உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/திருவள்ளுவர் காட்டும் அரசியல்

விக்கிமூலம் இலிருந்து

13
திருவள்ளுவர் காட்டும் அரசியல்

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஓர் இலக்கிய மலர்; அரசியல் ஞாயிறு; பொருளியல்கூறும் புதுநூல்; நீதி நெறியினைக் காட்டும் நீதிநூல்; அறநூல்; உள்ளத்தை ஒட்டித் திருத்தும் உளவியல் நூல்; திருக்குறள் ஒரு முழுதுறழ் அறநூல். ஆயினும் ஏன்? திருக்குறள் இன்றளவும் ஓர் இலக்கிய நூலாகவே பயிற்றுவிக்கப்படுகிறது; பயிலப்படுகிறது. தவறினால் மிகச்சிலரே திருக்குறளை வாழ்க்கை நூலாகக் கண்டு பயின்று பயனடைகின்றனர். சமுதாயத்தின் அனைத்துத் துறையையும் திருக்குறள்நெறி தழுவும் போதே மன்பதை-உலகம் உய்யும்.

திருவள்ளுவர் ஓர் அரசியல்மேதை. ‘இலட்சிய அரசியல்’ படைத்த பிளேட்டோ. ‘சமுதாய ஒப்பந்தம்’ கண்ட ரூசோ, பொதுவுடைமைத் தத்துவத்தின் வாயிலாகச் சோவியத்துப் புரட்சியைக் கண்ட லெனின் ஆகியோர் வரிசையில் வைத்து, எண்ணத்தக்க அளவுக்குத் திருவள்ளுவரின் அரசியல் சிந்தனை உயர்ந்தது. ஆனாலும், வள்ளுவர்தம் அரசியல் சிந்தனைகள்-பொதுமைக் கருத்துகள் இந்த நாட்டினில் புரட்சிக் கனிகளாகக் கனியாமல் வள்ளுவம் வையகத்தை ஆளவில்லை.

கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளை நீதிக்குத் தலைவன் என்று நம்புகிறார்கள். கிறித்துவ இசுலாமிய சமயங்கள் இறைவனின் நியாயத் தீர்ப்பு நாளைப் பெரிதும் எடுத்துக்காட்டிப் பேசுவனவாம். தமிழகச் சமயநெறி இறைவனை ‘நீதி’ என்றே அழைக்கிறது. இறைவனுடைய நீதியையே இந்த உலகில் அரசு செயற்படுத்துவதாகக் கருதுவது ஆன்றோர் மரபு. இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் அரசர்கள், தாங்கள் ஆண்டவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். ஆனால் நம் தமிழகத்து அரசர்கள் நெறி முறையின் காவலர்களாக-நீதி தேவதையின் திருக்கோயில்களாக விளங்கினார்கள். இளங்கோவடிகளின் சிலம்பு காட்டும் நெடுஞ்செழியன், சேக்கிழார் பெருமான் காட்டும் மனுநீதிச் சோழன் போன்ற அரசர்களின் வரலாற்றைப் போல உலக வரலாற்றில் வேறு எங்குண்டு! அதனாலன்றோ திருவள்ளுவர்,

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையென்று வைக்கப் படும்’

388

என்றார்.

திருவள்ளுவர், திருக்குறளில் விழிப்புணர்வுடன் சொற்களை அடுக்கிப் பாடியிருக்கிறார். திருவள்ளுவர், அரசுக்குக் காட்டும் இறைமைச் சிறப்பு, முறைசெய்து காப்பாற்றும் தகுதியைச் சார்ந்ததேயாம்; பிறப்பின்பாற் பட்டதன்று. முறைசெய்து காப்பாற்றும் தகுதியில் சிறந்த அரசன், கடவுளைப் போல எண்ணிப் பாராட்டப் பெறுவானேயன்றி, அவன் கடவுளல்லன்.

நீதி என்பது மனித உலகத்து வாழ்வியலில் ஒரு சிறந்த தத்துவம். நீதி என்ற தத்துவம் ஆழமானது; உருவெளித் தோற்றத்தில் மட்டும் காணக்கூடியதன்று- உணரக்கூடியது மாகும். நீதியை வழங்கும் முறை-நீதியைச் செயற்படுத்தும் முறை என்றும் ஒரே நிலையானதாக இருக்க முடியாது. அது மட்டுமன்று. நீதி என்ற தத்துவம் அதனுடைய அடிப்படைக் கருத்துக்கு முரணாகாமல் காலத்துக்குக் காலம் மாறுவதும் உண்டு. ஆதலால், அரசன் தன்னால் பாதுகாக்கப்பெறும் சமுதாயத்தின் தேவைகளை, அந்தச் சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்குரிய நீதிமுறைகளை நாள்தோறும் ஆராய்ந்து அந்தந்த நிலைமைகளுக்கு ஏற்றவாறு நீதியை வழங்க வேண்டும்.

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.’

553

என்பது வள்ளுவம்.

திருவள்ளுவர் பார்வையில் அரசு என்பது வரி மட்டுமே வசூலிக்கும் எந்திரமன்று; அல்லது அதிகாரத்தின் சின்னமுமன்று. அல்லது தண்டனை வழங்கும் ஏகபோக உரிமையுடையதுமன்று. குடிமக்கள் குற்றம் செய்தால் அரசு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது பொதுவான அரசியற் கருத்து. ஆனால், திருவள்ளுவர் குடிமக்களைக் குற்றம் செய்யத் தூண்டாத-அனுமதிக்காத அரசையே அரசு என்று ஏற்றுக் கொள்கிறார். குடிமக்களிடத்தில் குற்றம் காணின் அக்குற்றம் தோன்றுதற்குரிய அரசின் காரணத்தை ஆராய்ந்து அக்குற்றத்தை அகற்றிக் கொள்ளவேண்டும் என்று வள்ளுவர் நெறிமுறை காண்கிறார். அதிகாரக் கட்டிலில் உள்ள அரசு ‘இடு’ என்று கேட்பதையும் கூட வள்ளுவர் உடன்படவில்லை. மக்களின் ஆற்றலுக்கு விஞ்சிய வரிக் கொள்கையை அரசு, நடைமுறைப்படுத்துமானால், கள்ளக் கணக்குக்கு அது துணைசெய்யும். இன்று நம்முடைய நாட்டில் ‘கறுப்புப்பணம்’ என்ற பேச்சு அடிக்கடி அடிபடுகிறது. ஏன்? அரசின் வரிவிதிப்புக் கொள்கைகளாலும், தனிமனித உடைமையில் அரசு அலட்சியம் காட்டுவதாலும், நாடு, முழு உத்தரவாதமுள்ள ஓர் அரசைப் பெறாததாலும் இந்த அவலநிலை கருக் கொண்டுள்ளது. ஆதலால், திருவள்ளுவர் மக்களிடத்தில் காணப்பெறும் குற்றங்களுக்குக் காரணம் அரசின் குற்றமேயென்றும் அரசினிடம் காணப்பெறும் குற்றம் நீங்கினால், மக்களிடத்துக் குற்றங்கள் காணப்பெறா என்றும் கருதுகின்றார். வள்ளுவர் கருத்துப்படி குற்றம். கண்டிக்கத் தக்கதுதான். ஆனால், ஒரு குற்றம் காரியமாகவும், ஒரு குற்றம் காரணமாகவும் விளங்கும். காரியக் குற்றத்தைவிடக் காரணக் குற்றத்தை வள்ளுவர் கடுமையாகக் கண்டிக்கின்றார். காரணம் மாறினால்தான் காரியமும் செம்மைப்படும் என்பது வள்ளுவர் கருத்து. இதனை,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு’

436

என்று கூறுகின்றார்.

திருவள்ளுவர், குடியாட்சி முறையைத் தழுவிய முடியாட்சியையே காட்டியுள்ளார். அவர் காலத்தில் உலக முழுதும் முடியாட்சியே நடைபெற்றது. அந்தக் காலத்தில் குடியாட்சி தழுவிய முடியாட்சியைச் சிந்தனை செய்து தந்த பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அதிகாரம் உள்ள அரசைத் தழீஇ நிற்கப் பலர் விரும்புவது இயற்கை. அதுவே நேற்று-இன்று நடைமுறையுமாகும். ஆனால், திருவள்ளுவர் குடிகளைத் தழுவிநிற்கும் அரசை உலகம் தழுவும் என்றும், கூறுகிறார். இத்தகைய ஓர் அரசை இன்று இங்கிலாந்தில் பார்க்கிறோம். இங்கிலாந்து நாட்டு ஆட்சிமுறையில் பாராளுமன்றமும் உண்டு; அரசனும் உண்டு.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு’.

544

நல்ல அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்யும் ஓர் அமைப்பே யாகும். அந்தச் சேவையை இடையூறின்றிச் செய்யவே அதிகாரம் என்ற உப்பு வழங்கப்பெற்றது. ஆனால், இன்று உணவில் உப்பைப் போலல்லாமல் கடல் நீரில் உப்பைப்போல் பல அரசுகளில் அதிகார உரிமை மிகுந்து காணப்படுகின்றது.

அரசுக்கு இரண்டு வகையான உரிமைகளை வள்ளுவர் வழங்குகிறார். முதல் உரிமை கடமை. அதாவது தன்னை நம்பி வாழும் மக்களுக்குத் தொண்டு செய்தல்; அவர்களைக் காத்தல்; அவர்களுக்கு எந்த வகையான தீங்கும் வராமல் பேணிப் பாதுகாத்தல். இவை அரசின் முதற்கடமை. இந்த முதற்கடமையைச் செய்யத் தடையாக இருப்பவரை, இல்லை-தடையாக இருப்பவரின் குற்றத்தைக் கடிந்து நீக்கத் தண்டனை வழங்கும் உரிமை இரண்டாவது. முதலுரிமைக் கடமையாகிய தொண்டினைச் செய்யத் துணைக் கருவியாகவே தண்டம் வழங்கும் உரிமை அரசுக்குக் கிடைத்தது; அதிகாரமும் கிடைத்தது என்பது வள்ளுவரின் கருத்து. ஆனால், இன்று அரசு என்றவுடன் மக்கள் மன்றத்தில் நினைவுக்கு வருவது. தொண்டு அல்ல - சேவையல்ல; அதிகாரம்! அதன் வழிப்பட்ட அச்சம்! இது திருவள்ளுவர் நெறிக்கு முரண். திருவள்ளுவர்,

‘குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.’

549

என்பர். வேந்தன், குற்றங் கடிதல் வடுவன்று. அஃது அவன் தொழில்! எப்பொழுது? குடிபுறம் காத்தோம்பும் தொழிலைச் செய்யும் பொழுது வடுவன்று. இவ்வாறு கொண்டு கூட்டிப் பொருள்கொண்டாலே திருவள்ளுவர் காட்டும் அரசியலின் மாட்சிமையை உணர முடியும்.

வேந்தன் தண்டனை வழங்கலாம். ஆம்! வேளாண்மை செய்பவன் களைப்பிடுங்குதலைப் போல, மன்பதை காக்கும் அரசுக்கும் மக்களே போல வாழும் கயவரை ஒறுக்க உரிமையுண்டு. ஆனால், இங்கே ஒறுத்திடும் அதிகாரம் ஒறுக்கப்படும் மக்களின் இழிநிலையைப் பொறுத்ததேயாம். கொலை, உலகில் கொடுமையானது. கொலையினும் கொடியர் என்று வள்ளுவர் வலியுறுத்த "கொலையிற் கொடியாரை" என்பார். கழனியில் உள்ள களையைக் கிள்ளுதல் கூடாது. கிள்ளினால் மீண்டும் தளிர்க்கும். கழனியிற் களைபறிப்போர் களையை வேரோடு அகற்றுதல் வேண்டும். களையல்லாமல் வளரும் பயிருக்கு உரச்சத்தைச் சேர்க்கும் செடியைப் பிடுங்கக் கூடாது. மக்களின் சாதாரணக் குற்றங்களைச் செய்கின்றவர்கள் சிறிய தண்டனைகள் மூலம் திருத்தமுறுவர். இத்தகை யோருக்குக் கடுந்தண்டனை வழங்குதல் முறையன்று, கொலையிற் கொடியாருக்குத்தான் வேளாளன் களையைப் பிடுங்கி எறிதலைப் போல, அரசு கடுந் தண்டனை வழங்கவேண்டும்.

திருவள்ளுவர்,

‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்’

550

என்பர். ரூசோவும் கொலையிற் கொடியாருக்குக் கொலைத் தண்டனை வழங்காவிடில் கொலை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்றும், கொலை செய்வார் பலராகப் பெருகுவர் என்றும் கூறுவர். மேலும், கொலைஞன் ஒருவனுக்குக் கொலைத் தண்டனை வழங்குவதன் மூலம், பிறிதொரு மனிதனைக் கொலையினின்று தடுப்பது மட்டுமன்றி இன்னொரு மனிதனைக் கொலைகாரனாக மாறாமலும் தடுக்க முடியும் என்பர்.

அரசுக் கட்டிலில் ஏறுவோர் மற்றவர் செய்யும் விமர்சனத்துக்குக் கூச்சப்படக் கூடாது; உழப்படாத நிலமும், துடைக்கப்படாத வைரமும் விமர்சனம் செய்யப்படாத அரசும் காலப்போக்கில் தாமே வளஞ் சுருங்கும்; ஒளி குன்றும்; தரங் குன்றும். அரசுக்கட்டிலில் இருப்போர் தம்மை மற்றவர் புகழ்ந்தால் எங்ஙனம் மகிழ்கிறார்களோ அது போலவே தம் தவறுகளை மற்றவர் இடித்து எடுத்துக் காட்டும் பொழுதும் ஏற்றுத் திருத்திக் கொள்ளும் இயல்பினைப் பெறவேண்டும். சீன நாட்டுத் தத்துவஞானி கன்பூசியஸ், “கீழே விழுதல் குற்றமன்று. ஆனால், அப்படியே விழுந்து கிடப்பதும், திரும்பத் திரும்ப வீழ்தலும் அறியாமை” என்றார். அதுபோல அரசுக் கட்டிலில் அமர்ந்திருப்போர் தம்மை நச்சி இச்சை பேசிப் புகழ்வாரை மட்டுமே துணையாகக் கொள்ளக்கூடாது. அத்தகைய துணையைப் பெறுபவர் பகைவரின்றியே அழிவர். அரசாள்வோர் தம் குறையை இடித்துக் காட்டுபவரைத் துணையாகப் பெற்றாலே என்றும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பர்.

‘இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.’

447

என்பது வள்ளுவர் வாக்கு. ஆம்! அதிகமான செல்வமோ, அரசுக் கட்டிலோ வந்துற்றபோது இச்சை முகம் காட்டி நயப்புறப் பேசுவோர் வந்து சூழ்வர். புகழ்ப் போதை ஏற்றுவர். அந்த மயக்கக் கிறுக்கில் மதி நலம் கெடும். அதுபோது யாரேனும் ஒருவர் தம்மையோ-தம் செயலையோ முறையன்று என்று மறுத்தால் ஆராய மனமிருக்காது. சொல்பவர் மீது சினம் தோன்றும். அழுக்காற்றால் - ஆணவத்தால் குற்றம் சொல்கிறான் என்று கருதி முடிவெடுக்கத் தோன்றும். அதுமட்டுமா? அந்த நல்ல மனிதரை அழிக்கவும் மனம் ஒருப்படும். அதனாலன்றோ ‘தம் புகழ் கேட்க நாண வேண்டும்’ என்று சங்ககாலச் சான்றோர் கூறினர்.

வள்ளுவர், ‘செவிகைப்பச் சொற் பொறுக்கவேண்டும்’ என்கிறார். வாய்ச் சுவையிலும் கூட இனிப்பு மட்டுமே இன்பம் தருவது அல்ல. கைப்பாக இருக்கும் பாகற்காய்க்கு ஈடு எது? கசக்கும் வேப்பங் கொழுந்துக்கு விஞ்சிய மருந்து ஏது? செவிக்கு இன்சுவைதரும் புகழ்ச் சொற்களை மட்டுமே கேட்க விரும்பக் கூடாது. சொற்களின் சுவையை விடச் சொற்களால் விளையும் பயனே சிறப்புடையது; நலம் தருவது.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’

389

என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் காட்டும் அரசு நீதியை வழங்கும் அரசு; நீதி தழுவிய சமுதாயத்தை அமைக்கும் அரசு. நீதி, உயர்ந்தது. ஆனால், உலகியலின் இன்றியமையாத் தேவையாகிய பொருளியல் முறை மாறுபடும் பொழுது, நீதி கெடும்; செங்கோல் நடைபெறுவதற்கு இயலாது. ஆதலால் திருவள்ளுவர், தாம் படைத்த அரசியலில், பொருளியல் முறை வைப்பையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இருபதாம் நூற்றாண்டின் சேம நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசில் கூடத் திருவள்ளுவர் காட்டுகின்ற அரசின் பொருளியல் முறை செப்பமாக அமையவில்லை. அரசு, ஒரே வழியில் அதாவது மக்களிடத்திலிருந்து வரி தண்டுதல் வாயிலாக வரும் வருவாயை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது. பொருள் வருவதற்குரிய புதுப்புது வழிகளைத் திட்டமிட்டுக் காணுதல் வேண்டும். அந்த வழிகளில் அரசு விழிப்பாகப் பொருளையீட்ட வேண்டும். அரசு தாம் ஈட்டும் பொருளை, ஈட்டும் பொழுதே சில்லறையாகச் செலவிடுதல் கூடாது. ஈட்டப்படும் பொருள் பலருக்குப் பயன்தரத் தக்கவாறு வளரும் வரை காத்து வைக்கப் படவேண்டும். அதன்பின் அப்பொருளை, யார் யாருக்கு, எந்தெந்த வகையில் பயன்பட வேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டு வகுத்தும் வழங்க வேண்டும். இந்த அருமையான பொருளியல் கருத்து, திருவள்ளுவருடைய மூதறிவில் பிறந்த சிந்தனை. இன்றைய இந்திய அரசியலில் வள்ளுவர் காட்டிய ‘வகுத்தல்’ முறையில் தான் கேடு இருக்கிறதென்று அரசியல் - பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் நாட்டின் வருமானம் உயர்ந்தும் நாட்டுமக்களின் வறுமை மாறவில்லை. ஏன்? பெருகி வளர்ந்த நாட்டு வருமானம் உழைத்தோருக்கும், தேவையுடையோருக்கும் வழங்கப் பெறாமல் அல்லது கிடைக்காமல் முதலாளித்துவ உலகம் தனக்கு உரிமைப்படுத்திக் கொண்டது. வள்ளுவர் வகுத்த அரசியல் நடைமுறைப்படுத்தப் பெறுமானால் இந்தக் குறை நீங்கும்.

திருவள்ளுவர் காட்டும் அரசியலில் தனிமனிதன் அரசுக்கு அடிமையல்லன். அவன் முழு உரிமையுடைய ஒரு குடிமகன். இத்தகைய குடிமக்களை அரசு பெற்றாலே, அஃது அரசு என்ற இலக்கணத்தைப் பொருந்துகிறது. திருவள்ளுவர் காட்டும் அரசியலில் தனிமனிதன் அரசுக்கும் தனது கடமையைச் செய்கிறான்; அதுபோலவே அரசினிடமிருந்தும் உரிமையைப் பெறுகிறான். திருவள்ளுவர் காட்டும் அரசியலில் சமுதாயக் கூட்டமைப்பு-ஒத்த தறிந்து வாழும் ஒப்புரவு இயல் வாழ்க்கை உண்டு. திருவள்ளுவர் காட்டும் அரசு, குடிகளைக் காக்கும் அரசு; குடிகளிடத்தில் குற்றம் தோன்றாதவாறு தன் குற்றம் நீக்கித் திகழும் அரசு. திருவள்ளுவர் காட்டும் அரசியலில் இச்சைமொழி பேசுவோருக்கு இடமில்லை; இடித்துத் திருத்துவோருக்கே ஏற்றம் உண்டு. திருவள்ளுவர் காட்டும் அரசு பொருளை ஈட்டும் அரசு மட்டுமன்று. பொருளை வகுத்தும் வழங்கும் அரசு. திருவள்ளுவர் காட்டும் அரசியல் வையகத்தில் மலருமானால் துன்பம் நீங்கும்; இன்பம் பெருகி வளரும்.