உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/பதுளையில்

விக்கிமூலம் இலிருந்து

பதுளையில்


இந்த உலகிலே எதையும் இழக்கலாம் - மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச - பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன் வரவேண்டும். தமிழ் உணர்வுகொண்டு, தமிழ்ச்சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்கமுடியும்.

தமிழையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்ததனாலேதான் அன்றையத் தமிழின் தகைமை சான்ற தன்னிகரில்லாத வாழ்வு வாழ முடிந்தது. தமிழ், வாழவும் வாழ வைக்கவும் போதிக்கும் ஒரு செம்மொழி. உறவாடி மகிழவே மொழி உதவுகிறது. உணர்ச்சிகளை வாயாலே காட்டுவதுடன் கண்ணாலும் முகத்தாலும் காட்டிவிடலாம். ஆனால் உணர்ச்சியைச் செம்மைப்படுத்தி உறவாட உதவும் கருவியாக நமது மொழி கருதப்பட்டது.

இன்றைய நிலையில் கலப்பு வந்துவிட்டது. சந்தேகமும் சலனமும் இக்கலப்பால் தலைகாட்டுகின்றன. இறைவனிடத்தில் உறவாடக்கூடக் குறிப்பிட்ட ஒரு மொழிதான் வேண்டுமென்று வலியுறுத்துபவர்களை இன்று காண்கிறோம். எல்லாம் வல்ல - எல்லாம் அறிந்த எம்பெருமான் குறித்த ஒரு மொழி மட்டுமே தெரிந்தவராக இருக்கமாட்டார். தேவமொழியாக ஒரே மொழியை விரும்பி, அம்மொழிவழித் தொடர்புகளுக்குத்தான் செவிசாய்ப்பவராக இறைவன் இருப்பாரா? சுரண்டலும் சுயநலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், கடவுளின் பெயரால் சிலர் செய்த கண்மூடித்தனமான பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கடவுளை எங்கோ ஓரிடத்தில் வைத்து, எவரோ ஒருவரைத் துணைக்குக் கூப்பிட்டு, வழிபாடு நடத்தாத காலத்தில் குறிப்பான சில சடங்குகளும் குறித்த ஒரு மொழியும்தான் கடவுள் நெறி காண உதவும் என்ற கோட்பாடு வளரவில்லை. தமிழர், முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முதல்வனை வழுத்தினார்கள்; வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துதலுக்கு இறைவனின் இசைவும் இருந்தது. அத்தகைய இசைவினை இப்போதும் பெறலாம். பெறவும் முடியும்.

நல்லவர்களை உருவாக்கும் பண்ணைகளான தேவாலயங்களில் தாய்மொழியில் வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். இதயதாபங்களை அடக்கி-அழித்து இனிய நிலையை உருவாக்க, தாய்மொழியால், எந்தையும் தாயுமான மங்கைபங்கனைப் போற்றிப் புகழவேண்டும். “வடமொழியும் தென் தமிழும் ஆனான் கண்டாய்” என்ற தத்துவம் இப்பொழுது நடைமுறையில் அதிகமாக இல்லாதது வருத்தத்தைத் தருகிறது. இறைவன் தமிழ் மொழியில் எவ்வளவு பற்று வைத்திருந்தான் என்பது வரலாற்று மூலமாகவே கண்டு மகிழக்கூடியதாய் இருக்கிறது.

வேதம் ஓதி விழிநீர் பெருக்குவதைப் போலவே திருமுறைகளை ஓதியும் விழிநீர் பெருக்கலாம். திருமுறைச் செல்வர்களில் ஒருவரான மணிவாசகப் பெருமான் “நானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அரற்றி அழுது அருளார் அமுதம் பெற்றார். அழுவதற்கு உள்ளம் உருகவேண்டும்; உணர்ச்சி கசிய வேண்டும். அவைகளின் நெகிழ்ச்சிக்குத் தாய்மொழிதான் உதவும். எந்த மொழி வல்லுநனும் தன்னையொட்டிய சிந்தனையைத் தன் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறான். அதைப் போல் நம்மைச் சார்ந்த வழிபாட்டுச் சிந்தனையும்-சிந்தனை வெளிப்பாடும் நமது தாய்மொழியிலிருந்தால் நலம் பயக்கும்.

தமிழருக்குச் சொந்தமான சில தகைமை இருப்பது போல, இறைவனிடத்தில் சொந்த மொழிவழித் தொடர்பும் இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் எம்மை வேற்று மொழி வெறுப்பாளர் என்று எண்ண வேண்டாம். மொழித் தொடர்பினால் - காலத்தால் மூத்த சமய குரவர்கள் சிறப்புற வாழ்ந்தது போல நாமும் வாழவேண்டுமென்ற விருப்பு நமக்கு உண்டாக வேண்டும். வேற்று மொழியை ஆதரித்து நமது மொழியைப் போற்ற வேண்டும். வடமொழியில் வேதம் என்பதை நாம் மறை என்று தமிழ் ஆக்குகிறோம். வேதம் என்பது வேய்தல் அதாவது மூடுதல் எனப்படும் ஆணவத்தை மூடிமறைக்க வேதங்கள் உதவுகின்றன. நமது தமிழ் மொழியில் முகிழ்த்த வேதமாகத் திருக்குறளைக் கருதுகிறோம். அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப்பொருள்களைத் தர எழுந்த வேதம் குறள். தமிழில் பெரும் பெரும் வேதங்கள் உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் கடல் கோள்களினாலும் பூகம்பங்களினாலும் அழிந்து மறைந்திருக்கலாம். இப்பொழுது நமக்கு உதவுவன திருமுறைச் செல்வங்களே. இச்செல்வங்கள் கூட மூடிமறைக்கப்பட்டிருந்தன. சிலர் தம் ஆதிக்க வாழ்வு - ஆட்டங் கண்டு விடுமென்றஞ்சித் திருமுறைகளை மறைத்துப்பூட்டினர். சிதம்பரத்திலே மறைத்திருந்த திருமுறைகள் ஆண்டவனின் விண்ணொலியாற் பெறப்பட்டன. அவற்றை நம்பியாண்டார்நம்பி தெரிந்து தமிழுலகுக்கு அளித்தார். அத்திருமுறைகள் மறைக்கப்பட்டதோடு மறைந்தொழிந்திருந்தால் இப்பொழுதிருக்கும் நமது நிலை என்னவாக இருக்கும்? தத்துவப் பெருக்கால் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணி இறும்பூதடையும் சிலர் நம்மை எப்படி இழித்துரைப்பார்கள்.

“கல்லைப் பிசைந்து கனியாக்கி” என்பதுபோல-நம் நெஞ்சக் கனகல்லை நெகிழவைக்கத் தாய்மொழி வழிபாடு உதவுகிறது. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு தேவை. சிந்தனைவழியாகவே காதல், கசிவு, கனிவு போன்றவை பிறக்கும். காதலும் கசிவும் உண்டாகிவிட்டால் கோவிலிலே வக்கீல் வைத்து வணங்கவேண்டிய முறை தேவைப்படாது. யான் எனது என்ற செருக்கழித்து, சமுதாயத்துக்கு நலம் பயக்கத் தெய்வ வணக்கம் பயன்படவேண்டும். இமயத்திலே, பொதிகையிலே ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கும் பரவி விரவி ஓடிப்பயனளிக்கிறது. ஆனால் மனிதனின் இதயமலையிலே ஊற்றெடுக்கும் சிவமயம் கோவிலோடும் பூசையறை யோடும் நின்றுவிடுகிறது. வெளியில் வந்தவுடன் ‘என் மயம்’ ஆகிறது. எவ்வுயிர்க்கும் ஈசனுக்கும் தமக்கும் அன்புள்ளவர்களாக ஆக்கும் பெற்றி வழிபாட்டுக்கு உண்டு.

எனவே, இனத்தை ஒத்த மொழியிற் பிடிப்பும்- பாசமும் இருத்தல் வேண்டும். ஆண்டவனிடத்தில் சொந்த மொழி வழித்தொடர்பே அத்தகைய பலனைத் தருகிறது. இறைவன் பல வழிகளில் தமிழை அனுபவித்துச் சுவைத்திருக்கிறான். காசு கொடுத்தும், தூது நடந்தும் கன்னித் தமிழ் கேட்டதாக வரலாறு பேசுகிறது.

வடமொழியும் செந்தமிழும் வழக்கிழக்க வேண்டியவை யென்றால் வடமொழிக்குக் கொடுக்கப் பட்டதுபோல நம் தமிழுக்கும் இடங்கொடுக்கப் பட்டதா? இல்லையே! தமிழுக்கு இடங்கொடுக்கப்படாவிடில் தமிழர்களாகிய நாம் இடந்தேடி இன்பமடைய வேண்டாமா?

சுரண்டல்களினாலும் - சுயநலத்தினாலும் தமிழின் பின்தங்கியநிலை இப்பொழுது சமயத்துறையில் அருக ஆரம்பித்து விட்டது. இந்நிலை நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கி உண்மை நெறி உலகெல்லாம் பரவ உதவும் எனக் கருதி வாழ்த்தி விடை பெறுகிறோம்.