குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சமயம் சமுதாயம்

விக்கிமூலம் இலிருந்து


1

நமது நிலையில் சமயம் சமுதாயம்

1. சமயம் சமுதாயம்


முன்னுரை

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில் திசையனைத்தும் புகழும் திருநெல்வேலியில் தோன்றி, தாளாண்மையும் வேளாண்மையும் பெற்றுப் பெருந்தகையாளராய் விளங்கிய சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களை ஈன்று புறந்தந்த அன்னை சொர்ணாம்பாள் அறக்கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்தும் வாய்ப்பு நமக்கு ஊழின்வழி அமைந்தது. சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடப்பாடும் உண்டு. பிள்ளை அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் அமர்ந்து பணி செய்தபோது நாம் ஓடி விளையாடும் சிறு வயதினேம். அதுபோழ்து பழையசோறும் தயிரும் கூட்டி நம்மை உண்பித்த கரங்கள் பிள்ளை அவர்களின் கரங்கள். பிள்ளை அவர்கள் நம்மைத் திருக்குறள் - தேவாரம் ஒப்பிக்கச் சொல்லிக் காசுகள் வழங்குவார்கள். பிள்ளையவர்களின் கொடையால் விளக்கேற்றி வைக்கப் பெற்ற குடும்பங்கள் பல. அத்தகைய வள்ளன்மை மிக்குடைய பிள்ளை அவர்கள் நிறுவிய அறக்கட்டளையின் சார்பில் நாம் பேசுவது ஒரு சொற்பொழிவு மட்டுமன்று நன்றிக் கடப்பாடும் ஆகும்.

பிள்ளை அவர்கள் சிவநெறியிலும் செந்தமிழிலும் தோய்ந்த நெஞ்சினர். பிள்ளை அவர்களின் எழுத்தும் பேச்சும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஆக்கம் தந்தன. அத்தகு பிள்ளையவர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைச் சொற்பொழிவை, நமது மொழி, சமயம், சமூகம் ஆகியனவற்றிற்குப் பயன்தரத்தக்க வகையில் நிகழ்த்துதல் நல்லது என்று கருதுகிறோம்.

மனித வாழ்க்கை

மனிதன் விலங்கு மல்லன்; கடவுளு மல்லன்: விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை யடைந்து கடவுள் தன்மையை அடைய முயலும் ஒரு தோற்றம் ஆவான் அவன், மனித வடிவத்தில் பிறக்கின்றான். ஆனால், அவன் முயன்றே மனிதத் தன்மையை அடைந்து அவ்வழி இறைமைநிலை எய்துகின்றான். இயல்பாக மனித வாழ்க்கை குறையுடையது. குறையினின்றும் நீங்கி நிறை பெறலே வாழ்க்கை. குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுதற்கும் சமயம் இன்றியமையாதது. சமயம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம்.

சமயத்தின் தேவையும் பயனும்

குறையுடைய மனிதனை நிறையுடையவனாக்க ஓரளவு கல்வி துணைசெய்யும். ஆனால், முழுமையாகத் துணை செய்யக் கல்வியால் இயலாது. “எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை”[1] என்பார் தாயுமானார். “கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்[2] என்பார் மாணிக்கவாசகர். இதனால் கல்வி தீது என்றும் கற்றலில் பயனில்லை என்றும் பொருள் கொள்ளற்க, “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்”[3] என்றார் திருஞானசம்பந்தர். கல்வியின் பயன் அறிவு: அறிவின் ஆக்கம் அருள். கல்வியின் பயனாகிய அறிவை நாடாமல், அருளைப் பெறாமல் “கற்றுள்ளோம்” என்று தருக்குதல் கூடாது. கற்ற நூற்கருத்தினை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது அறிவு தோன்றுகிறது. அந்த அறிவு குறை நீக்கத்திற்குத் துணை செய்யும். ஆனால் அதுவும் முழுமையாகத் துணை செய்ய இயலாது. என்? அறிவு, வளரும் தன்மையது. “அறிதோறு அறியாமை”[4] என்பார் திருவள்ளுவர். ஒரு குறை நிறையைத் தர இயலாது. நிறைநலம் சான்ற ஒன்றுதான் குறை நீக்கத்திற்குத் துணை செய்ய முடியும்; நிறை நலத்தைத் தரமுடியும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக இருந்தருளும் இறைவன்தான் உயிர்களின் குறை நீக்கத்திற்கும் நிறைநலப் பேற்றுக்கும் துணை செய்ய முடியும். குறை நீங்காத வரையில் துன்பம் நீங்காது; இன்பம் சேராது. இன்ப விழைவுடைய உயிரின் குறை நீக்கத்திற்கு நிறைநலப் பேற்றுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சமயம்.

சமயம் மனிதரை நெறிப்படுத்துவது முறைப்படுத்துவது. சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை சமய வாழ்க்கையில் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும் ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன்.

வேறுபடு சமயங்கள்

இங்ஙனம் உயர்ந்த வாழ்க்கை முறையைக் காட்டும் சமயங்கள் தம்முள் மாறுபடுவது ஏன்? மாறுபாடு மட்டுமன்றி முரண்பாடுகளும் ஏன்? எல்லை கடந்த நிலையில் சமயப் பூசல்கள் வளர்ந்து, மனித உலகத்திற்குத் தீமை செய்வானேன்? நியாயமான கேள்விகள்! சமயப் பூசல்கள் சமயத்திற்காக நிகழ்ந்தன அல்ல; நிகழ்வன அல்ல. உலகியல் நலன்களைக் காத்துக் கொள்ள விரும்பும் ஆடையில்லாச் சுயநலப் பிறவிகள், மனித உருவில் நடமாடிய காட்டு விலங்குகள், சமயத்தின் பெயரால் பூசல்களை வளர்த்தன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இச்சமயப் பூசல்கள் நிகழ்த்துவோருக்கும் உண்மையான சமய நெறிக்கும் உண்மையில் தொடர்பே இல்லை; இருத்தலும் இயலாது. சமய வேறுபாடுகள் இயல்பானவை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில், வாழ்ந்த மானிட சாதியின் அனுபவத்தில், ஞானிகளின் உணர்வில் சமய நெறிகள் முகிழ்ந்தன. நிலத்தின் காரணமாகவும், காலத்தின் காரணமாகவும் உற்ற அனுபவங்களின் வாயிலாகவும் அவை தம்முள் மாறுபடுகின்றன. ஏன்? பல சமய நெறிகள் அடிப்படைக் கொள்கையில் முரண்படுவதில்லை. நடைமுறைகளில்தான் மாறுபாடு. இஃது இன்றைய உலகத்தின் பெரும்பான்மையான சமயங்களுக்குப் பொருந்தும். உண்மையான உள்ளுணர்வுடன் நோக்கினால் வேறுபாடு தெரியாது; இல்லை! வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுதான் விழுமிய பண்பு.

வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குயரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா[5]

என்றார் தாயுமானார்.

வணங்கும்துறைகள் பலபல வாக்கி”[6]

என்றார் நம்மாழ்வார்.

தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி![7]

என்றார் மாணிக்கவாசகர். ஆதலால் சமய வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. உலகம் முழுதும் உலாவிய சான்றோர்களின் மெய்யுணர்வுக் காட்சிக்கேற்ப வேறுபாடு இருத்தல் இயற்கை. ஆனால், இந்த வேறுபாடு ஒருமை நோக்கிய வேறுபாடேயாம். மனித குலத்தை வேறுபடுத்தும் வேறுபாடன்று. அதனால்தான் வள்ளற்பெருமான், சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார். மனித குலத்தை நெறிப்படுத்தத் தோன்றிய சமயநெறிகள் ஆன்மநேய ஒருமைப் பாட்டில் உயிர்க்குலத்தை நிறுத்தி நன்னெறியில் செலுத்தத் தவறி விட்டதால் சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார்; அவரவர் மேற்கொண்டொழுகும் சமய நெறியில் “ஆழங்கால்பட்டு நிற்றல்” வாழ்க்கை முறை. இது நிகழ வேண்டுமாயின் யாதொன்றின்பாலும் வெறுப்புக் கூடாது.

தமிழர் சமயம்

தமிழினம் காலத்தால் முந்தித்தோன்றிய மூத்த இனம்; இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேசும் மொழிக்கு இலக்கணம் கண்ட இனம்; உலகில் எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் தமிழினம் மக்களின் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் கண்டது. தமிழினத்தின் சிந்தனை உயர்வுக்கு, பண்பாட்டு ஆர்வத்திற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள். தமிழினத்தின் வாழ்வியற் செப்பம் காலங்கடந்தது. வரலாற்றாசிரியர்களின் வரையறைகளைக் கடந்தது. இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கை நியதியைத் தமிழினம் ஆட்சிகளின் மூலம் பெறவில்லை; அச்சுறுத்தல் மூலம் பெறவில்லை. அந்தப் பண்பாடு இயல்பான படிமுறை வளர்ச்சியாகும். பழந்தமிழ் இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் வாழ்க்கையில் தோன்றியவை வாழ்க்கை அனுபவத்தில் முகிழ்த்தவை. அவை சுற்றிச்சுற்றி வந்து வாழ்க்கையையே நெறிமுறைப்படுத்துகின்றன. நெறி நின்றோர் புகழப்படுகின்றனர். வாழ்வியலின் வாய்மைகள் இலக்கியச் சுவையுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. ஆயினும், வாழ்வியலை விஞ்சிய சுவையில்லை. தமிழர் அறம் தழிஇய சமயநெறி நிற்றலை இயல்பாகவே மேற்கொண்டனர். அது யாரிடமிருந்தும் கற்றுக்கொண்டதில்லை. ஏன் ? ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவனுண்டு என்று நெறிப்படுத்தியவர்களே தமிழர்கள்தாம்.

சங்க காலத்தில் தமிழினத்தின் வாழ்வில் சமயம் ஒரு பகுதியாக இருந்ததில்லை, சமயம் வாழ்க்கை முழுவதும் படர்ந்து கால் கொண்டிருந்தது. அதனால், பக்தி இயக்கங்கள் இல்லை; பக்தியில் தோன்றிய இலக்கியங்கள் மிகுதியாக இல்லை. சிலர் சங்ககாலத்தில் சமயம் முதன்மைப் படுத்தப்பட்டதாக இல்லை என்பர்; அது தவறு. பக்தி இலக்கியக் காலத்தைவிடச் சங்க இலக்கியக் காலத்தில்தான் உண்மையான சமயமிருந்தது என்று சொல்லவேண்டும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா [8]

ஆருயிர் முறைவழிப் படுஉம்[9]

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்[10]

என்ற சொற்றொடர்கள் சங்க காலத்துச் சமய உணர்வை வெளிப்படுத்துவன. தமிழர் சமயம் வாழ்க்கையில் முகிழ்த்தது. ஆதலால் அதில் கற்பனை இல்லை; அதிசயங்கள் இல்லை; அற்புதங்கள் இல்லை. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியதாக அமைந்திருக்கும் பெருமை நமது சமயத்திற்கு உண்டு.

தமிழர் சமயத்தைச் சிறப்பித்தோர்

தமிழகத்தில் நிலவும் அறுவகைச் சமயங்களின் வளர்ச்சியிலும் தமிழர்க்குப் பங்குண்டு. தமிழர்கள் முறையே சிவபெருமானை, திருமாலை, முருகனை வழிபடும் பேற்றினைப் பெற்றவர்கள். ஆயினும், தத்துவ அடிப்படையில் அவர்கள் சமயம் “சித்தாந்தம்” என்று அழைக்கப்பெறும். டாக்டர் ஜி.யூ போப், “தமிழரின் அறிவில் முகிழ்த்த ஒப்பற்ற சமயநெறி சித்தாந்தம்” என்று பாராட்டுவார். அதுபோலவே கெளடி என்னும் பாதிரித் துரைமகனாரும் “தமிழரின் பேரறிவில் தோன்றிய நெறியே சித்தாந்தச் செந்நெறி” என்பார்.

வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்

என்று வடநூல் மரபு பாராட்டும்.

தமிழர் சமயத்தின் கொள்கைச் சிறப்புகள்

தமிழர் சமய நெறியாகிய சித்தாந்தச் சமயம் அறிவாராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்கத்தக்கது. முற்றாக அது நம்பிக்கையின் வழிபட்டதன்று. ‘சித்தாந்தம்’ என்ற சொல்லுக்கே பொருள் ‘முடிந்த முடிபு’ என்பது. அறிவாராய்ச்சியில் வினாக்களைக் கேட்டுக்கேட்டு மெய்யுணர்வில் வளர்ந்துவளர்ந்து செம்பொருள் கண்டார் உணர்த்திய செந்நெறி-அது. அப்பாடிகள்,

............. ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன.....[11]

என்பார். தமிழர் சமயம் அறிவார்ந்த உண்மைகளுக்கு மாறுபட்டதன்று. ஆனாலும் அறிவு எல்லையில் மட்டும் நின்று ஆராயத்தக்கதுமன்று. ஆழ்ந்த உண்மைகள் அனுபவத்திற்கே யுரியன. சித்தாந்தச் சமயம் ஞான நெறியாகும்.

சித்தாந்தச் சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கன. சித்தாந்தச் சமயம் உணர்த்தும் உண்மையில் அல்லது நெறிகளில் யாதொன்றும் அறியத்தக்கது அன்று; அல்லது உணரத்தக்கது அன்று என்று கூறி ஒதுக்க இயலாது. சித்தாந்தச் சமயம் தோன்றிய காலத்தில் உண்மையை உணர்த்தும் நூல்கள் பொதுவாக அமைந்திருந்தன. பின், சித்தாந்தச் சமய அனுபவத்தின் விளைவுகளாகவே திருமுறைகள் தோன்றின. அதன்பின், தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் உலாவத் தொடங்கிய பொழுது சித்தாந்தச் செந்நெறியின் உண்மைகளை அரண்செய்து பாதுகாக்கும் வகையில் மெய்கண்ட நூல்கள் தோன்றின. இச் சமயத்திற்கு இருக்கும் சிறப்பான கொள்கை முப்பொருள் உண்மை. அதாவது இறை, உயிர், தளை என்ற மூன்று பொருள்கள். அவை என்றும் உள்ளவை எனபது ஒரு சிறந்த கொள்கை, உலகத்தில் கடவுளை ஒத்துக்கொள்ளும் எல்லாச் சமயங்களும் கடவுள் படைக்கப்படாத பொருள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன; ஆனால், கடவுளைப் “படைப்பாளி"யாக்குகின்றன.

நமது சமயம், கடவுளைப் போலவே உயிர்களும் தோன்றுவனவுமல்ல அழிவனவுமல்ல என்று கூறும். உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்குப் பொறுப்பு யார்? என்பது சிக்கலான கேள்வி. மேலும் குறையிலிருந்துதான் நிறைதோன்றலாம். இது படிமுறை வளர்ச்சி. ஆனால், நிறையிலிருந்து குறை தோன்றும் என்பதும் அல்லது நிறையின் படைப்பு குறையுடையதா யிருக்கும் என்பதும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராத ஒன்று. “உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை; அவை என்றும் உள்ளவை” என்பது அறிவாராய்ச்சிக்கு இசைந்த கருத்து. பிறப்புக்குப் பொருள் தரும் கருத்து. அதுபோலவே “இறைவனுடைய பிரதிபிம்பமே உயிர்கள்” என்ற கொள்கையும் நம்பிகைக்குரியதன்று. அந்தக் கொள்கையிலும் விடையளிக்க முடியாத வினாக்கள் அடுக்கடுக்காகத் தோன்றுகின்றன. ஆற்றுத் தண்ணீருக்கும் குளத்துத் தண்ணீருக்கும் சுவையில் வேறுபாடு ஏது? அண்ட வெளிக் காற்றுக்கும் குடத்துள் காற்றுக்கும் குணத்தில் வேறுபாடு ஏது? இக்கொள்கையும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராததே, உயிர்கள் என்றும் உள்ளவை; அவை அறியும் இயல்பின; அறிவு மயமாக மாறும் தகுதியுடையன. ஆயினும் இயற்கையாக உயிர்களின் அறியும் முயற்சியைத் தடுத்து அறியாமைப் படுத்தும் ஆணவத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. “உயிர்கள் அறியாமையினின்றும் விலகி அறிவைப்பெற, ஞானத்தைப்பெறத் துணை செய்யும் ஆசிரியன் கடவுள்” என்பது சித்தாந்தச் செந்நெறியின் முழுநிறைக் கொள்கை. இக்கொள்கை அனேகமாக மாமுனிவர் மார்க்ஸ் போன்றவர் விவாதங்களோடு ஒத்து நிற்கும் தகுதியுடையது. பழமைக்கும் புதுமைக்கும் ஏற்ற நெறி.

தமிழர் தம்முடைய மெய்யுணர்வை இயற்கையோடிசைந்த வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டனர். நம்முடைய வாழ்வியல் முறை, இயற்கைக்கு முரண்படுவதுமன்று; இயற்கைக்கு அடிமையாதலும் அன்று. இஃது ஒரு தெளிவான வாழ்வியல் முறை. மேலும், நமது சமய சமுதாய வாழ்வியல் ஊற்றுப் பெருக்கைப்போல் உள்ளுணர்வில் தேக்கமடையாமல் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பெற்று வந்திருக்கிறது. காலத்திற்கிசைந்த வளர்ச்சியில்லாத சமுதாய அமைப்பிலேயே தேக்கம் ஏற்படும். அப்பொழுதுதான் பழைமை என்ற ஒன்று உருவாகும். பின் தேக்கத்தின் புழுக்கத்தால் சமுதாயம் துன்புறும்பொழுது புதுமைவேட்கை தோன்றும், ஆனால் தமிழ்ச் சமுதாய அமைப்பில் தேக்கம் ஏற்படச் சிந்தனையாளர்கள் அனுமதித்ததில்லை. நம்முடைய சமய நெறியிலும் சமுதாய அமைப்பிலும் பழங்காலத்திலிருந்து உயிர்ப்புள்ள சிந்தனை செயற்பட்டு வந்திருக்கிறது. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே[12]

என்றார். பழமை-புதுமைப் பிணக்கு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்ததில்லை. வாழ்க்கை வேறு, சமயம் வேறு என்ற வேறுபட்ட நிலையும் இருந்ததில்லை. கலை, வாழ்க்கை இவ்விரண்டுக்குமிடையே இன்றுள்ள முரண்பாடுகளும் அன்று இருந்ததில்லை. முரண்பாடுகள் அனுபவமின்மையின் விளைவுகளே; பழங்காலத் தமிழர் வாழ்வியல் அறிவாராய்ந்த அனுபவத்தின் வழிப்பட்டதாயிருந்ததால் அன்று முரண்பாடுகள் இருந்ததில்லை. அதுமட்டுமன்று, வாழ்க்கை வாழ்வதற்கே மரணத்திற்கு அன்று என்பது பழந்தமிழர் கொள்கை.

வாழ்வாங்கு வாழ்க

என்று திருக்குறள் வழி நடத்தும்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்[13]

என்று அப்பரடிகளின் அருள்நூல் ஆற்றுப்படுத்தும்.

இயற்கையோடிசைந்த வாழ்வியல் நெறி

தமிழர் சமயம் வாழ்க்கையைப் புறக்கணிப்பதன்று. ஆனாலும் வாழ்க்கையில் ஆழ்ந்து கிடப்பதுமன்று. தமிழர் சமய வாழ்க்கை இன்பியல் வாழ்க்கையே. ‘வாழ்க்கை துன்பமானது’ என்ற கருத்து, பழங்காலத்தில் இருந்ததில்லை. ஒரோவழி உலகில் துன்பமாக இருந்தாலும் அதை இன்பமாக மாற்றவேண்டுமென்பதே பழந்தமிழர் கோட்பாடு.

ஓரில் நெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே,[14]

என்ற பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஓர்ந்துணரத்தக்கது.

வாழ்க்கையை இன்பமயப்படுத்தும் பொருள்களைத் திருவருளாகவே நினைத்து பாராட்டுதல் நமது நூன்மரபு. “வாசமலரெலாம் ஆனாய் நீயே”[15] என்று இயற்கையையும், “பண்ணிடைத் தமிழொப்பாய்”[16] என்று கலையையும், “பழத்தினிற் சுவையொப்பாய்”[17] என்று சுவையையும், “ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ”[18] என்று மனை வாழ்க்கையையும் பாராட்டுவது அறிந்து ஓர்க.

சைவ-சமணப் போராட்டம்

பழங்காலத்தில், தமிழகச் சமய நெறியாளர்கள் பிறநெறியாளர்களோடு காழ்ப்புக்கொண்டு மோதியதில்லை. ஆயினும், பண்ணோடு தமிழும், இயற்கையோடிசைந்த வாழ்க்கையும், அகனைந்திணை ஒழுக்கமும் மாறுபடுமோ என்ற அச்சம் வந்தபொழுது இவற்றுக்கு எதிராகத் தமிழ் வழக்கிற்கு மாறாகப் புகுந்த அயல்வழக்கை எதிர்த்துத் தமிழ் வழக்கை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று. இந்தப் பணி சமயக்களத்திற் செய்யப்பெற்றாலும் அது முற்றாகச் சமயப் பணிமட்டுமன்று. அஃதொரு சிறந்த சமுதாயப் பணி, வழிவழி வந்த தமிழ் நாகரிகத்தை அாண்செய்து காப்பாற்றிய அருந்திறற் பணி,

இடையிற்புகுந்த தீண்டாமை

சமய வழிப்பட்ட தமிழர் சமுதாயத்தில் பிறப்பினால் அமைந்த சாதி வேறுபாடுகள் இருந்ததில்லை. தொழிலினால் அமைந்த வேறுபாடுகள் இருந்தன. ஆயினும் தமிழகத்தில் அயல் வழக்கு நுழைவதற்கு முன் தீண்டாமை இருந்ததில்லை. தீண்டாமை தமிழ்க்குடியில் இருந்த தீமையன்று இடையில் வந்தது. தீண்டாமை தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவிய காலந்தொட்டு அதனை அகற்ற அவ்வப்போது போராட்டம் நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆயினும் நலன்களின் அடிப்படையில் தீண்டாமை முற்றாக அகலவில்லை; முன்பு, உயர் சாதி மனப்பான்மையுடையவர்கள் மட்டுமே தீண்டாமை விலக்குக்கு எதிராக இருந்தார்கள். அண்மைக் காலத்தில் நல்லூழின்மையின் காராணமாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அரசியற் கட்சியினரும் தீண்டாமை நிலையாக இருக்கத்தக்க வகையில் செயற்பட்டு வருகின்றனர். தீண்டாமை நமது சமயத்திற்கு ஒரு கறை, நமது சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு. தீண்டாமையை ஆசாரம் காட்டி நிலைநிறுத்த விரும்புவாரை அப்பரடிகள்,

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே[19]

என்ற பாடலால் இடித்துக் கூறுவார்.

சேக்கிழார், நந்தனார் வரலாற்றில் நந்தனாரைச் சிந்தை குளிரச் செவி குளிர ‘ஐயர்’ என்று பல தடவை போற்றுவது எண்ணத்தக்கது. அதுபோலவே வைணவத்தில் ‘உடையவர்’ என்றும் ‘எம்பிரானார்’ என்றும் போற்றப் பெறுபவராகிய இராமானுசர், இறைவனுடைய திருநாமத்தைக் குலம் கோத்திரம் நோக்காது எல்லோருக்கும் எடுத்துச் சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும், திருநீலநக்கர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும் தீண்டாமை விலக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். நிகழ்ந்தது என்ன? இன்னமும் தீண்டாமை முற்றாக விலகவில்லை. தீண்டாமை விலக்குப் பணியைப் பாராளுமன்றத்தின் ஆணைகள் செய்த அளவுக்குக்கூட நமது வழிபடு கடவுளின் ஆணைகள் சமய உலகத்தில் செயற்படுத்தவில்லை. தீண்டாமை விலக்குப்பணியில் புகைவண்டி கண்ட அளவுக்குக்கூட வெற்றியை நமது சமய நிறுவனங்கள் அடையவில்லை; அடைய முயலவுமில்லை இது வேதனைக்குரிய செய்தி. தீண்டாமையை நமது சமயத்திலிருந்து அறவே அகற்றிக் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத் தவறி விடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத் தவறியவர்களாவோம். அவ்வழி நாம் அன்பையும் அருளையும் இழப்பதோடன்றி உலகியலையும் இழக்கின்றோம். இந்த இழப்புகளுக்கு ஆளாக்கப்படும் அடுத்த தலைமுறை நம்மைப் பழிதூற்றும். ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பில் அகத்திலும் புறத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தீண்டாமையை அறவே அகற்றுவதையே தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை விலக்குப் பணிகளை இன்றைய மேட்டுக் குடியினரே எடுத்துக்கொள்ள வேண்டும். தீண்டாமை அரிசனங்களிடத்தில் இல்லை. அந்த மனப்பான்மை உயர்சாதியினரிடத்தில்தான் உள்ளது. அவர்கள் மனம்மாறி அரிசனச்சேரிகளுக்குச் சென்று தொண்டு புரிவதோடு நில்லாது அவர்களைத் தமது இல்லங்களுக்கு அழைத்து உடனிருந்து உண்டு கலந்து பேசிப் பழகுவதின் மூலம்தான் தீண்டாமை அகலும். இங்ஙனம் அரிசனச் சகோதரர்களும் உயர்சாதியினரொடு ஒன்றாகக் கலத்தற்குத் தங்களை வளர்த்துப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒன்றே குலம்

நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தில் முன்னர்க் குறிப்பிட்டபடி பழங்காலத்தில் தொழில்வகைப்பட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் அவைகளுக்கிடையில் வேற்றுமை யிருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் பழங்காலத்தில் சாதிகள் இருந்ததில்லை. குல அமைப்பு முறைகளே இருந்துள்ளன. அவை வழிவழி அமைந்த குணச்சிறப்பு வழி அமைந்தவை. திருவள்ளுவர் ‘சாதி’ என்ற சொல்லை வழங்கினாரில்லை. ஆனால், குலத்தின் பெருமையைப் பலபடப் பேசுகின்றார். இன்று நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஆட்சி செய்வது சாதிமுறையேயாம். மேலும், சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஊடுருவி அழித்து வருவது சாதி வேற்றுமையும் அவ்வழிப்பட்ட பகைமை உணர்ச்சியுமேயாம். ஒருவர் தம்மை இந்துவாகவோ சைவாாகவோ வைணவராகவோ இன்று எண்ணிப் பழகவில்லை. சாதி வழியில்தான் அவர் சிந்தனை வளர்கிறது; பற்று வளர்கிறது; பாசம் வளர்கிறது. இங்ஙனம் சாதி வேற்றுமை பாராட்டுகிறவர்களைக் கடிந்து கூறாத அறநூல் எதுவுமில்லை.

“சாதி குலம்பிறப்பெனும் சுழி”[20] என்று திருவாசகம் கூறும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”[21] என்று திருமந்திரம் கூறும். இங்குக் குலம் என்பது வழிபடும் தெய்வத்தை மையமாகக் கொண்டமைவது. எல்லோரும் அந்த உயர்ந்த குலத்தில் பிறவாமற் போனாலும் எல்லோரும் அந்தக் குலத்திற்குரிய வராக்கப்படவேண்டும் என்பதே உண்மை. அத்தகைய உயர்ந்த பணிகளைச் செய்யத்தானே சமய நிறுவனங்கள் தோன்றின? சாதி வேற்றுமையை அகற்றி நமது சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம். ஆதலால்தான் இறைவன் தானே முன்னின்று சுந்தரர் வரலாற்றில் கலப்புத் திருமணங்களைச் செய்து வைக்கிறான். சுந்தரர் வரலாறு திட்டமிட்ட வரலாறு. அந்த வரலாறு கயிலையில் தோன்றி மண்ணில் நிகழ்கிறது. ஆதலால் சுந்தரர் வரலாற்றில் நிகழ்வன அனைத்தும் தற்செயலாக அமைந்தனவல்ல; சுந்தரர் மட்டும் விரும்பி மேற்கொண்டதும் அல்ல. நமையாளும் சிவபெருமான் விரும்பித் திட்டமிட்டு நிகழ்த்திய அருள் விளையாட்டே. ஆலால சுந்தரரை ஆதிசைவர் குலத்தில் பிறக்கவைத்து, ஆதிசைவரல்லாத குலத்தில் வளரவைத்து, கமலினி, அநிந்திதை எனும் மங்கையரை முறையே கணிகையர், வேளாளர் குலங்களில் பிறக்கவைத்துத் திருமணங்களை நிகழ்த்தி வைத்த திருவுள்ளக் குறிப்புத்தான் என்னே! அது மட்டுமன்று, பிறப்பின் வழிச் செய்யப் பெற்ற திருமணத்தை ஏற்பாடு செய்யும்வரை தடுத்து நிறுத்தாதிருந்து தக்க நேரத்தில் அத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதேன்? சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற உண்மையினை உலகுக்கு உணர்த்தத்தானே! அப்பூதியடிகள்-அப்பரடிகள் உறவு சாதி வேற்றுமையை அகற்றும் திருப்பணிக்கோர் எடுத்துக்காட்டு. ஆனால், யார் எதைச் செய்தாலென்ன? நம்மிடையேயுள்ள சாதி வேற்றுமை அகலாது போலத் தெரிகிறது. நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தில் சாதி வேற்றுமை அகன்றால்தான் அதற்கு எதிர்காலம் உண்டு. அப்பொழுதுதான் இந்து சமுதாயம் கடலெனச் சூழ்ந்து வாழும்; வளரும்.

செல்வத்துப்பயன்

நம் சமயம், செல்வமுடைமையை, அதன் பயனைக் கணித்து நோக்கிய பாங்கு மிக உயர்ந்த பாங்கு. அந்த வகையில் உலகத்தின் எந்தக் கருத்துக்கும் நம் சமயக்கருத்து தாழ்ந்ததன்று. மார்க்சின் சிந்தனைக்கும் நம் சமயச் சிந்தனைக்கும் கூட அடிப்படையில் முரண் இல்லை. ஆனால் கோட்பாடுகளில் மாறுபாடு உண்டு.

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே[22]

என்று புறநானூறு காட்டிய அறநெறி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. செல்வத்தைப் பெற்றவரே அச்செல்வத்தின் பயனைத் துய்த்தல் என்பது தமிழ் வழக்கன்று செல்வம், மற்றவர் துய்ப்பதற்கு வழங்கப்படவேண்டும் என்பது மரபு. அதுவே சைவத்தின் சீலம்; வைணவத்தின் வாழ்வியல் முறை. அதனாலன்றோ இறைவனுக்குரிய திருப்பெயர்களில் 'நீலகண்டம்’ என்ற திருப்பெயர் புகழுடையதாயிற்று. அமிழ்தத்தை மற்றவர் உண்ணத் தந்து, யாரும் உண்ண முடியாத நஞ்சினை உண்ட கருணையின் சீலமல்லவா நீலகண்டம்! ஒப்புரவு நெறியும் அதுவே. அதனலன்றோ இளங்கோவடிகள்,

விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்[23]

என்று குறிப்பிடுகின்றார். உண்பித்து உண்பவனே வாழ்பவன், இங்ஙனம் உழைப்பினாலாய பொருளை மற்றவர்கள் ஆரத்துய்க்குமாறு வழங்குவது தவமேயனையது என்பதைப் பெரியபுராணம் உணர்த்துகிறது. இத்தகு தவத்தினைச் செய்வோர் நெஞ்சத்தில் இறைவன் எழுந்தருள்வான். இறைவன் ஓங்கி உயர்த்திப் பிடித்துள்ள கொடி ஆனேற்றுக் கொடி அவன் உவந்து எழுந்தருளி வருவதும் எருதேயாம். ஏன்? இந்த உலகில் கடுமையாக உழைக்கும் உயிர்க்குலத்தில் எருதே சிறப்புடையது. எருதுகளின் அயராத உழைப்பில் செந்நெல் விளைகிறது; செங்கரும்பு விளைகிறது. ஆனால் விளையும் சுவைமிக்க உணவுப் பொருள்களை எருதுகள் மனித குலத்திற்குக் கொடுத்துவிடுகின்றன. மாறாக அவை பெற்றுத் தின்பது சுவையற்ற வைக்கோலேயாம். இங்ஙனம், முறையாக உழைத்து, அந்த உழைப்பில் விளைந்த பயனை மற்றவர்க்குத் துய்க்க வழங்கும் பொருளே தவம். அத்தகு தவமுடையார் நெஞ்சிலே இறைவன் என்றும் எழுந்தருளியிருப்பான் என்பது இடபவாகனத்தின் தத்துவம். இந்த உயர்ந்த தத்துவம் கொள்கை, சமய வாழ்க்கையில் இன்று அமையவில்லை. மாறாக, வெள்ளியில், தங்கத்தில் இடப வாகனங்கள் வந்துவிட்டன. செல்வத்தை வழங்கி வாழும் வாழ்வியலைச் சார்ந்த பொருளாதாரக் கொள்கையில் ‘தர்மகர்த்தா’ கொள்கை என்பது ஒன்று. அண்ணல் காந்தியடிகளுக்கு இது பிடித்தமான கொள்கை, இந்தத் தர்மகர்த்தா கொள்கை பிறநாடுகளில் கருக்கொண்டது பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலேயாம். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகள் இந்தத் தர்மகர்த்தா கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்த அன்பு வழியிலும் அச்சுறுத்தியும் நம்மை வழி நடத்துகின்றார். அப்பரடிகள் கொள்கைப்படி செல்வத்தை உடைமையாகப் பெற்றவனுக்குத் தான் மட்டுமே துய்க்கும் உரிமை இல்லை; ஏரிகளுக்குத் தண்ணீரைத் துய்க்கும் உரிமை இல்லை; தன்னிடத்தில் உள்ள தண்ணீரைக் காத்து கழனிகளுக்கு வழங்கும் உரிமையே உண்டு. அதனால் இறைவன் “ஏரி நிறைந்தனைய செல்வ”னாகக் காட்சியளிக்கின்றான். செல்வத்தை ஒருவனிடத்தில் இறைவன் இட்டு வைத்திருப்பது இல்லாதவர்களுக்குக் கொடுக்கத்தான். தமிழ் வழக்கில் செல்வத்திற்கு “மருந்து” என்று ஒரு பெயருண்டு. செல்வம் வறுமைப் பிணிக்கு மருந்து. மருந்தை வைத்திருப்பவரே மருந்தை உண்பதில்லை; உண்ணவும் கூடாது; நோயுடையாரே மருந்தை உண்ண வேண்டும்.

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே[24]

என்ற பாடலால் அப்பரடிகள் உணர்த்தும் அழகான தத்துவமே, பொருளியல் நெறியே, நமது ஆன்றோர் நெறி செல்வத்தைத் திரட்ட எண்ணும் நோக்கத்திற்கு அடிப்படை தாம் வாழ்வதற்காக மட்டுமல்ல; வழங்கி வாழ்விப்பதற்காகவே!

இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சும் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்....[25]

என்று இந்த அருட்டன்மையை அகநானூறு சிறப்பிக்கும். ஆதலால் நம்முடைய சமுதாயத்தில் ஏழை எளியரென்ற செல்வக் குறியீட்டுமுறை பண்டு இருந்ததில்லை. நமது சமய வழிப்பட்ட சமுதாயப் பணிகள் அறநெறியாகவே கருதப்பெற்றன. சிலர் இந்த உயர்ந்த கொள்கைக்கு மாறாக ஏழ்மையென்பது தீவினையின்பாற் பட்டது; அதை அவர் துய்த்துத்தான் ஆகவேண்டுமென்பர். அது தத்துவ இயலுக்கு ஒவ்வாத நெறிமுறைக்கு மாறுபட்ட சிந்தனை. ஒருவர் தீவினையால் அல்லலுறுவதைக் கண்டும் அதை அப்போதே மாற்ற முனையும் நல்லெண்ணம் பெறாததும் ஒருவகையில் தீயூழே. உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டும் அதனை மாற்றாது செல்வத்தைத் தானே துய்த்து இன்பமுடன் வாழ்தல் தீவினைக்கும் ஆளாக்கும் என்பதை மறந்துவிடுதல் கூடாது. ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு ஒப்புரவை உயிர்நாடியாகக் கொண்டது: ஒப்புரவை ஒழுக்க நெறியாகக் கொண்டது. ஒப்புரவே உயர் தவமுமாகும். அந்த ஒப்புரவு நெறி-உயர் வேளாண்மை நெறி நமது வாழ்க்கையில் படரவேண்டும்; அவ்வழி நமது சமுதாயம் வளரவேண்டும்.

வாழ்க்கையே சமயம்

மீனுக்குத் தண்ணீர் இன்றியமையாதது. மீனுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவு ஒரோவழி அமைந்ததன்று: பிரிக்க முடியாதது; நிலையானது. அதுபோலத்தான் மனிதனுக்குச் சமயமும் அமையவேண்டும். இன்று நமது வாழ்க்கையில் சமயம் ஒரு பகுதியாக அமைந்துவிட்டது. சமய வாழ்க்கையைப் பெறுதற்குரியதாகிய வழிபாடு, பிரார்த்தனை முறை போன்றவைகள் கடவுளுக்கு மனிதன் வழங்கும் பயன் நோக்கிய கைமாறு (பிரதிப் பிரயோசனம்) போல வளர்ந்து விட்டது. முன்னர்க் குறிப்பிட்டதுபோலச் சமயம் ஒரு தத்துவம் மட்டுமன்று கொள்கை மட்டுமன்று: அதுவே ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் சமயம் தழுவிக் கலக்கவேண்டும். அன்றே அறியாமை அகலும்; வேற்றுமை விலகும்; அன்பியல் தோன்றும்; அருள் மணம் கமழும். வாழ்க்கை முழுவதும் சமய உணர்வு மயமாக்கிக் கொள்ளாமல் தன்னல உணர்வுடன் வழி பாட்டினை மட்டும் செய்யும் மனிதரைப் “பொக்க மிக்கவர்” என்று அப்பரடிகள் வெறுத்துப் பேசுகிறார். “பொக்க மிக்கவர்” என்பதற்கு உள்ளீடு இல்லாத மனிதர் என்பது பொருள்.

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும் நீருங் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே[26]

என்பது அப்பரடிகள் வாக்கு.

துய்ப்பில் துறவே தூய்மை நெறி

தமிழர் சமய வழிப்பட்ட சமுதாய வாழ்க்கையில், ‘இல்லறம்’, ‘துறவறம்’ என்ற பெரிய வேறுபாடு இருந்ததில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர். இவற்றில் எது உயர்ந்தது; எது தாழ்ந்தது என்ற விவாதத்திற்கிடமில்லை. அதுமட்டுமன்று. வலிந்து மேற்கொள்ளும் துறவைத் தமிழர் நெறி ஏற்றுக் கொண்டதில்லை. நமது சமயம் துறவின் மூலம்தான் திருவருளைப் பெறமுடியும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் துய்ப்பு நெறியில் தூய்மையை வற்புறுத்துகிறது. பச்சைத் தன்னலத்தோடு எதனை எவ்வழித் துய்த்தாலும் பாவமே அது தூய்மையில்லாத் துய்ப்பு. அங்ஙனம் துய்ப்பார் அமரரே யானாலும் “தக்கன் வேள்வித் தகர்தின்று” என்பது போல ஏசப்படுவர். நால்வரில் சுந்தரர் துய்ப்பு நெறியில் நின்றவர். ஆனால், அவர் வாழ்ந்து காட்டிய நெறி மிகச் சிறந்த அருள்நெறி. சுந்தரர் தாம் சங்கிலியாரோடு கூடி வாழ்ந்தபோதும் இறைவன் திருவடியை மறக்காமலிருந்ததாகப் பாடுகின்றார்:

கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி வால்திக முந்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே[27]

என்பது சுந்தரர் திருவாக்கு சேக்கிழார் சுந்தரர் வாழ்க்கையினைப் போற்றிப் பாராட்டும்வகை சிந்திக்கத்தக்கது மட்டுமன்று; வையகத்தோர் வாழ்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முறையும் ஆகும்.

தென்னாவ லுரர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்[28]

என்பது சேக்கிழார் வாக்கு.

பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் முந்தீபற[29]

என்று திருவுந்தியார் கூறும்.

ஆதலால் வாழ்க்கை மாயம் என்பதும் வாழ்க்கை துன்பம் என்பதும் நம் சமயக் கொள்கையன்று. வாழ்க்கையே தவமாக்கி இன்ப அன்பில் கலத்தலே நமது சமயநெறி காட்டும் வாழ்க்கைமுறை.

கடவுள் உண்டா? இல்லையா?

நம் சமயநெறி “கடவுள் உண்டு” என்ற கொள்கையில் திண்மையுடையது. நம் சமயக் கொள்கைக்கு நல்ல சாத்திர வடிவம் கொடுத்த மெய்கண்டார் கடவுளுண்மையைத் தெளிவாக விளக்குகின்றார். பொதுவாகக் கடவுள் உண்டா? இல்லையா? என்ற விவாதம் விரும்பத்தக்கதன்று. “கடவுள் உண்டு” என்ற நம்பிக்கையில் கால் கொண்ட கொள்கையினர் வழிபாட்டு அனுபவத்தில் ஈடுபடுதல் வேண்டும். “கடவுள் இல்லை” யென்னும் கொள்கையினர் அவர்கள் நம்புகின்ற அறிவில் வளர்ந்து, புதிய அனுபவங்களைப் படைக்க வேண்டும். அதை விட்டு விட்டுக் ‘கடவுள் இல்லை’ என்று சொல்வதினால் மட்டும் ஆகக்கூடிய தொன்றுமில்லை. கடவுள் உண்மையை அறிந்து அனுபவிப்பதற்கு வளர்ந்த அறிவும் அனுபவமும் தேவை. மனித குலத்தின் அறிவோ இன்னமும் பிள்ளைமைப் பருவத்திலேயே யிருக்கிறது. அது முழுமை அடைந்து விடவில்லை. வளர்ந்துள்ள இந்த அறிவு இன்னும் பொருள்களை ஆராய்ந்தே முடிந்தபாடில்லை. இறைவன் பொருளுக்குப் பொருளாக இருப்பவன். அணுக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலேயே ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள்! இறைவன் அணுவில் அணுவாக இருக்கிறான் என்பது நமது ஆன்றோர் கண்ட உண்மை.

சென்றுசென் றணுவாய்த் தேய்ந்ததேய்த் தொன்றாந்
திருப்பெருந் துறையுறை சிவனே[30]

என்றும்,

அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க.[31]

என்றும்,

நூலுனர் வுணரா துண்ணியோன் காண்க[32]

என்றும் திருவாசகம் பேசும். எனவே அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது; அது வளரட்டும். அப்படி வளர்ந்து வரும் அறிவை நமது சமயநெறி என்றும் மறப்பதில்லை. இனிமேலும் மறுக்காது. மிகஉயர்ந்த சார்பற்ற அறிவு, நோக்கமற்ற அன்பில் ஒன்றாகிக் கலக்கும்பொழுதே கடவுளுண்மை காட்சிக்கு வரும் அனுபவத்திற்கு வரும். அது நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கிற இலட்சியம்; சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிற கல்வியறிவும், இயற்கையின் நுட்பங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிற விஞ்ஞான அறிவும் அறிவின் தொடக்க நிலை வாயில்கள். இந்த எல்லையிலேயே நின்று கொண்டு இதேதான் அறிவு என்று கடவுளை மறுத்தலிற் பயனில்லை. ஆதலால் கடவுள் உண்டு என்று நம்பி வழிபாடு செய்வது முறையான அறிவு வளர்ச்சிக்கு, நிறைவான அறிவு என்று பாராட்டப்படுகின்ற ஞானத்தைப் பெறுவதற்குத் துணை செய்யும். உயிர், குறைவற்ற-நிறைவான-நன்மை வழிப்பட்ட அன்பின் மயமாதல் முழுமையான அறிவுநிலை; அதற்கே “ஞானநிலை” என்று பெயர். இந்த ஞானம் வந்தாலன்றி உயிர்கள் குறை நீங்கப் பெறா; இன்ப அன்பு எய்த இயலா. 'ஞானத்தினாலன்றி வீடில்லை' என்பது அனுபவ வாக்கு.

எண்ணி எண்ணி அழுவதே வழிபாடு

கடவுள் வழிபாடு என்பது ஒரு பயிற்சி முறை. உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று. கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறைபெற முயற்சி செய்தல்; தீமை செய்யாது விலகி நன்மை செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து அன்பு செய்தல் ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள். இந்தச் சிலங்களை எளிதில் பெற இயலாது. இவற்றைப் பெறுதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள். பிரார்த்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று; அவனுக்குக் கொடுக்கக்கூடிய கைம்மாறுமன்று. நமது நாடு மழையின்மையால் வறட்சியடைந்து வாடுவதைக் கண்டு மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி நாம் கேட்டுக் கொண்டோம். தமிழகத்தின் திருக்கோயில்களில் பிரார்த்தனைகள் நிகழ்ந்தன. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பேரவை உறுப்பினர்கள் ஊனுருக, உளமுருகப் பிரார்த்தனை செய்தனர். மழையும் பெய்தது. ஆனால், பகுத்தறிவாளர் ஒருவர், “பிரார்த்தனை செய்தால்தான் இறைவன் மழை பெய்விப்பான் என்றால், அவன் அவ்வளவு தன்னல வாதியா?” என்ற வினாவை எழுப்பியிருந்தார். வினா எழுப்புவதற்கும், வினா எழுப்பப்படும் துறையில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும். கடல்கள், நீர் நிலைகள் முதலியவற்றில் உள்ள தண்ணீர் கதிரவன் வெப்பத்தால் நீராவியாக மாறி மேகமாக உருவாகி வானவீதியில் உலாவந்து குளிர்ந்த காற்று மோதுவதால் நீர்த்துளிகளாக மாறி மழை பொழிகிறது. இதுவே மழைப் பொழிவைப்பற்றி அறிவியல் தரும் பாடம். மழைப் பொழிவிற்குரிய காரணங்களுள் கடைசித் தேவையாகிய குளிர்ந்த காற்றைத் தவிர மற்றவையெல்லாம் இருக்கின்றன; நிகழ்கின்றன. ஆனால் குளிர்ந்த காற்றில்லை. காற்று குளிர்ந்த காற்றாக மாறுவதற்கு மக்கள் மன வளம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அன்பிலும் அறத்திலும் தோய்ந்த நெஞ்சுடையவர்களாக இருக்கவேண்டும். அறவுணர்வு இல்லாதார் வையகத்தில் மிகும்பொழுது வளம்மிக்க மலையும்கூட வறுமையடையும் என்று கற்றோர் போற்றும் கலித்தொகை பேசுகிறது.[33]

உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை யறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே பிரார்த்தனை. “எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு” என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது. மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும் கடவுளின் நிறை நிலையினையும் ஒப்புநோக்கிப் பாடுகின்றார். அவ்வழி நம்மை ஒப்புநோக்கிச் சிந்தனை செய்யத் தாண்டுகின்றார். குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார்:

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்துயான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்[34]

யானே பொய் என்நெஞ்சம் பொய், என் அன்பும் பெ
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே?[35]

என்ற பாடலில் பொய்ம்மையை நினைந்து அழத்தூண்டுகின்றார். மகாகவி டென்னிசனும், “பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே பிரார்த்தனை” என்கிறார். ஆக பிரார்த்தனையால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது; அன்பு சூழ்கிறது: அவ்வழி மனம் குளிர்கிறது. அதனால் காற்று மண்டலம் குளிர்ச்சியடைகிறது. வான் புயலை நீர்த்திவலைகளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக்கிடைக்கிறது; மழை பொய்கிறது: இதுவே தத்துவம். ஆகவே பிரார்த்தனை என்பது உயிரை வளர்க்கும் நெறி; உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி.

பக்தி-திருத்தொண்டு-தொண்டு

பிரார்த்தனை கங்குகரையற்ற - எல்லைக்கோடுகளற்ற அன்பில் கலக்கும் பொழுது பக்தியாக உருப்பெறுகிறது. பக்தியென்பது உறுப்புக்களில் தொடங்குவதன்று. உணர்வில் முகிழ்த்து, உறுப்புக்களில் பரவி அன்பு மயமாக்குவது. கண்ணப்பர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அன்புக்குக் கண்ணப்பர் உவமையன்று, கண்ணப்பருக்கு அன்பு உவமை. கண்ணப்பரின் அன்பினை அறிந்து அனுபவித்தற்குரிய கண் யாரிடமும் இல்லாது போயிற்று. ஏன்? காளத்தியப்பனுக்கும்கூட இல்லைபோலும்! கண்ணப்பரின் கண்ணையே ஏற்று அணிந்து கொள்வதன் மூலம், அன்பினைக்கான, அனுபவிக்க, காளத்தியப்பன் ஆர்வம் கொண்டான். ஆக, பக்தி என்பது சடங்கு மட்டுமன்று. அஃது ஓர் உயிர்ப்புள்ள ஊற்று உணர்வின் வெள்ளம், அருளின் ஆற்றுப் பெருக்கு. அந்தப் பக்திப் புனல் மனித நெஞ்சங்களில் ஊற்றெடுத்துப் பெருகுமானால் வஞ்சனையென்ற காட்டாறு வற்றும். பக்திப் புனலை வற்றாது காப்பது திருத்தொண்டு. அந்தப் பக்தி, புனலின் விளைவு தொண்டு. பக்தி, திருத்தொண்டினால் காப்பாற்றப்படுகிறது; வளர்க்கப்படுகிறது. பக்தியின் பயன் தொண்டு. திருத்தொண்டும், தொண்டும் இல்லையானால் பக்தியில்லை என்பதே பொருள். முடிவில்லாத தொடக்கம் இருந்து என்ன பயன்? இலக்கு இல்லாத பயணத்தால் யாது பயன்? பொருள் குறிக்காத சொல்லால் யாது பயன்? உயிர்ப்பில்லாத உடம்பினால் யாது பயன்: திருத்தொண்டும் தொண்டும் இல்லாத பக்தி இருத்தற்கில்லை; இருத்தல் இயலாது. அங்ஙனம் திருத்தொண்டும் தொண்டுமில்லாத பக்தி இருப்பதாகக் கூறுவது ஒரு பொய். நமது சமயம், அறிவிற் பழுத்துப் பக்தியில் கனிந்து திருத்தொண்டாகதொண்டாகப் பரிணமித்துப் பயன் தருவது. வாழும் உயிரின் இலட்சியம் திருத்தொண்டராதலே; பக்தி அதற்கொரு வாயில்.

திருத்தொண்டு என்பது எது? இறை பணி திருத் தொண்டு. இறை பணி என்பது இறைவனுக்காகச் செய்வதன்று. கற்பது அறிவுக்குச் செய்யும் பணியன்று நாம் அறிவைப் பெறுவதற்குரிய பணி. உண்பது உணவுக்குச் செய்யும் பணியன்று; நாம் உயிர் வாழச் செய்யும் பணி. ஆறுகளையும் குளங்களையும் பாதுகாப்பது அவற்றுக்குச் செய்யும் பணியன்று; நாம் வாழச் செய்து கொள்ளும் பணி. அவற்றைப் போலத்தான் இறைபணி என்பதும். திருத்தொண்டு என்பது இறைநலத்தை உயிர்கள் பெறச்செய்யும் பணி; சிறப்பாகத் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், மலர் தொடுத்தல், உழவாரப் பணி செய்தல், பாடுதல் ஆகிய பணிகளாகும். பழங்காலத்தில் நம்முடைய திருக்கோயிற் பணிகள் திருத்தொண்டுகளாக இருந்தன. அன்று அவை உயிர்நலம் கருதிச் செய்யப்பெற்றன. ஆதலால் அன்று, திருக்கோயில்களில் திருவருள் திருவோலக்கம் இருந்தது. காலப்போக்கில் அவை தொழில் மயமாகிவிட்டன. இன்று அர்ச்சிப்பதிலிருந்து ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணிவரை அறங்காவல் வரை தொழில் முத்திரைகள் பெற்றுவிட்டன. அதனால் உலகியல் கட்டுக்கோப்பு ஆதிக்கத்திற்குரிய பதிவுகள் அனைத்தும் அங்கு வந்து விட்டன. உயர்ந்தோர் - தாழ்ந்தோர். பெரியோர் - சிறியோர், களவு-காவல், ஏவல் செய்வோர்-ஏவல்கேட்போர் ஆகிய உலகியல் முத்திரைகள் அனைத்தும் அங்குப் பதிந்துவிட்டன. ஆதலால் திருக்கோயில் வட்டாரத்தில் இன்றைக்குத் திருத்தொண்டர்கள் இல்லை. திருமடங்களின் வட்டாரங்களும் அப்படியேதான். அப்பரடிகள்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நீத்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆருரா என்றென்றே அலறா நில்லே[36]

என்ற பாடலில் திருத்தொண்டின் முறைமைகளைக் குறிப்பிடுகின்றார். இந்த உணர்வில் திருத்தொண்டு செய்வார் இன்று யார்? இந்த அவல நிலை வந்ததற்குக் காரணம் திருக்கோயில்கள் அப்பட்டமான நிறுவனங்களாக உருமாறி வளர்ந்ததுதான்; அவை, உலகியல் பொருட்செல்வத்தின் குவியலாக மாறியதுதான். ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருக்குமானால் தூய்மைப் பாதுகாப்புச் செய்யவேண்டியதில்லை. ஆற்றிற்கும் இன்னாருடைய ஆறு என்று எல்லை குறித்த பெயர் கிடையாது; ஊற்று வளமும் ஓட்டமும் இல்லாத குளமாக, குட்டையாகத் தண்ணீர் தேங்கிவிடின் தூய்மைப் பாதுகாப்புத் தேவை. திருக்கோயில்களில் சமய நிறுவனங்களில் பொருள் வரும்; வரவேண்டும். அவை எல்லை குறியாமல் மக்கள் மன்றத்திற்குச் சென்று கொண்டே இருக்கவேண்டும். அங்குச் செல்வம் தேங்கி அஃது உடைமையாக மாறி விடின், துய்ப்புக்கும் எல்லை வந்துவிடும்; துய்ப்புக்கு எல்லைவரும் பொழுது மனித குலத்தில் தீமைகளும் வந்தே தீரும்; அடிப்படை ஆட்டம் கொடுக்கும். இந்த இடத்தில்தான் தொண்டு கால் கொள்கிறது. பக்தியில் பெற்ற உணர்வினால், திருத்தொண்டின்வழிப் பெற்ற பயனால் மனித குலம் வளர, வாழச் செய்வது தொண்டு. ஆக பக்தி, திருத்தொண்டு, தொண்டு ஆகியன ஒன்றையொன்று தழுவி நிற்பன. இதுவே நமது ஆன்றோர் காட்டிய சமய வாழ்க்கை அவ்வழியில் நாம் பயணம் தொடங்கும் பொழுதே நமக்கும் சமய அனுபவம் கிடைக்கும்.

உருவ வழிபாடு ஏன்?

எல்லா உயிரும் உயர்ந்த பக்திமையைப் பெறவேண்டு மென்றால் அவை வழிபாட்டில் ஈடுபடவேண்டும். வழிபாடு என்பது காட்சியினால் மட்டும் நிகழ்த்துவதன்று. வழிபாடு உண்மையான - நிறைவான பயனைத் தரவேண்டுமென்றால் பொறிகளும்-புலன்களும், ஊனும்-உயிரும், உணர்வும், ஒன்றாகக் கலந்து செய்தல் வேண்டும். அந்த அடிப்படையிலேயே நம்முடைய சமயம் திருவுருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது; வற்புறுத்துகிறது. இன்றும் சிலர், கடவுளுண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். திருவுருவ வழிபாட்டைக் குறிப்பாகச் சிலைகளை வழிபடுவதை உடன்பட மறுக்கிறார்கள். ஆனால், நமது சமயம் திருவுருவ வழிபாட்டை வற்புறுத்துகிறது. மெய்கண்ட தேவர் சீவன் முத்தர்களுக்குக் கூட ஆலய வழிபாட்டை வற்புறுத்துகிறார்:

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே.[37]

என்பது அவர் வாக்கு காற்றோட்டம் இல்லாமல் வெப்பத்தால் புழுக்கம் ஏற்படுகிறபொழுது விசிறியைக் கொண்டு விசிறிக் கொள்கின்றோம். காற்றோட்டம் வந்த பொழுது விசிறியை எறிந்துவிடுகின்றோம். அதுபோல ஞானம் வராதபொழுது திருவுருவ வழிபாட்டைச் செய்ய வேண்டும். ஞானம் வந்துழி விட்டுவிடலாம் என்றும் சிலர் கூறுவர். காற்றோட்டம் இல்லாமல் புழுக்கம் வந்தது என்றால் காற்று ஒருபொழுது வீசுதலும் வீசாமையும் பெறப்படுகிறது. காற்றோட்டம் வந்துழி விசிறியை எறிந்துவிட்டால் மீண்டும் காற்றோட்டம் இல்லாதபொழுது என்ன செய்வது? ஆதலால் உயிர் முற்றாக முழுமைநலம் எய்தும்வரை எந்தச் சாதனங்களையும் இழத்தல் நன்றன்று. இறைவன் உருவ மற்றவன்; அருவ நிலையினன் என்பதும் நமது கோட்பாடே. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் உருவங்களை ஏற்க முடியும் என்பதில் என்ன தவறு? ஆட்கொள்ளும் வழி ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தரத்தைப் பொறுத்ததேயன்றி, ஆண்டவன் தகுதியைப் பொறுத்ததாக அமையாது.

உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றுதான் சிந்திக்க முடிகிறது. அதனால் உருவமற்ற இறைவனும் உருவம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வராது. மணம் உருவமற்றது. ஆனால் மலரின் வடிவத்தில் மணம் பொருந்தும் பொழுதும், மணம் நுகரும் மூக்கின் வடிவத்தில் உறவு கொள்ளும் பொழுதும்தான் மணம் அனுபவத்திற்கு வருகிறது. ஒலிக்கு வடிவம் இல்லை. ஆனால் ஒலி, சொல் வடிவம் பெற்று, உருவடிவம் பெற்று செவியொன்றில் உறவு கொள்ளும் பொழுதுதான் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும், உருவங்களின் வாயிலாகத்தான் அனுபவத்திற்கு வருகின்றது. நாம் உருவத்தை வணங்கவில்லை. உருவத்தின் வாயிலாக, இல்லை, உருவத்தில் இறை நிலையைக் கருதியே வழிபடுகின்றோம். நாம் தொழுவது சிலையையன்று. சிலையை மையமாகக் கொண்ட சிந்தனையைத்தான். நம்மீது உள்ள கருணையினாலே இறைவன் உருவங்களில் எழுந்தருளி ஆட்கொள்கிறான் என்பதுதான் நமது கொள்கை, உருவங்களாக எண்ணித் தொழுதல் நமது வழிபாட்டு முறையன்று. உலகியலில்கூட சில பொருள்கள் உருமாறின பிறகு, உருமாறிவிட்டிருக்கும் நிலையிலுள்ள பெயரைத்தான் குறிப்பிடுவோமே தவிர பழைய நிலைப்பெயரைக் குறிப்பிடுவதில்லை. இரும்பு அறிவியல் முறையில் ஒலிபெருக்கியாக்கப் படுகிறது. அதற்கு ஒலிபெருக்கி என்றுதான் பெயர். அது செய்யப்பெற்ற இரும்பை எண்ணி ஒலிபெருக்கியை இரும்பு என்றுகூற இயலாது; கூறக்கூடாது. அரிசி வெந்து சோறான பிறகு, அது சோறே தவிர அரிசி அன்று. எழுத்துகள் உணர்ச்சி வெள்ளம் படைத்த கவிஞனால் முறையாகக் கோக்கப்பெற்றுக் காவியம் ஆக்கப் பெற்றால் அது காவியமே. எழுத்துகள் உண்மையினால், அது அகர நெடுங்கணக்கு ஆகாது. அதுபோலத் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற திருமேனிகள் கற்களாலோ, உலோகத்தாலோ ஆக்கப் பட்டிருக்கலாம். ஆனால் வழிபடுவோர் கல்லையோ உலோகத்தையோ உள்ளத்தில் நினைந்து வழிபடவில்லை. இறைவனையே எண்ணி வழிபடுகின்றனர். அதுதான் திருவுருவ வழிபாட்டின் தத்துவம். இதனை மாணிக்கவாசகர்,

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே[38]

என்று கூறி விளக்குகிறார். எனவே, திருக்கோயில் வழிபாடு பிள்ளைமை வழிபாடன்று. அது, வழிபாட்டின் முதிர்ந்த நிலை.

வழிபாட்டின் பயன்

வழிபாடு என்பது ஒரு நுண்ணிய கலை நிரம்பிய அருளார்ந்த உயிர்க்கு உதவும் உணர்வுப் பயிற்சி, சிந்தனை யாலன்றி அறிவில்லை. மனம் வளர்வதற்குரிய இந்த உயர் வழிபாட்டு நெறி உலகில் உண்மையில் வளர்ந்தால் மனித குலத்தினிடையில் அன்பு பெருகி வளரும், அமைதி தழுவிய வாழ்க்கை மலரும்; போர் ஒடுங்கும்; புண்ணியம் பெருகும்; சிறைச்சாலைகள் குறையும், அறச்சாலைகள் வளரும். இத்தகு உயர்ந்த வழிபாட்டினை ஒருமை உணர்வுடன் நிகழ்த்துதல் வேண்டும். மனம் இயல்பில் அலையும் தன்மையது. “சென்றவிடத்தாற் செலவிடாஅது”[39] என்பார் திருவள்ளுவர் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்துதல் வழிபாட்டின் முதற்படி “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை”[40] என்பார் திருநாவுக்கரசர், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்”[41] என்பார் வள்ளலார், அண்ணல் நாமத்தை ஐந்தெழுத்தை வைத்த மாநிதி என்று எண்ணுதல் இன்ப உணர்வை நல்கும். அண்ணல் திருநாமத்தை எண்ணி மலரிட்டுப் போற்றுதல், உலகம் முழுவதையும் பால் பொழிந்து வளர்த்துக் காப்பாற்றும் பசுவிற்கு வாயுறை அளித்தல், உண்ண வேண்டியவர்களுக்கு உணவளித்தல், இனிய வார்த்தைகளைக் கூறுதல் இவையனைத்துமே சமய வாழ்க்கையின் படிகள் என்று திருமந்திரம் நமக்கு வழி காட்டுகிறது.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே?[42]

என்பது திருமந்திரம்.

திருமூலர் காட்டும் சமய வாழ்க்கையில் கடவுட் பணியும் கடவுட் பணியின்றி உயிர் நலங்காக்கும் பணியும் இருப்பதறிந்து வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்கது.

சமய வாழ்க்கை-வழிபாட்டுணர்வில் வளர்ந்த வாழ்க்கை அது பணிமயமானது. பணி என்பது ஓர் உயர்ந்த சொல். ஆனால், இன்று அந்தச் சொல் மிகச் சாதாரணமாக உலகியலில் சொல்லப்படுகிறது பணியாள், பணிமனை என்று. பணி, தன்முனைப்பு இன்றிச் செய்யப் பெறுவது: உயர்வு தாழ்வு நோக்கின்றிச் செய்யப் பெறுவது; யாரிடமும் பணிந்து செய்வது. பயன் கருதாது செய்வது. பணி செய்கின்றோம் என்ற செருக்கு உணர்வின்றிச் செய்வது பணி. அங்ஙனம் செய்யப்பெறுபவையே பணிகள். சமய வாழ்க்கையின் நிறைவு, பணியில் தெரியும்; அத்தகு பணிகள் செய்யும் பண்பில் நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்; நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்புரை

இளமையில் திருமுறை உணர்வை ஊட்டி வளர்த்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களின் கொடையில் மலர்ந்த சொர்ணாம்பாள் அறக்கட்டளையின் சார்பில் இன்று பேசிய பேச்சின் உட்கிடை வருமாறு: மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்த வேண்டும்; உயிர்கள் இயல்பாய குறையினின்றும் நீங்கி நிறைநலம் பெறச் சமயம் துணை செய்கிறது; கல்வியிலும் அறிவு சிறந்தது: அறிவிலும் ஞானம் சிறந்தது; ஞானத்தை நல்கும் சமயம் ஒரு வாழ்க்கை முறை; சமயங்கள் அனைத்தும் மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகவே தோன்றின. சமயப் பூசல்கள் உலகியல் நலன்களுக்காகச் சமயத்தின் பேரால் நிகழ்ந்தன - நிகழ்வன. சமய நெறி உணர்த்துவது வேறுபாடுகளுக்குள்ளும் விழுமிய ஒருமைப் பாட்டைக் காண்பதுதான். ‘வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டே’ என்று தாயுமானார் அருளியமை நினைவு கூர்ந்து சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி நிற்கவேண்டும். அதுவே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குரிய உயர்ந்த நெறி. அந்நெறியே தமிழர் சமய நெறி.

தமிழினம் மிகத் தொன்மையான காலத்திலேயே சமய வாழ்க்கையை மேற்கொண்டது. சங்க கால வாழ்க்கை ஒரு முழுமையான சமய வாழ்க்கை. ஆதலால் பக்திக்குத் தணி இயக்கங்களும், இலக்கியங்களும் இருந்ததில்லை. சங்க காலத்துக்குப் பின் நமது சமய நெறியில் பண்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டி நிறைவு செய்யப் பக்தி இயக்கமும், பக்தி இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன.

தமிழர் சமயம் நம்பிக்கைக்குரியது. நல்லெண்ணத் திற்குரியது, அறிவாராய்ச்சியில் அமைந்தது. சிந்தனையின் எல்லைவரை வினா எழுப்பி வளர்ந்த நெறி. அதனால் அதற்குச் ‘சித்தாந்தம்’ என்று பெயர். நமது சமயத்தில் முப்பொருள் கொள்கை விழுமிய கொள்கை இறை, உயிர், தளை என்பன என்றும் உள.

கடவுள் உண்டா? இல்லையா? என்று விவாதம் நிகழ்த்த இது உரிய காலமன்று. அறியாமையே தோன்றாத அறிவு உலகத்தில் தோன்றிவிடுமானால், இனி ஆராய வேண்டிய பொருள்கள் இல்லையென்ற நிலை தோன்றி விடுமானால் அதைப் பற்றி ஆராயலாம். கடவுள் இல்லை என்பவர்கள் மீது நமக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் நாம் தயாராக இல்லை. நம்முடைய கொள்கையே கடவுள் எல்லாமாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் உண்டு என்போர் கடவுளை வழிபட வேண்டும். கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை யுடையோர் வாழ்ந்து காட்டவேண்டும். சின்னங்களும் சடங்குகளும்தான் கடவுள் நெறி என்று மக்களை நம்ப வைக்கக்கூடாது. மழை பொழிந்ததன் விளைவை மண் காட்டுவதைபோல், சமய நெறி நின்று வாழ்வோரின் சால்பினை வையகம் காட்டவேண்டும்; விளைவுகள் காட்டவேண்டும். அதாவது துன்ப நீக்கமும் இன்ப நிறைவுமாகும்.

பழமை, புதுமை இவை உண்மையில் வாழ்க்கையில் ஈடுபடாதவர்களுடைய கற்பனை; பட்டி மன்றங்களுக்குப் பயன்படும் பொய்ம்மை; பழமை புதுமைக்குத் தாய். புதுமை பழமையின் சேய், வாழ்க்கை வாழ்வதற்கென்பது நம்முடைய நெறி. உலகம் துன்பமன்று வாழ்க்கையும் துன்பமன்று. ஒரோவழி துன்பமாக இருந்தாலும் இன்பமாக மாற்ற வேண்டும். இன்னாதம்ம உலகம் இனிய காண்க என்பது பக்குடுக்கை நன்கணியார் காட்டிய நன்னெறி.

சைவ நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துப் போராடியது, வழிவழி வளர்ந்து வந்த தமிழினத்தின் நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கேயாம். அதுவும் கூடத் தனித்துச் சமணர்கள் வளர்ந்த பொழுது நாயன்மார்கள் எதிர்க்கவில்லை. மருணீக்கியார் சைவ சமயத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது சைவர்கள் பதற்றமடையவில்லை. அதுதான் நமது சமய நெறியாளர்கள் கண்ட உயர்ந்த பண்பாடு. ஆனால், மருணீக்கியார் திரும்பவும் சைவத்திற்கு வந்தபொழுது சமணர்கள் ஆத்திரப்பட்டனர். அரசினைக் கையகப்படுத்திக்கொண்டு கொடிய தண்டனைகளைச் செய்வித்தனர். ஐரோப்பிய வரலாறுகளில் கிறித்தவ சமயத் தலைவர்கள் அரசைக் கைப்பற்றிக் கொண்டு மற்றச் சமயத்தினர்க்குத் துன்பம் செய்ததை வரலாற்றில் படித்திருக்கிறோம். அதே தவற்றை, நெறியல்லா முறையை இங்கே சமண முனிவர்கள் மேற்கொண்டனர். இஃது ஒரு தற்காப்புப் பணி.

நமது சமயத்தில் தீண்டாமை இல்லை, தீண்டாமையை அறவே அகற்றவேண்டும். ஒன்றே குலம் என்ற திருமூலர் ஆணையின் வழி ஒரு குலம் அமைக்கவேண்டும். அருளின் விளக்கமாகிய ஒப்புரவுக் கொள்கையால் வறுமையை மாற்றவேண்டும். வளம் படைத்திடுதல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் சமயச் சீலம் இடம் பெறுமாறு வாழ்ந்துகாட்ட வேண்டும். துய்த்தல் தவறன்று; ஆனால் துய்த்தலில் அன்பு தேவை; துறவின் தொடக்கம் தேவை. துறவின்வழித் துய்த்தலே இன்ப அன்பினை விளைவிக்கும் துய்ப்பு.

வழிபாடு ஒரு சடங்குமட்டுமன்று. புலன்களைத் துய்மை செய்வது; பொறிகளை இன்பமயமாக்குவது. பக்தி ஓர் உணர்வு; பக்தி திருத்தொண்டுக்கு ஊற்று; தொண்டு அதன் விளைவு. இப்பண்புகள் பல்கிவளர நாள்தோறும் இறைவனை வழிபடவேண்டும்.

இறைவன் அருஉருவினன். ஆயினும் உயிர்கள் எளிதில் நினைத்திட அவன் உருவமேற்றுக் கொள்கின்றான். நாம் வணங்குவது உருவங்களையன்று; உருவங்களை மையமாகக் கொண்ட கடவுள் தன்மையையே. எல்லாமாக இருக்கும் கடவுள் ஏன் உருவங்களாக இருக்கமுடியாது? சின்னங்கள் சடங்குகள் இல்லாத சமயம் உலகில் எதுவுமில்லை; உலகில் எந்த இயக்கமும் இல்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவனெனவே தேறி வழிபாடு செய்வோம். ஒன்றியிருந்து வழிபாடு செய்வோம். அவன் திருவடிப் போதுகளில் மலர்களை இடுவோம். உயிர்க் குலத்தை வாழ்விப்போம்; பணிகளைச் செய்வோம்; இத்தகு சிந்தனைகளை இன்று நினைவிற்குக் கொண்டு வந்தோம்.

ஊர்களைச் சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. அண்டங்களை வானவெளிச்சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. ஆனால், மனித உள்ளங்களை இணைக்கக் கண்ட நன்மை பெருகு அருள்நெறி, நாட்டில் வளரவில்லை; நாட்டு மக்களின் நெஞ்சங்கள் அருள்நெறி வழி இணைக்கப் பெறவில்லை. மனித உள்ளங்கள் அருள் நெறி வழி இணைக்கப்பெறும்பொழுது மண்ணகம் விண்ணக மாகும்; அப்போது வான்முகில் வழாது பெய்யும்; மலிவளம் சுரக்கும்; குறைவிலாது உயிர்கள் வாழும். நாட்டில் நல்லாசு நிலவும், அறநெறிகள் வளரும்; தவநெறி தழைக்கும்; நீதி நிலைபெறும்; சைவம் நின்று நிலவும். அந்த நன்னாளை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம்.

மேற்கோள் விளக்கம் 

  1. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9,
  2. திருவாசகம், திருப்புலம்பல், 3.
  3. திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3.
  4. திருக்குறள், 1110.
  5. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25
  6. திவ்வியப் பிரபந்தம். 2573.
  7. திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165.
  8. புறம். 192.
  9. புறம். 192.
  10. புறம். 134.
  11. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 972.
  12. திருவாசகம், திருவெம்பாவை, 9
  13. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 784
  14. புறம், 194.
  15. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 380,
  16. சுந்தரர், 294.
  17. சுந்தரர், 294.
  18. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 929.
  19. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 938.
  20. திருவாசகம், கண்டபத்து, 5
  21. திருமந்திரம், 2066.
  22. புறம். 189
  23. சிலப்பதிகாரம் வேட்டுவ வரி, 21,
  24. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 383.
  25. அகம், 53.
  26. திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 892
  27. சுந்தரர், 551.
  28. திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 181.
  29. திருவுந்தியார்; 33.
  30. திருவாசகம், கோயில் திருப்பதிகம், 7.
  31. திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 45-46.
  32. திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 49
  33. "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா
    கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
    அல்ல புரிந்தொழுக லான்.கலி, குறிஞ்சி, 3
  34. திருவாசகம், திருச்சதகம், 23
  35. திருவாசகம், திருச்சதகம், 90.
  36. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312.
  37. சிவஞானபோதம் சூத்திரம், 12.
  38. திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7.
  39. குறள், 422.
  40. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781.
  41. திருவருட்பா, தெய்வமணி மாலை, 8.
  42. திருமந்திரம், 109