டுக் களஞ்சியத்தில் கொண்டு வந்து வைப்பார்கள். ஒரு பத்து விழுக்காடு சுவை வரும். ஆனாலும் தின்னமுடியாது. அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்து, அதைச் சோறாக்கித் தின்னமுற்படுகிறபொழுது, அந்த நெல்லை மீண்டும் தண்ணீரில் நனைப்பார்கள். முன்பு எந்த ஈரத்தை நீக்க முயன்று காயப் போட்டார்க்ளோ, அதே தண்ணீரில் மீண்டும் முயன்று நனைத்து நன்றாக அவிப்பார்கள். அவித்த பிறகும் மீண்டும் ஒரு முறை காயப் போடுவார்கள். மிக நல்ல காய்ச்சலாகக் காயப்போட்டு நான்கு நெல்லை எடுத்து வீட்டுத்தாய், தேய்த்து அரிசியை வாயிலே போட்டுக் ‘கடுக்’ என்று சத்தம் கேட்டால் அரைக்கலாம் என்பார். அரைத்து அரிசியாகக் கொண்டு வந்த பின்பும், சோறாக வில்லை; தின்ன முடியாது. பெரும் பசிக்காரன்தான் போகிற பொழுது வருகிறபொழுது கொஞ்சம் அரிசி எடுத்துத் தின்பான். அது சோறாக வேண்டும் என்று சொன்னால், மீண்டும் தண்ணீரிலே போட வேண்டி இருக்கிறது. ஓடாத ஆடாத, பாடாத அகங்காரமில்லாத நெல்லைச் சோறாக்குவதற்கே மூன்று தரம் நனைத்து, மூன்று தரம் காயப்போட வேண்டியிருக்கிறது என்று சொன்னால், ஆட்டம், பாட்டம் அத்தனையும் போடுகிற மனிதனைச் சும்மாவா பக்குவப்படுத்த முடியும்? இவனையும் ஏதாவது ஒன்றில் நனைத்து, ஏதாவது ஒன்றில் காயப் போட்டால் சுமாராகத் தேறுவான். இவனை எதிலே நனையப் போடுவது? எதிலே காயப் போடுவது? இது ஒரு சிக்கல்.

பல பேர் கங்கையிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். சில பேர் குமரிக் கடலிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். இந்த நனைதலாலும், காய்தலாலும் உடலுக்குத் தான் ஏதோ சுறுசுறுப்புக் கிடைக்கிறதே தவிர, உள் உணர்விலே ஒன்றும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆறு மாதம் காசிக்கப் போய்த் தங்கிக் கங்கையில் குளித்து விட்டு வருகிறவன், ஊருக்கு வந்தவுடன் முதலில் கேட்கிறான், நம்முடைய எதிரி என்ன ஆனான்? என்று. அவன் ஒன்றையும் எதையும் மறந்ததாகவும் தெரியவில்லை; மறுத்ததாகவும் தெரியவில்லை. அவனுடைய உணர்ச்சிப் பாங்கில் எந்த மாற்றமும் இல்லை. அவனை எதிலே நனைப்பது? எதிலே காயப்போடுவது: கங்கையிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை; கடல்களிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை? என்று அப்பர் அடிகளே-ஏழாம் நூற்றாண்டிலே பாடுகிறார்.

இதற்கும் நான் ஒரு சிறிய உதாரணம் சொல்வதுண்டு. தஞ்சைத் தரணியிலே பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தெரியும். ஆடித்திங்களில் இரண்டு கரையையும் தொட்டுக் கொண்டு புதுப்புனல் பொன்னி, நுங்கும் நுரையுமாகப் பூவும் புனலுமாக ஓடிக் கொண்டிருப்பாள். இளைஞர்கள் ஓடியாடி, நீந்தி விளையாடுவார்கள். வெள்ளம் வேகமாக இருக்கிற பொழுது, ஒரு நாள் நான் குளித்துக் கொண்டிருந்த பொழுது, காவிரித் தாயைப் பார்த்து, இவ்வளவு வேகமாக ஓடுகிறாயே! என்ன குடி முழுகிப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகத் தான் போனால் என்ன? என்று கேட்டேன். உடனே காவிரி எனக்குச் சொன்ன விடை:

‘தம்பி நாளை மறுநாள் ஆடி அமாவாசை வருகிறது. இந்த ஊர் உலகத்தில் இருக்கிற மனிதர்கள் பாவத்தைச் செய்துவிட்டு, அதைக் கழுவ என்னிடத்திலே வந்து விடுவார்கள். அவர்கள் வருவதற்குள்ளாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஓடுகிறேன் என்று சொன்னது. ஆக, கங்கையும் காவிரியும் மனிதனைக் கண்டு பயப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆதலால், அதிலே நனைவது என்பது அவ்வளவு பெரிய காரியமல்ல. நனைவதினால் தவறில்லை. ஆனால், நனைகின்ற பொழுது எந்த உணர்ச்சி வேண்டும்? கங்கையில் குளிக்கின்ற பொழுதோ காவிரியில் குளிக்கின்ற பொழுதோ, எங்கோ நெடுந்துரத்திற்கு அப்பால் இருக்கின்ற வான்மழை, மண்ணைத் தீண்டி மனித உலகத்திற்கு வாழ்வளிக்கின்ற நோக்கத்தில், அது நீர்த் திவலைகளாக மாறி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல என்னுடைய வாழ்க்கை பயன்பட வேண்டும் என்று கருதிக் குளித்தால் தவறில்லை.

அப்படிக் கருதிக் குளிக்காவிட்டால் அதிலே கிடக்கின்ற மீனைப்போல, நண்டைப் போலக் குளித்துவிட்டு வருவதாக ஆகும். மோட்சத்திற்குக் கங்கையிலே, காவிரியிலே குளிப்பதனால் மட்டும்தான் போகமுடியும் என்று சொன்னால், அதிலே கிடக்கிற நத்தைக்கும் நண்டுக்கும் கூட அது கிடைத்திருக்க வேண்டும். அவைகளுக்குப் பகுத்தறிவு இல்லை; சிந்திக்க முடியாது; சிந்திக்கின்ற திறன் கிடையாது.

எனவே மனிதன் அவற்றில் நீராடுகிற பொழுது, எங்கோ உயரத்தில் வானுயர் மலையில் தோன்றுகிற கங்கை, பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, கீழே இறங்கி, மண்ணுலகம் முழுதும் பரவி ஓடி, இருகரையிலும் வாழ்கின்ற மக்களுக்கு வாழ்வளிக்கின்ற பாங்கைப் பார்த்து, அதே போல என்னுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்துக் குளித்தால் கங்கையில் குளிப்பதும் பயன் தரும்; காவிரியில் குளிப்பதும் பயன் தரும். அஃது இல்லையானால், அதில் பயனில்லை. எனவே, மனித உள்ளங்களை எல்லாம் அன்பிலே நனைத்து, தொண்டினால் வருகின்ற துன்பத்திலே காயப் போட்டால், மனிதனும் கொஞ்சம் தேறுவான். ஆக மனித உள்ளங்களையெல்லாம் அன்பிலே நனைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் துன்பம் கூடாது.

ஆனால், துன்பத்தை வரவழைத்துக் கொண்டவனாக இருந்தால் வாழ்த்தலாம்; பாராட்டலாம். இருந்தது; கொடுத்துவிட்டு ஏழையானான். மற்றவர்களுக்காக வாழ்விழந்தான் என்றால் தவறில்லை. ஒரு சிறந்த வாழ்க்கை என்று சொன்னால் ஒரு நல்ல வீணை வாசிப்பதைப் போல. ஒருவர் மிக அழகாக வீணையை மீட்டினால், அதை மீட்டுகின்றவர்களுக்கும் பெருமை, வீணைக்கும் பெருமை. அந்த வீணை இசையைக் கேட்டு மகிழ்கிறவர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி. அதேபோல ஒரு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஓர் ஆன்மீக வாழ்க்கை-சமய வாழ்க்கை-ஒரு கடவுள் நம்பிக்கை உடைய வாழ்க்கை என்று சொன்னால், அந்த வாழ்க்கை வீணை வாசிப்பதைப் போன்ற வாழ்க்கையாக அமைய வேண்டும். அந்த வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்தால் மகிழ வேண்டும்.

இயற்கையாக, மனிதனுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் மகிழ்ச்சி வராது. காரணம், அவன் அழுக்காறோடு கூடப் பிறந்தவன். அவனுக்கு ஒன்று இல்லை என்று கூடக் கவலைப்படமாட்டான்; மற்றவர்க்கு வந்திருக்கிறதே? அதனால் எனக்கு வேண்டும் என்று கவலைப்படுவான். அவனுக்கு எப்பொழுதும் மற்றவரைப் பற்றித்தான் கவலையே தவிர, அவனைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. சின்னப் பையன் கூடச் சொல்லுவான். அடுத்த வீட்டுக்காரன் வைத்திருக்கிறான்; அதனால் வேண்டும் என்று சொல்லுவான். ஆகையால் நம்முடைய ஆவல்கள் பெரும்பாலும் நம்முடைய தேவையை நோக்கித் தோன்றுவன அல்ல. மற்றவர்கள் பெற்றிருக்கிறார்களே, அதுபோல நமக்கு வேண்டும் என்று அழுக்காற்றுப் போக்கில் தோன்றுகின்ற பாவனை கூட எனலாம். சில பேர் இப்போது அதற்குக் கூடச் சமாதானம் சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள். அது நல்லதன்று. நல்ல காரியங்கள் செய்வதில், கல்வியில், புகழில் இதிலெல்லாம் சிறிது பொறாமை இருந்தால் தவறில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் அது அவ்வளவு நல்லதன்று எந்தத் துறையில் இருந்தாலும் அழுக்காறு அழுக்காறுதான். அழுக்காறு என்று சொன்னால் அழுக்கு வழி என்று பொருள். எண்பது மதிப்பெண் வாங்கியிருக்கிற ஒரு மாணவனைப் பார்த்து, இருபது விழுக்காடு வாங்கியிருக்கிற மாணவன் பொறாமைபட்டால், இருபது மதிப்பெண்ணை எண்பது மதிப்பெண்ணாக ஆக்க முயற்சிக்க மாட்டான். அழுக்காறு உடையவனாக இருந்தால் அதற்காக அவன் என்ன செய்கிறான் என்றால், எண்பது விழுக்காடு வாங்கினவனுடைய தகுதிக் குறைவை என்னவென்று கண்டு பிடித்துச் சொல்லலாம் என்று ஆசைப்படுவான். எனக்குத் தெரியாதா? அவன் எண்பது விழுக்காடு வாங்கியது எப்படி என்று? அந்த ஆசிரியர் வீட்டு வாயிற்படியிலேயே பணத்தை வைத்துக் கொண்டு காத்துக்கிடந்தான். நான் அப்படியில்லை என்று அவன் மற்றவர்களுடைய தகுதிக்குக் குறை கற்பிக்க முயற்சிப்பானே யன்றி, அவன் தகுதியுடையவனாக முயற்சிக்கமாட்டான். எனவே எந்தக் கோணத்திலும், எந்த வகையிலும், அழுக்காறு தீதுதான்.

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் இல்லை

என்பார் திருவள்ளுவர். எனவே அழுக்காற்றின் வழியில் இல்லாமல், நாம் மற்றவர்கள் மகிழ்வதற்காகவே மகிழ்வது, மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் வாழ்வது, என்ற உயர்ந்த பண்பாட்டை நம்முடைய ஆன்மீக உலகம், சமய உலகம் சாதித்தாக வேண்டும். இருபதாம் நூற்றாண்டு, எந்த நூற்றாண்டையும் விட நம்முடைய ஆன்மீக உலகத்திற்கு, சமய உலகத்திற்கு ஒரு பெரிய அறை கூவல். பழைய காலத்திலாவது சில பொருள்களை மட்டும் அழிக்கின்ற குண்டுகளைக் கண்டு பிடித்தான். இப்பொழுது விஞ்ஞானத்தினுடைய உச்சிக் கொம்புக்குப் போய் விட்டார்கள்.

>நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

என்பதைப்போல, இப்பொழுது அண்மையில் கண்டுபிடித்திருக்கிற குண்டு, கட்டடங்களை அழிக்காது; தோட்டங் தோட்டங்களை அழிக்காது; நிலங்களை அழிக்காது; காடுகளை அழிக்காது. பொருள்களை எல்லாம் அப்படியே பத்திரமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை மட்டுமே அழிக்கும். உடைமைகள் தோற்றமே மனிதனுக் காகத்தான். கடவுள் இந்த உலகத்தில் பொன்னையும், பொருளையும், போகத்தையும், பழத்திடை சுவையினையும், கனிகளையும், சோலைகளையும் நமக்கு அமைத்துக் கொடுத்தது, இந்த உயிர்கள் தம்முள் மகிழ்ந்து வாழட்டும்; மகிழ்ந்து வாழ்வதின் மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளட்டும் என்றுதான். ஆனால், இன்றைக்கு நிலைமை, மனிதனைவிட உடைமைகள் மிகப் பெரிய செல்வாக்கு உடையனவாகி விட்டன. மிகப் பெரிய விநோதம், பணத்தை மனிதன்தான் படைக்கின்றான்; பொருளையும் மனிதன்தான் படைக்கிறான். அதற்குப் பெயரும் இவன்தான் சூட்டுகிறான். அதற்கு விலை மதிப்பும் இவன்தான் நிர்ணயிக்கின்றான். ஆனால், துர்ப்பாக்கியவசமாக அவற்றிற்கு எல்லாம் செய்த பின்பும் இவனே அவற்றுக்கு அடிமையாகவும் நிற்கின்றான்.

“பொருளுக்காக நான்” என்று கருதுகிறானே தவிர, ‘வாழ்க்கைக்குப் பொருள்’ என்று அவன் கருதவில்லை. பொருளுடைமையின் காரணமாகவே சில காரியங்கள் நிகழ்கின்றன. அதற்காகவே சண்டைகள், அதற்காகவே போட்டிகள் தோன்றுகின்ற பொழுது, ஆன்மீகத் தரம் வீழ்ந்து விடுகிறது. பொருளுடைமை தவிர்க்க முடியாதது. ஆனால் அது, துய்த்து, மகிழ்ந்து, வாழ்வதற்குத் தானே தவிர, பூட்டுக் கடைகளுக்குள்ளே போய்ச் சிக்க வேண்டும் என்பதற்காக வன்று. உலகத்தில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் மிகவும் செல்வாக்குப் பெற்ற கருவி, சிறைகள்; எங்கு பார்த்தாலும் பூட்டுக்கள், பூட்டுகள் இல்லாத கோயில்களைக் கூடக் காண முடியவில்லை.

ஒரு காலத்தில் நாம் கடிதத் தலைப்பில் சிவமயம் என்று எழுதுவது உண்டு. இப்பொழுது சிறைமயம் என்று எழுதினால்கூட தவறில்லைபோல் தெரிகிறது. ஒன்று, சிறைச்சாலையின் சாவிகள் காவலர்கள் கையிலே இருக்கின்றன. நம்முடைய மனைகள், மடங்களின் சாவிகள், இன்றைக்கு நாம் நியமித்த காவலர்கள் கையிலே இருக்கின்றன. ‘பத்திரமாகப் பூட்டிக் கொள்’ என்று சொல்லாமல் படுத்துத்தூங்க யாரும் போக முடிவதில்லை. இந்த அளவுக்கு மனித உலகத்தினுடைய நாகரிகம் ஏன். குறைந்தது என்று கேட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் எதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமோ, அதற்கு முதன்மை கொடுக்காமல், வாழ்க்கைக்குக் கருவிகளாக, சாதனங்களாக இருப்பவைகளுக்கு அதிக முதன்மை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் மேலாக விலை மதிக்க முடியாதது நம்முடைய உயிர். உயிர்களினுடைய தரமும், தகுதியும் உயர வேண்டும். அது உயர்வதற்குத்தான் வழிபாட்டையே நாம் செய்கிறோம். கடவுள் வழிபாடு என்பதின் பொருளே கூட, கடவுளின் வழி நிற்றல் என்பதுதான். வழிபடுதல் என்று சொன்னால் வழிப்படுதல் என்று பொருள். கடவுளுக்கு என்று சில வழிகள் இருக்கின்றன. என்ன வழிகள்? அவன் குறைவில்லாதவனாக இருக்கின்றான்; குற்றங்கள் இல்லாதவனாக இருக்கின்றான்; நிறை உடையவனாக இருக்கின்றான்.

வாழ்க்கைப் பயணம் என்பது எதற்காக? குறை உடையவர்கள், தங்களை நிறை உடையவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள மேற்கொள்கின்ற பயணத்திற்கு வாழ்க்கைப் பயணம் என்று பெயர். ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்தக் குறையை நிறை உடையதாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம். உடல் குறையுடையவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றார்கள்; உணவுக் குறை உடையவர்கள் போதிய உணவு எங்கே கிடைக்கும் என்று தேடுகிறார்கள்; அறிவுக் குறையுடையவர்கள் அறிவு எங்கே கிடைக்கும் என்று தேடுகிறார்கள்; சில பேர் எது நிலையான குறை என்று தெரிந்துகொண்டு, மற்ற குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நிலையான குறை ஒன்றை மாற்ற முயற்சிக்கிறார்கள். தனித் தனியே பொருள், தனித்தனியே பணம், தனித்தனியே காசு இவைகளைத் தேடுவதைவிட, ஆன்மாவினுடைய, உயிரினுடைய தரத்தைக் கூட்டுவதன் மூலம் அனைத்தும் கிடைக்கும். காரணம், ஆன்மா தரப்படுகிறது என்று சொன்னால், அதற்குரிய ஆற்றல் தரப்படுகிறது.

பொறிவாயில் ஐந்தவித்தான்

என்பார் திருவள்ளுவர். ‘அவித்தான்’ என்று சொன்னவுடன் சிலபேர் அதை அழிக்கவே முயற்சி செய்கிறார்கள். சிலபேர் சாப்பிடுவதே இல்லை; காரணம், நோன்பு இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். சிலபேர் நன்றாகத் தூங்குவதே இல்லை. காரணம், நான் கண் விழித்துச் சாமி கும்பிடுகிறேன் என்பார்கள். இப்படி வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி என்னென்னவோ தண்டனைகளை எல்லாம் அனுபவிக்கிறார்கள். ஆனால் தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம் இறைவனை நாம் மகிழ்விக்க முடியாது. நெறியில்லா நெறி தன்னை நாம் நம்பக்கூடாது. ‘விரதங்கள் எல்லாம் மாண்ட மனத்தான் கண்டாய்’ என்பார்கள். ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று சொன்னால் இந்த மெய், வாய், கண், மூக்குச் செவிகளை ஒன்றும் துய்க்காமல், மகிழாமல் அழிப்பது என்று பொருள் இல்லை. இங்கு அவித்தல் என்ற சொல், பக்குவப்படுத்துதல், என்றுதான் பொருள்படும். நெல் அவித்தல், கிழங்கு அவித்தல் என்பார்கள். இந்த நாட்டிலே செல்வாக்கான பலகாரம்-இடியாப்பம் அவித்தல் என்று சொல்வார்கள். எனவே, அவித்தல் என்று சொன் னால் உண்பதற்குரிய முறையிலே பக்குவப்படுத்துதல் என்பதுதான் பொருளே தவிர, அந்த மெய், வாய், கண், மூக்கு, செவிகளை அழித்து விடுவது அல்ல. சிலபேர் சிலவற்றைக் கேட்பதே இல்லை. ஆனால், சில சந்தர்ப்பத்திலே இவர்கள் சொல்வதையும் அவர்கள் காதுகள் கேட்பதும் இல்லை. இன்றைக்கு இருக்கிற விநோதமான போக்கு-நாம் ஊரெல்லாம் கட்டியாள முயன்றாலும், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதே புரியவில்லை. பலருக்கு அவர்களுடைய கட்டுப்பாட்டின் மீதே இல்லை. ‘ஏனப்பா! திரைப்படத்திற்குப் போனாய்? என்று கேட்டால் அவன் சொல்லுகிறான். நான் போவதாகப் போகவில்லை. எனக்கு எண்ணமும் இல்லை, சுவரொட்டியைப் பார்த்தேன். போய்விட்டேன்’ என்று சொல்லுகிறான். அப்படி என்றால், கண் இவனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர, கண்ணுக்கு ஆணையிடுகிற அளவுக்கு இவனுடைய தரம் உயரவில்லை. பார்க்காததைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், விழித்த கண்ணோடு இருந்தால் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும், கண்களைப் பார்த்தால் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனய்யா, பார்த்தாயா? என்றால் ‘நான் பார்க்கவில்லையே!’ என்னுமளவு கட்டுப்பாடு வேண்டும். விழித்துக் கொண்டிருந்தாயே என்று கேட்டால், நான் பார்க்காததைப் பார்க்குமாறு என் அறிவுப்புலன் கண்ணோடு ஒத்துழைக்காது என்று சொல்ல வேண்டும். அதேபோல், நெருக்கமாக இரண்டு பேர் உட்கார்ந்திருப்பார்கள். பக்கத்தில் ஒருவர் பேசிக்கொண்டே இருப்பார். அடுத்து அமர்ந்துள்ள நான் கேட்காமலே இருக்க வேண்டும். ஒரு நூறு அடி இல்லை. இருபதடி இல்லை, ஐந்தடிக்கு உள்ளேதான், பேசுகிற ஒலி செவிப்புலனுக்கு வருகிற எல்லைக்குள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நினைத்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காமல் இருக்க முடியும். என்னுடைய அறிவுப் புலனைச் செவியோடு சேர்த்து என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் என்று ஊக்கம் இல்லாது போனால், அவர்கள் பேசுவது எனக்குத் தொல்லையாகவும் இருக்காது; கேட்கவும் முடியாது. ஆனால், இன்றைக்கு நாம் அப்படி இல்லை. மற்றவர்கள் பேசுகின்ற துரத்திற்கு அதிகம் விலகி இருந்தால் கூட, என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கூட வந்திருக்கிறது. பாரதிதாசன் மிக அருமையாகச் சொன்னான். ‘இந்த மயிலுக்குக் கழுத்தை நீட்டி வைத்திருப்பதைப்போல, மனிதர்களுக்குக் கழுத்தை அதிகம் நீட்டி வைக்கவில்லை. அதிலும், குறிப்பாகத் தமிழகப் பெண்களுக்குக் கழுத்து நீளமாகவே இல்லை; குறுகலாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஏன்’ என்று கேட்டுவிட்டுப் பதில் சொல்லுகின்றான். ‘ஏற்கனவே அடுத்த வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான், இவர்களுக்கு உள்ள கவலை. இதில் கழுத்து வேறு நீளமாக வைத்து விட்டால், இங்கு இருந்தபடியே அடுத்து வீட்டுக்குள் தலையை விட்டுவிடுவார்கள்; பார்ப்பதற்கு” என்று சொன்னான். ஆக நமக்கு, நாம் யார் என்பதில் அக்கறை இல்லை. மாணிக்கவாசகர் போன்றவர்கள், நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று ஆய்வு செய்தார்கள். அவர்கள் நான் யார்? என்று கேட்க ஆசைப்பட்டார்கள். இப்பொழுது இவன் நான் யார்?’ என்று கேட்டுக் கொள்ள ஆசைப்படாமல் நீ யார்? நீ யார்?’ என்று கேட்டுக்கொண்டி ருக்கிறான். சமயத்தில் நான் யார்? என்று கேட்டால் உடனே அச்சடித்த அட்டை கொடுக்கிறார்கள். அதிலே முகவரி இருக்கிறது. ஆனால் அது அஞ்சலக முகவரியே தவிர, அந்த ஆளினுடைய சொந்த முகவரி அல்ல. அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குப் புரிந்துஇருக்கும் என்று நினைக்கிறேன். கொடுத்த அட்டையில் இருக்கிறதே, அது அஞ்சலக முகவரியே தவிர சொந்த முகவரி இல்லை. அஞ்சலக முகவரி வேறு; சொந்த முகவரி வேறு. அஞ்சலக முகவரி என்பது இன்னின்ன இடம்; இன்னின்ன ஊர் என்பது. இந்த ஆள் மனிதராக இருக்கிறாரா? மிருகமாக இருக்கிறாரா? கழுதையாக இருக்கிறாரா? நாயாக இருக்கிறாரா என்பது தெரியாது. அவருக்கு என்ன குணம் இருக்கிறது என்பது தெரியாது. இராமலிங்க அடிகள் திருவொற்றியூரிலே திண்ணையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பலர் போகிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். இது கிரேக்க நாட்டினுடைய சிந்தனையோடு ஒத்து வருகின்ற நம்முடைய நாட்டு இராமலிங்க அடிகளினுடைய சிந்தனை, போகிறவர்களில் நிறையப் பேரை அதோ பார் மாடு போகிறது; மிருகம் போகிறது; அது இது என்று சொன்னார்.

இதோ ஒரு மனிதனும் போகிறான் என்று சொன்னார். இந்த மனிதனும் போகிறான் என்றால், உருவத்தால் ஒத்திருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். நிரம்பப் பேருக்கு மூக்கு விழி எல்லாம் ஒற்றுமையாக இருக்கும். நம் பாட்டிக்குக் கூடக் குழந்தை பிறந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி, ‘மூக்கும் முழியும் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வார்கள். இந்த மூக்கும் விழியும் நிறையப் பேருக்கு நன்றாக இருக்கும். ‘உறுப் பொத்தல்’ என்று சொல்வார்கள். ஆனால் உணர்வுகள் எப்படி இருக்கின்றன. அவர்கள் மற்றவர்கள் வாழ்வதிலே என்ன அக்கறை காட்டுகிறார்கள். ‘நான் யார்?’ என்று சொல்லுகின்ற பொழுது, என்னுடைய குணம் என்ன? என்னுடைய நிறை என்ன? தகுதி என்ன? என்பதுதான் அங்கே பொருள். என்னுடைய உள்ளம் எதை விரும்புகிறது? என்னுடைய ஞானம் எது? என்னுடைய அறிவு எது? இந்த அறிவு என்பது இருக்கிறதே மிகவம் தூய்மையான அறிவு, அறிவா? அன்பா? என்று பட்டிமன்றம் போட்டால் நிரம்பப் பேர் அன்புக்குத் தீர்ப்புச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால் அன்பைவிட, அறிவுதான் உயர்ந்தது என்பேன். அறிவில்லாத அன்பு நிலைத்து நிற்காது.

விலங்குகளுக்கு அன்பு இருக்கிறது. ஒரு நாய், குட்டி போட்டவுடனே மிகவும் அன்பாக வளர்க்கிறது. ஓர் ஆறு மாதம் கழித்து அந்தக் குட்டிக்கு வயது வந்த பிறகு, காலத்தின் வேற்றுமை காரணமாக இந்த நாயும் அந்த நாயும் சண்டை போட்டுக் கொள்கின்றன. விலங்குகளிலே கூடப் பார்க்கலாம். ஒரு பசு, கன்று ஈனுகிறது. இரண்டு ஆண்டு கழித்து அந்தப் பசுவுக்கும், கன்றுக்கும் தாய்-மகன் உறவு இருக்காது. திரும்பவும் முட்டிக்கொள்ளும். சில சமயத்தில் உறவுகள் கூடக் கொள்ளும். ஆதலாலே, விலங்குகளுக்குக் காலத்தைக் கடந்து காட்டுகிற அன்பு, காலத்தை வென்று காட்டுகிற அன்பு, இவைகளெல்லாம் கிடையாது.

மனிதனுக்கும் கூட இப்பொழுது காலத்தை வென்று இருக்கிற அன்பு இருக்கிறதா? கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. மனிதன் என்று சொன்னால் அவனுடைய அன்பு காலத்தை வென்றதாக இருக்க வேண்டும்; எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்; வரையறைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாது போனால், இவனும் கூட விலங்குகளைப் போலத் தாழ்ந்தவன்தான். சுற்றத்தார் என்பதற்காக ஒரு பற்று, சுற்றத்தார் இல்லை என்பதற்காக ஓர் அன்பு இருக்குமானால் எல்லைகளைக் கடந்த அன்பு இல்லை. எங்கே அறிவும் நன்றாக வேலை செய்கிறதோ, அங்கே சூழ்நிலைகளைக் கடந்தும் அன்பு காட்டுவார்கள். தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள், ஒரு முப்பது ஆண்டுகள் சேர்ந்தாற்போல் அன்பு உடையவர்களாக இருந்தால், தெய்வம்போல் கும்பிடலாம் போல் தெரிகிறது. இருபத்தைந்து ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பழகி, வளர்ந்து, இரண்டு பேரும் ஒரு சேர வாழ்ந்து, அதற்குப் பிறகு கொஞ்சம் கூட முனைமுறியாமல், இருப்பார்களானால் அவர்களைத் தெய்வம்போல நாம் பாராட்டலாம். நாட்டில் அறுபதுக்கு அறுபது மணிவிழாச் செய்வார்கள். தம்பதிகள், திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகள் உண்டாகி, பேரன் பேத்திகள் உண்டாகி, யாதொரு குறையும் இல்லாமல் வாழ்ந்தால்- இப்படி வாழ்வது அருமை என்பதால், இப்படி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தால், அவர்களுக்கு மறு திருமணம் செய்கிறார்கள். மணிவிழாக் கொண்டாடுகிறார்கள். நான் அது போலவே சொல்வதுண்டு. இருபத்தைந்து ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள், அறுபது ஆண்டுகள், யாராவது நட்புத்துறையில், உறவுத் துறையில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களுக்கும் கூட அது போல விழா நடத்தலாம். காரணம், நமக்கு அப்படி நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பண்பாடு குறைவு. அதனால்தான் திருவள்ளுவர்.

அன்பின் வழியது உயிர்நிலை

என்று சொன்னார். எனவே நான் யார்? என் உள்ளம் யார்? என்கிற பொழுது, மனிதர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள். அறியாமை என்றால் சில பேர் ஒன்றும் தெரியாமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் தெரியாமை என்பது அறியாமை அல்ல. அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாகப் புரிந்து கொள்ளுதல். செய்தி நிறையத் தெரியும், விசய ஞானம் நிறைய இருக்கும். அவர் ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவரைப் போலக் குழப்பமான மனம் யாருக்கும் இருக்க முடியாது. தெளிவு இருக்க வேண்டும்.

சிந்தையுள் தெளிவுமாகி, தெளிவினுள் சிவமுமாகி

என்பார் நம்முடைய அப்பரடிகள். தெளிவு தேவை. தெளிவில்லாத குழப்பமான, இதுவோ அதுவோ என்ற ஐயப்பாடுகள், குழம்பிய மனத்தில் இருக்கும். தெளிவான ஒன்றுக்குத்தான் அறிவு என்று பெயர். நமக்கு எது சரியானது என்று புரிந்து கொள்ளுகின்ற முயற்சி இருக்காது. தவறானதைச் சரியென்றும், நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றுமாக, முறை பிறழ உணர்கின்றோமே, அதற்குப் பெயர்தான் அறியாமை. இதற்குத் தெளிவாக ஒரு சிறு உவமை சொன்னால் நன்றாக விளங்கும். சில ஊர்களிலே, சில கிராமப் புறங்களிலே ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள் இருக்கிறார்கள். உணவுப் பஞ்சத்தின் காரணமாக இப்பொழுது எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது இல்லை என்ற வரையறை நீங்கிக் கொண்டு வருகிறது. எனவே, இந்த ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள், ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்து, உலைப்பானையிலே போட்டு, அடுப்பிலே விறகு வைத்துத் தீ மூட்டினார்கள். பச்சைத் தண்ணீரிலே கிடந்து மரத்துப் போன ஆமைக்கு, இளம் சூடு, சிறிது வெது வெதுவென்று இருந்தது. உடனே அதற்கு மகிழ்ச்சி. ‘அடஅட! இளஞ்சூடு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இதுபோல வெதுவெதுவென்று எங்கும் இல்லையே’ என்று சொல்லி அந்தப் பானை நீரிலே விளையாட ஆரம்பித்தது. ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைபோல்’ என்பார். மிகவும் மகிழ்ச்சி. இந்த இளம் சூட்டிற்கு ஈடு இணை ஏது? ஒன்றை மறந்துவிடக் கூடாது. அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. எட்டு மணிக்கு எரியத் தொடங்கிய அடுப்பு, எரிந்து கொண்டே இருந்தால், இளம் சூடு என்ன ஆகும்? கொதி நிலையாக மாறுகிறது. கொதி நிலையாக மாறுகிற பொழுது, அந்த ஆமை அழிந்து போகிறது.

அதேபோல, எது நிலையான நன்மை தரும், எது நெடிய பயன் தரும் என்று அறிந்து கொள்ள முடியாமல், இந்தத் தற்காலிகமான வெற்றிகள், இன்பங்கள் இவைகளிலேயே மயங்கி, அதிலேயே மூழ்கி, கடைசியிலே அதுவே நம்மை அழிக்கின்ற அளவுக்கு அழித்துக் கொள்கிறோம். அதனால்தான் ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் நின்றாடுநின்ற ஆமைபோல் தெளிவில்லாதவன்’ என்று சொன்னார். ஆக, சிந்தையுள் தெளிவுமாக, தெளிவினுள் சிவமுமாக இருக்கின்ற பரம்பொருளை நாம் நினைக்கின்ற பொழுது, நம்முடைய அறிவு இன்னும் தெளிவுடையது ஆகின்றது. சில பேர் தீமையைத் தாமே செய்து கொள்ளுகிறார்கள். ஆனால், யார் மீதாவது பழிபோடுகிறார்கள். இந்த மனிதன் மிகவும் கெட்டிக்காரன்; எதற்கும் சமாதானம் சொல்வதில் இவனைவிடக் கெட்டிக்காரன் யாருமிலர். அதுவும் நம்முடைய சமூகத்தில் சமாதான நிபுணர்கள் அதிகம். சமாதான நிபுணர்கள் என்றால் சண்டைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்பவர்கள் என்று இல்லை. கீழே விழுந்து விட்டால் அதற்கொரு சமாதானம். ஏதாவது சொல்லித் தன்னுடைய குறைகளை நிறைகளாக மாற்றுபவர்களுடைய எண்ணிக்கை மிகுதி. எனவே, தெளிவாக நம்முடைய அப்பரடிகள் சொல்லும்போது சொல்லுகிறார். ‘அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாதே’ என்று. யானை மிகப்பெரிய யானை. அந்த யானைக்குத் தன் உடல் முழுதும் தெரிந்து கொள்ளுகின்ற சக்தி உண்டா? இல்லை பார்வையே இப்படித்தான். அதற்குத் தன் முதுகு, வால், எப்படி இருக்கின்றன: வயிறு எப்படி இருக்கிறது என்று தெரியாது; பார்க்க முடியாது. அதுபோல், சிலபேர் இருக்கிறார்கள். அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாது கேட்டாலும் பெயர் ஊர் சொல்லுவானே தவிர, வேறு ஒன்றும் தெரியாது. சரி, தனக்கு மேலே ஒரு தலைவன், கடவுள் இருக்கிறானே, தெரியுமோ? தெரியாது. யானைக்கு மேலே யானைப்பாகன் ஒருவன் இருந்து யானையைச் செலுத்துகிறானே, யானைக்குத் தெரியாது. அதுபோல, தனக்கு மேலே ஒரு தலைவன் இருக்கிறான்; கடவுள் இருக்கிறான் என்பதும், இவனுக்குத் தெரியாது. மிஞ்சினால் இல்லையென்று சொன்னாலும் சொல்லி விட்டுப் போய் விடுவான். அதற்கு ஏன், என்ன காரணம் என்று கேட்டால் பார்த்தால் தானே நம்பலாம் என்கிறான். கண்ணால் பார்க்க வேண்டும். அது ஓர் ஆசை. கண்ணால் பார்க்க முடியாது போனால் கருத்து என்று ஒன்று இல்லையா?

பகுத்தறிவாளர் உலகத்திற்குக் கண்ணைவிட முக்கியமானது, சிந்தனையும் கருத்தும்தான். விலங்குகளுக்கு மட்டும்தான் கண் முக்கியமான கருவி. நமக்குக் கண்ணை விடக் கூடக் கருத்தும், சிந்தனையும் மிகப் பெரிய கருவிகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் பாரதி வாழ்ந்தான். இப்பொழுது பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு விழாக் காணும் பாரதி என்ற கவிஞன், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற கருத்தைப் பாடினான். ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று சொன்னான். அன்றைக்கு அவன் சந்திரனைப் பார்த்ததில்லை; அவன் பாடுகின்றபொழுது, சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை கூடக் கால் கொள்ளவில்லை.

அன்றைக்குக் கிரகணம் என்றெல்லாம் சொல்லிச் சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அவனுக்குப் பிறகுதான் சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் தோன்றாமல், அமெரிக்க மண்ணிலும், சோவியத் மண்ணிலும் தோன்றி இருக்கிறது. எப்பொழுதுமே சிந்தனைக்கும், கருத்துக்கும்தான் தமிழன் சொந்தக்காரன். அவற்றைச் செயல்படுத்துவதை யெல்லாம், யாராவது அயல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். காரணம், இவனுக்குப் பாட்டு, பதவுரை, பொழிப்புரை சொல்வதிலே காலமெல்லாம் கழிந்துவிடும். ஆகவே, எதையெடுத்தாலும் பதவுரை, பொழிப்புரை, விமர்சனங்கள், இவைகளிலேயே இவனுடைய ஆயுட் காலமெல்லாம் கழிவதன் காரணமாக, பாரதி, ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று பாடினாலும் கூட, பாரதியின் பேரன் பேத்திகள் அந்த முயற்சியைச் செய்வதற்கப் பதிலாகச் சோவியத் மண்ணிலும், அமெரிக்க மண்ணிலும் அந்த முயற்சியைச் செய்த பின்பு நாமும் அந்த முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் முதல் வரிசையில் இல்லை என்பதை மறந்து விடக் கூடாது. கடவுளை நம்புவது என்பது வெறும் கண்களால் பார்ப்பது மட்டுமல்ல.

மனித வரலாறு நெடிய வரலாறு, மனிதனுடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட கண்டங்கள் இருக்கின்றன; இவைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் சொல்லமுடியும். இன்றைக்கும் கடவுள் உண்டா, இல்லையா என்று விவாதிப்பது வீண் வியர்த்தமான பொழுதுபோக்கே தவிர, அது எந்தப் பயனையும் தராது. அதுபோல, கடவுளை நம்புவது கூட, ஏதோ பயந்து கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்பதற்கு அல்ல. நான் தெளிவாகச் சொல்லுகிறேன்; கடவுளிடத்திலே எனக்குப் பயமும் கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்லுகிறேன். கடவுளிடத்திலே யாசகம் கேட்கிறவ்னும் அல்லன். சிலபேர் கடவுளிடத்திலே யாசகம் கேட்பதற்கே போகின்றனர் அவர் திரும்ப நம்மைப் பார்த்து, ஏண்டா? ஏற்கனவே நிறையக் கொடுத்திருக்கிறேனே! அதையெல்லாம் உபயோகப்படுத்தினாயா? அதையெல்லாம் உபயோகிக்காமல் துருப்பிடிக்க வைத்துவிட்டு இங்கு ஏன் மீண்டும் வந்து கேட்கிறாய் என்று! கேட்டாலும் கேட்பார். மாணிக்க வாசகரே தம்முடைய திருவாசகத்தில்,

என்னால் அறியாப்
பதந்தந்தாய் யான்
அஃதறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும்
குறைவில்லை

என்று சொன்னார்.

அவன், கங்கையெனக் காவிரியெனச் சுரக்கின்ற அறிவூற்றுக்கள், மின்னாற்றலை விட மிகச் சிறந்த ஆற்றல், உடலிடை வாழ்கின்ற பல்வேறு அமைப்புகள், இவ்வளவையும் நமக்கு வழங்கிய பிறகும் கூட, பிச்சைக்காரனாக அவனுடைய சந்நிதியில் போய் மனிதன் நிற்கிறான். அது இந்த நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, அவனுடைய அமைப்புப்படி, குறிக்கோள்படி, மனிதன் தன்னுடைய தலைவனை உணர்ந்து, அவனால் இந்த உலகம் இயங்குகிறது; அவன் எனக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் வழங்கி இருக்கின்றான் என்று நன்றியறிதலோடு மட்டுமல்ல. அவனுடைய குறைவற நிற்கின்ற அறிவை, ஆற்றலை இந்த உயிர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளை வழிபாடு செய்தாலும் கூட, அந்த வழிபாட்டின் பலன் கடவுளுக்குப் போய்ச் சேருவதில்லை. வழிபாட்டின் பயன் உயிர்களுக்குத்தான் சேர வேண்டும். அது நியதி! அதுதான் குறிக்கோள். கரும்பலகையில் எழுதினால்கூட, கரும்பலகையில் எழுத வேண்டும் என்பது நோக்கமல்ல. கரும்பலகையில் எழுதுவதின் நோக்கம், என்னுடைய சிந்தனையில் எழுதிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதே போல இறைவனை முன்னிட்டு வழிபாடு செய்தாலும், அந்த வழிபாட்டின் பயன் இந்த உயிர்களை வந்து அடைய வேண்டும். அவனை அறிவுடையோன், ஞானமுடையோன், பேரறிவுடையோன் என்று தொழுவதன் மூலமாக, இந்த உயிர் பேரறிவுடையதாக விளங்க வேண்டும். இறைவனுடைய குணங்களும், நிறைகளும், அவனுடைய அருள் நலங்களும், உயிரில் வந்து தங்குதலுக்குத்தான் வழிபாடு என்று பெயர். அதற்குத் தான் அந்த நெறியில் நிற்றல் என்று பெயர்.

அந்த யானை தன்னுடைய தலைவனையும் தெரிந்து கொள்ளாது. அதுபோல இவனும் தெரிந்து கொள்வதில்லை. யானையை எங்காவது கட்டினால் போதும், உடனே தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதேபோல, ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும், தனக்கு எண்ணத் தொலையாத தீங்குகளைச் செய்து கொள்ளுகிறான். அவன் சற்று நேரம் ஓர் இடத்தில் தனியே அமர்ந்து விட்டால் அவனுடைய மனம் படுகிறபாடு எந்த எல்லையிலும் நிற்காமல், எங்கோ சுற்றுகிறது. அது சுவர், வேலி, நாடு என்று எல்லாம் ஏறி இறங்கி எங்கோ சுற்றுகிறது. அது விவஸ்தையே இல்லாத ஒன்றாக இருக்கிறது. அதனால்தான், இந்த மனம் என்ற ஒன்று இருக்கிறதே, அதை மனிதன் தன்னுடைய கட்டுப்பாட்டின் உள்ளே கொண்டு வரவேண்டும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்றார் திருவள்ளுவர்.

அறிவுக்கு இலக்கணம் என்னவென்று சொன்னால், எங்கோ செல்கின்ற மனப்புலனைத் தலையிலே குட்டி, ‘அங்கே எங்கு போகிறாய்? இங்கே வா? என்று நல்லவற்றிலே செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துகின்ற மனப்பாங்கு நமக்கு நிறைய இருக்க வேண்டும். தனக்குத் தானே துன்பத்தைச் செய்து கொள்ளுவதைப் போல ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ளுகிறான். போகிறபோது சொல்லுவான், கல் இடித்துவிட்டது என்பான். வாயிற்படி இடித்து விட்டது என்பான். அது இடிக்கவும் இடிக்காது; அதற்கு நகருகின்ற சக்தியும் கிடையாது. இவன் கவனக் குறைவாகப் போய் இடித்துக் கொண்டு பழியை அதன்மேல் போடுவான். இவன் எதாவது கவனக் குறைவாக, தரக்குறைவாக வாழ்ந்து விட்டு, ஏண்டா? இப்படிச் செய்தாய்’ என்று கேட்டால், யாராவது இராமசாமி, கோவிந்தசாமி இவர்கள் மேல் பழியைப் போடுவான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்குசெய்ய முடியாது. தீங்கு செய்கிற மனிதன் இருந்தாலும், உன்னுடைய ஆன்ம வலிமை சரியாக இருக்குமானால் நீ வலிமையும் ஆற்றம் உடையவனாக இருப்பாயானால் உன்னுடைய பகைவனும்கூட உனக்கு ஒன்றும் தீங்குசெய்ய முடியாது. வெளியே பூத பெளதிக உலகத்தில் பனி இருந்தாலும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்குமானால், வெளியே இருக்கின்ற பனி, அவனுக்கு மூக்குச் சளியை உண்டாக்கி விடாது. இவன் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், வெளியே பனி என்று போர்த்துக் கொள்ளுவான். இவன் எங்கே போனாலும், உடலைத் தெம்பும் திராணியுமாக வைத்துக் கொண்டிருந்தால், குளிர் தேசத்திலே கூட, இவன் கம்பளியில்லாமல் வாழ முடியும். அது உடலை வைத்துக் கொண்டிருப்பதைப் பொறுத்தது. இப்பொழுது கொஞ்ச நாளாக உடலைப் பேணுதல் என்பது அவ்வளவு தேவையற்றதாக இருக்கிறது. ‘இது ஒரு கட்டைதானே, எங்கேயோ போகப் போகிறது’ என்றெல்லாம் சொல்லி இழிவுபடுத்துகிறார்கள். நம்முடைய திருமூலர் போன்ற ஆசிரியர்கள் ‘உடம்மை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’ என்று சொன்னார்கள். உடலைக் கருவியாகக் கொண்டுதான் ஆன்மா, ஞானம் பெறுகிறது. எழுதுவதற்கும், படிப்பதற்கும், நூல்புத்தகம் தேவைப்படுவதைப் போல, நம்முடைய ஆன்மா ஞானத்தைப் பெறுவதற்கு நம்முடைய உடற்கருவி இன்றியமையாத தேவை. எனவே, துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக் வடாது. அதற்கும் மேலாக யானை தன்னைக் கட்டுகிற சங்கிலியை, தன்னுடைய மாவுத்தனிடத்தில் தானே எடுத்துக் கொடுக்கும். கட்டு என்று எடுத்துக் கொடுக்கும். அதேபோல, சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சில கட்டுக்களைப் போட்டுக் கொள்ளுவார்கள். காரணம், அவர்களுக்கு விரிந்த உலகத்தில் நடக்கப் பழக்கமில்லை. விருப்பமில்லை. விரிந்த உலகத்தினோடு அவர்கள் பழக முயற்சி செய்ய வேண்டும். நிறையப் பேருக்கு, நிறையப் பெருமை ‘பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்’ என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதில். அவன் அவ்வளவு தூரம் சிறுத்துப் போவதிலே பெருமை காண்கிறான். உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். பரந்த நீர்ப்பரப்பில் தூசுகள் அதிகம் கிடந்தால்கூடப் பார்க்காமல் நாம் குடிப்போம். சில பேர் கையில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு கூடக் குடித்து விடுவார்கள். ஆனால் சின்ன அண்டாத் தண்ணீரில் தூசு கிடந்தால் கொட்டிவிடுவார்கள். சின்னக் குவளையிலே நீர் இருந்தால், கண்ணுக்குத் தெரியும்; கொட்டிவிடுவார்கள். எல்லை சுருங்கச் சுருங்க மனிதனுக்குக் குற்றங்கள் பெரிதாகத் தெரியும். எல்லை-பரப்பளவு கூடக் கூட, மனித உலகத்தோடு நம்முடைய தொடர்பு கூடக் கூட, குறைகள் எல்லாம் நிறைகளாகத் தெரியும். மனிதரிடத்திலே குறைகளைவிட, நிறைகளை அதிகம் காணப் பழக வேண்டுமென்பது, மாணிக்கவாசகருடைய யானை உவமை. யானை தன்னையே கட்ட சங்கிலி எடுத்துக் கொடுக்கிறது. இதேபோல, மனிதன் தன்னையே துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டும், தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலும் உள்ளான். தன்னுடைய தலைவனைப் பற்றித் தெரிந்து, அவன் தனக்குவமை இல்லத தலைவன் என்பதைப் புரிந்து கொண்டு, அவனை ஒன்றியிருந்து நினைக்க வேண்டும்.

வழிபாட்டினுடைய முக்கியமான நோக்கம் அந்த உயிர் அதிலே கலக்க வேண்டும். ஒன்றிலே ஒன்று ஊறினால்தான் அதன் சுவையை அந்தப் பொருள் எடுத்துக் கொள்ளும். அது சர்க்கரையில் ஊறினாலும் சரி. உப்பிலே ஊறினாலும் சரி, அதில் ஊற வேண்டும். அதே போல, இறை வழிபாட்டில் நாம் இதயத்தோடு கலக்க வேண்டும்; அதனால் தான் நாம் அடிக்கடி தமிழில் வழிபாடு வேண்டும். தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அது ஒன்றும் மொழிப் பிரச்சனை அல்ல. இன்ன மொழியில்தான் நடைபெற வேண்டும் என்ற வரையறை செய்வது நம்முடைய நோக்கம் அல்ல. தமிழில் அர்ச்சனை செய்தால் எதிரே இருக்கின்ற மக்கள் மகிழ்ந்து கேட்பார்கள். செவிப்புலன் வாயிலாகச் செய்திகள் போய்ச் சேருகின்றன. அந்த இறைக் குணங்களைச் சிந்திப்பார்கள். அவற்றோடு ஒன்றுவார்கள்; உணர்வார்கள்; அந்தக் குணங்கள் அவர்களுக்குச் சொந்தமாகும். அது தமிழில் வழிபடுவதால் ஏற்படும் ஒரு பயன் என்பதை மறந்து விடக்கூடாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொன்னால் கூட நன்றாகப் புரியும் என்று எண்ணுகிறேன். பயணியர் மாளிகையிலே ஒரு சுவர்க் கடிகாரம் இருக்கிறது. இரவு பன்னிரண்டு மணிக்கு அந்தப் பயணியர் மாளிகைக்குப் போய்ச் சேருகிறேன். கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஓசை கேட்டது. மணி பன்னிரண்டு என்று! சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, திரும்பப் பயணம் செய்யலாம் என்று எழுந்து பார்க்கிறேன். முள் பன்னிரண்டிலேயே நிற்கிறது. ஆனால், பெண்டுவம் ஓடி ஆடி ஓசை செய்கிறது. ஓடுவதையும் கண்ணால் பார்க்கிறேன். ஆனால் முள் பன்னிரண்டிலேயே இருக்கிறதே என்று காவற்காரரை அழைத்து என்ன அய்யா’ என்று கேட்டால், கொஞ்ச நாளாக இந்தக் கடிகாாம் ஓடுதுங்க, ஆனால் முன் நகரவில்லை என்று சொன்னா அதேபோல நாட்டில் வழிபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன: வாழ்க்கை நெறிகளிலே மட்டும் நகர்த்தத் தவறி விடுகிறோம். காரணம், நம்முடைய இதயத்தில் அதனுடைய உணர்வுகள் பதிவதில்லை.

எனவே, தாய்மொழியில் அர்ச்சனை செய்தால், ‘அப்பன் நீ, அம்மை நீ’ என்று சொல்லுகிறபொழுது நம்மை அறியாமல் கடவுளை நம்முடைய வாழ்வுப் பொருளாகக் காண்கிறோம். கடவுளை நம்முடைய வாழ்த்துப் பொருளாக மட்டுமின்றி, வாழ்வுப் பொருளாகவும் காண்கின்ற ஒரு பண்பாடு வளர்கின்றது. அப்பனாக இருக்கிறான்; அம்மையாக இருக்கிறான்: அன்புடைய மாமனாக இருக்கிறான்; மாமியாக இருக்கிறான். ஓரூராக இருக்கின்றான்; சுற்றமாக இருக்கின்றான்; பொன்னாக இருக்கிறான். மணியாக இருக்கின்றான்; முத்தாக இருக்கிறான். என்று சொல்லுகிற பொழுது, மனிதனுக்கு வாழ்க்கை நிகழ்வுகளோடு அந்த உணர்வு நகர்த்தப்படுகிறது. அப்பொழுதுதான் வழிபாட்டினுடைய பயன் அவனுக்குத் தித்திக்கிறது. தான் செய்கிற வழிபாடு எந்த மொழியில் செய்தாலும் கடவுளுக்குப் போய்ச் சேரும். கடவுளுக்கு மொழி வேறுபாடு இல்லை.

ஆனால் நமக்குத் தேவை நம்முடைய இதயம் அழ வேண்டும். நம்முடைய உயிர் அழ வேண்டும். மனிதனுடைய இருதயம் ஊமையாக இருந்தாலன்றி, கடவுள் செவிடாக இருப்பதில்லை என்று சொல்லுவார்கள். நம்முடைய இதயத்தில் ஊமைத் தன்மை இல்லாமல் இறைவனை நோக்கி அழக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்கு அழுவதற்கு உரிய மொழி தாய்மொழிதான். எவ்வளவுதான் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தாலும், எவ்வளவுதான் பிறமொழிகளிலே மேம்பட்ட அறிவு பெற்றிருந்தாலும், அவனுக்கு ஒரு விபத்து என்று அழுகிறபோது, அவனுக்குத் தாய்மொழி துணை செய்வதைப் போல, எந்த மொழியும் துணை செய்யாது. இதற்கும், காதல் செய்வதற்கும் தாய்மொழியைத் தவிர வேறு மொழி துணையே இல்லை. மொழி வேறுபாடு இருந்தாலும் காதல் தோன்றுகிறது என்று சொல்லலாம். அது காதலாக இருந்தாலும் கனிவாக, பழக்க வழக்கமாக உருப்பெறுவது சிறிது கடினம் என இருக்கும். அப்புறம் இவர் அந்த மொழியைக் கற்றக் கொடுக்கும் ஆசிரியராக மாறி, பக்குவப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.

எனவே, ‘யானும் பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்று சொன்னார்கள். அழுவதற்கு உரிய முயற்சி, அதுவும் அன்பு அழுகை, ஆர்வ அழுகை; பேரறிவு, பேராற்றலை நோக்கி அழுகிற அழுகை! இந்த அழுகை என்பது அவலத்தின் பாற்பட்ட அழுகை அல்ல. மண்ணிலே இருக்கிற சின்னஞ்சிறு கொடிகள், விண்ணிலே இருக்கின்ற கதிரவனோடு உறவுகொண்டு, அந்தக் கதிரவனின் ஆற்றலைக் கொண்டு வளர வேண்டும் என்று துடிப்பதைப் போல, கங்கு கரையற்றவனாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவனாக, வானாக, மண்ணாக, வளியாக, ஒளியாக, ஊனாக, உயிராக, இன்மையுமாய், உண்மையுமாகப் பரந்து நிற்கின்ற பரம் பொருளினுடைய ஆற்றலைப் பெறுவதற்காக, அவனுடைய துணையைப் பெறுவதற்காக, உயிர்கள் துடிக்கின்ற துடிப்புக்குப் பெயர் வழிபாடு. அது உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். அந்த உயிர்த் துடிப்புடைய வழிபாடு என்றைக்கு நிகழ்கிறதோ, அன்றைக்கு எந்த மனிதனும் கடவுளைக் காண முடியும். அதற்கு ஒன்றும் வரையறை கிடையாது; எல்லை கிடையாது.

அந்த உயிர்த் துடிப்புள்ள வழிபாடு நம் நாட்டில் பரவினால் உயிர்த் துடிப்புள்ள வழிபாடு வந்து விட்டால், எல்லா உயிரும் மகவென ஒக்கப் பார்க்கின்ற, பெருந் தன்மையான வாழ்க்கை வந்து விடும். எல்லா உலகத்திற்கும் தலைவனாக இருக்கின்றவன் கடவுள் என்ற பரந்த மனப்பான்மை கருக்கொள்ளும். அப்பொழுது உலகம் நெருங்கும். நிச்சயமாகச் சொன்னால், அரசுகளால், பொருளியல் முயற்சிகளால், விஞ்ஞானத்தால், உலகத்தை அன்பு வழியாக இணைக்க முடியாது போனாலும், சிறந்த ஆன்மீகம் உலகத்தை இணைக்கும். உலகத்தை இணைத்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற புதிய சமுதாயத்தை உருவாக்கும். இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ‘தென்னாடுடைய சிவனாக இருக்கின்றவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக’ இருக்கின்றான் என்று சொன்னார்கள். எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருக்கின்ற அந்தப் பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து வழிபடுகிற வாழ்க்கையை நீங்கள் பெற வேண்டும்.

வழிபாடு என்பது இறைவனுடைய நெறியில் நிற்றல், வழிப்படுதல் என்பதை மறந்து விடக் கூடாது. குறைவிலாமையும் நீங்கள் பெற வேண்டும். பெறுதற்குரிய முயற்சியில் வழிபாட்டுநெறி நிற்க வேண்டும். அதற்குத் தாய்மொழி வழிபாட்டுநெறி நிறையத் துணை செய்யும். ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்வதுதான் வழிபாட்டினுடைய நோக்கம். இந்த ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்கின்ற பொழுது, நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தி, எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்கச் செய்து, எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்கச் செய்து, தன்னுடைய ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும், உள்ளே ஆற்றலைச் சேர்க்கின்ற மடைகளாக வைக்க வேண்டும். ஒரு பொழுதும் போக்கு மடைகளாக அவற்றை மாற்றக்கூடாது. வாழ்க்கையிலே உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவிற்கு அறிவையும், ஆற்றலையும், அருளார்ந்த அனுபவத்தையும் சேர்க்கின்ற மடைகள்தான். உள்ளே கொண்டு வந்து குவிக்கின்ற மடைகள்தான், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் ஆகும். இவை பல சமயங்களில் தரமற்ற வாழ்க்கையின் காரணமாக மனித ஆற்றலைப் புறத்தே விடுகின்ற மடைகளாக மாறி, உடலை என்புக் கூடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றன. இந்தப் பொறிகள், புலன்களை நாம் அழுக்கு உடையனவாக இல்லாமல், அழுக்காறு உடையனவாக இல்லாமல், ஆக்கத்தின் பாற்பட்டதாகச் செய்கின்ற முயற்சி வேண்டும். யானை போன்று வாழ்வதைவிட, அதற்குரிய நுட்பப் புலன்களை நாம் பெற வேண்டும்.

அன்பு உயர்ந்தது என்று உலகத்தில் சொல்லப் பட்டாலும்; அறிவு மிக உயர்ந்தது. காரணம், அதுதான் காலத்தை வென்று நிற்பது; எல்லைகளைக் கடந்து நிற்பது, எப்பொழுதும் அன்பு காட்டுவதற்குத் துணையாக நிற்பது என்பதையும் நினைவூட்டி, நம்முடைய வாழ்க்கையில் தகுதியில்லாதவற்றைக் கண்டு மயங்கி நிற்பதற்குப் பதிலாக, தகுதியுடையன எவை என்று கண்டு அவற்றைப் போற்றி வாழ்கின்ற வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும். சிறந்த வாழ்க்கை என்பது நல்லதோர் வீணை எடுத்து மீட்டுவதைப் போல, நல்ல வீணை மீட்டுவதன் மூலம் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் கேட்டு மகிழ்வார்கள், சமயவாழ்க்கை என்பது, வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவது. எப்படி நெல்லை நனைத்தும், காயப்போட்டும் பக்குவப் படுத்துகிறோமோ, அதேபோல, உயிர்களை அன்பிலே நனைத்துத் தொண்டினால் வருகின்ற துன்பத்தில் காயப் போட்டு, வாழ்க்கையைத் தரப்படுத்துங்கள்; தகுதிப் படுத்துங்கள்.

உலகம் இன்று விஞ்ஞானத்தால் இணைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்மீக உலகத்தால், சமய உலகத்தால், மனித உலகத்தினுடைய இதயங்கள் இணைக்கப் படாமையின் காரணமாக, நீர்வாயுக்குண்டு என்ற அழிவு உலகத்தினுடைய உச்ச கட்டத்தில் வந்து நிற்கின்றது. அழிவு வாயிலிலிருந்து, மனித உலகத்தைக் காப்பாற்ற வேண்டியது ஆன்மீகத்தின் பொறுப்பு. சமயத்தின் பொறுப்பு. உலகம் அழிந்துபடாமல் கடவுளின் நெறியில் படைக்கவும், காக்கவும், காப்பாற்றவும் நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அழிவற்ற ஆற்றலை-சக்தியை நாம் ஒன்றியிருந்து வழிபாடு செய்வதன் மூலம், தமிழில் வழிபாடு செய்வதன் மூலம் நாம் பெற்று, நம்முடைய தரத்தையும், தகுதியையும் உயர்த்தி, உலகத்தை அமைதியாக வாழ்விப்போம் என்று கூறி, வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறோம்.