குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2/திருக்குறள் பேசுகிறது

விக்கிமூலம் இலிருந்து



5
திருக்குறள் பேசுகிறது


வழித்துணை

டலொடு உயிர் ஒன்றி உலவும் காலத்து ஒருங்கு நடைபயிலும் வழிகள் இரண்டு. இரண்டும் இயைந்த வண்ணம் நடை பயில்வதற்கு முன்பாக உயிர் தனது அகத்துறுப்பாகிய மனத்தினால் நடைபயிலும், அஃது ஒரு வழியே. இவ்வழியேதான் உடற் காரியங்கள் நிகழும். சிந்தை செல்லும் வழியே செயல். சிந்தைக்கு அடிச்சுவடு இல்லை; செயலுக்கு உண்டு. திருவள்ளுவர் தமது ஒப்பற்ற உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் முன் பாயிரம் ஓதுகிறார். பாயிரத்தில் மனிதரை வழிநடத்தி வாழ்விக்கும் தத்துவங்களை எடுத்துப் பேசுகிறார். கடவுளை உலகத்தின் முதலாக, திருக்குறள் கண்டு காட்டுகிறது. "ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இறைவனை உலகம் முதலாகவுடையது. இறைவனே உலகத்தைத் தோற்றுவித்த முதல்வன்; இறைவனே எல்லார்க்கும் முன்னே தோன்றி மூத்த முதல்வன்; இறைவனே முதற்கருவாக நின்று அகத்தும் புறத்தும் விரிந்து கிடக்கின்ற இவ்வுலகத்தை விரிவடையச் செய்தனன். இங்ங்ணம் நினைந்து நினைந்து பொருள் கருதி மகிழத்தக்க நிலையில் அமைந்துள்ளது முதற்குறள். இது மட்டுமா? எல்லா எழுத்துகளிலும் அகரத்தின் ஒலிச்சாயல் உண்டு. அதுபோல எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் தங்கியிருக்கிறான் என்ற குறிப்பு உணரத்தக்கது.

இறைவன் இங்ங்னம் முதலாக இருந்து உலகத்தைத் தோற்றுவித்த இயக்குவானா யினும், அவன் வேண்டுதல் வேண்டாமை யில்லாதவன் என்று திருக்குறள் பேசுகிறது.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டும் இடும்பை இல

என்பது திருக்குறள். உயிர்கள் உய்யும் பொருட்டு உலக நடைமுறையினை நிகழ்த்தும் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லையென்றால் என்ன பொருள்? இறைவனுக்குத் தன் சார்பான விருப்பு வெறுப்பு இல்லையென்றே பொருள்! எந்தவொரு விருப்போ அல்லது வெறுப்போ தன்னைப் பற்றியதாக இருக்குமானால் நிறைவுடையதல்ல. உயிர்களுக்கு விருப்பும் வெறுப்பும் உண்டு; அவை பெரும்பாலும் அவர்களைச் சுற்றியே வட்டமிடல் உண்டு. அவர்கள் பிறரை - பிறவற்றை நேசித்து விரும்புவதெல்லாம் தன்னுடைய நலத்திற்குக் காரணமாக இருப்பதனாலேயாம். இதுவே உலகியல் பொதுவிதி. ஆனால், இறைவனோ உலகம் உய்தி பெறுவதற்காகவே ஐந்தொழில் நடத்தி வருகின்றான். இறைவனுடைய திருவுள்ளம் உலக உயிர்களைச் சுற்றியே வட்டமிடுகிறது. அகரமாகிய எழுத்து ஒரு சிறு முழு வட்டத்தில் தொடங்குகிறது. பின் அது கீழே வளைந்து வந்து, மீண்டும் மேல்நோக்கி வளைந்து சென்று, பின் அந்த வளைவுகளைக் கடந்து அண்மையில் ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. இறைவன் ஒரு முழு வட்டம் முழு முதல்; குறைவிலா நிறைவு. கோதிலா அழுது; இன்ப அன்பு. ஆயினும் உயிர்களின் நலங்கருதி இரங்கி அவ்வுயிர்கள் செல்லுழித் தானும் வளைந்து சென்று, உயிர்களை அண்மித்து நின்று அறிவித்து, துணையாய் நின்று துறக்கச் செய்து, கீழ்மை நிலைமையிலிருந்து பைய மேல்நிலைக்குக் கொண்டு வந்து, பின்பு வாழ்வெனும் மையலாகிய சுழலிலிருந்து நேரான இன்ப அன்பு நிலைக்குக் கொண்டு வந்து அருளுவதை 'அ' என்ற எழுத்தை எடுத்துக் காட்டியதன் மூலம் உய்த்துணரலாம். இறைவனுக்குத் தனது நாட்டமில்லை. உயிர்கள் மீதே நாட்டம். அஃது பற்றற்ற நாட்டம். ஆதலால், இறைவன் பெருநெருப்பு. நெருப்பு மாசினை நீக்கும். ஆனால் நெருப்பு மாசுபடாது. அதுபோல இறைவன் குற்றங்கள் பலவுடைய உயிர்களோடு ஒன்றாவான்; உடனாவான்; உடன் பயிலுவான். ஆயினும் மாசுபட மாட்டான். இங்ஙனம் விருப்பும் வெறுப்புமற்ற இறைவனை வாழ்த்தி வணங்குதலின் மூலம் உயிர்களும் அத்தன்மையவாகித் துன்பத்தினின்றும் விடுதலை பெறும்.

இறைவன் மனமெனும் மலரில் பொருந்தி அமர்வான். ஆனால், பலருக்கு மனம் மலராக இல்லையே! மனத்தை மணம் பரப்பும் மலராக மலர்வித்துக் கொள்வதே வாழ்க்கையின் முயற்சி. இந்த முயற்சியே கடவுளை நாடும் வாழ்க்கை இங்ஙனம், திருவள்ளுவர் கருத்தால் உய்த்துணரும் கடவுளைக் காட்டியவர். உணர மறுப்பார்க்குப் புறச்சான் றாலும், உணர்த்துவான் வேண்டி மழையின் விழுமிய சிறப்பை எடுத்தோதுகின்றார். இளங்கோவடிகளும், 'மாமழை போற்றுதும்' என்று போற்றிப் பரவுவார். இயற்கை, இறைவனைப் படித்துணரும் பெரிய சுவடி என்பர் நல்லறிஞர். இறைவனே பெருமழை பெய்விக்கின்றான்; பெய்து காக்கின்றான் என்பதைத் திருஞானசம்பந்தர் 'பெய்தவன் பெருமழை உலகம் உய்யச் செய்தவன்' என்று பாடியுள்ளார். பெருமானிடம் பிரியாதிருந்து அருள் செய்யும் அன்னையின் அருளென்னப் பொழிகின்றது மழையென்று வாழ்த்துகிறது திருவாசகம். ஆதலால், இறைவனின் அருளிச் செயற்பாடுகளில் வான்மழையே விழுமியது. இம்மழையும் இறைவனைப் போலவே விருப்பு வெறுப்பு இன்மையும், மாறுபாடும் முரண்பாடுமின்றி எங்கணும் பெய்து நலன் விளைவிப்பதும் உய்த்துணரத்தக்கது. அமிழ்தம் உண்டால் மகிழலாம். நீடு வாழலாம்; அதுபோல மழை வாழ்விக்கும். ஆயினும் மழை பெய்யும்பொழுது, காத்திருந்து ஏற்று வாங்கிக்கொண்டு முழுதும் பயன்படுத்துவோருக்கே மழை வாழ்வளிக்கும். அதுபோல இறைவனின் தண்ணருள் பொழியும். ஆயினும் தண்ணருளை அனுபவித்து இன்புற உயிர்கள் இறைவன் திருவடிகளைத் தொழுதலும், புகழ்தலும், விரும்பிச்சேர்தலும் அவன் நெறியாகிய அருள்நெறி நிற்றலும் அவசியம் என்பதை உணர்த்த வான்மழையை எடுத்துக்காட்டாகக் கொண்டார்.

உயிர்கள் வாழ்வில் பயிலுதல் உய்தற் பொருட்டேயாம். வாழ்வியலுக்கு நுகரும் பொருள்கள் தேவை. அவையின்றி உலகியல் இல்லை. உலகியல் செழுமையாக இல்லையானால் உயிர்கள் ஒழுக்க நெறிகளைச் சார்ந்து வாழ முடியாது. ஒழுங்கு, ஒழுகு, ஒழுகுதல், ஒழுக்கம் என்ற சொல் வளர்ச்சி கருதற்பாலது. இரண்டு கரைகளைத் தொட்டுக்கொண்டு, ஆனால் தொடும் கரைகளைச் சேதப்படுத்தாமல் செவ்விய தாக இடையறாது விழும் வீழ்ச்சியை நீர்வீழ்ச்சி என்கின் றோம். அதுபோல வாழ்வியல் மனிதர்கள் உலகத்தோடு ஒட்டி ஒழுகி உலகத்திற்கு இடையூறு செய்யாமல் நலம் விளைத்தலும்-நலம் பெறுதலும் ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் உலகியலில் நிலைபெற வேண்டுமாயின் பொருள் வளம் செழித்திருந்தால்தான் முடியும். வறுமை நிறைந்த வாழ்க்கையில் மனித உலகம் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்தல் அருமையிலும் அருமையேயாம். வானினின்று மழை, மழையின் பயனால் மண் மேல் வளம். வளத்தின் பயனாக ஒழுக்கத்திற் சிறந்த வாழ்க்கை என்றே திருவள்ளுவர் நம்புகிறார். இதனை,

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

என்றார். நீர் என்பதை நீர்மையென்று விரித்தும் பொருள் கொள்ளலாம். நீர்மையென்றாலும் ஒழுக்கமென்று பொருளாகும். உலகத்திற்கு ஒழுக்கம் இன்றியமையாதது. உலகு ஒழுக்கத்தால் உண்டு. இதனை "உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. ஆதலால் உலகு ஒழுக்கத்தால் நடைபெறும். ஒழுக்கம் வான்மழையால் தோன்றும் என்பதறிக.

கடவுளை, ஒழுக்கத்தைத் தாமே உய்த்துணர்வோர் மிகச் சிலரேயாம். தாமே உணர முடியாதவர்களை அவ்வழியிற் செலுத்துவோர் அந்தணர். அந்தணர் என்போர் குலத்தினாலோ, கோலத்தினாலோ, ஒதும் வேதங்களினாலோ, எண்ணும் மந்திரத்தினாலோ அல்லர். கொண்டொழுகும் செந்தண்மையினாலேயாவர். செந்தண்மை எப்பொழுது தோன்றும்? பொறிகளை அவித்த பிறகே தோன்றும். நெல்லை அவித்தால் நுகர்தற்குச் சற்றே தகுதி பெற்ற அரிசியாகிறது. அரிசியை மீண்டும் அவித்தால் நுகர்தற்கு மிகுதியும் தகுதியாகிற சோறாகிறது. சோற்றோடு சுவை சேர்ந்தால் முழுதும் நுகர்தற்குத் தகுதியாகிறது. அதுபோல "பொறிவாயில் ஐந்தவித்தல்" முதல் வேக்காடு. புலன்களை அவித்தல் இரண்டாம் வேக்காடு. இங்ஙனம் பக்குவம் பெறும் உயிர்கள் திருவருளின்பத்தோடு கூடும் போது அந்தண்மை பெறுகின்றன. அவர்களே வாழ்ந்த வர்கள் வாழ்பவர்கள். மற்றவர்களெல்லாரும் வாழாது வாழ்வோரே. இங்ஙணம் வாழ்பவர்கள் கடவுளை, அவர்தம் அருளின் மாட்சியை, வாழ்க்கையின் சிறப்பை உலகினர்க்குப் பொதுவாக அறிவுரைகள் மூலமும்-சிறப்பாகத் தம் வாழ்க்கையின் மூலமும் காட்டுபவர்கள். பொறிகளையும் புலன்களையும் அழிப்பது வாழ்க்கையின் தத்துவம் அல்ல. அவற்றின் இயல்பு துய்த்தலும் நுகர்தலுமாகும். அவற்றின் இயல்புக்கு மாறாகச் செலுத்த வேண்டுமென்ற அவசியமுமில்லை! உயிர்கள் தீயதைத் துய்த்துத் தீமை விளைவித்துக் கொள்ளாமல் நல்லதைத் துய்த்து நலம்பெறட்டும் என்பதே இறைவன் திருவுள்ளம். நலத்திலும்கூட குறைநிறை கலந்த நலமுண்டு. குறையும் நிறையும் கலந்த நலம் அழிவிலின்பத்தைத் தரமுடியாது. முழுநிறை நலமே அழிவிலின்பத்தைத் தரமுடியும்; ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பினைத் தரமுடியும். சோறு உண்டபொழுது பசியைத் தணிப்பது உண்மை. ஆயினும் அது அடியோடு பசியை மாற்றி மீண்டும் பசி தோன்றாமல் இருக்கச் செய்வதில்லை. அதுபோலவே உலகியல் இன்பங்கள் மீண்டும் மீண்டும் பசியை உண்டாக்குவன. திருவருள், இன்பப் பசியை மாற்றுவதோடு துன்பத்தின் தொடர்பையும் மாற்றும். இவ்வுயர்ந்த நெறியிலே நின்று கண்டு, கேட்டு, உண்டு, தேக்கெறிந்து வாழ்க்கையை வென்றவர்களே நீத்தார். அவர்கள் கடவுளைத் தம்மிடத்தே எழுந்தருளச் செய்து கொண்டவர்கள். அவர்கள் அருளிச் செய்யும் மொழிகள் மறைமொழிகள். இறைவன் அவர்களை இடமாகக் கொண்டு ஆடல் பல புரிகின்றான். அவர்கள் நெஞ்சத்தே நின்று உணர்த்தி உலகுக்கு உணர்த்த வைக்கின்றான். "எனதுரை தனதுரையாகக் கொண்டு நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலா” என்று திருமுறை பேசும். இவர்களே, நெறியல்லா நெறிதனை நெறியென நினைந்து வழி தவறி வாழ்க்கையில் இடறி வீழ்ந்து இன்பதுன்பச் சுழல்களில் சிக்கிச் சுழலும் உலகினருக்கு வழித்துணையாவர். இத்தகையோரே ஞானாசிரியர்கள்; ஞானாசிரியர்கள் தாயிற் சிறந்த பரிவுடையோர். தாதியிற் சிறந்த கனிவுடையோர்; நோய் நீக்குவர்; உயிர்க்கும் புகழ் சேர்ப்பர். இத்தகையோரே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்; நிறைமொழி மாந்தர்; குணமென்னும் குன்றேறி நின்றோராவர்; சித்தத்தால் சிவமேயாவர். இவர்தம் காட்சியும் கனிவிற் சிறந்த சொல்லும் உயிர்க்கு உறுதுணையாக நின்று உறுதி பயப்பனவாகும். இவர்கள் சொல்லுவதே அறம். அறம் புலமையில் தோன்றுவது அன்று. புலன்கள் பழுத்த சான்றோரிடத்தே தோன்றுவது. அறம் ஆரவாரத்தில் தோன்றுவது அன்று; அடக்கத்தில் தோன்றுவது. அறம் மாடமாளிகையில் தோன்றுவது அன்று. யான் எனது என்பனவற்றின் மரணத்தில் தோன்றுவது. இத்தகு அறமே இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் எழுமையிலும் வாழ்விக்கும். அறம் எம்பெருமானின் இருப்பிடம்; பரமசிவத்தின் ஊர்தி எருது. பரமசிவம் உயர்த்திப் பிடிக்கும் கொள்கைக் கொடி எருதுக் கொடி; பரமசிவம் எழுந்தருளியுள்ள திருக்கோயிலின் முன்றுறைக் காவல் எருதேயாகும்.

எம்பெருமானுக்கும் எருதுக்கும் என்ன இயைபு? எருது உழைப்பின் சின்னம்! பற்றற்ற உழைப்பின் வடிவு! தருமையும் சுமலையும் விரிதமிழ்க் கூடலும் திருநகராக அரசு வீற்றிருந்து அருளும் குருஞான சம்பந்தர் "எருதுக்குத் தனதிச்சை உண்டோ" என்றார். அறத்தின் சின்னமே எருது என்று திருமுறை. பேசுகிறது.

எருதின் உழைப்பு ஓயாத உழைப்பு; பற்றற்ற உழைப்பு; உழைப்பின் பயன் உலகத்திற்கே! தான் துய்க்கும் சிலவாகிய வைக்கோலும் உலகோரால் உண்ண முடியாதது. அதனைத் தின்பதும் தன்னல நாட்டமின்றி மீண்டும் உழைத்துக் கொடுப்பதற்கு வலிமை கருதியேயாம். இத்தகு வாழ்க்கை யியல்புடையோர் நெஞ்சத்தில், இறைவன் எழுந்தருளியிருப்பான் என்பதே தத்துவம்; இதுவே அறநெறி.

அறத்தின் விளைநிலம் மனமேயாம். ஓங்கி உயர்ந்த கோயில் மதிற்கவர்களில் செடிகள் முளைக்கின்றன. அதனை வெட்டி அப்புறப்படுத்துதல் சிறந்த திருத்தொண்டு என்று திருநாவுக்கரசர் செய்து காட்டினார். இன்று சிலர் இதனைச் செய்கின்றனர். பலர் செய்வதில்லை. செய்யும் சிலரும் முறையாகச் செய்வதில்லை. மதிற்கூவரில் முளைத்திருக்கும் செடியை மேலாக வெட்டிவிடுவர். கட்புலனுக்குச் செடிகள் தெரியா. ஆயினும் மதிற்கவரின் இடுக்குகளில் உள்ள வேர் முன்னிலும் ஊக்கமாக உருத்துப் பருத்து வளரும். அதுபோல பொறிகளாலாய பழக்க வழக்கங்களைச் சிலர் தூய்மை செய்வர். ஆயினும் புலன்களைப் பக்குவப்படுத்தார்.

சாந்தலிங்க அடிகள் பெருமான் 'வேரினை வெட்டாமல் காட்டினை அழிக்கமுடியாது. அதுபோல ஐம்புலப்பகையை வெல்லாமல் பொறிகளை வெல்ல முடியாது” என்பர். சங்க நூலும், "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று பேசும், பாசத்தினை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதனை, "பாசப் பழிமுதல் பறிப்பார்” என்று சேக்கிழார் கூறுவர். இந்த இயல்பு மனத்துய்மையினாலேயே முடியும். உடலியக்கத்துக்குக் குருதியும், உயிரியக்கத்திற்கு உணர்வும் அடிப்படை உடலும், உயிரும் ஒருங்கியைந்து செயற்படும் போது குருதியில் உணர்வு கலந்து செயற்படுகிறது. குருதிக்குத் தனியே இயல்பில்லை. குருதியோடு கலந்த உணர்வைப் பொருத்ததே இயல்பு. உணர்வுத் தோற்றத்தின் மையமாக இருக்கின்ற மனத்துய்மையே அறத்திற்கு அடிப்படை இதனைத் திருக்குறள்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்று பேசுகிறது. மனத் துய்மையே அறம். இஃதின்றி இயற்றும் அறங்கள் அறமாகா. அஃது வாணிகமேயாகும். வாணிகத்திலும் ஊதியம் தரும் வாணிகமன்று; இழப்பினைத் தரும் வாணிகம் என்பர் ஆரவாரத் தன்மையுடையவரை அறநெறியில் வழி நடத்துகின்ற சான்றோர். வாய்ப்புக் கிடைத்துழியெல்லாம் முடிந்த வகையிலெல்லாம் ஓயாது அறத்தினைச் செய்யச் சொல்கிறது குறள். அறம் செய்தற்கு காலம், இடம், பொருள் ஆகிய சூழல்கள் அமையவேண்டு மென்று காத்திருக்கவேண்டியதில்லை. அப்படியென்று பருமனான ஒரு சூழலுமில்லை. பலகற்கள் அதனோடே பல சிறு கற்கள் ஆகிய எல்லாமே சேர்ந்து ஓர் ஒப்பற்ற மாளிகையாக எழுதல்போல, அறமும் சிலவாகவும், பலவாகவும் பெருகி வளர்ந்து முழுமையாகிறது. இதனை,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வா யெல்லாம் செயல்

என்று திருக்குறள் விளக்குகிறது. இத்திருக்குறளில் "ஒவாதே" என்ற சொல் உணரத்தக்க ஒரு சொல். உலகத்தின் இயக்கம் ஓயாது இயங்குகிறது. அதனாலன்றோ உயிர்கள் வாழ முடிகிறது! உலகம் என்ற பேரடுப்பில் இறைவனாகிய சமையற்காரன் ஒயாது ஒழியாது சமைத்துச் சுவை குன்றாத - சுவை பழுத்த காய்களை, கணிகளைத் தரும் அற்புதத்தை நினைமின்! ஆதலால் ஓயாது அறம் செய்க! எப்பொழுதும் செய்க! புலன்களால் செய்க! பொறிகளால் செய்க! இதுவே வாழ்க்கை முறை!

ஜான் வெல்ஸிலி என்ற அறிஞன்,


"உன்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய்.
உன்னால் முடிந்த எல்லா முறைகளிலும் செய். உன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் செய். உன்னால் முடிந்த எல்லா இடங்களிலும் செய். உன்னால் முடிந்த எல்லாக் காலங்களிலும் செய்.
உன்னால் எவ்வளவு காலம் செய்ய முடியுமோ
                                        அவ்வளவு காலம் செய்”

என்று கூறினான். இதனையேதான் சுருக்கமாக "ஒல்லும் வகையால்” என்றும், "செல்லும் வாய், எல்லாம்” என்றும், வள்ளுவம் கூறுகிறது. கடவுளை நினைந்து அவனது அருளாகிய மழையில் அகமும் புறமும் நனைந்து அவனருள் பெற்றோர் வழிநின்று, அவருணர்த்தும் அறம் பயிற்றுதல் - வாழ்க்கை நெறி என்று வள்ளுவம் காட்டும் நெறியில் நின்று அந்நெறியையே வாழ்வின் வழித்துணையாய்க் கொண்டு வாழ்வோம். 
அருட் செல்வம்

வித்து முளையாகிறது; முளை செடியாகிறது; செடி மரமாகிறது; மரம் பூக்கிறது; பூ காயாகிறது; காய் கனியாகிறது. இது போன்றே மனித வாழ்க்கையும் வளர்ந்து கனியாகும் வரையில் பல்வேறு பொருட்களின் தொடர்பும், உறவும் தேவை. கனிந்த பிறகு எந்த ஒன்றன் தொடர்பும் கனிக்குத் தேவையில்லை. கனி நிலைக்கு முன்பு சுவையிலும் தர வேறுபாடுகள் உண்டு. கனி நிலையில் சுவை வேறுபாடில்லை. நிறை நலமிக்க சுவையுடையதாகிறது. இறைவனை, "பழத் திடைச் சுவையொப்பாய்” என்று அப்பரடிகள் பாராட்டுகிறார்.

"அது பழச்சுவையென” என்று மணிமொழி பேசுகிறது. அருள் பழுத்த பழச்சுவையென மறைகள் போற்றும். திருக்குறள், கருவுயிர்த்த நாள் முதல் தனி மனிதனைத் தொடர்ந்து வளர்த்து, அவனை அன்பு நெறி பயில, குடும்பத்தில் சேர்ப்பித்து, அன்புநெறியில் பயிற்றுவித்துப் பின் மேலதாகிய அருளியல் வாழ்க்கைக்கு உயர்த்துகிறது. உலகில் மனிதர்களுக்குச் செல்வங்கள் பலப்பல வேண்டும். ஆயினும் அருட்செல்வமே தலையாய செல்வம்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள

என்று குறள் கூறுகிறது.

"செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்" என்றும் குறள் கூறுகிறதே என்ற வினா எழலாம். ஞானாசிரியன் செவி வழியாக உபதேசித்தருளிய திருமந்திரச் செல்வத்தால் அருட்செல்வம் விளைவதால், உபசார வழக்கமாகச் செவிச் செல்வத்தைச் சிறப்பித்தார். அன்பின் முதிர்ச்சியில் அருள் தோன்றுகிறது. "அருளென்னும் அன்பீன்குழவி" என்று குறள் கூறுகிறது.

உடலுயிர் வாழ்க்கை இடையீடின்றி நடைபெறப் பொருள் தேவை. அதாவது, உயிர் ஊர்ந்து செல்லும் உடலாகிய எந்திரத்திற்கு எரிபொருளாக, காருக்கு பெட்ரோல் போல, துய்க்கும் பொருள்களாகிய காய்களும், கனிகளும் தேவை. அதுபோல உயிர்க்கு அருள் தேவை.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகும் இல்லாகி யாங்கு

என்று குறள் கூறுகிறது. அருள், அன்பின் முதிர்ச்சியில் தோன்றுகிறது. எந்த மொழியிலும் எந்தச் சமயத்திலும் அருள் நெறியே நெறியென உணர்த்தப்படுகிறது. உலகியலில் இருள் சூழ்ந்த நிலை துன்பத்தைத் தருகிறது. இருள் நிலையில் மேடும் பள்ளமும் தெரிவதில்லை. பழுதையும் பாம்பும் தெரிவதில்லை. எங்கும் செறிந்த இருள். இந்நிலையில் இருள் கடிந்து எழுகின்றது ஞாயிறு. ஞாயிறு எழுந்தவுடன் இருள் அகலுகிறது. உயிர்களுக்கு ஆன்ற அறிவும் ஆள்வினையும் தோன்று கின்றன். அதுபோலவே, அருட்சார்பு அற்றவர்கள் மனத்தில் இருட்செறிவால் நன்மையும் தீமையும் தெரிவதில்லை. அருளியலில் ஈடுபட்டவுடன் அறியாமை அகலுகிறது: மயக்கம் தெளிகிறது. தெளிவு பிறக்கிறது. தெளிவினுள் சிவம் பிறக்கிறது. அருள் தன்மையால் செடிகளையும் மரங்களையும்- பேணுபவன் - விலங்குகளைப் பேணுபவன் - பக்கத்தில் வாழும் மனிதர்களைப் பேணுபவன் - தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். ஆதலால், அல்லல் அவனை அணுகுவதில்லை. அவன் தன்னுயிர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. எல்லார்க்கும் தன்னுயிர் அருமையானதே. அதனாலன்றோ, அப்பர் அடிகளும் என்னினும் இனியன் என்று இறைவனைக் குறிப்பிட்டார். ஆனால், பலர் தன்னுயிரைக் காதலிப்பர். தன் உயிர் நலன் கருதிப் பிற உயிர்களுக்குக் கேடு சூழ்வர். அந்தோ, அறியாமை!

உயிர் வாழ்க்கை இயல்பிலேயே தனித்ததல்ல. அஃதொரு கூட்டு வாழ்க்கை கூட்டு வாழ்க்கையில் துன்பம் ஒருவருக்கு மட்டும் வருமாறென்ன? உயிர் வானின்றிழியும் நீர்த் துளியைப் போல்வது. நீரும் வளியும் சார்ந்த சார்பின் காரணமாக வண்ணமும், சுவையும், மணமும் பெறுதல் இயற்கை அதுபோல, உயிரும் சார்பின் வழி, இயல்புகளைப் பெறும்.

உயிர் யாதொன்றையும் சாராமல் இருக்க முடியாது. ஆதலால், உயிர் தனது சார்பிற்குரியனவாகிய பிற உயிர்களையும் அருள்நலம் செறிந்தவையாகத் தான் காணுந் தொறும் துய்க்குந்தொறும் துய்ப்பதற்கேற்றவாறு அருள்நலச் செறிவுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வீட்டினுள் வெப்பம் தாக்காதிருக்க வீட்டிற்கு வெளியில் ஒரு தாழ்வாரம் தேவை. அப்போது வெளியில் உலவும் வெப்பக் காற்று தாழ்வாரத் தண்ணிழலில் குளிர்ந்து வீட்டிற்குள் இருப்பவரைத் தண்ணென்ற தன்மையினால் வாழ்விக்கும். அதுபோல உயிருக்குத் தம்மொடு தொடர் புடைய பிறவுயிர்களின் அருளார்ந்த சூழலே வாழ்விக்கும்.

தெருக்கோடியிலுள்ள வீடு தீப்பற்றி எரிந்தால், அந் நெருப்பினை மற்ற வீடுகளுக்குப் பரவாமல் அணைப்பதே எல்லாருக்கும் பாதுகாப்பு. அங்ஙனம் செய்யாமல் எவனாவது ஒருவன் தன் வீட்டின்மீது மட்டும் தண்ணீர் அள்ளி ஊற்றுவானானால் யாது பயன்? ஊற்றிய முயற்சியும் பாழாகி, அவனும் அவன் வீடும் அழிவது திண்ணம்.

ஆதலால், எவன் ஒருவன் தன்னுயிர்க்குத் துன்பம் வரக்கூடாதென்று கருதித் தன்னுயிரைக் காதலிக்கின்றானோ, அவன் செய்ய வேண்டியது தன்னுயிர்க்காதலல்ல; மன்னுயிர்க் காதலேயாம்.



செடி கொடிகளை அன்பு காட்டி வளர்த்தால் உயிர் வாழ்க்கைக்குரிய காய்களும், கனிகளும் கிடைக்கும். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசுவினுக்கு அன்பு காட்டினால் உயிர் வாழ்க்கைக்குரிய பாலமுதம் கிடைக்கும். உயிர்க்கு இன்றியமையாத தேவையான இன்பக் கிளுகிளுப்பாகிய மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடத்தில் காட்டும் இனிய முகத்தாலும், கூறும் இனிய சொற்களாலும் திரும்பப் பெறலாம். ஆதலால் தன்னுயிரைக் காதலிப்பவன் செய்யக் கூடிய அறிவுடைய செயல், அருள் உள்ளம் கொண்டு பிற உயிர்களைப் பேணுதலேயாகும்.

மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

என்று திருக்குறள் ஒதுகிறது.

இயல்பாகவே உலகியல், அருள் என்ற அச்சிலே சுழன்று நடைபெறுகிறது. "ஒன்று எல்லாவற்றுக்காகவும், எல்லாம் ஒன்றுக்காகவும்” என்ற உயரிய தத்துவமே உலகியல் தத்துவம், விண்ணின்றிழியும் நீர்த்துளி! காய்கதிர்ச் செல்வனின் கதிரொளி தண்நிலவு! இலையால், மலரால், காயால், கனியால் வாழ்விக்கும் தாவர இனங்கள்! என்னே அருட்காட்சி! அருளின் மாட்சி! எங்கும் அருட்கூத்து! இன்பக் கூத்து! ஆனந்தக் களிப்பு! இதனை உணர்ந்தவர்கள் அருள் நாட்டம் கொள்வர்; அல்லவை செய்யார்.

இன்புறுத்தும் இயல்பில்லாதவர்க்குத் துன்புறுத்த உரிமை ஏது? ஆக்கும் திறனற்றோர் அழிக்கலாமோ? துன்புறுத்துபவர் துன்பத்திற்கு ஆட்படுவர்; நல்வினை இழப்பர்; கொடுவினை மேற்கொள்வர்.

நெருப்புப் பற்றி எரிகின்ற உடையினால் மானத்தை மறைத்தல் முடியுமோ? நஞ்சினால் செய்த பாவை நயப்புறும் இன்பம் தருமோ? நுனி மரத்தில் ஏறி, அடி மரத்தை வெட்டுதல் வாழும் வழியோ? அதுபோல உயிர்களுக்கு அல்லல் செய்தார் வாழுதல் அரிது என்று திருக்குறள் பேசுகிறது.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

என்பது குறள்.

ஈண்டுப் பொருள் என்பது வாழ்க்கையின் பயன் என்ற பொருளில் உய்த்துணர்வது அதிகப் பயனைத் தரும். மாணிக்கவாசகர் தமது பாட்டின் பொருள் இறைவனே என்றார். வாழ்க்கையின் பயன் இறையருள் பெறுதலேயாம். இதனை அப்பர் "வைத்த பொருள் நமக்கு ஆம்" என்று அருளிச் செய்துள்ளார். வாழ்க்கையின் குறிக்கோளும் பயனுமாகிய அருளை, அருள்வழிப் பெறுதலையே "கொண்டும் கொடுத்தும் பெறுதல்” என்று திருமுறை கூறும்.

அருளை மறந்து, தீமையும் செய்து ஒழுகுதல் அந்தோ பரிதாபம்! குளிக்கப் போனவன் குளிப்பதை மறந்து அங்குள்ள சேற்றைப் பூசிக்கொண்டதைப் போல இருக்கிறது. அதனாலன்றோ, சங்கச் சான்றோர் "நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்” என்று அறிவுறுத்தினர்! இளங்கோவடிகளும் "அல்லவை கடிமின்" என்று ஓதினார்.

அருள் உணர்விற் சிறந்து வாழ்வோருக்கு அல்லல் இல்லை. இதற்குச் சான்று, இந்த உலகில் ஏராளம் உண்டு. மணமிக்க மலர்களைத் தரும் செடிகளைப் பலர் விரும்பி வளர்க்கின்றனர். அன்றி அழிப்பார் யார்? இனிய காய்களைக் கனிகளைத் தரும் மரங்களை வெட்டியழிப்பார் யார்? ஒருவருமில்லை. அப்படியே யாராவது இருந்தாலும் உலகம் அவர்களை மானிடராக ஒத்துக் கொள்வதில்லை. அவர்களை உலகம் கீழான கயவர்கள் என்று ஒதுக்குகிறது. அதுபோலவே, அருள் உணர்வு உடையவர்கள் வாழ்வார்கள்; வாழ்விக்கப் பெறுவார்கள். காரணம், அவர்கள் வாழ்வில் ஞாலம் வாழ்கிறது.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி

என்பது குறள். நினைத்தொறும் இன்பம் தரும் திருக்குறள் இது.

வாழ்க்கையின் அகத்திலும் புறத்திலும் அருளாட்சி உடையோர் அல்லற்பட மாட்டார்கள். அவர்களை அவலம் அடையாது, இஃது உண்மை. முக்காலும் உண்மையென்று திருவள்ளுவர் சாதிக்கின்றார். இந்த உண்மைக்குத் திருவள்ளுவர் காட்டும் சாட்சி எது? காற்று வழங்கும் இந்தப் பெரிய உலகம் சாட்சி என்கிறார்.

இந்த உலகத்தில் வலிமையுடையார் - வலிமையற்றோர். அனுபவத்தின் இடையூறாக நிலத்தை அடைத்து எடுத்துக் கொள்ளுதல் உண்டு. தண்ணீரை அணைகட்டித் தேக்கித் தடுப்பது உண்டு. கதிரொளியையும் - தண்நிலவையும் தடை செய்ய அடைத்துச் சிறைப்படுத்தல் உண்டு. பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். ஆனால், காற்றை யாரும் அப்படித் தடை செய்ய முடியாது.

காற்று, வேலிகளுக்கும் சுவர்களுக்கும் அப்பாற்பட்டது. ஆண்டான் - அடிமை வேறுபாடுகளைக் கடந்தது. எல்லாருக்கும் காற்று எப்பொழுதும் காற்று! தேடிப் பெறுவதன்று; வலிய வந்து துணை செய்கிறது. முயற்சி செய்து காற்றுக் குடிப்பதில்லை. இயல்பில் நிகழ்கிறது. இதற்குக் காற்று வழங்கும் நிலவுலகம் சாட்சி. மனிதர்களின் கொடிய கரங்கள் இன்னமும் காற்றைத் தடை செய்யவில்லை. களங்கப்படுத்தவுமில்லை. அதுபோல, அருளாள்வார் வாழ்வித்து வாழ்வர்; மகிழ்வித்து மகிழ்வர். அருளாட்சிக்கு ஊனாட்சித் தன்மை குறைய வேண்டும்.

"பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீராகில், பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே” என்பது அப்பர்வாக்கு “ஊன் பொதி சுவர்” என்பது ஆன்றோர் வாக்கு. "ஊனினைப் பெருக்கி உள்ளொளி இழந்தேன்" என்பது ஆரூரர் வாக்கு. இதனால் ஊனுடலின் தன்மையை - பயனைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கருதக்கூடாது. ஊனுடல், உயிர் நலத்துக் கேற்றவாறு அமைய வேண்டும்.

உடல் பெருத்தால் உயிரின் ஆற்றல் முழுதும் ஊனுடலுக்கு இரை தேடுவதிலேயே கழியும். அதிலும் பயன்படும் ஊனுடல் பகுதிக்கு மட்டுமின்றி வெற்றுச் சதைகளுக்கு இரைதேடிப் போட்டு எய்த்துச் சாகவேண்டிய அவசியம் ஏற்படும். உயிர்க்குத் தேவையான ஊனுடல் போற்றுதற்கு எளிய சைவ உணவு போதுமானது.

எளிய சைவ உணவு - அதாவது காய்களும் கனிகளும் ஊனுடலை வளர்க்கப் பயன்படுவதோடன்றி நல்லுனர்விற்கும் துணை செய்கிறது. கதறக் கதறக் கழுத்தை அறுத்து இரத்தம் சொட்ட இரக்கமின்றிப் புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ஙனம் அருளாட்சியுடையவனாக இருக்க முடியும்? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

என்பது திருவள்ளுவர் வினா.

மனிதன் சுவைத்துத் தின்ற ஊனை, அதற்காக ஊனுடலினின்றும் பிரித்த உயிரைத் திருப்பித்தர முடியாது. இங்ஙணம் திருப்பித் தரமுடியாத நிலையிலுள்ள ஆற்றல் அற்ற மனிதன் உயிர் பிரித்து ஊனைத் தின்பது பாவம். அவனை நரகம் ஏற்றுக் கொள்ளும் எப்படி அவன் தின்ற ஊனைத் திருப்பித் தரமுடியாதோ, அதுபோல நரகமும் அவனைத் திருப்பிவிடாது என்பதனை,

உண்ணாமை உள்ளது உயிர்நில்ல ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

என்பர் திருவள்ளுவர். அதாவது மீளா நரகத்தில் ஆள்வர். அதனாலன்றோ இளங்கோவடிகளும் "ஊனுண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்" என்றார். சிலர், தாம் கொல்லமாட்டார்கள்; கடையில் விற்கும் புலாலை வாங்கி உண்பர். இவர்கள் கருத்து கொன்றவனுக்கே பாவம். தமக்கு இல்லை என்பதாகும். பாபம், காரியம் காரணம் இரண்டையும் பற்றிப் படரும். கொலை செய்பவன் ஏன் செய்கிறான்? புலால் உண்பவரின் விருப்பத்தை அறிந்தே கொல்லுகிறான். புலால் உண்பவர் இல்லையானால், கொல்பவரும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், புலால் உண்பவர்களே புலாலுண்ணும் குற்றத்தைச் செய்வதோடன்றிப் பிறரைத் தம்முடைய புலால் இச்சையின்மூலம் கொலைக்குற்றம் செய்யத்துரண்டுகின்றனர். கொலை செய்பவரைவிடக் கொலைக்குத் தூண்டுபவரே கொடியர் என்று திருக்குறள் வன்மையாக எடுத்துக் கூறுகிறது.

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்

என்பது திருக்குறள்.

இறைவனை நினைந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒன்றன் உயிரைச் செகுத்து உண்ணாமை மேலாய அறம் என்று வள்ளுவம் போதிக்கிறது.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

என்பது திருக்குறள்.

பிறிதோரிடத்தும் "ஒன்றாக நல்லது கொல்லாமை” என்று வலியுறுத்துகிறது. தாயுமான அடிகளும், "கொல்லா விரதம் குவலயத்தில் ஓங்குக" என்று கூறினார். வள்ளல் இராமலிங்க அடிகள் வாடிய பயிரின் வாட்டமெல்லாம் கண்டு வாடினார். உயிர் பழக்கத்தின் வழிப்பட்டது. அது சில பொழுது துன்பத்தைப் பார்த்துப் பழகிவிட்டால் அதற்குத் துன்பத்தின் கொடுமை வழக்கமாகிவிடும். இங்ஙனம் வழக்கப்பட்டோர் சிலர் பிறர் துன்பத்திலேயே மகிழ்வதையும் வாழ்வதையும் பார்க்கிறோம்.

"ஈசனுக்கு அன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார்” என்பது திருமந்திரம். ஆதலால் உயிர்த்துன்பம் கருதிப் புலால் உண்ணலைத் தவிர்த்திடுக! சுவையினால் மட்டுமின்றிப் பயனாலும் சிறந்த காய்களைக் கனிகளை உண்க

காய்களும் கனிகளும் நமக்கு உணவின் பயனைத் தருவதோடன்றி அருளாட்சிக்கும் அரண் செய்கிறது. எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் திருவுடல் ஆதலால் அனைத்துயிர் போற்றும் தவம் மேற்கொள்க!

உயிர்களின் நலம் பேணுதலே சிறந்த வழிபாடு. அதுவே அருளின் மாட்சியும் ஆட்சியுமாகும். திருக்குறளின் அருள் நெறி போற்றுமின்! பேணுமின்!

மனக் கட்டுப்பாடு

தாயுமான அடிகள், "எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் யானெனும் அகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை" என்று இரங்குகிறார்கள். "மனம் அடங்கக் கற்றிலேன்" என்று அருளாசிரியர் புலம்புகிறார். உலகின் எல்லாப் பயிற்சிகளையும்விட மனத்தையடக்கும் பயிற்சியே சிறந்தது. உயிர் வாழ்க்கையின் பயன், "அதனை மேலானதாக மாற்றுவதே"யாகும். இதனை "இது அதுவாதல்" என்பர். இரும்பை உருக்கினால் அது எஃகு ஆகும். அதுபோலப் புன்புலால் வாழ்க்கையை அருளுணர்வு கொண்டு உருக்கினால் அது தவமாகும். நிலம் உழுதலின் மூலம் நெகிழ்கிறது. அவ்வழி பயனுடையதாகிறது. தங்கத்தை உருக்கினால் ஒளியுடையதாகிறது; அணிகலன் செய்யப்படுகின்றது. இரும்பை உருக்கினால் எஃகு ஆகிறது; உறுதிப்படுகிறது. உறுதியைத் தருகிறது. நெகிழ்ச்சியும் உருக்கமும் உறுதியும் உள்ள இடத்தில் இறைவன் விளங்கித் தோன்றுகின்றான்.

தமக்கு வந்துற்ற நோயினைக் கண்டு பதறாமல் ஏற்று மகிழ்வுடன் அனுபவித்தல், பிற உயிர்களுக்கு எந்த வகையாலும் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவை தவத்தின் அடையாளம்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

என்பது குறள். உற்றநோய் நோன்றல் மனத்தால் செய்யும் தவம். உயிர்க்குறுகண் செய்யாமை உடலால் செய்யும் தவம். அகமும் புறமும் ஒத்த தவமே சிறந்த தவம். எல்லாக் கதவு களையும் அடைத்தாலே பொருட் பாதுகாப்பு உண்டு. ஒரு கதவினை அடைத்துப் பிறிதொன்றை அடைக்காது விடின், பொருட் பாதுகாப்பு இல்லை. இஃது யாவரும் அறிந்த உண்மை. இதே போல் பொறிகள் ஐந்து புலன்கள் ஐந்து ஆகிய அனைத்தையும் அடைத்து ஒன்றியிருந்து உத்தமன் திருவடிகளை நினைந்தாலொழியத் தவம் கை கூடுவதில்லை.

துன்பம் உயிரைச் சுடுவதில்லை. உயிரைப் பற்றியிருக்கின்ற குற்றத்தினையே சுடும். மருத்துவர் கட்டியினை அறுப்பர் கையினை அறுப்பதில்லை. திருவண்ணாமலை ஆதீன முதல்வர் தவஞானச் செல்வர்மீது "அடியார் தினம் தினம் செய்த பிழை பரியாது அறுத்துச் சுடுவதெல்லாம் அவர் பாசத்தையே” என்று அருட்டிரு குமாரசாமி முனிவர் பாடிய பாடல் உணரத்தக்கது. ஆதலால், துன்பத்திற்கு அஞ்சித் தவம் செய்ய முடியாது. துன்பம் பொறிகளின் வழி வந்தாலும் சரி, புலன்களின் வழி வந்தாலும் சரி, அல்லது வேறு எவ்வழி வந்தாலும் சரி, அந்தத்துன்பத்தினைத் தாங்கிக் கொண்டு தடுமாறாமல் நோற்பதே தவம். அங்ஙணம் தவம் செய்வார்மாட்டு, திருவருள் மேலோங்கி வெளிப்பட்டு நிற்கும். இதனையே அப்பரடிகள் "உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால், முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" என்றார்.

உடலையும் உள்ளத்தையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்றிக்கொள்ள முயல்வதே தவம். இத்தகு தவத்தைப் புரிந்திலனேயென்று எண்ணி ஏங்குகின்றார் மாணிக்க வாசகர்.

தவமே புரிந்திலன் தண்மல
ரிட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே யருளுகண் டாயடி
யேற்கெம் பரம்பரனே

என்பது திருவாசகம்.

களத்துமேட்டில் நெல்லைத் தூற்றுபவர்கள் நெல்லின் மீதுள்ள கருணை காரணமாக நெல்லைத் தூற்றுவதில்லை. தம்முடைய பயன் கருதியே தூற்றுகிறார்கள். அதுபோலத் தவம் செய்தால், செய்பவருக்குப் பெருமையே தவிர, தவத்திற்குப் பெருமையன்று. தவத்தினால் கடவுளுக்குப் பயனில்லை. மனிதனுக்கே பயன். "பொன்னால் பொன்னைப் பெற்றவருக்கே பயனுண்டு. ஆனால் பொன்னைப் பெற்றவரால் பொன்னுக்கு யாது பயன்?" என்று விவரிப்பர் சிவப்பிரகாச சுவாமிகள். ஆதலால் திருவள்ளுவர், "தவம் செய்வார் தம் கருமம் செய்வார்” என்று கூறுகின்றார். தவம் செய்வதால், உயிர் துன்பத்தினின்றும் நீங்குகிறது. இன்ப அன்பில் திளைத்து மகிழ்கிறது.

சிலபொழுது தவம் செய்வோர் ஆரவாரத்திற்காகச் செய்வர். புதரும் புற்றும் மூடி மறைக்கும் வரையில் ஊண் உறக்கமின்றித் தவம் செய்வர். ஆயினும், "நான் தவம் செய்கிறேன்" என்ற உணர்வோடு செய்வர். அவர்களுடைய தவம் பயனற்றது. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்பது போலப் பயனற்றுப் போய்விடும். சிலர் தவத்தில் சிறிது வளர்ந்தவுடன் சித்துகள் விளையாடுவர். அதனாலும் தவம் அழியும்; அவம் பெருகும். தவத்திற்கு 'நான்' என்ற அகப்பற்றும், 'எனது' என்ற புறப்பற்றும் அறவே நீங்கவேண்டும். இவையிரண்டும் அழியாதவரையில் தவத்தினால் பயனில்லை. தொண்ணுாற்று ஒன்பது கல் திறமையாக ஒடி நூறாவது கல்லில் விழுந்துவிட்டால் ஓடி வெற்றி பெற்றதாகக் கருதமுடியாது. புராணங்களில் வருகிற அசுரர்கள் அனைவருமே சிறந்த தவம் செய்தவர்கள். இராவணன், சூரபதுமன், இரணியன் முதலாயினோர் சிறந்த தவம் பயிற்றினும் 'நான்' என்னும் செருக்கினால் நட்டமடைந்தனர்; நடுக்குற்றனர்; தவத்தை இழந்தனர்; தண்டனைக்கு ஆளாயினர். ஆதலால் தவத்தில் பயன்,

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்

என்று திருக்குறள் பேசுகிறது. தன்னுயிரை-கண்டதை இச்சித்துத் துன்பத்திற்கு ஆளாக்காமல் தன்னுரிமையாக்கிக் கொண்டவரை ஏனைய உயிர்கள் தொழும். தொழுதற்குக் காரணம் சார்பினாலே தானும் நலம் பெறலாம் என்பதேயாகும். தானே ஆற்றினில் நீந்த முடியாதவர் படகின் துணைகொண்டு நீந்திக் கரை சேர்தலைப் போலத் தவத்திற் சிறந்தாரைப் புணையாகக் கொண்டு மற்றவரும் கரையேறலாம். அப்பரடிகளைப் புணையாகக் கொண்டு அப்பூதியடிகள் உய்தி பெற்றமை உணரத்தக்கது. மேலும் தன்னுயிர் தானறப் பெற்றவர் என்பதற்கு 'நான் என்ற சுட்டுணர்வு அழிதல்' என்று பொருள் கொள்ளுதலும் சிறப்பாகும். நான் என்ற சுட்டுணர்வு அழிந்தவர்கள் உலகத்தை வாழ்விக்கும் உத்தமர்கள். அவர்களால் உலக உயிர்கள் இன்பநலம் பெறும். ஒரு படகின் வழி, பலர் கரையேறுதலைப்போல, ஒரு தவஞானத் தலைவரின் மூலம் கோடானு கோடி உயிர்கள் உய்தி பெறுகின்றன.

மனிதன் தன்னுடைய அகப்பற்று, புறப்பற்றுகளை ஒவ்வொன்றாக விட்டொழிக்க வேண்டும். அவற்றை விட்டொழிப்பது என்றால், முற்றிலும் விட்டு விலகுவதல்ல. தவத்தின் தொடக்கத்தில் இது இயலக்கூடியதுமன்று. ஆதலால் பொருள்களை வேணவா உணர்வுடனும், விகற்ப உணர்வுடனும் நோக்காதிருத்தல்; தேடாதிருத்தல் ஆகிய பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பின்பு, தான் துய்க்கும் இன்பத்தை மற்றவர்களும் துய்க்கவேண்டும் என்று கருதவேண்டும். மற்றவர்கள் துய்த்து மகிழ்வதைப் பார்த்து மகிழப் பழகிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பிறர் மகிழ்வுக்காகத் தன்னுடைய மகிழ்வை விட்டுக்கொடுக்கப் பழகுதல் வேண்டும். இத்தகு பழக்கம் வளரவும், உறுதி பெறவும் அடிப்படையான நம்பிக்கை ஒன்று தேவை. அதாவது எல்லாம் வல்ல இறைவன் எல்லா உயிர்களிடத்தும் தங்கியிருக்கிறான். அந்த உயிர்கள் மகிழும் பொழுது இறைவனும் மகிழ்கின்றான். அந்த உயிர்கள் அழும்பொழுது இறைவனும் அழுகின்றான் என்ற அறிவும் உணர்வும் தேவை. இத்தத்துவத்தினை விளக்க அன்றோ தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில், தமிழ் வையை நதிக்கரையில் எம்பெருமான் முதுகில் விழுந்த அடி எல்லார் முதுகிலும் விழுந்தது! அதனால் எல்லா உயிர்களிடத்தும் இறைவன் தங்கியிருக்கிறான் என்பது போந்த உண்மையன்றோ!

இந்த உலகில் இலர் பலராக இருக்கின்றனர். அதாவது பலர் ஏழையராக இருக்கின்றனர். உளர் சிலரேயாம். இக் கொடுமை ஏன், என்று திருக்குறள் ஆராய்கிறது. ஆராய்ந்து முடிவும் சொல்கிறது. தனக்கென முயலாவது, பிறருக்கென முயலுநர் இருப்பதால் உலகம் நிலைபெற்று நடந்து கொண்டிருக்கிறது என்று புறநானூறு கூறுகிறது.

இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் நம்மினும் பொருளே
காதலர் காத்தல்

என்று அகநானூறு கூறுகிறது. தவம் செய்பவர்கள் இறைவனின் தண்ணருளை வாங்கித் தருபவர்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர்கள், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுபவர்கள், அகத்தே ஒத்த உரிமையுணர்வு உடையவர்கள். இத்தகு நலமுடையோர் பெருகினால், இலர் சிலராவர். உளர் பலராவர். இதனை,

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

என்ற திருக்குறளால் அறியலாம். இந்தக் குறளுக்கு வேறு வகையாலும் பொருள் கருதி மகிழலாம். அதாவது தவம் செய்தல் செல்வம்.

செல்வ நெடுமாடத் தில்லைநகர் மன்னும்
செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்

என்று திருஞானசம்பந்தர் ஒதுகின்றார். வறுமை என்பது, செல்வம் இன்மையன்று. எவ்வளவு இருப்பினும் "போதாது, போதாது” என்று மேலும் தேடுபவர்கள் உண்டு. அவர்களும் வறியவர்களேயாம். அதனாலன்றோ "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று சான்றோர் அறிவுறுத்தினர்.

தவம் செய்வோருக்கு நிறைநலம் மிக்க ஒழுக்கம் வேண்டும். சிலர் பழக்கத்தினால் புறத்தேயுள்ள ஐம் பூதங்கள்-அதாவது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவற்றில் உடலைப் பழக்கி அவற்றினாலாய துன்பத்தினில் வெற்றி பெறுவர். அதாவது நீரில் பலகால் தோய்தல், நிலத்தில் கிடத்தல், நெருப்பில் நடத்தல், விண்வழிச் செல்லுதல், வளியின் திசையினை மாற்றுதல் ஆகிய சாதனைகளில் வெற்றி பெறுவர். ஆயினும் அகத்துறுப்புகளில் ஒட்டியிருக்கும் ஆசை நீங்காது வாழ்வர். இவர்தம் எளிய நிலையினைப் பார்த்து அவர்தம்முள்ளே ஒன்றித்துக் கலந்து நிற்கும் ஐம்பூதங்கள் நகைக்குமாம் என்பதனை,

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

என்றார் திருவள்ளுவர். தவத்திற்குப் பொதுவாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உண்டு. ஆதலால், முறையாக வாழும் திறனற்றவர்கள் உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தவவேடத்தினை மேற்கொள்வர். இதனைத் திருவள்ளுவர் மிகவும் கடுமையாகக் கடிந்துரைக்கின்றார்.

பசு, புலித்தோலைப் போர்த்துக்கொண்டு மேய்தல் போன்றது, தவவேடம் பூண்டோர் பாமர மக்களை வஞ்சித்துக் காணிக்கை என்ற பெயரால் காசுகளைப் பறிப்பது. புதரில் மறைந்து நின்று ஒன்றுமறியாத புள்ளினை வீழ்த்துகிறான் வேடன். அதுபோலக் கயவன் தவவேடத்தில் மறைந்து ஒன்றுமறியாத பாமரமக்களைத் தன் வலையில் வீழ்த்துகின்றான் என்று திருவள்ளுவர் கண்டிக்கிறார். பற்றற்றார் போலக் காட்சியளித்து பற்று நீங்காதவர்கள் பாவம் செய்கிறார்கள். அப்பாவத்தால் பின்னை இரங்கிக் கவலைப்படுவதற்கு உரியராகின்றனர் என்பதை,

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்

என்று திருக்குறள் கூறுகிறது. புறத்துறவு எளிதில் கை கூடக்கூடிய ஒன்று. அதாவது புறத்துறவு என்பது கோலத்தினைக் காட்டுவது. சில திங்கள் வாளா வாழ்ந்தாலே உடல், துறவுக் கோலத்தையடையும். அவர்கள் வலிய மழித்தலோ, அன்றி நீட்டலோ செய்ய வேண்டிய அவசியமில்லை. தாமேயே பேணுதலின்மையால் உரோமங்கள் உதிர்தலுமுண்டு. தாமே வழுக்கைத் தலை வீழ்தலை இன்றும் பார்க்கின்றோம். சிலபொழுது முறையாக நீக்குவன நீக்கித் துய்மைப்படுத்தாமையின் காரணமாக நீளுதலையும் பார்க்கின்றோம். திருவள்ளுவர் உடற்பற்றுக் குறைந்து ஒழுக்கத்திற் சிறந்து விளங்கும் பொழுது தாமே நீளுதலையும் மறுக்கவில்லை. வலிய வேடம் கருதி முயற்சி மேற்கொண்டு மழித்தலையும் நீட்டலையும் மறுக்கின்றார். இதனை,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

என்பதனால் அறியலாம்.

விளக்கு எரிகிறது. சுடர்விட்டு எரிகிறது. ஆயினும் அதன் நடுவே ஒரு கறுப்பு உண்டு. அதுபோல, பொய்த் தவவேடம் பூண்டு, மனத்தில் கறுப்பு வைத்து வந்தான் என்று முத்தநாதன் வருகையைச் சேக்கிழார் வர்ணிக்கிறார்.

திருவள்ளுவர் இதனைக் காட்சியினாலே விளக்குகின்றார். குன்றிமணி நல்ல சிவப்பு நிறமுடையது; ஆயினும், அதன் மூக்கில் கறுப்பு இருக்கிறது. அதுபோலத் தவவேடத்தில் அகம் கறுத்த மனிதர்கள் வாழ்வதைத் திருவள்ளுவர் நொந்து கண்டிக்கிறார். வடிவத்தால் செவ்விய தன்மையைத் திருவள்ளுவர் எதிர்பார்க்கவில்லை. உள்ளத்தினாலேயே எதிர்பார்க்கிறார்.

அம்பின் வடிவம் நேரானதே ஆயினும் அதனால் விளையும் பயன் கொடிதே. யாழின் வடிவம் கோணலானது. ஆயினும் பயன் பலர்கேட்டு மகிழும் இசையமுது. ஆதலால், வேடத்தால் பயன் இல்லை. நெஞ்சால் துறந்து, துாயதவம் இயற்றுதலே உண்மையான தவம். தவம் செய்யும் இயல்பினரல்லாதோர், நாடகத்தால் அடியார்போல் நடிப்பது நாட்டுக்குக் கேடு. மனிதகுலத்துக்குத் தீங்கு என்பது திருக்குறள் முடிவு. திருக்குறள் காட்டும் தவநெறி பெருகி வளர வேண்டும். இதுவே நம் பிரார்த்தனை!

மனத் தூய்மை

னத்தூய்மை, நல்லொழுக்கம், தவம் முதலியன ஒரு நாளில் பொருந்திவிடுவன அல்ல. பல்வேறு நல்லியல்புகளை ஏற்று, வாழ்க்கையிற் செயற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே அவை வாய்க்கும். கள்ளாமை என்ற நல்லொழுக்கத்தைத் திருவள்ளுவர் விரித்துரைக்கிறார். ஒழுக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அல்லது வீழ்ச்சிக்கும், உள்ளமே அடிப்படை உள்ளத்தில் தோன்றிய ஒன்று அது நல்லது ஆனாலும் சரி, கெட்டது. ஆனாலும் சரி, உடனடியாகச் செயலுக்கு வராது போனாலும் காலப் போக்கில் செயற்பட்டு அதற்குரிய பயனைத் தந்தே தீரும். இதனை,


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்

என்று திருக்குறள் கூறுகிறது. திருக்குறள் குற்றத்தினை மட்டும் கூறுவதில்லை; கடிவதில்லை; குற்றத்தின் காரணத்தையும் கண்டு கடிகிறது. மனிதனின் தேவைகள் எப்பொழுதும் குறைவாகவே இருக்க வேண்டும். தேவைகளைப் பெருக்கிக்கொள்வதால், வாழ்க்கை ஆடம்பரமாவது மட்டுமல்லாமல், ஆசையையும் தூண்டும். ஆசை இல்லாத ஒன்றைப் பெறத் தூண்டும். அப்பொழுது உள்ளம் களவை நாடும். ஆதலால் களவினின்றும் விடுபட, தேவையைக் குறைக்கவேண்டும். தனது பொருளியல்புக்கேற்றவாறு அடக்கமாக, எளிமையாக வாழுதல் வேண்டும்.

"அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்”

என்பது குறள்.

களவு கருதிய இன்பத்தையும் தருவதில்லை. மாறாக, நீங்காத் துன்பத்தையே தருகிறது. அதுமட்டுமா? களவில் ஈடுபட்ட நெஞ்சத்தினர் நேரிய முயற்சிகளில் ஈடுபடுதலும் தடைப்படுகிறது. ஆதலால், களவினால் ஒரோவழி ஆக்கம் வந்தாலும், அஃது அளவிறந்து ஆவதுபோல் ஆகிப் பின் கெடும். ஆகிக்கெடுவதால், இன்ப நைப்பாசைகளைத் தோற்றுவித்து பின் அவற்றை நிறைவு செய்து கொள்ள முடியாத அவல நிலைமையையும், களவின் வழிவந்த துன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஒருவர்க்குக் கொஞ்சம் பொருள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். பொருள் எப்பொழுதும் தனித்து வராது. எனவே பொருளை நம்மிடத்துக்குக் கொண்டு வரும் இயல்புகள் என்னென்ன என்பதை ஆராயவேண்டும். பொருளைக் களவு, வஞ்சனை, சூது முதலிய இயல்புகள் கொண்டு வருவதும் உண்டு. இங்கனம் வந்துசேரும் பொருள்கள், செலவழிந்து விட்டால் பொருளுடன் வந்த இயல்புகள் போகா. அவற்றை அரிதில் முயன்றே நீக்கிக் கொள்ளலாம். ஆனால் ஊக்கம், உழைப்பு, ஆற்றல் நிறைந்த முயற்சி ஆகியவற்றுடன் பொருள் வருமானால், பொருள் கழிந்தாலும் இந்த இயல்புகள் நம்மிடத்தே தங்கி நின்று மீண்டும் பொருளைக் கொண்டுவந்து சேர்க்கும். களவு வீழ்ச்சிக்கே வழி. இந்த வழியை நாடுபவர் பொருளினால் மட்டுமல்ல. அவர்களது உடல் வாழ்க்கையும்கூட ஒறுக்கப்படும். களவில் விளைவுகள் மட்டும் துன்பமல்ல, களவு செய்தலும் துன்பவினையேயாம். ஆனால் நேரிய வழியில் பொருளீட்டுதற்கு எளிய, இனிய வழிகள் பலப்பல உண்டு. அதனால்,

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்”


என்று கூறுகிறது குறள்.

வாழ்க்கையை இரண்டு உந்துசக்திகள் வழி நடத்திச் செல்லவேண்டும். அந்த இரண்டு சக்திகளும் வெவ்வேறாகத் தோற்றம் அளித்தாலும், தம்முள் ஒன்றுபட்டனவேயாகும். ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும்; தோற்றத்திலிருந்து மேலும் வளரும். ஒன்றையொன்று தழுவியே நிற்கும். இந்தச் சக்திகள் அறிவு என்றும், அனுபவம் என்றும் அழைக்கப்பெறும். அறிவில் அனுபவம் விளைகிறது. அனுபவத்தில் அறிவு விளைகிறது. இந்த இரண்டு சக்திகளையும் முறையாகப் பற்றி நெறியில் நின்று வாழ்பவர்கள் வாழ்க்கையின் வரம்புகளை அறிவார்கள். அவர்கள் நெஞ்சத்தில் அற உணர்வு நிலை பெற்றிருக்கும். இதேபோலக் களவுடையார் மாட்டு வஞ்சனை நிலைபெற்று நிற்கும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு


என்று திருக்குறள் கூறுகிறது. கள்வர் வாழ்தலும் அரிது. களவினின்றும் ஒதுங்கியவர்கள், தவம் செய்து பெறக்கூடிய புத்தேளுலகத்தையும் பெறுவர் என்று திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

என்பது குறள்.

மனிதர்கள் தனிநிலையில் குற்றங்களின் நீங்கி நலம் பெற்று இன்புறுதலுக்கு வாய்மையிற் சிறந்த ஒழுக்கம் இல்லை. தனி மனிதனை மனித சமுதாயத்தோடு இணைத்து எவ்வித இடையீடுமின்றி இன்ப நலம் செழிக்கப் பிணைத்து வைக்கும் பெருநெறி வாய்மை நெறியாகும். இன்றைய உலகியலில் "உண்மை”, “சத்தியம்” என்ற பெயர்களில் நிலவும் ஒழுக்கக் கருத்துகளைவிட எல்லாவகையாலும் சிறந்த கருத்துடையது "வாய்மை” என்பது. இதுவே வள்ளுவர் கூறும் ஒழுக்கமாகும். தீமை பயவாத சொல்லே வாய்மை என்பது திருக்குறள் முடிவு. இக்கருத்தினைத் திருவள்ளுவர் வலிமையாகவே அறிவுறுத்துகிறார். உண்மை என்பதே சரியானது என்போருக்கு விளக்கம் சொல்வதுபோல,

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

என்று கூறுகிறார்.

எனவே, யாருக்கும் - யாதொன்றுக்கும்.எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் எந்த அளவிலும் தீமை பயவாத சொற்களே வாய்மையிற் சிறந்த சொற்கள் என்பதனை உணர்த்த "யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று கூறுகின்றார்.

எனவே சொற்கள்வாய்மையுடையனவா அல்லனவா என்பதனை ஆராய்வதற்கு அவர் சொற்களுக்குரிய கருத்துகள் அல்லது செய்திகள் நிகழ்ந்தவையா? நிகழாதவையா என்ற அடிப்படையை எடுத்துக் கொள்ளவில்லை திருவள்ளுவர். சொற்களின் ஒழுக்கத் தகுதியை ஆராய்வதற்கு அந்தச் சொற்களால் விளையும் பயனையே உரைகல்லாகக் கொள்கிறார். வாழ்க்கை சிறப்பதற்குத்தானே ஒழுக்கம்? அங்ங்னம் சிறக்கச் செய்யமுடியாத - பயனற்ற நிகழ்ந்தவற்றைக் கூறி அல்லற்படுவதில் பயனென்ன?

ஆதலால், நிகழ்ந்தது கூறல் வாய்மையன்று. நிகழ்ந்ததைக் கூறலாம், நன்மை பயக்குமாயின் நிகழ்ந்தது கூறல், தீமை விளைக்குமாயின், கூறியது பொய்யேயாம் என்பது வள்ளுவத்தின் தெளிவான ஒழுக்கம். நிகழாதது அல்லது பொய் கூறுவதும்கூட, அதனால் நன்மை விளையுமாயின், வாய்மை என்றே கொள்ளப்பெறும்.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்


என்பது குறள்.

சாக்ரடீசும் "நன்மைகளைச் சாதிக்க மருந்து போலப் பொய் கூறலாம்" என்றார். இங்ஙனம் பொய்ம்மையும் வாய்மையாதல் பெரும்பாலும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் அடிக்கடி நிகழும். இங்ஙனம் நிகழ்வதன் இன்றியமையாமை பழகுபவர்களிடத்திலுள்ள மனவலிஉணர்வு ஆகியவற்றைப் பொறுத்து அமைவதாகும். இதனை,


நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

என்ற குறள் விளக்குகிறது. சிலருக்கு நல்லதை அப்படியே நல்லதாக எடுத்துக் கொள்ளும் சக்தியில்லை. அவர்களுக்குக் கவர்ச்சி தேவை; இனிய பூச்சு தேவை. எப்பொழுதும் முறையான நன்மை கவர்ச்சியாகக் காட்சி அளிக்காது. ஆனால் நெடிய- ஆழமான - மாறாத நல்லின்பத்தை நல்கும். இத்தகு நல்லின்பத்திற்கு அழைத்துச் செல்லப் பொய்மையும் வாய்மையாக அவசியம் கருதிக் கருதப்படுகிறது. ஆனாலும் பொய், பொய்யேதான்; வாய்மையாகி விடுவதில்லை. நன்மை விளைந்தால் போதுமா? அவ்வளவு எளிமையாகவா வள்ளுவம் ஒழுக்கத்தைக் கூறும்? விளையும் நன்மைக்கு ஆழமான இயல்பு கூறுகிறது குறள். நன்மை "புரை தீர்ந்த நன்மை"யாக இருக்கவேண்டும். பெரும்பாலும் தனக்கு நன்மை அல்லது தன்னை மிகவும் நெருங்கிச் சார்ந்திருப்பவர்க்கு நன்மை என்ற மனப்போக்கே மக்களின் இயல்பு. ஆதலால் யாதொரு குற்றமும் இல்லாத நன்மை விளையும் பொழுதே பொய்ம்மையும் வாய்மையாகக் கருதப்பெறும்.

உலக வாழ்வினில் பகையும் பிணக்கும் சமுதாயத்தில் தோன்றிப் புரையோடாமல் தடுக்கும் நெறியே வாய்மை. வாய்மை சொல்லாக மட்டும் நின்று பொருள் உணர்த்தாமல் சொல்பவரின் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. "மெய்ம்மை" "உண்மை” என்ற சொற்களுக்கு இத்தகைய ஆற்றலில்லை. உள்ளதைக் கூறல் உண்மை. நிகழ்ந்ததைக் கூறல் மெய்ம்மை. உண்மை உள்ளத்தைப் பொருத்தது. மெய்ம்மை செயல்களை சம்பவங்களைப் பொருத்தது. இவற்றால் விளையும் பயன்கள் மிகுதியும் சிறப்புடையனவாக அமையா வாய்மையே மிகவும் சிறந்த ஒழுக்கம்.

பலர் வாயினால் இனிய சொற்களைப் பேசுவர். கையினால் இனியனவும் செய்வர், வடையின் வாசனையை எலிக்குக் காட்டிப் பிடிப்பதைப்போல மக்களைத் தம் வலையில் வீழ்த்திச் சுரண்டி அடக்கி ஆள! இதனை உணர்த்தவே "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க" என்று. கூறுகிறது குறள். பிறருக்கு இனியனபோலத் தோற்றமளிக்க லாம். பலர் அதை நம்பவும் செய்யலாம். ஆனால் அதனால் பயனில்லை. பலர் நம்புதலின் காரணமாகவே பொய், வாய்மையாகிவிடாது. உள்ளத்தினாலும் பிறருக்குத் தீமை கருதாத ஒழுக்கத்தையே வாய்மை ஒழுக்கம் என்று வள்ளுவம் வரையறுத்துக் கூறுகிறது. நெருப்பு மட்டுமா சுடுகிறது? நெருப்பு இருக்குமிடமும் சுடும். அதுபோலத் தீமை தங்கியுள்ள நெஞ்சும் சுடும். உள்ளத்தாலே ஒழுகுதலே ஒழுக்கம். "உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலக"த்துக்கு நன்மை விளையும்; உலகத்தின் பல்லுயிர்களும் வாழும். ஆதலால் உள்ளத்தால் பொய்யாதொழுகுவோரின் பருவுடல் அழிந்தாலும் அவர்கள் உலகத்தவருடைய உள்ளங்களில் புகழுருவத்துடன் உலவுவர். இதனை,

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்


என்று கூறி விளக்குகிறது குறள்.

உள்ளத்தால், செயலால் நன்மை நாடும் வாய்மை ஒழுக்கம் மேற்கொண்டொழுகினாலே போதும். உடம்பினை வருத்தும் தவங்கள் செய்ய வேண்டா, ஆரவாரத் தன்மையுடைய அறங்களைச் செய்ய வேண்டா. உடலின் தூய்மை தண்ணீரால் கழுவுவதின் மூலம் கிடைக்கிறது. இன்று கழுவினால் தூய்மையாக இருக்கும். ஆனாலும் நாளை தூய்மை குறையும். மீண்டும் கழுவித் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்


என்பது குறள். உடல் துய்மையைத் தொடர்ந்து கவனித்து அடிக்கடி கழுவித் தூய்மை செய்துகொண்டு, தனக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரக்கூடிய வகையில் வாழ்வதைப் போல, வாய்மையால் அடிக்கடி நினைந்து நினைந்து மனத் தூய்மையைப் பேணிக் காப்பாற்றுதல் வேண்டும்.

புறத்தே கிடக்கும் இருளை நீக்கிக் காட்சி தருவது ஒளிவிளக்கு விளக்கின் துணைகொண்டே பொருள்களைப் பகுத்துப் பார்ப்பர். சான்றோர், கையில் விளக்குக் கொண்டு நிகழ்ச்சிகளை, சம்பவங்களை ஆராய மாட்டார்கள். அவர்கள் பொய்யா விளக்கை அகத்தில் ஏற்றி நன்மையே கருதுவர்; நினைப்பர்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

என்பது குறள். திருவள்ளுவருக்கு வாய்மை ஒழுக்கத்தில் ஏற்பட்ட அளவுகடந்த பற்றுதலின் காரணமாக, அவர் ஐயத்திற்கிடமின்றியும், உறுதியாகவும், தெளிவாகவும் வாய்மையை வலியுறுத்துகின்றார்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

மனித குலத்தை அலைக்கழிக்கும் கொடிய தீமைகளில் ஒன்று வெகுளுதல். அதாவது கோபப்படுதல். பலர் எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். அவ்வழி வெகுண்டு தமக்கும் பிறர்க்கும் தீங்கிழைக்கின்றனர். நொய்யரிசி உடன் வேகும்; அடிப்பிடிக்கும்; களியாகும்; பொலிவு காணாது உண்பவர்க்குச் சுவையும் நிறைவும் தராது. ஆனால் அரிசி அப்படியல்ல. நின்று வேகும்; முறையாகவும் வேகும்; சோறும் பொலிவு காணும்; உண்ணவும் இனிமையும் மனநிறைவும் தரும்.

அதுபோல, எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் எளிதில் வெகுளிக்கும் ஆளாகின்றனர். தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், "சேர்ந்தாரைக் கொல்"லும் சினத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதே அவரைச் சூழ்ந்துள்ள இனம் தொடர்ந்து சூழ்ந்து நிற்கும்.

சினத்தினால் நன்மை விளைவதில்லை; இன்பம் விளைவதில்லை. மாறாகக் கேடே விளைகிறது. கையால் நிலத்தை ஓங்கி அறைந்தால் நிலத்திற்கு நோவில்லை; கைக்கே வலி, வலியோடு மட்டுமல்ல, கையொடிந்தாலும் ஒடியும். அது போல ஒருவர் சினத்தால் பிறருக்கு விளைவிக்கும் தீமையை விட அவர் பெறும் தீமையே அதிகம் என்பதனை,

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று


என்று கூறுகிறது.

ஆதலால் சினத்தினைத் துறந்து பெரிய துறவியாகச் சொல்கிறார் திருவள்ளுவர். தவத்திற் சிறந்தோர் பலர் சினத்தால் தம்மையும் தவத்தையும் இழந்த வரலாறுகள் ஏராளம் என்பதனை உணர்த்தி, வெகுளியிலிருந்து விலகச் சொல்கிறார்.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


என்பது குறள். வெகுளாமல் இருக்க முடியவில்லையே என்ற குறையிருக்கலாம். பலர் வேண்டுமென்றே நமக்குத் தவறுகளையும், துன்பங்களையும் இழைத்துக் கோபத்தை மூட்டலாம். இதனைக் காரணம் காட்டிக் கோபத்தை நியாயப்படுத்தக் கூடாது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கோபம் தம்மை வந்து பொருந்தாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை.

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று


என்று கூறுகிறது, குறள்.

வெகுளியைத்தொடர்ந்து தோன்றும் தீயொழுக்கம், இன்னா செய்தல், பிற உயிர்களுக்குத் தீமை செய்யாதொழுகுதலே அறிவுடைமையாகும்; பேரறமுமாகும். இதனை,

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

என்று கூறுகிறது. எனைத்தானும்- எஞ்ஞான்றும்- யார்க்கும்-மனத்தானாம்-அவருடைய சொற்களின் அடுக்கு. அந்தச் சொற்கள் தரும் பொருள்கள் மிகவும் வலிமையுடையன. எந்தவொரு மனிதனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே விரும்புவான். நோயில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோமா? நோயைத் தடுப்பதற்குக் கம்பளி உறைகளோ, கவசங்களோ முற்றிலும் பயன்படா. பிறருக்கு நோய் செய்யாமல் இருக்க வேண்டும். பிறருக்கு நோய் செய்பவர்கள் இன்றோ நாளையோ நோய்க்கு ஆளாவது இயற்கை நியதியும்கூட பிறர்க்கு நோய் செய்யாதே, நோய்க்கு ஆளாகாதே என்பதனை,

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

என்று கூறி விளக்குகிறது.

வெகுளாமையைத் தொடர்ந்து போற்றி ஒழுக வேண்டிய அறம் கொல்லாமை. வெகுளி காத்தாலே, கொல்லாமை ஒழுக்கம் தானே அமையும். ஒருக்கால் வெகுளி எல்லை கடந்தால், வெகுளியின் வழி கொல்லாமலாவது இரு என்று குறள் கூறுகிறது. "அறவினை யாதெனின் கொல்லாமை" என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. உயிர்களின் வளர்ச்சிக்கும், உய்தலுக்கும் கருவியாக அமைவது உயிர்க்குப் பருவுடலோடுள்ள தொடர்பேயாகும். இந்தத் தொடர்பை நீக்குதல் உயிர்களின் முன்னேற்றத்துக்கும் உய்தலுக்கும் தடை செய்தலாகும். இஃது அரசியல் வழியிலும் குற்றம்; அருளியல் வழியிலும் குற்றமாகும் என்பதனை உறுதிப்படுத்த, "அறவினை யாதெனிற் கொல்லாமை" என்றும், "ஒன்றாக நல்லது கொல்லாமை” என்றும்,

நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

என்றும், பல்லாற்றானும் கூறி, வலியுறுத்துகிறார். கொல்லா திருத்தலை மட்டும் திருவள்ளுவர் அறமாகக் கருதவில்லை. சமூக ரீதியாக-சமூகம் ஒருவரை உணவு முதலியன இல்லாமல் தாமே சாக விடுதலையும் கொலைக் குற்றமாகவே கருதுகிறார் என்பது வேறு எந்த நீதி நூலிலும் இல்லாத சிறப்பு.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்ற குறள் நினைந்து நினைந்து மகிழத்தக்கது. வளம் பல படைத்த உலகத்தில் கிடைக்கும் வளங்களைப் பகுத்துக் கொடுத்து, உண்டு, வாழ்வித்து, வாழ்தலே அறமாகும்; எல்லா நூல்களும் உணர்த்தும் அறமாகும். ஆதலால், களவு விடுத்து, வாய்மை ஏற்று, வெகுளி நீக்கி, இனியன செய்து, பகுத்துண்டு வாழ்தல் மனத் தூய்மையைப் பெறுதற்குரிய வழி. இங்ஙனம் குறள் கூறும் ஒழுக்க நெறிகள் நம்மிடை நிலவுமாயின் இன்பம் சூழும். இந்த அதிகாரங்கள் துறவற இயலில் இருந்தாலும் மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் உரியனவேயாம்.

பேரின்பம்

யிர்களுக்கு இன்ப வேட்கை இயற்கையிலும் இயற்கை உயிர்கள் இன்ப நலத்தில் நாட்டம் கொண்டே ஓயாது உழைக்கின்றன. சடப்பொருள்களாலாய உலகத்தின் நோக்கமும் உயிர்களுக்கு இன்பம் தருவதேயாம். இறைவன் ஐந்தொழில் நடத்துவதும், பெண்பால் உகந்தாடுவதும் உயிர்களுக்கு இன்பத்தைப் புணர்த்தும் நோக்கத்துடனேயாம். எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்பி அலைந்தாலும் அவை பெறுவது என்னவோ துன்பமாகவே இருக்கிறது. இஃது ஏன்? கடவுளின் இலட்சியமும் உயிர்களுக்கு இன்பத்தைத் தருவது இயற்கையின் இலட்சியமும் உலக உயிர்களுக்கு இன்பத்தைத் தருவது; மனிதப் பிறப்புகளில் கூட நெஞ்சத்தால், முகத்தால், மொழியால் உயிர்களுக்கு இன்பம் தருதலே இலட்சியமாகும். இங்ங்னம், எல்லாம் இன்பச் சூழலுக்கென அமைந்திருந்தும் துன்பம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? இதனைத் திருக்குறள் ஆராய்ந்து வழி காட்டுகிறது. அறியாமையின் காரணமாக நன்றைத் தீதென்றும், தீயதை நன்றென்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றும் மயங்கி மாறுபட உணர்வதாலேயே துன்பம் விளைகிறது.

ஆமையை அவித்துண்ணும் ஒரு வீடு. அடுப்பில் உலைப்பானை ஏற்றி, விறகு வைத்துத் தீமூட்டி ஆமையை உலைப்பானையில் இடுகின்றனர். அடுப்பு எரிகிறது; தண்ணிரில் கிடந்து மரத்துப்போன ஆமைக்கு இளம் குழு இன்பமாக இருக்கிறது. ஆமை உலைப்பானையில் மகிழ்ச்சிப் பெருக்கில் மகிழ்ந்து ஆடுகிறது. ஐயகோ! சில மணித்துளிகளில் தண்ணீர் கொதி நிலையாக மாறித் தாங்கொணா வெப்பத்தால் வெந்து அழியப்போகிறோம் என்று எண்ணிப் பார்க்க ஆமையால் முடியவில்லை. அதுபோல உயிர்களும் முறை பிறழ்ந்த மனப்போக்குகளாலேயே துன்பம் அடைகின்றன. இதனை,

பொருளல்ல வற்றைப் பொருள்என் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

என்றும் குறள் தெரிவிக்கின்றது.

பொருளும், பொருளினால் விளையும் பயனும் ஒரோவழி மாறுபடாமல் இருப்பதுண்டு. பல சமயங்களில் அவை தம்முள் மாறுபடும். அப்பொழுதெல்லாம் களைப் பயன் நோக்கியே கருத வேண்டும். பொருள் கருதி எடுத்துக் கொள்ளக்கூடாது. வேம்பு கசப்பானது. கரும்பு இனிப்பானது. கரும்பு உண்பது அதிகப்பட்டால் தீமை விளையலாம். வேம்போ குறையினும், மிகினும் தீமை தராது. உறவும் நட்பும் இனிமையானது. ஆனால் எந்த நட்பு இனிமையானது? குற்றங்கடிதலும், குணம் உவத்தலும் கலந்த நட்பே இனிய நட்பு. இத்தகு நட்புறவில் தீமை இல்லை. போலி இன்ப நைப்பாசைகள் கலந்த உறவு இன்பம் போல் தோற்றித் துன்பம் தரும். எது, என்றும்- எப்பொழுதும் துன்பங்கலவாத அழிவின்பத்தைத் தருமோ அதுவே பொருள். மற்றவையெல்லாம் பொருளல்ல என்பது கருத்து. இதனை வலியுறுத்தவே.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று குறள் கூறுகிறது.

துறவு மனப்பான்மை பல காரணங்களால் தோன்றலாம். ஆனால் சிறந்த அனுபவ அறிவின் முதிர்ச்சியில் தோன்றுவதே சாலச்சிறந்த துறவு. துறவு என்றால் சந்நியாசம் என்றே பொருள்கொள்ளுதல் முறையன்று. அது துன்பத் தொடக்கினையுடைய பொருள்களின் நிலைமை அறிந்து உணர்ந்து, அவற்றினின்று விலகுதலேயாம். மனையற வாழ்க்கை மேற்கொண்டோரில் மிகச் சிறந்த துறவு மனப்பான்மையுடையோர்களும் உண்டு. திருநீலகண்டர், இளையாங்குடி மாறனார் ஆகிய அடியார்களின் வரலாறும், அண்ணல் காந்தியடிகளின் வரலாறும் எண்ணத்தக்கன; உணரத்தக்கன. உலகம் நிலையற்றது என்பது வரலாற்றுத் தத்துவ அறிஞர்களின் முடிபு. உலகம் நிலையற்றது என்றால் உலகம் அழியக்கூடியது என்பது பொருளன்று. உலகம் அழிவதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எப்பொழுதோ ஒரு தடவை உலகத்தின் வடிவம் மாறலாம்; தன்மை மாறலாம். அவ்வளவுதான். உயிர் உலகத்தோடுள்ள தொடர்பே நிலையற்றது. இத்தொடர்பு மாறுதலுக்குரியது; மாறும். ஆதலால் தொடர்பின் அமைப்புகள், கூறுபாடுகள் மாறுவதற்கு முன்பு, உரியவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே ஆன்றோர் கருத்து. இளமை, உடம்பு, செல்வம் முதலியவற்றோடு உயிர்களுக்குள்ள உறவு சீக்கிரத்தில் மாறுதலுக்கு ஆளாவது சிலபொழுது அழிந்து மாறுபடும். இவற்றோடு உயிர்களுக்குள்ள தொடர்பே நிலையில்லாதது. பொருள்கள் நிலையில்லாதவையல்ல.

நில்லாத வற்றை நிலையின யென்றுணரும்
புல்லறி வாண்மை கடை

என்று வள்ளுவம் கூறுகிறது.

நிலையில்லாதனவற்றைக் கொண்டு நிலையாயின செய்தல் அறிவுடைமை. செல்வம் நிலையில்லாதது. ஆனால், செல்வத்தினைக் கொண்டு நிலையான பல அறங்களைச் செய்யலாம். செய்யலாம் என்று காலங்கடத்துவதாற் பயனில்லை. மனம் மன் வீட்டில் குடி புகுந்து கொள்ளும். பின் செய்ய மனம் வராது. அவா வெள்ளக் கடலுள் ஆழ்ந்து அழிவதைத் தவிர வேறு வழியில்லை. அதுபோன்றதே இளமையும். எப்பொழுதுமே காலம் மாதம், ஆண்டுக் கணக்கில் உருவம் திரண்டு ஓடிவிடுவதில்லை. நிமிடங்களாக, மணிகளாக ஒரு நாளாக அற்பமானவை போலக் காட்டி, ஆயுட் காலத்தை அரித்துச் சாப்பிடுவது கால நியதியின் கொள்கை நாள்தோறும் கிழிக்கின்ற நாட் காட்டியை காலண்டரை ஆண்டுத் தொடக்கத்தில் பார்த்தால் பல தாள்கள் அடங்கியிருப்பதால் பகுத்தும் உருத்தும் இருக்கும். நாள் ஆக ஆக ஒவ்வொரு தாளாகக் கிழிக்கப் பெற்றுக் கடைசியில் ஒரு தாளும் இல்லாமல் கிழிபட்டுப் போகிறது; உருவம் இளைத்து விடுகிறது. இது போன்றதுதான் மனிதனின் வாழ்நாள்களும், இன்று என்றும், நாளை என்றும் கழிந்து கடைசியில் இன்றுமில்லாமல் பிணமாகும் நிலை ஏற்படுகிறது. ஆதலால் இந்த உணர்வைத் திருவள்ளுவர் எவ்வளவு எளிமையாக, ஆனால் உணரக்கூடிய வகையில் உணர்த்துகிறார்! இதனை,

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்

என்று குறள் கூறுகிறது. நாள்களை அவமே வீணாக்காது, பிறப்பின் பயனை அடைய முயலவேண்டும்.

"காற்றுள்ளபொழுதே தூற்றிக் கொள்” என்பது பழமொழி. இந்தப் பழமொழி இன்றைய உலகியலில் தவறான கருத்தில் வழங்கப்பெற்றாலும், இந்தப் பழமொழிக்குச் சிறந்த தத்துவப் பொருள் உண்டு. அதாவது உயிர் உடம்பொடு புணர்ந்து இயங்கும்பொழுதே அதற்கு இயக்கம் உண்டு; சிந்தனை உண்டு; செயல் உண்டு. உடம்பொடு உயிர் புணர்ந்து நிற்பதற்குச் சாட்சி, விடும் மூச்சுக் காற்றேயாம். அந்த மூச்சுக் காற்று இருக்கும்பொழுதே தீமையைத் தூற்றிவிட்டு, நன்மையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆதலால் நிலைத்தல் நிலையாமை தெரிந்து, துன்பத் தொடக்குடைய பொருள்களைத் துறந்து, இன்பத்தினை யடைதல்வேண்டும். "ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்ப அன்பினை" யடைய ஒரே வழி "யான்" என்ற அகப்பற்றும் "எனது” என்ற புறப்பற்றும் நீங்குதலேயாம். இதனை.

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்

என்ற குறளால் அறியலாம். அவா என்பது அரைக்கீரை போன்றது. அரைக்கீரை கிள்ளக் கிள்ளத் துளிர்க்கும். அதுபோல, அவா ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு அடர்ந்து எழுந்துவரும். "அவா வெள்ளக் கள்வனேனை" என்பது மணிமொழி. அவாவே எல்லாத் துன்பங்களுக்கும், அத்துன்பங்களை நொந்து அனுபவிக்கும் பிறப்புகளுக்கும் காரணமாகும். இதனை,

அவாவென்ய எல்லா வுயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து

என்ற குறளால் அறிக.

திருவள்ளுவர்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

என்று கூறுவது எண்ணத்தக்கது. ஏன்? செல்வத்தின் பயன் இன்பம். ஆனால் செல்வம் ஈட்டும் பொழுதும் ஈட்டிய செல்வத்தைப் பாதுகாக்கும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் துன்பமே தருகிறது. அதனால், "வேண்டாமை யன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை" என்று கூறுகிறார். பேரின்பப் பேற்றுக்குத் தூய்மையே அடிப்படை அவாவின்மையின் விளைவே தூய்மை, அவா வெளிப்படையாக மட்டும் வேலை செய்யாது. வஞ்சனையாகவும் வேலை செய்யும். ஒன்றைக்காட்டிப் பிறிதொன்றைத் தருவதே வஞ்சனையாகும். வெண்ணெய் என்று கூறிச் சுண்ணாம்பைத் தருவதுபோல, அவாவும் போலிக் கவர்ச்சிகளால் மயக்கித் துன்பம் விளைவிக்கும் என்பதை,

"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா"

என்ற குறளால் அறியமுடிகிறது. துன்பமே கொடுமையானது. துன்பத்துள் துன்பம் எதுவாக இருக்க முடியும் நிச்சயம் ஒரு துன்பமாக இருக்க முடியாது. காரணம், துன்பம் தோன்றும், ஆனாலும் மாறுபடும். ஆனால் அவாவோ மாறாத் துன்பத்தைக் கொடுக்கும். இதனை,

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

என்று கூறி விளக்குகிறது.

ஆசை கடல் போன்றது. கடலுக்குக்கூடக் கரையுண்டு. ஆசைக்கு ஏது எல்லை? ஆசை தகுதி பார்க்குமா? நீதி நியாயம் பார்க்குமா? இல்லை வெட்கந்தான் படுமா? அதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு பச்சை நிர்வாண தேவதை! அதைப் பூசிப்பவர்கள் அழிவார்கள்.

அதனாலன்றோ திருமூலரும்,

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

என்று கூறினார். திருவள்ளுவரும், அவா நீங்கியவுடனேயே மாறாத பேரின்பம் கிடைக்கும் என்பதனை,

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர், பிறவி நோயைக் கொடிய பகையாகக் கருதுகிறார். இந்நோய்க்குக் காரணமாயுள்ள காமம், வெகுளி, மயக்கங்களைச் சாடுகிறார். இவற்றின் பெயரும் கூடக் கெடவேண்டும் என்று கூறுகிறார்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

என்பதிலுள்ள உறுதி உணரத்தக்கது.

மழை நீருக்கு வண்ணமில்லை; மணமில்லை; ஆயினும் சார்பினால் அவற்றைப் பெறும். காற்றிற்கு மணமில்லை; சார்பினால் அதனைப் பெறும் உயிரும் இத்தகையதே. உயிர் யாதானும் ஒன்றைச் சார்ந்து நிற்கும் இயல்புடையது. உயிர் இயல்பாக ஆணவம் என்ற அழுக்கைச் சார்ந்திருக்கிறது. இந்தச் சார்பின் காரணமாக உயிரின் அறிவு மயங்குகிறது; பேதைமை அடைகிறது. இதனை, உயிர் உணர்ந்து இந்தச் சார்பைக் கெடுத்து, தனக்குவமையில்லாதானாக விளங்கும் இறைவனோடு சார்பு ஏற்படுத்திக் கொண்டால், உயிர் அறிவு நலம் பெறுகிறது; வளர்கிறது. வாழ்கிறது; உய்தி பெறுகிறது. இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

என்று தெளிவுபடுத்துகிறது. அதனால், பேதைமை நீங்க வேண்டுமா? பேதைமையின் காரணமாகச் சங்கிலித் தொடர்போல வரும் பிறவித் துன்பங்கள் ஒழிய வேண்டுமா? என்று ஆராய்வது அறிவுடைமை. இதனை ஆராய்ந்து பல் வேறு சிறப்புகள் அனைத்திலும், சிறந்த, 'சிறப்பு' என்றே பேருடைய செம்பொருளைக் காணுதல் வேண்டும்.

சில பொருள்கள் எதில் ஊறுகின்றனவோ அந்தப் பொருளின் தன்மையை-சுவையைப் பெறும். அது போல உயிர் எதை நினைக்கிறதோ அல்லது எண்ணுகிறதோ, அவ் வழியாக அது ஆகும். இதனையே இன்றைய உளநூலோர் "எண்ணியபடியே வாழ்க்கை" என்று கூறுகின்றனர். இதனை,

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு

என்ற குறளால் உணர்க.

செம்பொருள் காணும் முயற்சிக்கு ஐயம் ஒரு பெரிய தடை அறியாமையைக்கூட மன்னிக்கலாம். ஆனால், ஐயத்தை அனுமதிக்க முடியாது. காரணம் இதுவோ, அதுவோ என்ற ஐயப்பாட்டிலேயே உழலச் செய்து உருக்குலைக்கிறது. எந்த ஒன்றிலும் துணிந்து இறங்க முடியாமல் தடுக்கிறது.

அறியாமை, பேதைமை இருந்தாலும் அனுபவத்தால் மாறும். ஆனால் ஐயமோ, அனுபவத்திற்கே தடை ஆதலால், பேரின்ப வாயில் நுழைவுக்கு முதலில் ஐயம் நீங்க வேண்டும். பின் தெளிவு தேவை.

ஐயம் நீங்கித் தெளிவு தோன்றின் பேரின்பம் எளிதில் கிடைக்கும் என்பதை வள்ளுவர் நயம்படக் கூறுகிறார். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, மண்ணுலகத்தைவிட விண்ணுலகமே பக்கத்திலிருப்பதாகக் கூறுகிறார்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து

என்பது குறள்.

உடலும், உயிரும் இயைந்து ஒன்றுபட்டு உலாவும் பொழுது தங்கியிருக்கும் இடத்திற்கே வீடு என்று பெயர். வீடு என்ற சொல் விடுதல் பொருள் உணர்த்தும் சொல்.

குடியிருக்கும் வீட்டுக்கு, வீடு என்று. பெயர் வந்தது எப்படி? சிலருக்குப் பலகாலும் பயிலும் வீட்டில் படுத்தாலே தூக்கம்வரும். சிலருக்கு வீட்டைவிட்டு வெளியே இருப்பது அமைதியைத் தராது. அது மட்டுமின்றி, கடும் கோடை வெயில், வருத்தும் பனி, கொடிய விலங்குகளின் பகை ஆகியன தரும் துன்பத்திலிருந்து, விடுதலை தந்து-இன்பம் தருவதால் வீடு என்று பெயர் பெற்றது.

இத்தகைய ஒரு வீடு சொந்தத்தில் இல்லாதவர்கள் மிகவும் குறைப்படுகிறார்கள்; துன்பப்படுகிறார்கள். குடியிருக்க வீடுகூட இல்லையே என்று கவலைப்படுகிறார்கள். சொந்தத்தில் வீடு இல்லாதவர்கள் இயல்புக்கேற்ப வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள். வாடகை வீடுகளில் குடியிருப்பது வசதியாக இருப்பதில்லை; மேலும் துன்பமுமாம். வாடகைக்கு வீட்டைத் தந்திருக்கும் வீட்டின் சொந்தக்காரர்களுக்கு வாடகையைப் பற்றிக் கவலையே யன்றி, வசிப்பவர் வசதியைப் பற்றிக் கவலையில்லை. அதனாலன்றோ, வாடகை வீடுகளில் குடியிருந்து அலுத்தவர்கள் எப்படியாவது சொந்த வீடு கட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்; கட்டி மகிழ்கிறார்கள்!

சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போகும் வீட்டுக்கே இந்த நிலையென்றால் அழியாத இன்பத்தைத் தரும் பேரின்ப வீட்டை என்னென்று புகழ்வது; வாழ்த்துவது!

உயிர் உடம்பில் தங்கியிருக்கிறது. உயிருக்கு இந்தக் குடியிருப்பு நிலைத்ததன்று. இந்த உயிர் முன்னே பல குடியிருப்புகளில் குடியிருந்து, குடியிருந்து களைத்து வீடுகளை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. உயிர் முன்னே குடியிருந்து காலி செய்த வீடுகள் பலப்பல என்ற கருத்தினை- 'எழு பிறப்பு' என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவம் விளக்குகிறது. இதனையே,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

என்று மணிவாசகமும் பேசுகிறது. ஐயகோ! நினைத்தாலும் துன்பம் தரும் குடியிருப்புகள்! குடியிருப்புகளாவது தனியே வாழ்ந்த குடியிருப்புகளா? இல்லை! ஒட்டுக் குடித்தனங்கள்! உடன் குடியிருந்தவை ஐம்பூதங்கள்! அவை தம்முள் ஒன்றுக்கொன்று முரண்பாடு தோன்றும் பொழுது ஏற்படும் நிலைமையைச் சொல்ல வேண்டா. நோய்க்குக் காரணம் யாதோ? மருந்து இடுவது யாரோ? என்ற நிலை. இத்தகு துன்பம் தரும் குடியிருப்புகளை விட்டு விலகி, விடுதலை பெற்று நிரந்தரமாகக் குடியிருக்கக்கூடிய வீடு-இறைவன் திருவடி-உயிர்க்குக் கிடைக்கவில்லையா? என்று திருவள்ளுவர் இரங்குகின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ? உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

என்பது குறள். இறைவன் திருவடியாகிய இன்பம் ஒன்றே உயிர்க்கு நிலையான இன்பம்; வாழ்வற வாழ்விக்கும் இன்பம், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பும் இதுவேயாம் என்பதே திருக்குறள் முடிவு.

ஊழ்

வாழ்க்கைப் பண்ணையில் உயிர்கள் பக்குவப்படுத்தப் பெறுகின்றன. திருவள்ளுவர் உலகத்தின் முதலாகவும், பயனாகவும் சாட்சியாகவும் இருப்பவற்றைப் பாயிரத்தில் ஓதுகிறார். பின் மனிதன் மனையிலும், மனையின் நீங்கிய துறவிலும் செய்யும் கடமைகளை விரித்து ஓதிய திருவள்ளுவர், அச்செயல்களின் பயனாகிய ஊழை ஓரியலாக ஓதுகிறார்.

ஊழைத் தொடர்ந்து பொருட்டால் வருகிறது. அறத்துப்பாலில் பயின்ற வினைகளே ஊழாகவிளைந்து பொருட்பாலில் பயன் தருகிறது. பொருட்பாலில் திருவள்ளுவர், ஊழின் பயனாக விளையும் உலகத்தையும், அவற்றை வெற்றிகொள்ளும் வழியையும்- வழி வகைகளை யுமே பேசுகிறார். அறத்துப் பாலில், ஊழுக்குக் காரணமாக அமையும் ஒழுக்கங்களைப் பேசுகிறார்.

உயிர், பொறி புலன்களால் செய்யும் செயல், செயல்களின் விளைவாகிய ஊழ்; அவரவர் செயலின் பயனை ஊழை அனுபவிக்க வேண்டுமென்ற நியதி, எல்லாவற்றையும்

தி.II.17 ஆட்டுவிக்கும் இறைவன்; இந்த நான்கினையும் ஆராய்தலே தெளிவு.

ஊழ் வினையின் விளைவு. விளைந்து ஊட்டுதல் என்பதுபொருள். "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பது சிலம்பு. பருவுடலுக்குக் கூழ் உணவு, நுண்ணுடலுடன் கூடிய உயிர்க்கு ஊழ் உணவு; உணவைத் தகுதி பார்த்து மருந்துபோல உண்ணின் உடலுக்குத் துன்பம் இல்லை. முறைகேடான உணவுகளை முறை தவறி, தேவையை மீறி உண்ணின் நீங்காத் துன்பம். எந்த உணவு இன்பத்தைத் தரவேண்டுமோ அதே உணவு துன்பத்தைத் தருகிறது. குற்றம் உணவின் மேலன்று; உடல்மீதும் அன்று. உணவின்மீது முறைதவறி வைக்கப் பெற்ற இச்சையே காரணமாகும்.

அதுபோல உயிர்க்குச் சிந்தனையும் செயலும் இன்பம் தரும்; உய்தியினைத் தரும். உயிருக்கு இயற்கை செயற்படுதலேயாம். அதனால் அன்றோ திருவள்ளுவரும் மடிசெய்து என்றார். வினைசெய்தல் உயிர்களின் கடமை. வினை செய்தல் மூலமே உயிர்கள் அறிவும் தெளிவும் அழிவிலின்பமும் பெறுகின்றன. ஆயினும் இன்பத்திற்குரியனவாகிய வினைகளே துன்பங்களையும் விளைவித்தலைப் பார்க்கிறோம்; இன்பத்தையும் விளைவித்தலைப் பார்க்கிறோம். உயிர் இன்ப துன்பங்களால் சுழலும் சுழற்சியில் சிக்கி அலமருகிறது.

உண்மையில் வினைசெயல் உயிருக்கு நல்லதா? கெடுதலா? வினை செய்தலைத் தவிர்க்க முடியுமா? அப்படி முடிந்தால் வினை செய்தலிலிருந்து விலகுவது நல்லதா? நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் நம்முடைய படைப்புகளா? அல்லது கடவுளின் படைப்புகளா? அல்லது உயிருக்கும் இறைவனுக்கும் தொடர்பின்றி ஊழ் படைத்த படைப்புகளா? இந்த வினாக்களுக்குத் தெளிந்த விடைகளைக் கண்டு கொள்ளாத வரையில் வாழ்க்கை மையலுறும்; கலங்கும்; நீடிய நல்லின்பங்கள் விளையா.

அன்புகூர்ந்து தெளிவாகச் சிந்தனை செய்யுங்கள்! திருக்குறள் உலகத்திலிருந்து சிந்தனை செய்யுங்கள்! திருவள்ளுவர் வழியில் சிந்தனை செய்யுங்கள்! வையத்தில் வாழ்வாங்கு வாழுங்கள்! இறைவன் அடி நினைத்து இன்புறுங்கள்!

வினை செய்தல் உயிரின் இயற்கை கடமை, வினை செய்தலே உயிர் உய்தற்குரிய வழி. "எது எமைப் பணி கொளுமாறது கேட்போம்” என்று மணிமொழி பேசுகிறது. அப்பரடிகள் “என்கடன் பணி செய்து கிடப்பதே" என்றார். ஆனால் எந்த வினையை எந்த அடிப்படையில், எந்த நோக்கத்தில் செய்வதென்பதே ஆய்வுக்குரியது.

தலையில் தண்ணீர்ப் பானையைத் தூக்கிக் கொண்டு ஒருவன் நடக்கிறான். பானை தானே ஆடி வீழ்வதில்லை; பானை ஆடவும் முடியாது. உடல் ஆட்டத்தினாலேயே பானை ஆடும். ஆனால் பானை ஆடி வீழ்ந்தது என்றே சொல்லுவான். காரணம் தன் உடல் ஆட்டத்தை மறைக்க வேண்டுமென்பதே. தண்ணீர் தூக்குதலான செயல் அவசிய மானது. தண்ணீர்ப் பானையும் ஆடி விழாது. உடல் ஆடாமல் நடை பயிலக் கற்றுக்கொண்டால் தண்ணீர் சுமத்தலாகிய செயல் இனிய முறையில் நிகழும். அதுபோல வினை செய்தல் இயற்கை. ஆனால் வினை செய்யும்பொழுது உள்ளத்தில் விருப்பு வெறுப்புகளாலாய கோணல் மாணல்கள் இருக்கக்கூடாது. செயல்களே ஊழாக வடிவம் பெற்று விடுவதில்லை. செயலுக்குரிய நோக்கமும், செயலால் விளையும் பயனும் பயனைக் கருதிய முறைமையும் ஊழின் தோற்றத்திற்குக் காரணங்களாகும்.

இறைவனைப் பூசித்தல் நற்செயலே. பூசை செய்தலாகிய செயலின் மூலம் நாம் இன்பமும் பெறலாம்; துன்பமும் பெறலாம். இவ்விரண்டிலும் உயர்ந்த அழிவின் பத்தையும்- அதாவது பேரின்பத்தையும் பெறலாம். இறைவனை, செல்வங்களை வேண்டிப் பூசை செய்யின் செல்வ விருப்பம் நல்லூழாக- ஆகூழாகத் தோன்றிச் செல்வத்தைத் தரும்.

வாழ்க்கையின் விருப்பம் ஓர் அத்தியாயமாக நின்றுவிடுவதில்லை. வாழ்க்கையின் விருப்பம் பல அத்தியாயங்களைத் தொடரும்; ஏறும்; விகார உணர்ச்சிகளால், பற்று-பாசங்களால் ஆகூழ் போகூழாக மாறிவிடுவதுண்டு. ஆகூழின் பயனாகிய செல்வத்தை அடைந்து அனுபவிக்கும்பொழுது, பற்றுவிடா உணர்ச்சியும், "எனது” என்ற இறுமாப்பு உணர்ச்சியும் இருத்தல் கூடாது.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடிய சக்திகளை வேண்டியும் பூசை செய்யலாம். இங்ஙனம் வேண்டிப் பெற்றவர்களே அசுரர்கள். தவத்தில் சுரர் என்றும், தன்மையினால் அசுரர் என்றும் உணர்த்தவே அசுரர் என்றார். இத்தகைய பூசையால் விளைவது தீயூழ். எதுவும் கருதாமல், இறைவனையே கருதிப் பூசித்தல் வினைச்சார்பற்றது; இன்பம் தருவது.

உயிர்கள் வினை செய்தல் இயற்கை வினை செய்தலே உய்தற்குரிய வழியாதலால் வினை செய்தலைத் தவிர்க்க முடியாது; தவிர்க்கவும் கூடாது. இறைவன் நன்றுடையான்; தீயதில்லான்; அவனுடைய படைப்புகள் இன்பம் விளைவிப்பனவாம். ஆதலால் நம்முடைய துன்பங்கலந்த இன்பங்களும் துன்பங்களும் நம்முடைய படைப்புகளே-தவிர இறைவனுடைய படைப்புகளல்ல.

நம்முடைய தலைவிதியை நாமே எழுதிக்கொள்கிறோம். கடவுள் நியதி என்ற முறையமைப்பில் அவரவர் தாம் செய்த விளைவுகளுக்கேற்ப வினைப் பயனை அனுபவிக்க வழி நடத்துகிறார். அதுவும் நம்மீதுள்ள கருணையினாலேயாம்.

பொருந்தா உணவை உண்டவர்கள் உண்டமையின் காரணமாக விளையும் துன்பத்தினை நீக்கிக் கொள்ள முயன்று வெளியெடுக்கும் வாந்தியைப்போல, அவரவர் செய்த வினைகளின் பயன்களை அவரவர்களே முயன்று அவரவர்களே அனுபவிக்க வேண்டுமென்பதே இயற்கையின் நியதி. இங்ஙனம், விருப்பு- வெறுப்புகளுடன் செய்யும் வினைகள் அனுபவத்துக்கு வராமல் போகா, அங்ஙனம் அனுபவத்துக்கு வரும் பொழுது "ஊழ்” என்று பெயர் பெறுகிறது.

ஆர்வம் நிறைந்த முயற்சி, தளராத நெஞ்சம், நிலை கலங்காத உள்ளம் ஆகியவை ஆக்கும் ஊழாகிய ஆகூழின் அடையாளம். மாறாக, சோம்பிய உள்ளம், நெஞ்சில் நிதமும் கவலை, ஏங்கி இளைத்தல் ஆகியவை போகூழின் அடையாளம் என்று திருவள்ளுவர் அடையாளம் காட்டுகிறார்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூால் தோன்றும் மடி

என்பது குறள்.

அறிந்திருக்கும், அறிவு வேலை செய்யாது. உணர்விருந்தும் உணர்வு கைகொடுக்காது. பேதைமைத் துறையில் அழைத்துச் செல்லும் இந்தச் சூழல், இழப்பு ஊழ் மேலோங்கி இருப்பதைக் காட்டுவது. அது போலவே, ஆகும் ஊழ் மேலோங்கியிருக்கும் காலத்தில் அறிவு பெருகும்; ஆள்வினை தோன்றும். இதனை,

பேதை படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
என்று கூறி விளக்குகிறது. குறள்.

நுண்ணிய நூல்கள் பல கற்றாலும், கற்ற அளவுக்கு அறிவு மிகுந்து காணாமல் ஊழின்பாற்பட்ட குறை நலம் உடைய அறிவே மேம்பட்டு நிற்கும் என்று திருக்குறள் கூறுகிறது.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்:
உண்மை யறிவே மிகும்

என்பது குறள். நூல் பல கற்றல் அறிவு பெறுதற்குரிய வழி; ஆயினும் கற்றதைச் சிந்தித்தலும் சிந்தனையில் தெளிவு பெறுதலும், துணிதலும் இயற்கையான ஊழொடு தொடர்புடைய உண்மை அறிவினாலேயே முடியும் என்பது திருக்குறள் முடிபு. ஆயினும் தன்னுாழின் தரமறிந்து ஊழின் ஆற்றலை அடக்கக் கருதி அதனின்றும் விஞ்சியதாகக் கற்றலும் கேட்டலுமுடையவர் சிறந்து விளங்குவர் என்பது குறள் கூறும் கருத்து. இந்த உலகம், இருவேறு பெரும் பிரிவுகளாக இயங்குகிறது. ஒன்று பெருஞ் செல்வமுடையதாக விளங்கும் பிரிவு. பிறிதொன்று தெரிந்து தெளிந்த அறிவுடையவராக விளங்கும் பிரிவு. இந்த இரு பிரிவுகளும் தம்முள் மாறுபட்டே இருக்கின்றன. இஃது இயற்கையும்கூட எங்ஙனம் இயற்கையாகும்? அறிவை விரும்புபவர்கள் அறிவுத் துறையிலேயே முயன்று முயன்று, ஈடுபாட்டுடன் உழைக்கின்றனர். இவர்கள் கையில் ஏதாவது கொஞ்சம் செல்வம் கிடைத்தால்கூட, அந்தச் செல்வத்தையும் அறிவுக்காகவே செலவழித்துவிடுவர். இவர்கள் செல்வத்தைப் பேணாக்கள்; அறிவையே பேணுவார்கள். இஃது ஒருவகை செல்வத்தைப் பேணும் எண்ணமுடையவர்கள், செல்வத்தையே பேணுவார்கள். சிந்தனை, செயல், தயை அனைத்தையும் செல்வத்தின் காலடியில் வீழ்த்திவிடுவர். இவர்களிடத்தில் செல்வமிருக்குமே தவிர அறிவு இருக்காது. இதனை, திருவள்ளுவர்,

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

என்று கூறுகிறார். இந்த வேறுபாடு நீடிப்பதற்குக் காரணம் ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைப்பின்படி செயல்கள் தோன்றி, ஒவ்வொருவரிடத்தும் வளர்ந்து ஊழாக மாறுவதேயாம்.

மனிதனின் செயற்பாட்டுக்கு அடிப்படை அவனது சென்றகாலச் செயல்களின் விளைவாகிய ஊழேயாம். இழவூழ் வளர்ந்தமையின் காரணமாகத் தீமையைத் தீமையென்றுணரச் செய்யாமல் பேதைமைப்படுத்தும். இதன் காரணமாக நல்லவையாக இருப்பவையும் கூடத் தீமையாக மாறும். நல்லூழ் இருக்குமாயின் தீமையும் நன்மையாக மாறும்.

நல்லவை யெல்லாந் தீயவாந் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

என்பது குறள்.

ஊழ், உயிரை ஒட்டியிருக்கின்ற தத்துவம். உயிர் கடந்த காலச் செயல்முறைகளுக்கு ஏற்பப் பயன் பெற்று அனுபவிக்கும் இந்த முறையும் மரபும் வழி வழிப்பட்டதாகும். ஊழின்பாற் பட்டதல்லாத ஒன்று நாம் உரிமை கொண்டாடினாலும், நம்மிடம் தங்கிப் பயன் தராது.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

என்று கூறி இதனை விளக்குகிறது, குறள்.

அடுக்கிய கோடி செல்வம் பெற்றிருப்பினும் இன்புற்று வாழத் தெரியாதவர்களும் நிறையப் பேருண்டு. ஏன் இந்தக் குறை? என்று திருக்குறள் ஆராய்கிறது. முடிவாக,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்று கூறுகிறது. இங்கு வகுத்தான் என்று குறிப்பிடுவது கடவுளையன்று. கடவுள் பொதுவான இயல்புடையவர். ஆதலால், அவர் யாரொருவருக்கும் வலியச் சென்று தீமை செய்யார். எந்தவோர் உயிருக்கும் தீமை நிகழ்வதற்கு உடன்படமாட்டார். ஒவ்வோர் உயிரும் சிந்தன்ையால், செயலால் செய்த செயல்களே பயன் தரும் வகையில், ஊழ் எனப் பெயர் பெற்று வருவது. இந்த ஊழினை உயிர்கள் அனுபவித்துக் கழித்துத் தாமே ஏற்றிக்கொண்ட சுமையினை இறக்கிக் கொள்வதற்கு, இறைவன் துணையாக இருக்கின்றான் என்பதே உண்மை. இஃதன்றி நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் கடவுளோ ஊழோ காரணம் என்று காட்டுவது நெறியுமன்று முறையுமன்று. ஆதலால் வகுத்தான் என்பது நேரடியாக ஊழைக் குறிப்பிட்டாலும் அந்த ஊழினை உருவாக்கிக் கொண்ட மனிதனையே சாரும். இந்தக் குறளின் பொருளாவது; கோடானுகோடிப் பொருள்களைச் சேர்த்தாலும், ஊழின் வழியல்லது துய்த்து மகிழ முடியாது என்பதேயாகும். இந்தப் பிறப்பின் தொடக்க காலத்திலோ அல்லது முன்பிறப்பிலோ ஒருவன்தான் துய்த்து அனுபவித்து மகிழாமல், வயிற்றையும் வாயையும் கட்டி, செல்வத்தை விரும்பிச் சேர்த்திருப்பானாகில் அவனுடைய ஊழ் சேர்க்கும் ஊழாக உருவாகுமே தவிர, துய்த்து அனுபவிக்கும் ஊழாக வடிவம் கொள்ளாது என்பதே ஆகும். சிந்தனைச் செல்லுழிச் செயல் நிகழும். ஊழ் உருவாவதற்கு அடிப்படை சிந்தனையும் நோக்கங்களுமேயாம். செயல்கள் மட்டும் ஆகா.

நல்லூழ் இன்மையின் காரணமாக நஞ்சினும் கொடிய வறுமையினை அடைந்து துய்ப்பன - மகிழ்வன ஆகியவற்றை இழந்தவர்கள். ஊழினை மாற்றி அமைத்துக்கொள்ளத் தன் முயற்சி மேற்கொள்ளாது தவத்தினை நாடித் துறவியாவர். அப்பொழுது ஊழ் வந்து ஊட்டாமலே கழியும். இம்முயற்சி ஒரோவழி நன்மையானாலும் ஆகலாம். ஆனாலும், ஊழினை மாற்றிக் கொள்ளும் முயற்சியே சிறப்புடையது.

மக்களில் பலர் இன்பம் என்றால் மகிழ்கின்றனர்; துன்பம் என்றால், நடுங்குகின்றனர்; புகழ் என்றால் விரும்பி ஏற்கின்றனர்; இகழ்ச்சியென்றால் மறுக்கின்றனர். இஃது ஏன்? ஊழ் முற்றுப்புள்ளி பெறாது சங்கிலித் தொடர்போல் தொடர்வதற்குக் காரணம், இன்பங் கண்டபொழுது மகிழ்தலும், துன்பங் கண்டபொழுது துவளுதலும் ஆகிய செயல்களினாலேயாம். நோய்க்கு உண்ணும் மருந்து சுவையால் இனிப்பாக இருந்தாலும் மருந்தேயாம். சுவை கருதி மருந்தை அதிகமாக உண்ணமாட்டார்கள். மருந்து கசந்தாலும் நோய் நீக்கம் கருதி உண்ணாமலிருக்க மாட்டார்கள். அதுபோல இன்ப துன்பங்களைத் தன்னுடைய செயல்களின் விளைவாகிய ஊழின் பயனே என்று கருதி, நொந்து நோகாமல், மகிழ்ந்து நெகிழாமல் மீண்டும் ஊழுக்கு உயிர் கொடுக்காமல் இரண்டையும் ஒப்பக் கருதி அனுபவிப்பதே ஊழினைக் கடக்கக்கூடிய ஒப்பற்ற வழி.

இதனையே திருவள்ளுவர்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

என்று கூறுகிறார்.

முடிவாகத் திருவள்ளுவர், "ஊழிற் பெருவலியாவுள?" என்றே கேட்கின்றார். ஊழினால் தமக்கு வந்துள்ள கேட்டினை மாற்றிக்கொள்ளப் பலருடனும் கூடிக் கலந்து பேசி, பல்லாற்றான் முயற்சி செய்தாலும் ஊழின் பயனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. இதனை,

ஊழிற் பெருவவி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

என்றார். அப்படியானால் ஊழினை வெற்றி பெறமுடியாதா, என்ற வினா எழும். ஊழினை வெற்றி பெற முடியும். வாழ்க்கையின் நோக்கமே ஊழினை வெற்றி பெறுவதுதானே!

ஊழினை வெற்றி பெறுவதற்காகச் சூழ்ந்து செய்யும் வினைகள் மீண்டும் மீண்டும் ஊழாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அது எப்படி? ஊழினை அடக்குவேன்; ஒடுக்குவேன்; துன்பத்தை வெற்றி பெற்று இன்பங் கொள்வேன் என்று கருதி முயன்றால், ஊழ் மீண்டும் வலிமை பெற்றுத் தொடர்கிறது. அங்ஙனம் அல்லாமல் "இது என்னுடைய கடமை செய்கிறேன்; இதனால் ஆம் பயன்கள் பற்றிக் கவலையில்லை; பயன்கள் வந்தாலும் அவை எனக்குச் சொந்தமல்ல" என்று செய்தால், ஊழ் கழிகின்ற அளவில் நின்று கொள்கிறது; தொடர்வதில்லை. சிந்தனைப் போக்குகளாலும், மற்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் சூழல்களாலும் முன்னமே அமைந்துள்ள ஊழின் வலியினை அறிந்து கொண்டு, அதனை மாற்றக்கூடிய அளவுக்குக் கடமைகளின் பரிணாமம் அமையவேண்டும். நெருப்பைத் தண்ணீர் அணைக்கும். உண்மையே!

ஆனாலும், நெருப்பினுடைய அளவும் ஊற்றப்பெறும் தண்ணீரின் அளவும் இயைபாக இருக்கவேண்டும். எரிகின்ற நெருப்பை ஒரு சொட்டுத் தண்ணிர் அணைக்க முடியுமா என்ன? தண்ணீர் அளவு கூடுதலாக வேண்டும். அது போலவே, முன்னைய ஊழின் வலிமையைக் கடப்பதற்கு ஏற்றவாறு முயற்சி அமையவேண்டும். கருங்கல்லை உடைக்கக் கையின் வலிமை போதாத பொழுது, கடப்பாறையின் வலிமையையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளுகிறோம். அதுபோல் ஊழின் வலிமையை மாற்ற நம்முடைய முயற்சி மட்டும் போதாது. நம்மினும் வலிமையுடைய மறந்தும் தவறு செய்யாத திருவருட்சார்பைத் துணையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதே ஊழினை வெற்றி பெற முடியும். ஊழினை வெற்றி கொள்வதென்றால், ஊழின் வழியதாக வரும் இன்ப துன்பத்தால் தாக்கப் பெறாமல் அலைக்கழிக்கப் பெறாமல் அனுபவிப்பது என்பதேயாகும்.

யாரொருவரும் அவரவர் உண்ட உணவை அவரவரே செரிக்கச் செய்து கொள்ள வேண்டும். இதுவே நியதி. அது போலவே யாரொருவரும் தாம் தாம் சிந்தனையால், உணர்வால், செயல்களால் செய்த செயல்களின் பயன்களை அனுபவிக்கவேண்டும். இங்ங்ணம் அனுபவிக்க வேண்டுமென்ற நியதிதான் ஊழ் ஆகும். ஊழ் மனிதர்களாலேயே தோற்றுவிக்கப்பெற்றது. மனிதன் சிந்தனையால், உணர்வால், செயலால் உயர்ந்து தன்னலப் பற்றின்றிக் கடமைகளைச் செய்யும்பொழுது ஊழ் கழிகிறது; உறுதியும் பயனும் விளைகிறது; அழிவில் இன்பம் தோன்றுகிறது; இதுவே திருக்குறள் உலகத்தின் கருத்து.

குடிமை

ரு மனிதன் தான் வாழும் சமுதாயத்துக்கும் நாட்டிற்கும் ஏற்றவாறு ஒழுகும் இயல்பினைக் குடிமை என்று சிறப்பித்துக் கூறுவர். குடிமைப் பயிற்சி, குடிமைப் பண்பு (Citizenship) என்றெல்லாம் பேசப் பெறுவதும் இந்த இயல்பேயாகும். பழங்காலத்தில் நாடு, சிறிய அமைப்புகளேயாம். அன்று பெரும்பாலும் குல அடிப்படை சிறப்புற்றிருந்தது. இன்று நாடு என்ற அமைப்பு விரிந்தும், பரந்தும் விளங்குகிறது. ஆதலால் குலம் என்ற அடிப்படை மறைந்து, நாடு என்ற பேரமைப்புத் தோன்றியுள்ளது. ஆனாலும், பாரதி, பாரத நாட்டு மக்களை பாரத ஜாதி என்றே அழைத்தான்.

ஒரு மனிதனுடைய ஒழுக்கத்திற்கும், விருப்பத்திற்கும் காரணமாகக் குடி அமைந்து விளங்குகிறது. சொல்லும் செயலும் மாறுபடாத-செப்பமும், பழி பாவங்களுக்கு அஞ்சுதலும் இயல்பாகவே உயர்குடிப் பிறந்தார்களிடம் உண்டு. தாழ்வான குடியினருக்குக் கற்றுத் தந்தாலும் வருவதில்லை. இங்கு உயர்குடி என்பது பண்பில் உயர்ந்த குடியேயாம். பிறப்பாலும் செல்வத்தாலும் செயற்கையில் உயர்த்தப்பெற்ற குடியல்ல.

செப்பமும் நானும் உயர்குடியின்கண் இயல்பாகவே உண்டு என்பதற்கு, சிலம்பில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பான சான்று. சிலம்பில் வரும் நெடுஞ்செழியன் தன் குற்றம் மட்டும் உணராமல், தன்னுடைய தென்னவன் குடிக்கே இழுக்கு வந்துவிட்டதே என்று ஏங்குகிறான். உயர்குடிப் பிறந்தார் ஒருவர் அந்த உயர்குடிப் பிறப்பின் சிறப்பியல்புகளை மேலும் வளர்க்கவே முயற்சி செய்வர். ஒருகால் அது இயலாது போனால், குறைக்காமலாவது இருக்க முயல்வர். அதன் காரணமாக ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய ஒழுக்கங்களினின்றும் விலகார்; கீழிறங்கி வாரார்.

உயர்குடிப் பிறந்தார் இயல்பு என்ன? அவர் இனிய முகமுடையராக இருப்பர்; இனிய சொற்களையே பேசுவர்; யாரையும் இகழார் நிறைய அள்ளிக் கொடுப்பர் என்பதை,

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

என்ற குறளால் அறிக. இதன்கண் "இகழாமை" என்ற ஒழுக்கமே உணரத்தக்கது. நகையும் இன்சொல்லும் இருந்தாலும் இகழ்தல் இருக்குமாயின் கேடு. இன்று பலர் ஈதல் புரிகின்றனர். ஆயினும் அவர்கள் பாமரர், ஏழை, புத்தியில்லாதவர் என்று இகழ்ச்சியாகக் கருதியும் கூறியும் வருகின்றனர். இது தவறு என்பதை வள்ளுவம் சிறப்பாக உணர்த்துகிறது. பெற முடியாதவற்றைப் பெற முடியுமாயினும் உயர்குடிப் பிறந்தோர், புகழ் குன்றுதலுக்குரிய காரியங்களைச் செய்யார். புகழ் குன்றிய பிறகு, அடுக்கிய கோடி செல்வத்தினாலாய பயனில்லை.

அதனால் திருவள்ளுவர்,

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்

என்றார்.

உயர்குடிப் பிறந்தார்க்குச் செல்வமின்மை வறுமையன்று. மற்றவர்களுக்கு வழங்க முடியாத நிலைமையே அவர்களுக்கு நல்குரவு, வழங்க முடியாத வறுமை வந்துற்ற போதும், தம்முடைய வழங்குகின்ற பண்பினின்றும் உயர்குடிப் பிறந்தார் மாறுபடார்; தமிழ்ப் புலவருக்குத் தலை கொடுத்தான் குமணன், செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இதனை,

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

என்று குறள் பேசுகிறது.

நல்ல குலத்தில் பிறந்து வாழ்வோர் வறுமை முதலிய கேடுகளின் காரணமாக வஞ்சனை முதலிய கேடுகளைச் செய்யாமாட்டார்கள்; அவர்களுக்குச் செய்யவும் தெரியாது. இதனை,

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார் என்கிறது குறள். ஒரு தனி மனிதனிடத்தில், தகுதியற்ற ஒழுக்கக் கேடுகளைப் பார்க்கிறோம். குறிப்பாக ஈகை, இரக்கவுணர்ச்சியற்றவனாக விளங்குகிறான். அவனை நாம் பார்த்தவுடன் நமக்கு அவன்மீதே சினம் ஏற்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் அவனை ஆராயவில்லை. அவனுடைய தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்த குலத்தினையே ஆராய்கின்றார்; நம்மையும் ஆராயச் சொல்லுகின்றார்.

பழங்காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான். ஆங்கு அவனுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தது. சுற்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. அவனுடைய அமைச்சர் முதலாயினோர் தண்ணீர் கிடைக்காமல் போனதால் சாலை ஓரத்தில் வெள்ளரிக்காய் போலக் காய்த்துக் கிடந்த ஒன்றைப் பறித்து அரசனுக்குக் கொடுக்க எண்ணினர். அமைச்சர் முதலாயினோர் இங்ங்ணம் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையற்ற ஒருவன், அது வெள்ளரிக்காய் அல்ல என்று சொல்லித் தடுத்தான்.

"பிறவிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு இது வெள்ளரிக்காய் அல்லவென்று எப்படித் தெரியும்?” என்றனர் அமைச்சர் முதலாயினோர். அதற்கு அவன் "எனக்குக் கண்கள்தாம் குருடு; நான் கருத்திற் குருடன் அல்லன்” என்று கூறி, "இந்தக் காய் காய்த்துக் கிடக்குமிடம், பலரும் நடமாடும் பொதுவழி; இந்தக் காய் தின்னக்கூடியதாக இருக்குமானால், பலரும், பறித்துத் தின்றிருப்பார்கள். இது பயனற்றது என்பதனாலேயே வாளா கிடக்கிறது" என்று கூறினான்.

அரசன் பார்வையற்றவனான அவனுடைய நுண்ணறிவைப் பாராட்டி அவனுக்கு நாள்தோறும் ஒருவேளை சோறு போட உத்தரவிட்டான். ஆனால் அவனோ, அந்த ஒருவேளைச் சோற்றில் மனநிறைவு கொள்ளவில்லை. காரணம், சோறு பற்றாக்குறை யல்ல. நாடாளும் அரசன் உயர்குடிப் பிறப்பாளனாக இல்லாது இருக்கிறானே என்று தான் கவலையுற்றான். "அரசன் உயர்குடிப் பிறப்பாளனாக இருந்திருப்பின், இயற்கை அறிவினைக்கண்டு பெரிதும் பாராட்டிப் பொன்னும் பொருளும் நிறைய அள்ளிக் கொடுத்து என்னுடைய தரித்திரத்தை ஓட்டியிருப்பான். ஆனால், அரசனோ தரித்திரம் பிடித்தாற்போல் ஒருவேளைச் சோறு என்று உத்தரவிட்டான். நான் இந்த அரசனைக் குற்றமாகக் கருதவில்லை. அவன் பிறந்த குடி ஆராய்வதற்குரியது” எனறான்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

என்ற குறள் இதனை எடுத்துக்காட்டுகிறது. மற்றை எல்லாத் தவறுகளும் எளிதில் மறைக்கப்பெறும்; மறக்கப் பெறும். ஆனாலும் ஒருவனும் ஒருத்தியும் கூடிநடத்தும் மக்கள் தோற்றத்திற்குக் காரணமாகிய மனையற வாழ்க்கையில் தோன்றும், தரக்குறைவுகள் சீக்கிரம் மறைவதில்லை; மறக்கப் பெறுவதும் இல்லை.

காரணம், அவர்களுடைய கூட்டு முயற்சியால் உருவாக்கப் பெற்ற தரக்குறைவான மக்கள் நாட்டில் நடமாடுகிற வரையில் அவர்களுடைய மனைவாழ்க்கை ஐயப்பாட்டிற்குரியதாக-இகழ்ச்சிக்குரியதாக விளங்கும். ஆதலால், மனைவாழ்க்கை நடத்துவோர் தம்முடைய வழித் தோன்றல்களின் நலம் கருதியும் தங்களுடைய புகழ் கருதியும் தரங் குறையாமல் இனிய நல்லுணர்வுகளோடு வாழ வேண்டும் என்பதை நினைவிற்கொள்க.

நிலத்தின் இயல்பை நிலத்தில் இட்ட வித்து முளைக்கும் நிலையிலேயே காட்டும். முளை செழுமையாக வெளிப்படுமாயின் நிலம் செழுமையானது. அதுபோல உயர்குடிப் பிறந்தார் இயல்பு அவர் வழங்கும் சொற்களாலேயே அறியப்பெறும்.

காற்று, அது படர்ந்து வரும் வழியில், நிலத்தில் கிடந்த பொருள்களின் தன்மையை மணத்தால் காட்டும். காற்று படர்ந்து வந்த வழியில் கிடந்த பொருள்களின் இயல்பிற்கேற்றவாறு அமையும். அதுபோல் குடியிற் சிறந்தாருடைய மனத்தில் குடிப்பிறப்புற்குரிய உயர் பண்புகள் அமைந்து கிடப்பதை அவர்தம் வாய்ச்சொல் காட்டும். உயர்குடிப் பிறந்தாரின் வாய்ச்சொற்கள் கனிவுடையனவாக-பயன் தரத்தக்கனவாக இருக்கும். இதனை,

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

என்று குறள் ஓதுகிறது.

நலம் வேண்டும். அந்நலனையடைய வழி, நாணமுடையனாதலேயாம். நாணமுடைமை எல்லா நலனும் தரும், நாணம் என்பது உடலால் கூனிக் குறுகும் வெட்கமன்று. பழி பாவங்களுக்கு அஞ்சுதலே நாணமாகும். அது போல உயர்குடிச் சார்பும், பெருமையும் வேண்டுமெனில் பணிவு வேண்டும். எங்கே பணிதல்? தம்மினும் செல்வத்தில் அதிகாரத்தில் உயர்ந்தோர்க்கு எல்லாரும் பணிவர். அது பணிவா? இல்லை, நடிப்பு! திருவள்ளுவர் யார்க்குப் பணிய வேண்டும் என்கிறார். யாவரிடத்தும் பணிதலே சிறப்பு என்கிறார். இதனை,

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்
குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு என்றார். இதனையே "புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றி” என்று அகம் பேசுகிறது.

உயர்குடிப் பிறந்தார் எதை இழந்தாலும் இழப்பர். தன்னுடைய குடியின் சிறப்புக்குன்ற-சிறப்புச் சிதைய விரும்ப மாட்டார்கள். உயர்குடிப் பிறந்தார் புகழ்பெறும் பொழுதும் கூட, முறையாகப் பேராண்மைச் செயல்களின் மூலமே புகழினைப் பெறுவர். சின்னஞ்சிறு செயல்களைச் சந்து பொந்துகளில் செய்து, புகழினைப் பெற, உயர்குடிப் பிறந்தார் கருதமாட்டார்கள். உயர்குடிப் பிறந்தார் பெருக்கத்தில் பணிவோடு இருப்பர். அவர்கள் அடக்கம் ஆழ்கடலினும் பெரிது. அவர்களே, இயற்கைக்கேடுகளினாலாவது, வேறு பிற காரணங்களினாலாவது வளங் குன்றுவார்களாயின் தம்முடைய பெருமையை-தம்முடைய குடிப்பிறப்பின் பெருமையை உயர்த்தியே பிடிப்பார்கள். ஒருபொழுதும் தாழ விடமாட்டார்கள், இதனை,

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

என்று குறள் கூறுகிறது. சுருக்கத்து வேண்டும் உயர்வு என்றால், பணிதலுக்கு மாறான உயர்வு அல்ல; அகங்காரமும் அல்ல; ஏழையராகி இகழ்ச்சி சொல எளிதிற் போதலைத் தவிர்ப்பதே உயர்வு என்று கருதப்படுகிறது.

நம்முடைய தலையில், நமக்கு அழகும், பாதுகாப்பும் கொடுப்பதற்காக அழகிய ரோமங்கள் வளருகின்றன. இவை அடிக்கடி வீழ்தலும் உண்டு. அங்ஙணம் வீழ்ந்த ரோமங்களைக் கொண்டு, ஒன்றாக்கிப் பூண் முதலிய கட்டி, 'சவுரி' என்று பெயரிட்டு விலை வைத்து விற்பார்கள். அந்தச் 'சவுரி'க்குப் பூண்களும், பாதுகாப்பும், பெட்டிகளும் இருந்தாலும் அவை ஒரு முழமாக இருப்பவை ஒன்றரை முழமாக வளர்ந்து விடுவதில்லை. ரோமங்கள் தலையில் இருக்கிறவரையில் அவற்றுக்கு வளர்ச்சி உண்டு; அவை கீழே வீழ்ந்து விட்டால் வளர்ச்சி இல்லை.

ஒரோ வழி, சேர்ந்த இடத்தின் காரணமாக சவுரிக்கு மதிப்புக் கிடைக்கலாம். ஆனாலும், இயற்கைக்குள்ள மதிப்பு இல்லை. இந்த அழகான சாதாரணச் செய்தியை எவ்வளவு சிறப்பாக மானம் என்ற பேரொழுக்கத்தோடு சேர்க்கிறார் திருவள்ளுவர்! மாந்தரும் தம்முடைய மனித நிலையில், உயர்குடிப் பிறப்பு நிலையில் நின்று ஒழுகினால், மேலும் வளர்வர்; புகழினைப் பெறுவர். அங்ஙனமின்றி, தமது நிலையினின்றும் இழிந்து செயல்கள் செய்யின் தம்மையும் இழந்து, தமது குடிப்பிறப்பின் சிறப்பினையும் இழக்கின்றனர் என்பதை,

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

என்ற குறள் கூறுகிறது. குன்றனைய வாழ்க்கையையும் கூட, ஒரு குன்றிமணி அளவு குற்றம் கெடுத்துவிடும். மிகப்பெரிய மலையைச் சிற்றுளி உடைத்து நொறுக்கவில்லையா? உருத்தும் பருத்தும் உள்ள மரத்தினைக் கறையான் அரித்துத் தின்னவில்லையா? என்பதனை உணர்க. பெருந்தன்மையும் குடிப்பிறப்பும் கெட்டவிடத்து வாழ்தல், "ஊன் ஓம்பும் வாழ்க்கை” என்று திருவள்ளுவர் நையாண்டி செய்கிறார்.

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து

என்னும் குறளை நினைக. சாதாரண-ஒன்றுமறியாத கவரிமான் கூட மயிர் நீப்பின் வாழ்வுதில்லை. அது போல உயர்குடிப் பிறந்தோர் மானம் போயின் உயிர் வாழார். அதற்குப் பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சிறப்பான சான்றுகளாவர். உலகு புகழினை ஏத்துகிறது; ஒளிபடைத்த புகழினை ஏத்துகிறது. எத்தகைய ஒளியை? தமக்கு இழிவு வந்துழி, உயிரைக் கொடுக்கும் சான்றோரின் ஒளிபடைத்த புகழையே உலகு ஏத்துகிறது. இதனை,

இளிவரின் வாழாத மான முடையார் :
ஒளிதொழு தேத்தும் உலகு

என்ற குறளால் அறிக

நம்முடைய நாடு பாரத நாடு. நாமனைவரும் பாரத குலம். இந்தப் பாரத குலத்துக்கு ஏற்ற நாட்டொழுக்கங்களை நாம் சிறப்பாகப் பெற்று, சிறந்த குடிமைப் பண்புகளோடு, நாணமும், மானமும் போற்றி வாழவேண்டும் என்பதே திருக்குறள் கூறும் கருத்து.

பெருமையும் சால்பும்

<மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் பெறுதற்குரிய செவ்விகளை - குணங்களைப் பெரிதும் உடையனாகி அவற்றின் காரணமாக மற்றவர்களால் மதிக்கப்படுதல் பெருமை என்ற சிறப்பாகும். ஊன் உடம்பு எடுத்த பல வகை உயிரினங்களுக்குள்ளும் மனிதன் பிரித்துச் சுட்டியறியப்படுதலும் பேசப்படுதலும் அவனுடைய சாதனைகளைப் பொருத்தும் பெருமைகளைப் பொருத்துமேயாம். அங்ஙனம் வாழாதார் வாழ்வு மதிக்கப் பெறுவதில்லை. ஏன்? மனித வாழ்வாகவே கருதப்படுவதில்லை. பெருமை அரிய விலைகொடுத்துப் பெறக்கூடிய ஒன்றாகும். என்ன விலை? பொன்விலையா? இல்லை; இல்லை! சாதனையே விலை! செய்தற்கரிய சாதனைகளைச் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கமிகுதியே பெருமைக்கு அடிப்படை செயலும் சாதனையுமின்றி உண்டுடுத்து வாழ்வோம் எனக் கருதுதல் இகழ்ச்சி பொருந்திய வாழ்க்கை.

பெருமை, பிறர் கொடுக்க வருவதா? அல்லது கடைகளில்-சந்தைகளில் கொள்முதல் செய்யும் விலைச்சரக்கா? இல்லை! பெருமை, தானே முயன்று பெறக்கூடிய ஒன்று. மகளிர் மனம் மெல்லியது; கவர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியது. அதுபோலவே, மற்றவர்களைத் தன் கவர்ச்சியால் தன் பால் ஈர்க்கக் கூடியது. ஆனால், இந்த மென்மையில் திண்மை ஒன்று வேண்டும். அதுதான் கற்பு. மென்மையும் கவர்ச்சியும் இழுக்குடையன அல்ல. ஒரு மனம் கொண்டு, ஒழுகுவோர், ஒழுக்கமெனும் கற்பும் இலட்சிய வேட்கையும் கொண்டு ஒழுகுவோர் பெருமையைப் பெறுவர். இதனை,

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு

என்றார் வள்ளுவர்.

பெருமை சாதாரணச் செயல்களால் கிடைக்கக் கூடியதன்று. அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும். சிலர் எளிய-சாதாரணக் காரியங்களைச் செய்து விட்டுக்கூடப் பெருமையை எதிர்பார்க்கின்றனர். ஏன்? சிலர் மாடிவீட்டில் பிறந்ததற்காகப் பெருமை கேட்கின்றனர். சிலர் உடுத்தியுள்ள உடைகளுக்கும் அணிகலன்களுக்கும் பெருமை கேட்கின்றனர். சிலர் கொண்டுள்ள கோலங்களுக்கும் பெருமை கேட்கின்றனர். சிலர் பெற்றுள்ள அதிகாரங்களுக்குப் பெருமை கேட்கின்றனர். ஏன்? சிலர் ஒன்றுமில்லாமலே பெருமையை எதிர்பார்க்கின்றனர்.

பெருமையென்பது கேட்டுப் பெறுவதும் அல்ல. கொடுத்துப் பெறுவதும் அல்ல. அது சாதனையில் பிறப்பது. பெருமையின் நாட்டமுடையோர் சோதனைகளை ஏற்பர்; துன்பங்களை ஏற்பர்; மரணத்தையும் வலிந்து ஏற்றுக் கொள்வர். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள்-கடமைகள் அருமையானவை; ஒளியுடையவை. இதனை,

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்

என்று கூறுகிறது குறள்.

இவ்வுலகில் நிறையக் கற்கள் உண்டு. எல்லாக் கற்களும் வைரக் கற்களாகுமா? வையத்தில் சோற்றுக்கும் துணிக்கும் அல்லாடும் கோடானுகோடி உயிர்கள் உண்டு; மனிதர்கள் உண்டு. எல்லாரும் உயிராகப் பிறந்தவர்கள்தாம். பிறப்பினால் ஒத்த நிலையினரேயாம். அதனாலேயே சிறப்புத்தன்மை பொருந்தியவர்கள் ஆக மாட்டார்கள்.

சிறப்புத் தன்மை என்பது, உருவாக்கிக் கொள்ளப் பெறுவது. இந்தச் சாதனையைச் செய்து கொள்ளும் பொறுப்பு அவரவர்களிடமே யிருக்கிறது. ஊனுடல் வயிற்றில் பசியிருப்பதைப்போல, உயிரியல் வாழ்க்கையில் புகழ்ப் பசியை அமைத்தான் இறைவன். ஆனால் பலருக்கு ஊனுடல் பசியே தெரிகிறது. வேளை தவறாது உண்கின்றனர். உயிர்ப் பசியாம் புகழ்ப் பசியைப் பலர் அறிவதில்லை; உணர்வ தில்லை. இப்பசியைத் தணிப்பதற்குரிய வேலையை-கடமை வேள்வியை-வேளை தவறாமல் செய்வதில்லை.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்பது குறள்.

சிலர் சாதியால் உயர்ந்த வீட்டில் பிறந்து வாழ்வர்; சிலர் அடுக்கிய செல்வத்தால் உயர்ந்த மச்சு வீடுகளில் பிறந்து வாழ்வர். சிலர் தோற்றத்தால் உயர்ந்த கோலங்கள் கொண்டு வாழ்வர். இவையெல்லாம் உண்மையிலேயே மேன்மையை பெருமையைத் தரா. சிலர் எளிய குடிசையில் தோன்றி வாழ்வர்; சேரியில் பிறந்து வாழ்வர் தோற்றங்களும் இல்லாம லிருக்கலாம். ஆயினும், கொண்டொழுகும் நிலையால், அரிய சாதனையால், மேலானவர்களாக மதிக்கப்படுவர்.

அரிமர்த்தன பாண்டியன் அரசு நிலையால் மேலானவனே. ஆயினும், மாணிக்கவாசகரின் மேலாண்மையின் முன்னே ஈடுகொடுத்து நிற்க முடியவில்லை. பல்லவப் பேரரசன் அரசு நிலையால் மேலானவனே. ஆனால், அப்பரடிகளின் சீலத்தின் முன் அவனால் நிற்க முடியவில்லை. இதனை,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்

என்ற குறளால் அறிக.

பெருமையுடையாருக்கும், அஃதில்லாதாருக்கும் வெளிப்படையான அடையாளம் ஒன்று உண்டு. இயற்கையில் பெருமையுடையார் முற்றிய நெற்கதிர் தலைசாய்ந்து கிடப்பதைப் போல அடங்கிக் கிடப்பர். மரத்தின் உயிர் வாழ்க்கைக்கும்-பசுமைக்கும்-பயன்படும் தகுதிக்கும் உறுப்பாயமைந்துள்ள வேர், மண்ணில் மறைந்து கிடக்கும். அடுக்கிய சிறப்பினையுடைய மாளிகையினைத் தாங்கும் அடிக்கல் மண்ணில் மறைந்து கிடக்கும். இவை எவற்றையும் ஏற்றுக் கொள்ளும்.

அதுபோல, பெருமைக்குரியவர் எதையும் இகழார்; எவரையும் இகழார். ஆனால், சிறுமைக் குணமுடையவரோ தருக்கித் திரிவர். கழனிகளில் பசையற்ற பதர் திமிர்ந்து ஆடுவதைப்போல ஆடுவர்; தம்மினும் உயர்ந்தோரை-பெருமைக்கு உரியோரை அணுகி, அவர்தம் நெறியில் நின்று ஒழுகமாட்டார். இகழ்ச்சியும், அலட்சியமும், தருக்குதலும் தலைதடுமாறுதலும் சிறியோரின் இலக்கணம். இதனை,

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

என்ற குறளால் அறியலாம்.

சிறுமை தன்னையே பாராட்டிக்கொள்ளும், ஆம்; ஐயோ, பாவம்; வேறு யாரும் பாராட்ட இருந்தால்தானே! பெருமையுடையோரைப் பலர் பாராட்டுவார்கள். ஆயினும் அவர்கள் பெருமைப்படார்; தம் புகழ்கேட்க நாணுவர்; "அடியேன்” என்றும் "தாசன்” என்றும் பணிவுரை பகிர்ந்து நடப்பர்; என்றும் எப்பொழுதும் யார் மாட்டும் பணிவுடையவராகவே இருப்பர். சிறுமையுடையார் தம்மைத் தாமே வியந்து, தம்மைத் தாமே ஒப்பனை செய்துகொண்டு, தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு, ஒரோ வழி கூலி கொடுத்தும் புகழ்பெற்று, நிழற்படங்களும் எடுத்துக் கொள்வர்.

பெருமையென்பது, பிறர் போற்றித் தமக்கு அணியாக ஏற்றுக் கொள்ளுதலால், சிறப்படைகிறது; பெருமையாகிறது. சிறுமையுடையோரைப் பாராட்டி ஏற்று அணியக்கூடியது ஏதும் இல்லாததால் அணிந்து கொள்வாரும் இல்லை. இந்த ஏக்கத்தால் அவர்களே தம்மை அணிந்துகொள்வர். பித்தளையை விளக்கவேண்டும். தங்கத்தை விளக்க வேண்டிய அவசியமில்லை. பித்தளை தங்கமானால், புளியின் அவசியமும் கூடும். பெருமை கொண்டாடும் சிறுமை பித்தளை நிகர்த்தது; பெருமை சொக்கத் தங்கம் நிகர்ந்தது. இதனை,

பணியுமாம் என்றும் பெருமை :சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

என்னும் குறள்களால் அறிக. பெருமை பெருமைக்குரியது. அது குணங்களையே பார்க்கும்; குற்றங்களை நாடாது குற்றத்தினை மறைக்கும். சிறுமையோ குணங்களை நாடாது; குற்றங்களையே காணும்; குற்றங்களைத் தூற்றும் பிறர் குற்றத்திலேயே குளிர்காயும். பெருமை புகழ்ச்சியால் புகழ்பெறும். இகழ்ச்சியால் சிறுமை, பெருமை பெற முயலும். உணர்வில் தோன்றுவனவெல்லாம் தோன்றிய உணர்வு நிலைகளையே பிரதிபலிக்கும். இதுவே நியதி. புகழுணர்வில் தோன்றுவனவெல்லாம் புகழே பெற்று விளங்கும்; இகழுணர்வில் தோன்றுவனவெல்லாம் இகழ்ச் சியே பெற்று விளங்கும்.

அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

என்பது குறள்.

"குற்றமே கூறிவிடும்” என்பதனால், குணங்களைக் கூற மாட்டார்கள் என்று உணர்த்தப்பெற்றது. பல குணங்களால் உயர்ந்து பெருகிய சிறப்பின் காரணவீணான வம்புகளுக்கு ஆளாகமாட்டார்கள். தம்முடைய அறச் செயல்களுக்குத் துணையாக இருப்போரைத் தாழ்ந்து துணையாக ஏற்றுக் கொள்வர். சான்றோருக்குப் பகைவர் இரார். ஒரோவழி இருந்தாலும் அந்தப் பகைவரை மனம் மாற்றித் துணையாக்கிக் கொள்ளவே சான்றோர் முயற்சி செய்வர்.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

என்பது குறள்.

சாதாரண மனிதர்கள் பெரிய மனிதர்களிடத்தில் தோற்பதைப் பெருமையாகக் கருதுவர். அதாவது சாதாரண மனிதர்கள் தம்மினும் வலியாரிடத்துத் தோல்வி கொள்வது இயற்கையே. அதைப்பெரிதெனக் கருதுதல் இழுக்காகும். சான்றோர் தமக்கு ஒப்பில்லாதாரிடத்தில் தோல்வி கிடைத்தாலும்தோல்வியை ஏற்றுக்கொள்வர். அங்ஙணம் ஒப்புக் கொள்ளுதல்தான் சால்பினை உரைத்துக் காட்டும் ஒழுக்கமாகும். இதனை,

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

தமக்கு இனியன செய்தார்க்குத் திரும்ப இனியன செய்தல் ஒருவகை வாணிகமேயாம். வாழ்க்கை நைப்பாசைகளில் ஊறியோர் இனியன செய்தார்க்கு இனியன செய்வர். இஃது ஒன்றும் பாராட்டுக்குரியதல்ல. இன்னாதன செய்தார்க்கும் இனியன செய்தலே வாழ்க்கையின் சிறப்பும் பெருமையுமாகும். அங்ஙனம் செய்தலே சால்புடைமையின் பயன்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்:
என்ன பயந்ததோ சால்பு

என்பது குறள். வறுமை முதலியன சாதாரண மனிதரை அழிக்கும். ஆனால், சான்றோருக்கு வறுமை இழிவன்று. சான்றோர் தம்முடைய சால்பொழுக்கத்தில் உறுதியுடன் இருப்பாராகில் வறுமை, அழிவையோ இழிவையோ தராது. இதனை,

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

என்பதால் அறியலாம். ஊழி பெயர்தல் முதலிய துன்பங்கள் வந்துற்றாலும், சான்றோர் தம் ஒழுக்கத்தினின்றும் மாறமாட்டார்கள்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார் என்பது குறள். இந்நிலவுலகம் நிலைபெற்றிருக்கிறது. கோடானுகோடி மக்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அங்ஙனம், சுமந்து நிற்பது சான்றோரின் இயல்புகளைக் கண்டு மகிழ்ந்தேயாகும். சான்றோர் சால்பிற் குன்றுவாராயின் நிலம் வறிதே மக்களைச் சுமக்காது.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை

என்பது குறள்.

வள்ளுவர் உலகம் பெருமையுடைய உலகம்; பெருமைப்படுத்தும் உலகம். வள்ளுவத்தின் பெருமை சால்பில் தங்கி இருக்கிறது. சால்பு தன்னைத்தான் கொண்டொழுகுவதில் அமைந்து கிடக்கிறது. அங்கேயே இன்ப உலகமும் இருக்கிறது.

பண்புடைமை

னி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் ஆழமான, அகலமான உறவை ஏற்படுத்தி, அந்த உறவை என்றும் அகலாமல் பேணிப் பாதுகாக்கும் ஒழுக்கம் பண்பாடு விளையும் நிலத்தினை விளைவதற்குரிய ஆற்றலைப் பெறுதற்குச் செய்யும் முயற்சியைப் பண்படுத்தல் என்று கூறுகிறோம். பண்படுத்தப்பெற்ற நிலம், உயர்நிலை பேணுதற்குரிய உணவினை வழங்குகிறது. அதுபோல, உயிர்க்குச் சிறந்த இன்ப நல்லுணர்வுகளைப் பண்படுத்தப்பெற்ற உள்ளம் வழங்குகின்றது. பெருமை, சான்றான்மை முதலிய சிறப்பியல்புகள் அமையப்பெற்றும் பலரோடு ஒத்து இயைந்து வாழ முடியாது போனால் பயனென்ன?

பலர் கூடி இணைந்து வாழ்வதற்கே வையகம். இந்த இணைந்த கூட்டு வாழ்க்கைக்குப் பல சமயங்களில் பெருமையின் பேரால் முட்டுக்கட்டையிடுவோர் உளர். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு எதிரான பெருமை பெருமையன்று; சிறுமையேயாம். பலரோடு பழகி அவர்தம் இயல்பறிந்து தம் நிலை வழுவாமல் அவர்தம் நிலையொடு ஒத்து ஒழுகிப் பழகும் இயல்பே பண்பாடு. "பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்" என்பது கலித்தொகை.

பண்புடைமையென்ற ஆன்ற ஒழுக்கத்தை எவ்வழியில் அடைதல் இயலும்? பெறுதற்குத் தனியே ஒரு முயற்சி தேவையில்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் பாராமல் யார் மாட்டும் எளியராகப் பழகும் இயல்பு அமைந்துவிட்டால், பண்புடைமையும் எளிதாக வந்து அமைந்துவிடும். எளிமையாகப் பழகினால் மட்டும் போதாது. பிறர் இயல்பறிந்து செவ்வி பார்த்து அதாவது சந்தர்ப்பம் சூழ்நிலை பார்த்து நடந்து கொள்ளவும் வேண்டும். இதனை,

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு

என்று குறள் கூறுகிறது.

மக்கள் யாவருக்கும் உறுப்புகளாலாய ஒப்பு கிடைத்து விடுகிறது. உறுப்புகளால் ஒத்திருப்பதாலேயே ஒருவர் இன்னொரு மனிதரோடு ஒத்து விடுவதில்லை. பெருமையும் சிறுமையும் உறுப்புகளால் அமைந்து விடுவதில்லை. உறுப்புகளைப் பயன்படுத்தும் பண்பட்ட வழிகளாலேயே, சிறப்பு வந்து பொருந்துகிறது. பிணநிலையிலும் மக்கள் உறுப்புகள் உண்டு. அந்த நிலையில் அந்த உறுப்புகளை விரும்பி நேசிப்பார் யார்? யாரும் நேசிக்கமாட்டார்கள். மாறாக வெறுப்பர். மக்கள் தம்முள் ஒத்த நிலையினராதல், பண்பின் வழியிலேயே சாலும். வேறு எவ்வழியிலும் இயலாது. ஒருவர் மற்றவரை நோக்கித் தம்முடைய பண்பாட்டு நிலையினை உயர்த்திக் கொண்டாலே, ஒப்புடையவராகலாம். இதனை, உறுப்பொத்தல் மக்கள் ஒப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

என்று குறள் கூறுகிறது.

மனிதவாழ்க்கை மிகவும் அருமையானது. இதன் அருமையறிந்து பயன்படுத்துவோர் மிகச் சிலரேயாம். மனித உலகத்தை நடைமுறைப்படுத்தி நிலைபேறுடையதாகச் செய்யும் பேரியல்புகள் இரண்டு. ஒன்று நீதி, பிறிதொன்று அறம். நீதி உள்ளச் சார்புடையது; அறம் செயலின் பாற்பட்டது. இவ்விரண்டு இயல்புகளையும் வாழ்க்கையைப் பயனுடையதாக வாழ விரும்புவர்கள் அனைவரும் விரும்பி ஏற்றுப் போற்றுவர்.

இன்றைய உலகியலில் பலர் பயனடையவே விரும்புகிறார்கள். காதல், கணவன்- மனைவி வாழ்க்கை, நட்பு, உறவு முதலிய எல்லா இடங்களிலும் "உன்னால் எனக்கென்ன லாபம்?" என்ற கேள்வியே கேட்கப்படுகிறது. பயன்பட விரும்புவதில்லை. பயனடைதலைவிடப் பயன்படுதலே சிறப்புடைய வாழ்க்கை நீதியும் அறமும் உடையோர் மற்றவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையில் வாழ்வர். இதனைப் "பயனு டையார்” என்று குறள் கூறுகிறது. பயனுடையார் பிறருக்கும் பயன்பட வாழ்வர். அவ்வழி தமக்கும் பயன்படுவர். இதனை,

நயனொடு நன்றி. புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு

என்று குறள் பேசுகிறது.

பலர் பழகுவர்; சிரித்து மகிழ்ந்து பேசிப் பழகுவர். ஆனால் பலரிடத்தில் இச்சிரிப்புக்கூட உள்ளத்தின் பொழிவாகிய மகிழ்ச்சியிலிருந்து மலர்ந்த சிரிப்பாக இருப்பதில்லை; செயற்கையாக இருக்கும். சிரிப்பதற்காகச் சிரிப்பதில்லை. வெளிப்படையாக இகழ்ந்து கூற ஆற்றலின்மையின் காரணமாக சிரிப்பில் மறைமுகமாக இகழ்ந்து கூறுவர். குத்தலும் கேலியுமாகப் பேசுவர். இது மிகவும் தவறான தீயொழுக்கம், அதனால் "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி" என்று கூறுகிறது, குறள்.

சிலர், பகைமை காரணமாக இகழ்வர். அஃதும் நல்லதல்ல. இகழ்தலால் இகழப்படுவாருக்கு எவ்வளவு இழப்புண்டோ, அதே அளவு இல்லை, அதைவிட அதிகமாகக்கூட இகழ்வாருக்கும் இழப்புண்டு. இகழப்படுவோர் இகழ்வாரினின்றும் விலகிச் சென்றால் புகழ்ச்சியைப் பெறலாம். ஆனால் இகழ்வாருக்கு இகழ்தல் பழக்கமும் வழக்கமும் ஆகிவிடின், பெருமையுடையோரை உறவாகக் கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஆதலால், பகையுள்ளும் பண்பு பாராட்டுதலே சிறப்பு.

பாராட்டுதலின் மூலம் பாராட்டப்படுபவர்கள் குற்றங்களின் நீங்கிச் சிறப்புறுவர். இஃது இயற்கை. பாராட்டும் பண்பின் மூலம் பாராட்டப்படுவோருக்கு மட்டுமே பயன் இல்லை. பாராட்டுவோருக்கும் உண்டு. பாராட்டுகின்ற குணம்-தெள்ளிய-வற்றாத நீர் ஊற்று உடைய சுனை போன்றது. பாராட்டும் குணம் மேலும் உயர்த்தும். அதனாலன்றோ, இறைவனும் "நந்தம்மை கோதாட்டி" ஆட்கொள்ளுகின்றான். இதனால் நமக்கு மட்டுமா பெருமை? இறைவனுக்கும் பொருள்சேர் புகழ் கிடைக்கிறது.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு

என்பது குறள்.

சிலருக்குக் கூர்மையான புத்தியிருக்கும்; அறிவிருக்கும்; ஆற்றலும் இருக்கும். ஆயினும் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்க இயல்புகளும், ஒத்ததறிந்து வாழும் இயல்பும் பெற்றுப் பண்புடையராக வாழாது போனால், மரம் போன்றவர்கள் என்று குறள் கண்டிக்கிறது. மக்கள் மீதுள்ள இரக்கவுணர்ச்சியால் ஒப்புக்காக "மரம் போல்வர்” என்று கூறுகிறது. உண்மையின் அவர்கள் மரம் போன்றவர்களும் அல்லர். மரமாவது பல்லுயிர் மகிழத் தன்னிழல் தருகிறது. உயிரியக்கத்துக்குத் தேவையான காற்றைத் தருகிறது; காய்களை, கனிகளைத் தருகிறது; மருந்தாகவும் பயன்படுகிறது. திருக்குறளில் பிறிதோரிடத்தில் "மருந்தாகித் தப்பா மரம்" என்ற பாராட்டப்படுகிறது. ஆதலால், பண்பாடில்லாதவர்கள் மரத்தினும் மோசமானவர்கள் என்று கருதுதல் சிறப்பு. இதனை,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

என்று குறள் கூறுகிறது.

சிலர், ஒரு சிலரோடு ஒத்து உறுதுணையாக இருந்து வாழமாட்டார்கள். காரணம் கேட்பின் அவர் கோபக்காரர்; சிடுமூஞ்சிக்காரர்; அப்படி, இப்படி, என்றெல்லாம் கூறி "அவருக்கும் நமக்கும் ஒத்துவராது” என்பர். ஒத்துவராமைக்குரிய கீழ்மைக்குணம் இவரிடத்திலா? அல்லது மற்றவரிடத்திலா? அல்லது இரண்டு பேரிடத்திலுமா? மற்றவர்கள் தம்மோடு ஒத்துவரவேண்டும் என்று விரும்புகிறார்களேயன்றி, தாம் மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டுமென்று கருதுவதேயில்லை. சிலர் நட்புக் காட்ட மாட்டார்கள். நட்புக் காட்டாதது மட்டுமல்ல, பகைமை கொண்டு தீமையே செய்வர். அவர்கள் மாட்டும் பண்புடையவராகப் பழகுதலே உயர்ந்த சிறப்பு. அங்ஙனம் வாழ இயலாதவரைக் கடையராகவே அறிஞர் உலகம் கருதும். இதனை,

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை
என்று குறள் கூறுகிறது.

இந்த உலகியல் மகிழ்ச்சியின் பாற்பட்டது. மகிழ்ச்சிக்காகவே ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியை ஒளியூட்டி வளர்க்கப் பகல் வருகிறது. ஆனால், பலர் பகலை இருள் நிறைந்த இரவாக்குகின்றனர். எப்படி? கதிரவன் ஒளிக்கதிர்க் கற்றையை வீசுகிறான். ஏன்? ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, உணர்வால் உள்ளத்தால் கலந்து சிரித்துப் பேசி மகிழ்வதற்காகவேயாம். அங்ஙனம் வாழ்வோர் எத்தனை பேர்? பகையின் காரணமாக ஒருவரை ஒருவர் பார்த்தாலும் பாராதது போல ஒதுங்கிப் போவோரும் சிலர்; அதுவுமின்றிக் கடுகடுத்த முகத்துடன் உறுமி முறைத்துப் பார்த்துப் போவோரும் எத்தனையோ பேர்.

“முல்லைக் கொடியில் அரும்புகள் பூத்திருக்கின்றன! என்ன மகிழ்ச்சி! அதுபோல மனிதனுக்கு முத்துப்போன்ற பற்கள்! பற்கள் முறுக்கைக் கடித்துத் தின்னப் பயன்படலாம். தவறில்லை. ஆனால் பலர் பகை நினைந்து "நற நற"வென்று. தம் பற்களைக் கடிப்பதைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. இத்தகையோருக்குக் கலந்து பழகும் பயனடையாமை காரணமாகப் பகலும் இருளாகிறது. இதனை,

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

என்கிறது குறள்.

ஒரு குடம் நிறையப் பால்; குடித்து வளரக்கூடிய பால்; உணவும் மருந்துமாகப் பயன்படக்கூடிய பால். எனினும் அந்தக் குடத்துப் பாலில் மனிதனின் செயற்கையாகிய நஞ்சு ஒரு சொட்டுக் கலந்தால் என்னவாகும்? மகிழ்வுக்குப் பதில் மரணம்; இன்பத்துக்குப் பதில் துன்பம். செல்வம் மகிழ்ச்சியின் சாதனம்; இன்பத்தின் ஊற்று. அதுவும் பெருஞ் செல்வமாயின் எண்ணில் இன்பங்கள் கிடைக்கும். செல்வத்தின் இயல்பு எதுவாயினும், அச்செல்வம் பண்பாடற்றோரிடம் சிக்குமாயின் அது இன்பத்தைத் தருவதில்லை. மாறாகத் துன்பத்தைத் தரும். இதனை,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

என்ற குறளால் அறிக

இந்த உலகத்தின் வரலாறு நெடிய வரலாறு; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் வரலாறு. எண்ணில் அடங்காத பக்கங்களில்-எண்ணில் அடங்காத கற்பனைகள்-செய்திகள் ஆகியவற்றால் வரலாறு பெருகி வளர்ந்து வந்திருக்கிறது. இப்பொழுதும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும்.

இந்த மனித குலத்தின் வரலாறு இடையீடின்றித் தொடர்வதற்கு எது அடிப்படை? பேரரசுகளா? போர்க் களங்களா? அறிவாற்றல்களா? இல்லை, இல்லை! இவையனைத்தும் பல சமயங்களில் மனித உலகத்தை அழிக்கவே முயன்றன. அந்த அழிவிலிருந்து மனித உலகத்தைக் காப்பாற்றியது சான்றாண்மையின் முதிர்ந்த பண்பாடுகளே, பண்பாடு உடையவர்களேயாவர்.

இயேசு சிலுவையில் தொங்கிச் சிந்திய செந்நீர் பண்பாட்டின் சின்னம். செந்நீரால் சிலுவை கழுவப் பெறவில்லை. பாபிகளின் பாபம் கழுவப்பெற்றது. நபிகள் நாயகத்தின் புனித தியாகம் பாபத்தைக் கழுவி வரலாற்றுக்குப் புத்துயிர் ஊட்டியது. புத்தரின் போதனைகள் பண்பாட்டின் பொழிவு. அது உலகத்தைத் தொடர் சரித்திரமாக்கியது. ஆட்சி மேலாதிக்கத்தின் கொடிய இரும்புப் பிடியை உடைத்து, கொடிய நீற்றறையைக் குளிர்சாதன மாக்கிய அப்பரடிகளின் தண்கருணை, வரலாற்றை வளர்த்தது.

நம்முடைய தலைமுறையில் அண்ணல் காந்தியடிகள் பகையும் போரும் நீக்கிப் பண்பாட்டு வழியில் நம்மைச் செலுத்தினார். இத்தகு பண்புடையோர் இருப்பதனாலேயே இந்த உலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை, "உண்டாலம்ம இவ்வுலகம்" என்று புறநானூறு போற்றுகிறது.

நிலத்திற்குத் தனியே இயல்புண்டு. ஆயினும் அந்த இயல்புகள் ஏற்றம் பெறுதலும், பயன்படுதலும் மனித ஆற்றலின்பாற்பட்டது. உணர்விழந்த, செயலிழந்த மனிதர்கள் கையில் சிக்கிய நிலம் செழுமையானதாயினும் பயன்படாது. உணர்வும், செயலூக்கமும், திறனும் பெற்ற மனிதர்கள் கையில் பயனற்ற களர்நிலம் சிக்குமாயினும் வளங் கொழித்துப் பயன்படும். ஆக, வளமும் பயனும் நிலத்திலா? மனிதனின் உழைக்கும் தன்மையுள்ள கரங்களிலா? உழைக்கும் திறம்படைத்த கைகளிலேயே மனித உலகத்தின் உயிர் வாழ்க்கை தங்கியிருக்கிறது; வாழ்கிறது; "கைவருந்தி உழைக்கும் நீ தெய்வம்" என்றார் பாரதியார். இதுவும் பண்பாடு. இந்தப் பண்பாட்டின் அடிச்சுவட்டிலேயே உலகம் வளர்கிறது; வாழ்கிறது; நிலைபெற்று இயங்குகிறது. இத்தகு பண்பாளர்கள் எண்ணிக்கையில் சிலரேயாக இருக்கலாம். ஆயினும், இவர்களாலேயே உலகம் வாழ்கிறது. இவர்கள் இல்லையானால், உலகம் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும். இதனை,

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்

என்ற திருக்குறளால் அறிக.

"ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள் உலகின்பக் தனி" என்ற வாழ்க்கையின் பண்பாட்டுச் சுருதியை நாம் மறந்துவிடக் கூடாது. நற்குணங்களால் உள்ளத்தை வலிவூட்டிக் கொள்ளவேண்டும். பிறருக்கும் பயன்பட வாழ்தல் என்ற உயர்ந்த அற ஒழுக்கத்தில் ஒழுகவேண்டும். மறந்தும் பகைமை பாராட்டக் கூடாது. யாரையும் நினைப்பாலும், சொல்லாலும் இகழக்கூடாது. இத்தகு பண்பிற் சிறந்த வாழ்க்கையையே திருக்குறள் உலகம் காட்டுகிறது. திருக்குறளின் பண்பாட்டுலகத்தில் நாமனைவரும் வாழ வேண்டும்.

பயனற்ற செல்வம்

லகியல் வாழ்க்கையின் அமைப்பும் வளர்ச்சியும் செல்வத்திலேயாம். செல்வம் ஒரு சிறந்த கருவி. செல்வம் இன்பத்தின் ஊற்று; மகிழ்ச்சியின் அடிப்படை, அறத்தின் விளைநிலம். ஆயினும் தகுதியில்லாதார் கையில் செல்வம் சேருமாயின் துன்பத்தைத்தரும். செல்வமுடைமையைவிடச் செல்வமுடையாருடைய தகுதி, தரம், திறன் கவனத்துக்குரியன. செல்வத்தின் பயன், செல்வம் உடையானைப் பொறுத்து அமைவதேயாம்.

உயிர்கள் முழு நிறைத் தகுதியைப் பெற்று வளர்வதற்கே வாழ்க்கை வாழ்க்கையில் உயிர்களுக்கு வழங்கப்பெற்ற உரிமை நுகர்தலும் அனுபவித்தலுமாகும். நுகர்ந்து அனுபவிப் பதன் வழி உயிர்களின் வேட்கை தணிகிறது. வேட்கை தணிந்துழி முழுநிறைவுடையன ஆகின்றன. உயிர்களின் நுகர்ச்சிப் பொருள்களைப் பெறுதற்கே செல்வம். செல்வத்தைப் பெற்றவன் அதன் பயனைத் துய்க்காமலும், அனுப விக்காமலும் இருப்பானாகில், அவன் இறந்தவனாவான். உயிருடலொடு கூடிய வாழ்க்கையின் இயல்பு நுகர்தல். அனுபவித்தல், மகிழ்தல், மகிழ்வித்தல், இன்புறுதல் இன்புறுத்தல் ஆகியனவாம். இவற்றைச் செய்யாதவர்களின் வாழ்க்கை பயனற்றுப் போவதால் இறந்தவர்களாவர். பயனுடைய வாழ்க்கையே வாழ்க்கை, இதனையே குறள்,

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்

என்று கூறி விளக்குகிறது.

திருவருளால் கிடைத்த பிறப்பே உயிர்க்கு மருந்து. ஆனால், இறைவன் விதித்த நெறிமுறைகளாகிய பத்திய வாழ்க்கையை மேற்கொள்ளத் தவறினால், மீண்டும் மீண்டும் செத்துப் பிறக்கும் அவலத்திற்கு ஆளாக நேரிடும். பொருள் சக்தி படைத்ததுதான். ஆனாலும் தனியே பொருள் ஒன்றும் சாதிக்காது. ஆனால், அதனைப் பெற்றவன் உலகத்தில் எதையும் சாதிப்பான். ஆயினும் பொருளுடைமையினாலேயே எல்லாம் ஆகிவிடாது. பொருளைப் பயன்படுத்தும் வகையினாலேயே அமையும்.

வாழ்க்கையின் பயன் நோக்கியே பொருளை ஈட்டத்தொடங்குகின்றனர். ஆனால், பொருள் கையில் புழங்கத் தொடங்கியவுடன் பொருளின் பயனைவிடப் பொருளுக்கே முதன்மையான இடத்தைக் கொடுத்து, தாமும் துய்க்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழாமல், பொருளை இவறிக் கூட்டிப் பாதுகாக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால், மனிதன் பொருளின் பயனை இழப்பதோடு துன்பத்தில் சிக்கி, தன் ஆன்மாவைத் தானே தற்கொலை செய்து கொள்ளுகிறான். இதனால், பிறப்பு நீங்கக் கிடைத்த பிறப்பு மீண்டும் மயக்கத்தோடு கூடிய பிற்ப்பையே உண்டாக்குகிறது.

பொருளான்ஆம் எல்லாம்என் ரீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

என்ற குறள் இதனை விளக்குகிறது. உலகியலில் செல்வத்துக்கும், ஆடம்பரத்துக்கும் மதிப்பு இருக்கிறது. வெறும் செல்வமுடைமைக்குத் தரப்பெறும் மதிப்பே சமுதாயத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு அடிப்படை ஆடவர் இம்மைக்கும் மறுமைக்கும் பெற்று மகிழக்கூடியது புகழேயாம். புகழுடையவ்ர்கள் நிலத்திற்கு வளம் தருபவர்கள். பிறரை மகிழ்வுறுத்தலின் மூலம் வரும் புகழே சிறப்புடையது. இந்தப் புகழைப் பெறாதவர்கள் நிலத்திற்குச் சுமையாகிறார்கள் என்பது குறட்கருத்து.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்பது குறள்.

மனிதன் பலரோடு கூடி வாழப் பிறந்தவன். அதுவே மனித ஒழுக்கம். துறவிகளும் தொண்டரொடு கூடி வாழவேண்டும். சிலர், யாரும் தம்மை அணுகவியலாதபடி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் யாதிருந்து என்ன பயன்? இங்கனம் தனி விலங்காக வாழ்பவர் என்ன சாதனையைச் செய்யப் போகிறார்? அவர் இறந்த பிறகு இந்த உலகத்தில் எஞ்சியிருப்பது என்ன? மரணத்திற்குப் பின் பொருளைப் பிறிதொருவர் உரிமை கொண்டாடி எடுத்துக்கொள்வர். உடம்பு மண்ணுக்கு உரிமையாகி விடுகிறது. இவருக்கு உரியதாகவுள்ள புகழை விட்டுச் செல்லவேண்டாமா? என்பது திருவள்ளுவர் கேள்வி.

எச்சம்என் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்

என்பது குறள், எச்சம் என்றால், குற்றம் என்ற பொருளும் உண்டு. பலர் குழத் தாம் வாழாமையைக் குற்றம் என்று எண்ணிப் பார்க்கின்றாரா? இல்லையா? குற்றத்தை எண்ணிப் பார்த்தலே குற்றத்தின் நீங்க வழி. ஆதலால், கொடுத்து மகிழ்ந்து பலர் சூழ வாழ்வதே வாழ்க்கை இந்நிலவுலகத்தில் நிறையச் செல்வமிருக்கிறது. ஆயினும், பலர் வறுமையால் வாடுகின்றனர். ஏன்? செல்வ வறுமையினால் அல்ல, சிலரிடம் உள்ள நற்குண வறுமையினாலேயாம். செல்வம் அடுக்கிய கோடி பெற்றுள்ளவராயினும் செல்வத்தைப் பயனறிந்து பயன்படுத்துவதில்லை. உலகில் செல்வத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் தகுதியறிந்து பயன்படுத்துவோரே வைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்தவரே நாதஸ்வரம் வைத்திருக்கிறார். நாதஸ்வரம் வாசிக்கத் தெரியாதவர்கள் அதை வைத்திருக்கமாட்டார்கள். அப்படியே பெற்றிருந்தாலும் வாசிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்து கேட்டு மகிழ்வர். ஆனால், செல்வத்தின் பயனைத் தெரியாமலே, செல்வத்தைப் பலர் வைத்திருக்கிறார்கள். செல்வத்தின் பயன், ஈதல், மகிழ்வித்து மகிழ்தல், துய்த்தல் ஆகியவையாம். இந்த வகைகளில் பயன்படாத செல்வம், அடுக்கிய கோடி இருப்பினும் அஃது இல்லாததாகவே கருதப்பெறும். இதனை,


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

என்று குறள் கூறுகிறது.

செல்வத்தை ஈட்டுதல், பேணிக்காத்தல் ஆகியவை துன்பந்தரும் பணிகளேயாம். ஆயினும் இத்துன்பம் அனைத்தையும் இன்பமாக மாற்றக்கூடியது, தாம் துய்த்து இன்புறுதலும் பிறருக்குக் கொடுத்து மகிழ்வுறுத்தும் வழி இன்புறுதலும் ஆகும். ஈதலும், துய்த்தலும் இயற்றாதவர்கள் செல்வத்தில் பயனை இழக்கின்றனர். அதோடு இன்புறுதற்குக் காரணமாய செல்வம் நோயாகிச் செல்வமுடையவனை அழிக்கும். செல்வத்தினைத் தகுதியறிந்து பயன்படுத்தாதவன் களவு, காவல்களால் அலைக்கழிக்கப்படுகின்றான். உடம்பு, உள்ளம் இரண்டையும் அழித்துக்கொள்கிறான். ஐயோ, பாவம்! இதனை,

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றிதல் இயல்பிலா தான்

என்று கூறி விளக்குகிறது. குறள்.

உலகம் இன்பத்தின் வைப்பு. உயிர் இன்புறுதல் மூலமே அதன் வேட்கை தணிகிறது. அவ்வழிதான் உயிர் நிறைநலம் பெறுகிறது; இறைமைத் தன்மையை அடைகிறது. அதனா லன்றோ உயிர்க்கு இறைவன் நுண்ணிதில் இன்புறுதற் குரியனவாய கருவிகளாகிய பொறிகளையும் புலன்களையும் தந்ததோடன்றி இன்புறுதற்குரியனவாய பொருள்களையும் படைத்தருளினன்!

காதலின்பத்திற்கு உரிய பெண், இன்பத்தைத் தருபவள்; இன்பத்தைப் பெறுபவள். மிகச் சிறந்த நலன்கள் அனைத்தும் பெற்ற நங்கை ஒருத்தி தனியே வாழ்ந்து மூத்தாள் என்றால் என்ன பயன்? “தமியள் மூத்தற்று" என்ற சொற்றொடர் வினாவாகவும் விடையாகவும் இருக்கிறது. பெண் மணம் உடையவள். அது கொடியில் மலர்கிறது. கொடியின் மனம் பரப்பக் கொம்பு தேவை. நிறை நலம்பெற்ற நங்கை ஒருத்தி உரிய பருவத்தே கொழுநனாகிய தலைமகனைப் பெற்று மகிழ்தலும், மகிழ்வுறுத்தலுமில்லாமல் வறிதே மூப்பாளாயின் அவளுக்கும் பயனில்லை; மற்றவர்க்கும் பயனில்லை. உலகத்தின் இடையறாத வழிவழி மரபும் தடைப்படுகிறது.

இத்தகு கொடுமை போன்றதே, வறுமையுடையாருக்கு வழங்கி அவர்தம் வறுமையை மாற்றாதவனின் செல்வம் என்று திருக்குறள் கூறுகிறது. ஈயாதவனது செல்வத்தால் உடையானுக்குப் பயனில்லை. மற்றையோருக்கும் பயனில்லை. ஏன்? அந்தச் செல்வத்திற்கும் பயனில்லாமற் போய்விடுகிறது. இதனை, அற்றார்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று

என்ற குறள் எடுத்துக் கூறுகிறது.

மரம் நிழல் தருகிறது; கனிகளைத் தருகிறது. அருமையாகச் சில நச்சு மரங்களும் உண்டு. நச்சு மரமும் பழுக்கும்; அது நடுவூருள் நம் வீட்டுக்கு அருகில் பழுத்துக் கனிகளை உதிர்க்கும். யார் போய் எடுப்பர்? கிளிகளாவது வந்து கொத்திப் பார்க்குமா? இல்லை! அப்படியே மீறி யாராவது ஆசையின் மிகுதியால் அறியாமையின் காரணமாகத் தின்று விட்டால், தின்றவன் உயிரைக் கொல்லும். அதுபோல நடுவூருள் நமது தெருவில் நமக்குப் பக்கத்திலேயே ஓங்கி உயர்ந்த ஒரு மாளிகையில், நஞ்சு மனத்தோடு வாழ்கிறான் ஒருவன். அவனிடத்தில் ஏராளமான செல்வமுண்டு. ஆயினும் நெஞ்சில் நஞ்சுடையான் கையில் அகப்பட்ட செல்வமாக இருப்பதால், அச்செல்வமுடையானை யாரும் விரும்பிச் சேர்வது இல்லை. தவறிப் போய் யாராவது சேர்ந்தாலும் அவன் அவர்தம் உயிரை உறிஞ்சிக் குடிப்பானேயன்றி, வாழ்விக்கமாட்டான். இதனை

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

என்று குறள் கூறுகிறது.

தண்ணீர் நமது விட்டுக் குழாய்க்கு வரவேண்டும். ஆனால், தண்ணீர் வரும் குழாய் பாசி பிடித்ததாக இருக்கு மானால், தண்ணீரின் துய்மை கெட்டு, பருகுவோரின் வாழ்க்கைக்கு உலை வைக்கிறது. அதுபோல, நமக்குச் செல்வம் தேவை. செல்வம் ஈட்டுவது மனிதனின் தலையாய கடமை. அதனை அறவழியிலேயே ஈட்டவேண்டும். ஆனால் செல்வம் அறத்தின் வழி வராது போனால், செல்வம் இன்பத்தைத் தருதற்கு மாறாகத் துன்பத்தைத் தருகிறது. செல்வம் அறத்தின் வழி சட்டுவதென்றால் எப்படி? அறத்தின் வழி வரும் செல்வம், நிச்சயமாகத் தேவைக்கு மிஞ்சியதாக இருக்காது. தேவைக்கு மிஞ்சிய செல்வம் எதற்கு?

நமது உடலில் தேவைக்கு அதிகமான ரத்தம் ஊறினாலும் நோய், தேவைக்குக் குறைவான ரத்தம் ஊறினாலும் நோய். இந்த இயற்கை நியதியை நாம் ஏன் பாடமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பலருடைய தேவையை நிறைவு செய்யவேண்டிய செல்வம், அங்ஙணம் செய்யப்பெறாமல் பழியுடைய வழியில் தேவைக்கு மேல் குவிகிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் தருதல்கூட இன்னும் உலகத்தில் மலரவில்லை. ஆளையும் நேரத்தையும் வைத்து ஊதியம் கொடுக்க நினைக்கிறார்களே தவிர, ஒருவன் உழைப்பைக் கொண்டு உருவாக்கிய செல்வத்தை மையமாக வைத்து ஊதியம் தர முன் வருவதில்லை. முறையான ஊதியம் தராது ஈட்டிய செல்வம் அறத்தின் வழி வந்ததில்லை.

செல்வத்தின் உற்பத்திக்கு - படைப்புக்கு அடிப்படையாகவுள்ள உழைப்பாளிகளின் தேவையைப் பூர்த்தி செய் யாது குவியும் செல்வம், அறத்தின் வழி வந்த செல்வமல்ல. இச்செல்வவாழ்க்கை மணற்பரப்பில் மாளிகை கட்டியதைப் போன்றது; பயனற்றது. செல்வம் அறத்தின் வழியே வரவேண்டும். ஈட்டிய பொருளை, தன்னுடைய வாயை வயிற்றைக் கட்டாமல் அனுபவிக்க வேண்டும். பலரோடும் அன்பு பாராட்டிக் கொடுத்து மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும். இங்ஙணம் அறத்தின் வழிப் பொருளிட்டித் தான் துய்த்து, பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்து அன்பு பாராட்டி மகிழாதவன் வைத்திருக்கும் செல்வம் பெயரளவிலேயே அவனுக்கு உரிமையுடையது. இச் செல்வத்திற்குரிய இவனுடைய உரிமையும் காலப்போக்கில் பறிக்கப்பெற்றுப் பிறர் கொண்டு துய்ப்பர். உடைமையாம் உரிமையும் இழந்து இரக்கத்திற்குரியவராகின்றனர். இதனை,

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

என்று குறள் கூறுகிறது. இதில் "கொள்வார் பிறர்" என்ற சொற்றொடர் நிறைந்த பொருளுடையது; நினைந்து நினைந்து உணர்தற்குரியது. "கொள்வார்” என்றதால் கொடுக்காமலே வலியக் கொள்ளுதலும், "பிறர்” என்பதனால் உரிமையும் உறவுமுடையார் அல்லர் என்பதும் உணர்க.

செல்வம் சீருடையது. செல்வத்தினைக் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோருக்கும் ஒரோவழி வறுமை வருவதுண்டு. ஆயினும், அந்த வறுமையை நன்மனம் உடையவர் விரும்பி ஏற்றுக்கொள்வர். ஏன்? அவர் தம் உளம் நோக்க அது வறுமையுமல்ல. ஒன்றில் பற்றிருந்தாலல்லவோ, பற்றுடைய தொன்று இன்மை, வறுமையாகக் கருதப்பெறும்? செல்வத்தில் உள்ள பற்றைவிட்டுத் தாமே ஈத்து உவந்து மகிழும்; செம்மனச் சான்றோர்களுக்குத் தேவையும் கூடப் பலவாகப் பெருகி நிற்காது. அவர்தம் உயிர் வாழ்க்கைக்குரிய தேவை, பிறர் மகிழ்தலாலேயே அமைந்து விடுவதும் உண்டு.

மேகம் கருவுயிர்த்து முட்டி மோதுகிறது. அது மழையாகப் பொழிந்து தன்னை வறிதாக்கிக் கொள்வதே சிறப்பு. அதுபோலப் பெற்ற செல்வத்தை வழங்கி, மகிழ்வித்து, மகிழ்ந்து எல்லாவற்றையும் இழப்பதையுங்கூடச் சிறப் பென்றே கருதுவர் சான்றோர். மேகம் மழை பொழிந்தவுடன் வறிதே காட்சியளிக்கிறது. மீண்டும் கருத் தாங்கி மழை பொழியும். அதுபோல கொடுத்து மகிழ்வுறும் வாழ்க்கை ஒரோவழி வறுமைப்பாட்டாலும் வறுமை நிலையானதல்ல. அவர்தம் வாழ்க்கையில் மீண்டும் செல்வம் செழிக்கும். இதனை,

சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

என்று குறள் கூறுகிறது.

மாரிமழை பெய்யத் தவறின், உலகம் வளம் குன்றி வறுமையால் இடர்ப்படும். அதுபோலவே சீருடைச் செல்வர் கொடுப்பதொழித்தால் உலகம் வறுமையால் இடர்ப்படும். மாரி கொடுப்பதை மறந்தால் மீண்டும் மாரியாதலையும் தம்முடைய மாரி என்ற பெயரையும், புயல் சுமந்து வரும் இயல்பையும் இழக்க நேரிடும். அது போலவே சீருடைச் செல்வர் செல்வத்தைக் கொடுக்காவிடில், அந்த செல்வத்தை இழக்க நேரிடும் என்ற கருத்தும் இதன் பாலுளது. செல்வமென்பது நன்று; நன்று தருவது. நன்று என்பது மகிழ்வித்தலும் மகிழ்தலுமாகும். அந்த இயல்பறிந்து வாழ்தலே திருக்குறள் உலக வாழ்க்கை.

நாணுடைமை

திருக்குறள் ஒழுக்கத்தால் உயர்ந்த உலகத்தைக் காட்டுகிறது. திருக்குறள் மனிதனுக்குப் பல்வேறு உடைமைகளைத் தருகிறது. அந்த உடைமைகள் மனிதனுக்கு அனைத்தும் ஒன்றினை ஒன்று சார்ந்து, அணிக்கு அணியாக-அழகுக்கு அழகு செய்கிறது. அத்தகு அணிகளுள் நாணுடைமையும் ஒன்று. ஏன்? மனிதன் கொள்ளத்தக்க உடைமைகளில் இதுவே தலையாயது என்று கூறினாலும் தகும். மனிதன் வெட்கப்படுகிறான். எதற்கு? ஏழை என்பதைக் காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். இது அவசியமா? அவசியமல்ல. ஒருவன் ஏழையாக இருப்பது அவனுக்கு வெட்கமல்ல. அவனைச் சார்ந்த சமுதாயத்திற்கே வெட்கம், ஆனால், உண்மையில் எதற்கு வெட்கப்படவேண்டும்? அறம் அல்லாதனவற்றை நினைக்கும் பொழுது, செய்ய முற்படும் பொழுது நாணுதல் வேண்டும். இந்த நாணமும், உடலில் வெளிப்படுவதன்று; உள்ளத்தில் வெளிப்படுவது.

கருமத்தால் நாணுதல் நானுத் திருதுதல்
நல்லவர் நாணுப் பிற

என்பது குறள்.

மக்களுக்கெல்லாம் இன்றியமையாத் தேவை ஊண், உடை. இவை எல்லா மக்களுக்கும் வேண்டிய பொதுப்படையான தேவைகளே. இதில் எந்த மனிதருக்கும் வேற்றுமையில்லை. இந்தப் பொதுப்படையான தேவைகளைப் பெற்று வாழ்தல் மனிதனுக்குச் சிறப்பாகாது. நல்லன அல்லாதவற்றைக் காணும் பொழுது தோன்றும், நாணத்தைப் பெற்று வாழ்தலே சிறப்பாகும். இதனை,

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம வேறல்ல
நானுடைமை மாந்தர் சிறப்பு

என்கிறது குறள். ஊணும் உடையும் இனப்பெருக்கமும் மாந்தர்க்கெல்லாம் பொது என்று கருத இடமிருக்கிறது. 'எச்சம்' என்ற சொல்லுக்கு 'மக்கட்பேறு' என்று பொருள் கொள்ளலாம். ஆனால் "ஊணுடை அச்சம்” என்ற பாடமும் உண்டு. உணவினுடையது அச்சம் உலகத்து உயிர்க்கெல்லாம் வேறுபாடுடையன அல்ல. எனவே, உணவின் குறைபாடுகளுக்கு அஞ்சும் அச்சம் எல்லா உயிர்க்கும் ஒக்கும். மற்றும் தமது நெறிமுறை பிறழ்ந்து நிலைக்கு உள்ளஞ்சி நாணுதலே சிறப்புடைய மாந்தர்க்கு அழகு என்றும் சிந்திக்கலாம்.

உயிர் அருவப் பொருள்: உருவமற்றது. உருவமின்மையால் பொருளின் உண்மை பொய்யாகாது. உருவமற்ற பொருள்கள் ஏராளமானவை உலகத்தில் இருக்கின்றன. மனம், மின்சக்தி, காற்று ஆகியவை வடிவமற்றைவையேயாம். இவற்றை இல்லையென்பார் உண்டோ? அல்லது இவற்றின் ஆற்றலை இயல்பைக் குறைத்து மதிப்பிடுவாருண்டோ?

இந்த உருவமற்ற பொருள்கள், உருவங்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது மணம் தருகிறது; காதல் விளைவிக்கிறது; ஒளி தருகிறது; இயக்குகிறது; மகிழ்வைத் தருகிறது; உடலுயிர் உறவை இணைக்கிறது. அதுபோலவே, உயிர் வடிவமற்றதாயினும் வடிவமாகிய பருவுடலுடன் தொடர்பு கொள்ளும்போது இயங்குகிறது.

உயிர் தங்கியிருந்து பயிலும் பருவுடலுக்கு உணவு தேவை. ஆதலால், உயிர்கள் உணவை நாடும். அதுபோல, நற்குணங்களைப் பெற்று ஆட்சி செய்யும் சால்பு நாணுடைமையை நாடும். நாணம் உடைமையின் வழியேதான் சால்பு விளங்க முடிகிறது. நாணத் தகுவனவற்றை நாணாது, ஒருகால் பழகிவிட்டாலும், நாணாமை உயிர்க்குப் பழக்கமாகி விடுகிறது. நம்முடைய உள்ளத்திற்கு இயல்பிலேயே. நாணும் தன்மையுண்டு. பலர், அதை மரத்துப் போகச் செய்து விடுகின்றனர். ஊணினால் உடல் வாழ்க்கை, உடலால் உயிர் வாழ்க்கை, சால்பினால் உயர் வாழ்க்கை நாணுடைமையினால் சால்பு என்ற வாழ்க்கைமுறை எண்ணத்தக்கது. இதனை,

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு

என்று குறள் கூறுகிறது.

உலகில் ஏராளமான அணிகள் உண்டு. அணிகள் இருவகையின. ஒன்று புற அணியாம். பிறிதொன்று அக அணியாம். புற அணிகலன்கள் புல்லியரிடத்தும் உண்டு. ஏன்? விலங்குகளுக்கும் அணியலாம். புற அணிகலன்கள் புகழுடையன அல்ல. அவை இம்மையும் மறுமையும் தரா. அக அணிகலன்களே உயர்ந்தவை. அவற்றை முயன்று அணிதலே சிறப்பு. அக அணிகலன்களை உடையோரே சான்றோர். அவற்றுள்ளும் நல்லன அல்லாதவற்றை நினைத்துழியும்கூட நாணும் இயல்புடைமையே சான்றோர்க்குச் சிறந்த அணி, இத்தகு சான்றோர் மதித்தற்குரியவர்கள். நாணுடைமை இல்லையேல், பீடுநடை பிணியாகும். சால்பின்றி-சால்புடையோர் போலக் காட்டிப் பீடுநடை நடத்தலால் வரும் துன்பம் அவராலும் மற்றவராலும் தாங்க முடியாமையாலேயே பிணி என்றார். இதனை,

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல்
பிணியன்றோ பீடு நடை

என்று குறள் கூறுகிறது.

சிலர், தம்பழி நாணுவர். ஆயினும் பிறர் பழிகண்டு மகிழ்வர். ஏன்? பிறர்பழி காண்பதிலும், பிறர் பழி எடுத்துக் கூறுவதிலும் ஆர்வமும் காட்டுவர். இது சீருடைச் செயலல்ல; உண்மையான நாணுடைமையும் ஆகாது. நாணுடைமைக்கு உரியதாக உலகம் கருதுவது தம்பழி, பிறர்பழி ஆகிய இரண்டையும் கண்டு நாணுபவரையேயாம். இன்றைய உலகியலிலோ, பிறர் பழியில் தம் புகழ் வளர்க்க நினைக்கின்றனர். இந்த மனப்போக்கு புகழினைத் தராததோடு, காலப்போக்கில் பழியினையே தரும் என்பதறிக. இதனை,

பிறர்பழியும் தம்பழியும் நானுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு

என்று குறள் கூறுகிறது.

உணவுப் பொருள்களாகிய காய்களும், கனிகளும் விளைவித்தற்குக் காடும், கழனியும் கிடைத்து, அவற்றை உழுது, எரு இட்டு, வித்திட்டு, நீர்பாய்ச்சி வளர்ப்பதவசியம். இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ, அதைப்போல அதை விடக்கூடவே அக்கழனிக்கு வேலி அவசியம். காடுகளையும் கழனிகளையும் பெருக்கி, வேலிகள் இல்லாது போயின் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அழியும்.

அதுபோலவே, பலர் பல்வேறு வகைப்பட்ட நல்ல குணங்களை அரிதில் முயன்று பெறுகின்றனர். ஆயினும் ஒரோவழி இழந்துவிடுகின்றனர். ஆதலால், சான்றோர் நாணம் என்ற வேலியை அமைத்துக் கொள்ளாது, உலகத்தைப் பெறவிரும்பார் நாணம் உடைமையே உயிர்க்குப் பாதுகாப்பு. பழியும் பாவமும் புரிந்து, உயிர்க்குத் துன்பம் விளைவிக்காமல் உயிர்க்குப் பாதுகாப்பளிப்பதால் நாணுடைமை வேலியாகும். ஞாலமும் நானும் பெரும்பாலும் முரண்படா. அப்படி முரண்பாடு தோன்றின் சான்றோர் ஞாலத்திலிருந்து நாணையே பெறுவர். இதனை,

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

என்று குறள் கூறி விளக்குகிறது. இதனையே "பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று புறநானூறு கூறுகிறது.

உயிர் உடலொடு கூடித் துய்த்து, மகிழ்ந்து வாழ்தல் இன்பமேயாம்; பெறுதற்கரிய சிறப்புமாம். எனினும், உயிர்க்குரிய சிறப்பியல்புகளை இழந்து அதன்பின் உயிர் வாழ்தல் சிறப்பன்று. ஆதலால், நாணுடைமையைக் காப்பாற்றுவதற்கு உயிரையும் விலையாகக் கொடுப்பர் சான்றோர். இதற்குச் சான்று, அரச நீதிக்காகத் தன் உயிர் கொடுத்த பாண்டியன் நெடுஞ்செழியன்! நாணை விலைகொடுத்து உயிர் வாழ விரும்பமாட்டார்கள் சான்றோர். உயிரினும் நாண் சிறந்ததாகும். இதனை,

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

என்ற குறள் விளக்குகிறது. சிலர் நாணமாட்டார்கள். இவர்கள் கண்டாரும் கேட்டாரும் வெறுக்கத் தக்க செயல்களையே செய்வர். அறியாமையின் காரணமாகவோ, அல்லது ஆசையின் காரணமாகவோ, தாம் நாணுதற்குரிய செயல்களை நாணாமற் செய்வர். இவர்கள் தம் குற்றம் நோக்கி நாணா தொழியின், இவர்களை நோக்கி அறம் நாணும்: நாணுத லோடன்றி நீங்கும். நாணுடைமையும் அறமும் நீங்கிய வழி பொருளும் நீங்கும்; புகழும் நீங்கும்; இன்பமும் நீங்கும். இதனை,

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து

என்று குறள் கூறுகிறது.

தாமே நாண வேண்டியது இயல்பு; ஒழுக்கமும் கூட அஃதின்றி இவன் செயல் கண்டு பிறர் நாணிய வழியும் நானாதிருப்பது இழிவுள் இழிவு என்பது கருத்து. நாணமற்ற வாழ்க்கையுடையோரை அறம் சேராது என்பது தெளிவான முடிவு. ஆதலால், தம்முடைய மனச்சான்று தவறு என்றும், செய்யாதே என்றும் இடித்துக் காட்டும் இடங்களில் மனிதன் விழிப்பாக இருந்து திருத்திக்கொள்ளவேண்டும்.

எல்லாருடைய மனச்சான்றிலும் நானும் இயல்பும், அறத்தினை எடுத்துக் காட்டும் இயல்பும் உண்டு. இதனையே அண்ணல் காந்தியடிகள் "அந்த ராத்மா பேசுகிறது” என்று குறிப்பிட்டார். ஆதலால், நம்முடைய அடிமனம் ஆங்கு உறையும் நல்லுணர்வு, உயிர்க்கு உயிராக உறையும் இறைவன் எடுத்துக் காட்டும் அறத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தராத்மாவின் பேச்சைக் கேட்காமல் இருப்பவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதனை நினைந்து நம்மை நாமே நகைத்தும், திருத்தியும் வாழ்க்கையில் வெற்றி கொள்ளவேண்டும்.

"ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்” என்று முன்னர்க் கூறியது குறள். அதுபோலவே நாணுடைமையும், உயிரினும் சிறந்தது என்று குறள் கூறுகிறது. இவ்விரண்டில் எது உயிரினும் மேலாயது? என்று திருவள்ளுவர் ஆராய்ந்து, ஒழுக்கத்திலும் நாணுடைமையே சிறந்தது என்று கூறுகின்றார். ஒழுக்கக்கேடு தவறுதான். ஆயினும் ஒரோவழி ஒழுக்கத்தில் தவறுகிறார்கள் மீண்டும் அந்த ஒழுக்கத்தில் முயன்றால், நிலைபெற முடியும்.

ஒழுக்கத்தில் எளியரானார் பலர் பின் ஒழுக்கத்தில் வளர்ந்து ஒழுக்கத்தில் உறுதிபெற்றுப் புகழ் பெற்றனர். திருநீலகண்ட நாயனாரும், அருணகிரிநாதரும் இதற்குச் சான்றாவர்.

நாணுடைமை தவறினால், மீண்டும் வளர்தல் அரிது. தீயனவற்றைக் கண்டு நாணும் இயல்பை நெஞ்சு மறந்துவிட்டால், நெஞ்சு கட்டுக்கோப்பும் காவலுமில்லாத திறந்த வீடாகிவிடுகிறது. அங்குப் பழியும் பாவமும் தன்னிச்சையாகப் புகுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. ஆதலால், நானும் இயல்பே நல்வாழ்க்கையின் வாயிற் கதவு. அந்தக் கதவு தீயனவற்றைக் காணும்பொழுது மூடா தொழியின், தியனவற்றிற்கு ஆட்படும் ஆதலால், ஒழுக்கம் இழப்பினும் அவனுடைய குடிப்பிறப்பு ஒன்றினையே கெடுக்கும். நாணுடைமை இல்லையாயின் நலமனைத்தும் கெடும். இதனை,

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

என்று கூறுகிறது குறள்,

சிலர், "கொள்கையே பெரிது, அக் கொள்கையை எப்படியும் எந்த வகையாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்பர். அதற்காக நாணத்தைத் துறந்தும் கொள்கைக்காகப் போராடுவர். இதுவும் தவறு. கொள்கையைவிடக் கொள்கையைச் சாதித்துக் கொள்ளும் நெறியும் முறையும் தவறானவையாக இருக்கக்கூடாது. கொள்கைக்காக நாணத்தை இழந்துவிடக்கூடாது என்ற கருத்தும் இந்தக் குறளின் மூலம் பெறப்படுகிறது. இன்றைய சமுதாயப் பொது வாழ்க்கைத் துறைக்கு இந்த அறவுரை எவ்வளவு பயனுடையது என்பதை அன்புகூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

நாட்டில் ஆங்காங்கு நடைபெறும் பாவைக் கூத்தைப் பார்த்திருக்கிறோம். அரங்கிலாடும் பாவைகள் ஆட்டப்படுவதால் ஆடுமே தவிர, அவற்றுக்கு உயிர்ப்புமில்லை; உணர்வுமில்லை. அது போலவே நாணுடைமையை அகத்திலே கொண்டு வாழாதார் வாழ்க்கை மானுட வாழ்க்கையேயல்ல. அவர்களது வாழ்க்கையெல்லாம், ஆட்டபாட்டங்களெல்லாம் உயிரியக்க வாழ்க்கையல்ல. நாணாகிய உயிர் இல்லாதவரையில் அந்த உயிர் வாழ்க்கை, உயிர் வாழ்க்கையாகவே கருதப்பெறமாட்டாது அவர்கள் மிரட்டுவதும், உருட்டுவதும் வெறும் பொம்மலாட்டங்கள். அதனால் உயிர்களுக்கு உறுதியுமில்லை. பயனுமில்லை. இதனை,

"நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நானால் உயிர்மருட்டி யற்று"

என்று கூறிக் குறள் விளக்குகிறது.

ஆதலால், வாழ்க்கை என்ற மாளிகையில் உயிர் சிறக்க வேண்டுமாயின், நாணுடைமை என்ற வாயிற் கதவு திட்பமுடையதாக அமையவேண்டும். மாளிகையின் கதவு சிறப்புற அமையாது போனால், மாளிகையின் உள்ளேயிருக்கும் பொருள்களுக்கும் ஆபத்து உள்ளே உயிருக்கும், உயிர் பெற்றிருக்கும் உயரிய குணங்களுக்கும் ஆபத்து. அது போலவே, உயிர் வாழ்க்கையில் மனம் என்னும் மாளிகையில் நாணாகிய கதவு உறுதியுடையதாக அமையாது போனால், பெற்ற கல்வியும் பேணிய ஒழுக்கங்களும், செய்த தவமும் கெடும். தலைமகனாகிய உயிர் இன்பத்தை இழந்து துன்பத்திற்கு ஆட்படும். ஆதலால், மனச்சான்றை மதித்து அந்தராத்மாவின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து நாணுடைமையைப் பேணிப் பெருமையுடன் வாழ வழி நடத்துகிறது திருக்குறள் உலகம்.

குடிப் பெருமை காத்தல்

னிதன் தனித்துப் பிறந்தவனுமல்லன், தனித்து வாழப் பிறந்தவனுமல்லன். தான் பிறந்து வாழும் குடியினருடன் கூடிக் கலந்து, மகிழ்ந்து, வாழ்வித்து வாழ்தலே சீலம் நிறைந்த வாழ்க்கை தம்மைச் சார்ந்தோர் இளைத்துச் சாக, தாம் மகிழ்ந்து வாழ்தல் நாணத்தக்கதாகும். தாம் உண்டு மகிழ்வதைவிட, குடிசெயல் வகையில் மகிழ்வதும், உண்பதை விட உண்பிக்க உண்பதுவுமே சிறப்பு; உயர்வு. இன்ப உணர்வு கலந்த சுவையும்கூட. அஃதாலன்றோ, ஒருவர்க்குக் குழந்தைப் பருவத்தில் தாயும், இளமைப் பருவத்தில் மனைவியும், முதுமைப் பருவத்தில் மகனும் உண்பிக்கும் பொறுப்பினைகடமையினை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இது போக, வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும், திருக் கோயில் திருவிழாக்களிலும் பலர் கூடி விருந்துண்டு மகிழ்தலைக் காண்கின்றோம்; பலர் கூடி உண்பதென்பதே சிறப்பல்ல. உணர்வுடன் கூடிய உறவு கலந்து உண்பதே சிறப்பு. உறவு கலந்து உண்ணக் கண்டீர் என்றார் தாயுமானாரும். ஒருவன் தன்னுடைய குடியை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு, குடி உயரும் வரையில் பசி நோக்காது பணியாற்றுவான். அங்ஙனம், ஆற்றுபவனே மனிதன், பெருமைக்குரியவன், என்று குறள் பேசுகிறது.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்

என்பது குறள்.

குடி செயலுக்கு ஆள்வினையாற்றல் வேண்டும். ஆற்றலைப் பயனுறத் தக்கவகையில் இயக்க நிறைந்த அறிவும் தேவை. இவையிரண்டும் பெயரளவில் இல்லாமல் செயல்பட வேண்டும். சிலர் செயல்படுவர். ஆனால் இடையீடுகள் நிகழும். தொடர்ச்சியின்றி விட்டுவிட்டுச் செயல்படுகிறவர்களும் வீழ்ச்சியையே அடைவர். ஓயாது செயல்பட வேண்டும். ஒரு நொடிப்பொழுதும், ஓயாது தொடர்ந்து இடையீடின்றி ஒரு செயலைப் பிறிதொரு செயல் தொடரச் செயல்படவேண்டும். இதனை,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

என்ற குறளால் அறியலாம்.

தாம் பிறந்த குடியை உயர்த்தும் பணியில் ஈடுபடும் பொழுது தெய்வம் வரிந்து கட்டுக்கொண்டு வந்து துணை நிற்கும் என்பது குறட் கருத்து. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்; கனவுகள். இந்த இலட்சியங்களை-இன்ப வாழ்க்கையை அடைய முடியாமல் அல்லற்படுகின்றனர். திருவள்ளுவர் இன்ப இலட்சியங்களை அடைந்து மகிழ, எளிய வழி ஒன்று காட்டுகின்றார். அதாவது, தன்னுடைய குடி தாழ்ந்து கெடாமல் உயர்ந்து விளங்கப் பணி செய்யும் ஒருவர்க்கு அவர் கருதிய கருத்தும் தானே முடியும்.

குடி செய்தலாகிய சமூக மேம்பாட்டிற்குரிய பணிகளைச் செய்தல் உயர்ந்த திருத்தொண்டு. அதனாலன்றோ சிவஞானச் செல்வர்களாக விளங்கிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பசி நீக்குதல், நோய் நீக்குதல், திருமணங்கள் முடித்து வைத்தல் ஆகிய குடிசெயற் பணிகளைச் செய்தனர். இன்று சமூகப் பணி என்று கருதுவதற்கும் குடிசெயல் வகைக்கும் பெரிய வேறுபாடில்லை. சமுதாயப் பணிகளைச் செய்வதற்குச் சிறந்த சீலம் தேவை. சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதற்குச் சிறந்த சமூக ஒழுக்கக் கூறுகள் ஒருவனுக்குத் தேவை.

ஒழுக்க நெறிகள் இரு திறத்தன. ஒன்று தனது மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் தனது ஒழுக்கங்கள். பிறிதொன்று பிறர் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய சமூகத்துறைப் பழக்க வழக்கங்கள். பெரும்பாலோர் உடற்சார்புடைய தனது ஒழுக்கத்தில் வெற்றி பெற்று நின்று ஒழுகுவர். ஆயினும் சமூகத்துறைப் பழக்க வழக்கங்களில்-ஒழுக்கத்தில் அவர்களுக்கு நாட்டமிருக்காது. அதை அவர்கள் ஓர் ஒழுக்கமாகவே கருதுவதில்லை.

நம்முடைய நாட்டில் குடி வெறியும், காமவெறியும் மிகக் குறைவு. அடுதலும் கொல்லுதலும் கூடக் குறைவேயாம். ஆயினும் சமூக ஒழுக்கக் கேடுகளாகிய பிரிவினை, பேத உணர்ச்சி, 'எனது', 'உனது' என்ற வேறுபாடுகள், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் மலிந்து கிடக்கின்றன. இதனால் நமது நாடு தனி மனித ஒழுக்கத்தில் ஓரளவு மனநிறைவு தரத்தக்கதாக இருக்கிறது என்பதையும், ஆனால் அதே காலத்தில் மனித குல ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குரிய பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமநிலைச் சமுதாய அமைப்பிற்குரிய சமூக ஒழுக்கத்துறையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

பலரோடு கூடி நோதலும் தணிதலுமின்றி வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலும் ஓர் ஒழுக்கமேயாகும். இந்த, சமூக ஒழுக்கத்தில் ஒரு மனிதன் தன்னை ஈடுபடுத்தி வளர்த்துக் கொள்ளவேண்டும். தன்னலம் ஒரு நஞ்சு. இந்த நஞ்சினைத் தாங்கி, சமூகத்துக்குள் அடிவைக்கின்றவன் தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுமில்லை; தன்னலமும் நிறைவேறுவதில்லை: மாறாக சமூகத்துக்கும் கேடு செய்கிறான்.

உயிர், உடலின் நலனுக்காகப் பொறிகள் சுவைக்காமல் தன் நலனுக்காகச் சுவைக்குமானால், அது பொறிக்கும் கேடு; உயிருடலுக்கும் கேடு. அதுபோலத் தம்மைச் சார்ந்தோரின் நலனைக் கருதி உழைத்தல் சிறந்த ஒழுக்கமாகும். தம்மைச் சார்ந்தோர் மேம்பாட்டுக்கும் நல்வாழ்க்கைக்கும் உழைப் பதற்கு நல்லெண்ணம், நம்பிக்கை, பொறுத்தாற்றல், அடக்கம், எளிமை முதலிய பல்வேறு குணச்சிறப்புகள் தேவை. ஒருவர் சமூகத்தில் கலந்து பழகி, சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்து அதில் வெற்றியும் கண்டு சமூகம் இவரைத் தனது உடைமையாகக் கருதுகிற அளவுக்கு உயர்தல் என்பது ஒருகலை! இல்லை, அதுவே தெய்வீக வாழ்வு!

இத்தகைய வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கின்ற சமூக ஒழுக்கக் குறைகள், குற்றங்கள் இல்லாதவனாக நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; பண்படுத்திக் கொள்ளவேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக்கொண்டவர்களை உலகமே சுற்றமாகச் சுற்றும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

என்று திருக்குறள் கூறுகிறது.

உலகத்தின் சிறப்புகள் நல்லாண்மையின் படைப்பு களேயாம். அதனாலன்றோ, புறநானூற்றுக் கவிஞர்,

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று கூறினார்.

நல்லெண்ணம் என்பது பருவுடல் அமைப்பால் மதிப்பீடு செய்யக்கூடியது அல்ல. நல்லாண்மை என்பது ஆள்வினையுடையவராக இருத்தல்; பொருள் செய்யும் துறையில் வெற்றி பெறுதல்; தம்மைச் சார்ந்தோரின் வாழ்க்கையை வளமுறப் பேணிப் பாதுகாத்தல்; தம்முடைய குடியினரையும், சுற்றத்தினரையும் தமதெனப் பிறப்பின் சார்பாலும், உறவினாலும் மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமாகத் தமதாக்கிக் கொள்ளுதல் சிறப்பினும் சிறப்பு. அதுவே நல்லாண்மை.

பலரோடு கூடி வாழப் பிறந்த மனிதன் சமூகக் கடமைகளை, ஒருவரையொருவர் காக்கும் பணியை, ஒருவரையொருவர் சாட்டுதல் சொல்லித் தட்டிக் கழிக்கக் கூடாது; எண்ணிக்கையைக் காட்டியும் பணியின் பொறுப்பினைப் பங்கு போடக்கூடாது. "அவர் தரவில்லையே, அவர் செய்யவில்லையே, எனக்கு மட்டும் என்ன வந்தது?" என்றெல்லாம் ஒப்பிட்டுக் கூறுதல் சமூக ஒழுக்கமன்று. இந்த மனப்போக்கு நல்லாண்மையின் பாற்பட்டதுமன்று. சமூக மேம்பாட்டுக்கும் துணை செய்யாது. ஏன்? காலப்போக்கில் தனிமனித மேம்பாடும் தடைபடும்.

ஒரு போர்க்களத்தில் பலநூறு ஆயிரம் போர்வீரர்கள் போர் செய்தாலும் அந்த வீரர்கள் அனைவரும் போரினால் வரும் விழுப்புண்கள் அனைத்தையும் தாங்கிக்கொள்வதில்லை. மிகவும் வலிமையும் வீரமும் உடைய வீரனே தாங்கிக் கொள்கின்றான். அதுபோல சமூகத்திற்குள்ளும் பலர் இருந்தாலும் சமூகத்தின் பொறுப்புகளை ஏற்று, தாங்கி, பொறுத்துச் செயலாற்றுபவன் கண்ணேயே கடமை வந்து அமையும். அவர்கள் குடியின் பொறுப்புகளைத் தாங்குதல் கடமை.

குடிசெயல்-சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்தல் எளியதொன்றன்று கடினமானது; காலங்கருதிச் செய்யவேண்டியது. குடி செயல் பணிகளுக்குப் பருவம் கிடையாது; நாள் பார்க்கக்கூடாது. 'இன்று', 'நாளை' என்று. நாள் பார்ப்பவர்கள் நாளைத் தள்ளுவார்களே தவிர, நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள்.

நம்முடைய சமூகத்தில் நாள் பார்க்கும் கெட்டபழக்கம் நிலைத்திருக்கிறது. "நாள் உதவி செய்வது போல், நல்லவன் உதவி செய்ய மாட்டான்” என்று சமாதானம் சொல்கிறார்கள். இந்தப் பழமொழி நாள் பார்ப்பவர்களுக்குச் சாதகமானதல்ல. இங்கு நாள் நாழிகையைப் பொறுத்தது தான்.

ஆம்! அறிவு, செல்வம், சீலம், புகழ் அனைத்தையும் நாம் நாள் என்ற களத்தில் நின்றுதானே ஈட்டுகிறோம்? இந்த நாளைச் சார்ந்ததுதானே எழுச்சியுடைய இளமை! இஃதில்லாதது முதுமை! இளமை துணை செய்வதுபோல் முதுமை செய்ய முடியுமா?

ஆதலால் நாள் பார்த்தல் என்பது நாளைக் கச்சிதமாகக் கணக்கிட்டுப் பயன்படுத்தல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்படியின்றி நாளை நல்ல நாள் 'கெட்ட நாள்' என்று பகுத்துப் பார்க்கக் கூடாது. நாள் நம்மைக் கெடுத்து விடுவதில்லை; நாளை நாம் கெடுத்து விடுகிறோம். அதனால் நாள் கெட்டது அல்ல; நாமே கெட்டவர்கள். அதனாலன்றோ திருஞானசம்பந்தர்.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

என்று அருளிச் செய்தார்! திருள்ளுவரும் குடிசெயலுக்குப் பருவம் பார்த்தல் தவறென்று கூறுகின்றார்.

உயிரினைச் சார்ந்த உள்ளம் 'குபுகுபு' என்ற சுறுசுறுப்புக்குரியது. கிளர்ச்சிகள் நிறைந்தது. சோம்பலும், அலுப்பும், சலிப்பும் மனிதனின் செயற்கையேயாம். சிலர் பொருள் செய்கிறார்கள். சிலர் புகழ் செய்கிறார்கள். சிலர் சோம்பலையும் முயன்று செய்கிறார்கள்! ஐயோ, பாவம்! இதனைத் திருவள்ளுவர் 'மடி செய்து' என்று நகைத்துப் பேசுகிறார். சோம்பலைச் செய்வான் சுற்றத்தைப் பேண மாட்டான். அதனால் குடி செய்தலும் ஆகா.

சிலர் எடுத்ததற்கெல்லாம் மானம் போகிறது என்பர். ஆனால் அவர்களையே மானம் எங்கிருக்கிறது என்று கேட்டால் சொல்லத் தெரியாது. அவர்களில் பெரும்பாலோருக்கு மானம், வேட்டியில் தானிருக்கிறது. ஒருசிலர் தவறுகளைக் கண்டபோது இடித்துக் கடிந்து சொல்வதில்கூட மானம் போய்விடுவதாகக் கருதுகிறார்கள். நாடாளும் அரசனுக்கே இடித்துச் சொல்லும் இணையற்ற நட்புக்குழாம் தேவையென்பது வள்ளுவர் கருத்து. ஆதலால் மானம் என்பது ஒருவர் தனிப்பட்ட முறையில் நம்மை விருப்பு வெறுப்புகளின் காரணமாக மதப்பதிலோ அவமதிப்பதிலோ இல்லை.

உண்மையில் மானம் நம்முடைய வினையின்கண் தங்கிக் கிடக்கிறது. நம்முடைய வினையின் மாட்சி, பயன் ஆகியன பற்றித் தொடர்பாகப் பிறர் மதிக்கும் மதிப்பீடுகளே நமக்கு மானமாகும்.

நம்முடைய நல்லாண்மையின் காரணமாக நாமும், நம்முடைய குடியினரும் ஆகிய அனைவரும் வளத்துடன் கூடி வாழ்வோமாயின் ஆங்கு மானமிருப்பதாகக் கருத்து. நம்மைச் சுற்றி வறுமை காணப்படுமாயின், நம்முடைய குடியினர் வறுமையால் வாட்டமுறுவாராயின் ஆங்கு நல்லாண்மையுமில்லை; மானமுமில்லை. சூழ்ந்திருப்போரின் வறுமை அங்கு வாழ்வோரின் மானத்தைப் பறை சாற்றிக் கப்பலேற்றிக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்றோ கொடுமை! ஒரே குடியைச் சார்ந்த ஒருவன் வளத்துடன் வாழ்கிறான்; பிறிதொருவனோ வறுமையில் வாடுகிறான். அவனுடைய வறுமையை இழித்துப் பேசி, தன்னுடைய மானத்தைத் தானே விலை கூறுகிறான். பெருமை, சிறுமை, மதிப்பு, மதிப்பில்லாமை ஆகியவை தொடர்புடைய மான உணர்ச்சிகள்கூட, குடி செய்வானுக்கு இருக்கக்கூடாது என்பது வள்ளுவர் கருத்து.

பிறப்பால், சார்பால், அந்நியனாக இருப்பவர்களிடத்திலேயே மானம் கருதுதல் வேண்டும். அது போல, தன்னொழுக்கத்திலேயே மானம் போற்றுதல் வேண்டும். அதனை விட்டுவிட்டு, நம்மைச் சார்ந்த ஒருவர் மதிக்கத் தவறிவிட்டமையைப் பெரிய மான உணர்ச்சியைக் கருதக்கூடாது. இதனை, வள்ளுவப் பெருந்தகை,

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்று எவ்வளவு அழகாகக் கூறுகிறார்!

தாம் பிறந்த குடியினுடைய-குடும்பத்தினுடைய குற்றங்களை மறைக்கின்ற இனிய பணியைச் செய்பவர்கள் துன்பங்களை அடையலாம். அவர்தம் வாழ்க்கை இன்பத்திற்கு மாறாகத் துன்பத்திலேயே சுழன்று அல்லற்படலாம். அதுவும் போரில் விழுப்புண் படுதலைப் போல பயனுடை யதே என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆதலால், இழப்புகளையும் துன்பங்களையும் காட்டி ஒருவர், குடிசெயலிலிருந்து விலகக்கூடாது. பொதுவாக அறியாமை, பொருளற்ற வறுமை, நோய் இவற்றினால் வரும் துன்பமே துன்பமெனக் கொள்ளத்தக்கன. மாறாக ஓயாத உழைப்பு, உதவுதலால் வந்த துன்பம் ஆகியன துன்பமேயல்ல. அவற்றினும் சிறந்த இன்பம் வேறு இல்லை. இதனை,

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு

என்று திருக்குறள் பேசுகிறது.

ஒரு குடியில் ஒருவரோ, இருவரோ நல்லாண்மையுடையவராக இருத்தல் போதாது. ஏதோ ஒரு துன்பம் தோன்றி அந்த ஒருவனும் வீழ்வானானால், அடுத்து அந்தக் குடியைத் தாங்கி நிற்பாரில்லாது போனால், அந்தக் குடி கெடும். ஆதலால், குடியினைச் சார்ந்த பலரும் நல்லாண்மையுடையவராகக் குடிசெயற் பாங்குடையவராக வளர வேண்டும்.

ஒரு மனிதனுக்குத் தன்னுடைய குடிசெயல் பணியில் ஈடுபடுதலும் அந்தப் பணியை இடையீடின்றி முடித்தலும் பெருமைக்குரியது என்பதையும், ஆன்ற அறிவும், ஆள் வினையும் உடையோரால் குடி உயர்ந்து விளங்கும் என்பதையும், குடி செய்வார்க்குத் தெய்வம் துணை செய்யும் என்பதையும், குடியைத் தாழாது காப்பாற்றுவோனுடைய கருத்துகள் தாமே முடியும் என்பதையும், குடியோடு கூடித் தழுவி வாழுதற்குரிய சிறந்த குண நலன்கள் பெற்றவனை, மற்றவர்கள் சுற்றமாகச் சூழ்வார்கள் என்பதையும், குடி செய்வார்க்கு இல்லை பருவம், மடி, மானம் என்பதனையும் தேறத் தெளிந்தோம்.

நம்முடைய குடி, தமிழ்க்குடி, திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த குடி தம்முடைய குடியினை நாம் ஆக்க வேண்டும் என்ற உணர்வு நலம் தம்மை உந்திச் செலுத்துவதாக.

வேளாண்மை

உலகில் இன்னமும் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள். வறுமையில் வாடி ஏக்கமுற்று வாழ்ந்தும் வாழாதவராக இருப்பவர்களைப் பார்த்து, நிலமகளாகிய அன்னை எள்ளி நகைக்கின்றாள். உண்டு உடுத்து மகிழும் பொருட்செல்வத்துக்கு நிலமே அடிப்படை.

இந்த நிலம் தன்னை அணுகிக் கைவினையால் முயன்று நிற்போரை ஒன்றுக்குப் பத்தாக அள்ளிக் கொடுத்து வாழ்விக்கும் இயல்புடையது. ஆயினும் பலர் கைவினை கொண்டு நிலத்தையணுகிப் பெறுவன பெறாமல் கைகளை விரித்து ஏங்கி, தராதார்மாட்டு நின்று இரந்து கேட்டு இழிநிலை எய்துகின்றனர். இது கொல்லைப்புறத்தில் கோபுரமனைய செல்வமிருக்கக் கண்டும் காணாமல் கொல்லும் வறுமையில் வாடுவது ஒத்தது. இதனை,

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

என்று ஒதுகிறார், திருவள்ளுவர்.

உலகில் பல்வேறு தொழில்கள் உண்டு. ஆயினும் உழவுத் தொழிலே தலையாய தொழில். மற்றத் தொழில்கள் வழி கிடைப்பன இல்லாமலும் வாழமுடியும். ஆனால், உணவின்றி வாழமுடியாது. "உண்டி முதற்றே உலகு" என்றும் கூறுகிறார்கள். ஆதலால்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை

என்றார் திருவள்ளுவர். மேலும் பல்வேறு தொழிலுடையாரையும், மற்றும் எல்லாரையும் தாங்கி நிற்கும் பெருங்குடி, உழவர் பெருங்குடியேயாகும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ
தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து

என்பது குறள், மிகப்பெரிய மணிநெடுந்தேராக இருந்தாலும் அந்தத் தேரின் இனிய செலவுக்கு அச்சாணி தேவை. அதுபோல மாடமாளிகை, கூட கோபுரங்கள் மற்றும் பல்வேறு வகையான மேம்பட்ட உலகாயினும் உழவுத் தொழிலாகிய அச்சாணி இந்த உலகத்திற்கு இன்றியமையாதது.

தம்முடையதேவைகளைத் தாமே உழுது உற்பத்தி செய்து உண்டு வாழ்வோர், பிறரைத் தொழவேண்டிய அவசியம் இல்லாதவர்கள். அவர்களுக்கு இச்சை முகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. உழவர் வாழ்க்கை தன்மானம் நிறைந்த தகவுடைய வாழ்க்கையாகிறது. ஆனால், இன்றோ உழவனுக்கும் நிலத்தின் உரிமைக்கும் நீண்ட இடைவெளியிருப்பதால், உழவனின் வாழ்க்கை இத்தகு சிறப்புடையதாக இல்லை. எனினும், உரிமையுடையோனுக்கும் உணவு தேவையாதலால், இவனது மானம் ஓரளவு காப்பாற்றப்படுகிறது. அதுவும் பெரிய அளவு நில உரிமை குவிந்துள்ள இடத்தில் இயலாமற் போகிற நிலைமையை எண்ணி வருந்த வேண்டியதிருக்கிறது.

ஆனாலும் விடுதலைக்குப் பிறகு நம்முடைய நாட்டுச் சுதந்திர அரசு உழவர் பெருங்குடியின் வாழ்க்கை நிலைத்து நின்று உயரப் பல்வேறு புதிய சட்டங்களைச் செய்தது. அதன்வழி ஓரளவு முன்னேற்றம் காணப்பெற்றிருக்கிறது. உழவுத்தொழில் சுதந்திரமான-தகுதியுடைய தொழில். ஆனால், மற்ற வாழ்க்கைத் துறைகளோ அப்படியல்ல. தொழுதலும் பின்செல்லலும் பிறதொழில்களோடு இணைப்புடையன. இதனை,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற குறள் ஒதுகிறது. இளங்கோவடிகளும் "வீழ்குடி உழவர்" என்று உழவர் பெருங்குடியை உயர்த்தினார்.

நாட்டை ஆளும் அரசின் குடை தாழாது, பேரரசுகளையும் தன்னுள் அடக்கிக் காட்டும் ஆற்றல் உழவுத் தொழிலுக்கே உண்டு. கழனிகளில் கிடக்கும் கதிர்களின் நிழலே, அரசுக் குடையின் நிழலுக்கு அரண் செய்கிறது. கதிர்கள் நிழலே கொற்றவன் குடைக்கும் ஆண்மையும், தண்ணளியும், கொடையும் வழங்குகின்ற பெருமையுடைய தாகும். அதனாலன்றோ, புறநானூறு.

பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

என்று கூறிற்று!

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்

என்றார் இளங்கோவடிகளும்.

இன்று நம்முடைய நாட்டைப் பற்றி வருத்தும் துன்பமும், உணவுப் பற்றாக்குறையேயாகும். இந்த உணவுப் பற்றாக்குறை காரணமாக நம்முடைய மக்கள் அல்லற்படுகின்றனர். வெளிநாட்டில் உணவுப் பொருளை வாங்குவதன் மூலம், நமது அந்நியச் செலாவணி முடைப்படுகிறது. ஆதலால், இன்று நம்முடைய தாய் நாட்டுக்குச் செய்யும் உயர்ந்த பணி, உணவு உற்பத்தியைப் பெருக்குதலேயாகும். இன்று நமது தாய்நாட்டின் வலிமை, உணவு உற்பத்தியிலேயே இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

தம் கைகளால் தாமே உழுது உண்டு, வாழ்க்கை நெறியினை மேற்கொண்டோர் சிறந்த வேளாண்குடி மரபினர். அவர்கள் இல்லையென்று இரப்பவர்களுக்கு உள்ளதை இல்லையென்று ஒளிக்காது வழங்கும் இயல்பினர். உழவுத் தொழில் மூலம் வரும் செல்வம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் செல்வம். மற்றச் செல்வங்களை அப்படி உறுதியாகச் சொல்லமுடியாது. ஆதலால், பெரும்பாலும் உழவர் குடிப் பரம்பரையினராக வந்த வேளாளர் பெருங்குடி மக்கள் வரையாது வழங்குவர்; விருந்தோம்புவர்; உண்பித்து உண்பர். திருஞான சம்பந்தரும் "இரப்போர்க்குக் கரப்பிலார்” என்று உழவர் பெருங்குடியை வாழ்த்துகிறார்.

உழவுத் தொழிலுடையோர், உழவுத் தொழிலை மறந்துவிடுவாராயின் உலகம் நிலைதடுமாறும். மக்கள் சமுதாயம் உண்ண உணவின்றி அல்லற்பட நேரிடும். ஏன்? முற்றத்துறந்த முனிவர்களேயானாலும் அவர்தம் வாழ்க்கையும் அல்லற்படும். துறவிகளும் தாம் கொண்ட ஒழுக்கத்தில் நிலைநிற்றல் அரிது. இதனை,

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

என்ற குறளால் அறியலாம்.

ஆக, சுற்றிச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரையும், நாடிவரும் விருந்தினரையும், நாடு காக்கும் அரசையும் அருளறம்பூண்ட துறவிகளையும் காப்பாற்றும் உயர்வு நலம் சிறந்த தொழில் உழவுத் தொழிலேயாம்.

திருவள்ளுவர் வழிவழி வேளாண்மைத் தொழில் சிறந்த தமிழ்க் குடியில் பிறந்தமையால் உழவுத் தொழில் நுட்பத்தையும் பேசுகிறார். நிலத்தை நல்ல இளகிய ஈரப்பதத்தில் ஆழமாக உழவேண்டும். அங்ஙனம் குறைந்தது நான்கு தடவையாவது உழ வேண்டும். ஓர் உழவுக்கும் பிறிதோர் உழவுக்குமிடையில் நனைதலும், உழுதலும், காய்தலும் நிலத்திற்கு நல்லது. உழுத புழுதி காயவேண்டும்.

நிலத்தில் ஈரமும், காற்றும் கலந்திருப்பதன் காரணமாக 'மாய்ச்சர்' என்ற பொருள், கதிரவன் ஒளியால் காய்தலின் மூலம் எடை குறையும். அங்ஙனம், ஒரு பலம் புழுதி, கால் பலம் புழுதியாகக் குறைகிற அளவு காய வேண்டும் என்று கூறுகிறார். இங்ங்ணம் உழுது புழுதியெடுத்து அந்தப் புழுதியைக் காயப் போட்டு வேளாண்மை செய்தால், பிடி எருவும் போடாமல் நன்றாக வினைவிக்கலாம். பனைத்து வளர்ந்து அதிகப் பயனைத் தரும். இதனை,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

என்று குறள் கூறுகிறது.

திருவள்ளுவர் நல்ல உளவியல் வல்லுநர். நம்முடைய உளத்தின் இயல்பு, ஒருசேரப் பல கடமைகளை எடுத்துக் கூறினால் கடமைகளின் சுமை கருதிச் செயற்படத் தயங்கும். அதற்கு மாறாக ஒன்றன்பின் ஒன்றாக முன் சொன்ன கடமையில் உளம் சென்று பற்றிச் செயற்பட்டு நிற்கும் பொழுது, ஊக்கமும் மகிழ்ச்சியும் உளத்திடை இருக்குமாதலால், பிறிதொரு கடமையை எடுத்துக் கூறினால் எளிதில் ஏற்றுச் செய்யும் இயல்பு உள்ளத்தின் பாங்காகும். அங்ஙனம் கூறும்பொழுது, உணர்த்தும் ஒவ்வொரு கடமையினையும் உயர்த்திக் கூறுதல் உள்ளத்தின்கண் ஊக்கக் கிளர்ச்சியும் எழுச்சியும் தோன்றவேயாகும். முன் ஒன்றினைப் பெரிதுபடுத்தி, பின்னை அதனினும் இது நன்றென்று கூறுதல் மேன்மேலும் உயிரினை-உள்ளத்தினை உந்திச் செலுத்தும். இந்த வகையில் உழவுத்தொழிலின் நுட்பத்தினை,

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

என்றோதுகிறார்.

உழுதலினும் சிறப்பு எருவிடுதல்; அதனினும் சிறப்பு களையெடுத்தல்; அதனினும் சிறப்பு நீர் பாய்ச்சுதல், அதனினும் சிறப்பு விலங்குகளாலும் பூச்சிகளாலும் அழிவு வராமல் பாதுகாப்பது என்று எடுத்தோதும் நுட்பத்திறன் எண்ணி மகிழத்தக்கது. எரு இடுதல் மிக மிக அவசியமான ஒன்று. அதிலும் இயற்கை உரமிடுதலே சிறப்பு. பசுந்தழை உரமும், சாணம் குப்பைகளால் தயார் செய்யப்பெற்ற 'கம்போஸ்ட்' உரமும், நிலத்திற்கு மிகவும் ஏற்ற உரம். இத்தகைய உரங்கள் நிலத்திற்குப் பூசாரம் தருகிறது. அதே நேரத்தில் ஒருசேரப் பயிரர்களுக்கும் ஊட்டச்சத்து கொடுக்கிறது. ஆதலால், இயற்கை எரு இடுதலே சிறப்பு.

இயற்கை உரமிடுவதில் கொஞ்சம் குறைவாக உரமிட்டு விட்டாலும் கூடக் கேடு ஒன்றுமில்லை. ஆனால் அமோனியம் சல்பேட்ட, யூரியா போன்ற நவீன உரங்கள் இவ்வளவு சிறந்த பயன்களைத் தருவதில்லை. இந்த நவீன உரங்கள் பயிர்ச் செடிக்கு ஊட்டம் தருவதில்லை.

நிலத்தில் ஏற்கெனவே இருக்கின்ற உரத்தை-பயிர்ச் செடிகள் எடுத்துக் கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதை, பயிர்ச் செடிகள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித்தரும் வேலையைத்தான் இந்த நவீன உரங்கள் செய்கின்றன.

இதை விவசாய வல்லுநர்கள் "கிரியா ஊக்கி” என்றே சொல்லுகின்றனர். ஆதலால் நவீன உரங்களால் நிலத்திற்கும் ஊட்டமில்லை, பயிருக்கும் ஊட்டமில்லை. மாறாக நிலத்தில் உரமேயில்லாதபோது. நவீன உரத்தையிட்டால் பயிர் வளராமல் கருகிப் போகிறது.

ஆயினும், அவளையுடையவன் நாள்தோறும் அவளை அணுகிக் கண்களால் நோக்கிப் பழகித் தன்னுடைய கைகளால் அவளை ஒப்பனை செய்யத் தவறின் அவளுக்கும் பொல்லாத கோபம் வந்துவிடும். அவள் அகத்தே ஊடி விடுவாள்; அதாவது மாறுபாடு கொள்வாள்.

காதலனுக்கெனக் காத்திருக்கும் காதலியை ஏவலாள் போய் நிறைவு செய்ய முடியுமா? ஏவலாளனைக் கண்ட காதலியிடத்தில்தான் எழில் நகை அரும்புமா? அல்லது ஏவலாளன் மூலம்தான் நன்கலம் பெற முடியுமா? அதுபோன்றதே நில உரிமையாளனுக்கும், நிலத்திற்குமுள்ள உறவு என்கிறார் திருவள்ளுவர்.

இதனால் நிலம், உழுவோனிடத்திலேயே இருக்க வேண்டும். உழுவோனுக்குரிய நில உரிமையே நியாயமானது; இன்பமானது; வளம்பல படைத்துத் தருவது என்று வள்ளுவம் கூறுகிறது.

இன்றோ, நமது நாட்டில் நில உரிமைக்கும் உழவுக்கும் பல இடங்களில் உறவில்லை. 'மெரினா' கடற் கரையில் உலாவி மகிழ்வோர் தஞ்சைத் தரணியில் நிலம் பெற்றிருக்கின்றனர்.

நிலம் என்னும் நல்லாள் எப்படி வளர்வாள்? அவளைப் பார்ப்பார் யார்? அவள் வயிற்றுப் பசிக்கு உரமிடுவார் யார்? அவள் திருமேனியைத் தண்ணீரில் நனைத்துக் குளிப்பாட்டுவார் யார்? களையாகிய நோய் கண்டபோது களைவது யார்? இத்தனை அவலங்களுக்கிடையேயும் நிலமென்னும் நல்லான் செந்நெல் கொழிக்க வேண்டும்; செங்கரும்பு தரவேண்டும் என்று கேட்டால் தருவாளா?

ஏதும் செய்யாது இன்பத்திற்கு மட்டும் காதலியிடத்தில் உரிமை கொண்டாடக் காதலனுக்கு ஏது உரிமை? நிலமென்னும் நல்லாளை நாடாமல், அவளை உழுது

ஆயினும், அவளையுடையவன் நாள்தோறும் அவளை அணுகிக் கண்களால் நோக்கிப் பழகித் தன்னுடைய கைகளால் அவளை ஒப்பனை செய்யத் தவறின் அவளுக்கும் பொல்லாத கோபம் வந்துவிடும். அவள் அகத்தே ஊடி விடுவாள்; அதாவது மாறுபாடு கொள்வாள்.

காதலனுக்கெனக் காத்திருக்கும் காதலியை ஏவலாள் போய் நிறைவு செய்ய முடியுமா? ஏவலாளனைக் கண்ட காதலியிடத்தில்தான் எழில் நகை அரும்புமா? அல்லது ஏவலாளன் மூலம்தான் நன்கலம் பெற முடியுமா? அதுபோன்றதே நில உரிமையாளனுக்கும், நிலத்திற்குமுள்ள உறவு என்கிறார் திருவள்ளுவர்.

இதனால் நிலம், உழுவோனிடத்திலேயே இருக்க வேண்டும். உழுவோனுக்குரிய நில உரிமையே நியாயமானது; இன்பமானது; வளம்பல படைத்துத் தருவது என்று வள்ளுவம் கூறுகிறது.

இன்றோ, நமது நாட்டில் நில உரிமைக்கும் உழவுக்கும் பல இடங்களில் உறவில்லை. 'மெரினா' கடற் கரையில் உலாவி மகிழ்வோர் தஞ்சைத் தரணியில் நிலம் பெற்றிருக்கின்றனர்.

நிலம் என்னும் நல்லாள் எப்படி வளர்வாள்? அவளைப் பார்ப்பார் யார்? அவள் வயிற்றுப் பசிக்கு உரமிடுவார் யார்? அவள் திருமேனியைத் தண்ணீரில் நனைத்துக் குளிப்பாட்டுவார் யார்? களையாகிய நோய் கண்டபோது களைவது யார்? இத்தனை அவலங்களுக் கிடையேயும் நிலமென்னும் நல்லான் செந்நெல் கொழிக்க வேண்டும், செங்கரும்பு தரவேண்டும் என்று கேட்டால் தருவாளா?

ஏதும் செய்யாது இன்பத்திற்கு மட்டும் காதலியிடத்தில் உரிமை கொண்டாடக் காதலனுக்கு ஏது உரிமை? நிலமென்னும் நல்லாளை நாடாமல், அவளை உழுது பண்படுத்தி உவகை தராமல்-உற்ற பசிக்கு உரமென்னும் சோறிடாமல்-உற்ற தண்ணீர் வேட்கைக்குத் தண்ணீர் தராமல்-நோய்க்கு மருந்திடாமல் நிலமென்னும் நல்லாளிடத்தில் பயன்காண முடியாது.

ஆதலால். எழுமின்! கதிரவன் எழுவதற்கு முன் எழுமின்! நிலமென்னும் நல்லாளைக் கையில் ஏருடன், தலையில் எருவுடன் ஓடிச் சென்று காண்மின் உறவு கொண்மின்! உழுமின் ! நீவிர் வாழலாம்! உலகமும் வாழும் !

வறுமையின் கொடுமை

யிர்கள் நுகரும் இயல்பின. நுகர்ந்து அனுபவித்தல் உயிர்களின் பிறப்புரிமை. உயிர்கள் பூரண வளர்ச்சி பெறாத நிலையில் உடல் தேவைகளையே நுகரும். வளர்ச்சி பெற்ற நிலையில் திருவருளையும் சுவைத்து நுகரும்.

உயிர் உடலிடைத் தங்கிப் பயிலும் வாழ்க்கைக்கு நுகரும் பொருள்கள் தேவை. அவை யாதொன்றும் இல்லாது அல்லற்படுவது வறுமையாகும். வறுமை, இன்பத்திற்கும் கடவுளுக்கும் கொடிய பககையாகும்.

மாணிக்கவாசகர் வறுமையைத் "தொல்விடம்" என்றார். வறுமையைப் போல் உலகில் கொடியது வறுமையேயாம் என்பது திருவள்ளுவர் முடிபு.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

என்பது குறள்.

வறுமை என்பது என்ன? வாழ்க்கையின் தேவைகள் பல திறத்தன. ஆனாலும், அவசியம்-அவசியமின்மையைக் கருதாமல் பலர் நிறைய ஆசைப்படுவார்கள். அவசியமில்லாதவற்றைக் கருதி அவை கிடைக்காத போது அதையும் வறுமை என்று கருதி அல்லற் படுவார்கள்.

சில ஆசைகள் தனித்து வருவன அல்ல. அவற்றுக்குப் பல தோழமைகள் உண்டு. அலையின் பின் அலை மோதும் வெள்ளத்தை ஆசைக்கு உவமிப்பார் மாணிக்கவாசகர். ஆக, வறுமையின் மறுபெயர் ஆசை என்றும் சொல்லலாம்.

ஆசையினால் வரும் வறுமை குடியின் உறவையும் கெடுக்கும்; குடியையும் கெடுக்கும்; அழகையும் கெடுக்கும்; வலிமையையும் கெடுக்கும்; புகழையும் கெடுக்கும். இதனை,

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

வறுமைத் துன்பத்தால் உறக்கமும் வாராது. நெருப்பினுள்ளும் கிடந்து தூங்கலாம், ஆனால் வறுமையில் தூங்க முடியாது என்று கூறிகிறார் திருவள்ளுவர். நெருப்பு உடம்பை மட்டும் சுடும். வறுமையோ உயிரையும் உயிருணர்வையும் சுடும். ஆதலால் வறுமைத் துன்பத்தில் கண்ணை மூடவும் முடியாது என்கிறார் திருவள்ளுவர். இதனை,

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

என்கிறார்.

நேற்று மகிழ்ந்த ஒன்றினை மீண்டும் அடைந்து மகிழ விரும்புவார்கள். ஆனால் வறுமையோ வாட்டுகிறது. அதை மீண்டும் யார் விரும்புவார்? வறுமையில் வாடுகிறவர்கள் வறுமையின் வழிச் சுவட்டைப் பார்த்தாலும் அஞ்சுவர். இதனை,

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

என்று கூறுகின்றார்.

வறுமை தனித்து வரும் துன்பமல்ல. வறுமைக்கு நிறையப் பரிவாரங்கள் உண்டு. வறுமை தன்னுடைய பரிவாரங்களுடன் வந்து ஆக்கிரமித்து அழித்து நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவடும் வறுமையைத் தொடர்ந்து கவலை வரும். கவலையைத் தொடர்ந்து சோம்பல் வரும். பின் நோய்! இப்படி ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் வறுமையின் நுழைவாயிலை அடைந்தால் மற்றத் துன்பங்கள் அனைத்தும் வந்து விளையும். இதனை,

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

என்கிறார்.

வறுமை, பரம்பரையாக வந்த பண்பாட்டையும் கெடுக்கும். நல்ல குடியில் பிறந்தோர் எப்பொழுதும் சோர்வின்றி இருப்பார்; நல்ல சொற்களைேேய பேசுவர்; ஆயினும் வறுமை வந்துற்றபோது சோர்வடைவர். தகாத சொற்களைப் பேசுவர். இதனை,

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்

என்று கூறுகிறார்.

கற்றுணர்ந்து மெய்ப்பொருள் கண்டாராயினும் அவர் வறுமையினராயின், அக்கல்வி பயன்படாது. சிறந்த மெய்ப்பொருளை நன்றாக உணர்ந்து கூறினாலும் பயன்படாது. கேட்பவர்கள் கேட்கமாட்டார்கள். இவர்தம் சொற்களைக் கேட்பவர்கள், இவர்தம் குறையைக் கேட்டு, அக்குறையை நிறைவு செய்ய வேண்டியதிருக்குமே என்று கருதி இவரைக் கண்டாலே ஒதுங்கி ஒளிந்து விடுவார்கள். அப்படியே கேட்டாலும் அவர்கள் நன்குணர்ந்து சொன்னாலும் பரிவோடு கூறினாலும் அதைப் பிழைப்புக்கு வழியென்றே கருதுவர். ஆதலால், வறுமையாளரின் கல்வி பயன்படாது. அவர்தம் சொல்லும் பயன்படாது. கல்லாதவர்களாக இருந்தாலும் "வெள்ளையப்பன்" இருக்குமானால் அவர்தம் சொற்கள் மிகச் சிறந்த கல்வி கேள்வி ஆயதாக நாட்டு மக்கள் கருதுவார்கள். ஆதலால், கல்வியும் கருத்தும் பயன்பட வேண்டுமானாலும் வறுமையைத் தொலைக்க வேண்டும். ஆனால் இன்றோ, கல்வியும் கருத்தும் வாணிகமாக்கப்பெற்று வருகின்றன. அதனால்தான் நாட்டில் நாள்தோறும் எண்ணற்ற மேடைகளில் சொல்லப்படும் சொற்கள் பயன் தராமல் போகின்றன போலும்! இதனை,

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

என்றார்.

வறுமை அன்புணர்ச்சிகளைத் தொட்டுத் தூண்டாது. ஒரோவழி தூண்டப் பெற்றாலும் அந்த அன்பு செயல்பட வழியில்லை. வறுமையின் காரணமாகப் பயன்படாத அன்பினை ஏற்றுக் கொள்பவர் யார்? காரியமற்ற அன்பு, விசுவாசம், உண்மை ஆகியன அனைத்தும் பயனற்றவையே யாம். வறுமை அன்பைத் தடை செய்தலோடு, அறத்தினையும் தடை செய்யும். வறுமை அறத்தோடு இயைபில்லாதது; சார்பில்லாதது. வறுமையாளன் வாழ்க்கை பெரும்பாடாகிவிடும். ஆதலால் நாட்டில் வறுமையை வைத்துக்கொண்டு-அன்பு வளரவேண்டும்; அறம் வளர வேண்டும்; ஒழுக்கம் வளர வேண்டும் என்றெல்லாம் வாடாத வயிற்றினையுடையோர் அணி, பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் சமாதானம் கூறுகிறார்கள், "வறுமையில் செம்மை" என்று! அவர்கள் கூற்றுப்படியே வறுமையில் செம்மையாக இருக்கலாம். அது கோடியில் ஒருவருக்கே சாலும். அது பொது விதியல்ல. மேலும் பழமொழியின் நுண்பொருள், "வறுமை நிலையில் வாடாமல் செல்வம் காண முயற்சி செய்க" என்பதேயாகும். அன்பிற்கும் அறத்திற்கும் துணை செய்யாத வறுமையுடைய ஒருவனை சமூகம் உறவு கொண்டாடாது. பிறப்பினால் உறவினராயினும் அது அவர்களுக்கு நினைவிருக்காது; மறந்து விடுவார்கள், வறியன் எடுத்துக் கூறினாலும் "அப்படியா?” என்று பார்த்தும் பாராமலும் கேட்பார்கள். மற்றவர்கள் மட்டுமா? ஏன், ஈன்ற தாயின் கதி என்ன? உலகில் தாயன்பே தலையன்பு. ஈரைந்து திங்கள் சுமந்து, ஈன்று புறந்தந்து, எடுத்து மகிழ்ந்து விளையாடி, பாலூட்டிச் சீராட்டி, நோய்க்குத் தானே மருந்துண்டு வளர்த்த தாயாயினும் வளர்ந்துவிட்ட போது, வறுமையில் வாடுவானாகில் மகவெனப் பார்க்க மாட்டாள். அந்தப் பரிவும் பாசமும் பறந்தோடிப் போகும். அந்நியனைப்போல் பார்ப்பாள். என்னே! வறுமையின் கொடுமை! ஐயாகோ பரிதாபம்! குழைந்த தாயன்பையும் கொலை செய்யும் வறுமையின் கொடுமை சொல்லுந்தரத்ததன்று. நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும்.

உடலிடைத் தங்கி வாழும் உயிர்கள் தாம் துய்த்தலுக்குரிய பொருள்களைப் பெறாதபோது முற்றத் துறந்துவிடுதல் நல்லது அங்ஙனம் துறவாமல் வாழ்தல் பிறர் வீட்டுப் பானையிலிருக்கும் உப்புக்கும் கூழுக்கும் பகையாகி, அவ்வழி அந்த இல்லில் வாழுவோரையும் பட்டினி போட்டுச் சாகடிப்பதாக முடியும். வறுமை வந்துற்றும், மானத்திற்கு இடையூறு வாராதிருப்பதால் மானம் போற்றும் அடிப் படையில் துறந்து விடுதல் நல்லது. வறுமை வந்துற்ற பொழுதே ஒரளவு துறவு வந்துவிட்டது. காரணம் சுற்றத்தார்கள் இவரைத் துறந்து வெளியேறி விட்டனர். இங்குத் துறவு என்று குறிப்பிடுவது தன்னுடைய இச்சைகளைத் துறத்தலேயாகும். இச்சைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் துறத்தலோ அல்லது ஒன்றினைத் துறந்து ஒன்றினை அனுபவித்தலோ இரண்டும் கெட்ட நிலையை உருவாக்கும். இஃது எரிந்த வைக்கோற்போரில் ஒரு பகுதியை அணைத்து விட்டோம் என்று கூறி அமைதி கொண்டது போலாகும். முற்றிலும் இச்சையை ஒடுக்குதலே துவரத் துறத்தல் ஆகும் என்கிறார் வள்ளுவர். இத்தகு துறவு நெறி நடைமுறையில் இந்த வையகத்தில் இல்லை. ஒருக்கால் மக்கள் பயிலாத பெருமலைக் காடுகளுக்குள் இருக்கலாம். இருப்பர் என்றே நம்புகின்றோம்.

மானுடராய்ப் பிறந்தோர் முயன்று உழைத்து உறுபொருள் ஈட்டி, பெறுவன பெற்றுத் துய்த்து மகிழ வேண்டும். இஃது இல்லாதார் இச்சைகளைத் துறந்து விடுதல் வேண்டும். இதில் ஏதொன்றும் செய்யாது செய்யத் துணிவில்லாது அல்லற்படுவோர் அதிசயப் பிறவிகள். அவர்தம் இச்சையோ, வெறிபிடித்துத் தூண்டுகிறது. அதனால் அடுத்த வீட்டு உப்புக்கும் காடிக்கும் கூற்றாகின்றார்கள். இங்கு அடுத்த வீட்டு நுகர்பொருளை உப்பென்றும் காடியென்றும் வள்ளுவர் ஏன் சொன்னார்? தரத்தில் உயர்ந்த நுகர்பொருள்கள் கோட்டைகள் போல் உயர்ந்த மாளிகைகளிலேயே! ஆங்கு இந்த அப்பாவி எப்படிச் செல்ல முடியும்? உப்பு கூழும் குடிசைகளின் சொத்து. ஆங்கு எளிதில் செல்லமுடியும். மாளிகை கட்டி வாழ்பவன் மன இரக்கத்தின் மரணப்படுக்கையிலேயே கட்டி வாழ்கிறான். குடிசையில் வாழ்பவன் குடிசையில் தங்கியுள்ள குளிர் நிழலைப்போல் ஈர நெஞ்சினன்; இரக்க உணர்வினன்; இல்லையென்று சொல்லாது ஒரே வேளைக்குரிய உப்பையும் கூழையும் கூடக் கொடுத்து விடுவான். அவனுக்கு இவறிக்கூட்டி வட்டிக் கணக்கிட்டும் பழக்கமில்லை. ஆதலால் போலும் உப்புக்கும் காடிக்கும் கூற்று என்றார்! துறத்தலாவது பொறிகளின் இச்சையை மட்டும் அடக்குதலல்ல. புலன்களின் இச்சை யையும் அடக்குதல், "புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புறநானூறு பேசும். திருக்கோயில் மதிற்கவர் இடைவெளிகளுக்கிடையில் செடிகள் முளைப்பதுண்டு. திருக்கோயிலைப் பாதுகாக்க இந்தச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். சிலர் இந்தச் செடிகளை வேரொடு வெட்டாமல் மதிலுக்கு வெளியில் தெரிகின்ற பகுதியை மட்டும் வெட்டிவிடுவர். இடைவெளிகளுக்கிடையில் வேர் எஞ்சி நிற்கும். செடியின் உயிருக்கும் வெளிச்செல்லுதல் தடைப்பட்டமையின் காரணமாக உள்ளேயே முன்னையிலும் ஊக்கமாகப் பருத்து வளர்ந்து மதிலுக்கே கேடு செய்யும். அதுபோல மனத்தில் தோன்றும் இச்சை, புலன்களில் பரவி, பொறிகள் வாயிலாக வெளிப்படுகின்றது. பொறிகளின் இச்சையை மாற்றினால் புலன்களில் தங்கிவிடும். ஒருசேர புலன்களிலும், பொறி களிலும் இச்சையில்லாமல் இருப்பது சிறப்பு. புலன்களில் இச்சையின்றி ஒரோவழி பொறிகளில் இச்சையிருக்கலாம். இது தவறேயாயினும் கேடில்லை. காலப்போக்கில் மாறும். பொறிகளில் இச்சையின்மை காட்டிப் புலன்களில் இச்சை தாங்கி வாழ்தல் பெருங்கேடு. வெளியறியா மரப்பொந்தில் விழுந்த நெருப்புப் போன்றது. எரிவது வெளியே தெரியாது. ஆனால் உள்ளே எரித்து அழிக்கும். உப்பு இனிமை என்றும் பொருள்படும். காடி, நடுவு நிலை என்றும் பொருள்படும். நுகரும் பொருள் இல்லாதார் முயன்று பெற முடியாதார் துறத்தலுக்கும் துணியாராயின், அவர் தம் இனிமைப் பண்பும் அவர்தம் நடுவு நிலையும் கெடும். தாமே வளர்த்துக் கொண்ட இனிய பண்பையும் நடுவு நிலைமையையும் இழந்து பொருளோடு கூடிய நல்குரவோடு, உயிர்ச் சார்பான குணத்தின் வறுமையும் ஏற்றக்கொள்வது தற்கொலைக்கு ஒப்பு. அதனால் கூற்று என்றார்.

வறுமை மிகமிகக் கொடியது. வறுமை பசியினால் வருத்துகின்றது; ஊக்கத்தைக் கெடுக்கின்றது; இனிய பண்புகளைக் கெடுக்கின்றது; கருணையிற் சிறந்த கடவுளினின்றும் விலக்குகின்றது. திருவள்ளுவருக்கு வறுமையின் மீது ஏராளமான கோபம். அதனால் 'இன்மை' என்ற பெயர் சூட்டிக்கொண்டு வருகின்ற பாவி என்றே அழைக்கின்றார். வறுமை இந்த உலகில் துய்த்து மகிழும் இன்பத்தையும் கெடுக்கிறது. சரி, பரவாயில்லை! அடுத்த உலகமாகிய அமரர் உலகத்திலாவது இடம் கிடைக்குமா என்று கேட்டால் அதுவும் கிடைக்காது. அந்த உலகத்தினைப் பெற அருளை, அறத்தினை, தூய்மையினை விலையாகத் தர வேண்டும். இந்த மூன்றையும்தான் வறுமை கெடுத்து விடுகிறதே! ஆதலால் அந்த உலகமும் இல்லை. வறுமையின் காரணமாகத் துறந்தால் துறவின் மூலம் வறுமையை மாற்றிக் கொள்ளவே முயலுவர். இத்தகு மனப்போக்கினாலேயே துறவுநிலை இடங்களிலும் பொருட்சார்பு மிகுந்தன போலும்! வறுமையின் காரணமாகத் துறக்காமல், வறுமையின் கொடுமை நிலை அறிந்து துய்ப்பனவற்றிற்கும் எல்லையின்மை அறிந்து எண்ணித்தொலையாத கடல் அலைகள் போல் எற்றிஎற்றி வந்துறும் ஆசை அலைகளின் அவலநிலை அறிந்து வறுமையை மாற்றிக்கொள்ளும் நோக்கின்றி, சிந்தை நிறைவு பெறும் நோக்கத்தோடு துறக்கும் துறவு சீலம் நிறைந்த துறவு. இத்துறவு நிலை ஓட்டையும், செம்பொன்னையும் ஒக்கவே பார்க்கும் உணர்வினைத் தரும்; நோதலும் தணிதலும் இல்லை. இத்துறவினையுடையார் பிறர் மகிழ மகிழ்வர். இந்தப் பேரறம் செய்வதால் அவ்வுலகம் கிடைக்கும். ஆதலால் துய்த்து மகிழ்ந்து தெவிட்டிய நிலையில் திருவருளை நாடுதல் முறையான வாழ்க்கை, இயற்கைப் பரிணாம வளர்ச்சியும் கூட முறையாக உழைத்து, நிறை பொருள் குவித்து, துய்ப்பித்தும், துய்த்தும், மிகிழ்வித்தும், மிகிழ்ந்தும் வாழ்தல் மாந்தர் கடமை. வறுமை இயற்கை அன்று; செயற்கையே. மனிதனின் சுயநலமும் சோம்பலும் படைத்ததே வறுமை. எழுக! தளராது முயற்சி செய்க! வறுமையினை வையகத்தை விட்டு விலக்குக! வாழ்வாங்கு வாழ்க! இதுவே வள்ளுவத்தின் வழி!

இழிசெயல்கள்

ழைத்து உறுபொருள் ஈட்டி மகிழ்ந்து வாழ்தலே இயற்கை ஒரோவழி தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் பிறரிடம் இரந்தும் வாழ வேண்டிய அவசியம் ஏற்படலாம். இயற்கையின் கொடுமைகளாலோ அல்லது சமுதாயக் கேடுகளாலோ இரந்து வாழும் அவசியம் ஏற்படலாம். அல்லது வாழ்ந்து முடிப்பதற்கு இரந்து கேட்காமல் வாழ்க்கையைத் தொடங்குதற்குரிய மூல முதற்பொருளை இரந்து கேட்கலாம். இரக்கின்றவன் சூழ்நிலை, இரக்கப்படு வோன் பண்பு ஆகியன கருதி இரத்தல், ஈதல் ஆதலும் உண்டு. இந்த மாதிரி இடத்தில் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், அவசியம் ஏற்பட்டால் இரந்திடுக என்கிறார் வள்ளுவர்.

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று

என்பது குறள். இரந்து கேட்டவன் நிலையினைக் கருதி பொருளைப் போற்றுதலினும், அவனைப் போற்றுதல் உயரிய அறம் என்று கருதும் இயல்பில்லாதவர்கள் இல்லையென்று உள்ளதையும் கரந்து கூறிடுவர். கரவாது ஈயும் இயல்புடையோர் அருமை என்பதால் காணின் என்றார். தானே வறியனாகாமல் வறியனாக்கப்பட்ட ஒருவன் பொருள் பெற்ற ஒருவனிடத்தில் இரந்து கேட்கும் பொழுது, அவன் கொடுக்காமல் உள்ளதையும் இல்லையென்று மறைப் பானானால் அதனால் வரும் பழி இரப்பவனுக்கில்லை; இரக்கப்படுவோனுக்கேயாம். இதனை, அப்பரடிகள் 'கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்' என்றார்.

இரந்த பொருள்கள் யாதொரு துன்பமும் கொடாமல் கிடைக்குமாயின், ஒருவருக்கு இரத்தலும் இன்பம் என்பது வள்ளுவத்தின் கருத்து. கரந்து வாழாதார் மாட்டு இரந்து வாழ்தலும் ஓர் அழகேயாம்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து

என்பது குறள்.

"முன் நின்று இரப்பும் ஓர் ஏர் உடைத்து" என்றார். முன் நின்ற அளவிலேயே வாய் திறந்து இரந்து கேட்கும் இழிவு வாரா முன்னமே, குறிப்புணர்ந்து கொடுத்தலின் 'இரத்தலும் அழகு' என்றார்.

உள்ளத்தைக் கரந்து வாழும் இயல்பினைக் கனவிலும் கருதார்மாட்டு இரத்தலும் ஈதலே போலும், இரப்பவரைக் கண்டால், உள்ளோர் பலர் எள்ளி நகைப்பர்; இகழ்ந்து பேசுவர். சிறப்புடை மரபில் வந்தோர் இரப்போரைக் கண்டால் ஏற்றுப் போற்றி முகமன் கூறுவர்; இன்ப உரைகள் கூறித் தேற்றிடுவர் ஏழ்மையில் நைந்த உள்ளத்தைத் தமது தூய அன்பினால் ஒற்றடம் கொடுத்து உருத்தேற்றுவர்.

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றி

என்று அகம் பேசுகிறது. இங்ஙனம் மதித்து வழங்கும் மனப்பாங்கு உடையவர்களை இரப்போர் காண்பாராயின் மகிழ்வர். உள்ளத்தில் தங்கிய உவகையில் களிப்பர். பொருட்செல்வம் மட்டுமின்றி ஆரா இன்பத்தினையே அனுபவித்தலால் 'உள்ளுள் உவப்பதுடைத்து' என்றார்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து

என்பது குறள்.

மானிட சாதியின் இம்மைக் குறிக்கோள் புகழுடையராக வாழ்தலேயாம். புகழ் பலவாறாகப் பலவகைகளில் வரலாம். ஆயினும் இரப்பார்க் கொன்றிவார் புகழே, புகழெனத் தக்கது. இந்தப் புகழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்போர், இரப்போரேயாம். இத்தகு இரப்போரில்லை யாயின் ஒருவருக்கு ஏது புகழ்: ஒருவன் இரந்து கேட்பதோ, சில நாளில் சம்பாதித்த பொருள். ஆனால் அவன் திரும்பத் தருவதோ உலகளாவி நிலைத்திருக்கும் புகழ். இரப்பவன் கேட்டுப் பெறுவதோ இந்த உலகில் அழித்தால் அழியக்கூடிய பொருள். ஆனால் அவன் திரும்பத் தருவதோ அழிவில்லாத அருட்பேறு. இந்த உலகியல் வாழ்க்கை உணர்ச்சியும், சுவையும் நிறைந்ததாக இருக்க வேண்டும். வற்றி வறண்ட வெறிச்சோடிப் போன பாலைவனமாக்க காட்சியளிக்கக் கூடாது. இந்த வாழ்க்கையின் சிறந்த சீலம், கொண்டும் கொடுத்தும் மகிழ்ந்து வாழ்தலேயாகும். கொடுப்பதற்கு வாங்குவோரில்லையானால் வாழ்க்கை உயிர் வாழ்க்கையா? அது மரப்பாவை வாழ்க்கையாகும்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று

என்பது குறள்.

திருவள்ளுவர் மனிதனைப் பார்த்து 'இரவற்க' என்றா. ஆயினும் இயற்கையால் விளைந்த கேடுகளாலும், சமுதாய மாறுபாடுகளாலும் ஒரோவழி இரக்கவேண்டின் "கரவாதவனிடத்தில் இரக்க” என்றார். ஆயினும் இரக்கப்பட்டோன் கொடாத வழி கோபப்பட்ட வேண்டாம் என்றும் கூறுகிறார். இரத்தற்குரிய அவலநிலை வந்தது, முன்னை ஒழுக்கக் கேடுகளாலேயேயாம். நேற்றைய தனது முறையற்ற வாழ்க்கைக்கு இன்றைய வறுமை சாட்சி. கண்முன்னே நேற்றையத் தவறுகளைக் கண்டு அனுபவிக்கும் பொழுதும் மீண்டும் வெகுண்டு தவறு செய்தல், மீளவும் துன்பத்திற்கே ஆளாக்கும். ஆதலால், கொடுக்காதவன் மாட்டுச் சினந்து கொள்ளுதல், அவனைத் தாக்குவதைவிட, உன்னையே வலிமையுடன் திருப்பித் தாக்கும். அந்தத் தாக்குதலை உன்னால் தாங்க முடியாது என்பது குறிப்பு. மேலும் செல்வம் சுழன்று வருவதொன்றேயாம். நேற்று செல்வம் உடையவனாக இருந்த ஒருவன் இன்றைக்கு இரப்பவனாகின்றான். செல்வமுடை யவனாக இருந்த ஒருவன், அந்தச் செல்வத்தைப் பெற்றிருந்த பொழுது கொடுத்தும் மகிழ்ந்தும் வாழ்ந்து இருப்பானாகில், அவன் செல்வத்தை இழந்தாலும் அவன் நலன்கருதி முன்பு பயனடைந்தோர் பாராட்டிப் பாதுகாப்பார்கள். அப்படி யின்றிச் செல்வத்தை வைத்து இழந்திருப்பானாகில் அவனைத் தேடுவாரில்லை. இத்தகையவனுடைய வறுமையும் இரவும் பயன் தராது. இதனைச் செல்வமுடையோன் அறிந்து உணர்ந்து அவனாகத் தராதபொழுது, அவனைச் சினந்ததால்தான் என்ன பயன்? தானே உணரும் சக்தியில்லாதவனிடத்தில் சினப்பதனால் பயனில்லை. ஆதலால் இரத்தலையும் கூடப் பற்றற்றே செய்யவேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பு. இதனை,

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

ன்றோதுகின்றார் திருவள்ளுவர்.

விதி வகுத்து இரக்கச் சொன்னாலும் திருவள்ளவருக்கு இறுதி இலட்சியம் இரந்து வாழ்கின்ற மக்களில்லாத-எல்லாரும் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்கின்ற ஒப்பற்ற சமநிலைச் சமுதாயம் காண்பதேயாகும். கடைசி மனிதன் இரவாமல் வாழுதற்குரிய பெருஞ்செல்வம் பெறுகிற வரையில் மேலேயிருப்பவர்கள் கொடுத்து அழைத்துவரக் கடமைப்பட்டிருப்பதால் அந்தக் கட்டமையை நிறைவேற்றுகிற காலக்கட்டம் வரையிலேயே இரப்பையும் உட்படுத்திப் பேசினார்.

தன் மதிப்பையும் இன்பத்தையும் ஒருசேர இழக்க வைக்கும் இரத்தல் அஞ்சுதற்குரியது. இரந்து இனிய சுவையொடு கூடிய உணவை உண்ணல் சிறப்பன்று. மாறாக நெறியுடன் கூடிய முயற்சியின் பயனாகக் கிடைத்த, மோரொடும் கலக்கப்பெறாத சுவையில்லாத நீரிலேயே கலக்கப்பெற்ற கூழாயினும் உண்ணற்கு இனிது உடலுக்கும் இனிது புகழுக்கும் அரண் செய்யும். இதனை,

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணவின் ஊங்கினிய தில்

என்றார் திருவள்ளுவர்.

முயற்சியால் பொருளீட்டி வாழும் வாழ்க்கை பாக்கிய வாழ்க்கை அப்படியின்றி இரந்து வாழ்தல் இழிவான வாழ்க்கையேயாம். கரவாது மகிழ்சியுடன் கொடுப்போரிடத்தில் இரந்தாலும் தன் மதிப்பு அழிவதில்லையே தவிர உயர்வதில்லை. ஆதலால் யார் மாட்டும் இரவாதிருத்தலே, இரந்து கோடி செல்வம் பெறுதலினும் கோடி நன்றாம்.

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்

என்பது குறள்.

வறுமையென்னும் கடலை, வலிய முயற்சியினாலேயே கடக்கலாம். மாறாகப் பாதுகாப்பும் உத்தரவாதமுமில்லாத இரவு என்ற தோணியைக் கொண்டு கடக்கக் கருதினால் கரையேற முடியாது. மாறாகக் கரவு வன்பாறை தாக்கினால் வலிமையற்ற இரவுத் தோணி உடைந்து போகும். திருவள்ளுவர் நம்மையெல்லாம் இரந்து கேட்கிறார்; கெஞ்சிக் கேட்கிறார்.

அவருக்காக யாதொன்றும் கேட்கவில்லை; நமக்காகக் கேட்கிறார்! என்ன அவர் இரந்து கேட்பது? அதுவும் யாரை இரந்து கேட்கிறார்? இருப்பவரிடமா இரந்து கேட்கிறார்? இல்லை; இரப்பவரிடம் இரந்து கேட்கிறார்! அப்படியென்ன கேட்கிறார்? "இரக்க வேண்டிய அவசியம் வந்தால், தயவு செய்து உள்ளதைக் கரப்போரிடத்தில் சென்று இரக்காதீர்கள்!" என்று இரந்து கேட்கிறார்.

கரந்தும், கடுஞ்சினத்தோடும், உவகையின்றியும், தீராத் துன்பமாகக் கருதி, ஒரோவழி கொடுப்போர் கொடுத்தாலும், அப்பொருளால் உடலுக்கு உணவு ஊட்டிய வழி, மானம் மரியாதை கொஞ்சம் உடையவராக இருப்பின் அந்த உடம்பும் நில்லாது. உண்ட வழியும் சுருங்கிவிடும். கொஞ்சம் கூட மானமில்லாதவர்களுக்குக் கவலையில்லை.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

என்பது குறள்.

திருவள்ளுவருக்கு நெஞ்சு உருகுகிறது. பலர் வறுமையின் கொடுமையால் இல்லையென்று கூறுபவர்களிடம் சென்று இரந்து நிற்கும் கொடுமையை நினைந்து நெஞ்சு உருகுகின்றார். திருவள்ளுவருக்கு இங்ஙனம் இரப்போர்மாட்டு ஓர் இரக்க உணர்ச்சி பிறக்கிறது.

ஆனால் இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் கரந்து வாழும் மனிதர்களை நோக்கி இரக்க உணர்ச்சியும், உள்ள உருக்கமும் எங்கோ ஓடிவிடுகிறது. மனச்சான்று படைத்தோர் இரக்க நேரிடின் தம் விதியினை நொந்து உருகி வேறு வழியின்றியே இரப்பர். மனச்சான்று இல்லாதவரோ இரத்தலையே பிழைப்பாகக் கொள்பவர்.

அவருக்கு உயிர் உருகா; ஊனும் உருகா. காரணம் மானம் மரியாதைகளைவிட்ட பிணம். கரப்பவர் கரந்தாலும், அவர்தம் உள்நெஞ்சுகரக்கும் நிலைகண்டு இரங்கும்; உருகும். ஆனாலும் பொருட்பிடிப்பு அந்த உருக்கத்தை மூடி மறைத்து விடுகிறது.

ஒருவன் பல்லாற்றாலும் முயன்று நல்லூழ் இன்மையின் காரணத்தால் தோற்றுவிட்டால் இரந்து இழந்த வாழ்க்கையை எடுக்க எண்ணுகிறான். கரவாது உவந்து வழங்குபவன் என்று கருதிச் சென்று இரக்கின்றான். இரத்தற்குரிய சொல்பிறந்தபோதே பழகிய மானத்தில் தங்கியிருந்த உயிர்நிலை பிரிகிறது.

யார் எதிரில் நின்று இரந்தானோ, அவன் நிலைமையறிந்து கொடுக்கவில்லை. இரத்தற்சொல் வெளிப்பட்டது. இரத்தற்சொல் வெளிப்பட்டவுடன் இழிவந்த உயிர் பிரிந்தது.

எதிரில் நின்றவனோ கரக்கின்றான்; தன் பொருளையும் கரக்கின்றான்; தன்னையும் கரக்கின்றான். இரப்பவரிடத்தில் ஒளித்துக் கொள்ளலாம். கரப்பவர் தங்கட் கெல்லாம் கடு நரகங்கள் வைத்திருக்கின்றானே பெருமான், அவன் முன்னேயும் இவன் ஒளிய முடியுமா? முடியாது. இதனை,

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஓம் உயிர்

என்று குறள் கூறுகிறது.

மலையை எடுத்து ரோமத்தால் கட்டலாம், கடுகில் ஏழுகடலை அடைத்தலும் கூடும். ஆனால் வறுமையை இரந்து மாற்றுவது என்றும் முடியாது. எப்பொழுதும் முடியாது. வறுமை தீர்தலுக்குரிய ஒரே வழி நன்முயற்சியுடன்கூடிய உழைப்பேயாகும்.

ஆதலால் மிகச் சிறந்த அறமாகிய பசுவினைப் பேணுதலுக்குக்கூடத் தண்ணிரை இரந்து கேட்கக் கூடாது. பசுவினைப் பாதுகாப்பது பேரறம், அதுவும் உயிர்போகும் தருணத்தில் கிடக்கும் பசுவுக்குத் தண்ணீர் வழங்குதல் தலையாய கடமை, அறமும்கூட

கேட்கப்படுவதோ தண்ணீர். காசுஇன்றி எளிமையில் கிடைக்கக்கூடியது. ஆயினும் தண்ணிர் இரந்து கேட்ட அளவில் நாவிற்கு இழிவு வந்தே சேரும். அதற்குமாறாகக் கிணற்றினைத் தேடித் தண்ணிர் இறைத்துக் கொண்டுவந்து பசுவக்குத் தருவதே அறம், அதோடு புகழுமாம். இதனை,

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

என்று கூறுகிறார். நுகர்தற்குரியன பெறாதபொழுதும், இரவாமலிருத்தல் இந்த உலக முழுவதும் அடங்கிய பெருமையுடையதாகும்.

திருவள்ளுவருக்கு இரந்து வாழும் உயிர் வாழ்க் கையைக் கண்டால் கடும் சினம் உண்டாகிறது. குமுறிய உள்ளத்தோடு புரட்சிக்குரல் கொடுக்கிறார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

என்று பேசுகின்றார்."இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்" என்ற உண்மையினால், கடவுள் மனித உலகத்துக்கு இரத்தலை ஒரு தொழிலாக அமைக்கவில்லை என்பது பெறப்படுகிறது. ஒரு நியதி கடவுள் நியதி. பிறிதொரு நியதி கடவுள் நியதியினைச் சார்ந்த, ஆனால் இந்த உலகிடை நிலவும் அரசியல் நியதி. கடவுள் நியதியும், அரசியல் நியதியும் இலட்சியத்தால் ஒன்றேயாம். ஆயினும் முறைகளால் மாறுபடுகிறது. அரசியல் நியதியை அருட்சார்பின்றி, ஆணவச் சார்புடையோர் இயற்றி இயக்குவாராயின் ஆங்குச் சமநிலை கெடும். தன்னலச் சார்புடையோர் அந்த முத்திரையுடன் சுரண்டுவர்; பொருள் குவிப்பர் செல்வராவர். அம்முத்திரை கிடைக்கப் பெறாதார் ஏழை களாகி இரக்கும் நிலையினை எய்துவர். இந்த நிலையில் இரக்கும் நிலையடைந்தோர் முயற்சியில் தாழ்ந்தவர்களல்லர். உழைக்காதவர்களுமல்லர். நேரிய முயற்சியும், கடுமையான உழைப்பும் உடையவர்களேயாம். உழைப்பாளிகள் இரக்கும் நிலையடைந்தது சமுதாயச் சீர்கேட்டினாலேயாம். அந்தச் சீர்கேட்டைத் தடுத்து நிறுத்துவது அரசின் கடமை. இன்றைய மக்கள் சமுதாயத்திலும் உழைப்பவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். உழைக்காதவர்களில் பலர் உல்லாச வாழ்க்கையில் இருக்கிறார்கள். எனவே, இரந்து வாழ்கின்ற நிலைமைக்கும் காரணமான அரசு கெடுக! என்கிறார்.

"கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக" என்றார் வள்ளலாரும். இங்கு 'இயற்றியான்' என்பது கடவுளைச் சாராது. ஆதலால், நாம் நம்முடைய நாட்டு மக்களை வறுமைக் கடலினின்றும் கரையேற்ற, நெறிவழிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பிறரிடம் இரந்து நம் வறுமை போகாது.

கயமை

திருக்குறள் ஓர் ஒப்பற்ற முழுமுதல் அறநூல். திருவள்ளுவர் மனிதர்களைக் கெட்டவர்களென்று கருதியோ, அல்லது கெட்டவர்களாக ஆக்கியோ எளிதில் ஒதுக்குபவர் அல்லர். அவர் தம் நூல்வழி மிகவும் சாதாரண சராசரிக்கும் கீழ்ப்பட்ட மனிதனை வளர்க்கவே தமது திருக்குறள் மூலம்

முயற்சி செய்கின்றார்; கற்பிக்கின்றார்; சொல்லித் தருகின்றார்; வழி நடத்துகின்றார்; ஊக்கமூட்டுகின்றார்; துணை சேர்க்கின்றார்; தீயன பிரித்து ஒதுக்கிக் காட்டுகின்றார்; சில இடங்களில் குறிப்பால் உணர்த்தினார்; பல இடங்களில் வெளிப்படையாக எடுத்தோதினார்.

இத்தனையாலும் தேராத மனிதரை ஒதுக்குகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்; நம்மையும் ஒதுக்கச் சொல்லுகிறார்; ஒதுங்கவும் சொல்லுகிறார். மனிதனை வளர்த்து வளர்த்துத் தேற்றித் தேற்றிக் கொண்டு வந்த வள்ளுவர் ஒன்றாலும் இயலாத பயனற்ற கீழ் மக்களைத் தள்ளி மூடும் அதிகாரமே 'கயமை யாகும்.

விலங்குகளில் சாதி பிரிக்கிறோம்; காய்கறிகளில் சாதி பிரிக்கிறோம். ஆனால் நாம் மனிதரில் சாதி பிரிப்பதில்லை. சாதி பிரிப்பதில்லையா? இன்றுதான் ஏராளமான சாதிப் பிரிவுகள் இருக்கின்றனவே என்று கருதுகின்றீர்களா? இன்று பிரித்துள்ள சாதிமுறை பிறப்பினாலும் ஆதிக்கத்தினாலும் ஏற்பட்டவையாகும். ஒரோ வழி தொழிலின்பாலும் பட்டவை. ஆனாலும், திருவள்ளுவர் இனம் பிரித்துக் காட்டுவது பிறப்பினாலுமல்ல; தொழிலாலுமல்ல. மேன் மக்கள், கீழ்மக்கள் என்று பிரிக்கிறார். இந்தப் பிரிவு குணத்தின்பாற்பட்டது. பலர் மக்கள் போலவே நடமாடுகிறார்கள். ஆனால் அவர்கள் உருவத்தினாலேயே மக்கள். ஆனாலும் குணங்கள் மக்கட் சாதிக்குரியன அல்ல. "மக்களே போல்வர்" என்ற சொற்றொடரில் உள்ள தேற்றேகாரத்தில் வேதனை நிறைந்த நகைச்சுவை மண்டிக் கிடக்கிறது.

நன்மக்கள் நாள்தோறும் தமது தகுதியினை, சீலத்தினை, குடிச்சிறப்பினை இழந்துவிடக்கூடாதே என்று எண்ணிக் கவலைப்படுவர். ஆனால் கீழ்மக்களோ கவலையில்லாத மகாராஜாக்கள்! அவர்களுக்குப் பழி, பாவமில்லை; சீலம், நோன்பு இல்லை; குடிச்சிறப்பும் இல்லை! எதைக் காப்பாற்றிக் கொள்ளக் கவலைப்பட வேண்டும்? என்று பரிகாசமாக-ஆனாலும் வேதனை நிறைந்த உள்ளுணர்வுடன் திருவள்ளுவர் பேசுகின்றார்.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

என்பது குறள்.

தேவர்கள் பதவியால் உயர்ந்தவர்கள். ஆயினும், அவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகள் எண்ணிலடங்காதவை. அவர்கள் உயர்ந்தோர் என்று கருதித் தாம் விரும்பியபடியெல்லாம் செயல்படுகின்றனர். இதன் விளைவே தக்கன் வரலாறு, தேவர்களின் தலைமைப் பதவியாகிய இந்திரப் பதவிக்கு அடிக்கடி சண்டை நடந்தவற்றைப் புராணங்கள் பேசுகின்றன. தேவர்களையும் கயவர்களையும் திருவள்ளுவர் ஒரு தன்மையர் என்றே பேசுகின்றார். ஒரே ஒரு வேற்றுமை. தேவர்கள் பதவியிலமர்ந்து செய்கிறார்கள். கயவர்கள் பதவியில் இல்லாமற் செய்கிறார்கள். கயவர்கள் தாம் விரும்பியவற்றையே செய்வார்கள். மற்றவர்கள் நிலை கண்டு யார் ஒருவருக்கும் துன்பம் தராது ஒழுகும் இயல்பு கயவருக்கு இல்லை. ஏன்? பழகியவர்களுக்கும் நீங்காத் துன்பம் கொடுப்பர்.

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

என்பது குறள்.

கயவர் தம்மையொத்த கயவர்களைக் காணின் மகிழ்ந்து கூடி உலாவுவர்; சமுதாயக் கேடுகளைச் செய்யத் துணை கிடைத்ததே என்று துள்ளி மிகிழ்வர். அது மட்டுமா? கயமைத்தனத்தில் போட்டி போடுவர். அதிகக் கீழ்த்தனமான காரியங்களைச் செய்து நானே வெற்றி பெற்றேனென்று செம்மாப்பர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

என்பது குறள். வலியிலும், பிறதுறைகளிலும் தம்மின் கீழ்ப்பட்டவரைப் பார்த்தாலும் அவரின் நான் உயர்ந்தேனென்றும் செம்மாக்கும். எப்பொழுதும் மேல் நோக்கி ஒப்பெடுக்க வேண்டுமேயன்றி, கீழ்நோக்கி ஒப்பு நோக்கக் கூடாது. அதனாலன்றோ, மண்ணில் முளைக்கும் முளையும் வானோக்கி முளை விடுகின்றது.

கீழ் மக்கள் படாடோபமாக அரட்டி உருட்டினாலும் அச்சத்திலும் சிறந்தவர்கள். கீழ்மக்கள் அடங்கி நடப்பதோ அல்லது அதட்டி நடப்பதோ நடிப்பேயாகும். அவர்களுக்கு இயல்பாக அடக்கமுமில்லை; ஆண்மையுமில்லை. அவர்கள் அடி உதைக்கு அஞ்சுவார்கள். அல்லது தனக்குக் கிடைக்கக்கூடிய இலாபம் போய்விடுமோ என்றும் அஞ்சுவார்ககள். கீழ்மக்கள் எப்பொழுதாவது அடங்கி நடந்தால், அதுமற்றவருக்கு அச்சத்தைத்தரும் என்றும் கொள்ளலாம், எந்தக் காரியத்தை முடித்துக் கொள்ளக் கருதி இந்த நாடகத்தைத் தொடங்கியிருக்கின்றாரோ என்று! இதனை,

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது

என்றார். 'அச்சம் கீழ்களது ஆசாரம்' என்றால் சான்றோருக்கு அச்சம் வேண்டாவோ? அஞ்சுவது அஞ்சல் சான்றோர் கொள்கை. அதாவது பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டும். கீழ்மக்களுக்கோ பழி பாவம் பால் பாயசம்! அவர்கள் அஞ்சுவதெல்லாம் அடிக்கும் உதைக்குமேயாம்.

கீழ்மக்களோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஒரோ வழி தவிர்க்க முடியாத நிலைமையால் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படின் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைச் சார்ந்த ரகசியங்களை அவர்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்குக் கிடைத்த செய்தியை அவர்கள் தாமே தெருத்தெருவாகச் சென்று, பறைசாற்றிப் பல கேடுகளை விளைவிப்பர். கயமைத்தன முடையவர்களின் காதும், வாயும் சமூகக் கலகங்களின் நுழைவாயில்களாகும். ஆதலால் அவரிடத்தில் அதைச் சொல்வதற்குப் பயப்படவேண்டும். அதுபோலவே அவருடைய வாய்ச் சொல்லை மதித்து ஏற்காமல் தள்ளிவிடவேண்டும். இதனை,

அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

என்றார் திருவள்ளுவர்.

கயமைத்தனம் நாட்டின் நல்லூழ் இன்மையில் காரணத்தினால் எந்த இடத்திலிருக்கும் அல்லது இருக்க முடியாது என்று சொல்லமுடியாவண்ணம் நிலவும். கயவர்களுக்குப் பெரும்பாலும் தமது வரவிலேயே நாட்டம். மற்றவர்களைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் பெற்றுக்கொண்டதற்குத் திரும்பப் பணமாகவோ அல்லது உழைப்பாகவோ அன்றி நன்றி கடப்பாடாகவோ, ஈடாகத் திருப்பித் தரமாட்டார்கள். தரரேண்டுமென்ற எண்ணங்கூடவராது. மாறாக "இன்னும் கொடுக்கவில்லையே, என்ன பிரமாதமாகச் செய்து விட்டார்கள்?’ என்று அங்கலாய்ப்பர்.

கயமைத்தனம் உடையவர்கள் பெரும்பொருளையுடையவரா யிருப்பின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கமாட்டார். கயமைத்தனமுடையவர்களுக்கு, மற்றவர்களுக்குப் பசியும் கவலையும் உண்டு என்பதே தெரியாது. அவர்கள் இயல்பாகக் கொடுக்கமாட்டார்கள். யாரொருவர் கையை வளைத்து மடக்கி மேல் வாய்க் குறட்டில் ஓங்கிக் குத்தி உடைக்கின்றாரோ அவருக்கே கொடுப்பர் மற்றபடி வாட்டமுற்ற மக்களுக்கு ஈரக் கையைக் கூட உதறமாட்டார். அதாவது தன்னை வருத்துவோருக்கு அச்சம் நோக்கிக் கொடுப்பார்களே தவிர, 'ஈதல் அறம்' என்ற நெறிக்கு இவர்கள் வெகுதூரம்.

அறத்தின் அடிப்படையில் கொடுத்தால் சிறிது கொடுத்தாலும் போதும்; வாங்குகிறவர்களும் மன நிறைவு அடைவார்கள். வருத்தத்திற்கு அஞ்சிக் கொடுத்தால் மேலும் மேலும் வருத்திப் பெற முயலுவர். வருத்துபவர்களுக்குப் பணம் கொடுத்துப் பழகுவது வறண்ட பாலைவனத்தில் நடப்பதோடொத்த துன்பத்தைத் தரும். இங்ஙணம் செல்வம் சேர்ந்து கயமைத்தன உணர்ச்சி பெருகி வளர்வதே பலாத்காரப் புரட்சிக்கு வித்திடுகிறது.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு

என்று இதனைக் குறள் கூறுகிறது.

சான்றோர் சொல்லப் பயன்படுவர் நல்ல மனமுடையவர்கள் சொன்னதைச் செய்வர்; சொன்ன அளவிலேயே அறத்தினைச் செய்வர்; உதவி செய்து உவப்பர்; எடுத்துக்காட்டிய கடமைகளைச் செய்வர். ஆனால் கீழ்மைத் தனமுடையவர்களோ சொன்னால் செய்யமாட்டார்கள். அவர்கள் கடமை தவறுதலுக்கு அஞ்சிப் பயப்படுவதில்லை. காரியக் கேட்டுக்கும் அஞ்சிப் பயப்படுவதில்லை. மற்றவர் வருத்தம் பார்த்தும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் அஞ்சுவதெல்லாம் அடிக்கும் உதைக்கும் தானே! ஆதலால் கீழ்க்குணம் உடையவர்களை நையப்புடைத்தாலே சொன்னதைக் கேட்பார்கள்; சொன்னதைச் செய்வார்கள். நல்ல கனிந்த மாம்பழத்தை மெதுவாகத தொட்டாலே சாறு கிடைக்கும். ஆனால் கரும்பையோ, உருவம் தெரியாமல் நசுக்கியே சாறெடுக்க வேண்டும். கீழ்மக்களிடத்தில் உதவி பெறுவதாயினும் சரி, அல்லது வேலை வாங்குவதாயினும் சரி நையப்புடைத்தாலே செய்வர். இவர்களை நோக்கிப் பிறந்த பழமொழிகளே "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்"; "அடியாத மாடு படியாது” என்பனவாகும்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

என்பது குறள்.

கயமைத்தனமுடையவர்களுக்கு அழுக்காறு நிறைய உண்டு. நிறைய உண்டு என்பதைவிட அழுக்காற்றினாலேயே உருவமும் உணர்வும் படைத்தவர்கள் என்று கூறுவது பொருந்தும். இவர்களுடைய அழுக்காறு மிகவும் மோசமானது. பிறர் உண்டு உடுத்து வாழ்வதைக் கண்டாலே இவர் களுக்குப் பிடிக்காது. இவர்கள் பிறர் உண்டு உடுத்து மகிழ்வதைப் பார்த்துக் குறை சொல்லுவர். கீழ்மக்கள் குறை சொல்ல, குற்றங்கள் இருக்க வேண்மென்று அவசியமில்லை. குற்றங்கள் இல்லையானலும் இவர்கள் துருவிக் கண்டுபிடித்து விடுவார்கள். இல்லையெனில் கற்பித்துவிடுவார்கள். "ஆ, பூ அவர்தானே! நமக்குத் தெரியாதாக்கும். அவர் அதிலே கொள்ளையடித்துத்தானே வைத்திருக்கிறார்” என்று சுலபமாகச் சொல்லி விடுவார்கள். இதனை,

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

என்று குறள் கூறுகிறது.

'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்' என்பது பார்த்த அளவானே அழுக்காறடைவர்; அலர் தூற்றுவர் என்ற ஆழ்ந்த கருத்தமைந்திருக்கிறது. ஆதலால், கயவர்கள் காண உண்ணலையும் உடுத்தலையும் ஊர்திகளில் செல்லலையும் தவிர்ப்பது நல்லது. அதனால் தான் போலும், 'கண்ணேறு படுகிறது' என்று நமது நாட்டுத் தாய்மார்கள் சொல்லுகிறார்கள். இதுவும் உண்மையேயாம். அன்று உண்ணல் உடுத்தல் முதலிய வாழ்க்கையில் அழுக்காறு ஏற்பட்டது. இன்று பதவி, செல்வாக்கு, புகழ் ஆகிய துறைகளிலும் மிகவும் அதிகமாகவே அழுக்காறு ஏற்படுகிறது. அதன் காரணமாக நாள்தோறும் நாட்டில் பிறர்பழி தூற்றும் மேடைகள் பெருகி வருகின்றன.

குற்றமே கண்டு கூறிப் பழகினால், குணம் காணும் பழக்கமும் வராது; குணங்களும் வளராது. ஆதலால் பொது வாழ்க்கையிலும் கூட அழுக்காற்றின் வழிப்பட்ட கண்ணேறு படாமல் அடக்கமாக, எளிமையாக, தம்மைப் புகழ் வந்து அடையாமல் தற்காத்துக் கொள்ளச் செய்வது நெடிய பயனைத் தரும்.

கயவர் தம்மொடு பழகினார்க்கு ஏதாவது கேடுவந்த பொழுது, அந்தக் கேட்டினால் அவர்களுக்கு இறுதி நேரிடும் வண்ணம் விரைந்து எற்றித் தள்ளி விடுவர். அப்படிச் செய்யத் தவறினாலும் உற்றஇடத்து உதவி செய்யாது நீங்கிவிடுவர். ஆதலால் தோற்றத்தால், பேச்சால் கயவர் நல்லவர் போலவும் வலியவர் போலவும் காணப் பெற்றாலும் அவர்களுடன் பழகி உறவு கொள்ளுதல் ஒருபொழுதும் உதவிசெய்யாது. உதவிசெய்வதற்குப்பதில் கேட்டினை இரட்டிப்பாகவும் விரைவாகவும் கொண்டுவந்தாலும் வரலாம். இதனை,

எற்றிற் குரியர் கயவர்ஒன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து

என்று கூறுகிறது குறள். மேலும் கயவர் தோற்றத்தால் ஆண்மையுடையராயிருப்பர். அரிச்சந்திரனைப் போல் நடிப்பர்; வையத்தை வாயால் அளப்பர்; 'உயிரெல்லாம் உறவுடையோர் பாசத்திற்கே' என்றே பசப்புவர். ஆனால், அவர்களுக்கு யாதாவதொரு துன்பம் வந்துற்றால் விரைந்து ஒடுவர்! எங்கு? தம்மையே விலை பேச ஐயோ, பாவம்! தம்மையும் விலை பேசுவர்; தம்மை நம்பிப் பழகிய நண்பர்களின் மானத்தையும் விலை பேசுவர்; பழகினோர் உயிரைக்கூட விலை பேசிவிடுவர். நிலமகள் இத்தகு கயவர்களைத் தாங்கிக் கிடப்பது பொறையுடைமை நோக்கிப் போலும், மறந்தும் கயமைத்தனத்திற்கு ஆளாகக் கூடாது. கயவர்களையோ மறந்தும் நிழலுக்குக்கூட உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இது வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றிபெற வள்ளுவம் கட்டித் தந்த அரண்.

ஒப்புரவு நெறி
வாழ்க்கை குறிக்கோள் உடையது. அக்குறிக்கோள் எது? தாம் வாழ்வதா? தாம் வாழ்தல் என்பது தவிர்க்க இயலாதது. ஆயினும் தாம் வாழ்தல் என்பது சாதனம். ஆதலால், தாம் வாழ்தல் என்பது எளிய ஒன்று. இயற்கையேகூட வாழ்வித்து விடும். நல்ல சமூக அமைப்பும் அரசும் தோன்றி விட்டால் தாம் வாழ்தல் என்பது எளிது. இன்று சமூக அமைப்பு நன்றாக இல்லை. அரசுகள் நன்றாக இல்லை. ஆதலால், தாம் வாழ்தலுக்குக் கூட இன்று உடனடியாக நல்லதோர் சமூக அமைப்புக் காண்பதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நன்மை நல்கும் அரசு கண்டாக வேண்டும்.

தாம் வாழ்தலை-சமூக உணர்வின்றித் தாம் வாழ்தலை வாழ்தல் என்று யாரும் ஒப்பார். இது பிழைப்பு ஆகும். பாரதி, "சீச்சி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று பேசுவான். தாம் வாழ்தலுக்கு ஒன்றும் ஒப்பரிய அறிவும், அறிவறிந்த ஆள்வினையும் வேண்டாம். அப்படியானால் குறிக்கோள் எது? குறிக்கோள் என்பது பயனுற வாழ்தல்; பிறர் பயனுற வாழ்தல்! தனக்கென முயலுதல் விலங்கியல் குணம்! பிறர்க்கென முயலுதல் மனிதவியற் பண்பு.

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறிதும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!

(புறம் 182)


என்பது புறநானூறு. சங்க காலத்தில் பொருள் தேடும் முயற்சி இருந்தது. ஏன்? அகநானூற்றுத் தலைவி பேசுகிறாள்.

இல்லென் றிரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப
நம்மினும் பொருளே காதலர் காதல்
என்ன அந்த அகநானூற்றுப் பாடலடிகளாகும். இதுவே பண்பு, மானுடப் பண்பு. மானுடத்தின் குறிக்கோள்! பிறர் பயனுற வாழ்தலே தவம், நோன்பு என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன. 'பெறுவதைவிடக் கூடுதலாகக் கொடு' (Do more than get; give) என்றார் லிராய் ப்ரெளன்லோ.